திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, July 14, 2007

அன்புடன் போட்டிக் கவிதைகள்

அன்புடன் குழுமத்துக்கு போட்டிக் கவிதைகளுக்கு
நான் அனுப்பிய கவிதைகள்

1.( T S C KOMATHI ) UNICODE

அன்புடன் படக் கவிதைப் போட்டி

புகைப் படக் கவிதை படம் 01


"ஆரம்பம் "


இது ஒரு நல்ல முடிவின் ஆரம்பம்
நம் கைகள் இணைந்தே இருக்கட்டும்
ஆயிரம் தேடல்கள்,ஆயிரம் ஊடல்கள்
நிலவினைத் தொடும் தேடல்கள்
உயிரினைத் தொடும் மவுனங்கள்
உறவுகள் சுடும் வார்த்தைகள்

கனவுகள் தரும் சுகங்கள்
நிழல்கள் தரும் நினைவுகள்
நினைவுகள் தரும் சுகங்கள்
நிஜங்கள் தரும் கசப்புகள்
கற்பனைத் தூரிகைக் கைவண்ணம்
கலையும் போதில் வருத்தம்

காலையில் விடியும் இயற்கை
மாலயின் இதத்தில் தோள்களின் சாய்ந்து
மறக்க முடியும் சோகங்கள்- செயற்கை
மௌனத்தில் புரியாத அர்த்தங்கள்
வார்த்தையிலும் புரியாத நிஜம்
ஆயிரம்
விழிகள் படிக்கும் காவியம்
மனது படைக்கும் ஓவியம்
அடையத் துடிக்கும் ஆசைகள்
மலரத் துடிக்கும் மொட்டுக்கள்
மலர்ந்து வளரும் மெட்டுக்கள்

ஆயிரம் இருக்கும் அதற்கு மேலும்
வாழ்க்கை இருக்கும்- அதனால்
இது ஒரு நல்ல முடிவின் ஆரம்பம்
நம் கைகள் இணைந்தே இருக்கட்டும்


புகைப் படக் கவிதை படம் 8

" அம்மா "

தேவதை போல் அவள் அம்மா
நம் தேவை அறிந்தவள் அம்மா
வாழ்வை நமக்களித்த அம்மா
நம் ஊழ் வினை போக்கிய அம்மா

ஊரும் உறவும் பேர் சொல்லி வாழ்த்திட
நம் பேரை வைத்தவள் அம்மா
யாவரும் போற்றிட தேவரும் வாழ்த்திட
உயிரை அளித்தவள் அம்மா

எந்தப் பிறப்புக்கும் பெற்றவள்தானே அம்மா
அழுவதை வைத்தே நம் குறை அறிந்தே
நம்மை வளர்த்தவள் அம்மா
எழுவதை விழுவதை ரசித்தவள் இருந்தும்
விழுவதைத் தடுத்து எழுவதில் இன்பம்
கண்ட ஞானி அம்மா -இடைக்கலசம்தனில் தாங்கி
அடைகாத்து மலைக்க வைத்து
தொப்புள் கொடிவழியே உணவூட்டி
இடிபோன்ற வலிதாங்கி முலைக் கலசப் பாலூட்டி
அப்பப்பா !!! உன்னதப் படைப்பாளி அம்மா

மாயப் பிறப்பெடுக்கும் நம் பாவ வினை
அறுக்க நேயமாய்க் கறுவிலே சுமந்து
நல் வினை நாம் பெற தூய
வேள்வி நடத்திய அம்மா
இறப்பெனும் தூக்கம் பிறப்பெனும் விழிப்பு
இடையிலே மலர்ந்த மெய் எனும் பொய்
அதில் உள்ளொளி பெருக்கி,உள்ளுக்குள்ளே
ஊறும் ஞானம் அளித்துக் காத்தவள் அம்மா
கற்பென்னும் தரத்தைக் கண்ணியமாய்க் காத்து
அப்பனின் விந்தை அற்புதப் பந்தில் அடைத்து
கருவாக்கி ,உருவாக்கி ,கை கால்
முளைக்க வைத்து, கவனமாய்க் காத்து
ஆன்மாவை உள்ளே வைத்து -அறிவும்
ஞானமும் ஆயுளும் அழகும்-நிறைவாய்
சேர்த்திட்ட அற்புதப் படைப்பாளி அம்மா

அம்மையாய் அப்பனாய் அரவணைத்து
அம்புலி காட்டி அமுதும் ஊட்டிய
அப்பனையும் நமக்கு அடியாளம் காட்டிய
அன்னைக்கு நன்றிக் கடனாய்

ஓர் முதியோர் இல்லம்



தமிழ்த் தேனீ

புகைப் படக் கவிதை படம் 03


" திரைகள் "

காற்று அம்மாவின் புடவைத்

தலைப்பை வைத்து
என் முகத்தை மறைக்கிறது-

திரையை விலக்கி
உலகம் பார்க்கிறேன்
ஆயிரம் திரைகள் எனை மூடினாலும்
விலக்கிப் எட்டிப் பார்ப்பேன்
வெற்றிக்கு வழி வகுப்பேன்
ஆயிரம் தடைகள் எதிர் வந்தாலும்
அடித்து உடைத்தெறிவேன்
வெற்றிக்கு வழி வகுப்பேன்

ஆயிரம் எதிரிகள் வந்தாலும்
வீரமாய்ப் , விவேகமாய்ப் போரிட்டு
வெற்றிக்கு வழி வகுப்பேன்
விதியே எனக்கு எதிராய் இருப்பினும்
என் மதியால் அவ்விதியை முறியடித்து
வெற்றிக்கு வழி வகுப்பேன்


எனக்கு யாராவது உதவுங்களேன்
நான் கல்வி கற்க ,
எனக்கு யாராவது ஒருவேளை
பசியாற்றுங்களேன்
எனக்கு யாராவது அ ன்பாய்
ஒரே ஒரு வார்த்தை
சொல்லுங்களேன் ஆயிரம் யானை
பலம் எனக்கு வரும்

எனக்கு ஆசையாய் ஒரு முத்தம் தாருங்களேன்
அம்மா ,அப்பா இல்லாத குறையும்
மறந்து போகும்

ஆமாம் நான் ஒரு குழந்தைத் தொழிலாளீ !!!!!!!!


.PUGAIP PADAK KAVITHAIP POOTTI
PADAM 4

" ரகசியம் "

இது பொம்மைகள் உலகம்
நாம் நிம்மதியாய் இணையலாம்
அன்பாய் வாழலாம், ஆசையாய்ப் பழகலாம்
சொந்தமும் ,பந்தமும்,ஆசையும்,காதலும்
நிறைந்த பொம்மைகள் உலகம்

வருந்த வைக்கும் மொழிகளும் இல்லை
வருத்தப் படுத்தும் த்ரோகங்கள் இல்லை
பொய்யும் இல்லை, புரட்டு இல்லை
திருட்டும் இல்லை,பாவமும் இல்லை
ஜாதிகள் இல்லை,மதமும் இல்லை
குற்றங்கள்,குறைகள் எதுவுமே இல்லை

முக்கியமாய் மனிதர்கள் இல்லவே இல்லை

இது பொம்மைகள் உலகம்

நாம் நிம்மதியாய் இணையலாம்

அன்புடன்

தமிழ்த் தேனீ

பிறந்த நாள்

உலகம்

அடேய் செல்லப் பயலே
இப்பதான் பொறந்தா மாதிரி இருக்கு
அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா
குட்டிப் பையா இன்னிக்கு நீ பொறந்து
ஒரு வருஷம் ஆயிடிச்சு

எதேதோ ம‌ந்திர‌ ச‌ப்த‌ங்க‌ள் நாதஸ்வ‌ர‌ இனிமை
ஒரே சிரிப்பு ,கும்மாளம் ,கொண்டாட்டம்
எல்லாம் காதில் விழுகிறது


நானும் பதில் சொன்னேன்
அவர்களுக்கு என் மொழி புரியவில்லை


முதல் வருஷ கொண்டாட்டங்களின்
சப்தங்கள் மீண்டும் காதில் ஒலிக்கிறது

ஒரு பிரியமான முத்தத்தில் கண் விழித்தேன்
க‌ண்விழித்து எழுந்தேன் ,
என் ம‌னைவி, என் குழ‌ந்தைக‌ள்
என் பேர‌ப் பிள்ளைக‌ள் அனைவரும்
பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் சொல்கிறார்க‌ள்
பல கவிதைக் குயில்களும் ,தமிழ்க் குயில்களும்
அன்புடன் வாழ்த்து சொல்கின்றன‌
இன்று காலை அறுபது வயது ஆரம்பம்

உல‌க‌ம் உருண்டைதான்

தமிழ்த் தேனீ

அறிமுகம்





அன்பு நண்பர்களே 1/7/1947
ஆர். கிருஷ்ணமாச்சாரி என்பது எனது பெயர்.
லுகாஸ் டீ வீ எஸ் நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு கொண்டவன்.
தமிழின் மேல் தணியாத தாகம் கொண்ட கவிஞன்.
தொலைக்காட்சிகளில், பல தமிழ் சினிமாக்களில்
நடித்துக் கொண்டிருப்பவன். 14 நாடகங்கள்
எழுதி இயக்கி பல முதல் பரிசுகளை வென்றவன்.
என்னுடைய ப்ரபலமான தொலைத் தொடர் சித்தி -
ராடன் நிறுவன தொடர், அதில் மேனேஜர் சாரங்கனாக நடித்தவன். சமீபத்திய தொடர்கள், கோலங்கள், ஆனந்தம்.
படங்கள்:சாமி, ஆறு, திருட்டுப் பயலே, அது ஒரு கனாக் காலம் மற்றும் பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படம் சிவாஜி
(இசைக் கருவிகளின் கூடத்தின் மேனேஜர்)
தமிழ் பால் கொண்ட பற்றின் காரணமாக
பல கவிதைகள் எழுதி வருகிறேன்.
என்னுடைய புனைப் பெயர் தமிழ்த்தேனீ.
மனம் சங்கமித்தால் மதம் மறைந்துவிடும்
மதம் சங்கமித்தால் ஜாதி மறந்துவிடும்
தமிழ் சங்கமித்தால், சங்கமத்தால்
கவிதை பிறந்துவிடும் தமிழில்
சங்கமிப்போம், சந்திப்போம்

என்னுடைய அறிமுகக் கவிதை இதோ


பொதுக்கவி

சந்தத் தமிழ்க் கவிதைத் தரணியாண்ட
தமிழ்ப் பாட்டி அவ்வை அவள்-
கந்தன் கருணையால் -கயிலாயமும்
ஆண்டாள் தமிழ் ஆண்டாள்,
தமிழ் மண்ணாண்டாள்,

கருங்காலிக் கட்டைக்கு, கோணாத கட்டாரி
கதலித் தண்டுக்கு உருகுமாம் என்றுரைத்து
மூவேந்தருக்கும் ஏழுலகுக்கும் கட்டுப்படாத
தமிழ் ஆண்டாள், தமிழ் மண்ணாண்டாள்

கந்தன் கருணைக்கு உருகி கயிலாயமும் ஆண்டாள்
வாலிபமே வயோதிகமாய் தமிழே மூச்சாய் தமிழ்க்கம்பூன்றி இந்த மண்ணூன்றி கயிலாயம் சென்றடைந்தும் தமிழ்க்கம்பு,
தமிழ்க் கரும்பு தரணி ஆண்டது

அருமையாய் ஆத்திச்சூடித் தமிழ் ஆத்தி
தமிழ் மகுடம்சூடி தமிழாண்ட தரணி
மாது கயிலாயமும் ஆண்டாள்
கொன்றை வேந்தன் தனை இன்றை
வேந்தன் வரை சொல்லி கயிலாயம்
சென்றடைந்த அந்த தமிழ்ப் பாட்டி
திருப்பதம் பணிந்து தமிழ் வழி நடக்க
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி -
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.

வார்த்தெடுத்த கவிதைகளில் வார்த்தைகளை
விதைக்க வேண்டும் செதுக்கிய சிலைகளெல்லாம்
சிற்பமாக மாற வேண்டும் எழுதுகின்ற
எழுத்தெல்லாம் கவிதையாக மலர வேண்டும்
விற்பனர் உள்ள அவையில் விருதுகள்
பெற வேண்டும் ,விலாசம் வேண்டும்
எனக்கொரு விலாசம் வேண்டும்
மணிமகுடம், மலர்க்ரீடம், பட்டயங்கள்
விருதுகளை ருதுவாக்கும் தகுதி வேண்டும் !!!
புதுக்கவி படைக்க வந்த, புதுக்கவி -
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
யாப்பெடுத்து, சீர் அமைத்து அசை,
தளை, தொடை, எனும் இலக்கணம்
சமைத்து பா புனைய வந்த கவி அல்ல
நான் மனதின் பாதிப்பு அப்படியே சொல்ல வார்த்தைகளைக் கோர்த்து, கருத்துக்களைச்
சேர்த்து புதுக்கவி படைக்க வந்த புதுக்கவி,
அல்ல, அல்ல பொதுக்கவி நான்.
விலாசம் வேண்டும் எனக்கொரு
விலாசம் வேண்டும் நிச்சயமாய்!!!!!!
அன்புடன்
தமிழ்த்தேனீ

rkc1947@gamil.com   ----    http://thamizthenee.blogspot.com



என் படைப்புகள்

ஜ்யோதிடம் பொய்யல்ல