திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, March 31, 2011

”உயிர் மாற்றம் “ சிறுகதை

”உயிர் மாற்றம்” சிறு கதை வல்லமை இதழில் வெளியாகி உள்ளது
படிக்க சொடுக்குங்கள்.. http://www.vallamai.com/?p=2454
*********************************************************************************************
உயிர் மாற்றம்
Posted by editor on March 31, 2011 in சிறுகதைகள் | 0 Comment
தமிழ்த்தேனீ

இரவு 8 மணிக்கு வந்த மருத்துவர், சாரதாவைத் தனியே அழைத்து, “நாளைக்கு உங்கள் கணவருக்கு அறுவை சிகிச்சை. ஏற்கெனவே நான் கூறியபடி அவருடைய மூளையில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கவேண்டும். இல்லையென்றால் சுய நினைவு இழக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எங்களால் முடிந்த அளவு முயல்கிறோம், மற்ற விவரங்களைத் தலைமைச் செவிலி சொல்லுவாங்க. காலை 6 மணிக்கு அவரை அறுவை சிகிச்சைக்கு அழைச்சிட்டுப் போவாங்க” என்று மருத்துவர் சொல்லிவிட்டுப் போனார்.

ஓய்ந்து போய் உட்கார்ந்தாள் சாரதா. இரவு மணி 12. அப்போதும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டு படுத்திருந்த கண்ணன், கவலை காரணமாக அசந்து போயிருந்த மனைவி சாரதாவைப் பார்த்தார். பாவம் இவள் என்ன செய்வாள்?

“சாரதா நீ படுத்துக்கோம்மா, நான் ஏதாவது வேணும்னா கூப்பிடறேன்” என்றார்.

“சரி” என்று சொல்லிவிட்டுச் சாரதா படுத்துக்கொண்டாள். அவள் மனம் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டே இருந்தது.

தலையணைக்கு அடியில் இருந்த ஒரு சிறிய, பழைய புகைப்படம், கண்ணாடி போட்டு, பிரேம் போட்டது அதை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார் கண்ணன். அவர் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ஆமாம் அந்தப் புகைப்படத்தில் இருப்பவள் அவருடைய தெய்வம், மூத்த சகோதரி ராஜாமணி. பூஜை அறையில் இருக்கும் தெய்வத் திரு உருவப் படங்களுக்கு இடையே சுமார் 45 வருட காலமாக வைத்து, தினமும் வணங்கி வரும் அவருடைய சகோதரி ராஜாமணியின் புகைப்படம். மருத்துவ மனைக்கு வரும்போது மறக்காமல் அந்தப் புகைப்படத்தைக் கையோடு கொண்டு வந்து, தலையணைக்கு அடியில் வைத்திருந்தார். அந்தப் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு அந்தத் தெய்வீக நாள் நினைவுக்கு வந்தது!

அவருக்கு சுமார் எட்டு வயதிருக்கும் ,அவருடைய சகோதரி ராஜாமணிக்குச் சுமார் 12 வயது. மூன்றாம் முறை திருப்பிக்கொண்ட டைபாய்ட் ஜுரம் வந்து, கண்ணன் மிகவும் நலிந்து போனார். அவ்வப்போது நினைவு வருவதும் போவதுமாக இருந்தது, அப்போது மருத்துவர்கள் அவர் பிழைப்பது கடினம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். அன்று மருத்துவமனையில் அவர் படுத்திருந்த போது, அம்மாவும் அப்பாவும் கவலையோடு உட்கார்ந்திருந்தனர்.

ஒரு முறை சற்று தெளிவு வந்தபோது, அவரை மடியில் படுக்க வைத்துக்கொண்டு ராஜாமணி கைகளைக் கூப்பி, மானசீகமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் அவர் மேல் சொட்டிக்கொண்டிருந்தது. அவள் வாய் முணுமுணுக்கும் வேண்டுதல், இறைவன் காதில் விழுந்ததோ என்னவோ! அவர் காதில் விழுந்துகொண்டிருந்தது.

“பெருமாளே என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ! என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ! என் தம்பியைக் காப்பாத்து, என்னை எடுத்துக்கோ!” வேண்டிக்கொண்டே இருந்தாள் ராஜாமணி.

திடீரென்று நன்றாக இருந்த அவளுக்கு வலிப்பு வந்து அவள் மயங்கிக் கீழே விழுந்தாள், அவளுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய அவளைப் படுக்கைத் தள்ளுவண்டியில் (ஸ்ட்ரெக்சரில்) போட்டு, அவசர வைத்தியப் பிரிவுக்கு எடுத்துச் சென்றனர். சில வினாடிகளில் அப்பாவும் அம்மாவும் கதறிக்கொண்டிருப்பது காதிலே விழுந்தாலும் எழுந்து போய், என்ன நடந்தது என்று பார்க்க முடியாத நிலை.

அம்மாவும் அப்பாவும் ஓடி வந்து, “டேய் ராஜாமணி நம்மையெல்லாம் விட்டுட்டுப் போய்ட்டாடா! நீ பிழைக்க மாட்டேன்னு பயந்திண்டு இருந்தோம். நல்லா இருந்த அவ போயிடுவான்னு நினைக்கவே இல்லையே” என்று கதறியவுடனே அவருக்குப் புரிந்தது. அவளுடைய வேண்டுதல், அந்தப் பெருமாளையும் அசைத்து உருக வைத்தது விட்டது என்று.

‘அடடா ஒரு உயிரைக் கூட தானமாக அளிக்க முடியுமா? அதுவும் மனப்பூர்வமான வேண்டுதல் மூலமாக வரும் கண்ணீரின் வழியாக ஒரு பாலம் அமைத்து, அந்த உணர்வுப் பாலத்தின் வழியாக உயிர் மாற்றம் செய்ய முடியுமா, இன்னொரு உடலுக்குள்?’

முடிந்ததே அவர் சகோதரியால்! என்ன ஓர் உருக்கமான வேண்டுதல். சித்தர்களாலும் ஞானிகளாலும் கூட முடியாத ஒரு உயிர்மாற்று வித்தையை எவ்வளவு எளிதாகச் சாதித்துவிட்டாள் அவர் சகோதரி ராஜாமணி? மருத்துவர்களே ஆச்சாரியப்பட்டனர், அவர்களுக்குத் தெரியுமா? அவர் உடலில் இயங்கிக்கொண்டிருப்பது அவருடைய சகோதரி ராஜாமணியின் உயிர் என்று? அப்படிப்பட்ட உயிர்ச் சகோதரி ராஜாமணியின் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு உருகிக்கொண்டிருந்தார் கண்ணன்! பார்த்துக்கொண்டிருக்கும் போதே கை நடுக்கத்தாலோ, உணர்ச்சி வேகத்தாலோ அந்தப் புகைப்படம் தவறிக் கீழே விழுந்தது.

அதை எடுக்கக் குனிந்த கண்ணனும் கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் தலையில் என்ன பட்டதென்றே தெரியவில்லை, தலையிலிருந்து குருதி வழியத் தொடங்கியது. கண்ணன் மயங்கினார். சாரதா சத்தம் கேட்டு, ஓடி வந்தாள்.

“தெய்வமே இவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே, யாராவது ஓடிவாங்களேன்” என்று கதறினாள்.

மருத்துவர்கள் ஓடி வந்தனர். கீழே கிடந்த கண்ணனைப் படுக்கைத் தள்ளுவண்டியில் வைத்து, அவசர சிகிச்சைப் பகுதிக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சை அறைக்குள் அவர் உயிரைத் தக்கவைக்க போராடிக்கொண்டிருந்தனர். மண்டையில் பலமாக அடி பட்டிருந்தது.

சாரதா, ராஜாமணியின் புகைப்படத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, “தெய்வமே, எப்பிடியாவது அவரைக் காப்பாத்து” என்று கண்களில் கண்ணீருடன் வேண்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.

நான்கு நாட்கள் நினைவில்லாமல் இருந்த அவருக்கு நினைவு வந்த போது, மசமசப்பாக மனைவி சாரதாவின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. சிறிது சிறிதாக நினைவு வந்தது, மருத்துவர்கள் அவரையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மீண்டும் முழுவதுமாக நினைவு வந்த போது சாரதா சொன்னாள்.

“இந்த முறையும் உங்களை உங்க ராஜாமணி காப்பாத்திட்டாங்க. அவங்கதான் தெய்வம். ‘தெய்வம் மனுஷ்ய ரூபேணான்னு’ சொல்வாங்களே, அதே மாதிரி உங்க ராஜாமணி தெய்வமா இருந்து உங்களைக் காப்பாத்திட்டாங்க!

“ஆமாங்க, டாக்டருங்களே ஆச்சரியப்பட்டாங்க! மண்டையிலே அடிபட்ட போது உங்க மூளையிலே இருந்த கட்டி தானாவே உடைஞ்சு போயிடுத்துங்க. அதிலே ஆச்சரியமே உங்களுக்கு வேற எங்கேயுமே அடிபடலை. இனிமே தானா குணமாயிடும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க” என்றாள் சாரதா.

அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் கையில் ராஜாமணியின் படம்!

“ராஜாமணி! உயிரை மட்டும்தான் நீ எனக்குக் குடுத்தேன்னு நான் நெனைச்சிண்டு இருந்தேன். இந்த உடம்பும் உன்னோடதுதான் எல்லாமே உன்னோடதுதான். அது இப்போதான் எனக்குப் புரிஞ்சுது” என்று மனத்துக்குள் கதறினார் கண்ணன்.

அவர் கண்களில் கண்ணீர்! இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை, ஆத்ம சமர்ப்பணம்.

அன்புடன்
தமிழ்த்தேனீ

Sunday, March 27, 2011

"வெந்து தணியும் காடுகள்”

" வெந்து தணியும் காடுகள்” சிறு கதை வல்லமை இதழில் வெளியாகி உள்ளது-- http://www.vallamai.com/?p=2418

அப்பாவின் நண்பர் விஸ்வநாதனின் வீட்டுக்குப் போய் அவர் மனைவி காமாட்சியிடம் பேசிக்கொண்டிருந்தாள் ரம்யா. “இங்கே கற்பகாம்பாளைத் தரிசனம் செய்யணும்னு வந்தேன். அப்பிடியே உங்களையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன். சரி நான் கிளம்பறேன்” என்றாள் ரம்யா. “இதோ வரேன், இரு. குங்குமம் தரேன். இட்டுண்டு போயிட்டு வா” என்றபடி குங்குமச் சிமிழை நீட்டினாள், காமாட்சி மாமி. குங்குமத்தை இட்டுக்கொண்டு கிளம்பினாள் ரம்யா.

“உங்க அப்பாவைப் போன வாரம் ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்லே பாத்தேம்மா. மனையைப் பதிவு செய்ய வந்திருந்தார். எங்க வீட்டு முகவரிதான் குடுத்திருக்கார். அதற்கான பத்திரம், இங்கேதான் வரும். வந்தவுடனே நான் கொண்டு வந்து தரேன். அப்பாகிட்ட சொல்லும்மா” என்றார் விஸ்வநாதன்.
‘சுருக்’ என்றது ரம்யாவுக்கு. நம்மகிட்ட சொல்லாம எதையுமே செய்யமாட்டாரே அப்பா. ஒரு நிமிஷம் தலை சுற்றிற்று. சமாளித்துக்கொண்டு “தெரியும் சொன்னார்” என்று சமாளித்துவிட்டு கிளம்பினாள்.


“யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. எதுக்கு எங்ககிட்ட மறைக்கணும். நீங்க மனை வாங்கினா நாங்க சந்தோஷப்படுவோம், பொறாமைப்படமாட்டோம். ஏம்பா இப்பிடி செஞ்சீங்க? அவமானமா இருக்கு. அந்த விஸ்வநாதன் சார் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா? நான் உங்க மூத்த பொண்ணுப்பா. ஏன் என்கிட்ட சொல்லலை?”
ரம்யா ஆவேசத்துடன் கேட்ட கேள்வியில் அதிர்ந்தார் ராமாமிர்தம். முதல் முதலா அவர் வாழ்க்கையில் அவருக்கென்று பிறந்த முதல் குழந்தை, அப்பா என்கிற ஸ்தானத்தை அளித்த பெண். தோளிலும் மார்பிலும் வைத்துக் கொஞ்சி, பாசத்தையும் முதற்குழந்தை என்கிற ஆசையையும் கொட்டி வளர்த்த அவருடைய மூத்த குழந்தை. அந்தப் பெண்குழந்தை இப்போது வளர்ந்து ஒரு ஆணுக்கும் வாழ்க்கைப்பட்டு, இரு குழந்தைகளையும் பெற்று முதிர்ந்து நிற்கிறாள்.

‘குழந்தைகளுக்குத் தெரியாமல் நிலம் வாங்கி இருக்கேன்’ என்று விஸ்வநாதனிடம் சொன்னது தவறு என்று உறைத்தது அவருக்கு. அந்தப் பத்திரம் வந்துவிட்டதா என்று பார்த்து, அதை அவர் வீட்டுக்கே சென்று வாங்கி வந்திருக்க வேண்டும். ‘சரி என்னதான் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் இப்படித்தான் முட்டாள்தனம் செய்வோம்’ என்று யோசித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தார்.
“அப்பா உங்களைக் கேள்வி கேட்க, எனக்குத் தகுதியில்லாம இருக்கலாம். ஆனா, மனசு பொறுக்கலைப்பா. எனக்கு உள்ள ஒண்ணு வெச்சிண்டு, வெளிலே வேற பேசத் தெரியாது. அதுனாலே கேக்கறேன். இது மாதிரி நிலம் வாங்கி இருக்கேன்னு சொல்லியிருந்தா, நானும் சந்தோஷப்பட்டிருப்பேனே, எதுக்குப்பா என்கிட்டே மறைக்கணும்?”

“நாங்க இப்போ சொந்தமா வீடுகூட இல்லாம இருக்கலாம். நாங்களும் நிமிர்வோம். வீடு வாங்குவோம். ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க. எந்தக் காலத்திலேயும் நான் என் சொந்தக் கால்லே நிப்பேனே தவிர, உன்கிட்ட கையேந்த மாட்டேன். எனக்கு இதைக் குடு அதைக் குடுன்னு கேக்கமாட்டேன்” என்றாள் ரம்யா.

‘இன்னும் இவள் குழந்தையாகவே இருக்கிறாளே! இவ்வளவு வளர்ந்து கூட இன்னும் புரிந்துகொள்ளாத குழந்தையாகவே இருக்கிறாளே!’ என்கிற அதிர்ச்சியும், நம்மைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு, தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாளே என்னும் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை நிலைகுலைய வைத்தது. அவர் வாழ்க்கை அவருக்குப் பல அனுபவங்களைக் கொடுத்திருந்தது. ஆனாலும் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவர் சிக்கியதில்லை. ஆடிப் போனார் ராமாமிர்தம்.
இன்று வரை எது செய்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து விவாதித்து, கூடியவரை ரகசியம் ஏதும் இல்லாமல் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு செயல்பட்டிருக்கிறார் ராமாமிர்தம்.

ஏதோ ஆண்டவன் புண்ணியத்திலே அவர் உழைப்பிலே அவருக்கு வந்த பணமே அவரையும் அவர் மனைவி லலிதாவையும் கடைசீ வரை யாரிடமும் கையேந்தி நிற்காத ஒரு நிலையைத் தந்திருக்கிறது. பேராசை இல்லாத ராமாமிர்தத்துக்கும் அவர் மனவிக்கும் இருப்பதற்கு ஒரு வீடு, கையில் ஏதோ கொஞ்சம் பணம் என்று இருந்தாலும் தினமும் இந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கு நன்றி சொல்லிக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த மேடு பள்ளம், சரிவு, உயர்வு, அவமானங்கள், சுனாமிகள், இடி மின்னல் மழை, பூகம்பம்…. அத்தனையையும் கூடவே நின்று தோள் கொடுத்துத் தாங்கி அவரையும் கீழே விழாமல் தாங்கி, தானும் நிமிர்ந்த அவர் மனைவி லலிதா அவளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.

இரவு வீட்டுக்கு வருவதற்கு எத்தனை நேரமானாலும் தூங்கிப் போனாலும் அவர் வந்தவுடன் எப்படியோ அறிந்துகொண்டு அத்தனை தூக்கத்திலும் இருட்டில் அவரைத் தேடிக்கொண்டு வந்து, அவர் மார்பில் தூங்கிய குழந்தை. யாராவது அவரைப் பற்றி ஏதேனும் சொன்னால் ஒற்றை விரலை நீட்டி, ‘எங்க அப்பாவை இப்பிடிச் சொன்னீங்க, அடிச்சிருவேன்’ என்பாள். அந்தக் குழந்தை அவரை இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.

அவளுக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத நிலையில், வாடகை வீட்டிலே இவள் இருப்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, ரகசியமாக அவர் செய்த காரியம், இன்று அவரைக் குற்றவாளியாக்கி இருக்கிறது. யாருக்காக அதைச் செய்தாரோ அந்த மூத்த பெண்ணே அவரைக் குற்றவாளியாக்கி, ஏதோ நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து, தகாத குற்றம் செய்தவரை விசாரிப்பது போல் கேட்கிறாள்.
மனம் ஒடிந்து போனது அவருக்கு. பெற்ற குழந்தைகளில் அனைவரையும் சமமாகப் பாவித்தாலும் யார் சற்றே பலவீனமாக இருக்கிறார்களோ அந்தக் குழந்தையின் மேல் ஒரு தனிக் கவனமும் ஆதரவும் காட்டுவது இயல்பு. இதைப் புரிந்துகொள்ளாமல், யாருக்கும் எந்த துரோகமும் செய்யாத அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள், குழந்தைகள் என்னும் அவரது அசாத்திய நம்பிக்கை தகர்ந்து போனதில் ஏற்பட்ட அதிர்ச்சி.
மற்ற இரு குழந்தைகள் ஏதோ ஓரளவுக்கு அவர்கள் சுய தேவையை ஈடு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். சமாளித்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை. ஆனால் பெரிய பெண் வாழ்க்கைச் சூழலைச் சமாளித்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாளே, சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல். இன்னும் குழந்தைகளை வேறு படிக்க வைக்கணும் என்று யோசித்து, யாருக்கும் இப்போ சொல்லவேண்டாம் என்று நினைத்தது தப்பா?

வங்கியில் தங்களின் பாதுகாப்பு கருதி வைத்திருந்த பணத்தை எடுத்து, யாருக்கும் தெரியாமல் ஒரு நிலம் வாங்கினார். அதுவும் ஒரு வேளை பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் நன்றாக உழைத்து அவர்களாகவே வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால், மகிழ்ச்சியோடு இப்போது வாங்கிய நிலத்தை மூன்று பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம்.
அப்படி ஒரு வேளை பெரிய பெண் இதே நிலையில் இருந்தால் மற்ற இரு பிள்ளைகளின் சம்மதத்தோடு பெரிய பெண்ணின் முன்னேற்றத்துக்காக கொடுக்கலாம் என்று எண்ணித்தானே வாங்கினார்?
சரி, இவளுக்கு எப்படிப் புரியவைப்பது? எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பாள். அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார். “சரி விடுங்கப்பா, உங்க இஷ்டம். நான் யாரு உங்களைக் கேள்வி கேட்க? நீங்க செய்யிற எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும்னு நான் எப்படி எதிர்பாக்கலாம்?” என்று சுய இரக்கம் ஆட்டிவைக்க, அவள் அலுத்துக்கொண்டிருந்தாள்.

அவருக்குத் தோன்றியது இவள் வளரவே இல்லை. அப்படியே இன்னமும் குழந்தையாய்த்தான் இருக்கிறாள். அவருக்கு ஒன்று புரிந்தது. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிவு உறைத்தது. அனுபவம் தரும் பாடம் அதற்கு ஈடே இல்லை. இவளுக்கும் அனுபவம் பாடம் சொல்லித் தரும் என்னும் நம்பிக்கை பிறந்தது.
அவளுக்குப் பதில் சொல்லவில்லை! வெந்து தணிந்த காடு புகைந்துகொண்டிருந்தது. அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது!

ஆனால் அனுபவமில்லாத இன்னொரு காடு, சுடும் என்று தெரியாமலே தனக்குள் அக்கினிக் குஞ்சை வைத்துக்கொண்டு வெந்துகொண்டிருக்கிறது.




அன்புடன்
தமிழ்த்தேனீ

Thursday, March 10, 2011

’ மனம் கவர்ந்த பெண்மணி”


சக்தி புதிய விகடனில் என்னுடைய  மனம் கவர்ந்த பெண்மணிகட்டுரை வெளிவந்துள்ளது
http://new.vikatan.com/others/womens2011/index.php


"என் மனம் கவர்ந்த பெண்மணி"

உலகத்தில் நம் மனம் கவரும் பெண்மணிகள் ஏராளம். மனம் கவரும் பெண்மணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சிலர் அன்பால் கவருவார்கள், சிலர் அழகால் கவருவார்கள், சிலர் ஆளுமையால் கவருவார்கள், சிலர் கவிதையால் கவருவார்கள், சிலர் வீரத்தால் கவருவார்கள், சிலர் விவேகத்தால் கவருவார்கள், சிலர் கருணையால் கவருவார்கள், சிலர் தாய்மையால் கவருவார்கள் . யோசித்துப் பார்த்ததில் மேற்கூறிய அனைத்து தகுதிகளாலும் என்னக் கவர்ந்த பெண்மணி என் தாயார் கமலம்மாள்
ஸ்ரீரங்கத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குழந்தை பருவத்தை அனுபவிக்கும் காலத்திலேயே பூப்படைந்து பால்யவிவாகத்திற்கு தலைவணங்கி திருமாங்கல்யத்தை ஏற்று, குழந்தையாகவே இருந்தாலும் , என் தந்தை சார்ந்த ஒரு பெரிய குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்று மிகத் திறமையாக நிர்வாகத் திறனை தன் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து அந்தக் குடும்பத்தை மிகத் திறமையாக நிர்வகித்து.  
 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
 சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

என்னும் வள்ளுவரின் வாக்குக்கொப்ப வாழ்ந்து எத்துணை கஷ்டம் வரினும் அத்தனை கஷ்டங்களையும் தன் நேர்மை என்னும் மனோ வலிமையால் சமாளித்து தனக்குத்தானே குருவாகி நின்று தன் தகுதியையும் வளர்த்துக்கொண்டு. தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ளவும், தேசபக்தியை வளர்த்துக்கொள்ளவும்,தகைசான்ற அறிவியலாளர்களோடு வரையறையோடு பழகி , என் பாட்டனாரின் தமிழ் அறிவையும் தனக்குள் ஏற்று நம் நாட்டில் பஞ்சம் வந்த காலத்தில் அடுத்தவரைச் சாராமல் தன் குடும்பம் காக்கவும், தன்னை விடத் தளர்ந்த நிலையில் இருக்கும் மற்றவர்களின் மேன்மைக்காகவும் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் எழுதிவந்தவர். ஒரு காலத்தில் அவரது கதைகளோ ,கட்டுரைகளோ,கவிதைகளோ வராத பத்திரிகைகளே இல்லை எனலாம்.
 அதன் மூலமாகவரும் சொற்பத் தொகையிலேயே குடும்பத்தை நிர்வகித்து, அடுத்தவருக்கும் தன்னாலியன்றவரை உதவி தன் கடைசி மூச்சு இருக்கும் வரையில் நம் தேசத்துக்காகவும் நம் மக்களுக்காகவும் வாழ்ந்து திரு மு கோதை நாயகி அம்மாவோடு இணைந்து, “ வாருங்கள் மறியல் செய்து மனமகிழ்ந்திட வாருங்கள்என்று பாடிக்கொண்டே மஹாத்மா காந்தியிடம் தன் கைவளையலைக் கழற்றிக் கொடுத்துவிட்டு கதர்கஞ்ச் என்னும் போராட்டத்தில் கலந்துகொண்டு, ஒரு உதாரணப் பெண்மணியாகத் திகழ்ந்த என் தாயார் ஆர். கமலம்மாள்.
பெற்ற மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்து, அப்படியும் மனம் தளராமல் மீதி இருக்கும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய சூழ்நிலையில் உற்ற கணவனும் இயறகை எய்த ,அப்போதும் நெருப்பில் வீழ்ந்து மாண்டாலும் மீண்டு வரும் பீனிக்ஸ் பறவை போல் படிக்க வைத்து ஆளாக்கி, வாழ்க்கையின் உன்னதமான இடத்துக்கு எங்களையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து. வயதான காலத்தில் புற்று நோய் பாதித்தாலும் அப்போதும் தளராமல் 70 வயதிலும் கிருஷ்ணதீர்த்தம் என்னும் சிறுகதைக்கு முதற்பரிசு வாங்கியதும், அவர்கள் எழுதிய பாடல்களை திருமதி பாம்பே சகோதரிகள் பாடல்களாகப் பாடி தெய்வீகப் பாமாலைஎன்னும் பெயரில் ஒலி இழையாக வெளியிட்டதும் அவர் சாதனைகள்.


 நான் பிறக்கும் போது என் தாயாருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் யார் தெரியுமா? எழுத்தாளர் லக்‌ஷ்மி அவர்கள்,ஆம் டாக்டர் திரிபுரசுந்தரி என்னும் லக்‌ஷ்மி அவர்கள் என் தாயாரின் இனிய ஸ்னேகிதி தாய்மையோடு என்னை அணைத்து தன் கையில் பூத்த மலர் என்று என்னை வர்ணித்து. தன் வாயாலேயே இந்த செய்தியை சென்னை கம்பர் அரங்கத்தில் மேடையிலேயே கூறியவர் எழுத்தாளர் லக்‌ஷ்மி அவர்கள்.
இவற்றையெல்லாம் விட நம் தேசத்தின் விடுதலைக்காக அந்தக் காலத்தின் அடக்கு முறைகளுக்கும் கட்டுபெட்டிதனத்துக்கும் அடிபணிந்து விடாமல் போராடி ,அதே நேரத்தில் குடும்ப கௌரவத்தையும், கடமைகளையும் விடாமல் காத்து எழுத்தாளர் என்று பெயரெடுத்த, வீரப் பெண்மணி ஆர் கமலம்மாள் அவர்களே என் மனதைக் கவர்ந்த பெண்மணி என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
என் மனதை கவர்ந்த, என் ஆத்மாவின் அன்பையும் கவர்ந்த என் தாயார் ஆர் கமலம்மாள். இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் இப்படிப்பட்ட புனிதமான தாயாரின் வயிற்றிலேயே பிறக்கவேண்டும் என்றே வேண்டிக்கொள்கிறேன் . எனக்குள்ளும் தேச பக்தியையும், தமிழையும் நற்பண்புகளையும் ஏற்றி என்னையும் மனிதம் நிறைந்த மனிதனாக, எழுத்தாளனாக வடிவமைத்த என் தாயார் ஆர். கமலம்மாள்தான் என் மனதை மிகவும் கவர்ந்த பெண்மணி என்பதில் பெருமை கொள்கிறேன்.

அன்புடன்
தமிழ்த்தேனீ


”வேருக்கு நீர்”

சிறுகதைகள் | 0 Comment

சரஸ்வதி, டெல்லிலெல்லாம் ரொம்பக் குளிராம். அதுவுமில்லாமே நாம் போயிட்டு வரப் போற பத்ரிநாத் இமய மலைக்குப் பக்கத்திலே இருக்கு. தாங்க முடியாத அளவுக்குக் குளிர் இருக்குமாம். எதுக்கும் ரெண்டு கம்பளி எடுத்துக்கோஎன்றேன் சரஸ்வதியிடம். பல காலமாக கோடித்து  இப்போதுதான் வேளை வந்திருக்கிறது. கடமைகளையெல்லாம் ஓரளவு முடித்தாயிற்று. பத்ரிநாத் சென்று தரிசித்து வரவேண்டும் என்னும் ஆசை நிறைவேறும் தருணம்.
மிக உற்சாகமாக, “சரி, நீங்களும் உங்களுக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வெச்சிக்கோங்க. அங்கே போனா எது கிடைக்கும், எது கிடைக்காதுன்னு தெரியாதுஎன்றாள்.
எனக்கு புரிந்தது, அவள் பூடகமாக எதைச் சொல்கிறாள் என்று.
எனக்கு, அவ்வப்போது சிகரெட் பிடிக்கும் வழக்கம் உண்டு. அதை அவ்வப்போது கண்டிக்கும் வழக்கம் அவளுக்கு. ஜாக்கிரதை, இதையெல்லாம் நிறையப் பிடிக்காதீங்கோ. உடம்பு கெட்டுப் போயிடும்என்பாள். ஆனாலும் வாட்ச்மேனிடம் காசு கொடுத்து, வாங்கி வரச் சொல்லும் போது  கண்டுகொள்ள மாட்டாள்.
சரி, டிக்கெட்டெல்லாம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோங்க. அப்புறம் டெல்லிலே போயி இறங்கி, ஒரு டாக்சி வெச்சிண்டு வெங்கடேஸ்வரா மந்திருக்கு போயிடலாம். அப்புறம் அவர் பொறுப்பு, அங்கேருந்து தேவநாதன், பத்ரிநாத்துக்குக் கூட்டிண்டு போயிடுவார்என்றாள்.
சரி சரி, இது வரைக்கும் பத்து வாட்டி சொல்லிட்டே. நானும் பத்திரமா டிக்கட்டெல்லாம் எடுத்து வெச்சிண்டுட்டேன்னு சொல்லியாச்சுஎன்றேன்
ஆரம்பத்திலேருந்து இவளுக்கு இவளோட பயத்தையெல்லாம் என்மேலே ஏத்தி வெக்கெறதே வழக்கம்.
வாசலில் ஏதோ சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தேன்!
லக்‌ஷ்மி மன்னி காரிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள். என்னடா இது உலக அதிசயம்! என்று மனம் ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்துக்கொண்டு வாசலுக்கு ஒடினேன். ஆச்சு மன்னி கதவின் அருகே வந்து நிற்கிறாள். வாங்க என்று கூப்பிடவா? நீங்க எதுக்கு என் வீட்டுக்கு வந்தீங்க என்று கேட்பதா? என்று குழம்பி ஏதோ ஒன்று உள்ளுக்குள்ளே உணர்த்த, “வாங்கோ மன்னி  என்று கதவைத் திறந்து விட்டேன்  அண்ணாவின் மூத்த மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.. சித்தப்பா, பத்ரிக்கு போயிட்டு வரப் போறீங்களாமே. அம்மாவும் உங்களோட வராளாம், கூட்டிண்டு போயிட்டு  வரமுடியுமான்னு கேக்கச் சொன்னாஎன்றான் அவன்.
சரஸ்வதியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். என்ன சொல்வாள் இவள்?’ அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். திருமணமாகி வந்ததிலிருந்து, மன்னி படுத்திய பாடெல்லாம் தெரிந்தும், அடுத்தும் அவள் படுத்திய பாட்டுக்கெல்லாம் ஈடுகொடுத்து அமைதி காத்த சரஸ்வதியின் வாயிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்று அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
வரச்சொல்லுங்கோ, கூட்டிண்டு போயிட்டு வரலாம், மன்னிக்கு மட்டும் வேற யாரு இருக்கா? நாமதானே செய்யணும்என்றாள் சரஸ்வதி.
பழசையெல்லாம் மறக்கறதுதான் நல்லது. நாம என்ன தலையிலேயா தூக்கிண்டு போய்ட்டு வரப் போறோம். கொஞ்சம் பத்திரமா
   பாத்துக் கூட்டிண்டு போயிட்டு திரும்பக் கொண்டுவந்து விடணும், பாத்துபோம்பகவான் இருக்கார்என்றாள்.
இவ பாவம் இதுவரைக்கும் எனக்கு வாழ்க்கைப்பட்டு எங்கும் போனதில்லை. போகச் சந்தர்ப்பமே அமையவில்லை. திருமணம், அதன் பின்னர் வரும் வருமானத்தில் நடுத்தர வாழ்க்கை. அதிகப்படி ஏதும் செய்ய முடியாதபடி, அரைகுறை வருமானம். பிள்ளைகள் படிப்பு. பற்றாக்குறைக்கு நிமிர முடியாத அளவுக்குக் குருவியின் தலையில் பனங்காய் போல, அம்மாவின் புற்று நோய்க்கே மாதா மாதம் சக்திக்கு மீறிச் செலவு.
மன்னியிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டு, வேலை வேலை என்று எப்போதும் வேலை செய்து வரக்கூடாத நோய், கொடிய நோய் வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள் அம்மா.
கணவனின் அம்மா என்றாலே அவளைக் கொடுமைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அவள் உன்னைக் கொடுமைப்படுத்துவாள் என்று மன்னிக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ. அம்மாவை எவ்வளவு துளைக்க வேண்டுமோ அவ்வளவு துளைத்துவிட்டாள். வார்த்தைச் சவுக்கடிகளாலும் குடும்பத்தை இரண்டாக்குவதிலும்.
மனத்தில் ஏற்பட்ட காயம், அம்மாவுக்குப் புற்று நோயாக உருவெடுத்து, செய்யாத வைத்தியமில்லை, வேண்டாத தெய்வமில்லை. டாக்டர் ராஜலட்சுமி புற்று நோய் மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். இனி வைத்தியம் செய்து உபயோகமில்லை. இவ்வளவு நாட்கள் உங்கள் சம்பளத்தை வைத்துக்கொண்டு எப்படி செய்தீர்களோ? உங்கள் பாசத்தை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இனி அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காதுஎன்றார்.
ஆனால் இறைவன் எங்களுக்குப் பூலோக நரகத்தை என் அம்மாவின் வியாதி மூலமாகப் புரியவைத்தான். ஆமாம் அவதிப்பட்டுக்கொண்டே அம்மா  எட்டு வருடம் உயிரோடிருந்தாள். என்னதான் முடிந்த வரை வைத்தியம் பார்த்தாலும் அம்மாவின் வலியை வாங்கிக்கொள்ள முடியவில்லையே.  அம்மாவின் மேல் உயிரையே வைத்திருந்த எங்களையே இறைவா, அம்மாவை எடுத்துக்கொண்டு விடு, அவள் படும் பாட்டை சகிக்க எங்களால் முடியவில்லைஎன்று வேண்ட வைத்தான் இறைவன். அது, கொடுமையின் உச்சகட்டம். இந்த நிலை யாருக்குமே வரக் கூடாது என்று இருவருமே இறைவனை மனமார வேண்டினோம்.
பூலோக நரகத்தின் வலையில் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் விதியின் கரங்களுக்கு மறுப்புச் சொல்ல எண்ணி, கையைக் காலை ஆட்டி, இன்னும் வகையாக வலையில் சிக்கிக்கொண்டு, எப்படி மீள்வது என்றே தெரியாமல், விதி என்னும் சிலந்தி எப்போது  வந்துவிடுமோ என்னும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை முப்பது வருடமாக.
***************************************************
முதல் நாள் இரவு நினைவே இல்லாமல் படுத்திருந்த அம்மாவிடம் உட்கார்ந்து  அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ தோன்றியது  என்னைப் பெற்றெடுத்த தெய்வத்திடம் அமுதம் குடித்து வளர்ந்த நான், அந்தக் கனக முலையையும், நான் குடியிருந்த கோயிலான அவள் வயிற்றையும் ஒரு முறை இதமாக தடவி விட்டு, இரு கையையும் கூப்பிக்கொண்டு, ‘என்னை பெற்ற தாயே, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். என்னைப் பெற்று இந்த பூமிக்குக் கொண்டு வந்த உனக்கு எப்படி என் நன்றிக் கடனைத் தீர்ப்பேன்என்று எண்ணி, கண்ணில் நீர் வழிய, மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டே சற்று நேரம் இருந்தேன். பல நாள்களாக நினைவில்லாமல் இருந்த அந்த உடலில் கூட உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு சலனம் ஓடுவதை உடல் அசையாவிட்டாலும் உணர்வுகள் அசைவதை என் மனத்தால் உணர முடிந்தது.
அம்மா இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு மகனாகவே பிறக்கவேண்டும். அதற்கு அருள் செய்வாய் தாயேஎன்று வேண்டிக்கொண்டேன். ஆமாம் அப்பா இறந்து போகும்போது எனக்கு பதினோரு வயது. அன்றிலிருந்து இன்று வரை என்னை ஆளாக்க, இவள் பட்ட கஷ்டம், கண்முன்னால் நான் கண்ட இவள் உழைப்பு, நேர்மை, மனோதிடம், அப்பப்பா. இவள் இறந்து, தந்தை உயிரோடிருந்தால் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே!
தூக்கம் கண்களைச் சுழற்றியது. அப்படியே கட்டிலின் கீழே படுத்துக் கண்ணயர்ந்தேன். நல்ல தூக்கத்தில் என் மனைவி என்னை எழுப்பினாள். என்ன என்றேன். கண்களைக் கசக்கியபடி, வாயில் முந்தானையைப் பொத்தியபடி அம்மா..என்றாள்.
திடுக்கிட்டு எழுந்து அம்மாவைப் பார்த்தேன். அவள் நிச்சலனமாக இறந்து போயிருந்தாள். இத்துணை நாட்களாக, வலியினால் ஏற்படும் முகச் சுழிப்பைக் கண்டிருக்கிறேனே, தவிர புன்னகையைக் கண்டதில்லை. அவள் இதழ்க் கடையோரம் இப்போது நிம்மதியான புன்னகை.
நான் மானசீகமாகச் சொன்னது, உனக்குப் புரிந்ததா அம்மா. அதுதான் புன்னகைக்கிறாயா? உண்மையாகவே என்னை விட்டுப் போய்விட்டாயா? “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவேஎன்கிற வரிகள், தானாய் என் மனத்துக்குள் ஓடின. அடக்க மாட்டாதவனாய், தாயின் மேல் விழுந்து குமுறிக் குமுறி அழுதேன். இனி நான்தான் ஆதாரம் உனக்கு கவலைப்படாதேஎன்பது போல், என்னை ஆதரவுடன் எழுப்பி, தன் தலைப்பினால் என் கண்ணையும் முகத்தையும் துடைத்துவிட்டு, தன் மேலே ஆதரவுடன் தாங்கிக்கொண்டாள் என் மனைவி.
ஆயிற்று, அக்னி தேவனின் அசுரப் பசிக்கு அன்னையை கொடுத்துவிட்டு, அடுத்தடுத்து செய்யவேண்டிய காரியங்களைச் செய்து, அன்னையைக் கரையேற்றியாயிற்று. சாதாரண மனிதன் தானே நான். நமக்கெல்லாம் மறதி ஒரு வரப்ப்ரசாதம். வழக்கம் போல் இயந்திர கதியாய் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியாயிற்று. அடுத்தடுத்து அம்மாவின் ஆசியுடன் முதல் பெண் கல்யாணம். அடுத்த மகன் கல்யாணம், அடுத்து கடைக்குட்டியின் கல்யாணம் எல்லாம் முடிந்து, ஓரளவு கடமைகளை முடித்தாயிற்று என்று இருக்கும் நிலையில் ஒரு தைரியம். வெகுநாட்களாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்த பத்ரிநாத் பயணம். அதற்கு வேண்டிய பணமும் கட்டியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பவேண்டும்.
*******************************************************************
அப்பா இறந்து, குடும்பப் பொறுப்பு, அண்ணாவின் தலையில் வந்து, சில காலத்துக்குள் அண்ணாவின் திருமணம் முடிந்து, வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து, ஆறே மாதத்துக்குள் அம்மாவைப் பாடாய்ப் படுத்தி அழவிட்டு, வேலைக்காரியைப் போல நடத்தி, மனிதர்களிடம் சொன்னால் வம்பு வரும் என்று கோயிலில் போய் உட்கார்ந்து, அழுது குமுறி, தன் சோகங்களை அவனிடம் கொட்டித் தீர்த்துவிட்டு நிராதரவான நிலையை மனத்தில் கொண்டு, என்னையும் என் தம்பியையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய கடுமையான சூழ்நிலையில் எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு வேலைக்காரியாய் வலம் வந்துகொண்டிருந்த அம்மா, நினைவுக்கு வந்தாள். ஒரு பெண்ணால் இப்படிக்கூட ராட்சசி போலச் செயல்பட முடியுமா  என்று அனைவருமே வியக்கும் வண்ணம் அம்மாவையும் என்னையும் என் தம்பியையும் வேலை வாங்கி, பட்டினி போட்டு, அப்படியும் தன் கொடுமையின் உச்ச கட்டமாக, அண்ணாவை விட்டே எங்களை வீட்டைவிட்டுத் துரத்திய மன்னி.
அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. மாலையில் வீட்டுக்கு வந்த அண்ணாவிடம், ‘நாளையிலிருந்து இந்த வீட்டில் நான் இருக்க வேண்டுமென்றால் உங்கள் அம்மாவும் தம்பிகளும் இங்கே இருக்கக் கூடாது. அப்பிடி அவங்கதான் வேணும்னா நான் எங்கேயாவது ஓடிப் போயிடுவேன். உங்களுக்குதான் மானம் போகும். என்னை நீங்க வீட்டை விட்டுத் துரத்திட்டீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்வேன்என்று ப்ரகடனம் செய்தாள் மன்னி.
ஒரு பரிதாபமான சூழ்நிலைக் கைதியான ஆண்மகனை அன்றுதான் வாழ்வில் கண்டேன், ‘வேணாம் லக்‌ஷ்மி. என் அம்மாவையும் என் தம்பிகளையும் என்னை விட்டுப் பிரிச்சிடாதேஎன்று குடும்ப மானம் போகக் கூடாதே என்று அஞ்சி, ரகசியமாகக் கதறிய அண்ணனிடம்.
நான் சொன்னதைச் செஞ்சிட்டு, என் வீட்டுக்கு வந்து விவரம் சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் இங்கே திரும்பி வரேன்என்றபடி, துணிமணிகளை எடுத்துகொண்டு, ஒரு வயதுக் குழந்தையையும் எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே போனாள் லட்சுமி மன்னி.
அம்மா, அண்ணாவைப் பார்த்து, ‘டேய் எனக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம். நாங்க வெளியிலே போறாம்என்று வேறு வழியில்லாமல், வீட்டை விட்டு வெளியே வந்து, நடுத்தெருவில் நின்று, எங்கே போவது என்றே தெரியாமல் விழித்துக்கொண்டு நின்ற அம்மாவை, யதேச்சையாக விஷயம் கேள்விப்பட்டு, ஆதரவுக் கரம் நீட்டி, அரவணைத்து, எனக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்து, பத்து ரூபாய்க்கு ஒரு வீட்டையும் வாடகைக்கு ஏற்பாடு செய்த உறவுக்காரப் பெண்மணி.
அதன் பிறகு சுய உழைப்பால் அணு அணுவாய் வளர்ந்து அந்த ஆலையில் வேலைக்கு சேர்ந்து இரண்டு நாட்கள் வேலை செய்த பின் கைகளைப் பார்த்தேன். ஆங்காங்கே கிழிந்து, உள்ளங்கை ரணகளமாக இருந்தது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம், ‘என்னால் முடியாதும்மா. நாளையிலேருந்து வேலைக்குப் போகமாட்டேன்என்றேன். அம்மா என்னைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, ‘இல்லே நீ வேலைக்கு போறஎன்றாள்.
உள்ளங்கையும் மனதும் பழகிவிட்டது இந்த வாழ்க்கைக்கு. நம்ம உடம்பும் மனசும் நாய் மாதிரி எப்பிடிப் பழக்கறோமோ அப்பிடி இருக்கும்என்று அம்மா சொன்னது நியாபகத்துக்கு வந்தது. இந்த நாய்க்கும் உடம்பும் மனசும் பழகியது. ஒரு தைரியம் வந்தது. இன்று நிமிர்ந்து நிற்பதற்கு அன்னிக்கு அம்மா சொன்ன வார்த்தைதான் வேதமாக, அடி நாதமாகச் செயல்பட்டிருக்கிறது.
ஆயிற்று, அண்ணாவும் லட்சுமி மன்னியிடம் தாக்குப் பிடிக்காமல் சீக்கிரமே போய்ச் சேர்ந்தார். மனிதர்களுக்குக் கைவிட்டுப் போன பின்னால்தானே  அருமை புரிகிறது. மன்னியும் உணர்ந்தாள்.
ஒரு நாள் மன்னியிடமிருந்து போன்.
என்ன கண்ணா, ரொம்ப நாளாச்சு. சரஸ்வதியையும் கூட்டிண்டு வந்துட்டு போயேன்என்றாள்.
ஆச்சரியம்! வீட்டுக்குப் போனாலே, ‘உன்னை யாரு வரச்சொன்னா?’ என்பாள் மன்னி. அந்த மன்னி இப்போது எப்படி மாறிவிட்டாள். தனிமை  மனிதரைத் திருத்திவிடுமோ! ஏன் நீங்க ரெண்டு பேரும் வரவே மாட்டேங்கறீங்க? ஒரு நாள் வந்துட்டுப் போங்களேன்என்கிறாள்.
அந்த மன்னி எங்களோடு பத்ரிநாத் வருகிறாளாம். மன்னியிடமிருந்து போன். என்ன கண்ணா, நானும் உங்களோடு வரட்டுமா? கூட்டிண்டு போக முடியுமா?” என்றாள். மன்னியும் அம்மாவுக்குச் சமம்தான் அப்பிடீன்னு அம்மாவோட குரல் காதுலே கேட்டது. வாங்கோ மன்னி, நாங்க கூட்டிண்டு போயிட்டு வரோம், ஒண்ணும் கஷ்டமில்லேஎன்றேன் நான்.
ஆயிற்று, பத்ரிநாத்  போகும் வழியிலெல்லாம், சரஸ்வதியின் கையைப் பிடித்தபடி வந்துகொண்டிருக்கிறாள் மன்னி.
வயசாச்சு நடக்க முடியலை, மூச்சு வாங்கறது மன்னிக்கு. நான் சொன்னேன் நிதானமா வாங்கோ. அவசரமில்லேஎன்று ஒரு பக்கம் நானும் இன்னொரு பக்கம் சரஸ்வதியும் கையைப் பிடிச்சு அழைச்சிண்டு போனோம்.
கங்கைக் கரை ஓரம். கங்கை பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.
கண்ணா, நானும் கங்கையில் குளிக்கணும்என்றாள் மன்னி.
நீங்க இங்கே கரையோரமா உக்காருங்கோ. நானும் உங்க பிள்ளை மாதிரிதானே. நான் சொம்பாலே மொண்டு கொட்றேன், குளிங்கோஎன்று சொல்லிவிட்டு, சொம்பால் ககையின் புனித நீரால் மன்னியைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன்.
மனதுக்குள் எங்க அம்மாவைக் கங்கைக்குக் கூட்டிண்டு வர முடியலை. அதுக்காகத்தான் பகவான் எனக்கு இப்பிடி ஒரு கொடுப்பினையைக் கொடுத்தானோ என்னும் எண்ணம். அம்மாவைக் குளிப்பாட்டுவது போலவே இதமாகக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலே ஆணென்ன, பெண்ணென்ன. எல்லோருமே அர்த்தநாரிகள்தான் அப்பிடீன்னு மனசிலே தோன்றிக்கொண்டிருந்தது.
ஆயிற்று, கங்கையில் குளித்துவிட்டு, மன்னிக்கு சரஸ்வதி உடம்பு துடைத்துக்கொள்ளவும் புடவை உடுத்திக்கொள்ளவும் உதவிக்கொண்டிருந்தாள்.  மூவரும் கங்கைக் கரையில் சற்றே உட்கார்ந்தோம். மன்னி கங்கையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.
ஏன் மன்னி, என்ன ஆச்சு? ஏன் அழறீங்க?” என்றேன்.
அழலை. அண்ணாவை நினைச்சிண்டேன்என்றாள்.
என்னவோ தெரியலை திடீர்ன்னு என் கையைப் பிடிச்சிண்டு, “டேய் நீயும் சரஸ்வதியும் நன்னா இருப்பேள். உங்களுக்கு ஒரு குறையும் வராதுஎன்றாள் மன்னி.
நாம உடுத்திண்டு இருக்கற வஸ்திரத்தை கங்கையிலே  விட்டுட்டா நாம பண்ண பாவமெல்லாம் அந்த வஸ்திரத்தோட போயிடும்னு சொல்லுவா  அப்பிடீன்னு சொல்லிண்டே ஒரு புடவையைக் கங்கையில் விட்டாள் மன்னி. கங்கையின் பிரவாகத்தில் புடவையும் சுழித்துக்கொண்டு காணாமல் போனது. அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் மன்னி லக்‌ஷ்மி.
சரி மன்னி, நாம இங்கே பத்ரிநாத் கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே மானான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே சரஸ்வதி நதியோட உற்பத்தி ஸ்தானம் இருக்கு. அங்கேயும் போயி பாக்கலாம். ஆனா ஒண்ணு, அங்கே கொஞ்சம் உயரமா மலை ஏறணும். சரஸ்வதி நதியை வேறெங்குமே பாக்க முடியாது. அவ பூமிக்கு அடியிலேயே ரொம்ப ஆழமா பிரயாணம் பண்ணிண்டு இருக்காஎன்றேன்.
வேண்டாம். என்னாலே இந்த உயரத்துக்கு மேலே வரமுடியும்னு தோணலே. அதுவும் நீங்க ரெண்டுபேரும் கையைப் பிடிச்சுக் கூட்டிண்டு வந்ததாலே முடிஞ்சிது. நான் சரஸ்வதியை இதோ இங்கேயே பாத்துக்கறேன். புரியலையா? இவளைத்தான் சொன்னேன். உன் பொண்டாட்டி சரஸ்வதியைத்தான் சொன்னேன்என்றாள், சரஸ்வதியின் கையையும் என் கையையும் பிடித்தபடி.
மன்னியின் கண்களில் இருந்து வழிந்து பெருகி, கங்கையும் யமுனையும் ஸரஸ்வதியும் சங்கமித்து, மூலஸ்தானத்திலிருந்து பொங்கி வழிவது போல்  கடைக்கண்ணால் என்னையே பார்த்துக்கொண்டு, பிரவாகமா பரவசமாய் ஓடிக்கொண்டிருந்தாள், ஆகாயத்திலிருந்து புறப்பட்டு பூமியின் பாவங்களையெல்லாம் நீக்கும் கங்கை.
Popularity: unranked [?]


Sunday, March 6, 2011

இயற்கையின் ரகசியம்

துபாயிலிருந்து அலைன் சென்றோம் ,அங்கே மலைமேல் பாதைகள் சீராகப் போடப்பட்டு உள்ளன, அங்கே மாலை சூரிய அஸ்தமனம் கண்டோம்.குளிர் நம்மை நடுக்கிவிட்டது. அப்போதும் அந்தக் குளிரைப் பொறுத்துக்கொண்டு இயற்கையின் ரகசியத்தை படம் பிடித்தேன். கண் கொள்ளாக் காட்சி.  குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பார்கள்.
நம் இந்தியாவில் ஆந்திரப் ப்ரதேசத்தில் உள்ள திருப்பதி நினைவுக்கு வந்தது.  மலை இருக்குமிடமெல்லாம் வேங்கடவன் இருக்கிறான் போலும், மனதை மயக்கும் இயற்கை காட்சிகளும் சூரியனின் முழு தரிசனமும் மனதை மயக்கிய மாலைப் பொழுது

அந்தக் காட்சியை நீங்களும் கண்டு மகிழ 

http://www.youtube.com/watch?v=uklsz690MVY&feature=mfu_in_order&list=UL

அன்புடன்
தமிழ்த்தேனீ

Wednesday, March 2, 2011

" யாருக்கும் தெரியாது”

”யாருக்கும் தெரியாது” சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்

http://www.vallamai.com/?p=2124

அன்புடன்

தமிழ்த்தேனீ