திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, June 25, 2008

பமொழிகள் ஆய்வு எண் 3

பழமொழிகள் ஆய்வு
எண் 3


ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
மூங்கில் பொல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்

ஆல்போல் தழைத்து:

ஆல மரம் போல் வேரெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம்,
அந்த அளவுக்கு ஆல மரம் நம்முடைய வாழ்க்கை
நெறிகளையும், நாம் வாழ வேண்டிய விதத்தையும்
நாம் கற்றுக் கொள்ள நமக்கு ஒரு ஆணி வேராக
இருக்கிறது

ஆல மரத்தை நன்கு கூர்ந்து கவனித்த நம் பெரியோர்கள்
ஆல் போல் தழைத்து என்று சொல்லி இருக்கிறார்கள்
ஆஹா எவ்வளவு அருமையான சுந்தரத்தமிழ் வார்த்தை
"தழைத்து" நம் நாவினால் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே எவ்வளவு ஆரோக்கியமாக உணர்கிறோம்
தழைத்தல் என்றால் பெருகுதல்; வளருதல், எவ்வளவு மங்கலமான வார்த்தைகளை நம் முன்னோர்
உபயோகப் படுத்தி இருக்கின்றனர்
ஆச்சரியமாக இருக்கிறது
என்னுடைய சிறு வயதில் என் தாயார் என் தந்தையாரிடம்
சொன்னார் "ஆத்துலெ அரிசிப் பானை நிறைந்திருக்கிறது
சாயங்காலம் வரும்போது வாங்கிக் கொண்டு வந்து
விடுங்கள் என்று"
எனக்கு சந்தேகம்... ஏனம்மா அரிசியே இல்லையே பானையில்
நிறைந்திருக்கிறதுன்னு அப்பாகிட்ட சொன்னியே
தப்பு தப்பா சொல்ற என்றேன்
அதற்கு என் தாயார் சொன்ன வார்த்தைகளை
இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்

கண்ணா தமிழ் ஒரு நல்ல மொழி
அதுனாலெ நாம எப்பவுமே நல்லதை உபயோகிக்கும் போது
வெகு ஜாக்கிறதையாக உபயோகிக்க வேண்டும்
பொதுவா தமிழ் மொழிக்குன்னு ஒரு சிறப்பு இருக்கு
நல்ல தமிழில் சாபமிட்டா உடனே பலிக்கும்னு பெரியவா சொல்லுவா....
அதுனாலெதான் முன்னெல்லாம் நம்ம நாட்டை ஆண்ட
சக்ரவர்த்திகள் கூட தமிழுக்கு மரியாதை கொடுத்தா
தமிழ்ப் புலவர்களுக்கு மரியாதை கொடுத்து
அவங்களோட மனசு கோணாம நடந்துண்டா
அத்னாலே அமங்கலமான சொற்களை சொல்லக் கூடாது
அதுனாலெதான் அரிசி இல்லேனு சொல்லாம
அரிசிப்பானை நெறைஞ்சிருக்குன்னு அப்பாகிட்ட
சொன்னேன்..... அப்பாவுக்கும் தெரியும் தமிழோட அருமை
அதுனாலெ அவர் புறிஞ்சுப்பார் ,என்றாள்
அடடா என்னே தமிழின் பெருமை
தமிழும் ஆலமரமும் இணைந்தே வளர்ந்தவை அல்லவா
தமிழும் தழைக்கும் ஆலமரமும் தழைக்கும்
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
என்னும் பாடல் காதில் ஒலிக்கிறது
ஆல மரத்தின் சிறப்பே அதன் விழுதுகள்
பெருகி மீண்டும் தரை தொட்டு வேரோடி
மீண்டும் தழைத்து .... ஆஹா எவ்வளவு உயரம் சென்றாலும் நம்முடைய அடிப்படை பாரம்பரியத்தை நாகரீகத்தை
விடாமல் அதை அடிப்படையாக வைத்து மேலும் தழைக்க வேண்டும் என்னும் தத்துவத்தை எவ்வளவு எளிதாக ஆலமரங்கள் நமக்கு சுட்டிக் காட்டி நம் அறிவைத்
தழைக்க வைக்கின்றன...?
இறைவனின் படைப்புகள் அதிசியமே...!!!!!!!

அருகு போல் வேரோடி என்பதை ஆராய்ந்தால்
அருகம் புல்லின் சாறு இதயத்தை பலப்படுத்தும்
என்று பெரியவர்கள் சொல்லுவர்
நம் இதயத்தின் அடி ஆழம் வரை சென்று
நம் இதயத்தையே பலப்படுத்தும் அருகு நிச்சயமாய்
நம் வாழ்விலும் ஒரு பெரிய தத்துவத்தை உணர்த்துகிறது
அருகம் புல்லை கொஞ்ஜம் சேகரித்துப் பாருங்கள்
அது வெகுநாட்கள் கெடாமல் இருக்கும்
அது மட்டுமல்ல அந்த அருகம் புல்லை நாம் சேகரிக்க
அதை கையினால் பறிக்கும் போது அருகம் புல்லின் தழைகள்
மட்டுமே நம் கைக்கு வரும் வேரோடு வராது
ஏனென்றால் அருகம் புல்லின் வேர் அடி ஆழம் வரையில்
நன்றாக வேரூன்றி இருக்கும் ,
அது போல நம் வாழ்வில் ஆயிரம் நிகழ்வுகள்
நம்மை அசைத்துப் பார்த்தாலும். பெயர்தெடுத்து
அழிக்க நினைத்தாலும் நம்முடைய
நல்ல பாரம்பரியங்களை முழுமையாக புறிந்து கொண்டு
நல்லவற்றைக் கடைப்பிடிப்போம்,, தீயவை செய்யோம்
என்னும் நல்ல சபதங்களில்,குறிக்கொள்களில்
நாம் ஆழமாக வேரோடி நிலைத்து நின்றால்
நிச்சயமாக நன்மையே தவிற, தீமை இல்லை
இதயம் வலுவானதாக மாறும் இதைத்தான்
நம் பெரியோர்கள் திட சித்தம் என்று சொல்லுகிறார்கள்
இதைத்தான் அருகு போல் வேரோடி என்கிறார்கள்

அடுத்து
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்
என்று சொல்லுகிறார்கள்

ஆஹா மூங்கில் போல் சூழ்ந்து
எவ்வளவு அருமையான வார்த்தை
கொஞ்சம் மூங்கில் காடுகளை மனதில்
நினைத்துப் பாருங்கள்
எப்படி அருகருகே இணையாக, பரவரலாக
கூட்டமாக, இணைந்து, அணைத்து வளர்ந்து
ஒன்றிற்கொன்று பலமாய் ,உறவுக்கு பாலமாய்
ஒற்றுமையாய் சூழ்ந்திருக்கின்றன
அது போல நாமும் இனம் ஜாதி மதம் போன்ற
எந்த பேதமும் இல்லாமல் இணைந்து அணைத்துக் கொண்டு
சூழ்ந்து நம் பலத்தை வளத்தை பெருக்கிக் கொள்வோம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று பெரியவர்கள் கூறியது போல வாழ ஆரம்பித்தால் நம்முடைய நன்மைகளுக்கு
அதுவே பெரும் பக்க பலமாக அமைந்து நம்முடைய
ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் , ஆரோக்கியமான
வளமான வாழ்வுக்கும் எந்த ஒரு முடிவுமில்லாது

தாழம் பூவும் மடல் விரியும் மின்னல் வரும் வேளைதனில்
மூங்கிலும் முளை விடும் மின்னல் வரும் வேளை தனில்
இயற்கையின் ரகசியங்கள் நம்மை முகிழ்க்கவைக்கின்றன
நம் மனதை விகசிக்க வைக்கின்றன
மரம் வளர்வதை பார்க்கமுடியும்
கேட்க முடியுமா.....?

முடியும் என்பர் அனுபவஸ்தர்

மூங்கில் ஒவ்வொரு முளை விடும் போதும்
ஒரு சத்தம் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்
அதே போல
தென்னம் பாளையில் பூக்கள் மலரும் போது ஒரு சத்தம் கொடுக்கும் என்றும் அனுபவஸ்தர்கள் சொல்லுகிறார்கள்
ஆகவே பெரியவர்கள் சொல்வதையும் கேட்போம்
மரங்கள் வளருவதை பார்ப்போம், , மரம் வளருவதையும் கேட்போம் இயற்கையோடு இசைந்து வாழ்வோம்
ஆமாம் மூங்கில் குருத்துகள் வரும்போது கேட்கும் சத்தம் மத்தளமாகவும், மூங்கில் துளைகளின் வழியே பயணப்படும் காற்று ஊதும் குழலாக மாறி அளிக்கும் ஊதுகுழலின் நாதத்தையும் ரசித்து இசை பட வாழ்வோம்



ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
மூங்கில் போல் முடிவில்லாது வாழ்வோம்


அன்புடன்
தமிழ்த்தேனி

பழமொழிகள் ஆய்வு எண் 2

பழமொழி : 2 "
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை "
இந்தப் பழ மொழியை ஆராய முற்படும்போதே
நினைவுக்கு வருபவர்கள் உயர் திரு மஹாத்மா காந்தி,
உயர் திரு வினோபா பாவே ஜெயப்ரகாஷ் நாராயணன்
"நேற்று நடந்ததும் இன்று நடப்பதும்
நாளை நடக்கப் போவதும் அனைத்தும் நன்மைக்கே
"என்று தினமும் நடப்போர் சங்கம் ஒன்றிற்கு
தட்டி வாசகமாய் நான் எழுதிக் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது....!
எல்லாம் நடக்கவேண்டும் ...நல்லது எல்லாம் நடக்க வேண்டும்
என்றுநம் மனது அடிக்கடி நினைக்கிறது
நடக்கும்....நிச்சயம் நடக்கும் நம்பிக்கைதானே வாழ்க்கை
எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம்
என்பது பெரியோர் வாக்கு
நடந்தால் நாடெங்கும் உறவு..உண்மைதான்
நடந்தே நாடெங்கும் உறவை ஏற்படுத்திக் கொண்ட
பல பெரியோர்களின் அனுபவ பூர்வமான உண்மை வாசகம்
நல்லவிதமாக நடந்து ,தாய்நாட்டுப் பாசத்துடன் ,
மக்களின்மேல் நேசத்துடன்,சத்திய வழியில்.
அஹிம்சாவழியில் நடந்தே நம் தேசத்துக்கு
விடுதலை வாங்கிக் கொடுக்க காரணமாய் இருந்தவர்கள்
மஹாத்மா காந்தி அவர்கள்வினோபாபாவே அவர்கள்,
ஜெயப்ரகாஷ் நாராயணன் ஆகியோர்,
எல்லா மனிதர்களுக்கும் நம் உடலில் கொழுப்பு, சர்க்கரை,
போன்ற பொருட்கள் இருக்கின்றன ,
ஆனால் அவைகள் இருக்க வேண்டிய அளவுக்குமேல்குறைந்தாலோ,அதிகரித்தாலோ அதை
நோய் என்கின்றனர் மருத்துவர்கள்,
இருக்க வேண்டிய அளவுக்கு குறைந்தாலோ ,அதிகரித்தாலோ,
"அது அளவுக்கு மிஞ்சுதல் "என்று பொருள் கொள்ளலாம்"
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்"அல்லவோ
அப்படி அளவுக்கு மிஞ்சினால் உடனே வைத்தியர்கள்
நான் சொல்வதைக் கேட்டு நட என்கிறார்கள்,
அதாவது நடந்தாலே அனேக வியாதிகள்
குணமாகிவிடுகின்றன என்று பொருள் கொள்ளலாம்,
ஆகவே நடந்தால் நாடெங்கும் உறவு,
நாம் இருந்தால்தானே நடப்போம்,
நடந்தால்தானே இருப்போம்,....
உறவுகள் பெருக வேண்டுமானால் நடக்க வேண்டும்,
நல்லது நடக்கவேண்டும், நம்மால் அடுத்தவருக்கும் ,
அடுத்தவரால் நமக்கும்,நல்லது நடக்கவேண்டும்
நடந்தாய் வாழி காவேரிநாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம்கொழிக்கநடந்தாய் வாழி காவேரி
என்று வெங்கலக் குரலில் சீர்காழி கோவிந்தராஜன்
அவர்களின் பாடல் ஒலிக்கிறது
ஆறு பொங்கிப் ப்ரவாகமாய் ஓடுவதைக் கூட நடந்தாய் என்று வர்ணிக்கிறார்கள்,
நாரதருக்கு நாரதர் என்று ஏன் பெயர் தெரியுமா
நா ரதம் ,அதாவது வாகனம் இல்லாதவர் என்று பொருள் ,
அவரே நடந்துதானே பல கலகங்களை செய்து நன்மை செய்திருக்கிறார்,
ஆகவே பெரியோர் சொல் கேட்டு நடப்போம்,
கலகம் செய்ய வேண்டாம் ,நாம் கலகம் செய்தால் அது நன்மை விளைவிக்காது,
நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளுவோம் நடப்போம்
"அதே போல் படுத்தால் பாயும் பகை,"
வயதான பின்னரும் படுத்தால்,
அதாவது நோயில் படுத்தால்பாயும் பகையாகும்,
பாய் எப்படி பகையாகிறது....?
நினைவில்லாமல் படுத்திருப்பவர்களுக்கு முதுகே புண்ணாகும்,
இதை படுக்கை காயங்கள் என்று மருத்துவத்திலே சொல்லுவார்கள்,
அதற்காக தண்ணீர் படுக்கை, காற்றுப் படுக்கை,
என்றெல்லாம் எத்துணையோ விஞ்ஜான வசதிகள் வந்து விட்டாலும் படுக்கையில் இருப்பவர்களுக்கு,மனோவியாதியே நாம் படுக்கையில் இருக்கிறோமே, என்னும் நினைவே வியாதிகளை அதிகரிக்கும்,
ஆகவே படுத்தால் பாயும் பகை,
இங்கு படுத்தால் என்பது சோம்பினால் ,என்றும் பொருள் கொள்ளலாம்,
நாம் கொஞ்ஜம் அசந்தால் நம்மைக் கவிழ்க்க,ஏராளமான சதி நடக்க ஆரம்பித்துவிடும், சதி நடப்பதை தடுக்க நாம் நடப்போம்,
அப்படி இருக்க படுக்கலாமா...?
தன்னுடைய மரணத்தை தக்ஷிணாயணத்திலிருந்து,
உத்திராயண காலம் வரையில் தள்ளிப்போட நினைத்து,
படுத்த பீஷ்மர் கூட தரையில் படுக்கவில்லை,
அருச்சுனன் வில்லைப் பயன்படுத்தி ஏற்படுத்திக் கொடுத்த
சரப் படுக்கையில் படுத்தார்,
ஏனென்றால் சரங்களின் உறுத்துதல் இருந்து கொண்டே ,
இருந்தால்தான் சோம்பாமல் இருக்க முடியும் என்று
அதையும் தவிற அவருடைய தீர்க்க தரிசனம் மரணத்தையே,
தள்ளிப் போட்டிருக்கிறது என்னும் மஹாபாரத செய்தி நம்மை வியக்கவைக்கிறது, அந்த சரப் படுக்கை மூலமாக
அக்யூ பன்ச்சர் என்னும் விக்ஞான முறையை அப்போதே
செயல் படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது,
ஆகவே படுக்காதீர்கள் ,அப்படிப் படுக்க வேண்டுமானால்,
நம்மை எப்போதும் எச்சரிக்கையாக இருக்கப் பணிக்குமாறு
செய்யப்பட்ட படுக்கையில் படுக்கலாம்,
ஆகவே படுத்தால் பாயும் பகை,
ஆமாம் படுத்தாலே காத்திருக்கும்" பகை எல்லாம் பாயும் "
என்பதை எச்சரிக்கதான் பெரியவர்கள்
நடந்தால் நாடே உறவு படுத்தால் பாயும் பகை
என்று நம்மை எச்சரித்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது ,
ஆனால் எனக்கு இக்கட்டுரையை எழுதும்போதே
தோன்றிய சந்தேகம் ஒன்று இருக்கிறது,
கருநாகப் பாய் விரித்து கடலின் மேல் படுத்திருக்கும்
திரு நாரணனும் அதனால்தான் அவ்வப்போது பல அவதாரங்கள்
எடுத்து நடக்க ஆரம்பித்தானோ என்று,……
ராமனை காட்டுக்கு அழைத்து சென்று நடக்கவிட்டார் விஸ்வாமித்திரர்,
கண்ணன் மஹாபாரதத்தில் தேரோட்டியாய்,
வரும் வரையில் சாந்திபினி ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு
நடந்தே காட்டிற்குப் போய் விறகு சேகரித்தான்,
நடக்கும் நாலு கால் பிராணிகளாகவும் பல அவதாரங்கள்
எடுத்தானோ, என்று சந்தேகம் வருகிறது,
கஜேந்திரன் நாராயணனை படுக்க விடாமல்
ஆதிமூலமே என்றழைத்து படுக்கையிலிருந்து எழுப்பினான்,
ப்ரஹலாதன் கேட்கவே வேண்டாம்,
அவ்வபோது நாராயணனை எழுப்பிக் கொண்டே இருந்தான்,
கடைசியில் நாராயணனை நடக்கும்,நரசிம்மாவதாரமாகவே
மாற்றிவிட்டான் தன் பக்தியினால்,
மஹாபலியோ வாமனாவதாரமாய் நாராயணனை நடக்க விட்டான் ,
இப்படி பக்தர்கள் நாராயாணனை படுக்க விடாமல்
அழைத்துக் கொண்டே இருக்கின்றனரோ,
என்று சந்தேகம் வருகிறது
ஸ்ரீமன் நாராயணன் கொண்டிருப்பது
யோக நித்திரைஎன்று சொல்லுவார்கள்
யோக நித்திரை கொண்டிருக்கும் நாராயணனையே
எழுப்பிக்கொண்டே இருக்கிறார்களேஅப்படியானால்
.......போக நித்திரை கொள்ளலாமோ...கூடவே கூடாது
என்பதை இப்பழமொழி நன்கு உணர்த்துகிறது
அடடா பெரியவர்கள் தீர்க்கதரிசிகள்தான்
ஆராய முயலுவோம் நன்மையென்றால்
அதன் படி நடக்க முயலுவோம்
படுக்க வேண்டாம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ

பழமொழிகள் ஆய்வு எண் 1

" பழ மொழிகள் "
ஒரு ஆய்வு எண் : ஒன்று


முதல் பழமொழி :
1. மூத்தது மோழை இளையதுகாளை

இது அடிக்கடி பெரியவர்களால் உபயோகப்
படுத்தப் படும் பழமொழி,
மூத்தது மோழை இளையது காளை "
என்னும் சொல்வழக்கை எடுத்துக் கொண்டால்

வயல் வெளிகளில் ,பயிருக்கு வேண்டிய தண்ணீரை சேமித்துவைக்க,எல்லையைக் குறிக்க,
வரப்பு கட்டுவார்கள்,அந்த வரப்புகளுக்கு அடியில்
வழுவழுப்பான துவாரங்கள் இருக்கக் கூடும்,
அந்த துவாரங்களுக்கு "மோழை "என்று பெயர்,
பெரியவர்கள் வரப்பிலே பாய்ச்சும் தண்ணீர் நிற்காமல்
போகுமானால் ஏதோ ஒரு இடத்தில் "மோழை" இருக்கிறது
என்று சொல்லி அந்த மோழையைக் கண்டுபிடித்து
அடைக்கச் சொல்லுவார்கள்
அந்த மோழை எப்படி வழுவழுப்பாக இருந்து கொண்டு
தண்ணீரை தக்கவிடாமல் செய்கிறதோ அதுபோல
மூத்த குழந்தைகள்,மனதிடமில்லாமல், விவேகமில்லாமல்,
தைரியமாக நிமிர்ந்து நிற்காமல் ,நல்லதை மனதில் இருத்திக் கொள்ளாமல்இருக்கும் என்பது போன்ற
பொருள் வருமாறு இந்தப் ,,,,,பழமொழி அமைந்திருக்கிறது
என்று எண்ணுகிறேன்,

அதே போல் இளையது காளை என்பர்
காளை என்றாலே இளமை,வலிமை,வேகம்
எதிர்கொள்ளும் திறமை,எதையும் எதிர்க்கும்
மனப்பான்மை ,என்றெல்லாம் பொருள் வரும்
ஆகவே மூத்ததாக மோழையை அடைத்துவிட்டு
அடுத்ததாக காளையை பயன்படுத்தி ஏர் உழுதால்தான்
பலன் வரும் என்னும் பொருள்படவும் சொல்லி இருக்கலாம்




யோசித்து பார்த்தால் நடைமுறை வாழ்வில்
இந்தச் சொல் உண்மையோ என்று தோன்றுகிறது
பல இடங்களில் மூத்த குழந்தையைவிட
அடுத்த குழந்தை இன்னும் சற்று தூக்கலான,
புத்திசாலியாக,சூட்டிகையாக, துருதுருப்பாக இருக்கிறதோ
என்று தோன்றுகிறது,இதற்கு விஞ்ஜான ரீதியாக
ஏதேனும் விளக்கம் இருக்குமோ
என்று ஆராய்ந்தால்

மனிதனின் உடற்கூறு, மனக்கூறு
இரண்டையும் ஆராய வேண்டி இருக்கிறது
ஒவ்வொரு மனிதனும் நாகரீக கட்டுப்பாடு
காக்க வேண்டி,பருவ விழிப்பு ஏற்பட்டு பல
காலம் வரையில்,தன்னுடைய சுயகட்டுப்பாட்டைக் காக்கவேண்டிய ,அவசியத்திலிருப்பதால் தன்னுடைய
இயல்பான காமத்தை, மிக இயல்பான உடல் இச்சையை
கட்டுப் படுத்திக் கொண்டு வாழவேண்டிய சூழ்நிலையில்
இருக்கிறார்கள், அப்படி அடக்கி வைக்கப் பட்ட காமம்
உடல் இச்சை , அதைத் தணித்துக் கொள்ள
தனக்கென்று ஒரு துணை கிடைத்தவுடன்
முழு வேகத்துடன் செயல் பட ஆரம்பிக்கிறது,
கட்டவிழ்த்துவிட்ட காளை போல்.......
திருமணம் ஆன உடனே அன்பு பாசம், காதல்,
நேசம் , அனைத்தும் இருந்தும்.....
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும்
அவற்றையெல்லாம் தாண்டி காமத்துக்கு முதலிடம்
தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் படுகின்றனர்
இது இயல்பு ,தவறென்று சொல்லவில்லை
இங்கே சற்று நிதானப்பட்டு யோசிக்க வேண்டியுள்ளது
அப்படி தம்பதிகள் இருவருமே உணர்ச்சி பூர்வமாக
செயல்படும்போது அங்கே காதல், பாசம், நேசம்,அன்பு
என்று எல்லாம் இருந்தாலும் அவைகள் பின்னுக்கு
தள்ளப்பட்டு காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கிறது
அப்படி காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கும்
அந்த சேர்க்கையில் மனித உடலின் உணர்வுகள்
நரம்புகள், ரத்தம், ஆண்மை ,பெண்மை
போன்ற பல கலவைகள் செயல் பட்டாலும்
உள்ள பூர்வமாக ,புத்தி பூர்வமாக அந்த சேர்க்கை
நடைபெற,சந்தர்ப்பம் மிகக் குறைவு என்பதே
என்னுடைய கணிப்பு
அதனால் அப்போது தோன்றும் கரு காமத்தின்
அடைப்படையில் விதைக்கப் பட்ட கரு ,
அப்படிப் பிறக்கும் முதல் குழந்தைகளுக்கு
உணர்ச்சி பூர்வமான முடிவுகள் எடுக்க இயலும்,
உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் முடிவுகள் சரியான
விளைவுகளைத் தருவதில்லை என்பது
பெரியோர்களின் அறிவாளிகளின் ஆராய்ச்சி
பூர்வமான முடிவு,ஆகவே
மூத்தது மோழை என்ற பழமொழி சரியானதாக
இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது

அது மட்டுமல்ல

மனரீதியாக உடல் ரீதியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
இயல்பாக எந்த ஒரு மனக்கிலேசமும் இல்லாமல்
இல்லறத்தை ஆரம்பித்து மனதால் கலந்து பிறகு
உடலாலும் கலக்க,எளிதான வழியாகவே
திருமணம் என்னும் அங்கீகாரமும்
பெரியவர்களாக ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து
முதல் இரவு என்று அழகாக பெயர் சூட்டி
இந்த வைபவத்துக்கு ஏற்பாடு செய்து
தம்பதிகளை அனுமதிக்கிறார்கள்

அப்படி இல்லாமல் தாங்களாகவே சரியான
வழிகாட்டுதல் இல்லாமல் பருவ ஈர்ப்பை காதல்
என்று எண்ணி,காமத்தின் வலையில் விழுந்து
சூழ்நிலை அழுத்தத்தால்,காமத்தின் இயல்பான
வெறியினால் மட்டுமே இல்லற சுகத்தை அனுபவித்து
வேறு வழி இல்லாமல் திருமண பந்தத்தில்
மாட்டிக்கொள்பவர்களுக்கும்,
அல்லது திருமண பந்தம் ஏற்படாமல்
ஏமாற்றப் பட்டு அவல வாழ்வு வாழும் பெண்களுக்கும்
பிறக்கும் குழந்தைகள் உள்ளத்தாலோ,உடலாலோ
ஊனமான குழந்தைகளாக பிறக்கின்றன என்பது
அனுபவ பூர்வமான உண்மை

இரண்டாவதாக அதே தம்பதியர் ஒரு குழந்தை பெற்ற
நிலையில் ஏற்படும் அனுபவங்களை அடிப்படையாக
வைத்து அடுத்த குழந்தை பிறப்பை கொஞ்ஜம்
தள்ளிப் போடுக்கிறார்கள்
அங்கே அந்த தம்பதிகளின் காமம் சற்றே மட்டுப்பட்டு’
திட்டமிடுதல் உருவாகிறது,முதல் குழந்தைமேல்,
இல்லறத் துணையின் மேல் பாசம் , அன்பு
கருணை, எல்லாம் அதிகரிக்கிறது
எப்போது திட்டமிடுதல் உருவாகிறதோ
அங்கு விவேகம் தலையெடுக்கிறது.
பெண்மைக்கும்,ஆண்மைக்கும் வெற்றிபெற்றுவிட்டோம்
என்கிற தைரியம்வருகிறது,
அதற்குப் பிறகு அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தை
மூத்த குழந்தையை விட அறிவாளியாகவோ,
விவேகமாகவோ,,தைரியமாகவோ இருக்க,
வாய்ப்புக்கள் அதிகமாகிறது
பல வீடுகளில் கவனித்திருக்கிறேன் மூத்த குழந்தைக்கு
அடுத்த குழந்தையின் சுட்டித்தனங்களால், அறிவு சார்ந்த
புத்திசாலித்தனமான விளையாட்டுக்களால், விவேகமான
செய்கைகளால் எல்லோரையும் கவரும் திறமை,
பெற்றிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்

அபூர்வமாக பல மூத்த குழந்தைகளும் புத்திசாலியாக
இருப்பதுண்டு, அது விதிவிலக்கு என்றே படுகிறது..!
இயல்பாகவே வரப்பு மோழை இல்லாமல் சில சமையங்களில் அமைந்துவிடுதல் போல ,
ஆகவே பெரியோர் சொல் வேதம்
என்று வாழ்தலில் தவறில்லை,
பழமொழிகளை பெரியோர் வாக்காக மதிக்கலாம்,
அல்லது ஆராய்ச்சி செய்துதேர்ந்தெடுத்து...
பயன்பெறலாம்...!!!!!!!!!

அன்புடன்
தமிழ்த்தேனீ

பழமொழிகள் ஒரு ஆய்வு

பழமொழிகள் நம்மால் அடிக்கடி உபயோகப் படுத்தப் படுகிறது
ஆனால் பொருள் தெரிந்து உபயோகிக்கிறோமா,,,?
என்பது ஆராய வேண்டிய விஷயம்பழமொழிகள்
அனுபவத்தின் வெளிப்பாடாக கருவாகி வெளிப்பட்டு
முழுமை அடைகிறது ,
அப்படி முழுமை அடையும் போது
சற்றே திரிந்து வேறு பொருள் வருமாறும்
உருமாறுகிறது..அலசிப் பார்ப்போம்
எவ்வளவு அருமையான பழமொழிகள்
ஒவ்வொரு பெரியவர்களும் ஒரு அருமையான
பழமொழி சொல்லுகிறார்கள்,
அது சரி இப்போது காலம் இருக்கும் இருப்பில்
இந்தப் பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம்
யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள் ,
என்கிற எண்ணம் தலை தூக்கினாலும்
நல்லதை சொல்லுவோம், கேட்டால் கேட்கட்டும் ,
கேட்காவிட்டால் அது அவர்கள் இஷ்டம்,
என்று மனதைத் தேற்றிக் கொண்டு எழுதுகிறேன்
அது சரி பழமொழிகள் எப்படி ஏற்பட்டன
என்று ஆராய்ந்தால் எல்லாப் பழமொழிகளுமே
அனுபவத்தால் ஏற்பட்டன என்று ஒரு நல்ல
தீர்ப்பு கிடைக்கிறது,........
பழம் என்றாலே இனிப்பு ,சுவை, கனிவு,
முற்றிய நிலை,மீண்டும் பல மரங்களுக்கு விதைகள்
கொடுக்கப் போகும் காலச் சுழற்சி, ப்ரபஞ்ஜ வளர்ச்சி,
என்றெல்லாம்பொருள் வருகிறதுஅனுபவ முதிர்வே பழம் ,
பழமொழிஎன்றும் பொருள் கொள்ளலாம்
அப்படியானால் எல்லாப் பழ மொழிகளுமே
ஒன்று உண்மையானதாக பயனுள்ளதாக இருக்க வேண்டும்,
அல்லது பெரியவர்கள் உணர்ந்து சொன்ன பழமொழிகள் ,
சற்றே திரிந்து அர்த்தம் வேறாகி தவறான பொருள்
தருமாறு மாறுபட்டு இருக்க வேண்டும்
ஆகவே உண்மையாக எந்த பொருள் வருமாறு
பெரியவர்கள் கூறினர் என்பதை ஆராய்ந்தால்
மிகவும் நல்ல விஷயங்கள் கிடைக்கும்
என்று நம்புகிறேன்,அராய்ச்சியை தொடங்குவோம்
நம் சிற்றரிவுக்கு எட்டியபடி

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com