திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, February 2, 2009

தலைக்கனம் யாருக்கு வந்தாலும் அது நிச்சயமாய் அழிவைத் தேடித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்னும் முதிர் சொல் எவ்வளவு உண்மையான அறிவுபூர்வமான, சொல்வழக்கு என்று யோசிக்கத் தோன்றுகிறது
என்ன ஆயிற்று திடீரென்று தத்துவமாய் உதிர்க்கிறானே இவன் என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது,என்ன செய்ய( பழைய ) திருவிளையாடல் என்னும் திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் தருமி என்னும் கதாபாத்திரத்தில் தோன்றி தனியாகப் புலம்பும் காட்சி ஒன்று வரும், அதுபோல தனியாக யோசித்துக்கொண்டே இருந்ததன் விளைவுதான் இது
நான் கூறப் போகும் விஷயத்துக்கு இவ்வளவு பீடிகை போடவேண்டியிருக்கிறது ,ஏனென்றால் பாதிக்கப் பட்ட பல நடுத்தரக் குடும்பங்களின் இன்றைய நிலையை எண்ணிப்பார்த்து வருத்தப்பட்டுதான் எழுதுகிறேன் , யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கோடுதான் இப்படி தனியாக சிந்தித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்

ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து தமிழ் எழுத வரும் என்னும் தகுதியினால் மட்டும் எழுதவில்லை, இதைப் படிப்பவர்கள் இந்தக் கட்டுரையின் நோக்கத்தை சரியாகப் புறிந்து கொள்ளவேண்டுமே,புறிந்து கொண்டு இனி வருங்காலத்திலாவது தங்களின் தவறான அணுகு முறையை மாற்றிக் கொள்ளவேண்டுமே ,அப்படி மாற்றிக் கொள்ளாவிட்டால் இன்னும் பாதிக்கப் படுவார்களே என்னும் உயரிய நோக்கத்தோடுதான் இக்கட்டுரையை எழுதுகிறேன்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என் நோக்கமல்ல,மீண்டும் இது போன்ற இழி நிலைக்கு நாம் தள்ளப்படாமல் இருக்க வேண்டுமே என்னும் நியாயமான கவலையால்தான் எழுதுகிறேன்
சரி சரி பீடிகை போதும் விஷயத்துக்கு வாய்யா என்று நீங்கள் முணுமுணுப்பதும் காதில் விழுவதால் இதோ இப்போதே விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்,

முன்பெல்லாம் பீ ஏ படித்து விட்டால் உடனே வீட்டு வாசலில், பெயரைப் போட்டு பக்கத்திலேயே பீ ஏ என்று போட்டுக் கொள்ளுவது வழக்கத்தில் இருந்தது, ஆனால் அப்போது பட்டப் படிப்பு படித்து தேறுவது என்பது மிகவும் கடினமான செயலாக கருதப்பட்டது, இன்றைய நிலை அப்படி இல்லை, அதிகம் பேர் படித்தவர்களாகவும் அதுவும் இரண்டு அல்லது மூன்று அதற்கும் மேலே பல பட்டப் படிப்புகளைப் படித்துவிட்டு வேலக்காக பல பட்டதாரிகள் அலைந்து கொண்டிருக்கும் நிலை,

ஒரு நிலையில் பார்த்தால் படித்தவர்கள் அதிகம் பேர் என்று நினைக்கையில் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், படித்துவிட்டு வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்களையும்,யுவதிகளையும் பார்க்கும் போது மனதுக்கு வருத்தமாயிருக்கிறது,சரியான வேலை வாய்ப்புகள் உருவாக்காமல் நம் யுவதிகளையும், இளைஞர்களையும் தவிக்க விட்டோம் நாம் என்று எண்ணும்போது யாரை நோவது என்றே புரியவில்லை, ஆனாலும் காலப்போக்கில் இந்த நிலையும் மாறி ஓரளவு வேலைக் கிடைக்க ஆரம்பித்தது,ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்னும் நிலை ,

நம் நாட்டில் படித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலையோ அல்லது வருமானமோ கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தனர்,குறிப்பாக நடுத்தர வர்கத்து யுவதிகளும், இளைஞர்களும்,
கணிணிப் பயன்பாடு பெருத்து ,கணிணி சார்ந்த தொழிலகங்கள் பெருகியவுடன், அந்த நிறுவனங்கள் நன்றாகப் படிக்கும் இளைஞர்களையும், யுவதிகளையும் அவர்கள் கல்லூரிக்கே வந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளித்து படித்து முடித்தவுடன் அவர்களை நல்ல வருமானமும் அளித்து வேலையும் கொடுப்பதாக வாக்களித்து தங்கள் நிறுவனத்தை போட்டியில் ஈடுபட்டு வெற்றி கொள்ள தயாராயின, அந்த நேரத்தில் என் ஐ ஐ டீ,சீஎஸ் ஐ, போன்ற கணினி நுட்பங்கள்கற்றுக்கொடுக்கும் கல்வியகங்களை ஆரம்பித்து அவர்களும் நன்றாகத்தேர்ந்து நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு,மாணவிகளுக்கு ஏற்ற நல்ல வேலையையும் , வருமானத்தையும் அளிக்கக் கூடிய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நல்ல பணியினைப் பெற்றுத் தந்தார்கள்,
இவை போன்ற நடவடிக்கைகள் நடுத்தர வர்கத்து படித்த இளைஞர்களுக்கும்,யுவதிகளுக்கும் ஒரு,வெளிச்சப் புள்ளியாக வானில் தோன்றிய அதிர்ஷ்ட நக்ஷத்திரமாக உருவாகி கணிணி நுணுக்கங்கள் கற்றவர்களுக்கு வாழ்க்கை நடைமுறையிலேயே ஒரு பெரிய மாறுதலை தந்தது,வசந்தம் வீச்த் தொடங்கியது ,நடுத்தர வர்கத்து மக்களும்,பல பெற்றோரும் சற்றே மூச்சுவிட்டு நிமிர்ந்தனர் என்றால் அது மிகையாகாது,

ஏதோ ஒரு வெளிச்சப் புள்ளி அவர்களுக்கு கிடைத்தது,அதைப் பற்றிக் கொண்டு வாழ்வின் உயர்ந்த நிலைக்கு,அதாவது மற்ற தொழில் வல்லுனர்களுக்கெல்லாம் கிடைப்பதைவிட வசதியான வாழ்க்கையும் பொருளாதாரமும், சமூக மரியாதையும் கிடைக்க ஆரம்பித்தது கணிணி நுணுக்கம் தெரிந்த யுவதிகளுக்கும், இளைஞர்களுக்கும்,
சரி ஏதோ வாழ்வில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உதவிக் கரம், கை நீட்டி வா என்றழைத்து கைப் பிடித்து தூக்கிவிட்டு உயிரைக் காப்பாற்றியதும் அல்லாமல்அழைத்துச் சென்று ஒரு தங்கப் புதையலையே கண்பித்து ராஜ மரியாதைக்கு உரியவராக ஆக்கி விட்டது பேரதிசியம் அல்லவா, அப்படிப்பட்ட பேரதிசியம் நடக்கும் போது அந்த அதிசியத்துக்கு ஆட்பட்டவர்கள் தங்களுடைய பழைய நிலையை மனதில் கொண்டு அவர்களைவிட நலிந்தவருக்கு உதவிகள் செய்து அவர்களையும் கை தூக்கி விட்டிருந்தால் நாடே மகிழ்ச்சியாய் இருந்திருக்குமே,

மற்ற துறைகளில் பணிபுரிந்து வாழ்க்கையின் எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல், வருமானம் பற்றாமல் களைத்துப் போன மனங்களுக்கு சொந்தக்காரர்கள் கணிணித் துறைகளில் பணிபுரியும் இந்த யோகக்கார யுவதிகளையும், இளைஞர்களையும் பார்த்துப் பெருமூச்சு விட்டு,

இந்தக் கணிணித் துறை வல்லுனர்கள் தாங்கள் பொருள் அதிகமாக ஈட்டும் காரணத்தால் அநியாய விலை சொன்னாலும் தங்களுக்கு அதைப்பற்றிய கவலையில்லை ,தங்கள் வசதியே முக்கியம் என்னும் மனோபாவத்தில் அதிகமாய் விலை கொடுத்து வாங்கிக் குவித்த சொத்துக்கள் ஏராளம், இந்த நிலையை கவனித்துக்கொண்டே இருந்த பொருளீட்டும் வல்லுனர்களான இடைத்தரகர்கள் பல விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு மொத்த பணத்தைக் கொடுத்து பல ஆயிரம் ஏக்கராக்களை வளைத்துப்போட்டு அவைகளை வீடுகட்டும் நிலமாக,பிரித்து அநியாய விலைக்கு இந்தக் கணிணித்துறை வல்லுனர்களின் பலமாத வருமானத்தை மிக எளிதாக அவர்கள் கையகப்படுத்திக்கொண்டனர் என்பது உண்மை, இந்த நிலையால் ஒரு பக்கம் உண்மையான சொந்தக் காரர்களாகிய விவசாயிகள், நில,வீட்டு உரிமையாளர்கள் மறு பக்கம் கணிணித் துறை வல்லுனர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி கொள்ளையடித்தது இடைத்தரகர்களே என்றாலும் பழி என்னவோ கணிணித்துறை வல்லுனர்கள் மீதுதான் விழுந்தது,

பல வீட்டு உரிமையாளர்களிடமிருந்துவருங்காலத்தில் பொருளாதார நிலைமைகள் எப்படி மாறுமோ என்கிற முன் யோசனையின்றி இவர்கள் செய்த இச்செயலால், கட்டிடத் துறையிலிருந்து அனைத்து துறைகளிலும் இவர்களால்தான் நிலத்தின் விலை, வீட்டு வாடகை , அடுக்குமாடிக் கட்டிடங்களின் விலை, மற்ற அத்யாவசியப் பொருட்களின் விலை அனைத்து விலையேறிவிட்டது, இந்த கணினித் துறையில் வேலை செய்வோர்தான் மொத்த விலையேற்றத்துக்கும் காரணம் என்னும் மனோபாவத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும் அளவுக்கு இவர்களது நடவடிக்கைகள் ப்ரபலப்படுத்தப் பட்டது,
இவற்றையெல்லாம் விட கணிணியைக் கற்றுக்கொண்டு கணிணித் துறையில் வேலை கிடைத்தவர்களில் பெரும்பாலோர் தங்களை அந்தத் துறையில் படிக்க வைத்த, தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயரவேண்டும் என்பதற்காக பலவிதமான சோதனைகளை எதிர்கொண்டு படிக்க வைத்த பெற்றோர்களை அவர்கள் ஏதோ படிக்காத பாமரர்களைப் போல, கணிணியைக் கற்றுக்கொண்ட ஒரே காரணத்தால் தாங்கள் பெரிய அறிவு ஜீவிகளாகி விட்டதைப் போன்ற ஒரு மனோ பாவத்தில் மிகவும் சுயநலமாக சிந்திக்கத் தொடங்கினர் என்றால் அது மிகையல்ல

அதே காரணத்தால் பெற்றோரையே மதிக்காத இவர்கள் எல்லாமே தங்களுக்குத் தெரியும், தங்களுக்கு தெரியாதது உலகில் ஒன்றுமே இல்லை,அப்படியே ஏதாவது தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டால் இருக்கவே இருக்கிறது இணையம், இணையத்தில் சென்று பார்த்தால் எல்லா விஷயங்களுக்கும் தீர்வு கிடைக்கும், ஆதலால் இனி பெரியவர்கள், பெற்றவர்கள் யாருடைய தயவும் இன்றி வாழ்ந்து விட முடியும் என்று நினைத்துக்கொண்டு யாரையுமே மதிக்காத தங்கள் நலமே பெரியதென்று எண்ணும் சுயநலத்துக்கு அடிமையாகிப் போயினர், கணிணித் துறையில் வேலை செய்து அதிகப் பணம் ஈட்டி ஆடம்பர வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த இவர்களுக்கு அங்குதான் ஆரம்பித்தது இறங்குமுகம்,

அந்த இறங்குமுகம் இவர்களை பல விதங்களில் பாதித்தது

1.இவர்கள் முதலீடு செய்து வைத்திருந்த பல கணிணி சம்பந்தமான தொழிலகங்களின் பங்குகள் சந்தையில் விலை குறைய ஆரம்பித்தன
2.அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் தங்கள் சக்தியை உணராது இவர்கள் பல கோடி ரூபாய்களை கடனாக வாங்கி மாளிகைகள் வாங்கினர் , லெமன் போன்ற பல பெரிய முதலீட்டாளர்களின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை முடங்கியது, அதனால் அமெரிக்கா போன்ற பெரிய நகரங்களில் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் இவர்கள் வாங்கியிருந்த மாளிகைகளின் விலை வெகுவாகக் குறைந்து இவர்கள் வாங்கிய விலையை விட பன்மடங்கு சரிந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது, வங்கியில் கடன்பட்டு 20 கோடிகளுக்கு வாங்கிய வீடு இரண்டு கோடி அளவுக்குக் கூட மதிப்பில்லாமல் போனது,ஆனால் இவர்கள் வாங்கிய 20 கோடிக்கு பதிலாக 40 கோடிகள் வங்கிக்கு செலுத்த வேண்டி வந்தது, குதிரை கீழேயும் தள்ளி மேலே மண்ணையும் அள்ளிப் போட்டாற்போல இவர்கள் மூச்சுத் திணரினர்,பலர் கடன் சுமை தாங்காமல் அடிமாட்டு விலைக்கு வீட்டை விற்றும், தங்களின் கையிருப்பையும் போட்டு வங்கிக்கு கட்டவேண்டிய பணத்தில் கால் பங்கைக் கட்டிவிட்டு கையிலோர் காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை நாலணா கேட்டால் நானென்ன செய்வேன் என்று நாணித் தலைகுனிந்து உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது,

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார் பெரியோர் அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க உத்யோகம் என்று முன்பெல்லாம் பெரியவர்கள் அரசாங்க வேலையைக் குறித்து பெருமையாகப் பேசுவர் ,அது உண்மைதானோ என்று தோன்றுகிறது

பெரியோர் சொல் வேதம் என்று வாழவேண்டும், அவர்கள் சொல்லுவதில் அனுபவமும் அறிவுரைகளும் இருக்கும் என்பதை உணராமல் போனதனால் வந்த விளைவிது, பெரியோர்களை மதிக்கவேண்டாம் ,ஆனால் அவர்கள் சொல்லும் நன்மையான கருத்துக்களை மட்டுமாவது எடுத்துக் கொள்ளலாமே, காலங்கள் எவ்வளவு நவீன யுகமாக மாறினாலும் நம்முடைய அடிப்படைநாகரீகத்தின் மேல்தான், நற்குணங்களின் மேல்தான் நம்முடைய வாழ்க்கை நெறிமுறைகளைளை அமைத்துக்கொள்ளவேண்டும் ,அப்போதுதான் நம் வாழ்க்கை தடம் புரளாமல் இருக்கும் ,

சமீபத்தில் பெங்களூரில் நடந்த சம்பவம் மனதை மிகவும் பாதித்தது,ஏற்கெனெவே அவர்களின் கலாச்சார சீரழிவை நானே நேரிடையாக பார்த்தவன் என்றாலும், அதிர்ந்து போனேன்
பெண்கள் ஆண்களுக்கு சமமாக என்னும் சொற்றொடரை உபயோகிக்கும் போதே நான் ஏதோ ஆணாதிக்கம் கொண்டவன் என்று தோன்றினாலும், ஆண்களும் பெண்களும் கலாச்சார,நாகரீக கோட்பாடுகளின் அளவை மீறி செயல்படும் போதுதான் இத்தகைய விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன,ஆண்களும் நாணயமாக நேர்மையாக நடக்கவேண்டும், பெண்களும் அதேபோன்று நட்க்க வேண்டும், நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் என்று யுக்க்கவிஞன் பாரதி கூறிய கூற்றை தவறாகப் புறிந்து கொண்டு, பெண்களும் தங்களை ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக காட்டிக்கொள்ளவேண்டும் என்னும் மிகைப்படுத்தப்பட்ட உணர்வினாலேயேஇப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களோ என்னும் சந்தேகம் வருகிறது....

எங்கே ஒருவன் அதிகமாக அர்ப்பாட்டம் செய்கிறானோ,அதிகமாக அலட்டிக்கொள்கிறானோ அங்கே அவன் பயந்து போயிருக்கிறான், அவனுடைய பயத்தை போக்கிக் கொள்ளவே அப்படி நடந்து கொள்கிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்,அது போல பெண்கள் இயல்பாக அவர்களுக்குரிய தர்மத்தை கடைப்பிடித்தாலே போதுமானது, நாம் மதிக்கப்படுவதில்லை நாமும் சம உரிமை வேண்டும் ,,என்று எண்ணி, பெண் சுதந்திரம் என்னும் பேரில் அதிகப்படியான வேண்டாத நடத்தைகளைக் கைக்கொள்ளும்போது இயல்பாகவே மக்கள் மனதில்வெறுப்பை ஏற்படுத்தி அவமானத்தை சந்திக்கிறார்கள்,

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன், அவர் அமெரிக்காவில் இருக்கும் மகனுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைஅதாவது அவருடைய அமெரிக்க பேரனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார்,நான் சென்றவுடன் என்னை வரவேற்று உட்காரவைத்துவிட்டு அவர் மகனிடமும்,மருமகளிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்,
என் நண்பர் மிகப் பெருமையாக என் மகன் அமெரிக்கா சென்று கணிணித் துறையில் வேலை செய்தாலும் நம்முடைய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதாகவும்,மருமகள் தன்னை பெற்ற தந்தைபோல் நடத்துவதாகவும் சொன்னார் ,மகிழ்ச்சியாக இருந்தது,
நான் அந்த அமெரிக்க கணிணித் துறை பொறியாளரிடம் பேசினேன்,நான் கேட்ட கேள்விகளுக்கு மரியாதையாக விளக்கங்கள் கூறினார்,அதற்கு இடையே அவர் ஐய்யா நான் என் தந்தை சொல்லை தட்டியதே இல்லை, இன்றும் நான் அமெரிக்காவில் இருந்தாலும் எல்லா திட்டங்களையும் தந்தையிடம் ஆலோசனை செய்தே செயலாற்றுகிறேன், இவருடைய அனுபவம் எங்களை வழிப்படுத்துகிறது,இவரும் நான் அனுப்பும் பணத்தில் நிறைய சேமித்து வைத்திருக்கிறார்,நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிரோம்,
இப்படி பெரியவர்களின் அறிவுறுத்தலை மதிக்காமல் அகலக்கால் வைத்தவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் ,அதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம் என்றார்,
எனக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னுடைய இன்னொரு நண்பர் இதே போல் அமெரிக்காவில் வேலை செய்யும் மகனும்,அவனுடைய மனைவியாகிய என் நண்பரின் மருமகளும் அப்பா உங்களுக்கு எதுவும் தெரியாது, நிறையப் படிங்கப்பா, எந்த சந்தேகம் இருந்தாலும் பல வலைத்தளங்கள் இருக்கின்றன அவைகளில் சென்று இன்று பொருளாதாரம் எப்படி இருக்கிறது, குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும், எல்லாம் இருக்கிறது,அவற்றையெல்லாம் படிக்காமல் எல்லாம் தெரிந்த மாதிரி பழைய செய்திகளையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் என்று அவமானப் படுத்துவது போல் பேசியதை சொல்லி வருத்தப்பட்ட நண்பர் நினைவுக்கு வந்தார்,

குழந்தை வளர்ப்பிலிருந்து குடித்தனம் எப்படி செய்யவேண்டும் என்பது வரையில் இணையத்தில் வலைத்தளங்களில் இருந்தாலும், அவைகளெல்லாம் உபயோகமாக இருக்கிறதா வாழ்க்கைக்கு, நடைமுறைக்கு..என்கிற கேள்வி மனதில் எழுந்தது.இல்லை நடைமுறையில் அவைகளில் நூற்றுக்கு தொண்ணூரு சதவிகிதம் உபயோகப் படுவதில்லை என்பதே உண்மை
குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு உணவு ஊட்டக் கூடாது, குழந்தைக்கு இயற்கை வைத்தியம் செய்யக் கூடாது,என்றெல்லாம் இணையதளங்களில் குழந்தை வளர்ப்பைப் பற்றி அளித்திருக்கும் செய்திகளை அப்படியே நம்பி குழந்தையை வளர்த்த ,
தாத்தா பாட்டிகள் கூட தங்கள் குழந்தைகளை தொட அருகதை இல்லாதவர்கள்,அவர்களுக்கு ஒன்றும் தெரியாது ,பழைய பஞ்சாங்கங்கள் என்று நினைத்துக்கொண்டு பெற்றவர்களின் பாசத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் அவர்களால் வளர்க்கப்பட்டு ஆளானவர்கள்தாம் அவர்கள் என்பதை மறந்து அவர்களை வார்த்தைகளால் புண்படுத்தி தங்கள் குழந்தையை இணைய தளங்களின் வளர்ப்பு முறையில் வளர்த்த தம்பதிகள் அக்குழந்தைக்கு ஒரு சாதாரண காய்ச்சல் வந்தாலும் கூட பதறிப்போய் அமெரிக்க மருத்துவர்களின் பார்வை நேரத்துக்காக இரு மாதங்கள்ஆனாலும் காத்திருந்து, காத்திருக்கும் நேரத்தில் இன்னும் நோயை அதிகப்படுத்தி பிறகு அவர்களிடம் வைத்தியம் செய்தும் சரியாகாமல் அவதிப்படும் தம்பதிகள்,

இவைகளை உற்று நோக்கும் போது மற்ற துறைகளில் வேலை செய்வோர் அயல்நாடுகளுக்கு சென்று பொருளீட்டினாலும் அவர்களிலும் பெற்றவர்களை, பெரியோர்களை மதிக்காமல் இருப்பவர்களுண்டு என்றாலும் இந்தக் கணினித் துறையில் இருப்பவர்களைப் போல் அதிக அளவு இல்லையென்றே தோன்றுகிறது, ஆக மொத்தம் நல்லவைகளை மகன் சொன்னலும், பெற்றவர்கள் சொன்னாலும் மதிக்க வேண்டும்,கட்டுப் படவேண்டும் என்னும் நல்லுணர்வு மறைந்து போய்விட்டது அதுதான் இப்போது மொத்த சீரழிவுக்கும் காரணம் என்று தோன்றுகிறது

தற்காலத்தில் அதிகப் பணம் ஈட்டும் தொழிலில் உள்ள ஆணோ,பெண்ணோ அனைவருக்குமே சுயநலம் அதிகமாகி விட்டது என்பதுதான் உண்மை, இந்த சுயநலம் எல்லோரையுமே அதல பாதாளத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது,எப்படியென்றால் தீவிரவாதம் எப்படி இருமுனைகளும் கொண்ட கூர்மையான கத்தியோ அதே போல் சுயநலமும் பலமுனைக்கூர் கொண்ட ஆயுதம்தான்,இந்த ஆயுதம் யாரிடம் இருக்கிறதோ அது, தான் இருப்பவர்களையும் , மற்றவர்களையும் அழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
இவையெல்லாவற்றையும் தாண்டி இந்த சுயநலம் என்னும் வியாதி எப்படி இளைஞர்களையும் யுவதிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது எப்படி என்று பார்க்கலாமா..?

பெற்றவர்களை, மற்றவர்களை மதிக்காத சுயநலத்தை ஆயுதமாக ஏந்திக்கொண்ட தற்கால அதிகப் பணம் ஈட்டும் இளைஞர்களும்,யுவதிகளும் இன்னும் சற்று முன்னேற்றம் கண்டு
அந்த சுயநலமென்னும் ஆயுதத்தை கணவன் மனைவிகளுக்குள்ளேயே உபயோகப் படுத்த ஆரம்பித்து விட்டனர் அதன் விளைவே இன்றைய விவாகரத்துக்கள்,பிரிந்து வாழ்தல், சேர்ந்து வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக,நிம்மதியாக இராமல் தவிக்கும் அவல வாழ்க்கை
அதிகம் பொருளீட்டும் தம்பதிகள்தான் விவாகரத்துக்கள் அதிகமாக செய்கின்றனர் என்று இன்றைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன காரணம் தான் அதிகமாக சம்பாதிக்கிறோம் என்னும் மமதையும்,எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் தான்தோன்றித்தனமாக அலையும் மனப்பான்மையுமே காரணங்கள் என்றால் அது மிகையாகாது

ஆகவே நம் வாழ்வின் நடைமுறையிலேயே அதிக பாதிப்பை உள்ளாக்குவது இந்த மமதையே என்றால் அதில் என்ன தவறு
ஆணோ பெண்ணோ அனைவரும் சமமே, வாழ்க்கை வாழ்வதற்கே,
நாம் உழைப்பது, பொருளீட்டுவது, அனைத்துமே நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கே, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்,
என்பதைப் புரிந்து கொண்டால் ,சற்றே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இதே வாழ்க்கை சொர்கமாகும்

அன்புடன்
தமிழ்த்தேனீPost a Comment