திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, January 11, 2011

“கூடாரை வெல்லும் நாள்”




 ”கூடியிருந்து குளிர்வோம் “




பூமியில் இருந்த எல்லா இடங்களையும் விட்டுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலே அதுவும் பெரியாழ்வாரின் நந்தவனத்திலே வந்து பூவைப் போல் துளசி மாடம் பக்கத்தில் படுத்துக்கொண்டு கையைக் காலை உதைத்துக்கொண்டு என்னை எடுத்துக்கோ என்னை எடுத்துக்கோ அப்பிடீன்னு பெரியாழ்வார் மனசிலே இரக்கம் வரும்படிப் பண்ணி, அவரும் தேஜோ மயமாக இருந்த குழந்தை ஆண்டாளை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்து ஏதோ தான் பெற்ற பெண் குழந்தையைப் போலே அள்ளி அணைத்துக் கொஞ்சி அவளை வளர்த்து ஆளாக்கினார் பெரியாழ்வார். அப்படியெல்லாம் பெரியாழ்வாரை ஆட்டிவைத்து பெற்ற மகளினும் பெரிதாய்ப் பாசம் வைத்து வளர்த்த பெரியாழ்வாரை விட்டு அந்த மாயக் கண்ணனை அடைய பெரியாழ்வாரை ஒரு கருவியாய் உபயோகித்த நேர்த்தி என்ன? அப்படியானால் ஆண்டாளின் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்தானே ,ஆமாம் ஆண்டாள் பெரியாழ்வாரின் பரம்பரையாக வந்தவள் அல்லவோ! ,அடடா அப்படிப்பட்ட கருவியாய் இருக்க பெரியாழ்வாரைத் தெரிந்தெடுத்த ஆண்டாள் மஹாலக்‌ஷ்மி, ஆமாம் நாராயணன் அரங்கன் எங்கும் நிறை பரப்ரும்மம் என்றால் அவன் மார்பில் சதா வசிக்கும் லக்‌ஷ்மியான ஆண்டாளும் எங்கும் நிறை பரப்ரும்மம்தானே ,அப்படிப்பட்ட ஆண்டாள்.



”என்ன தவம் செய்தனை

எங்கும் நிறை ப்ரப்ரும்மம்

அப்பா என்றே அழைக்க

என்ன தவம் செய்தனை ”



என்று பெரியாழ்வாரைப் பார்த்து நாமெல்லாம் பாடும்படி செய்த ஆண்டாள்





பகவான் நாராயணனை அரங்கனிடம் தன்னையே அவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராய் இருந்த பெரியாழ்வார் , தான் வளர்த்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்வித்து மாமனாராகவும் ஆன பெரியாழ்வார் என்ன தவம் செய்தாரோ! என்று நாமெல்லாம் வியக்கும் வண்ணம் பெரியாழ்வாரின் புகழ் மணக்க தான் மாலை சூடினாளோ ஆண்டாள்?

அரங்கனுக்கு நியமித்த மாலையை அவள் சூடிக்கொண்டு அரங்கனிடம் சேர்ந்து பெரியாழ்வாரின் பாமாலையை நாம் பாட அருள் செய்தாளோ ஆண்டாள்? இன்றளவும் நம் பெண்ணை ஆண்டாளாகவும் வரும் மாப்பிள்ளையை அரங்கனாகவும் வரித்து மனம் உருகி அன்று ஒரு நாளேனும் நாமும் பெரியாழ்வார் பெற்ற இன்பத்தை நாமும் அடைய வழி வகுத்த மஹாலக்‌ஷ்மி ஆண்டாள். முப்பது பாசுரங்கள் பாடினாலும்



27 ஆவது பாசுரமான



கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.



என்னும் இப் பாசுரம் அல்லவோ மிகவும் விசேஷமான பாசுரம்

இந்தப் பாசுரத்தைக் கேட்டாலே இந்தப் பாவிலுள்ள ”



“உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு

யாம்பெறும் சம்மானம் “



என்று ஆண்டாளுடன் நாமும் சேர்ந்து பாடி அனுபவித்து, அந்த ஆனந்த அனுபவத்தில் உள்ளம் மகிழ்ந்து , உணர்வுகள் விகசித்து , நாமும் ஆண்டாளை நம் குழந்தையாய் பாவித்து சூடகமும், தோள் வளையும், தோடும், செவிப்பூவும் என்கின்ற பல்விதமான ஆப்ரணங்களையெல்லாம் அவளுக்கு அணிவித்து பார்த்துப் பார்த்து மகிழ்ந்து , ஆடை உடுத்தி, அழகு பார்த்து நிலவுக்கு பதிலாக அரங்கனைக் காட்டிக் காட்டி, நம் கையால் பால் சோறு ஊட்டி மகிழ்ந்து, நம் சுற்றமும் கூடி இருந்து அரங்கனுக்கு மணமுடித்து கண்குளிரப் பார்த்து மகிழவேண்டாமோ! அப்படிப்பட்ட பாக்கியம் நமக்கும் கிடைக்க வேண்டாமோ? சரி அப்படி மணமுடித்து வைத்தபின் இந்த வைபவத்தைக் கொண்டாடி மகிழ் வேண்டாமோ

மனம் இனிப்பது போல் நாவும் இனிக்க வேண்டாமோ அதற்குத்தான்

“மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர நாமும் அரங்கனுக்கும் ஆண்டாளுக்கும் மனம் இனிக்க அக்கரை வடிசிலும் அக்கறையாய் செய்து அளித்தே நாமும் உண்ண



கீழே அக்காரவடிசில் செய்யும் முறையும் நாமளித்தோம்



அக்காரவடிசில்:





தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 2 ஆழாக்கு

கடலைப் பருப்பு- 1/2 ஆழாக்கு

பயத்தம் பருப்பு- 1/2 ஆழாக்கு

நெய்- 1 கிலோ

கொதிக்கவைத்த பால்- 4 லிட்டர்

வெல்லம்- 1 கிலோ

முந்திரிப்பருப்பு- தேவையான அளவு

கிஸ்மிஸ்- தேவையான அளவு

ஜாதிபத்திரி- 1 1/2 டீஸ்பூன்

தண்ணீர்- அரிசியை வேகவைக்க

செய்முறை:

முதலில் அரிசியை 200 கிராம் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அத்துடம் கொதிக்கும் நீர் மற்றும் பாலை சேர்க்கவும். அதே நேரத்தில் இன்னொரு வாணலியில் 1 ஆழாக்கு நெய்விட்டு இரண்டு பருப்புகளையும் வறுத்து அரிசிக் கலவையுடன் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வேகும்வரை அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி வேகவைத்த கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.மிச்சமிருக்கும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாக வறுக்கவும். ஜாதிபத்திரியையும் சேர்த்து வறுத்து சாதக் கலவையின் மேலே கொட்டிக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும்.அக்கார வடிசிலும் தயார்.



அன்புடன்

தமிழ்த்தேனீ