திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, April 25, 2009

எனக்கென்ன ?


பொது இடத்தில் உங்கள் கண் முன்னே ஒரு தகாத செயல்
நடக்கிறதா..? பாதிக்கப்பட்டவர் கத்திக்கொண்டிருக்கிறாரா
அவரை பல விஷமிகள் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனரா,
அதைப் பார்த்தும் நமக்கென்ன நாம் பாதிக்கப்படாமல்
இருந்தால் போதும் என்று ஒதுங்கிச் செல்பவரா நீங்கள்//
அங்கு பாதிக்கப்பட்டவர் தெரிந்தவராயினும் தெரியாதவராயினும்
நீங்களும்தான் ஓங்கிக் குரல் கொடுத்துப் பாருங்களேன்
நாளையே உங்களுக்கு இதே நிலை ஏற்படும்போது உதவ
மற்றவரையும் தயார் செய்யுங்களேன்

ஒரு முறை நானும் என் மனைவியும்  சென்னையில் அண்ணா நகரில் உள்ள
புகழ்வாய்ந்த புடவைக் கடைக்கு சென்று அங்கே காரை நிறுத்திவிட்டு
கடைக்குள் போக யத்தனித்தோம், ஆனால் கடைக்குள் நுழையும் வழியில்
செல்ல முடியாமல் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி
வைத்திருந்தனர் அதனால் அவைகளுக்கு நடுவே புகுந்து செல்லவேண்டிய
கட்டாயத்தால் முதலில் நான் அடுத்து யாரோ ஒரு பெண்,அடுத்து என் மனைவி என்னும் முறையில் செல்ல ஆரம்பித்தோம்
அங்கிருந்த சிறிய இடைவெளியில் வழியை மறைத்துக்கொண்டு
அந்தப் பெண்ணையே முறைத்துப்- பார்த்துக்கொண்டு ஒருவர் நின்றிருந்தார்,முதலில் நான் அவரைக் கவனிக்கவில்லை, கவனித்தவுடன் அவரை நோக்கி முன்னேறிச்சென்றேன்,அப்போதும் என்னை கொஞ்சமும் சட்டை செய்யாமலும் வழியை விடாமலும் என்னடா ஒரு ஒரு தம்பதிகள் நடுவே அந்தப் பெண் வருகிறாளே,கூட வருபவர்கள் பெற்றோராக இருக்கக் கூடுமே என்னும் உணர்வு கூட இல்லாமல் முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர்,அவரை நெருங்கி நான் பாத்தது போதும் வழியை விடுங்க என்றேன்
உடனடியாக அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா

என்னா உன் பொண்ணைக் கடத்திக்கிட்டா போயிட்டேன்..?

அவர் அந்தப் பெண்ணை என்னுடைய பெண் என்று  நினைத்து இந்தக் கேள்வியைக் கேட்டார்.  யாருடைய பெண்ணாயிருந்தால் என்ன..?அவர் செய்தது சாதாரணமாக  வாலிப வயதில் செய்யும் செயல்தான் என்றாலும்
அவருடைய கேள்வியிலே இருந்த வன்முறை என்னைக் கோபம் கொள்ள வைத்தது,   இதைக் கேட்டவுடன் வந்தது கோபம்

ஓங்கி  ஒரு அறைவிட்டேன்  அவனை  , கீழே விழுந்தான் அவன்
உரத்த குரலில்   யாருய்யா கடையிலே வழியிலே இது மாதிரி காலிப்பசங்களை  நிக்க வெச்சா யாரு உங்க கடைக்கு வருவாங்க என்று கத்தினேன்.  உடனே கடையிலிருந்து சிலர் ஓடி வந்தனர், பொது மக்களும் வழக்கம்போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்,

அதற்குள் கடையிலிருந்து வந்தவர்கள்  அவரை விலக்கி உடனே அங்கிருந்து போகும் படி அறிவுறுத்தினர்.  அவ்வளவு வீரமாகப் பேசிய அந்த நபர் தனக்கு எதிராக ஒரு கூட்டமே திரண்டதைப் பார்த்து மிரண்டு எதிர் பாராத தாக்குதலால் நிலை குலைந்து  பயந்து நடுங்கி திரும்பிப் பார்க்காமல் எடுத்தார்
ஓட்டம்.. அப்போது புரிந்தது சிலருடைய வீரம் ,

ஆனால் இப்போது நினைத்தால் அந்த நபர் ,வாலிபர்.
நான் வயதானவன் , என்னை அவர் ஒரு அறை விட்டிருந்தால் தாங்கி இருப்பேனா என்பது சந்தேகமே, ஆனாலும் அசுர பலம் வந்தது எனக்கு அப்போது ,  அது நியாயத்தின் பலம், நியாயம் செய்யும் போது நம்மை அறியாமலே ஒரு சக்தி வருகிறது, அநியாயம் செய்யும் போது நம்மை அறியாமலே ஒரு பலகீனம் வருகிறது

நான் செய்தது சரியென்று நினைத்தால் இனி தவறாமல்   தவறு நடக்கும் இடங்களில் தட்டிக் கேளுங்கள்  அதட்டிக் கேளுங்கள். ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.   ஓடுகிற நாயைத்தான் துரத்துவார்கள்
நின்று எதிர் கொள்ளும் நாய்க்கு பயப்படுவார்கள்.  நாயிற்கே இந்த நிலைமை என்றால் மனிதருக்கு ?

சிந்திப்போம் நியாயத்தைக் கேட்க பயப்படவேண்டாம், அநியாயத்தை தட்டிக் கேட்க தயங்க வேண்டாம். தைரியம் கொள்ளுங்கள்
தறுதலைகள் சிதறி ஓடிப் போய்விடுவர்

அன்புடன்
தமிழ்த்தேனீ