திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, February 28, 2009

” மனிதமே உன்னைத்தேடி”

உன்னைத் தேடி உன்னைத் தேடிக் களைத்து விட்ட மனிதன் நான் பூவுலகில் எங்கும் உன்னைக் காணவில்லை, எங்கு சென்று மறைந்திட்டாய் ,கண்ணில் படும் உயிர்க்கெல்லாம் கருணையோடு கை கொடுத்து, அன்பு பாசம் நேசம் காட்டி அணைத்திட்ட கருணை நிறை தெய்வங்களே எங்கு போனீர் எங்கு போனீர்,காணவில்லை உம்மையும் உம்மைத் தேடி உம்மைத் தேடி நானும் இங்கே களைத்துவிட்டேன்

கண்ணைக் கட்டிக் காட்டில் இட்டார், கண்ணிருந்தும் குருடனாய் உண்மை தேடி அலைகின்றோம், சித்தம் தடுமாறியே சித்தரென்று பெயரெடுத்து, தெளிந்த பின்னும் தேடித்தேடி பித்தராய் உருவெடுத்து தேடுகின்றோம் மனிதமே

பாதி மனிதர் தம் மனதின் மீதி மனிதம் மறந்து போய் பீதியினால் தமை மறைத்து நடைப்பிணமாய் வாழுகின்றார், சேதி சொல்லும் தினசரியும், தேடித்தேடி பரபரப்பாய் தீச் செய்தி தமை மட்டும் வழங்குகின்ற காணொளியும் ,அவலமான செய்திகளை அளித்திங்கே வாழுதே, நல்ல சேதிகளே இல்லையென்று எண்ணித் தரம் தாழுதே,மனிதம் இங்கே வீழுதே

குணத்தையெல்லாம் விட்டுவிட்டு பணத்தின் பின்னால் ஓடுதே, பிணத்தின் நெற்றிக் காசைக்கூட எடுக்கத் தானே ஆடுதே, மனித உயிர் மதிப்பின்றி தீக்கிரையாய் ஆகுதே, சட்டம் கூட திட்டம் தீட்டி தீவினையை ஏற்றுதே, நீதி இங்கே தீயுதே ,தீவிரமாய் பல வாதம் பதுங்கி பதுங்கிப் பாயுதே மனித நேயம் தேயுதே

காவல் செய்யும் காவலும், ஏவல் செய்யும் கனவானின் கைத்தடியாய் வாழுதே, நீதி செய்யும் நேர்மையும் தலை குனிந்தே நோகுதே, அழிவுப் பாதை நோக்கியே நாடும் இன்று போகுதே, இளம் வயதுக் குழந்தைகளை இரக்கமின்றி கற்பழித்து, இணைந்து வாழும் துணையினையும் அரக்கர் போலக் கொல்லுதே, அன்னை தந்தை இருவரையும் அடித்து ஓட்டி மகிழ்ந்து விட்டு, தம் மக்கள் மட்டும் தம்மை தாங்கவேண்டுமென்னுதே,

மனிதம் எங்கே மனிதம் எங்கே நானும் தேடித் தேடியே

இளைத்து விட்டேன் களைத்துவிட்டேன் காணவில்லை மனிதமே,,முன்பிருந்த மனிதம் இன்று எங்கே போய் ஒளிந்தது? இருட்டில் வாழ்ந்த நாளிலும், மனிதம் ஒளிர்ந்த நாடிது, ஒளி பாய்ச்சி இரவையும் பகலாக்கி தேடித் தேடிப் பார்த்துவிட்டேன், காணவில்லை மனிதமே , புனிதர் எல்லாம் எங்கோ சென்று பதுங்கிவிட்டார் பயத்திலே ,இனி இங்கே வேலையில்லை என்று தாமும் நினைத்திட்டே மாயமாய் மறைந்திட்டார் காணவில்லை ஜகத்திலே

இனி பொறுக்க வழியிலை என்று பொங்கி நானும் எழுந்திட்டேன், தேடித் தேடி அலைந்திட்டேன், தேக்கி வைத்த மனிதமது எங்கேனும் கண்ணில் பட்டால் மனிதர்களே, மனிதர்களே சேதி ஒன்று கூறுங்கள் நானும் அங்கு வருகிறேன் மீண்டுமதை பெற்றெடுத்து சேர்த்தளிப்போம் உலகுக்கே



அன்புடன்

தமிழ்த்தேனீ

No comments: