திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, April 10, 2010

Use &Throw -உபயோகித்து தூக்கிஎறி

Use & Throw


உபயோகித்து தூக்கி எறி

என் மடிக்கணிணி கடந்த முப்பத்திஐந்து நாட்களாக என்னைவிட்டு யார் யாரிடமோ போய் உட்கார்ந்து கொண்டு என்னை எந்த வேலையையும் செய்யவிடாமல் நான் பட்ட அவதிகளையும், அந்த மடிக்கணிணியில் ஏற்பட்ட ப்ரச்சனயையும் நான் அடைந்த அனுபவத்தையும் அப்படியே எழுதுகிறேன், இதைப் படிக்கும் கணிணி உரிமையாளர்களுக்கு என் அனுபவம் ஒரு பாடமாக இருக்கும் என்பதே நோக்கம்

நான் துபாயில் மிந்தமிழ் மரபு சேகரத்துக்காக மின்பதிப்பாக்கம் செய்துகொண்டிருந்தேன், அப்போது ஒரு நாள் திடீரென்று என் கணிணியின் திரை பச்சை வண்ணம் கொண்டது, திரை முழுவதும் பச்சை நிறமாக மாறியது கண்ணன் மேல் ஆசைகொண்டாற்போல,

எழுத்துக்களும் , படங்களும் ஒன்றுமே தெளிவில்லாமல் கணிணியில் வேலையே செய்ய முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன்

துபாயில் கணிணியை சரி செய்ய அதிகம் செலவாகும் என்று என் மாப்பிள்ளை கூறியதால் என்னுடைய மகளின் கணிணியை அவளுடைய அலுவலக வேலைகளை முடித்தபின்னர் வாங்கி சில பணிகளை மிகவும் ப்ரயாசைப்பட்டு முடித்தேன்,

சென்னை வந்ததும் முதல் வேலையாக என்னுடைய மேஜைக்கணிணியை சரி செய்யும் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன், அவர் சொன்னார்

Compaq Laptop Service center ரில் கொடுத்தால் அவர்கள் முக்கிய்மான பாகங்களை மாற்றுவர் அதனால் அதிகம் செலவாகும் எதனால் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் கொடுக்கலாம் என்றார்

அவர் கூறியதைக் கேட்டு மடிக்கணினியை அடையாரிலுள்ள அவருடைய கடைக்கு எடுத்துச் சென்றேன், நாலு மணி நேரம் உடகாரவைத்தார், நாலுமணிநேரம் கழித்து கணிணித் திரையின் (Cable) கெட்டுப் போயிருக்கிறது அது உடனே கிடைக்காது ,இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் கிடைக்குமா பார்க்கிறேன் என்றார், சரி என்று மடிக்கணினியை எடுத்துவந்தேன், நான்கு நாட்களாகியும் அவரிடமிருந்து செய்தி எதுவும் வராததால், நானே தொலை பேசியில் அழைத்து கேட்டவுடன் ,அந்த(Cable) கிடைக்கவில்லை என்றார், சரி இதெல்லாம் சரிப்படாது என்று முடிவுக்கு வந்து கூகிளில் தேடு பொறியில் சென்று அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் பெயரை எழுதி தேடினதில் கிடைத்தது வடபழனியில் இருக்கும் ஒரு கணிணி சரி செய்யும் நிறுவனத்தின் ஒரு விலாசம், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், அவர்கள் மிகவும் மரியாதையாக பேசினர் , அவர்களே வந்து என் மடிக்கணிணியை வாங்கிச் சென்று சரி செய்து மீண்டும் எடுத்து வந்து வீட்டிலேயே அளிப்பதாகக் கூறியதால் அகமகிழந்தேன்

சொன்ன சொல் தவறாமல் அவர்களும் ஒரு பொறியாளரை அனுப்பி என்னுடைய கணிணியை வாங்கிச் சென்றனர்

அன்றிலிருந்து தினமும் அவர்களுக்கு தொலை பேசி வழியாக நான் தொடர்பு கொண்டு பேசி என்னுடைய தொலை பேசிக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்தது,,ஆனால் அவர்கள் ஒரு முறை கூட தொலை பேசியில் என்னை அழைத்து என்னுடைய மடிக்கணிணியின் நிலை என்ன என்பதக் கூறவே இல்லை, அதோடு என் கணிணியில் சில பாகங்களை மாற்றவேண்டும் அதற்கு ரூபாய் பதினைந்தாயிரம் ஆகும் என்றும் எனக்கு செய்திஅளித்தனர்

ஒரு கட்டத்தில் மனம் மிகவும் வெறுத்து அவர்களைத் தொலை பேசியில் அழைத்து மரியாதையாக அன்றே என்னுடைய மடிக்கணினியை கொண்டு வந்து என்னிடம் ஒப்படைக்கும்படியாகவும் அப்படி இல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்று ஆதாரபூர்வமாக மிரட்டியதால் முப்பது நாட்களுக்குப் பிறகு என் மடிக்கணிணியை எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து என்னிடம் கொண்டு வந்து அளித்தனர்,

கடைசியில்தான் தெரிந்தது அந்த நிறுவனமும் உண்மையான அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ள அலுவலகம் அல்ல என்று, எனக்கு குழப்பம் ஏன் கூகிள் தேடு பொறியில் கூட சரியான விவரங்கள் கிடைப்பதில்லை என்று, மீண்டும் பலரை விசாரித்து உண்மையான அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தை அண்ணாசாலையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து அங்கே சென்று உட்கார்ந்தேன், ஒரு விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து அளிக்க வேண்டினர், நானும் அவ்வாறே அளித்தேன், அவரிடம் கேட்டேன் கூகிள் தேடு பொறியில் உங்கள் நிறுவனத்தின் பெயரை எழுதி தேடினால் ஏன் உங்களின் உண்மையான விலாசம் கிடைக்கவில்லை என்று, அவர் மிகவும் சாதாரணமாக கூறினார் , இன்னும் வலையேற்றாமல் இருந்திருக்கும் என்று, அது சரி அவர்கள் வலையேற்றாமல் இருந்ததால் நாமல்லவோ மாட்டிக்கொண்டோம் வலையில் என்று எண்ணிக்கொண்டே இருக்கும்போது

எனக்கு ஒரு எண் வழங்கப்பட்டது அந்த எண்ணை அவர்கள் அழைக்கும் வரை உட்கார்ந்திருந்து மடிக்கணிணியை எடுத்துக்கொண்டு அந்த பொறியாளரிடம் அளித்தேன் அவர் திருப்பான் கொண்டு என்னுடைய மடிக்கணிணியை திறந்து பார்த்துவிட்டு ,சரி செய்து கொடுக்கிறோம் என்றார், நான் என்னுடைய கணிணியின் Hard Disk கை கழற்றிக் கொடுங்கள் ,அதிலே முக்கியமான விவரங்கள் இருக்கின்றன என்றேன், அதற்கு அவர் ,அப்படி முடியாது ,உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் Hard Disk க்கிலிலுள்ள விவரங்களை நீங்கள் எங்காவது சேமித்துக்கொண்டு பிறகு வந்து அளியுங்கள் என்றார், உடனடியாக சேமிக்க எங்கே போவது , அதனால் விழித்தேன், அவர் உடனே மாம்பலத்தில் உள்ள ஒரு கடையின் பெயரை சொல்லி அந்தக் கடையில் தனியாக வெளியில் வைத்து சேமிக்க Hard Disk விற்கிறார்கள், அதை வாங்கி உங்கள் விவரங்களை சேமித்து வைத்துகொண்டு உங்கள் வீட்டின் பக்கத்திலேயே எங்கள் அலுவலகம் அண்ணா நகரிலே இருக்கிறதே அங்கேயே நீங்கள் அளிக்கலாமே என்றார்

அதுவும் நல்ல ஆலோசனைதான் என்று மீண்டும் காரை ஓட்டிக்கொண்டு மாம்பலம் சென்று அந்தக் கடையில் External Hard Disk விலை கேட்டேன், அவர் சொன்னார் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் என்றார், மனம் வெறுத்துவீட்டிற்கே திரும்பி வந்து உட்கார்ந்து கூடியவரையில் முக்கியமான கோப்புகளை, புகைப்படங்களை Rewriteble C D யில் எழுதிக்கொண்டு, என் வீட்டின் அருகே இருக்கும் அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் கிளைக்கு சென்று அங்கும் இதே போன்ற நடைமுறைகளைக் கையாண்டு கணிணியை அங்கிருந்த பொறியாளரிடம் ஒப்படைத்தேன்,முன் பணமாக ரூபாய் முன்னூறு கட்டச் சொன்னார்கள், நாம் அவர்கள் கூறும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு அவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் நம் கணிணியை சரி செய்ய ஆகும் செலவில் அந்த முன்னூறு ரூபாயைக் கழித்துக்கொள்வதாகவும் , அப்படி இல்லையென்றால் அந்த முன்னூறு ரூபாய அவர்களின் அலுவலகத்துக்கு சேர்ந்துவிடும் என்று கட்டளை போட்டார்கள் , ஒப்புக்கொண்டு முன்னூறு ரூபாய் அளித்து ரசீது பெற்றுக்கொண்டேன், அவர் கணிணியை திறந்து முதலில் என்னுடைய Hard Disk ஐ கழற்றி என்னிடம் தந்துவிட்டு கணிணியை மட்டும் கொடுத்தால் போதும் என்று கணிணியை வாங்கி உள்ளே வைத்தார்,

மூன்று நாட்கள் சென்ற பின்னர் எந்த தகவலும் அவர்களிடமிருந்து வராத்தால் நானே நேரில் சென்று விசாரித்தேன், அப்போது அவர் ,ஐய்யா உங்கள் கணினியை பரிசோதனை செய்தோம் , அதன் விவரங்களை உங்களுக்கு இணையத்தில் மடலில் அனுப்புகிறோம் என்றார்கள், அதற்குப் பிறகு இணையத்தில் மடலில் விவரம் அனுப்பினார்கள், சில குறிப்பிட்ட பாகங்களின் பெயர்களை எழுதி அந்த பாகங்களின் விலையையும் எழுதி மொத்தம் 18 ஆயிரம் செலவாகும் என்றார்கள்,

என்னுடைய மகனுக்கு அவர்கள் அனுப்பிய மடலை முன்னுப்பினேன், அவன் ,, அப்பா நான் வேறு கணிணி வாங்கி அனுப்புகிறேன் வீணாக 18ஆயிரம் செலவழிக்க வேண்டாம் என்று கூறவே அந்த

அந்தக் குறிப்பிட்ட நிர்வாகத்தின் கிளைக்கு சென்று என் மடிக்கணினியை திருப்பித் தரும்படிக் கூறினேன் , அவர்கள் நீங்கள் இங்கே உட்கார்ந்து உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் நாங்களே கொண்டு வந்து வீட்டிலே கொடுக்கிறோம் என்றார்கள், நம்பி வீட்டுக்கு வந்தேன்

இரண்டு நாட்கள் அவர்களுக்கு தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு

மேலும் கொஞ்சம் பணம் தொலைபேசிக்கு செலவழித்து, கடைசியாக

ஒரு நாள் என் மடிக்கணிணியை எடுத்துக்கொண்டு ஒருவர் வந்தார் ,

அவர் என் மடிக்கணினியை என்னிடம் அளித்து விட்டு ஒரு கடிதத்தில்

பெற்றுக்கொண்டேன் என்று கையெழுதிடச்சொன்னார்,

என்னுடைய கணிணி திறக்க முடியவில்லை, மூடமுடியவில்லை

மூடித்திறக்கும் பகுதியில் உள்ள ஒரு தகட்டை உடைத்திருந்தார்கள்

நான் இப்படியே என் கணிணியை வாங்கிக் கொள்ள முடியாது நான் உங்களிடம் அளித்த அதே நிலையில் அளித்தால் வாங்க்கிக் கொள்கிறேன் என்று கூறி மீண்டும் அவர்களிடமே என் கணினியை ஒப்படைத்தேன்,

மீண்டும் அந்த அலுவலகத்துக்கு சென்று கேட்டால் அவர்கள் நான் இப்போது கணிணி இருக்கும் நிலையில்தான் அவர்களிடம் அளித்தேன் என்று வாக்குவாதம் செய்தார்கள், நான் மிகப் பொறுமையாக அவர்களிடம் நான் அண்ணா சாலையிலுள்ள பீட்டர்ஸ் சாலையில் உள்ள அவர்களின் இன்னொரு அலுவலகத்தில் அளித்ததையும் சுட்டிக் காண்பித்து ,அங்கே இருந்தவர் என் கணிணியை திறந்து பார்த்தார் ,அவரிடம் வேண்டுமானல் கேளுங்கள் நான் எப்படி உங்களிடம் கொடுத்தேன் என்று தெரியும் என்று வாதாடி நிரூபித்து

அவர்களையே சரி செய்து கொடுக்கும்படி வற்புறுத்தி மேலும் இரண்டு நாட்கள் காத்திருந்து சரி செய்து வாங்கினேன்

ஆக மொத்தம் நான் எந்தக் காரணத்துக்காக இப்படியெல்லாம் அலைந்தேனோ அந்த தவறு சரிசெய்யப்படவே இல்லை என்னுடைய கணினியில், என்பதுதான் முக்கியமான செய்தி



இதற்காகத்தான் மேலை நாடுகளில் Use And Throw என்னும் உத்தியைக் கடைப்பிடிக்கிறார்களோ என்று தோன்றியது

இந்தக் கலாச்சாரம் மேல் நாட்டுக் கலாச்சாரம் என்று நாம் நினைக்கிறோம் இல்லை நம் நாட்டுக் கலாச்சாரம்தான்,

இந்த Use And Throw உத்தியை நாமும் கடைப்பிடிக்கிறோம் நம்மைப் பெற்றவர்களிடம்,

அவர்களை உபயோகித்து நாம் முன்னுக்கு வந்த்தும் அவர்களை வெளியே துரத்தி விடுகிறோம்



ஆனால் இந்த Use And Throw உத்தியை நாம் வாங்கி உபயோகிக்கும்

மின்சாதனப் பொருட்களிடம் உபயோகிப்பதில்லை நாம்

பணம் பணம் பணம் அதுதானே காரணம்



அன்புடன்’

தமிழ்த்தேனீ