திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 12, 2009

பழமொழிகள் ஆய்வு- 1. மூத்தது மோழை இளையது காளை

அன்புள்ள நண்பர்களே

பழுத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்களால் ஒவ்வொரு அனுபவத்தின் வாயிலாகவும் அடிக்கடி உபயோகப் படுத்தப் படும் சொல் வழக்குகள் பழமொழிகள் என்று பெயர் பெற்றன

எவ்வளவு அருமையான பழமொழிகள், பல பெரியவர்கள் அவ்வப்போது பல அருமையான பழமொழிகளைச் சொல்லுகிறார்கள், இப்போது காலம் இருக்கும் இருப்பில்,
நவீன யுகத்தில்,விஞ்ஞான வளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் இந்தக்காலத்தில், பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம் யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள், என்கிற எண்ணம் தலை தூக்கினாலும், நல்லதை சொன்னால் எப்பொதும் நம்மவர்கள் புறிந்து கொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையால் எழுந்த பக்குவத்தோடு எழுதுகிறேன்

பழமொழிகள் எப்படி ஏற்பட்டன என்று ஆராய்ந்தால்,
எல்லாப் பழமொழிகளுமே அனுபவத்தால் ஏற்பட்டன என்று
ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கிறது,

பழம் என்றாலே இனிப்பு ,சுவை, கனிவு, முற்றிய நிலை, மீண்டும் பல மரங்களுக்கு விதைகள் அளிக்கவிருக்கும் காலச் சுழற்சி, ப்ரபஞ்ஜ வளர்ச்சி, என்றெல்லாம் பொருள் வருகிறது, அனுபவ முதிர்வே பழம் , அந்த அனுபவத்தால் விளைந்த, அறிவால் வெளிப்படும் சொற்களை பழமொழி என்று பொருள் கொள்ளலாம், அப்படியானால் எல்லாப் பழமொழிகளுமே, சொல்வழக்குகளுமே, ஒன்று உண்மையானதாக பயனுள்ளதாக இருக்கவேண்டும், அல்லது..பெரியவர்கள் உணர்ந்து சொன்ன பழமொழிகள் ,சற்றே திரிந்து அர்த்தம் வேறாகி தவறான பொருள் தருமாறு மாறுபட்டு இருக்க வேண்டும்,
அப்படி பல பழமொழிகள் இருக்கின்றன,
அந்தப் பழமொழிகளை ஆராய்வோம்,

முதல் பழமொழி : மூத்தது மோழை இளையதுகாளை
இந்தப் பழமொழி எந்த வகை என்று பார்ப்போம்,இந்தப் பழமொழியில் " மூத்தது மோழை என்னும் முதல் பகுதியை எடுத்துக் கொண்டால் என்ன பொருளில் ”மூத்தது மோழை” என்று கூறினார்கள் என்று நம்மைச் சிந்திக்கவைக்கிறது, அந்தச்சொல் வழக்கு நம்மைச் சுற்றி நடக்கும் நடை முறைகளை கவனிக்கத் தூண்டுகிறது, நம்மைச் சுற்றி நடக்கும் நடப்புகளை கவனித்தாலே, அது பலவகையான அனுபவங்களை அளிக்குமே.

நம் நாகரீகமே நீர்நிலைகளின் அருகே உள்ள கிராமங்களில் பிறந்து வளர்ந்தவைதானே,விவசாயம் தானே முதல் தொழில், வாழ்வுக்கு முதல் ஆதாரமான விவசாயத்தில் மூத்த விவசாயிகள் பல பழமொழிகளை அளித்திருக்கிறார்கள்
வயல் வெளிகளில், பயிருக்கு வேண்டிய தண்ணீரை சேமித்து வைக்கவும், நில உரிமையாளரின் எல்லையைக் குறிக்கவும், வரப்பு கட்டுவார்கள், அந்த வரப்புகளுக்கு அடியில் வழு- வழுப்பான துவாரங்கள் இருக்கும், அந்த துவாரங்களுக்கு ”மோழை” என்று பெயர், வரப்பிலே பாய்ச்சும் தண்ணீர் நிற்காமல் போய்க்கொண்டே இருந்தால், அனுபவமிக்க விவசாயம் செய்யும் பெரியவர்கள், ஏதோ ஒரு இடத்தில் மோழை இருக்கிறது, அந்த மோழையைக் கண்டுபிடித்து அடைத்துவிட்டால் வரப்பில் தண்ணீர் நிற்கும் என்று சொல்லுவார்கள்,அப்படிப்பட்ட அனுபவசாலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சொல் வழக்கே இந்தப் பழமொழி, அந்த மோழை எப்படி வழுவழுப்பாக இருந்து கொண்டு தண்ணீரையும் தக்கவிடாமல் செய்கிறதோ, அதுபோல மூத்த குழந்தைகள், மனதிடமில்லாமல், விவேகமில்லாமல், தைரியமாக நிமிர்ந்து நிற்காமல் இருப்பார்கள் என்பது போன்ற பொருள் வருமாறு இந்தப் பழமொழி அமைந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது,அதே போல் இளையது காளை என்பர், காளை என்றாலே இளமை,வலிமை,வேகம்,எதிர்கொள்ளும் திறமை,எதையும் எதிர்த்து போராடும் மனப்பான்மை ,என்றெல்லாம் பொருள் வரும், ஆகவே மூத்ததாக தண்ணீரைத் தக்கவிடாமல் செய்யும் மோழையை அடைத்துவிட்டு,அடுத்ததாக காளையை பயன்படுத்தி ஏர் உழுதால்தான் பலன் வரும் என்னும் பொருள்பட சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது,

அப்படி ஆராய்ந்தால், நடைமுறை வாழ்வில் இந்தச் சொல் உண்மையோ என்று தோன்றுகிறது, பல இடங்களில் மூத்த குழந்தையை விட,அடுத்த குழந்தை இன்னும் சற்று தூக்கலான, புத்திசாலியாக,சூட்டிகையாக, துருதுருப்பாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது,இதற்கு விஞ்ஜான ரீதியாக ஏதேனும் விளக்கம் இருக்குமோ என்று ஆராய்ந்தால்

மனிதனின் உடற்கூறு, மனக்கூறு இரண்டையும் ஆராய வேண்டி இருக்கிறது, ஒவ்வொரு மனிதனும் நாகரீக கட்டுப்பாடு காக்க வேண்டி,பருவ விழிப்பு ஏற்பட்டு பல
காலம் வரையில்,தன்னுடைய சுய கட்டுப்பாட்டைக் காக்கவேண்டிய ,அவசியத்திலிருப்பதால் தன்னுடைய
இயல்பான காமத்தை, மிக இயல்பான உடல் இச்சையை
கட்டுப் படுத்திக் கொண்டு வாழவேண்டிய சூழ்நிலையில்
இருக்கிறார்கள், அப்படி அடக்கி வைக்கப் பட்ட காமம்
உடல் இச்சை , அதைத் தணித்துக் கொள்ள தனக்கென்று ஒரு துணை கிடைத்தவுடன் முழு வேகத்துடன் செயல் பட ஆரம்பிக்கிறது, கட்டவிழ்த்துவிட்ட காளை போல்.......

திருமணம் ஆன உடனே அன்பு பாசம், காதல்,நேசம் , அனைத்தும் இருந்தும்..ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் அவற்றையெல்லாம் தாண்டி காமத்துக்கு முதலிடம்
தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் படுகின்றனர்
இது இயல்பு ,தவறென்று சொல்லவில்லை, இங்கே சற்று நிதானப்பட்டு யோசிக்க வேண்டியுள்ளது,


அப்படி தம்பதிகள் இருவருமே உணர்ச்சி பூர்வமாக
செயல்படும்போது அங்கே காதல், பாசம், நேசம்,அன்பு
என்று எல்லாம் இருந்தாலும் அவைகள் பின்னுக்கு
தள்ளப்பட்டு காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கிறது
அப்படி காமம் மட்டுமே முதல் இடம் வகிக்கும்
அந்த சேர்க்கையில் மனித உடலின் உணர்வுகள்
நரம்புகள், ரத்தம், ஆண்மை ,பெண்மை போன்ற பல கலவைகள் செயல் பட்டாலும் உள்ள பூர்வமாக ,புத்தி பூர்வமாக அந்த சேர்க்கை நடைபெற,சந்தர்ப்பம் மிகக் குறைவு என்பதே என்னுடைய கணிப்பு, அதனால் அப்போது தோன்றும் கரு காமத்தின் அடைப்படையில் விதைக்கப் பட்ட கரு ,
அப்படிப் பிறக்கும் முதல் குழந்தைகளுக்கு உணர்ச்சி பூர்வமான முடிவுகள் எடுக்க இயலும்,அறிவுபூர்வமாக சிந்திக்க இயலாது

உணர்ச்சி பூர்வமாக எடுக்கும் முடிவுகள் சரியான விளைவுகளைத் தருவதில்லை என்பது பெரியோர்களின் அறிவாளிகளின் ஆராய்ச்சி பூர்வமான முடிவு,ஆகவே
மூத்தது மோழை என்ற பழமொழி சரியானதாக இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது

அது மட்டுமல்ல, மனரீதியாக உடல் ரீதியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும், இயல்பாக எந்த ஒரு மனக்கிலேசமும் இல்லாமல், இல்லறத்தை ஆரம்பித்து மனதால் கலந்து பிறகு
உடலாலும் கலக்க,எளிதான வழியே திருமணம் என்னும் அங்கீகாரம், பெரியவர்கள் கூடி ஒரு நல்ல நாளைத்தேர்ந்து முதல் இரவு என்று அழகாக பெயர் சூட்டி இந்த வைபவத்துக்கு ஏற்பாடு செய்து மணமக்களை அனுமதிக்கிறார்கள்
அப்படி அனுமதிக்கப்பட்ட உரிமையோடு மணமக்கள் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் முறையான இல்லற உறவை
அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்,

அப்படி இல்லாமல் தாங்களாகவே சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பருவ ஈர்ப்பை காதல் என்று எண்ணி,காமத்தின் வலையில் விழுந்து சூழ்நிலை அழுத்தத்தால்,காமத்தின் இயல்பான வெறியினால் மட்டுமே இல்லற சுகத்தை அனுபவித்து, வேறு வழி இல்லாமல் திருமணத்தில்
மாட்டிக்கொள்பவர்களுக்கும்,அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் ஏமாற்றப் பட்டு அவல வாழ்வு வாழும் பெண்களுக்கும் பிறக்கும் குழந்தைகள் உள்ளத்தாலோ, உடலாலோ ஊனமான குழந்தைகளாக பிறக்கின்றன என்பது
அனுபவ பூர்வமான உண்மை

இரண்டாவதாக அதே மணமக்கள் ஒரு குழந்தை பெற்ற
நிலையில் ஏற்படும் அனுபவங்களை அடிப்படையாக வைத்து அடுத்த குழந்தை பிறப்பை கொஞ்ஜம் தள்ளிப் போடுக்கிறார்கள்
அங்கே அந்த தம்பதிகளின் காமம் சற்றே மட்டுப்பட்டு’ திட்டமிடுதல் உருவாகிறது,முதல் குழந்தைமேல்,இல்லறத் துணையின் மேல் பாசம் , அன்பு, கருணை, எல்லாம் அதிகரிக்கிறது,

எப்போது திட்டமிடுதல் உருவாகிறதோ,அங்கு விவேகம் தலையெடுக்கிறது. பெண்மைக்கும்,ஆண்மைக்கும் வெற்றி பெற்று விட்டோம் என்கிற தைரியம்வருகிறது,
அதற்குப் பிறகு அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தை
மூத்த குழந்தையை விட சற்று அறிவாளியாகவோ, விவேகமாகவோ,,தைரியமாகவோ இருக்க,வாய்ப்புக்கள் அதிகமாகிறது, பல வீடுகளில் கவனித்திருக்கிறேன் மூத்த குழந்தைக்கு, அடுத்த குழந்தையின் சுட்டித்தனங்களால், அறிவு சார்ந்த புத்திசாலித்தனமான விளையாட்டுக்களால்,விவேகமான
செய்கைகளால், எல்லோரையும் கவரும் வண்ணம் திறமையோடிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்
பல மூத்த குழந்தைகளும் புத்திசாலியாக இருந்ததுண்டு,
இருப்பதுண்டு, அது விதிவிலக்கு என்றே படுகிறது..!
இயல்பாகவே மோழை இல்லாத வரப்புகளும் இருத்தலைப் போல!!!!


ஆகவே பெரியோர் சொல்லை மதித்து வாழலாம் அவற்றில் நல்ல பொருள் இருக்கும் என்று வாழ்தலில் தவறில்லை,
பழமொழிகளை பெரியோர் வாக்காக மதிக்கலாம்,
அல்லது ஆராய்ச்சி செய்துதேர்ந்தெடுத்து, பயன்பெறலாம்...!!

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com, http://thamizthenee.blogspot.com
முகவரி: பழைய எண் 152, புதிய எண் ஏஐ- 58,
ஏ3, இரண்டாவது தளம், சோனக்ஸ்வப்னா அடுக்ககம்
7 வது ப்ரதான சாலை, அண்ணா நகர் ,
சென்னை 600040

கைப்பேசி: 9840884088
இல்லம் : 044-42057923Post a Comment