திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, October 11, 2012

நூல் வெளியீட்டு விழா

அழைப்பிதழ் : 

அன்பு நண்பர்களே   வருகின்ற 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு
சென்னை அம்பத்தூர்  சிரிப்பரங்கம்   "நகைச்சுவைமன்றம்" நடத்தும்
" வெற்றிச் சக்கரம் " புத்தக வெளியீட்டு விழா.

 (அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்) 
சத்சங்கம் தெருவில் உள்ள சத்சங்கத்தில்  நடைபெற இருக்கிறது.
விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்
.
நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துபவர்  :
எக்ஸ்னோரா இன்டர்னேஷனல் நிறுவனர் உயர் திரு எம் பீ நிர்மல் அவர்கள்.

முதல் நூல் பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர் : எழுத்தாளர்,
முனைவர் திரு அண்ணா கண்ணன் அவர்கள்.

முன்னிலை வகிப்பவர்: திரு தீபம்   எஸ் திருமலை அவர்கள்.

ஏற்புரை :      திரு தமிழ்த்தேனீ அவர்கள்.

அனைவரையும் வரவேற்று   "தென்றல் வருடிய சிரிப்பு!   வழங்குபவர்
பத்திரிகையாளர், எழுத்தாளர், உயர் திரு அரவிந்த் சாமிநாதன் அவர்கள்.

நடத்துபவர்  திரு சிரிப்பானந்தா ,  சித்திரைச் சிங்கர் ,மற்றும் (Laughtoriuam) ,
சிரிப்பரங்கம்  நண்பர்கள்.

அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்-அனைவரும் வருக

அன்புடன்
தமிழ்த்தேனீ

Wednesday, October 3, 2012

" மாற்றான் தோட்டம் சிறுகதை

வல்லமை இதழில் " மாற்றான் தோட்டம்" சிறு கதை படிக்க சொடுக்குங்கள்
 http://www.vallamai.com/literature/short-stories/26922/

அன்புடன்
 தமிழ்த்தேனீ


" மாற்றான் தோட்டம்"



யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள்.
அப்பப்பா என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய் சோகை படிந்த தேவதையின் ஓவியம் கருமேகத்தின் இடைவெளியில் மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது தோன்றி மறைவது போல் அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில் ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின் சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
 
அரசல் புரசலாக அவள் வாழ்க்கை அம்பலத்துக்கு வந்தது. பார்யா ரூபவதி சத்ரு என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பழமொழி உண்மையானால் அவள் கணவன் கண்களில் அல்லவோ சோகம் தெரியவேண்டும், இங்கே மாறாக இருக்கிறதே?
 
மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் ரமேஷ்.
அவள் குழந்தையிலேயே அழகாக இருந்ததால் அவளுக்கு ரூபா என்றே பெயரிட்டிருந்தனர் அவளுடைய பெற்றோர்.
 
காலைத் தொடும் நீண்ட கருகருவென்ற கேசம், தாமரைத் தடாகத்திலே நீந்தும் மீனைப் போன்ற அகலமான கரிய விழிகள், தீர்மையான நாசி, சற்றே இதழ் விரிந்திருக்கும் ரோஜா மொட்டுப் போன்ற உதடுகள், அசாத்தியமான, அலங்காரமான வளைவுகளுடன் மோவாய், அதற்கும் கீழே சங்குக் கழுத்து, இதற்கு மேலும் வர்ணிப்பது பாவம் என்று தோன்றியது ரமேஷுக்கு. என்ன இருந்தாலும் அவள் மாற்றான் தோட்டத்து மலர்.
 
அந்த மலரை வாடாமல் மெல்லிய கைகளின் அழுத்தமும் இல்லாமல் இடைவெளிவிட்டு பொத்தி வைத்துக்கொண்டு, காலம் முழுவதும் வைத்துக்கொண்டு காப்பாற்றி, அவள் முகத்தில் ஆனந்த மயமான புன்னகையை வரவழைத்து, அவள் முகத்தில் சிரிப்பைத் தவிர சோகத்தின் நிழலே விழாதவாறு, ஒரு தேவதையை உபாசனை செய்வது போல், அவளை உபாசித்தால்தான் தன் ஜென்மம் கடைத்தேறும் என்று உணர்ந்தான் ரமேஷ்.
 
எப்படி இது சாத்தியமாகும்? எப்படி அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிப்பது என்பதே சிந்தனையாய் மூளைக்குள் சுழன்று சுழன்று அவனை அசத்திக்கொண்டிருந்தது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்னும் யோசனையில் இருந்த அவனுக்கு பலவிதமான சந்தேகங்கள். அவள் இவனை நம்புவாளா? ஏற்கெனவே ஒரு ஆண்மகனால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்னின் மனநிலையில் இன்னொரு ஆண்மகனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பாளா? அவள் நம்பிக்கையை எப்படிப் பெறுவது என்றெல்லாம் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக மூளைக்குள் வலம் வரத் தொடங்கின.
 
ஒரு மனிதனுக்கு அழகான மனைவி அமைவது வரம். அப்படி வரம்போல் அமைந்த அழகான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு வாழாமல், எப்படி ப்ரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு தானும் நிம்மதியில்லாமல் அந்த தேவதையையும் நிம்மதியாக இருக்க விடாமல் இப்படி இருக்கிறார்கள் மனிதர்கள் என்று நினைத்தால் ஆத்திரம் வந்தது ரமேஷுக்கு.
 
எப்போதுமே மனிதன் கிடைக்காதவரையில் அது கிடைக்க ஏங்குகிறான், ஆனால் அது கிடைத்ததும் அதன் மதிப்பு தெரியாமலே வாழ்கிறான். எப்போதுதான் இவர்கள் திருந்துவார்களோ.
 
சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும். இவன் திருந்தினால் என்ன, திருந்தாவிட்டால் நமக்கென்ன, கண்ணுக்கெதிரே துன்பப்படும் இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது.
 
அவன் எதிர் பார்த்த வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக அவனைத் தேடி வந்தது. ஆமாம் வாசலில் யாரோ அழைப்பு மணியை அடிப்பது கேட்கவே, ஜன்னல் வழியே பார்த்தவன் அதிர்ந்தான். அந்த அழகுத் தேவதை அவன் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். ஓடிப்போய்க் கதவைத் திறந்து, “என்ன வேண்டும் வாருங்கள் உள்ளே” என்றான்.
 
“அதற்கெல்லாம் நேரமில்லை என் புருஷனுக்கு திடீரென்று நெஞ்சு வலி எனக்கு பதட்டமாக இருக்கிறது” என்று பதறினாள் அவள். இதோ ஒரு நொடியில் வருகிறேன் என்று கூறிவிட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு, அவனுடைய காரை எடுத்து ஓட்டிக்கொண்டு வந்து அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, கைத்தாங்கலாய் அவள் புருஷனைக் கூட்டிவந்து காரில் உட்காரவைத்துவிட்டு, அவளையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு….“நீங்கள் கவலைப்படாதீர்கள், ஒன்றும் ஆகாது” என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.
 
அவள் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தாள்.  “நீங்கள் அவர்மேல் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறீர்களே அவர் ஏன் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்” என்றான்.
“என்னை நீங்கள் நீ என்றே அழையுங்கள்”, என்றாள் அவள்.
 
“என் தலைவிதி அப்படி இருக்கிறது, நான் அழகாகப் பிறந்ததுலே என்னோட தப்பு என்ன இருக்குன்னே புரியலை. எப்போ பாத்தாலும் என்னை சந்தேகப் பட்டுக்கொண்டே இருக்காரு. நான் எப்பிடி நிரூபிக்கிறதுன்னே புரியலை” என்று கேவினாள் அவள்.
 
“நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே, உங்களோட அருமை அவருக்கு புரியலை. எனக்கு மட்டும் உங்களை மாதிடி ஒரு பொண்ணு கிடைச்சிருந்தா அப்பிடியே தங்கத் தாம்பாளத்திலே வெச்சுத் தாங்குவேன்” என்று கூறிவிட்டு அவளையே பார்த்தான் ரமேஷ்.
 
அவள் அவனை நோக்கி ஒரு விரக்திப் புன்னகையை வீசிவிட்டு “எப்படி உங்களால் இவரிடமிருந்து என்னைப் பிரித்து அழைத்துப் போகமுடியும், இதெல்லாம் நடக்கிற காரியமா” என்றாள்.
 
“நீ மட்டும் சரின்னு சொல்லு ரூபா, நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல். இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணிர்தான் வரணும், அதுக்கு நான் பொறுப்பு” என்றான் தீர்மானமாக.
 
“இவரைப் பத்திக் கவலைப்படாம, இவர் கண்ணிலேயே அகப்படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இது சத்தியம்” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.
 
அவள் இவன் மேல் சாய்ந்து அழத்தொடங்கினாள், அவளை தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்து, “இனிமேல் உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீரமட்டும்தான் வரணும். நான் பாத்துக்கறேன்” என்றான் ரமேஷ்.
 
சொன்ன வாக்கைக் காப்பாற்ற, தகுந்த இடமாகப் பார்த்து அவளை பெங்களூருக்கு அழைத்துப் போய் ஒரு பெரிய வீட்டில் வாழத் தொடங்கினர் இருவரும். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.
 
இவர்கள் இருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தான் கமலேஷ், யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள், அப்பப்பா என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய் சோகை படிந்த தேவதையின் ஓவியம் கருமேகத்தின் இடைவெளியில் மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது தோன்றி மறைவது போல் அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில் ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின் சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
 
அவன் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றியது. சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும், கண்ணுக்கெதிரே துன்பப் படும் இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது. மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் கமலேஷ்.
 
ஒரு நாள் அவள் மட்டும் தனியாக இருக்கும்போது “உன் புருஷன் ரமேஷைப் பத்திக் கவலைப்படாம நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல் ரூபா, இந்த ஆளு கண்ணிலேயே படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீர்தான் வரணும் அதுக்கு நான் பொறுப்பு. இது சத்தியம்” என்றான் தீர்மானமாக உணர்ச்சி வசப்பட்டு கமலேஷ் .
அன்புடன்
தமிழ்த்தேனீ


Tuesday, October 2, 2012

"உங்களுக்கும் வியர்க்கிறதா?

அதீதம் இதழில் ஒரு எச்சரிக்கைக் கடிதம் " உங்களுக்கும் வியர்க்கிறதா " படிக்க சொடுக்குங்கள்
http://www.atheetham.com/?p=2693
“உங்களுக்கும் வியர்க்கிறதா?”
தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே, தினசரி, வாராந்தரி,மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே,
ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே ,தகப்பன்மார்களே, செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே,
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்,இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே'
உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன். உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா? அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!
பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.
1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.
2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.
3. அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்.
4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்
மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்
தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல. தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.
” தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது.ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை.அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”
இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.
அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப்பிடிக்கிறார்களா?எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.
நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து,அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.
காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது.
நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம்,
ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும். ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி,மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?
யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன்.உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.
“பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “
என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி,இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.
அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ,கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.
ஆதரவான, அனுசரணையான,அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.
1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்
2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்
3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்கவேண்டும். 20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை.
ஆமாம்குழந்தைகளின்அறிவுவளர்ச்சி,பொதுஅறிவுவளர்ச்சிபோன்றவைமுற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள், அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.
ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.
இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.
எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி,இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.
பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.
நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள்,அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.
இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் நாம்.
இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்.
ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன்,வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.
அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.
வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.
உங்களுக்கும் வியர்க்கிறதா?
அன்புடன்
தமிழ்த்தேனீ