திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, October 3, 2010

விரஜா நதி ஓரம்

விரஜா நதி ஓரம் அந்த நதியைக் கடக்க காத்திருந்த பல பயணிகளில் ஒருவர் ராமசேஷன், அவருக்கு நினைவு வந்தது, திருமோகூர் காளமேகப் பெருமான் வந்து கையைபிடித்து அழைத்துச் செல்வாராமே, அதற்காக காத்திருந்தார், காத்திருந்த வேளையில் அவர் உடலை விட்டுவிட்டாலும் அவரை விடாத மனம் கூடவே இருந்து யோசித்துக்கொண்டிருந்தது,


இந்த பிறப்பை எடுத்தோமே ,இந்தப் பிறப்பில் என்ன செய்தோம், ,பாவம் செய்தோமா, புண்ணியம் செய்தோமா? நமக்கு நரகம் கிட்டுமா, சொர்கம் கிட்டுமா என்று தெரியாமல், பூமியிலும் இல்லாமல், ப்ரபஞ்ச வெளியிலும் இல்லாமல் நடுவே ஏதோ ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தார் ராமசேஷன், அவருக்கு சிரிப்பாய் வந்தது,

ஆமாம் இப்போதும் தமக்கு ராமசேஷன் என்று தான் பெயரா ,அல்லது யாராவது வந்து தனக்கு வேறு பெயர் வைப்பார்களா என்று யோசித்தார், சரி இனி பெயரில் என்ன இருக்கிறது, போய்ச்சேரும் இடமல்லவா முக்கியம், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பவராயிற்றே அவர்,

ஆமாம் ஆரியக் கூத்தென்றால் என்னது அது?
ஆரியனுக்கு ஏது கூத்து? என்று யோசிக்கும் போதே ஆரியன் ஆடாத கூத்தா? என்கிற கேள்வியும் முளைத்தது, எப்படி இந்தச் சொல்வழக்கு வந்தது என்று யோசிக்கலானார்,

இப்படியே காத்திருந்தால் கால்கள் வலிக்குமே எங்காவது உட்காரலாமா? அடேடே இந்த சூக்க்ஷும சரீரத்துக்கு கால்களும் இல்லை,கால்கள் இருந்தால்தானே வலிக்கும், உடல் இருந்தால்தானே வலி தெரியும், திடமான உருவமும் இல்லையே எங்காவது உட்கார்ந்தால் எப்படி உட்கார்ந்தாலும் அப்படியே காற்று போன பலூன் மாதிரி நைந்த துணி மாதிரி எதிலும் ஒட்டாமல் எப்படியும் இருக்கவிடாமல் அலைகிறதே இந்த சூக்ஷும சரீரம்?

அவருக்கு தன்னுடைய கடைசீக் காலம் நினைவுக்கு வந்தது, மனித உடல் இருந்த காலங்களில் அந்த உடலில் சர்க்கரை அதிகமாயிருக்கிறது,அரிசி சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொன்னது ஞாபகம் வந்தது, கூடவே அவருடைய மகன் அவருக்கு திவசம் செய்யும்போது இதை ஞாபகம் வைத்திருப்பானா? அவன் யோசிக்காமல் அரிசி சாதத்தையே படைத்தால் எப்படி சாப்பிடுவது, மறுபடியும் சர்க்கரை அதிகமாகி விடுமே , என்று யோசித்து அவருக்குள்ளாகவே சிரித்துக்கொண்டார்,

இந்த சூக்ஷும சரீரத்துக்கு வியாதிகள் உண்டா? ரத்தமும் சதையும் கொண்ட மானுட சரீரத்துக்குதானே வியாதிகள் இந்த சூக்ஷும சரீரத்துக்கு கிடையாதே என்று யோசித்துவிட்டு மீண்டும் தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்

யாரோ ஒருவர் கைகொடுத்தார்,ஏன் உனக்கு நீயே யோசித்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் யாரேனும் பார்த்தால் பயித்தியம் என்பர் என்று ஒரு குரல் கேட்டது

நிமிர்ந்து பார்த்தார் ராமசேஷன் ,கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை

ஓ கண்ணே இல்லை பின் எது புலப்படும் ?

கை கொடுத்தவர் கேட்டார் நீ மீண்டும் பிறக்க விரும்புகிறாயா?

அட காதுகளும்தான் இல்லை பின் எப்படி அவர் பேசுவது கேட்கிறது

இல்லை..கேட்கவில்லை மனதுக்கு புரிகிறது

யோசித்தார் எனக்கு இனி பிறவி வேண்டாம் என்றார்,


உடனே அந்த அமானுஷ்யக் குரல் இன்னும் நீ அந்த நிலையை எட்டவில்லை ஆகவே இனியும் உனக்கு பிறவி உண்டு, ஆகவே எப்படி, யாராகப் பிறக்க விரும்புகிறாய் என்று மட்டும் சொல் என்றது,

ராமனாகப் பிறந்தால் கானகம் ஏகி மனையாளைப் பிரிந்து தவிக்க வேண்டும்

பரசுராமனகப் பிறந்தால் தாயின் தலையையே வெட்ட வேண்டும்,

கிருஷ்ணனாகப் பிறந்தால் நல்லதே செய்துவிட்டு கெட்ட பெயரும் சம்பாதித்து பின் குறைக் கொள்ளியாக ஒதுங்க வேண்டும்
சரி பூலோக வாசிகளான மானுடரில் பலரையும் யோசித்துப் பார்த்தார், மஹாத்மா காந்தியாகப் பிறந்தால் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்டுவார்

இப்படீ ஒவ்வொன்றாக யோசித்துக்கொண்டே வந்தார்

யாரை நினைத்தாலும் ஒவ்வொன்று தடுத்தது

சரி மீண்டும் ராமசேஷனாகவே பிறக்கலாம் என்றால் இப்படி அடுத்த ஜென்மம் யாராக எடுக்கலாம் என்று யோசிக்கும் நிலை வரும்

அவருடைய மனம் குழம்பியது

எனக்குத் தெரியவில்லை நீயே ஒரு முடிவெடுத்து ஒரு பிறப்பைக் கொடு என்று வேண்டினார்

இப்போது தெய்வம் குழம்பியது ,யோசித்தது, தனக்குத்தானே பேசிக்கொண்டது சிரித்துக்கொண்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ