திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 12, 2009

பழமொழி -10. சாண் ஏறினால் முழம் வழுக்கும்

’சாண் ஏறினால் முழம் வழுக்கும் “
என்ன ஒரு அருமையான முது மொழி


எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம்
அவரவர்க்கு அவரவர் கை அளவே ஒரு சாண் என்பது
அவரவர் கையாலே அளந்து பார்த்தால் அவரவர் உடல்
எட்டு சாண் அளவைக் கொண்டதாக இருக்கும்
அவர்களின் முழங்கையின் அளவே முழம் என்று சொல்லுவார்கள்
அதனால்தான் இப்போதும் பூக்காரிகள் தங்களுடைய முழங்கையின் அளவையே ஒரு முழம் என்று அளந்து பூ விற்கிறார்கள்
இன்னும் சற்று யோசித்து சிறு பெண்களை முழம் போடவைத்துவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே உட்கார்ந்து பணத்தை
மட்டும் வாங்கி மடியில் சொறுகிக் கொள்ளுவார்கள்
அவர்களின் கணக்குப்படி சிறு பெண்ணின் முழங்கை அளவு
பூ அளந்து கொடுக்கும்போது பூ வாங்குவோருக்கு
கண்ணில் முழம் அளத்தல் பட்டாலும் பெறும் அளவு
குறைவாகவே இருக்கும் அதனால் லாபம் அதிகம் வரும் என்பது அந்தப் பூக்காரிகளின் திறமையான கணக்கு


என்ன ஒரு கணக்கு இறைவனின் கணக்கு
சரியான விகிதாசாரத்திலே அமைக்கப்பட்ட படைப்புகள்
இதை ஆராய்ந்து சொல்லிய பெரியோர்கள் எவ்வளவு அறிவாளிகள்....?

முன்பெல்லாம் வழுக்கு மரம் என்று ஒன்றைத் தயார்
செய்வார்கள், அந்த வழுக்கு மரத்தை நன்றாகத் தேய்த்து
பிசிறில்லாமல் வழு வழு வென்றிருக்கும்படி செய்வார்கள்
அந்த வழுக்கு மரத்தில் விளக்கெண்ணையை நன்கு பூசுவார்கள்
பிறகு அந்த மரத்தின் உச்சியில் ஒரு பண முடிப்பை
கட்டுவார்கள், அதன் பிறகு அந்த வழுக்கு மரத்தை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் செங்குத்தாக நடுவார்கள்
அந்த மரம் ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கொண்டிருக்கும்

மக்களின் மனோ உறுதியை சோதிக்க பந்தயம் கட்டுவார்கள்
யார் அந்த வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பணத்தை
எடுக்கிறார்களோ அவர்களுக்கே அந்தப் பணம் என்று,
மக்களுக்கு விடாமுயற்சியை,மனோதிடத்தை, ஏற்படுத்த
இது போன்ற போட்டிகள் வைப்பார்கள்
பலர் அந்த வழுக்கு மரத்தில் ஏறி தங்களின் விடா முயற்சியை
மனோதிடத்தை தங்களே பரிசோதித்துக் கொள்ளும் முறையில்
முயற்சி செய்வார்கள்,
அப்படி அந்த வழுக்கு மரத்தில் ஏற முயற்சி செய்பவர்கள்
தங்கள் உள்ளங் கால்களாலும், உள்ளங் கைகளாலும்
உள்ளத்தில் உறுதியோடும் ஏற முற்பட்டாலும் அந்த வழுக்கு மரத்தின் இயல்புக்கு ஏற்ப அது வழுக்கிக் கொண்டே இருக்கும்
உள்ளங்கைகளால் பிடித்து அந்த முயற்சியை அவர்கள்
செய்யும் போது உள்ளங்கையின் அளவாகிய சாண்
என்னும் அளவு அந்த மரத்தில் ஏறும்போது
அது ஒரு சாண் ஏறுதலாகிறது,மேலும் முழங்கையின் பிடிமானத்தை துணைக்கு அழைத்துக் கொள்ளும் அவர்களின் உடல் வழுக்கும் போது முழங்கையின் அளவாகிய ஒரு முழம் அளவுக்கு கீழே இறங்கி விடுகிறது,ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதன் வழுக்கும் தன்மையினால் அவர்கள்வழுக்கி கீழே இறங்கும் அளவைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் ஒரு முழம் அளவுக்கு
கீழே இறங்கி விடுவர்,மீண்டும் முயற்சி செய்து ஒரு சாண் ஏறுவர்
அவ்வளவு கடினமான முயற்சியிலும் வெகு சிலரே மரத்தின் உச்சி வரை ஏறி தான் எண்ணிய காரியத்தை முடிப்பர்

ஆக சாண் ஏறினால் முழம் வழுக்கினாலும்
மீண்டும் மீண்டும் முயலவேண்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -9 பெரியதா காப்பான் பெரியதா…?

என்ன ஒரு வினாச்சொல் வழக்கு
ஆச்சரியமாக இருக்கிறது

யோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள்
எவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி இருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமே மிஞ்சுகிறது

மா,பலா வாழை என்று ஒரு சொல் அடுக்கு உண்டு
பழங்களில் முதன்மையானது மாம்பழம்,
அடுத்து பலாப்பழம், அடுத்து வாழைப்பழம்
மூன்றுமே மருத்துவ குணமுள்ள இனிப்பான சுவையானபழங்கள்
ஆங்கிலத்திலே (riverse engineering) என்று சொல்லுவார்கள்
ஒரு யந்திரத்தை கட்டுமானம் செய்ய அதே போன்ற ஒரு யந்திரத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தலைகீழாக எண்ணிக்கை வரும்படி அடுக்கி வைத்துவிட்டு
மீண்டும் அதே வரிசையில் அதை கட்டுமானம் செய்வார்கள்
அது போல நாம் நம்முடைய முன்னோர்கள் சொன்னதையெல்லாம் ஒவ்வொரு சொல்லாக எடுத்து, அவற்றை பிரித்து அடுக்கி வைத்துவிட்டு,
மீண்டும் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தால்தான் தெரிகிறது
அவர்கள்: அதற்குள்ளே எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை
பொதிந்து வைத்திருக்கிறார்கள் எனபது

மாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வரும் என்று சொல்லுவார்கள்,ஆனால் அந்த மாம்பழத்தின் உள்ளே இருக்கும் கொட்டையின் உள்ளே இருக்கும் மாம்பருப்பை எடுத்து உண்டாலே அதுவே சிறந்த மருந்து வயிற்றுப் போக்குக்கு
அடடா கனிவையும் சுவையையும் வைத்து அதனுள்ளே மருந்தையும் வைத்த இறைவன் எவ்வளவு பெரியவன்


வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர்
ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது
பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி,அதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும்,அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்


அதே போல மேலே முள்ளாக கரடு முரடாக இருக்கும் பலாப் பழத்தின் சுவை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை
ஆனால் அந்தப் பலாச்சுளையின் உள்ளே இருக்கும் பலாக் கொட்டை யை அப்படியே சாப்பிட்டால் தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுகூட விடமுடியாமல் அவதிப்பட நேரும்,. ஆனால் அதே பலாக் கொட்டையை வேக வைத்து
நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது கட்டை அடுப்பில் சமைப்பார்கள், எரிகின்ற கட்டை அடுப்பின் உள்ளே இந்தப் பலாக்கொட்டைகளை போட்டு விடுவோம்
அடுப்பை அணைத்த பின் சற்று பக்குவமாக
வெந்த அந்தப் பலாக் கொட்டையை தோல் உரித்து
உண்போம் அது பலாச் சுளையைவிட இனிமையாக இருக்கும்
அது மட்டுமல்ல அந்தப் பலாக்கொட்டை பல வியாதிகளுக்கு மருந்து என்று சொல்லுவர்

அடுத்தது வாழை , வாழைப்பழமே மருந்து ,
வாழைதண்டு சாற்றினை பாம்பு கடி விஷத்துக்கு முறிவாக அளிப்பர், வாழைப்பட்டையில் பாம்பு கடித்தவர்களை படுக்க வைப்பர்,விஷ முறிவான இந்த வாழைமரம் இருந்தால்தான் கொண்டாட்டங்களே களை கட்டும்,அதே போல் வாழைப் பழம் இருந்தால்தான், விருந்தே களைகட்டும்,தலை வாழை இலையில் முதலில் வாழைப்பழமும் சர்க்கரையும் போட்டுவிட்டு ,பிறகுதான் மற்ற உணவு வகைகளை பறிமாறுவர்,வாழைப்பழம் நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, இறைப்பையின் இயக்கத்தை துண்டுகிறது உண்ணும் உணவுகள் செரிக்க உதவுகிறது
அந்த வாழை மரத்தை ஆராய்ந்தால்,வாழைக் குருத்து முளை விட்டு பின் வளர்ந்து மரமாகி குலைதள்ளும் பருவத்திற்கு சற்றுமுன்பாக பெரிய பெரிய இலைகள்வருவது நின்று போய் ஒருநாள் ஒரு பளபளப்பான ஒரு சிறு இலை தோன்றும் அதைக் " கன்னாடி இலை " என்பர் அந்தக் கன்னாடி இலை தோன்றிய பிறகுதான்குலைவிடும், அந்தக் குலையை சிறியதாக இருக்கும்போது அந்தக் கன்னாடி இலை பாதுகாக்கும்
பிறகு வாழைக் குலை பெரியதாக ஆகும்போது,அந்தக் கன்னாடி இலை அந்த வாழைக்குலைக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்கும் வாழையடி வாழையாய் குருத்துகள் அந்த வாழை மரத்தின் கீழே தோன்றிக் கொண்டே இருக்கும், ஒரு வாழை மரம் வைத்தாலே அது தானாகவே வாழைத்தோப்பாகும் ஒரு நல்ல பெண்மணி ஒருத்தி வந்தாலே எப்படி குலம் தழைக்குமோ அது போல,

நம்மை வளர்க்கும் தாய் எப்படி நம்மை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் வளர்த்து நாம் பெரியவனானவுடன் நம் சுகத்துக்காக ,நம் மகிழ்ச்சிக்காக, சற்றே ஒதுங்கிக் கொள்கிறாளோ அதுபோல கன்னாடி இலை ஒதுங்கிக் கொள்ளும்
பிறகு குலையில் வாழைப்பூ தோன்றும் அந்த வாழைப்பூவில் உள்ளிருக்கும் தனித்தனியான ஒவ்வொரு மடலும் ஒரு கொத்து பூக்களை பாதுகாத்து அவை முற்றி காய்களானவுடன் மடல்கள் ஒதுங்கிக் கொள்ளும்,இப்படி ஒவ்வொரு மடலும் இதழ் விரிந்து காப்பானாக இருந்து ஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளும்
ஆனாலும் கடைசியாக காயாக முடியாத சில சிறு பூக்களை கடைசீ வரையில் மடல்கள் மூடிக் கொண்டு பாது காத்துக் கொண்டிருக்கும் அந்த அமைப்பை நாம் வாழைப் பூ என்கிறோம் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துமாறு
வாழ்க்கைப்பாடம் நடத்தும் ஒவ்வொரு வாழை மரமும் காப்பானே, என்பதில் ஐய்யமே இல்லை

பிறகு அந்த வாழைப்பூவை மடல் பிரித்து அந்த
சிறும் பூக்களை கொத்தாக எடுத்து அரிந்து அதை சமைத்து
நாம் உண்ணுவோம், அப்படி சிறும் பூக்களை அரியும் போது
ஒவ்வொரு சிறும் பூக்களையும் கூர்ந்து கவனித்தால்
சுற்றிலும் அந்த சிறும் பூக்களின் பாகங்களும்
நடுவில் தலை கொழுத்து ஒரு மொட்டுமாய் இருக்கும்

அந்த மொட்டுடன் கூடிய தண்டை கள்ளன் என்று சொல்லுவார்கள் , அது உடலுக்கு கெடுதியானது ஆகவே அந்த கள்ளனை நீக்கி விட்டு சமைப்பர்
அதைக் காட்டித்தான் உள்ளே கள்ளன் ஒளிந்திருக்கிறான்பார் என்று என் அன்னை கூறுவார்கள்

கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா

ஒரு வாழைப்பழத்தை அளித்து யாருக்கும் தெரியாமல் உண்ணச்சொல்லி ஒரு குரு சொன்னார்

திருஞான சம்பந்தர்

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலை பொடி பூசியென் உல்ளம் கவர் கள்வன்

"நாமெல்லாரும் கள்ளர்கள்
காப்பான் இறைவன் ஒருவனே
அதனால் காப்பானிடம் காட்டிக் கொள்ளாமல்
நாம் ஒளிய இடமே கிடையாது என்பதை உணராமல்
நம்மின் உள்ளுக்குளே ஒளிந்திருக்கிறோம் "

கள்ளனே காப்பானாகவும் காப்பானே கள்ளனாகவும்

இருந்த மாயக் கண்ணனைக் கேட்டால்தான்
தெரியும் கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா என்று...? திருமங்கை மன்னன் கொள்ளையடித்தான் கோயில் கட்டினான்
கோயிலில் இருக்கும் இறைவனை விட திருமங்கை மன்னன் பெரியவன் எப்படி என்று கேட்டால் உள்ளிருக்கும் புதையைலை காப்பாற்றி வைத்திருக்கும் தகரப் பெட்டியாய் இருந்தாலும் அப்பெட்டி இல்லையென்றால் புதையலே காணாமல் போய்விடுமல்லவா அது போல , இறைவன் தங்கமென்றாலும் திருமங்கை மன்னன் போன்றவர்கள் தகரமென்றாலும் ,இறைவனே சொல்கிறான் தன்னை விட தன் அடியார்களே மிக உயர்ந்தவர்கள் என்று அது போல காப்பவன் தான் பெரியவன் அது இவ்வுலகத்தையே காக்கும் இறைவனையே காப்பவன் எவ்வளவு பெரியவன்

அதனால் கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா என்னும் கேள்விக்கு
காப்பானே பெரியவன் என்று பொருள் விளங்குகிறது அல்லவா?

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி- 8. இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சை
இது ஒரு அருமையான சொல்லாடல்
முதுமொழி,அல்லது பழமொழி


உலகிற்கே மருத்துவம் சொல்லிக்கொடுத்தவர்கள் நம்மவர்கள்
சித்த மருத்துவர்கள்,நம் மூலிகைகள் உலகிற்கே நோய் தீர்க்கும் பச்சிலைகள் ஆகும் ஆனால் அது நம் கண்ணில் படுவதில்லை
இயற்கை மூலிகைகள் சிறந்த நோய் நிவாரணிகள் என்று பல சித்தர்களும் யோகிகளும் உணர்த்தி இருக்கின்றனர்
சித்தர்களால் மூலிகைகளின் மகத்துவம் தெரிந்து கண்டு பிடிக்கப்பட்ட்துதான் சித்த மருத்துவம்
அது மட்டுமல்ல பல கலைகள் நம்மால் கைவிடப்பட்டு அன்னிய நாடுகளால் கவரப்பட்டு முதன்மை பெற்ற கலைகளே உதாரணமாய் சித்தமருத்துவம் ,யோகம், தியானம், தவம்,
இன்னும் பல, கராட்டேஎன்னும் கலை கராட்டே என்றால் சீன மொழியில் வெறும் கை என்று பொருள் ,முதன் முதலில் வெறும் கையையே ஆயுதமாகப் பயன் படுத்த முடியும் என்னும் கலையைக் கண்டு பிடித்தவர் நம் நாட்டினரே,
பல இதிகாச புராணங்களில் ஒருவரை வாழ்த்துவதற்கோ
அல்லது சாபம் அளிப்பதற்கோ வலது உள்ளங்கைகளையே பயன் படுத்தினர், மேலும் தொடு வர்மம் தொடாமல் தூர இருந்தே வெறும் கைகளைக் காட்டியே எதிராளியை செயலிழக்கச் செய்தல் ,அல்லது வெறு கையில் உள்ள விரல்களைப் பயன்படுத்தி எதிராளியின் நரம்புகளில் வலியை ஏற்படுத்தி எதிரே இருப்பவரின் கைகளையோ கால்களையோ அல்லது மொத்த இயக்கதையோ நிறுத்தமுடியும் என்று நிரூபித்தவர்கள் நம் முனிவர்கள், யோகிகள், சித்தர்கள் என்பது சரித்திரம்
என்றால் வெறும் கை, களரி யுத்தம்,மல்யுத்தம் wwwf,
வான சாத்திரம், மனோதத்துவம் , பொதுவுடமை, மனிதம், நேசம்
தொடு வர்மம், படு வர்மம், யோகம் தியானம், போன்ற அனைத்துக்குமே தாய் வீடு இந்தியா,
பொதுவுடமைக் கொள்கைகளை கடைப்பிடித்தவர் வள்ளுவர்

செல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருப்பார்
நல் விருந்து வானத்தவருக்கு ,

அதிரூப சுந்தரிக்கும் அழகில்லாப் பெண்களுக்கும் அமைப்பெல்லாம் ஒன்றேதான் அளவில்தான் வேறு பாடு
ஆனால் நாம் நம் மனைவியை விட அவர்கள் அழகென்று நினைப்போம்,நம் இயல்பு அது,

70 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தேசப்பிதா சொன்னதைத்தான் இன்று 2009ம் ஆண்டு திரு ஒபாமா சொல்கிறார்
ஆனால் நாம் நம் காந்தியை மதிக்கவில்லை
ஒபாமா சொன்னால்தான் காதிலேயே வாங்குவோம்


பசுமையும் ,பனி மேகங்களும்,கானலும் ,நாம் இருக்கும் இடத்தில்
தெரியாது....இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும்
அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்

ஆனால் நமக்கு எப்போதுமே
இங்கிருக்கும் பச்சை தெரிவதே இல்லை
அதாவது தோட்டத்துப் பச்சிலை நம் கண்ணுக்கு தெரியாது
பச்சிலை மருத்துவர் சொல்லும்போதுதான் அந்தச் செடி மூலிகை என்றே நமக்குத் தெரியும்
எப்போதுமே நமக்கு ஒரு குணமுண்டு நம்மவர் அறிவாளியாய் இருந்தாலும் ,அவர்கள் சொல்லும் போது மதிக்காத
நாம் அயல் நாட்டார் சொன்னால் உடனே மதிப்போம்
அப்படி ஒரு குணம் நமக்கு இருக்கிறது

வெளி நாட்டுக்கு சென்று அங்கு எங்கேயும்
குப்பையை போட முடியாமல் பத்திரமாக வைத்திருந்து
அயல் நாட்டில் கடைப்பிடித்த அத்தனை நற்குணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, விமானம் மும்பையில் வந்து
இறங்கியவுடனே கண்ட இடத்தில் அதே குப்பையை போட்டு போட்டுவிட்டு செல்பவர்கள் தாமே நம்மில் பலர்
தண்டனை கிடைக்குமென்றால் ஒரு மாதிரி தண்டனை கிடைக்காது என்கிற தைரியமிருந்தால் ஒரு மாதிரி நடப்பவர் நம்மில் பலபேர்

சந்தர்ப்பம் கிடைக்காமையினால் தவறு செய்யாதவனை விட
சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாதவன்தான் உண்மையான நேர்மையாளி.....
வெளிநாட்டிற்கு கொடுக்கும் அதே மரியாதையை நம் நாட்டுக்கும் கொடுத்தால்எவ்வளவு நன்மை நடக்கும், நாம் வெறுமனே இருந்து கொண்டு அரசாங்கத்தை மட்டும் குறைகூறிக் கொண்டே காலம் தள்ளாமல் நம்முடைய நாட்டையும் சுத்தமாக வைத்துக்
கொள்ளலாம் அல்லவா, நமக்கு அயல் நாட்டைப் பார்த்தால் அப்படி ஒரு ப்ரமிப்பு,நம் நாட்டில் இல்லாத அழகுகளா,இயற்கை கொஞ்சும் சுற்றுலாத் தலங்களா,...?

ஆனால் அவைகளை பராமரிக்க நாமும் முயல மாட்டோம்
நம் அரசாங்கமும் முயலாது, இக்கரைக்கு அக்கரை என்றுமே பச்சைதானே, இக்கரையின் பச்சை ,பசுமை ,நன்மை
எதுவுமே நம் கண்களில் படாது

திரைஉலக இயக்குனர் ஒரு திரைப்படத்தில் கேட்பார்,
உங்களுக்குத் தெரிந்த பத்தினிகளின் பெயரை சொல்லுங்கள்
என்று ஆளாளுக்கு நளாயினி, கண்ணகி,என்றெல்லாம் சொல்லுவர், பாக்யராஜ் கேட்பார் உங்களுக்கு பத்தினி என்றவுடன்
உங்கள் மனைவியின் பெயர் நினைவுக்கு வரவில்லையா என்று
அது போல நமக்கு நம்மிடம் உள்ள அனேக திறமைகள்
தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் அவைகளை நாம் மதிப்பதில்லை, தமிழ் பேசி நடிக்க நம்மிடம் இல்லாத
தமிழ் நடிகைகளாஆனால் மும்பையிலிருந்து அல்லது அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழே பேசத்தெரியாத அவர்களுக்கு, உயர்தர உணவகத்தில் அறை போட்டுக் கொடுத்து
தமிழ் சொல்லிக் கொடுத்து,தமிழை அவர் மொழியில் அப்படியே எழுதிக் கொடுத்து பேச வைத்து திரைப்படம் எடுத்தால்தான்அது பெரிய தகுதி என்று நம்முடைய இயக்குனர்கள் நினைக்கிறார்களே அதுபோல, நம்மை மதிக்க நாம் எப்போது கற்றுக் கொள்கிறோமோ, அப்போதிலிருந்து நம் நாடு இன்னும் வளமாக
முன்னுக்கு வரும் என்பதில் ஐய்யமில்லை, இவற்றை சுட்டிக் காட்டத்தான் வருங்காலத்தை மனதில் வைத்து அன்றே தீர்க்க தரிசனமாக இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லி வைத்தார்களோ..?

அல்லது நதியின் இரு கரைகளில் இருக்கும்
இக்கரையின் மேல் நாம் அக்கரை கொண்டு கவனித்தால்
அதாவது பயிர் செய்தால் அந்த விவசாயம் மூலமாக
அக்கரையும் பசுமையாகும் என்று கூட சொல்லி இருக்கலாம்
நம்முடைய நாகரீகமே நதிக்கரையில் தோன்றியவைதானே
ஆகவே இக்கரையின் மேல் அக்கரை வைப்போம்
முதலில் நம் நாட்டின் வளத்தைப் பற்றி யோசிப்போம்
நம்மால் முடிந்த அளவு நம் நாட்டுக்காக ஏதேனும் அக்கரையாகசெய்வோம்
இக்கரை பச்சையாகும் ,பசுமையாகும்
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

அன்புடன்
தமிழ்த்தேனீ




பழமொழி -7. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “

கேட்டாலே சிந்தனையை தூண்டும் பழமொழி இது

கூத்தபிரான் ,சுடலைமாடன் நடராஜன்,தில்லைக் கூத்தன்அம்பலவாணன் உயிர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்ஆத்மா பரமாத்மா ஊழிக்கூத்தாடிய நேரம் எப்போது எதனால் ஊழிக்கூத்தாடினான்அவனுடைய ஆட்டம் நின்றால் ப்ரபஞ்ச சுழற்சியே நின்று போகும் அம்பலத்தில் ஆடுகின்ற ஞானக் கூத்தன்ஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள்இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம் அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ஏற்பட்டால்கூத்தாடிக்கு கொண்டாட்டம்ஊர் மக்கள் இரண்டு படும்போது கூத்தாடிக்கு எப்படிகொண்டாட்டம் வரும் ....?வரும் ….!!!!!! கூத்து என்பது நாடகம் என்னும் கலையின் பிறப்பிடம்........ கூத்தாடிகள் தங்களுடைய கலைகளால்மக்களின் கவலை மறந்து மகிழ்வாக இருக்க வைப்பர்மக்களின் கவலை போக்கும் மருந்தாக கூத்து என்னும்கலை பயன்பட்டு வந்தது,....ஊர் மக்கள் மன வேறு பாடுகள் கொண்டால்இரண்டு ஊருக்கும் பொதுவாக இருக்கும் பெரியவர்கள்கூத்து என்னும் கலைக்கு ஏற்பாடுகள் செய்வர்அங்கு இரண்டு ஊர் மக்களும் ஒன்று கூடுவர்அப்படி ஒன்று கூடும் போது இரண்டு ஊர்ப் பெரியவர்களும்மக்கள் மகிழ்வாக இருக்கும் நேரம் பார்த்து,பல, அறிவு பூர்வமான ,மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய ,சமாதானங்களைக் கூறி இரண்டு ஊர்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கினர்அதற்கு கூத்து என்னும் கலை பயன் பட்டதால்ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ஒரு கூத்து நடத்த வாய்ப்பு வருமல்லவா.அதைத்தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பார்களோ ...?" விஞ்ஞானமும் மெய்ஞானமும்தண்டவாளங்களின் இரு இணை இரும்புகள் போல் என்றும் சந்திக்காதுஆனால் அவைகளை இணைக்கும்நடு மரப் பட்டைகள் என்கிற உறவுப்பாலம்,,கீழே தாங்குதற்கு கருணை உள்ளம்கொண்ட பூமி , அன்பு பாசம் நேசம் போன்றஇணைப்புகள், இவைகள் இல்லாது போயின் மெய்ஞானமும் சரி விஞ்ஞானமும் சரிவலுவிழந்து போய்விடும் "இவற்றை உணர்ந்து பெரியவர்கள்இரண்டு தண்டவாளங்களை இணைக்கும்நடு மரப்பட்டைகளாக உறவுப் பாலமாகசெயல்பட்டிருக்கிறார்கள்மனிதாபிமானத்தை ,அன்பை, பாசத்தைஒற்றுமையை வளர்த்திருக்கிறார்கள்ஆனால் ...இப்போது பல கூத்தாடிகள் தாங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்காகவே,இனம் ,மொழி, மதம் சாதி ,போன்ற பலவகையான ஆயுதங்களைப் பயன் படுத்தி ஊர் மக்களை,இரண்டு படவைக்கிறார்கள்கலகம் செய்கிறார்கள்,நாமும் அவர்களின் பேச்சைசெவி மடுத்து அடித்துக் கொண்டு சாகிறோம்,கூத்தாடிகள் அந்தக் காலத்தில் பல நல்ல கருத்துக்களை மையமாக வைத்து மக்களை அறிவுறுத்திநல் வழிக்கு அழைத்துச் சென்றார்கள்இந்தக் காலத்தில் அதே கூத்தை ,நாடகத்தை ,திரைப்படத்தை வைத்து மக்களை இரண்டு படுத்தி கூத்தாடிகள் குளிர் காய்கிறார்கள்,கொண்டாட்டமாக இருக்கிறார்கள்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று நன்மைக்காக பெரியோர்கள் செய்து வைத்தஅதே பழ மொழியைதங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுமக்களின் விரோதங்களைத் தூண்டி விட்டுமக்கள் அடித்துக் கொண்டு இருக்கும்போது நாட்டின் செல்வங்களை சத்தமில்லாமல் களவாடி தங்களுக்குசேர்த்துக் கொள்கிறார்கள்இவை புறியாமல் மக்கள் மாற்றிமாற்றி வேறு வழியில்லாமல் மீண்டும் அவர்களுக்கேவாக்குகளை அளித்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்வாழும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்என்று உணராமல் பல கோடிகளை தங்கள் வாரிசுகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு , செல்கிறார்கள்அந்த வாரிசுகள் கஷ்டப் பட்டு சம்பாதித்திருந்தால்அந்தப் பணத்தின் அருமை தெரியும் இலவசமாக வந்ததால் அந்தப் பணத்தைக் கொண்டுஅதையும் கெடுத்து தாங்களும் கெட்டுப் போய்வன் முறைகளுக்கு வழி வகுக்கிறார்கள்இவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல என்று உணர்ந்தஅக்காலத்துப் பெரியோர்கள் முன் உதாரணமாக தங்களுடைய சொத்துக்களை நாட்டுக்கு தானமாக அளிக்க முன் வந்தனர்மக்களின் நல் வாழ்வே, ஒற்றுமையே நாட்டின் பெரும் பலம் என்று உணர்ந்து செயல் பட்டார்கள்மக்களுக்கும் ஒற்றுமையாய் வாழ்வது அவசியம் என்று உணர்த்தினார்கள்......இதை நன்கு உணர்ந்துதான் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்என்னும் முது மொழியை அளித்து விட்டுச் சென்றனரோ...?

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -6. வட்டிக்குவாங்கி அட்டிகை பண்ணு,அட்டிகையைவிற்று வட்டியைக் கட்டு

பழமொழி ஆய்வு 6 :-

வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு
அட்டிகை வித்து வட்டியைக் குடு

இந்த பழமொழியை கேட்டவுடன் சிரிப்புதான் வருகிறது'
நாமெல்லாரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

நமக்கு அடிப்படை தேவைகளே
இருக்க இடம் , உண்ண உணவு ,குடிக்கத் தண்ணீர்
இந்த மூன்றுக்குமே நாம் போராட வேண்டியிருக்கிறது
நம் அரசியல் அமைப்பு நமக்குத் தரும் வசதிகள்
அப்படி இருக்கின்றன,ஆனால் தற்போது நாமெல்லாரும் நிறைய சம்பாதிக்கிறோம்
நிறைய செலவழிக்கிறோம்,ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் சம்பாதித்ததும் குறைவு, செலவழித்ததும் குறைவு
பெரும் பான்மையான மக்கள் பேராசை இல்லாமல் இருந்தார்கள்
அப்படி இருந்தும் சிலபேர் பேராசைப் பட்டதால்
வந்த சொல் வழக்கு இது


கண்ணை விற்று சித்திரம் வாங்கியதைப் போல என்று சொல்லுவார்கள்,
அது போல அந்தக் காலத்தில் பேராசைப்பட்டவர்கள்
பொன் நகை போட்டுக் கொள்ளுதல் அந்தக் காலத்தில் மிகவும் மதிப்பான விஷயம்,
அந்தக் காலத்தில் என்ன ....?
இந்தக் காலத்திலும் அதே நிலைமைதான்
அதற்காக வட்டிக்கு பணம் வாங்கி அட்டிகை
என்னும் அலங்கார நகையை வாங்குவார்கள்
ஒட்டியாணம் என்னும் நகை இடையை அலங்கரிக்கும்
கைகளில் மோதிரங்கள், கழுத்தில் தங்க முகப்படாம்கள்
காதிலே வைரத் தோடுகள் எல்லாம் அணிந்து கொண்டு
மினுக்கினால்தான் அது மதிப்பு என்று நினைத்துக் கொண்டு
விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்னும் பழமொழியை
மதிக்காமல் அளவுக்கு அதிகமாக தகுதி உணராமல் வீண் செலவு
செய்துவிட்டுபிறகு அந்த வலையிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவார்கள்
மக்களின் இந்தப் பேராசையை பயன் படுத்திக் கொண்டு
சில பேர் தங்கள் கையிலிருக்கும் பணத்தை
வட்டிக்கு ஆசைப்பட்டு பலபேருக்கு கொடுத்து
அனியாய வட்டி வாங்கி கொழுத்த பணக்காரகளாக
ஆவதற்கு சுலபமான வழியாக மக்களின் இந்த வேண்டாத
குணத்தை உபயோகித்தனர்

மக்களின் பேராசை என்னும் வேண்டாத உணர்வு
எந்த அளவு அவர்களை ஆட்டி வைத்திருக்கிறது
என்று நமக்குப் புறிய அளவு கோலாக இந்தப் பழமொழி
பயன்படுகிறது

இதே உணர்வு இப்போதும் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறது
என்பதில் சந்தேகமே இல்லை...!
இப்போதெல்லாம் நம் செலவு செய்ய பணம் கூடத் தேவையில்லை
ஒரு சிறு அட்டை போதும்
ஆனால் பணத்தை திரும்ப செலுத்த பணம் வேண்டும்
இந்த விஷயத்தை அனேகமாக அனைவரும் மறந்தாற்போல
அட்டையை வைத்து செலவழிக்கிறார்கள்
பிறகுதானே கொடுக்க வேண்டும் என்கிற தைரியம்
பலரை கீழே அதளபாதாளத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது
அதுவும் போதாக் குறைக்கு கணிணி விறபன்னராயிருக்கும் சிலர்
அடுத்தவரின் கடவு எண்ணை உபயோகித்து
அவருடைய வங்கியில் உள்ள அத்தனை பணத்தையும் கபளீகரம் செய்யும்
குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்
அத்தனைக்கும் காரணம் மனிதர்களின் பேராசைதான்

வருமானத்துக்கு தக்கபடி செலவு செய்து வளமாக
வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்
நாமோ அளவுக்கு அதிகமாக செலவு செய்து அவமானத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்
கையில் இருக்கும் காசை எண்ணிப் பார்த்து செலவு செய்ததால்
அவர்களுக்கு வழ்க்கையின் திட்டமிடுதல் பழகி இருந்தது
இப்போது அப்படியில்லை செலவு செய்து விட்டு மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்

ஒரு காலத்தில் தங்க நகை வாங்குவது தங்களுடைய
அந்தஸ்தை காட்டிக் கொள்ளவும் , அதற்குப் பிறகு
ஆபத்துக்கு தங்கம் உதவும் என்கிற எண்ணத்தினாலும்
தங்கம் வாங்கினர்...இப்போது ஆடம்பரத்துக்கே தங்கம் அதிகம் பயன் படுகிறது
அரசே தங்கத்தை வாங்கிக் குவிக்கிறது
எல்லா நாடுகளும் தங்கம் வைத்திருக்கும் நாடுகளை
தராசில் நிறுத்து தகுதியை எடை போடுகிறது

தங்கம் வாங்குவதில் மீண்டும் விற்பதில் உள்ள சிக்கல்களை ஆரய்ந்தால்

நாம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் அதைத்தவிர வரிகள் என்று ஏராளமான செலவை நமக்கு ஏற்படுத்தி லாபம் சம்பாதிக்கும் தங்க வியாபாரிகள்
அதே நகையை அவர்களிடம் மீண்டும் கொடுத்துவிட்டு
வேறு நகை வாங்கும் போது நாம் கொடுக்கும் தங்கத்தின் விலையை வெகுவாகக் குறைத்து மீண்டும் செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு, மீண்டும் அவர்களிடம் வாங்கும் நகைக்கு செய் கூலி சேதாரம் எல்லாம் போட்டு,,..... அப்பப்பா
நாம் உழைத்த பணம் நம்மை அறியாமலே தங்க நகை வியாபாரிகளால் சுரண்டப் படுகிறது
அது மட்டுமல்ல கற்கள் பதித்த நகைகள் வாங்கினால்வேறு வினையே வேண்டாம்
நமக்கு அவர்கள் விற்கும்போது கற்களுடன் சேர்த்து எடை போட்டு அனியாய விலைக்கு விறபார்கள், நாம் அதை மீண்டு அவர்களிடம் விற்கும்போது 'கற்களையெல்லாம் எடுத்து விட்டு, அதற்கு மேலும் அந்த தங்கத்தை உருக்கி அழுக்கெடுத்து
அப்போது எவ்வளவு எடை இருக்கிறதென்று கணக்குப் பார்த்து
நமக்கு செலவு வைக்கிறார்கள், இதைபோன்ற அனியாயத்தை நாம்தினமும் சந்திக்கிறோம்

ஆனாலும் நகைக்கடைகளில் கூட்டத்துக்கு பஞ்ஜமில்லை
இத்தனைக்கும் காரணம்
நம்முடைய அறியாமை,பேராசை,வீண் படாடோபம்
இதைத்தான்
பெரியோர் வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்து
அட்டிகை விற்று வட்டியைக் கட்டு என்று சொல்லி இருக்கிறார்களோ
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -4. அழுதபிள்ளைதான் பால் குடிக்கும்

" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"

அருமையான முது மொழி!! , பசியெடுத்தாலும் அழாமல் ,
அதாவது எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் நான் இன்னும் முன்னுக்கு வரவில்லையே என்று கவலைப் படும் பலர்,
அதாவது பரவாயில்லை அடுத்தவர்கள் முன்னுக்கு வந்து விட்டார்களே என்று கவலைப்படும் பலர், இப்படிப் பலவகை மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் உணர்த்துவது போல் இந்த முதுமொழி அமைந்திருக்கிறது

நான் ஒரு முழு நீள நாடகத்தை மூன்று நாளில் எழுதி முடிக்கும்
வழக்கமுடையவன் என்னை பார்த்து சக நாடக எழுத்தாளர்கள்
கேட்பார்கள் மூன்று நாளில் எப்படி எழுதி முடிக்கிறாய் என்று
அவர்களுக்கு நான் பதில் சொல்லுவேன்,மூன்று நாளில் முடிக்க முன்னூறு நாள் யோசித்திருக்கிறேன்,உழைத்திருக்கிறேன்
என்று, இதுதான் வெற்றியாளர் பலரின் ரகசியம் ,

பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் நேத்து கூட நான் அவரைப் பார்த்தேன் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராக ஆகிவிட்டார் என்று
ஒரே நாளில் கோடீஸ்வரராக ஆவதற்கு அவர் எத்துணை முயற்சிகள் செய்திருப்பார் பலகாலமாக , அது வெளியே தெரிவதில்லை,

எப்போதும் வேர்கள் வெளியே தெரியாது விருட்ஷம் மட்டும் தான் தெரியும் , மிகச் சிறிய உருவமாக ,குள்ளமாக வாமனாவதாரம் எடுத்த ஸ்ரீமன் நாராயணனின் விஸ்வரூபம் வெகு சிலரே பார்த்திருக்கக் கூடும், ஆனால் அந்த விஸ்வரூபத்தைக் கண்டவர்கள்கூட அந்த விஸ்வரூபத்தின் பின்னால் இருக்கும்
"அணுவை சத கூறிட்ட அணுவிலும் உளன் " என்று ஆன்மீகப் பெரியார்கள் சொன்னாற் போலே அந்த அணுவிலிருக்கும் இறைவனைக் கண்டிருப்பார்களா என்பது சந்தேகமே..அது போலத்தான் முயற்சிகளை காணாதோர் முடிவை மட்டும் கண்டு ஆச்சரியப் படுகின்றனர்,
முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும் பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புரியவில்லை
கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலை அதாவது, கடமையைச் செய் பலனை எதிர் பாராதே என்று..
அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலே பலனை நீ எதிர் பார்க்க வேண்டாம் தானாகவே வரும் என்னும் பொருளை உணர்த்துவது போல , தன் கடமையைக் கூட உணராமல் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல். இருப்பவர்களை கடமையை செய்யத் தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது

ஒரு திருமண மண்டபத்தில் நான் ஒரு குழாயில் கையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன் இன்னொரு கோடியில் கடைசீக் குழாயில் இன்னொருவர் கையை சுத்தம் செய்துகொண்டிருந்தார் அந்த நண்பர் நாட்டில் பல பேர் கோடீஸ்வரராக ஆகிவிட்டனர், நாமெல்லாம் எப்போது அப்படி ஆக முடியும் என்றார்,

அவரைப் பார்த்து நான் சொன்னேன் வேடிக்கையாக நீங்களும் நானும் கோடியில் ஒருவர் என்று, ஆமாம் அந்தக் கோடியில் அவர் இந்தக் கோடியில் நான், அது போல வெகு சிலரே கோடியில் ஒருவராக முயற்சி செய்கிறார்கள், அல்லது கோடிகளுக்காக முயற்சி செய்கிறார்கள் ஆகவே முயற்சி திருவினையாக்கும் என்பதைத்தான் ”அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்று சொல்லி இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது

இன்னொரு முக்கியமான விஷயமும் நினைவுக்கு வருகிறது
ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது அத்துணை நாட்கள் ஒரு தண்ணீர் நிரம்பிய பையில் நீந்திக் கொண்டிருந்தாலும்,அந்தத் தண்ணீரிலும் அந்தக் குழந்தை ஸ்வாசிக்க காற்றையும், தொப்புள் கொடி வழியே தாய்மையின் உணர்வுபூர்வமான சக்தி , தாய் உண்ணும் உணவிலிருந்தே எடுக்கப்பட்டு அக்குழந்தைக்கு ஏற்ப
அவ்வுணவை மாற்றி அனுப்பிய அபூர்வ சக்தியினால்,உணவாக அனுப்பப்பட்டும், அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது....
அது மட்டுமல்ல தாயின் தொப்புள் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல அனைத்துக் குழந்தைகளுக்கும் உயிர் காக்கும் ஜீவரசமாக இருக்கிறது என்பதை விஞ்ஞானத்தில் கண்டு பிடித்து அவைகளைப் பாதுகாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்(Stem cell) மேலும் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நம்
முன்னோர்கள் கூறியதையே இப்போதைய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
இப்படி இன்று நாம் கண்டு பிடிக்கும் அனைத்துமே ஏற்கெனவே ஒருவன் கண்டு பிடித்து செயலாற்றி இருக்கிறான் என்றால்.. அவன்தான் இறைவன் என்று ஒப்புக் கொள்வதில் தவறென்ன...?
ஏற்கெனவே அவன் உருவாவாக்கியதை கண்டு பிடித்த நமக்கே விஞ்ஞானி என்று பெயரென்றால், உருவாக்கிய அவனை இறைவன் என்று சொல்வதில் தவறென்ன ....?

என்னே இறையின் சக்தி ,..!!! என்னே இறையின் படைப்பு ரகசியம்
யார் சொன்னது இறை இல்லையென்று...? தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் ”அவனன்றி ஒரு அணுவும் அசையாது”

அப்படி பாதுகாப்பாய் இருந்த குழந்தை இயற்கையின் வழியே இந்த பூவுலகுக்கு வருவதற்காக இடையே நசுக்கப் படுகிறது நசுக்கப் பட்டு நழுவி முதலில் தலையைக் காட்டி பின் மொத்தமாக இந்தப் ப்ரபஞ்ஜப் ப்ரவேசம் அடைகிறது, அப்படி நசுக்கப் படும்போது
அது வரை அந்தக் குழந்தை ஸ்வாசித்த காற்றும் தடைப்படுகிறது
அக்குழந்தை மூச்சு விடத் தவிக்கிறது அந்த இடைவெளியில்
அதற்கு மூச்சுவிட காற்று தேவை

அந்தக் குழந்தை வெளியே வந்து பூமியில் விழுந்து அதன் உடல் இயக்கம் ஆரம்பிக்க இருக்கும் அந்த இடைப்பட்ட நேரத்தில்
காற்று உள்ளே போகும் மூச்சுக்குழலின் வழியை, இது வரை இருந்த குடியிருந்த கோயிலின் கர்பக் க்ரகத்தில் இருந்த கருணையே வடிவான தண்ணீர் இப்போது அடைத்துக் கொண்டிருக்கும், அந்த தண்ணீர் வெளியேறினால்தான்
காற்று உள்ளே புக முடியும் அதற்குதான் குழந்தை முயற்சி செய்து
அழ ஆரம்பிக்கிறது உரக்கக் குரலெடுத்து அழ ஆரம்பிக்கிறது, அப்படி அந்தக் குழந்தை அழும்போது,
அந்த தண்ணீர் ஸ்வாசக் குழாயிலிருந்து வெளியேறுகிறது ,அப்படி தண்ணீர் வெளியேறியவுடன் குழந்தை முதல் மூச்சு விடுகிறது
அப்படி அழவில்லையென்றால் மருத்துவர்கள் அடித்தாகிலும் அக் குழந்தையை அழ விடுவர் ஏனென்றால் அழுதால்தான் மூச்சே....
”முதல் மூச்சே விடமுடியும்” முதல் மூச்சு விட்டால்தானே பிழைக்கும் பிழைத்தால்தானே பால் குடிக்கும்?
”அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும்”
என்று ஆன்றோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்


புரட்சி எங்கு உருவாகிறது என்று நானே எனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டு பல நாள் ஆராய்ந்து அதன் மூலத்தை
என்னுடைய பாணியிலே ஒருகவிதையாக வடித்தேன்

" புரட்சி "
"அசை, புரளு, கவிழாதே நிமிரு
இயக்கம் கொள் பேரியக்கம் கொள்
அப்போதுதான் கருவரையிலிருந்தே
நீ வெளி வரமுடியும் இல்லையென்றால்
இறந்த குழந்தை "

என்று, ஆமாம் கருவரையிலேயே புரட்சி ஆரம்பித்து
விடுகிறது என்பதே உண்மை, அந்தக் கருவரைப் புரட்சியே ஒரு இயக்கத்தில்தான் ஆரம்பிக்கிறது,அக்குழந்தையின் இயக்கத்தால் தான் ப்ரசவ வலி ஏற்படுகிறது அதற்கு அடுத்த இயக்கம்தான் (pelvis) என்று சொல்லப்படும் இடுப்பு எலும்புகளின் விரிவாக்கம் அடுத்த இயக்கமாக இடுப்பு வலி ஆரம்பிக்கிறது , இப்படி இயக்கங்கள் அடுத்தடுத்து இல்லையென்றால் ,குழந்தை அழாமல் இருந்தால் இந்தப் ப்ரபஞ்சமே தோன்றி இருக்காது அல்லவா
சம்பந்தன் அழுதான் பராசக்தி பால் கொடுத்தாள், பராசக்தியின் அமுதத்தைக் குடித்ததால் வெறும் சம்பந்தருக்கு ஞானம் சம்பந்தமாயிற்று , ஞான சம்பந்தரானார், திரு ஞான சம்பந்தரானார், இப்போது சொல்லுங்கள்

அழுத பிள்ளை பால் குடிக்குமா ஞானம் பெறுமா
அழாத பிள்ளை பால் குடிக்குமா ஞானம் பெறுமா..?

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.


rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

முகவரி: பழைய எண் 152, புதிய எண் ஏஐ- 58,
ஏ3, இரண்டாவது தளம், சோனக்ஸ்வப்னா அடுக்ககம்
7 வது ப்ரதான சாலை, அண்ணா நகர் ,
சென்னை 600040

கைப்பேசி: 9840884088
இல்லம் : 044-42057923

அன்புடன்
தமிழ்த்தேனீ


பழமொழி -3. ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி

ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்

எவ்வளவு பொருள் பொதிந்த பழமொழி

ஆல்போல் என்றால் என்ன பொருள்
ஆல என்றால் ஆல மரம்
ஆல மரத்தை ஆராய்ந்தால் ஆல்போல் தழைத்து:

ஆல மரம் போல் வேரெந்த மரமும் இல்லை என்றே சொல்லலாம்,
அந்த அளவுக்கு ஆல மரம் நம்முடைய வாழ்க்கை
நெறிகளையும், நாம் வாழ வேண்டிய விதத்தையும்
நாம் கற்றுக் கொள்ள நமக்கு ஒரு ஆணி வேராக
இருக்கிறது

ஆல மரத்தை நன்கு கூர்ந்து கவனித்த நம் பெரியோர்கள்
ஆல் போல் தழைத்து என்று சொல்லி இருக்கிறார்கள்
ஆஹா எவ்வளவு அருமையான சுந்தரத்தமிழ் வார்த்தை
"தழைத்து" நம் நாவினால் இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே எவ்வளவு ஆரோக்கியமாக உணர்கிறோம்
தழைத்தல் என்றால் பெருகுதல்; வளருதல், எவ்வளவு மங்கலமான வார்த்தைகளை நம் முன்னோர்
உபயோகப் படுத்தி இருக்கின்றனர்
ஆச்சரியமாக இருக்கிறது
என்னுடைய சிறு வயதில் என் தாயார் என் தந்தையாரிடம்
சொன்னார் "ஆத்துலெ அரிசிப் பானை நிறைந்திருக்கிறது
சாயங்காலம் வரும்போது வாங்கிக் கொண்டு வந்து
விடுங்கள் என்று"
எனக்கு சந்தேகம்... ஏனம்மா அரிசியே இல்லையே பானையில்
நிறைந்திருக்கிறதுன்னு அப்பாகிட்ட சொன்னியே
தப்பு தப்பா சொல்ற என்றேன்
அதற்கு என் தாயார் சொன்ன வார்த்தைகளை
இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்

கண்ணா தமிழ் ஒரு நல்ல மொழி
அதுனாலெ நாம எப்பவுமே நல்லதை உபயோகிக்கும் போது
வெகு ஜாக்கிறதையாக உபயோகிக்க வேண்டும்
பொதுவா தமிழ் மொழிக்குன்னு ஒரு சிறப்பு இருக்கு
நல்ல தமிழில் சாபமிட்டா உடனே பலிக்கும்னு பெரியவா சொல்லுவா....
அதுனாலெதான் முன்னெல்லாம் நம்ம நாட்டை ஆண்ட
சக்ரவர்த்திகள் கூட தமிழுக்கு மரியாதை கொடுத்தா
தமிழ்ப் புலவர்களுக்கு மரியாதை கொடுத்து
அவங்களோட மனசு கோணாம நடந்துண்டா
அத்னாலே அமங்கலமான சொற்களை சொல்லக் கூடாது
அதுனாலெதான் அரிசி இல்லேனு சொல்லாம
அரிசிப்பானை நெறைஞ்சிருக்குன்னு அப்பாகிட்ட
சொன்னேன்..... அப்பாவுக்கும் தெரியும் தமிழோட அருமை
அதுனாலெ அவர் புறிஞ்சுப்பார் ,என்றாள்
அடடா என்னே தமிழின் பெருமை
தமிழும் ஆலமரமும் இணைந்தே வளர்ந்தவை அல்லவா
தமிழும் தழைக்கும் ஆலமரமும் தழைக்கும்
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
என்னும் பாடல் காதில் ஒலிக்கிறது
ஆல மரத்தின் சிறப்பே அதன் விழுதுகள்
பெருகி மீண்டும் தரை தொட்டு வேரோடி
மீண்டும் தழைத்து .... ஆஹா எவ்வளவு உயரம் சென்றாலும் நம்முடைய அடிப்படை பாரம்பரியத்தை நாகரீகத்தை
விடாமல் அதை அடிப்படையாக வைத்து மேலும் தழைக்க வேண்டும் என்னும் தத்துவத்தை எவ்வளவு எளிதாக ஆலமரங்கள் நமக்கு சுட்டிக் காட்டி நம் அறிவைத்
தழைக்க வைக்கின்றன...?
இறைவனின் படைப்புகள் அதிசியமே...!!!!!!!

அருகு போல் வேரோடி என்பதை ஆராய்ந்தால்
அருகம் புல்லின் சாறு இதயத்தை பலப்படுத்தும்
என்று பெரியவர்கள் சொல்லுவர்
நம் இதயத்தின் அடி ஆழம் வரை சென்று
நம் இதயத்தையே பலப்படுத்தும் அருகு நிச்சயமாய்
நம் வாழ்விலும் ஒரு பெரிய தத்துவத்தை உணர்த்துகிறது
அருகம் புல்லை கொஞ்ஜம் சேகரித்துப் பாருங்கள்
அது வெகுநாட்கள் கெடாமல் இருக்கும்
அது மட்டுமல்ல அந்த அருகம் புல்லை நாம் சேகரிக்க
அதை கையினால் பறிக்கும் போது அருகம் புல்லின் தழைகள்
மட்டுமே நம் கைக்கு வரும் வேரோடு வராது
ஏனென்றால் அருகம் புல்லின் வேர் அடி ஆழம் வரையில்
நன்றாக வேரூன்றி இருக்கும் ,
அது போல நம் வாழ்வில் ஆயிரம் நிகழ்வுகள்
நம்மை அசைத்துப் பார்த்தாலும். பெயர்தெடுத்து
அழிக்க நினைத்தாலும் நம்முடைய
நல்ல பாரம்பரியங்களை முழுமையாக புறிந்து கொண்டு
நல்லவற்றைக் கடைப்பிடிப்போம்,, தீயவை செய்யோம்
என்னும் நல்ல சபதங்களில்,குறிக்கொள்களில்
நாம் ஆழமாக வேரோடி நிலைத்து நின்றால்
நிச்சயமாக நன்மையே தவிற, தீமை இல்லை
இதயம் வலுவானதாக மாறும் இதைத்தான்
நம் பெரியோர்கள் திட சித்தம் என்று சொல்லுகிறார்கள்
இதைத்தான் அருகு போல் வேரோடி என்கிறார்கள்

அடுத்து
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்
என்று சொல்லுகிறார்கள்

ஆஹா மூங்கில் போல் சூழ்ந்து
எவ்வளவு அருமையான வார்த்தை
கொஞ்சம் மூங்கில் காடுகளை மனதில்
நினைத்துப் பாருங்கள்
எப்படி அருகருகே இணையாக, பரவரலாக
கூட்டமாக, இணைந்து, அணைத்து வளர்ந்து
ஒன்றிற்கொன்று பலமாய் ,உறவுக்கு பாலமாய்
ஒற்றுமையாய் சூழ்ந்திருக்கின்றன,அதனால் எப்போதுமே மூங்கில் மரங்களின் வளர்ச்சி மிக அதிகம் என்று சொல்லுவார்கள்
அது போல நாமும் இனம் ஜாதி மதம் போன்ற
எந்த பேதமும் இல்லாமல் இணைந்து அணைத்துக் கொண்டு
சூழ்ந்து நம் பலத்தை வளத்தை பெருக்கிக் கொள்வோம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று பெரியவர்கள் கூறியது போல வாழ ஆரம்பித்தால் நம்முடைய நன்மைகளுக்கு
அதுவே பெரும் பக்க பலமாக அமைந்து நம்முடைய
ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் , ஆரோக்கியமான
வளமான வாழ்வுக்கும் எந்த ஒரு முடிவுமில்லாது

தாழம் பூவும் மடல் விரியும் மின்னல் வரும் வேளைதனில்
மூங்கிலும் முளை விடும் மின்னல் வரும் வேளை தனில்
இயற்கையின் ரகசியங்கள் நம்மை முகிழ்க்கவைக்கின்றன
நம் மனதை விகசிக்க வைக்கின்றன
மரம் வளர்வதை பார்க்கமுடியும்
கேட்க முடியுமா.....?

முடியும் என்பர் அனுபவஸ்தர்

மூங்கில் ஒவ்வொரு முளை விடும் போதும்
ஒரு சத்தம் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்
அதே போல
தென்னம் பாளையில் பூக்கள் மலரும் போது ஒரு சத்தம் கொடுக்கும் என்றும் அனுபவஸ்தர்கள் சொல்லுகிறார்கள்
ஆகவே பெரியவர்கள் சொல்வதையும் கேட்போம்
மரங்கள் வளருவதை பார்ப்போம், , மரம் வளருவதையும் கேட்போம் இயற்கையோடு இசைந்து வாழ்வோம்
ஆமாம் மூங்கில் குருத்துகள் வரும்போது கேட்கும் சத்தம் மத்தளமாகவும், மூங்கில் துளைகளின் வழியே பயணப்படும் காற்று ஊதும் குழலாக மாறி அளிக்கும் ஊதுகுழலின் நாதத்தையும் ரசித்து இசை பட வாழ்வோம்



ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
மூங்கில் போல் முடிவில்லாது வாழ்வோம்

கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்
என்று ஔவையார் கூறியபடி


அன்புடன்
தமிழ்த்தேனி



பழமொழி : 2 " நடந்தால் நாடெங்கும் உறவு

பழமொழி : 2 " நடந்தால் நாடெங்கும் உறவு
படுத்தால் பாயும் பகை “



இந்தப் பழ மொழியை ஆராய முற்படும்போதே பல பெரியவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்
உயர் திரு மஹாத்மா காந்தி, உயர் திரு வினோபா பாவே
உயர் திரு ஜயப்ரகாஷ் நாராயணன்,

எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்திலே
மக்கள் ஒரு ஊர் விட்டு மற்றொரு ஊருக்குப் போக, அல்லது தாங்கள் போகவேண்டிய இடங்களுக்கு போய்ச்சேர நடந்து தான் செல்லவேண்டும் என்னும் கட்டாயத்தில் இருந்தனர்
கால் நடையாளர்களாகவே வாழ்ந்தனர்,அதற்குப் பிறகு தங்களின் தேவைகளை மனதில் கொண்டு உண்மையான கால்நடைகளாகிய குதிரை, மாடுகள், எருது, கழுதை போன்ற கால்நடைகளின் மேலேறி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்

மன்னர்கள் ஆண்ட காலத்தில் முப்படைகளின் பிரிவில்
யானைப்படை, குதிரைப்படை போன்றவை இருந்தாலும் எளிதில் ஊடுருவக் கூடிய காலாட்படையை மன்னர்கள் பெரிதும் நம்பினர்

நாம் வாழும் இந்தப் ப்ரபஞ்சம் அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்றே நமக்குத் தெரியாமல் நம்மை எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறது, அதனால்தான் நாம் வாழக்கையில் ஆயிரம் ப்ரச்சனைகளை எதிர்கொண்டாலும் அவற்றிலிருந்து மீண்டு ஓரளவு இயல்பான, சுவாரஸ்யமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடிகிறது
"நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் நாளை நடக்கப் போவதும்” அனைத்தும் நன்மைக்கே என்று தினமும் நடப்போர் சங்கம் ஒன்றிற்கு தட்டி வாசகமாய் நான் எழுதிக் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது....!

நடக்க வேண்டும், நல்லவை எல்லாம் நடக்கவேண்டும்
நடப்பன எல்லாம் நன்மையாகவே நடக்கவேண்டும் என்று நம் மனது அடிக்கடி நினைக்கிறது, நடக்கும்....நிச்சயம் நடக்கும், நம்பிக்கைதானே வாழ்க்கை,எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம் என்பது பெரியோர் வாக்கு

”நடந்தால் நாடெங்கும் உறவு”
உண்மைதான் ...நடந்தே நாடெங்கும் உறவை ஏற்படுத்திக் கொண்ட பல பெரியோர்களின் அனுபவ பூர்வமான உண்மை வாசகம், நல்ல நோக்கத்துடன் நடந்து,நல்லவிதமாக நடந்து தாய்நாட்டுப் பாசத்துடன் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து மக்களின் மேலும் நேசத்துடனும்,பாசத்துடனும் மனித நேயத்தை மனதிலே தேக்கி அறவழியை உணர்த்தும் வண்ணமாக சத்திய வழியில். அஹிம்சாவழியில் நடந்தே அடிமைப்பட்டிருந்த நம் தேசத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க காரணமாய் இருந்தவர்கள் பலர் அவர்களில் மஹாத்மா காந்தி அவர்கள், வினோபாபாவே அவர்கள்,ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள்
நடந்தே ஒரு நாட்டுக்கு விடுதலை வாங்கி கொடுக்க முடியுமென்றால் நடக்கலாமே, நடக்க நடக்க நாடெங்கும் உறவு
உலகமே உறவு என்று எல்லைகள் விரிந்துகொண்டே செல்லும் வாய்ப்பு இருக்கிறது, நடப்போம்..
நடப்பதால் மற்றும் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது.?
எல்லா மனிதர்களுக்கும் நம் உடலில் கொழுப்பு, சர்க்கரை, போன்ற பொருட்கள் இருக்கின்றன ,ஆனால் அவைகள் இருக்க வேண்டிய விகிதாசார அளவு குறைந்தாலோ,அதிகரித்தாலோ அதை நோய் என்கின்றனர் மருத்துவர்கள்,

இருக்க வேண்டிய அளவுக்கு குறைந்தாலோ,அதிகரித்தாலோ, அது அளவுக்கு மிஞ்சுதல் என்று பொருள் கொள்ளலாம்
"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்" அல்லவோ
அப்படி அளவுக்கு மிஞ்சினால் உடனே வைத்தியர்கள்
”நான் சொல்வதைக் கேட்டு நட” என்கிறார்கள்
அதாவது நடந்தாலே அனேக வியாதிகள் குணமாகி விடுகின்றன என்று பொருள் கொள்ளலாம்
”ஆகவே நடந்தால் நாடெங்கும் உறவு”
நாம் இருந்தால்தானே நடப்போம், நடந்தால்தானே இருப்போம்
உறவுகள் பெருக வேண்டுமானால்,நடக்க வேண்டும், நல்லது நடக்கவேண்டும், நம்மால் அடுத்தவருக்கும் அடுத்தவரால் நமக்கும், நல்லது நடக்கவேண்டும்

இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில்“நடந்தாய் வாழி காவேரி” என்று புகழ்ந்திருக்கிறார்,அந்தப் பாடலை திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ”நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் கொழிக்க நடந்தாய் வாழி காவேரி” என்று வெங்கலக் குரலில் பாடியதைக் கேட்டிருக்கிறோம்

ஆறு பொங்கிப் ப்ரவாகமாய் ஓடுவதைக்கூட நடந்தாய் என்று வர்ணிக்கிறார்கள்,அப்படி காவிரி நடந்தே எத்தனை ஊர்களை,கிராமங்களை செழிக்க வைத்திருக்கிறாள்,
பதினெட்டாம் பெருக்கு என்றும் ஆடிப்பெருக்கு என்றும் கொண்டாடும் நாளில் பலவித சித்ரான்னங்களை படைத்து காவிரிக்கரையில் கொண்டு சென்று பல மக்களோடு பகிர்ந்து அருந்தி பொதுவுடமையை நம் மக்கள் வளர்த்துக்கொள்ள உதவுகிறாள், நடந்தால் பொதுவுடமை வளரும் என்றும் நிரூபிக்கிறாள்
நடந்தே மூவுலகும் சுற்றி நன்மை விளைவித்தவர் நாரதர் என்று சொல்வார்கள், நாரதருக்கு நாரதர் என்று ஏன் பெயர் தெரியுமா
நா--ரதம் ,அதாவது வாகனம் இல்லாதவர் என்று பொருள்
அவரே நடந்துதானே பல கலகங்களை செய்து நன்மை செய்திருக்கிறார் ஆகவே பெரியோர் சொல் கேட்டு நடப்போம்
கலகம் செய்ய வேண்டாம் நாரதர் கலகம் செய்தாலும் நல்ல நோக்கத்திலே செய்வதால் நன்மை விளைகிறது,நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது சொல்வழக்கு
நாம் கலகம் செய்தால் அது நன்மை விளைவிக்காது
நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளுவோம் நடப்போம்,

"அதே போல் படுத்தால் பாயும் பகை,"

ஒவ்வொரு மனிதரும் படுக்கவேண்டுமென்றால், ஒன்று இரவிலோ அல்லது பகலிலோ ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை முன்னிட்டுப் படுக்கலாம் வயதான பின்னரும் படுத்தால், அதாவது நோயில் படுத்தால் பாயும் பகையாகும்
பாய் எப்படி பகையாகிறது....?நோயினால் தாக்கப்பட்டு தன் சுய உணர்வே இல்லாமல்,அல்லது விபத்தில் அடிபட்டு சுயநினைவில்லாமல் ஒரே நிலையில் படுத்திருக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது அப்படிப் படுத்திருப்பவர்களுடைய உடலுறுப்புகளின் சீரான இயக்கம் தடைப்படுவதால் உடலில் பல இடங்களிலும், முதுகிலும் புண்ணாகும், இவற்றை படுக்கை காயங்கள் என்று மருத்துவத்திலே சொல்லுவார்கள் அதற்காக தண்ணீர் படுக்கை, காற்றுப் படுக்கை, என்றெல்லாம் எத்துணையோ விஞ்ஞான வசதிகள் வந்துவிட்டாலும், படுக்கையில் இருப்பவர்களுக்கு நாம் படுக்கையில் இருக்கிறோமே என்னும் நினைவே வியாதிகளை அதிகரிக்கும் மனோவியாதியாக துன்புறுத்தும்
”ஆகவே படுத்தால் பாயும் பகை”

இங்கு படுத்தால் என்பது சோம்பினால் என்றும்
பொருள் கொள்ளலாம், நாம் கொஞ்ஜம் அசந்தால் நம்மைக் கவிழ்க்க ஏராளமான சதி நடக்க ஆரம்பித்துவிடும்
அப்படி இருக்க படுக்கலாமா...?
தன்னுடைய மரணத்தை தக்ஷிணாயண காலத்திலிருந்து உத்திராயண காலம் வரையில் தள்ளிப் போட நினைத்த
பீஷ்மர் கூட தரையில் படுக்கவில்லை சரப் படுக்கையில் படுத்தார், ஏனென்றால் அவருடைய உடற்புண்கள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீளவும், மற்றும் சரங்களின் உறுத்துதல் இருந்து கொண்டே இருந்தால்தான் சோம்பாமல் இருக்க முடியும் என்றும்,
அதையும் தவிர அவருடைய தீர்க்க தரிசனம் மரணத்தையே
தள்ளிப் போட்டிருக்கிறது என்னும் மஹாபாரத செய்தி
நம்மை வியக்கவைக்கிறது, அந்த சரப் படுக்கை மூலமாக
அக்யூ பன்ச்சர் என்னும் விக்ஞான முறையை அப்போதே செயல் படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது
ஆகவே படுக்காதீர்கள் ,அப்படிப் படுக்க வேண்டுமானால்
நம்மை எப்போதும் எச்சரிக்கையாக இருக்கப் பணிக்குமாறு
செய்யப்பட்ட படுக்கையில் படுக்கலாம் ஆகவே
“படுத்தால் பாயும் பகை”
ஆமாம் படுத்தாலே காத்திருக்கும் பகை எல்லாம் பாயும்
என்பதைத்தான் பெரியவர்கள்
நடந்தால் நாடே உறவு படுத்தால் பாயும் பகை
என்று நம்மை எச்சரித்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது

எனக்கு இந்த ஆய்வை எழுதும்போதே தோன்றிய சந்தேகம் ஒன்று இருக்கிறது, கருநாகப் பாய் விரித்து கடலின் மேல் படுத்திருக்கும்
திரு நாரணனும் அதனால்தான் அவ்வப்போது பல அவதாரங்கள் எடுத்து நடக்க ஆரம்பித்தானோ என்று,
ராமனை காட்டுக்கு அழைத்து சென்று நடக்கவிட்டார் விஸ்வாமித்திரர்
கண்ணன் மஹாபாரதத்தில் தேரோட்டியாய் வரும் வரையில்
சாந்திபினி ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு நடந்தே காட்டிற்குப் போய் விறகுகள் சேகரித்தான், அனைத்து நற்காரியங்களையும் செய்தான் என்பது மஹாபாரதச் செய்தி


நடக்கும் நாலு கால் பிராணிகளாகவும் நரசிம்மமாகவும்
பல அவதாரங்கள் எடுத்தானோ என்று சந்தேகம் வருகிறது
அப்படியே சற்று நேரம் படுக்கலாம் என்று ஆதிசேஷன் மேல் படுத்தாலும் அவனைப் படுக்க விடாமல் கஜேந்திரன் நாராயணனனை ஆதிமூலமே என்றழைத்து படுக்கையிலிருந்து எழுப்பினான், ,ப்ரஹலாதன் கேட்கவே வேண்டாம்
அவ்வபோது நாராயணனனை எழுப்பிக் கொண்டே இருந்தான்
மஹாபலியோ வாமனாவதாரமாய் நாராயணனை நடக்க விட்டான் இப்படி பக்தர்கள் நாராயாணனை படுக்க விடாமல்
அழைத்துக் கொண்டே இருக்கின்றனரோ என்று சந்தேகம் வருகிறது

ஸ்ரீமன் நாராயணன் கொண்டிருப்பது யோக நித்திரை
என்று சொல்லுவார்கள், யோக நித்திரை கொண்டிருக்கும் நாராயணனையே எழுப்பிக்கொண்டே இருக்கிறார்களே
அப்படியானால் போக நித்திரை கொள்ளலாமோ...கூடவே கூடாது என்பதை இப்பழமொழி நன்கு உணர்த்துகிறது


அடடா பெரியவர்கள் தீர்க்கதரிசிகள்தான்
ஆராய முயலுவோம் நன்மையென்றால்
அதன் படி நடக்க முயலுவோம்
படுக்க வேண்டாம்.

அன்புடன்
தமிழ்த்தேனீ



பழமொழிகள் ஆய்வு- 1. மூத்தது மோழை இளையது காளை

அன்புள்ள நண்பர்களே

பழுத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் ஒவ்வொரு அனுபவத்தின் வாயிலாகவும் அடிக்கடி உபயோகப் படுத்தப் படும் சொல் வழக்குகள் பழமொழிகள் என்று பெயர் பெற்றன

எவ்வளவு அருமையான பழமொழிகள், பல பெரியவர்கள் அவ்வப்போது பல அருமையான பழமொழிகளைச் சொல்லுகிறார்கள், இப்போது காலம் இருக்கும் இருப்பில்,
நவீன யுகத்தில்,விஞ்ஞான வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இந்தக்காலத்தில், பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம் யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள், என்கிற எண்ணம் தலை தூக்கினாலும், நல்லதை சொன்னால் எப்பொதும் நம்மவர்கள் புறிந்து கொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையால் எழுந்த பக்குவத்தோடு எழுதுகிறேன்

பழமொழிகள் எப்படி ஏற்பட்டன என்று ஆராய்ந்தால்,
எல்லாப் பழமொழிகளுமே அனுபவத்தால் ஏற்பட்டன என்று
ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கிறது,

பழம் என்றாலே இனிப்பு ,சுவை, கனிவு, முற்றிய நிலை, மீண்டும் பல மரங்களுக்கு விதைகள் அளிக்கவிருக்கும் காலச் சுழற்சி, ப்ரபஞ்ஜ வளர்ச்சி, என்றெல்லாம் பொருள் வருகிறது, அனுபவ முதிர்வே பழம் , அந்த அனுபவத்தால் விளைந்த, அறிவால் வெளிப்படும் சொற்களை பழமொழி என்று பொருள் கொள்ளலாம், அப்படியானால் எல்லாப் பழமொழிகளுமே, சொல்வழக்குகளுமே, ஒன்று உண்மையானதாக பயனுள்ளதாக இருக்கவேண்டும், அல்லது..பெரியவர்கள் உணர்ந்து சொன்ன பழமொழிகள் ,சற்றே திரிந்து அர்த்தம் வேறாகி தவறான பொருள் தருமாறு மாறுபட்டு இருக்க வேண்டும்,
அப்படி பல பழமொழிகள் இருக்கின்றன,
அந்தப் பழமொழிகளை ஆராய்வோம்,

முதல் பழமொழி : மூத்தது மோழை இளையதுகாளை
இந்தப் பழமொழி எந்த வகை என்று பார்ப்போம்,இந்தப் பழமொழியில் " மூத்தது மோழை என்னும் முதல் பகுதியை எடுத்துக் கொண்டால் என்ன பொருளில் ”மூத்தது மோழை” என்று கூறினார்கள் என்று நம்மைச் சிந்திக்கவைக்கிறது, அந்தச்சொல் வழக்கு நம்மைச் சுற்றி நடக்கும் நடை முறைகளை கவனிக்கத் தூண்டுகிறது, நம்மைச் சுற்றி நடக்கும் நடப்புகளை கவனித்தாலே, அது பலவகையான அனுபவங்களை அளிக்குமே.

நம் நாகரீகமே நீர்நிலைகளின் அருகே உள்ள கிராமங்களில் பிறந்து வளர்ந்தவைதானே,விவசாயம் தானே முதல் தொழில், வாழ்வுக்கு முதல் ஆதாரமான விவசாயத்தில் மூத்த விவசாயிகள் பல பழமொழிகளை அளித்திருக்கிறார்கள்
வயல் வெளிகளில், பயிருக்கு வேண்டிய தண்ணீரை சேமித்து வைக்கவும், நில உரிமையாளரின் எல்லையைக் குறிக்கவும், வரப்பு கட்டுவார்கள், அந்த வரப்புகளுக்கு அடியில் வழு- வழுப்பான துவாரங்கள் இருக்கும், அந்த துவாரங்களுக்கு ”மோழை” என்று பெயர், வரப்பிலே பாய்ச்சும் தண்ணீர் நிற்காமல் போய்க்கொண்டே இருந்தால், அனுபவமிக்க விவசாயம் செய்யும் பெரியவர்கள், ஏதோ ஒரு இடத்தில் மோழை இருக்கிறது, அந்த மோழையைக் கண்டுபிடித்து அடைத்துவிட்டால் வரப்பில் தண்ணீர் நிற்கும் என்று சொல்லுவார்கள்,அப்படிப்பட்ட அனுபவசாலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சொல் வழக்கே இந்தப் பழமொழி, அந்த மோழை எப்படி வழுவழுப்பாக இருந்து கொண்டு தண்ணீரையும் தக்கவிடாமல் செய்கிறதோ, அதுபோல மூத்த குழந்தைகள், மனதிடமில்லாமல், விவேகமில்லாமல், தைரியமாக நிமிர்ந்து நிற்காமல் இருப்பார்கள் என்பது போன்ற பொருள் வருமாறு இந்தப் பழமொழி அமைந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது,



அதே போல் இளையது காளை என்பர், காளை என்றாலே இளமை,வலிமை,வேகம்,எதிர்கொள்ளும் திறமை,எதையும் எதிர்த்து போராடும் மனப்பான்மை ,என்றெல்லாம் பொருள் வரும், ஆகவே மூத்ததாக தண்ணீரைத் தக்கவிடாமல் செய்யும் மோழையை அடைத்துவிட்டு,அடுத்ததாக காளையை பயன்படுத்தி ஏர் உழுதால்தான் பலன் வரும் என்னும் பொருள்பட சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது,

அப்படி ஆராய்ந்தால், நடைமுறை வாழ்வில் இந்தச் சொல் உண்மையோ என்று தோன்றுகிறது, பல இடங்களில் மூத்த குழந்தையை விட,அடுத்த குழந்தை இன்னும் சற்று தூக்கலான, புத்திசாலியாக,சூட்டிகையாக, துருதுருப்பாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது,இதற்கு விஞ்ஜான ரீதியாக ஏதேனும் விளக்கம் இருக்குமோ என்று ஆராய்ந்தால்

மனிதனின் உடற்கூறு, மனக்கூறு இரண்டையும் ஆராய வேண்டி இருக்கிறது, ஒவ்வொரு மனிதனும் நாகரீக கட்டுப்பாடு காக்க வேண்டி,பருவ விழிப்பு ஏற்பட்டு பல
காலம் வரையில்,தன்னுடைய சுய கட்டுப்பாட்டைக் காக்கவேண்டிய ,அவசியத்திலிருப்பதால் தன்னுடைய
இயல்பான காமத்தை, மிக இயல்பான உடல் இச்சையை
கட்டுப் படுத்திக் கொண்டு வாழவேண்டிய சூழ்நிலையில்
இருக்கிறார்கள், அப்படி அடக்கி வைக்கப் பட்ட காமம்
உடல் இச்சை , அதைத் தணித்துக் கொள்ள தனக்கென்று ஒரு துணை கிடைத்தவுடன் முழு வேகத்துடன் செயல் பட ஆரம்பிக்கிறது, கட்டவிழ்த்துவிட்ட காளை போல்.......

திருமணம் ஆன உடனே அன்பு பாசம், காதல்,நேசம் , அனைத்தும் இருந்தும்..ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் அவற்றையெல்லாம் தாண்டி காமத்துக்கு முதலிடம்
தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் படுகின்றனர்
இது இயல்பு ,தவறென்று சொல்லவில்லை, இங்கே சற்று நிதானப்பட்டு யோசிக்க வேண்டியுள்ளது,


அப்படி தம்பதிகள் இருவருமே உணர்ச்சி பூர்வமாக
செயல்படும்போது அங்கே காதல், பாசம், நேசம்,அன்பு
என்று எல்லாம் இருந்தாலும் அவைகள் பின்னுக்கு
தள்ளப்பட்டு காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கிறது
அப்படி காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கும்
அந்த சேர்க்கையில் மனித உடலின் உணர்வுகள்
நரம்புகள், ரத்தம், ஆண்மை ,பெண்மை போன்ற பல கலவைகள் செயல் பட்டாலும் உள்ள பூர்வமாக ,புத்தி பூர்வமாக அந்த சேர்க்கை நடைபெற,சந்தர்ப்பம் மிகக் குறைவு என்பதே என்னுடைய கணிப்பு, அதனால் அப்போது தோன்றும் கரு காமத்தின் அடைப்படையில் விதைக்கப் பட்ட கரு ,
அப்படிப் பிறக்கும் முதல் குழந்தைகளுக்கு உணர்ச்சி பூர்வமான முடிவுகள் எடுக்க இயலும்,அறிவுபூர்வமாக சிந்திக்க இயலாது

உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் முடிவுகள் சரியான விளைவுகளைத் தருவதில்லை என்பது பெரியோர்களின் அறிவாளிகளின் ஆராய்ச்சி பூர்வமான முடிவு,ஆகவே
மூத்தது மோழை என்ற பழமொழி சரியானதாக இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது

அது மட்டுமல்ல, மனரீதியாக உடல் ரீதியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும், இயல்பாக எந்த ஒரு மனக்கிலேசமும் இல்லாமல், இல்லறத்தை ஆரம்பித்து மனதால் கலந்து பிறகு
உடலாலும் கலக்க,எளிதான வழியே திருமணம் என்னும் அங்கீகாரம், பெரியவர்கள் கூடி ஒரு நல்ல நாளைத்தேர்ந்து முதல் இரவு என்று அழகாக பெயர் சூட்டி இந்த வைபவத்துக்கு ஏற்பாடு செய்து மணமக்களை அனுமதிக்கிறார்கள்
அப்படி அனுமதிக்கப்பட்ட உரிமையோடு மணமக்கள் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் முறையான இல்லற உறவை
அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்,

அப்படி இல்லாமல் தாங்களாகவே சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பருவ ஈர்ப்பை காதல் என்று எண்ணி,காமத்தின் வலையில் விழுந்து சூழ்நிலை அழுத்தத்தால்,காமத்தின் இயல்பான வெறியினால் மட்டுமே இல்லற சுகத்தை அனுபவித்து, வேறு வழி இல்லாமல் திருமணத்தில்
மாட்டிக்கொள்பவர்களுக்கும்,அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் ஏமாற்றப் பட்டு அவல வாழ்வு வாழும் பெண்களுக்கும் பிறக்கும் குழந்தைகள் உள்ளத்தாலோ, உடலாலோ ஊனமான குழந்தைகளாக பிறக்கின்றன என்பது
அனுபவ பூர்வமான உண்மை

இரண்டாவதாக அதே மணமக்கள் ஒரு குழந்தை பெற்ற
நிலையில் ஏற்படும் அனுபவங்களை அடிப்படையாக வைத்து அடுத்த குழந்தை பிறப்பை கொஞ்ஜம் தள்ளிப் போடுக்கிறார்கள்
அங்கே அந்த தம்பதிகளின் காமம் சற்றே மட்டுப்பட்டு’ திட்டமிடுதல் உருவாகிறது,முதல் குழந்தைமேல்,இல்லறத் துணையின் மேல் பாசம் , அன்பு, கருணை, எல்லாம் அதிகரிக்கிறது,

எப்போது திட்டமிடுதல் உருவாகிறதோ,அங்கு விவேகம் தலையெடுக்கிறது. பெண்மைக்கும்,ஆண்மைக்கும் வெற்றி பெற்று விட்டோம் என்கிற தைரியம்வருகிறது,
அதற்குப் பிறகு அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தை
மூத்த குழந்தையை விட சற்று அறிவாளியாகவோ, விவேகமாகவோ,,தைரியமாகவோ இருக்க,வாய்ப்புக்கள் அதிகமாகிறது, பல வீடுகளில் கவனித்திருக்கிறேன் மூத்த குழந்தைக்கு, அடுத்த குழந்தையின் சுட்டித்தனங்களால், அறிவு சார்ந்த புத்திசாலித்தனமான விளையாட்டுக்களால்,விவேகமான
செய்கைகளால், எல்லோரையும் கவரும் வண்ணம் திறமையோடிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்




பல மூத்த குழந்தைகளும் புத்திசாலியாக இருந்ததுண்டு,
இருப்பதுண்டு, அது விதிவிலக்கு என்றே படுகிறது..!
இயல்பாகவே மோழை இல்லாத வரப்புகளும் இருத்தலைப் போல!!!!


ஆகவே பெரியோர் சொல்லை மதித்து வாழலாம் அவற்றில் நல்ல பொருள் இருக்கும் என்று வாழ்தலில் தவறில்லை,
பழமொழிகளை பெரியோர் வாக்காக மதிக்கலாம்,
அல்லது ஆராய்ச்சி செய்துதேர்ந்தெடுத்து, பயன்பெறலாம்...!!

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com
முகவரி: பழைய எண் 152, புதிய எண் ஏஐ- 58,
ஏ3, இரண்டாவது தளம், சோனக்ஸ்வப்னா அடுக்ககம்
7 வது ப்ரதான சாலை, அண்ணா நகர் ,
சென்னை 600040

கைப்பேசி: 9840884088
இல்லம் : 044-42057923