திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, March 24, 2016

கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா பழமொழி ஆராய்ச்சி

கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா…?    என்ன ஒரு வினாச்சொல் வழக்கு  ஆச்சரியமாக இருக்கிறது!

யோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள்
எவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி இருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமே மிஞ்சுகிறது.    மா,பலா வாழை என்று ஒரு சொல் அடுக்கு உண்டு  பழங்களில் முதன்மையானது மாம்பழம்அடுத்து பலாப்பழம், அடுத்து வாழைப்பழம் மூன்றுமே மருத்துவ குணமுள்ள இனிப்பான சுவையான  பழங்கள்.

ஆங்கிலத்திலே (riverse engineering) என்று சொல்லுவார்கள்
ஒரு யந்திரத்தை கட்டுமானம் செய்ய அதே போன்ற ஒரு யந்திரத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தலைகீழாக எண்ணிக்கை வரும்படி அடுக்கி வைத்துவிட்டு மீண்டும் அதே வரிசையில் அதை கட்டுமானம் செய்வார்கள்.

அது போல நாம் நம்முடைய முன்னோர்கள் சொன்னதை எல்லாம் ஒவ்வொரு சொல்லாக எடுத்து  அவற்றை பிரித்து அடுக்கி வைத்துவிட்டுமீண்டும் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தால்தான் தெரிகிறது  அவர்கள்: அதற்குள்ளே எவ்வளவு நுணுக்கமான செய்திகளை பொதிந்து வைத்திருக்கிறார்கள் என்பது.

மாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வரும் என்று சொல்லுவார்கள்,ஆனால் அந்த மாம்பழத்தின் உள்ளே இருக்கும் கொட்டையின் உள்ளே இருக்கும் மாம்பருப்பை எடுத்து உண்டாலே அதுவே சிறந்த மருந்து வயிற்றுப் போக்குக்கு . அடடா கனிவையும் சுவையையும் வைத்து அதனுள்ளே மருந்தையும் வைத்த இறைவன் எவ்வளவு பெரியவன்


வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர்.  ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக்  கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது
பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி  அதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும்.  அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்.


அதே போல மேலே முள்ளாக கரடு முரடாக இருக்கும் பலாப் பழத்தின் சுவை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை ஆனால் அந்தப் பலாச்சுளையின் உள்ளே இருக்கும் பலாக் கொட்டை யை அப்படியே சாப்பிட்டால் தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுகூட விடமுடியாமல் அவதிப்பட நேரும்,.

ஆனால் அதே பலாக் கொட்டையை வேக வைத்து   நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது கட்டை அடுப்பில் சமைப்பார்கள், எரிகின்ற கட்டை அடுப்பின் உள்ளே இந்தப் பலாக்கொட்டைகளை போட்டு விடுவோம்   அடுப்பை அணைத்த பின் சற்று பக்குவமாக  வெந்த அந்தப் பலாக் கொட்டையை தோல் உரித்து உண்போம்  அது பலாச் சுளையைவிட இனிமையாக இருக்கும்
அது மட்டுமல்ல அந்தப் பலாக்கொட்டை பல வியாதிகளுக்கு மருந்து என்று சொல்லுவர்.

அடுத்தது வாழை , வாழைப்பழமே மருந்து ,  வாழைதண்டு சாற்றினை பாம்பு கடி விஷத்துக்கு முறிவாக அளிப்பர், வாழைப்பட்டையில் பாம்பு கடித்தவர்களை படுக்க வைப்பர்,விஷ முறிவான இந்த வாழைமரம்  இருந்தால்தான் கொண்டாட்டங்களே களை கட்டும. அதே போல் வாழைப் பழம் இருந்தால்தான் விருந்தே களைகட்டும் .தலை வாழை இலையில் முதலில் வாழைப்பழமும் சர்க்கரையும் போட்டுவிட்டு ,பிறகுதான் மற்ற உணவு வகைகளை பறிமாறுவர்.

வாழைப்பழம் நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, இறைப்பையின் இயக்கத்தை  துண்டுகிறது உண்ணும் உணவுகள் செரிக்க உதவுகிறது.  அந்த வாழை மரத்தை ஆராய்ந்தால்  வாழைக் குருத்து முளை விட்டு பின் வளர்ந்து மரமாகி   குலைதள்ளும் பருவத்திற்கு சற்றுமுன்பாக பெரிய பெரிய இலைகள்வருவது நின்று போய்  ஒருநாள் ஒரு பளபளப்பான ஒரு சிறு இலை  தோன்றும்.

 அதைக் " கண்ணாடி இலை " என்பர் அந்தக் கண்ணாடி இலை தோன்றிய பிறகுதான் குலைவிடும், .ந்தக் குலையை சிறியதாக இருக்கும்போது  அந்தக் கண்ணாடி இலை பாதுகாக்கும். பிறகு வாழைக் குலை பெரியதாக ஆகும்போது அந்தக் கண்ணாடி இலை அந்த வாழைக்குலைக்கு    வழிவிட்டு ஒதுங்கி இருக்கும்.

வாழையடி வாழையாய் குருத்துகள் அந்த வாழை மரத்தின் கீழே  தோன்றிக் கொண்டே இருக்கும், ஒரு வாழை மரம் வைத்தாலே அது தானாகவே வாழைத்தோப்பாகும் .ஒரு நல்ல பெண்மணி ஒருத்தி வந்தாலே எப்படி குலம் தழைக்குமோ அது போல.

நம்மை வளர்க்கும் தாய் எப்படி நம்மை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் வளர்த்து நாம் பெரியவனானவுடன் நம் சுகத்துக்காக ,நம் மகிழ்ச்சிக்காக, சற்றே ஒதுங்கிக் கொள்கிறாளோ அதுபோல கண்ணாடி இலை ஒதுங்கிக் கொள்ளும் . பிறகு குலையில் வாழைப்பூ தோன்றும் அந்த வாழைப்பூவில் உள்ளிருக்கும் தனித்தனியான ஒவ்வொரு மடலும் ஒரு கொத்து
பூக்களை பாதுகாத்து அவை முற்றி காய்களானவுடன் மடல்கள் ஒதுங்கிக் கொள்ளும், 

இப்படி ஒவ்வொரு மடலும் இதழ் விரிந்து காப்பானாக இருந்து ஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளும்.ஆனாலும் கடைசியாக காயாக முடியாத சில சிறு பூக்களை கடைசீ வரையில் மடல்கள் மூடிக் கொண்டு
பாது காத்துக் கொண்டிருக்கும்.  அந்த அமைப்பை நாம் வாழைப் பூ என்கிறோம்.   பிறகு அந்த வாழைப்பூவை மடல் பிரித்து அந்த சிறும்  பூக்களை கொத்தாக எடுத்து அரிந்து அதை சமைத்து  நாம் உண்ணுவோம், அப்படி சிறும் பூக்களை அரியும்  போது ஒவ்வொரு சிறும் பூக்களையும் கூர்ந்து கவனித்தால்
சுற்றிலும் அந்த சிறும் பூக்களின் பாகங்களும்  நடுவில் தலை கொழுத்து ஒரு மொட்டுமாய் இருக்கும். அந்த மொட்டுடன் கூடிய தண்டை கள்ளன் என்று சொல்லுவார்கள் , அது உடலுக்கு கெடுதியானது.

ஆகவே அந்த கள்ளனை நீக்கி விட்டு சமைப்பர். அதைக் காட்டித்தான் உள்ளே கள்ளன் ஒளிந்திருக்கிறான்  பார் என்று என் அன்னை கூறுவார்கள்.  கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா? "நாமெல்லாரும் கள்ளர்கள்   காப்பான் இறைவன் ஒருவனே  அதனால் காப்பானிடம்  காட்டிக் கொள்ளாமல்   நாம் ஒளிய  இடமே கிடையாது என்பதை உணராமல்  நம்மின் உள்ளுக்குளே ஒளிந்திருக்கிறோம் "

தன் சீடர்களிடம்  ஆளுக்கு ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து யாருக்கும் தெரியாமல் உண்ணச்சொல்லி ஒரு குரு சொன்னார். 

கள்ளனே காப்பானாகவும் காப்பானே கள்ளனாகவும்    இருந்த மாயக் கண்ணனைக் கேட்டால்தான்  தெரியும் கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா என்று...திருமங்கை மன்னன் கொள்ளையடித்தான் கோயில் கட்டினான்அவன்  மன்னனாக இருந்து காப்பவனாக இருந்தும் இறைவன்பால் கொண்ட ப்ரேமையினால் கள்ளனாகி மீண்டும்  இறைவனுக்கே கோயில் கட்ட  கள்ளனாகி  அதனாலேயே ஆழ்வாராக மாறியவன். ஆகவே கள்ளனோ  காப்பானோ  உயரிய  நோக்கத்துக்காக  செயல் படும் போது  கள்ளனாக இருந்தாலும் காப்பானாகவே  கருதப்படுவான்.

 யாருக்கும் தெரியாமல் உண்ணமுடியவில்லை என்று ஒரு சீடன் மட்டும் வாழைப்பழத்தை  உண்ணாமல் வைத்திருந்தான்   குரு  ஏன் வாழைப்பழத்தை உண்ணாமல் வைத்திருக்கிறாய்  என்று கேட்டதற்கு நான் எந்த  மறவிடத்துக்குப்  போனாலும் இறைவன் இருக்கிறானே  எப்படி யாருக்கும் தெரியாமல் உண்ணுவது  ஆகையினால்  உண்ணவில்லை  என்றான்
அவனுக்குதான் அடுத்த குருவாக பதவி அளித்தார் குரு.

திருஞான சம்பந்தர்
" தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலை பொடி பூசியென் உள்ளம் கவர் கள்வன்  "  என்றார்.

கோயிலில் இருக்கும் இறைவனை விட திருமங்கை மன்னன் பெரியவன் எப்படி என்று கேட்டால் உள்ளிருக்கும் புதையைலை காப்பாற்றி வைத்திருக்கும் தகரப் பெட்டியாய் இருந்தாலும் அப்பெட்டி இல்லையென்றால் புதையலே காணாமல் போய்விடுமல்லவா .
அது போல இறைவன் தங்கமென்றாலும் திருமங்கை மன்னன் போன்றவர்கள் தகரமென்றாலும் ,இறைவனே சொல்கிறான் தன்னை விட தன் அடியார்களே மிக உயர்ந்தவர்கள் என்று அது போல.  காப்பவன் தான் பெரியவன் அது இவ்வுலகத்தையே காக்கும் இறைவனையே காப்பவன் எவ்வளவு பெரியவன்

அதனால் கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா என்னும் கேள்விக்கு
காப்பானே பெரியவன் என்று பொருள் விளங்குகிறது அல்லவா?

மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துமாறு  வாழ்க்கைப்பாடம் நடத்தும் ஒவ்வொரு வாழை மரமும்  காப்பானே  என்பதில் ஐய்யமே இல்லை.






rkc1947@gmail.com,  http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

முகவரி:   எண் 5,  விஜயலக்‌ஷ்மி அவன்யூ,
பச்சை அம்மன் நகர்
திருமுல்லை வாயில் சென்னை 600062

கைப்பேசி: 9840686463      
அன்புடன்        
தமிழ்த்தேனீ