திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, June 26, 2008

பழமொழி ஆய்வு எண் 10

சாண் ஏறினால் முழம் வழுக்கும்

எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம்
அவரவர்க்கு அவரவர் கை அளவே ஒரு சாண் என்பது
அவரவர் கையாலே அளந்து பார்த்தால் அவரவர் உடல்
எட்டு சாண் அளவைக் கொண்டதாக இருக்கும்
அவர்களின் முழங்கையின் அளவே முழம் என்று சொல்லுவார்கள்
அதனால்தான் இப்போதும் பூக்காரிகள் தங்களுடைய
முழங்கையின் அளவையே ஒரு முழம் என்று
அளந்து பூ விற்கிறார்கள்
இன்னும் சற்று யோசித்து சிறு பெண்களை
போடவைத்துவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே உட்கார்ந்து
பணத்தை மட்டும் வாங்கி மடியில் சொறுகிக் கொள்ளுவார்கள்
அவர்களின் கணக்குப்படி சிறு பெண்ணின் முழங்கை அளவு
பூ அளந்து கொடுக்கும்போது ,பூ வாங்குவோருக்கு
கண்ணில் முழம் அளத்தல் பட்டாலும் பெறும் அளவு
குறைவாகவே இருக்கும் அதனால் லாபம் அதிகம்
வரும் என்பது அந்தப் பூக்காரிகளின் திறமையான கணக்கு


என்ன ஒரு கணக்கு இறைவனின் கணக்கு
சரியான விகிதாசாரத்திலே அமைக்கப்பட்ட படைப்புகள்
இதை ஆராய்ந்து சொல்லிய பெரியோர்கள் எவ்வளவு அறிவாளிகள்....?

முன்பெல்லாம் வழுக்கு மரம் என்று ஒன்றைத் தயார்
செய்வார்கள், அந்த வழுக்கு மரத்தை நன்றாகத் தேய்த்து
பிசிறில்லாமல் வழு வழு வென்றிருக்கும்படி செய்வார்கள்
அந்த வழுக்கு மரத்தில் விளக்கெண்ணையை நன்கு பூசுவார்கள்
பிறகு அந்த மரத்தின் உச்சியில் ஒரு பண முடிப்பை
கட்டுவார்கள், அதன் பிறகு அந்த வழுக்கு மரத்தை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் செங்குத்தாக நடுவார்கள்
அந்த மரம் ஒரு குறிப்பிட்ட உயரத்தைக் கொண்டிருக்கும்

மக்களின் மனோ உறுதியை சோதிக்க பந்தயம் கட்டுவார்கள்
யார் அந்த வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பணத்தை
எடுக்கிறார்களோ அவர்களுக்கே அந்தப் பணம் என்று,
மக்களுக்கு விடாமுயற்சியை,மனோதிடத்தை, ஏற்படுத்த
இது போன்ற போட்டிகள் வைப்பார்கள்
பலர் அந்த வழுக்கு மரத்தில் ஏறி தங்களின் விடா முயற்சியை
மனோதிடத்தை தங்களே பரிசோதித்துக் கொள்ளும் முறையில்
முயற்சி செய்வார்கள்,
அப்படி அந்த வழுக்கு மரத்தில் ஏற முயற்சி செய்பவர்கள்
தங்கள் உள்ளங் கால்களாலும், உள்ளங் கைகளாலும்
உள்ளத்தில் உறுதியோடும் ஏற முற்பட்டாலும் அந்த வழுக்கு மரத்தின் இயல்புக்கு ஏற்ப அது வழுக்கிக் கொண்டே இருக்கும்
உள்ளங்கைகளால் பிடித்து அந்த முயற்சியை அவர்கள்
செய்யும் போது உள்ளங்கையின் அளவாகிய சாண்
என்னும் அளவு அந்த மரத்தில் ஏறும்போது
அது ஒரு சாண் ஏறுதலாகிறது,மேலும் முழங்கையின் பிடிமானத்தை துணைக்கு அழைத்துக் கொள்ளும் அவர்களின் உடல் வழுக்கும் போது முழங்கையின் அளவாகிய ஒரு முழம் அளவுக்கு கீழே இறங்கி விடுகிறது,ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதன் வழுக்கும் தன்மையினால் அவர்கள்வழுக்கி கீழே இறங்கும் அளவைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் ஒரு முழம் அளவுக்கு
கீழே இறங்கி விடுவர்,மீண்டும் முயற்சி செய்து ஒரு சாண் ஏறுவர்
அவ்வளவு கடினமான முயற்சியிலும் வெகு சிலரே மரத்தின்
உச்சி வரை ஏறி தான் எண்ணிய காரியத்தை முடிப்பர்

ஆகவே முயற்சி என்று செய்ய ஆரம்பித்தால் வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து போராடி முன்னுக்கு வரவேண்டும்
முழம் சறுக்கினாலும் சாண் ஏறிவிட்டோம் என்னும் எண்ணத்தை நம் மனதில் ஆழப் பதித்துக் கொண்டு முன்னுக்கு வந்து லட்சியத்தை
அடைய வேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கவே

சாண் ஏறினாலும் முழம் சருக்கும்
என்று நம்மை எச்சரித்துவிட்டு சென்றனரோ பெரியவர்கள்..?

அன்புடன்
தமிழ்த்தேனீ

பழமொழிகள் ஆய்வு எண் 9

கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா…?
என்ன ஒரு வினாச்சொல் வழக்கு
ஆச்சரியமாக இருக்கிறது

யோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள்
எவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும்
சொல்லி இருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமே மிஞ்சுகிறது

மா,பலா வாழை என்று ஒரு சொல் அடுக்கு உண்டு
பழங்களில் முதன்மையானது மாம்பழம்,
அடுத்து பலாப்பழம், அடுத்து வாழைப்பழம்
மூன்றுமே மருத்துவ குணமுள்ள இனிப்பான சுவையான்
பழங்கள்
ஆங்கிலத்திலே (riverse engineering) என்று சொல்லுவார்கள்
ஒரு யந்திரத்தை கட்டுமானம் செய்ய அதே போன்ற ஒரு யந்திரத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தலைகீழாக எண்ணிக்கை
வரும்படி அடுக்கி வைத்துவிட்டு
மீண்டும் அதே வரிசையில் அதை கட்டுமானம் செய்வார்கள்
அது போல நாம் நம்முடைய முன்னோர்கள்
சொன்னதையெல்லாம் ஒவ்வொரு சொல்லாக எடுத்து
அவற்றை பிரித்து அடுக்கி வைத்துவிட்டு,
மீண்டும் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தால்தான் தெரிகிறது
அவர்கள்: அதற்குள்ளே எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை
பொதிந்து வைத்திருக்கிறார்கள் எனபது

மாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வரும் என்று சொல்லுவார்கள்,ஆனால் அந்த மாம்பழத்தின் உள்ளே இருக்கும் கொட்டையின் உள்ளே இருக்கும் மாம்பருப்பை எடுத்து
உண்டாலே அதுவே சிறந்த மருந்து வயிற்றுப் போக்குக்கு
அடடா கனிவையும் சுவையையும் வைத்து அதனுள்ளே
மருந்தையும் வைத்த இறைவன் எவ்வளவு பெரியவன்


வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர்
ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக்
கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக்
கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல்
மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு
அவதிப்படுகிறது,
பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி
அதையாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும்
அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்


அதே போல மேலே முள்ளாக கரடு முரடாக இருக்கும்
பலாப் பழத்தின் சுவை நான் சொல்லி உங்களுக்குத்
தெரியவேண்டிய அவசியமில்லை
ஆனால் அந்தப் பலாச்சுளையின் உள்ளே இருக்கும்
பலாக் கொட்டை யை அப்படியே சாப்பிட்டால் தொண்டையை
கொண்டு மூச்சுகூட விடமுடியாமல் அவதிப்பட நேரும்,.
ஆனால் அதே பலாக் கொட்டையை வேக வைத்து
நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது கட்டை
அடுப்பில் சமைப்பார்கள், எரிகின்ற கட்டை அடுப்பின்
இந்தப் பலாக்கொட்டைகளை போட்டு விடுவோம்
அடுப்பை அணைத்த பின் சற்று பக்குவமாக
வெந்த அந்தப் பலாக் கொட்டையை தோல் உரித்து
உண்போம் அது பலாச் சுளையைவிட இனிமையாக இருக்கும்
அது மட்டுமல்ல அந்தப் பலாக்கொட்டை பல வியாதிகளுக்கு
மருந்து என்று சொல்லுவர்

அடுத்தது வாழை , வாழைப்பழமே மருந்து ,
வாழைதண்டு சாற்றினை பாம்பு கடி விஷத்துக்கு முறிவாக அளிப்பர், வாழைப்பட்டையில் பாம்பு கடித்தவர்களை படுக்க வைப்பர்,விஷ முறிவான இந்த வாழைமரம் இருந்தால்தான் கொண்டாட்டங்களே களை கட்டும்
அதே போல் வாழைப் பழம் இருந்தால்தான்
விருந்தே களைகட்டும்
தலை வாழை இலையில் முதலில் வாழைப்பழமும் சர்க்கரையும் போட்டுவிட்டு ,பிறகுதான் மற்ற உணவு வகைகளை பறிமாறுவர்
வாழைப்பழம் நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, இறைப்பையின் இயக்கத்தை துண்டுகிறது உண்ணும் உணவுகள் செரிக்க உதவுகிறது
அந்த வாழை மரத்தை ஆராய்ந்தால்
வாழைக் குருத்து முளை விட்டு பின் வளர்ந்து மரமாகி
குலைதள்ளும் பருவத்திற்கு சற்றுமுன்பாக
பெரிய பெரிய இலைகள்வருவது நின்று போய்
ஒருநாள் ஒரு பளபளப்பான ஒரு சிறு இலை
தோன்றும் அதைக் " கன்னாடி இலை " என்பர்
அந்தக் கன்னாடி இலை தோன்றிய பிறகுதான்
குலைவிடும், அந்தக் குலையை சிறியதாக இருக்கும்போது
அந்தக் கன்னாடி இலை பாதுகாக்கும்
பிறகு வாழைக் குலை பெரியதாக ஆகும்போது
அந்தக் கன்னாடி இலை அந்த வாழைக்குலைக்கு
வழிவிட்டு ஒதுங்கி இருக்கும்
வாழையடி வாழையாய் குருத்துகள் அந்த வாழை மரத்தின்
கீழே தோன்றிக் கொண்டே இருக்கும்,
ஒரு வாழை மரம் வைத்தாலே அது தானாகவே வாழைத்தோப்பாகும்
ஒரு நல்ல பெண்மணி ஒருத்தி வந்தாலே
எப்படி குலம் தழைக்குமோ அது போல

நம்மை வளர்க்கும் தாய் எப்படி நம்மை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் வளர்த்து நாம் பெரியவனானவுடன் நம் சுகத்துக்காக ,நம் மகிழ்ச்சிக்காக, சற்றே ஒதுங்கிக் கொள்கிறாளோ அதுபோல
கன்னாடி இலை ஒதுங்கிக் கொள்ளும்
பிறகு குலையில் வாழைப்பூ தோன்றும் அந்த வாழைப்பூவில்
உள்ளிருக்கும் தனித்தனியான ஒவ்வொரு மடலும்
ஒரு கொத்து பூக்களை பாதுகாத்து அவை முற்றி
காய்களானவுடன்
மடல்கள் ஒதுங்கிக் கொள்ளும்,
இப்படி ஒவ்வொரு மடலும் இதழ் விரிந்து காப்பானாக இருந்து
ஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளும்
ஆனாலும் கடைசியாக காயாக முடியாத சில
சிறு பூக்களை கடைசீ வரையில் மடல்கள் மூடிக் கொண்டு
பாது காத்துக் கொண்டிருக்கும்
அந்த அமைப்பை நாம் வாழைப் பூ என்கிறோம்
மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துமாறு
வாழ்க்கைப்பாடம் நடத்தும் ஒவ்வொரு வாழை மரமும்
காப்பானே, என்பதில் ஐய்யமே இல்லை
பிறகு அந்த வாழைப்பூவை மடல் பிரித்து அந்த
சிறும் பூக்களை கொத்தாக எடுத்து அரிந்து அதை சமைத்து
நாம் உண்ணுவோம், அப்படி சிறும் பூக்களை அரியும் போது
ஒவ்வொரு சிறும் பூக்களையும் கூர்ந்து கவனித்தால்
சுற்றிலும் அந்த சிறும் பூக்களின் பாகங்களும்
நடுவில் தலை கொழுத்து ஒரு மொட்டுமாய் இருக்கும்

அந்த மொட்டுடன் கூடிய தண்டை கள்ளன் என்று சொல்லுவார்கள் ,
அது உடலுக்கு கெடுதியானது
ஆக்வே அந்த கள்ளனை நீக்கி விட்டு சமைப்பர்
அதைக் காட்டித்தான் உள்ளே கள்ளன் ஒளிந்திருக்கிறான்
பார் என்று என் அன்னை கூறுவார்கள்
கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா

"நாமெல்லாரும் கள்ளர்கள்
காப்பான் இறைவன் ஒருவனே
அதனால் காப்பானிடம் காட்டிக் கொள்ளாமல்
நாம் ஒளிய இடமே கிடையாது என்பதை உணராமல்
நம்மின் உள்ளுக்குளே ஒளிந்திருக்கிறோம் "

கள்ளனே காப்பானாகவும் காப்பானே கள்ளனாகவும்

இருந்த மாயக் கண்ணனைக் கேட்டால்தான்
தெரியும் கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா என்று...?
அன்புடன்
தமிழ்த்தேனீ

பழமொழி ஆய்வு எண் 8

இக்கரைக்கு அக்கரை பச்சை
இது ஒரு அருமையான சொல்லாடல்
முதுமொழி,அல்லது பழமொழி

பசுமையும் ,பனி மேகங்களும்,
கானலும் ,நாம் இருக்கும் இடத்தில்
தெரியாது....
இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பது போலவும்
அங்கிருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்

ஆனால் நமக்கு எப்போதுமே
இங்கிருக்கும் பச்சை தெரிவதே இல்லை
அதாவது தோட்டத்துப் பச்சிலை நம் கண்ணுக்கு தெரியாது
பச்சிலை மருத்துவர் சொல்லும்போதுதான்
அந்தச் செடி மூலிகை என்றே நமக்குத் தெரியும்
எப்போதுமே நமக்கு ஒரு குணமுண்டு
நம்மவர் அறிவாளியாய் இருந்தாலும்
அவர்கள் சொல்லும் போது மதிக்காத
நாம் அயல் நாட்டார் சொன்னால்
உடனே மதிப்போம்
அப்படி ஒரு குணம் நமக்கு இருக்கிறது

வெளி நாட்டுக்கு சென்று அங்கு எங்கேயும்
குப்பையை போட முடியாமல் பத்திரமாக வைத்திருந்து
அயல் நாட்டில் கடைப்பிடித்த அத்தனை நற்குணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, விமானம் மும்பையில் வந்து
இறங்கிய வுடனே கண்ட இடத்தில் அதே
குப்பையை போட்டு போட்டுவிட்டு செல்பவர்கள்
தாமே நம்மில் பலர்
தண்டனை கிடைக்குமென்றால் ஒரு மாதிரி தண்டனை
கிடைக்காது என்கிற தைரியமிருந்தால்
ஒரு மாதிரிநடப்பவர் நம்மில் பலபேர்

சந்தர்ப்பம் கிடைக்காமையினால் தவறு செய்யாதவனை விட
சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாதவன்தான்
உண்மையான நேர்மையாளி.....
வெளிநாட்டிற்கு கொடுக்கும் அதே மரியாதையை
நம் நாட்டுக்கும் கொடுத்தால், நாம் வெறுமனே
இருந்து கொண்டு அரசாங்கத்தை மட்டும்
குறைகூறிக் கொண்டே காலம் தள்ளாமல்
நம்முடைய நாட்டையும் சுத்தமாக வைத்துக்
கொள்ளலாம் அல்லவா
நமக்கு அயல் நாட்டைப் பார்த்தால் அப்படி ஒரு ப்ரமிப்பு
நம் நாட்டில் இல்லாத அழகுகளா,இயற்கை கொஞ்சும்
சுற்றுலாத் தலங்களா,...?

ஆனால் அவைகளை பராமரிக்க நாமும் முயல மாட்டோம்
நம் அரசாங்கமும் முயலாது,
இக்கரைக்கு அக்கரை என்றுமே பச்சைதானே
இக்கரையின் பச்சை ,பசுமை ,நன்மை
எதுவுமே நம் கண்களில் படாது

திரைஉலக இயக்குனர் ஒரு திரைப்படத்தில் கேட்பார்,
உங்களுக்குத் தெரிந்த பத்தினிகளின் பெயரை சொல்லுங்கள்
என்று ஆளாளுக்கு நளாயினி, கண்ணகி,என்றெல்லாம் சொல்லுவர்
பாக்யராஜ் கேட்பார் உங்களுக்கு பத்தினி என்றவுடன்
உங்கள் மனைவியின் பெயர் நினைவுக்கு வரவில்லையா என்று
அது போல நமக்கு நம்மிடம் உள்ள அனேக திறமைகள்
தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் அவைகளை
நாம் மதிப்பதில்லை,
தமிழ் பேசி நடிக்க நம்மிடம் இல்லாத தமிழ் நடிகைகளா
ஆனால் மும்பையிலிருந்து அல்லது அயல்நாட்டிலிருந்து
இறக்குமதி செய்து தமிழே பேசத்தெரியாத அவர்களுக்கு
உயர்தர உணவகத்தில் அறை போட்டுக் கொடுத்து
தமிழ் சொல்லிக் கொடுத்து,தமிழை அவர் மொழியில்
அப்படியே எழுதிக் கொடுத்து பேச வைத்து
திரைப்படம் எடுத்தால்தான்
அது பெரிய தகுதி என்று நம்முடைய இயக்குனர்கள்
நினைக்கிறார்களே அதுபோல
நம்மை மதிக்க நாம் எப்போது கற்றுக் கொள்கிறோமோ
அப்போதிலிருந்து நம் நாடு இன்னும் வளமாக
முன்னுக்கு வரும் என்பதில் ஐய்யமில்லை
இவற்றை சுட்டிக் காட்டத்தான் வருங்காலத்தை
மனதில் வைத்து அன்றே தீர்க்க தரிசனமாக
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லி வைத்தார்களோ..?

அல்லது நதியின் இரு கரைகளில் இருக்கும்
இக்கரையின் மேல் நாம் அக்கரை கொண்டு கவனித்தால்
அதாவது பயிர் செய்தால் அந்த விவசாயம் மூலமாக
அக்கரையும் பசுமையாகும் என்று கூட சொல்லி இருக்கலாம்
நம்முடைய நாகரீகமே நதிக்கரையில் தோன்றியவைதானே
ஆகவே இக்கரையின் மேல் அக்கரை வைப்போம்
முதலில் நம் நாட்டின் வளத்தைப் பற்றி யோசிப்போம்
நம்மால் முடிந்த அளவு நம் நாட்டுக்காக ஏதேனும்
அக்கரையாகசெய்வோம்
இக்கரை பச்சையாகும் ,பசுமையாகும்


அன்புடன்
தமிழ்த்தேனீ

பழமொழி ஆய்வு எண் 7

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
கேட்டாலே சிந்தனையை தூண்டும் பழமொழி இது

ஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள்
இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம்
அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ஏற்பட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம்
ஊர் மக்கள் இரண்டு படும்போது கூத்தாடிக்கு எப்படி
கொண்டாட்டம் வரும் ....?


வரும் ….!!!!!! கூத்து என்பது நாடகம் என்னும் கலையின்
பிறப்பிடம்........ கூத்தாடிகள் தங்களுடைய கலைகளால்
மக்களின் கவலை மறந்து மகிழ்வாக இருக்க வைப்பர்
மக்களின் கவலை போக்கும் மருந்தாக கூத்து என்னும்
கலை பயன்பட்டு வந்தது,....


ஊர் மக்கள் இன, மன வேறு பாடுகள் கொண்டால்
இரண்டு ஊருக்கும் பொதுவாக இருக்கும் பெரியவர்கள்
கூத்து என்னும் கலைக்கு ஏற்பாடுகள் செய்வர்
அங்கு இரண்டு ஊர் மக்களும் ஒன்று கூடுவர்
அப்படி ஒன்று கூடும் போது இரண்டு ஊர்ப் பெரியவர்களும்
மக்கள் மகிழ்வாக இருக்கும் நேரம் பார்த்து,
பல, அறிவு பூர்வமான ,மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய ,
சமாதானங்களைக் கூறி இரண்டு ஊர்மக்களின்
விரோத மனப்பான்மையைப் போக்கினர்

அதற்கு கூத்து என்னும் கலை பயன் பட்டதால்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ஒரு கூத்து
நடத்த வாய்ப்பு வருமல்லவா.அதைத்தான் கூத்தாடிக்கு
கொண்டாட்டம் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பார்களோ ...?

" விஞ்ஞானமும் மெய்ஞானமும்
தண்டவாளங்களின் இரு இணை இரும்புகள்
போல் என்றும் சந்திக்காது
ஆனால் அவைகளை இணைக்கும்
நடு மரப் பட்டைகள் என்கிற உறவுப்பாலம்,
,கீழே தாங்குதற்கு கருணை உள்ளம்
கொண்ட பூமி , அன்பு பாசம் நேசம் போன்ற
இணைப்புகள், இவைகள் இல்லாது போயின்
மெய்ஞானமும் சரி விஞ்ஞானமும் சரி
வலுவிழந்து போய்விடும் "
இவற்றை உணர்ந்து பெரியவர்கள்
இரண்டு தண்டவாளங்களை இணைக்கும்
நடு மரப்பட்டைகளாக உறவுப் பாலமாக
செயல்பட்டிருக்கிறார்கள்
மனிதாபிமானத்தை ,அன்பை, பாசத்தை
ஒற்றுமையை வளர்த்திருக்கிறார்கள்

ஆனால் ...இப்போது பல கூத்தாடிகள்
தாங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்காகவே,
இனம் ,மொழி, மதம் சாதி ,போன்ற பலவகையான
ஆயுதங்களைப் பயன் படுத்தி ஊர் மக்களை,
இரண்டு படவைக்கிறார்கள்
கலகம் செய்கிறார்கள்,நாமும் அவர்களின் பேச்சை
செவி மடுத்து அடித்துக் கொண்டு சாகிறோம்,

கூத்தாடிகள் அந்தக் காலத்தில் பல நல்ல கருத்துக்களை
மையமாக வைத்து மக்களை அறிவுறுத்தி
நல் வழிக்கு அழைத்துச் சென்றார்கள்
இந்தக் காலத்தில் அதே கூத்தை ,நாடகத்தை ,
திரைப்படத்தை வைத்து மக்களை இரண்டு படுத்தி
கூத்தாடிகள் குளிர் காய்கிறார்கள்,
கொண்டாட்டமாக இருக்கிறார்கள்,

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்று நன்மைக்காக பெரியோர்கள் செய்து வைத்த
அதே பழ மொழியை
தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு
மக்களின் விரோதங்களைத் தூண்டி விட்டு
மக்கள் அடித்துக் கொண்டு இருக்கும்போது நாட்டின்
செல்வங்களை சத்தமில்லாமல் களவாடி
தங்களுக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்

இவை புறியாமல் மக்கள் மாற்றிமாற்றி
வேறு வழியில்லாமல் மீண்டும் அவர்களுக்கே
வாக்குகளை அளித்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
வாழும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்
என்று உணராமல் பல கோடிகளை தங்கள் வாரிசுகளுக்கு
சேர்த்து வைத்துவிட்டு , செல்கிறார்கள்
அந்த வாரிசுகள் கஷ்டப் பட்டு சம்பாதித்திருந்தால்
அந்தப் பணத்தின் அருமை தெரியும்
இலவசமாக வந்ததால் அந்தப் பணத்தைக் கொண்டு
அதையும் கெடுத்து தாங்களும் கெட்டுப் போய்
வன் முறைகளுக்கு வழி வகுக்கிறார்கள்
இவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல என்று உணர்ந்த
அக்காலத்துப் பெரியோர்கள் முன் உதாரணமாக தங்களுடைய
சொத்துக்களை நாட்டுக்கு தானமாக அளிக்க முன் வந்தனர்
மக்களின் நல் வாழ்வே, ஒற்றுமையே நாட்டின்
பெரும் பலம் என்று உணர்ந்து செயல் பட்டார்கள்
மக்களுக்கும் ஒற்றுமையாய் வாழ்வது அவசியம்
என்று உணர்த்தினார்கள்......
ஆயிரம் உண்டிங்கு ஜாதி ,
அது அத்தனையும் எங்கள்,
வம்சத்தின் மீதி,
நாட்டைத் துண்டாடும்
மதவெறியர்களுக்கு,
இது........
ஒரு எச்சரிக்கை சேதி......

நான் ஜாதியைப் பற்றி எழுதிய கவிதையில்
வரும் இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன



இதை நன்கு உணர்ந்துதான்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்னும் முது மொழியை அளித்து விட்டுச் சென்றனரோ...?

அன்புடன்
தமிழ்த்தேனீ

பழமொழிகள் ஆய்வு எண் 6

வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு
அட்டிகை வித்து வட்டியைக் குடு

இந்த பழமொழியை கேட்டவுடன் சிரிப்புதான் வருகிறது'
நாமெல்லாரும் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்

நமக்கு அடிப்படை தேவைகளே
இருக்க இடம் , உண்ண உணவு ,குடிக்கத் தண்ணீர்
இந்த மூன்றுக்குமே நாம் போராட வேண்டியிருக்கிறது
நம் அரசியல் அமைப்பு நமக்குத் தரும் வசதிகள்
அப்படி இருக்கின்றன
ஆனால் தற்போது நாமெல்லாரும் நிறைய சம்பாதிக்கிறோம்
நிறைய செலவழிக்கிறோம்
ஆனால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள்
சம்பாதித்ததும் குறைவு, செலவழித்ததும் குறைவு
பெரும் பான்மையான மக்கள் பேராசை இல்லாமல்
இருந்தார்கள்,அப்படி இருந்தும் சிலபேர்
பேராசைப் பட்டதால்
வந்த சொல் வழக்கு இது


கண்ணை விற்று சித்திரம் வாங்கியதைப் போல
என்று சொல்லுவார்கள்,
அது போல அந்தக் காலத்தில் பேராசைப்பட்டவர்கள்
பேராசைப்பட்டதால் பலவற்றை இழந்தனர்,

பொன் நகை போட்டுக் கொள்ளுதல் அந்தக் காலத்தில்
மிகவும் மதிப்பான விஷயம்,அந்தக் காலத்தில் என்ன ....?
இந்தக் காலத்திலும் அதே நிலைமைதான்
அதற்காக வட்டிக்கு பணம் வாங்கி அட்டிகை
என்னும் அலங்கார நகையை வாங்குவார்கள்
ஒட்டியாணம் என்னும் நகை இடையை அலங்கரிக்கும்
கைகளில் மோதிரங்கள், கழுத்தில் தங்க முகப்படாம்கள்
காதிலே வைரத் தோடுகள் எல்லாம் அணிந்து கொண்டு
மினுக்கினால்தான் அது மதிப்பு என்று நினைத்துக் கொண்டு
விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்னும் பழமொழியை
மதிக்காமல் அளவுக்கு அதிகமாக, தகுதி உணராமல் வீண் செலவு செய்துவிட்டுபிறகு அந்த வலையிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவார்கள்,...
மக்களின் இந்தப் பேராசையை பயன் படுத்திக் கொண்டு
சில பேர் தங்கள் கையிலிருக்கும் பணத்தை
வட்டிக்கு ஆசைப்பட்டு பலபேருக்கு கொடுத்து
அனியாய வட்டி வாங்கி கொழுத்த பணக்காரர்களாக
ஆவதற்கு சுலபமான வழியாக மக்களின் இந்த வேண்டாத
குணத்தை உபயோகித்தனர்

மக்களின் பேராசை என்னும் வேண்டாத உணர்வு
எந்த அளவு அவர்களை ஆட்டி வைத்திருக்கிறது
என்று நமக்குப் புறிய அளவு கோலாக இந்தப் பழமொழி
பயன்படுகிறது

இதே உணர்வு இப்போதும் நம்மை அழித்துக்
கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை...!
இப்போதெல்லாம் நம் செலவு செய்ய பணம் கூடத்
தேவையில்லை ஒரு சிறு அட்டை போதும்
ஆனால் பணத்தை திரும்ப செலுத்த பணம் வேண்டும்
இந்த விஷயத்தை அனேகமாக அனைவரும் மறந்தாற்போல
அட்டையை வைத்து செலவழிக்கிறார்கள்
பிறகுதானே கொடுக்க வேண்டும் என்கிறதைரியம்,,,,
பலரை கீழே அதளபாதாளத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது
அதுவும் போதாக் குறைக்கு எல்லாவற்றிலும் இருக்கும்
ஏமாற்றுக் காரர்கள் இவற்றிலும் தங்கள் கை வரிசையைக்
காட்டுகிறார்கள், அடுத்தவரின் கடவு எண்ணை உபயோகித்து
அவருடைய வங்கியில் உள்ள அத்தனை பணத்தையும்
கபளீகரம் செய்யும் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்
அத்தனைக்கும் காரணம் மனிதர்களின் பேராசைதான்

வருமானத்துக்கு தக்கபடி செலவு செய்து வளமாக
வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்
நாமோ அளவுக்கு அதிகமாக செலவு செய்து
அவமானத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்
கையில் இருக்கும் காசை எண்ணிப் பார்த்து செலவு செய்ததால்
அவர்களுக்கு வழ்க்கையின் திட்டமிடுதல் பழகி இருந்தது
இப்போது அப்படியில்லை
செலவு செய்து விட்டு மாட்டிக் கொண்டு முழிக்கிறோம்

ஒரு காலத்தில் தங்க நகை வாங்குவது தங்களுடைய
அந்தஸ்தை காட்டிக் கொள்ளவும் , அதற்குப் பிறகு
ஆபத்துக்கு தங்கம் உதவும் என்கிற எண்ணத்தினாலும்
தங்கம் வாங்கினர்...இப்போது ஆடம்பரத்துக்கே
தங்கம் அதிகம் பயன் படுகிறது
அரசே தங்கத்தை வாங்கிக் குவிக்கிறது
எல்லா நாடுகளும் தங்கம் வைத்திருக்கும் நாடுகளை
தராசில் நிறுத்து தகுதியை எடை போடுகிறது

தங்கம் வாங்குவதில் மீண்டும் விற்பதில்
உள்ள சிக்கல்களை ஆரய்ந்தால்

நாம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் அதைத்தவிற
வரிகள் என்று ஏராளமான செலவை நமக்கு
ஏற்படுத்தி லாபம் சம்பாதிக்கும் தங்க வியாபாரிகள்
அதே நகையை அவர்களிடம் மீண்டும் கொடுத்துவிட்டு
வேறு நகை வாங்கும் போது நாம் கொடுக்கும்
தங்கத்தின் விலையை வெகுவாகக் குறைத்து
மீண்டும் செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு,
மீண்டும் அவர்களிடம் வாங்கும் நகைக்கு செய் கூலி
சேதாரம் எல்லாம் போட்டு,,..... அப்பப்பா
நாம் உழைத்த பணம் நம்மை அறியாமலே தங்க நகை
வியாபாரிகளால் சுரண்டப் படுகிறது
அது மட்டுமல்ல கற்கள் பதித்த நகைகள் வாங்கினால்
வேறு வினையே வேண்டாம்
நமக்கு அவர்கள் விற்கும்போது கற்களுடன் சேர்த்து
எடை போட்டு அனியாய விலைக்கு விறபார்கள்
நாம் அதை மீண்டு அவர்களிடம் விற்கும்போது '
கற்களையெல்லாம் எடுத்து விட்டு,
அதற்கு மேலும் அந்த தங்கத்தை உருக்கி அழுக்கெடுத்து
அப்போது எவ்வளவு எடை இருக்கிறதென்று கணக்குப் பார்த்து
நமக்கு செலவு வைக்கிறார்கள்,நம்மை முட்டாளாக்குகிறார்கள்
இதைபோன்ற அனியாயத்தை நாம் தினமும் சந்திக்கிறோம்


தங்கத்தால் ஏற்பட்ட பேரழிவுகள்...


தங்கம் இன்று உலக வர்த்தகத்திலும், உலக மக்களின் மனங்களிலும் முக்கிய
இடத்தை பிடித்துள்ளது. ஆனால் வரலாற்றில் பல ரத்தக் கரைகளையும்
கொடுரங்களையும் கொண்டுள்ளது. உலக வரலாற்றில் தங்கத்துகாக நடந்த
படுகொலைகளில் சில.., இங்கே உங்களின் பார்வைக்கு...

1493 - 1520ம் வருடங்களுக்கிடையில் மேற்கு இந்தியா
22 டன் தங்கம் வெட்டிஎடுக்கப்பட்டது
என்று சேத்பெர் மதிப்பிடுகிறார்.
இந்த தங்கத்தை பெறுவதற்காக அனேகமாக அங்கிருந்த
சுதேசி மக்கள் அனைவருமே அழிக்கபட்டார்கள்.
தீவின் மக்கள் தொகை முதலில் 10 முதல் 30 லட்சமாக
இருந்ததென்று பல மதிப்பீடுகள் உள்ளன.
1514ம் வருடத்தில் 13,000 - 14,000
மக்கள் மட்டுமே எஞ்சிஇருந்தனர் என்று
லாஸ் கசல் என்பவர் தன்னுடைய
புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தின் போது ஸ்பானிஷ்காரர்களின் தங்கவேட்டையின் விளைவாக
மத்திய அமெரிக்காவின் வேறு பகுதிகளில் இருந்த
ஏராளமான மக்களும் அழிந்தார்கள் என்று நினைவு படுத்திக்கொண்டால்
இந்த 22 டன் தங்கத்தின்
விலை 20 லட்சம் உயிர்கள்,
அதாவது ஒரு டன்னுக்கு 1,00,000 உயிர்கள் அல்லது
ஒரு அவுன்சுக்கு முன்று உயிர்கள் விலை
என்று சொல்வது தவறில்லை. மஞ்சள்
உலோகத்தின் ரத்தக்கறை படிந்த வரலாற்றில்
இது மிக குரூரமான சாதனையே...

இதேபோல இன்று மெக்சிகோ என்று பெயரிடப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த,அஸ்டெக் அரசு ஒரு வளர்ந்த நாகரீகத்தை கொண்டு இருந்தது.
அஸ்டெக்க்குகளின் தலைநகரமான டெநேச்டிட்லனை முற்றுகையிட்டுக் கைப்பற்றியபோது அங்கே வாசித்த
3,00,000 மக்களில் 2,40,000 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் வெற்றியாளர்கள் 600 கிலோ தங்கத்தையே கைப்பற்றியதாக பழைய சுவடிகள் கூறுகின்றன...

இப்படி தங்கம் பல காலக்கட்டங்களில் பல லட்சம் மக்களின் உயிர்களைக்
குடித்துக் கொண்டிருந்தது என்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை.....

மேற்கண்ட குறிப்புகள்
பிரபலமான சோவியத் பொருளியலாளரும், எழுத்தாளருமான
பேராசிரியர் அ. வி.அனிக்கின் எழுதிய
"மஞ்சள் பிசாசே" (Yellow Devil) என்னும்
நூலிலிருந்து பெறப்பட்டவை...
அவைகளை தங்கத்தின் மீது இருக்கும்
மோகத்தை அழிக்கவே இங்கு இட்டிருக்கிறேன்

ஆனாலும் நகைக்கடைகளில் கூட்டத்துக்கு பஞ்சமில்லை
இத்தனைக்கும் காரணம்
நம்முடைய அறியாமை,பேராசை,வீண் படாடோபம்
இதைத்தான்
பெரியோர் வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்து
அட்டிகை விற்று வட்டியைக் கட்டு என்று சொல்லி இருக்கிறார்களோ

அன்புடன்
தமிழ்த்தேனீ

பழமொழிகள் ஆய்வு எண் 5

Min tamil

கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது

அருமையான பழமொழி

கல்லால் அடித்தால் எப்படியாவது தப்பி விட முடியும்
பெண்கள் கண்ணால் அடித்தால் கயல் விழிகளால்
காதல் என்னும் வில்லால் அடித்தால்
தப்ப முடியுமோ....ஆனானப்பட்ட விஸ்வாமித்திரரே தப்ப முடியவில்லையே
அவ்வளவு ஏன் காமன் கணை தொடுத்தததனால்
ஈசனே தப்ப முடியவில்லையே மோகினியிடம் மனதைப் பறி கொடுத்து விட்டாரே
இப்படியெல்லாம் தோன்றினாலும் இவையெல்லாம் உருவகக் கதைகளாகப் பட்டாலும்,
முடிவு என்னவோ கண்ணடிக்கு தப்ப முடியாது என்பதுதான்

ஆமாம் இப்பழமொழி என்ன பொருள் வருமாறு பெரியவர்கள்
கூறி இருக்கிறார்கள்....?
கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள்
ஏது பயனுமில என்று சொல்வார்கள்
ஆனானப்பட்ட ராமனும் லோக மாதாவான சீதையும் இல்லறத்தில் மாட்டிக் கொள்ளவில்லையா...?
"எண் சாண் உடலுக்கு சிரசே ப்ரதானம்
ஒருசாண் சிரசுக்கு கண்ணே ப்ரதானம் "

ஆமாம்
கர்ணனின் மனைவி பானுமதி பாடுவது போல
ஒரு பாடல் கண்ணதாசன் எழுதினார்
கண்கள் எங்கே நெஞ்ஜமும் அங்கே
கண்ட போதே சென்றன அங்கே
என்று
கண்ணால் கண்டவுடனே நெஞ்ஜமே இடம் மாறுகிறது
என்றால் என்ன ஒரு சக்தி கண்ணுக்கு...?
லோக மாதாவின் கடைக்கண் பார்வை பட்டாலே
அங்கு ககனமே செழித்தோங்குமே
குசேலனைக் கடைக்கண் கொண்டு பார்த்தாள்
மஹாலக்ஷ்மி கண்ணனின் வேண்டு கோளுக்கிறங்கி
குசேலன் குபேரனானான் என்று சொல்லுவர்

என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
என்று அரங்கனைக் கண்ட கண்ணால் வேறு எதையுமே பார்க்காமல் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்
திருப்பாணாழ்வார், அடடா என்ன ஒரு சக்தி கண்ணுக்கு...?

கைதேர்ந்த அனுபவமிக்க சிற்பிகள்
முதலில் ஒரு சிலையை வடிக்க
தோஷமில்லாத கல்லைத் தேர்ந்தெடுப்பர்
தேரை இருக்கும் கல் என்றால்
அதனைத் தள்ளிவிடுவர் அது போல அவர்கள்
ஒரு கல்லை செதுக்க உளி என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்துவர் , அப்படி உளியால் செதுக்கும்
போது மொத்த சிலையையும் வடித்துவிட்டு
அந்தச் சிலைக்கு கண்ணை மட்டும் திறக்காமல்
விட்டு வைப்பர் ஏனென்றால் மற்ற பாகங்கள்
கல்லடி பட்டாலும் ,அதாவது கொஞ்ஜம் சிதைந்தாலும்
அதை வேறு சிலையாக அளவைக் குறைத்து மீண்டும் சரி செய்து விட அவர்களின் திறமை பயன்பட்டது
ஆனால் கண்ணடி பட்டால் ,அதாவது அந்தச் சிலையின் கண்
ஏதேனும் அஜாக்கிறதையினால் அடி பட்டுவிட்டால்
அந்தச் சிலையை மீண்டும் சரி செய்ய முடியாது
அதனால் அதற்கென்று ஒரு நேரம் ஒதுக்கி
இன்னும் கொஞ்ஜம் கவனமாக கண்ணை செதுக்கும் போது
வெகு தீவிரமாக கலைநுணுக்கத்தோடு
அதிக கவனத்தோடு சிலையின் கண்ணைத் திறப்பர்
அதனால்தான் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது
என்று சொல்லி இருப்பரோ பெரியவர்கள்....?
அது மட்டுமல்ல ஒரு சிலை முழுமை பெறும் வரை
சிற்பியைத்தவிற மற்றவர்கள் அதைப் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்
ஏனென்றால் அதைப் பார்க்கும் யாராவது ஒருவர்
கண் திருஷ்டி போட்டுவிட்டால் சிலை சரியாக வராது என்பது
சிற்பிகளின் நம்பிக்கை

கண்ணடி என்பது கண் திருஷ்டி என்று பொருள் வருகிறது
ஆமாம் கண் திருஷ்டி என்று ஒன்று உண்டா
அதெல்லாம் சுத்தப் பயித்தியக் காரத்தனம்
என்று நாகரீகம் முற்றிய நிலையில் என் மனம் அதை ஒதுக்கினாலும் பெரியவர்கள் என்ன காரணத்துக்காக இப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று அலசினால்…

எப்படி இப்போதும் இளமையாக காட்சி அளிக்கிறீர்கள்
என்று கேட்பவர்களுக்கு நான் விளையாட்டாக பதில் சொல்வேன்
சிறு வயதிலேயே முதியவன் போல தோற்றம் அமைந்து விட்டதால் ,அப்போதிலிருந்தே உங்கள் கண்கள் என்னைப் பார்த்து
பழகிவிட்டதால் இப்போதும் என்னால் அதே மாதிரி தோற்றமளிக்க முடிகிறது என்று

கண்ணுக்கு பழக்கம் மிக முக்கியம் என்பது இந்த பதிலால்
கொஞ்ஜம் விளங்குகிறது அல்லவா

ஆமாம் இந்தக் கண்களின் பழக்கம் நமக்கு
எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு
என்னுடைய வாலிப வயதிலே எனக்கு ஏற்பட்ட
ஒரு சம்பவத்தை ஆராய்வோம்
ஒரு நாள் வில்லிவாக்கம் என்னும் ஊரிலே நான் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன்
அனேகமாக பருவப் பெண்கள் எதிரே வந்தால் அவர்களை
இந்தக் காலத்தில் இளைஞ்ஜர்கள் வெறிப்பதைப் போல
என்னால் பார்க்க முடிந்ததில்லை
ஏனென்றால் என் தாயாரின் வளர்ப்பு அப்படி
ஆனால் அதையும் தாண்டி ஒரு பெண்ணை
வைத்த கண்வாங்காமல் பார்த்த அநாகரீகமான செயலை
நான் செய்தேன்..........
ஏன் அப்படி செய்தேன் என்று என்னையே நான் ஆராய்ந்ததில்
எனக்கு ஒரு முடிவு கிடைத்தது அது '
அந்தப் பெண்ணின் கண்களில் இருந்த காந்தமோ
அல்லது அந்தப் பெண்ணின் பேரழகோ
ஏதோ ஒன்று என்னை ஈர்த்திருக்கிறது என்று உணர்ந்தேன்
மறு நாளும் அதே நேரத்துக்கு அதே சாலையில் நான் சென்று அந்தப் பெண்ணைக் காண தவமிருந்தேன்
அது ஒரு நேர ஒற்றுமையோ, அல்லது என் அதிர்ஷ்டமோ
மீண்டும் அதே தேவதை நடந்து வந்து கொண்டிருந்தாள்
மருநாளும் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.....
இது போல தொடர்ச்சியாக அவளைக் காண்பதும்
ஒவ்வொரு நாளும் என்னுடைய மனநிலை மாறு பாட்டை
அலசுவதும் எனக்கு ஒரு பெரிய ஆராய்ச்சியாகப் பட்டது

முதல் நாள் அவளைப் பார்த்தவுடன் நான் அதிர்ந்தேன்
ஆம் அவள் அழகு என்னை மயக்கியது
அவள் கண்கள் என்னை அடித்துப் போட்டது

மறு நாள் அதே அழகுடன் அந்தப் பெண்
அதே வாலிப வயதுடன் நான்
ஆனால் முதல் நாள் என்னை அடித்துப் போட்ட அந்த அழகின் ,கவர்ச்சியின் விகிதா சாரம் மறுநாள் சற்றே குறைந்திருந்தது
அதற்கு மறு நாள் இன்னும் சற்று குறைந்தது,
இப்படியே நான் அவளைப் பார்த்த கடைசீ முறை
எனக்கு அவள் பால் ஏற்பட்ட கவர்ச்சியின் விகிதா சாரம் வெகுவாக குறைந்து போய் விட்டது,
ஏன் இந்த மனோ நிலையில் இவ்வளவு மாற்றம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்
இறைவனின் படைப்பின் அற்புதத்தை யோசிக்க ஆரம்பித்தேன்
உலகில் உள்ள அத்துணை பெண்களுக்கும்
ஒரே மாதிரி அவயவங்கள்
உலகில் உள்ள அத்துணை ஆண்களுக்கும் ஒரே மாதிரி அவயவங்கள்
ஆனால் அவைகளை அமைக்கும்போது அளிக்கும் சிறு சிறு அளவு மாற்றங்களால் கோடானு கோடி மக்களை கோடானு கோடி விதமாகப் படைக்கும் இறைவனின் அற்புதம் விளங்கியது
சிறு சிறு அளவு மாற்றங்களில் இத்துணை மாற்றுப் படைப்புகள் கொடுக்க முடியுமா...?முடிகிறதே இறைவனால்

அதனால் எனக்குத் தோன்றிய
கவிதை வரிகளில் அதை வடித்தேன்

அதிரூப சுந்தரிக்கும் அழகில்லாப் பெண்களுக்கும்
அமைப்பெல்லாம் ஒன்றேதான்
அளவில்தான் வேறுபாடு
வெறிக்கின்றார் வெறிக்கின்றார்
அதி ரூப சுந்தரியை
வெறுக்கின்றார் வெறுக்கின்றார்
அழகில்லாப் பெண்களைத்தான்
அமைப்பெல்லாம் ஒன்றேதான்
அளவில்தான் வேறுபாடு

கற்றரிந்த புலவர்களும் கல்வி இல்லா
மூடர்களும் தன்னடக்கம் மிகக் கொண்டே
தான் வணங்கி இருக்கின்றார்
அமைப்பெல்லாம் ஒன்றேதான்
உள் அடக்கம்தான் வேறு பாடு

முழு நிலவோ மறைஒ நிலவோ அலைகடல்
தான் ஆர்ப்பரிக்கும்
அமைப்பெல்லாம் ஒன்றேதான்
உள் அடக்கம்தான் வேறுபாடு
என்று.........
அவ்வளவும் கண்கள் செய்த மாயம்,ஆமாம்
கண்கள் இதயத்தின் வாசல் என்று யாரோ
கூறியது நினைவுக்கு வருகிறது
முடிவு என் கண்களுக்கு அவள் அழகு பழகிவிட்டது
அவ்வளவே ,அவள் அழகு சற்றும் குறையவில்லை
என்பதே உண்மை
என் கண்களுக்கு அவள் அழகு பழகிவிட்டதால் என் இதயத்தில்
முதல் நாள் ஏற்பட்ட அதிர்வுகள் வரவில்லை
ஆகவே நாம் கண்ணால் பார்ப்பது இதயத்தை பாதிக்கும் என்பது உண்மைதானோ...?

அப்படியானால் கண் திருஷ்டி என்பது உண்மையாகத்தான்
இருக்க வேண்டும் ....
கண்களால் பார்த்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமானால்
எவ்வளவு ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் நாம்...?

முன்பெல்லாம் பல தவ வலிமை பெற்றோர்
கண்ணால் பார்த்தே ஒரு பெண்ணுக்கு ஒரு சிசுகர்ப்பம்
ஏற்படுத்த முடியும் என்று பல கதைகள் கேட்டிருக்கிறேன்
அது உண்மையா என்று ஆராய வேண்டும்
ஆக கண்களுக்கு இருக்கும் சக்தி வலிமையானதுதான்
என்பதில் சந்தேகமில்லை,ஆகவே
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பெரியவர்கள் சொன்ன பழமொழி உண்மையாக் இருக்கக் கூடும்
ஒரு பெண்ணை ,அவள் அழகை ரசிப்பதில் தவறேதும் இல்லை
ஆனாலும் அதில் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும்
நம் கண்கள் பார்ப்பதை அவள் உணர்ந்தாலும்
அந்தப் பார்வை அவளுக்கு உறுத்தாத வகையில்
இருக்க வேண்டும் என்று தோன்றியது

பருவ வயதில் ஏற்படும் விழிப்புணர்ச்சி
இயல்பானதுதான்,ஆனால் விழி புணர்ச்சி மிகவும்
தவறானது அல்லவா...?
அதனால்தான் பெரியவர்கள் திருஷ்டி சுற்றிப் போடுங்கள் என்கிறார்கள்
"கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்
சொற்கள் ஏது பயனுமில " என்னும் வாக்கிற்க்கேற்ப
கண்ணடி படுதல் கூடாது
கல்லடி பட்டால் ஆறும் கண்ணடி பட்டால் கஷ்டம்தான்
முன்பெல்லாம் நாம் எழுது கோலாக பயன் படுத்தி வந்த
ஒரு சாதாரண பென்சிலின் கூர்முனையை
நம்முடைய இரு கண்ணுக்கு மத்தியில் வைத்து இரு கண்ணாலும் நாம் அந்த கூர் முனையைப் பார்த்தாலே
சிறிது நேரத்தில் தலை சுற்றும், தலை வலிக்கும்
ஏனென்றால் நம் இரு கண்ணின் பார்வை அலகுகள்
ஒரு சேர ஒரு புள்ளியில்..
அதாவது இரு கண்ணுக்கு இடையே சந்திக்கும்போது
அது நம் நெற்றிப் பொட்டில் சந்திக்கின்றது
நெற்றிப் பொட்டில் இரு கண்ணின் பார்வையின்
அலகுகள் சந்திக்கும் போது நம் மூளையில்
ஏதோ ஒரு மாற்றம்,அல்லது ஒரு பாதிப்பு வருகிறது
அதனால் தலைய வலிக்கிறது, தலை சுத்துகிறது
அப்ப்டி இருக்க கண்ணடி படலாமா...கூடாது
மனோ தத்துவ நிபுணர்கள் ஒரு பெண்டுலத்தை
ஆட்டி விட்டு அதையே பார்கச் சொல்லுகிறார்கள்
அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போதோ
அல்லது அவர்களின் கண்ணையே பார்க்கச் சொல்லுகிறார்கள்
அப்படி நம்முடைய சாதாரண கண்கள்,அந்த மனோ தத்துவ
நிபுணரின் சக்தி வாய்ந்த கண்களைச் சந்திக்கும் போது
நம்முடைய பார்வையின் சந்திப்பு புள்ளியும்
அவருடைய பார்வையின் சந்திப்பு புள்ளியும்
ஒரு இடத்தில் சந்திக்கின்றன, சற்று நேரத்தில்
நம்முடைய சாதாரண கண்ணின் பார்வையின் வீரியம்
குறைந்து மனோதத்துவ நிபுணரின் பார்வையின் வீரியம் அதிகமாகும்போது நம் பார்வையின் சந்திப்பு புள்ளி
பின் வாங்குகிறது, அப்படி பின்வாங்கி அவருடைய பார்வையின்
சந்திப்பு புள்ளி நம்முடைய நெற்றிப் பொட்டில்
வந்து தாக்கும் போது நாம் வலுவிழக்கிறோம்
அவர் சொல்லுக்கு கட்டுபட்டு மயங்குகிறோம்
நம் மூளை அவர் கட்டுப்பாட்டில் வருகிறது
அதனால்தான் நெற்றிப் பொட்டை மறைத்து
ஏதேனும் ஒரு பொட்டு வைத்துக் கொள்ளச் சொல்லி
நம் முன்னோர் நம்க்கு அறிவுறை சொன்னார்களோ
அடடா பெரியவர்களின் ஞானம் நம்மை வியக்க வைக்கிறது
அந்தக் காலத்துப் பெரியவர்களின் ஞானம்தான்
இந்தக் காலத்து விஞ்ஜானம் என்கிற உண்மை புறிகிறது
அப்போது விஞ்ஞானம் என்று சொன்னால் நமக்குப் புறியாது
என்கிற ஒரே காரணத்தினால் அவர்கள் மெய்ஞானம்
என்று அனைத்தையும் ஏற்படுத்தி விட்டு சென்றனரோ
என்று எண்ணிப் பார்க்கையில் வியப்பேற்படுகிறது
அவர்களின் தீர்க்க தரிசனத்தின் மேல்

கல்லடி படவேண்டாம், கண்ணடி...... படவே வேண்டாம்
பெரியோர் சொல் வேதம்... நம்புவோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

பழமொழிகள் ஆய்வு எண் 4

" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"

அருமையான முது மொழி

பசியெடுத்தாலும் அழாமல் ,
அதாவது எந்த
ஒரு முயற்சியும் எடுக்காமல்
நான் இன்னும் முன்னுக்கு வரவில்லையே
என்று கவலைப் படும் பலர்,
அதாவது பரவாயில்லை,
அடுத்தவர்கள் முன்னுக்கு வந்து விட்டார்களே
என்று கவலைப்படும் பலர்,
இப்படி பலவகை மனிதர்கள் இருக்கிறார்கள்
அவர்களுக்கெல்லாம் உணர்த்துவது போல்
இந்த முதுமொழி அமைந்திருக்கிறது

நான் ஒரு முழு நீள நாடகத்தை
மூன்று நாளில் எழுதி முடிக்கும்
வழக்கமுடையவன்.......
என்னை பார்த்து சக நாடக எழுத்தாளர்கள்
கேட்பார்கள் மூன்று நாளில் எப்படி எழுதி
முடிக்கிறாய் என்று
அவர்களுக்கு நான் பதில் சொல்லுவேன்
மூன்று நாளில் முடிக்க முன்னூறு நாள்
யோசித்திருக்கிறேன்,உழைத்திருக்கிறேன்
என்று.....
இதுதான் வெற்றியாளர் பலரின் ரகசியம்
பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்
நேத்து கூட நான் அவரைப் பார்த்தேன்
ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராக
ஆகிவிட்டார் என்று,
ஒரே நாளில் கோடீஸ்வரராக ஆவதற்கு அவர்
எத்துணை முயற்சிகள் செய்திருப்பார் பலகாலமாக
அது வெளியே தெரிவதில்லை, எப்போதும் வேர்கள்
வெளியே தெரியாது விருட்ஷம் மட்டும் தான் தெரியும்
குள்ளமாக வாமனாவதாரம் எடுத்த நாராயணனின்
விஸ்வரூபம் வெகு சிலரே பார்த்திருக்கக் கூடும்
ஆனால் அந்த விஸ்வரூபத்தைக் கண்டவர்கள்கூட
அந்த விஸ்வரூபத்தின் பின்னால் இருக்கும்
"அணுவை சத கூறிட்ட அணுவிலும் உளன் "
என்று ஆன்மீகப் பெரியார்கள் சொன்னாற் போலே
அந்த அணுவிலிருக்கும் இறைவனைக் கண்டிருப்பார்களா
என்பது சந்தேகமே ....
அது போலத்தான் முயற்சிகளை காணாதோர் முடிவை
மட்டும் கண்டு ஆச்சரியப் படுகின்றனர்

முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும்
பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை
என்பது புறியவில்லை,
கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலை
அல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே...
அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலே
பலனை நீ எதிர் பார்க்க வேண்டாம்,
தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல
கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை
செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது


ஒரு உணவகத்தில் நான் ஒரு குழாயில் கையை
சுத்தம் செய்து கொண்டிருந்தேன்
இன்னொரு கோடியில் கடைசீக் குழாயில் இன்னொருவர்
கையை சுத்தம் செய்துகொண்டிருந்தார்

அவரைப் பார்த்து நான் சொன்னேன் வேடிக்கையாக
நீங்களும் நானும் கோடியில் ஒருவர் என்று
ஆமாம் அந்தக் கோடியில் அவர் இந்தக் கோடியில் நான்
அது போல வெகு சிலரே கோடியில் ஒருவராக
முயற்சி செய்கிறார்கள்
அல்லது கோடிகளுக்காக முயற்சி செய்கிறார்கள்
ஆகவே முயற்சி திருவினையாக்கும் என்பதைத்தான்
அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று சொல்லி
இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது

இன்னொரு முக்கியமான விஷயமும் நினைவுக்கு வருகிறது
ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது
அத்துணை நாட்கள் ஒரு தண்ணீர் நிரம்பிய
பையில் நீந்திக் கொண்டிருந்தாலும் ,
அந்த தண்ணீரிலும் அந்தக் குழந்தை ஸ்வாசிக்க
காற்றையும், தொப்புள் கொடி வழியே தாய்மையின்
உணர்வுபூர்வமான சக்தி , தாய் உண்ணும்
உணவிலிருந்தே எடுக்கப்பட்டு அக்குழந்தைக்கு ஏற்ப
அவ்வுணவை மாற்றி அனுப்பிய அபூர்வ சக்தியினால்,
உணவாக அனுப்பப்பட்டும் ,
அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது....
அது மட்டுமல்ல தாயின் தொப்புள் கொடியிலிருந்து
தயாரிக்கப்படும் மருந்து அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல
அனைத்து குழந்தைகளுக்கும் உயிர் காக்கும் ஜீவரசமாக
இருக்கிறது என்பதை விஞ்ஜானத்தில் கண்டு பிடித்து
அவைகளைப் பாதுகாக்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்
மேலும் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நம்
முன்னோர்கள் கூறியதையே இப்போதைய
விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
இப்படி இன்று நாம் கண்டு பிடிக்கும் அனைத்துமே
ஏற்கெனவே ஒருவன் கண்டு பிடித்து
செயலாற்றி இருக்கிறான் என்றால்..அவன்தான்
இறைவன் என்று ஒப்புக் கொள்வதில் தவறென்ன...?
ஏற்கெனவே அவன் உருவாவாக்கியதை கண்டு பிடித்த
நமக்கே விஞ்ஜானி என்று பெயரென்றால்
உருவாக்கிய அவனை இறைவன் என்று சொல்வதில்
தவறென்ன ....?
என்னே இறையின் சக்தி ,..!!!
என்னே இறையின் படைப்பு ரகசியம்
யார் சொன்னது இறை இல்லையென்று...?
தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்
அவனன்றி ஒரு அணுவும் அசையாது

அப்படி பாதுகாப்பாய் இருந்த குழந்தை
இயற்கையின் வழியே இந்த பூவுலகுக்கு
வருவதற்காக இடையே நசுக்கப் படுகிறது
நசுக்கப் பட்டு நழுவி முதலில் தலையைக் காட்டி
பின் மொத்தமாக இந்தப் ப்ரபஞ்ஜப் ப்ரவேசம்
அடைகிறது, அப்படி நசுக்கப் படும்போது
அது வரை அந்தக் குழந்தை ஸ்வாசித்த
காற்றும் தடைப்படுகிறது
அந்தக் குழந்தை வெளியே வந்து பூமியில்
விழுந்து அதன் உடல் இயக்கம்
ஆரம்பிக்க இருக்கும் அந்த இடைவெளியில்
அதற்கு மூச்சுவிட காற்று தேவை
அந்தக் காற்று உள்ளே போகும் வழியை
இது வரை இருந்த குடியிருந்த கோயிலின்
கருப்பக் க்ரகத்தில் இருந்த கருணையே
வடிவான தண்ணீரில் இருந்து விட்டு
திடீரென்று வெளியே வரும் போது
புறத்தில் இருக்கும் தண்ணீர் போய்விடும் ஆனால்
உள் உறுப்புகளில் முக்கியமாக ஸ்வாசக் குழாயில்
இப்போது அடைத்துக் கொண்டிருக்கும்,
அந்த தண்ணீர் வெளியேறினால்தான் காற்று
உள்ளே புக முடியும்
அதற்குதான் குழந்தை முயற்சி செய்து
அழ ஆரம்பிக்கிறது உரக்கக் குரலெடுத்து
அழ ஆரம்பிக்கிறது, அப்படி அந்தக் குழந்தை
அழும்போது அந்த தண்ணீர் ஸ்வாசக் குழாயிலிருந்து
வெளியேறுகிறது ,அப்படி தண்ணீர் வெளியேறியவுடன்
குழந்தை முதல் மூச்சு விடுகிறது
அப்படி அழவில்லையென்றால் மருத்துவர்கள்
அடித்தாகிலும் அக் குழந்தையை அழ விடுவர்
ஏனென்றால் அழுதால்தான் மூச்சே....
முதல் மூச்சே விடமுடியும்
முதல் மூச்சு விட்டால்தானே பிழைக்கும்
பிழைத்தால்தானே பால் குடிக்கும்
அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும்
என்று ஆன்றோர்கள்
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்


புரட்சி எங்கு உருவாகிறது என்று நானே
எனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டு
பல நாள் ஆராய்ந்து அதன் மூலத்தை
என்னுடைய பாணியிலே
ஒருகவிதையாக வடித்தேன்

" புரட்சி "
"அசை, புரளு, கவிழாதே நிமிரு
இயக்கம் கொள் பேரியக்கம் கொள்
அப்போதுதான் கருவரையிலிருந்தே
நீ வெளி வரமுடியும்
இல்லையென்றால் இறந்த குழந்தை "


என்று
ஆமாம் கருவரையிலேயே புரட்சி ஆரம்பித்து
விடுகிறது என்பதே உண்மை
இப்போது சொல்லுங்கள்

அழுத பிள்ளை பால் குடிக்குமா..........?
அழாத பிள்ளை பால் குடிக்குமா...?



அன்புடன்
தமிழ்த்தேனீ