திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, February 2, 2009

” மனிதம் “
பல பழுத்த ஆத்திகர்களின் வாரிசுகள் நாத்திகர்களாகவும் பகுத்தறிவு பேசும் பல காய்த்த நாத்திகர்களின் வாரிசுகள் ஆத்திகர்களாகவும் இருக்கின்றனரே, கண்கூடாக பல இடங்களில் பார்த்திருக்கிறேன், இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் வளர்க்கும் முறை சரியில்லையா,அல்லது எப்படி வளர்த்தாலும் அவர்கள் போக்கிலே செல்லுகின்ற இந்தக் காலத்து இளைஞர்களின் நடைமுறையே அப்படித்தான் இருக்கிறதா ,அப்படியானால் இந்தச் செய்தி இறைவன் இருக்கிறான் என்று விளக்குகிறதா, அல்லது இறைவன் இல்லை என்று விளக்குகிறதா?
இறைவனை உண்டு என ஒப்புக்கொள்ளும் ஆத்திக வாதியை விட இறைவனை இல்லை என்று சொல்லும் நாத்தீகவாதியை சிறந்த ஆத்திகர் என்று நான் சொல்லுவேன்,
எதையும் குறிப்பிடாமல் இல்லை என்று சொன்னால் யாருக்கும் அவர் எதை இல்லையென்று சொல்லுகிறார் என்றே புரியாது அதனால் இறைவன், இறைவன், என்று சொல்லிவிட்டுத் தானே இல்லை என்று சொல்ல முடியும், தினம் தினம் இறைவனை நினைத்து,நினைத்து பின்தானே மறுக்கிறார்கள், ஆகவே நாத்திகர்கள் என் கண்ணுக்கு ஆத்திகர்களாக தெரிகின்றனர்,
ஆனால் ஆத்திகர்கள் வாதிடும்போது இறைவனை நினைக்கிறார்களே தவிர மற்ற நேரங்களில் நினைப்பது மிகவும் குறைவு, ஆனால் நாத்திகருக்கு சதா சர்வ காலமும் இறைவனை இல்லையென்று சொல்லுவதே வேலையல்லவா அதனால் இறைவன் இல்லையென்று சொல்வதற்காகவேனும், இறைவனை அதிகம் நினைக்கிறார் நாத்திகவாதி,

ஆத்திகவாதிகள் நம்புவது போல, இறைவன் இருக்கிறான் என்று நம்புபவர்களால் மனிதத்தை மதிக்காமல் இருக்க முடியுமா? அப்படி மனிதத்தை மறக்காமல் மனிதர்கள் இருந்திருந்தால் இன்று தீவிரவாதம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா
சாம, தான, பேத, தண்டம், என்று ஒரு வரைமுறையில் வாழ்ந்திருந்த நம் மக்கள், மனிதர்கள், உயிராயுதம் ஏந்தும் அளவுக்கு ஒரு மோசமான நிலமைக்கு தள்ளப் பட்டிருப்பார்களா,மக்களை மீண்டும் மாக்களாக ஆக்கியது யார், மனிதாபிமானத்தை மறந்த பலரின் சுயநலத்தால் அல்லவோ இன்று இப்படிப்பட்ட நிலையை சந்தித்திருக்கிறோம்
மக்களை மாக்களாக மாற்றும் சுயநலத்தை அழித்து, உலகம் முழுவதும் நம் மக்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்திருந்தால் இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்குமா,
பல நேரங்களில் துயரம் நம்மை செயலிழக்க வைக்கும், சில நேரங்களில் சிந்திக்க வைக்கும்,அப்படி எழுந்த சிந்தனையில் விளைந்த ஒரு சுவையான கற்பனைக் காட்சி, நாடகம்,கதைகள் எழுதுபவன் அல்லவா நான்,அந்த அனுபவம் கைகொடுத்தது
சொர்கத்தில் ஒரு காட்சி:-
ஒரு பெரியவர் பழுத்த ஆன்மீகவாதி தன் வாழ்நாளில் அவர் இறைவனை மறந்ததே இல்லை, அது மட்டுமல்ல தினமும் பக்தியுடன் இறைவன் நாமங்களைச் சொல்லி பூஜைகள் பல செய்தவர்,மனித நேயத்துடன் நடந்து கொண்டவர்,மனிதம் உணர்ந்தவர், பதவிக்கோ, செல்வத்துக்கோ அளித்த மரியாதையை விட மனிதருக்கு அதிகமாக மதிப்பளித்தவர்,தன்னுள் உறைகின்ற இறைவன் அனைத்து உயிர்களிலும் உறைகிறான் என்று உணர்ந்தவர்,அதனால் மனித நேயத்தை மதித்தவர், மனிதருள் உதித்தவர், பக்தி,அன்பு நேர்மைபோன்ற நற்குணங்களை கடைப்பிடித்தவர்,மனித நேயத்தை விதைத்தவர்

மற்றொரு பெரியவர் பழுத்த நாத்திக வாதி, பகுத்தறிவு வளர்க்க நாத்திக வாதம் செய்தவர், ஒரு நாளும் இறைவனை மறந்தும் தொழாதவர்,இறைவன் இல்லை என்றே போதனைகள் செய்தவர், ஆனால் மனிதநேயம் மிக்கவர், செல்வமும் செல்வாக்கும் இருந்தால்தான் யாவரும் மதிப்பர் என்னும் உண்மையை அறிந்தவர்,ஆனாலும் அனைத்துக்கும் மேலாக மனிதர்களை நேசித்தவர், மனித நேயத்தை யோசித்தவர்,மக்களிடம் பகுத்தறிவையும் மனித நேயத்தையும் விதைத்தவர்
இரு பெரியவர்களும் சொர்கத்தில் சந்தித்தனர்,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நலமா என்று தமிழிலே விசாரித்துக் கொள்கின்றனர்,சொர்கத்திலும் தமிழ், தமிழே சொர்கமல்லவா சொர்கத்துக்கே சென்றாலும் மனிதர் மனிதர்தாமே! சந்தித்த மறு கணமே பொதுவாக இருவருக்குமே ஒரு சந்தேகம்,
அந்த ஆத்திக வாதியின் மனதிலே ஒரு எண்ணம் என்ன இது நாம் இறைவனை தொழுது பக்தி செய்து சொர்கத்துக்கு வந்தோம், பகுத்தறிவு பேசி, இறைவனே இல்லையென்று வாதிட்டு, சொர்கம் நரகம் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று நாத்திகவாதம் பரப்பிய இவரும் சொர்கத்துக்கு வந்திருக்கிறாரே என்று,
அதே சந்தேகம் அந்த நாத்திக வாதிக்கும் வந்தது, இறைவனே இல்லை,சொர்கம் நரகம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை ,மனிதம் தான் முக்கியம் என்று பரப்பிய தான் எப்படி சொர்கத்துக்கு வந்தோம் என்று, தானும் சொர்கத்துக்குதான் வந்திருப்பது உண்மைதானா என்று
அப்போது அந்த வழியாக சென்ற நாரதர், இவர்கள் மனதில் இருந்த சந்தேகத்தை உணர்ந்து சந்தேகத்தை தீர்த்து வைத்தார்,
எப்படி என்று பார்ப்போமா?

அந்த நாத்திகவாதி சிறு வயது முதற்கொண்டே , நாட்டைப்பற்றியும் நாட்டில் வாழும் மக்களைப்பற்றியும் முறையாக சிந்திக்கத் துவங்கினார்,மனிதர்களிடையே வேற்றுமைகளைக் களைய வேண்டுமென்றால் பகுத்தறிவை விதைக்க வேண்டும், மனிதத்தை படிக்க வேண்டும், என்னும் எண்ணம் கொண்டதனால் சரித்திரங்கள் படிக்க ஆரம்பித்தார், அதனால் இறைவனை இல்லையென்றார் மனிதமே பெரிதென்று பேசினார்,
சிறு வயதில் அவரைக் கவர்ந்த சரித்திர நாயகன் யார் தெரியுமா சாம்ராட் அசோகன், அதனால் எப்போதும் அசோகரைப்பற்றி படித்துக்கொண்டே இருந்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்,
“ நாட்டு மக்களின்மேல் பாசம் வைத்து நாட்டை நல்ல வளமாக்க ஆறுகள் குளங்கள் ஏற்படுத்தி, நல்ல சாலைகள் ஏற்படுத்தி சாலையின் இரு மருங்கிலும் மரங்கள் நட்டு, மக்களை எவ்வித துயரமும் இல்லாது வைத்திருந்தார் அசோகர், அப்போது அவருக்கு அனைத்து நாட்டு மக்களையும் தன் நாட்டு மக்கள்போல் சுகமாக வைக்கும் ஆசை வந்தது ,ஆசை யாரை விட்டது, அனைத்து நாடுகளின்மேலும் படையெடுத்து வெற்றி கண்டு, அசோக சகரவர்த்தி என்று பெயர் எடுத்தார் ,ஆனால் ஒரு போரின் முடிவில் யுத்த பூமியிலேயே ஒரு புத்தர் அஹிம்சையைப் பற்றியும் உயிர்கொல்லாமை பற்றியும், பற்றில்லாத வாழ்க்கையே நன்மை பயக்கும் என்பது பற்றியும் உபதேசம் செய்து அசோகனின் மனதைப் பற்றினார்,அதனால் அசோகர் பௌத்தம் பற்றினார், என்று அசோகரைப் பற்றியே நிறைய படித்தார் பேசினார், சிந்தனை செய்தார், அந்த பகுத்தறிவு வாதியான நாத்திகர்
அதனால்தான் சொர்கம் வந்தார் என்று கூறினார் நாரதர்
என்னடா இது அசோகரைப்பற்றி படித்தனால் சொர்கம் வந்தாரா நாத்திகர், அது எவ்வாறு என்று அந்த இரு மானிடர்களும் வினவ அதற்கு நாரதர்
அசோகர் மனிதம் போற்றினார்,
தெய்வம் மனுஷ்ய ரூபேணா என்று உங்களுக்குத் தெரியாதா ,மனிதனை மதித்தாலே தெய்வத்தை மதிப்பது போலதானே, அதனால்தானே இறைவனும் தன்னை விட தன் அடியவர்களை மதிப்பவர்களை மதிக்கிறான், சொர்கம் அளிக்கிறான், என்றார்
அது மட்டுமல்ல அசோக என்றாலே சோகமில்லாத என்று பொருள், அதனால்தான் இறைவனின் தர்ம பத்னியாகிய மஹாலக்‌ஷ்மிக்கு அசோக என்று பெயர் , தினமும் இந்த நாத்திகவாதி அசோக அசோக என்று அடிக்கடி சொல்லி தன்னையறியாமலே மஹாலக்‌ஷ்மியின் அன்புக்கும் கருணைக்கும் பாத்திரனாகிவிட்டார், பிறகென்ன அன்னை மஹாலக்‌ஷ்மி இறைவனிடம் இந்த நாத்திகனுக்காக சொர்கத்தை யாசித்தாள் ஏனென்றால் இந்த நாத்திகன், மனிதம் போற்றியதாலே மஹா லக்‌ஷ்மியை யோசித்தான், நேசித்தான், பூசித்தான் அசோகா என்கிற பெயரிலே, அதனால்தான் அந்த நாத்திகனுக்கும் சொர்கம் கிடைத்தது என்றார்

ஆகவே மானுடர்களே மனிதம் காப்போம்,அதுதான் சொர்கம் இறைவனை மகிழ்ச்சிப்படுத்த அதை விட சிறந்த வழி, சொர்கத்தை அடைய அதை விட சிறந்த வழி வேறொன்றுமில்லை
நாமும் அசோகர் போலவே சாலைகள் போடுவோம்,மரங்கள் நடுவோம், நீர் நிலைகள் வளப்படுத்துவோம்,உலகம் காப்போம், மனிதம் வளர்ப்போம் அசோகா, அசோகா, என்று அடிக்கடி கூறி அவரைப் பின்பற்றுவோம் சொர்கம் நிச்சயம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com, http;//peopleofindia.net, rkc1947@gmail.com

Post a Comment