திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, May 1, 2013

" ஒரு யோசனை "

              "   ஒரு யோசனை "

வல்லமை இதழில் வெளியானது
 http://www.vallamai.com/?p=34831

யோசிக்காம எடுக்கற எந்த முடிவும் சரிப்பட்டு வராது. யோசித்துக்கொண்டே இருந்தால் நேரம் போய்விடும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள்.  இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு பயனுள்ளதாக யோசனை செய்து  ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன். யோசித்தால்தான் எந்த ஒரு செயலையும்  சரியான முறையில் செய்யமுடியும் . வருமுன் காப்பது நல்லது வந்தபின் வருத்தப்படுவது என்பது  அறிவு பூர்வமான செயல் அல்ல . என்று பல சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அப்படி இருக்க  யோசிக்காமல் பேசவும் கூடாது எழுதவும் கூடாது என்பது அறிவு பூர்வமாக மனதில் உறைத்ததால் யோசிக்கத் தொடங்கினேன்.   யோசித்தல் என்றால் என்ன என்று மனதில் ஒரு யோசனை உதித்தது? ஆமாம் யோசித்தல் என்றால் என்ன?

எவ்வளவு வேலைகள் , இடையூறுகள் இருப்பினும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மனதில் அடி நாதமாக வைத்துக் கொண்டு  தியானம் போல் இடைவிடாது ஒரு அதைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருப்பது யோசனை என்னும் முடிவுக்கு வந்தேன்.
ஆகவே யோசிக்கத் தொடங்கினேன்!  முதலில் நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைச் செயலாக்க யோசிக்க வேண்டும் .  எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது .

 நாம் எதைப் பற்றி எழுதலாம்?   எதைப் பற்றி எழுத வேண்டுமென்றாலும் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பிறகுதானே எழுத வேண்டும் .   ஆம் முதலில் அதைப் பற்ற வேண்டும், அப்படி  முழுமையாக அதைப் பற்றினால்தான், அதைப் பற்றி யோசிக்கவே முடியும். இப்படி இருக்க பற்றுவது என்பதைப் பற்றி  முழுமையாக அறிந்து கொண்டால்தான் பற்றவே முடியும்.

ஆகவே பற்றுவது பற்றி யோசித்தேன். பற்று என்னும் சொல்லுக்குள் இருக்கும் பற்றைப் பற்றி யோசித்தேன்.  யோசிக்க யோசிக்க பற்று வந்தது , இன்னும் ஆழ்ந்து யோசித்தேன் இன்னும் அதிகமாக ஆழமான பற்று வந்தது.  பற்றுவது என்பது நம்மை மறந்து நம் சுயத்தை முழுவதுமாக இழந்து நாம் எதைப் பற்றி யோசிக்கிறோமோ   அதை முழுமையாகப் பற்றி  அதன் பிறகு அதைப் பற்றி யோசிப்பது  என்னும் தெளிவு வந்தது.

இப்போது தெளிவாக யோசித்தேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன் திடமாக, தீர்மானமாக எதைப் பற்றி யோசிப்போம் என்று அதைப் பற்றினேன் . அதைப் பற்றியே யோசித்தேன் .  அதனால் வந்த  எழுத்து இது.    மீண்டும் ஒரு முறை எழுதியதைப் படித்துப் பார்த்தேன். நான் எதைப் பற்றி இது வரை ஆழ்ந்து யோசித்திருக்கிறேன் என்று புரிந்து கொள்ள மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படித்தேன்.

இபோதுதான் புரிந்தது நான் இவ்வளவு நேரமாக இதைப் பற்றித்தான் யோசித்திருக்கிறேன் என்று.   ஆக இன்னும் நான் எதை எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதைப் பற்றி இன்னும்  யோசிக்கவே இல்லை  என்று புரிந்தது. இப்போது நான் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன் எதைப் பற்றி நான் யோசிக்க வேண்டுமென்று. கடைசியில் ஒன்று புரிந்தது,   நாம் எவ்வளவுதான் யோசித்தாலும்  அவற்றையெல்லாம் எழுத முடிவதில்லை.

 நாம்  எழுதத் தொடங்கியவுடன் நம்மை அறியாமல் நம் மனம் எதை பற்றுகிறதோ  அதிலேயே ஆழ்ந்து அதைப் பற்றியே யோசித்து ப்ரபஞ்ச  வெளியில் இணைந்து , ப்ரபஞ்ச வெளியில் அலைந்து  பல செய்திகளைச் சேகரித்து அதன் சேகரங்களின் விளைவாகிய  முழுக் கருவை உள்வாங்கி அதைப் பற்றி எண்ணங்களையே நம் மனதில் விதைத்து  நம்மை எழுதத் தூண்டுகிறது.

ஆகவே நம் மனம் எதை விதைக்கிறதோ  அதற்கு நாம் கட்டுப் பட்டு,  நம் உணர்வுகள் கட்டுப்பட்டு அதன் விளைவாக மனதிலிருந்து  நேராக நம் கைகளுக்கு அந்த  எண்ணங்கள் அனுப்பப்பட்டு,  தாமாகவே  மனம் சொல்வதை விரல்கள் எழுதுகின்றன.   ஆக நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைப் பற்றி  எழுத முடிவதே இல்லை  அதைத் தவிர  மற்ற எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறோம் என்பதே உண்மை என்று உணர்ந்தேன்.

இப்போது  நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்  .யோசனை செய்யலாமா வேண்டாமா?   மனம் யோசிப்பதை  எழுதிவிட்டுப் போகலாமா, அல்லது நாமே  இன்னும்  ஆழ்ந்து யோசிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ