திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Saturday, September 15, 2012

அந்த நாள் அப்பளம் நாவிலே வந்ததே


                                                                        

                                                              ஶ்ரீராமஜெயம்

அந்த நாள் அப்பளம் ஞாபகம் நாவிலே வந்ததே நண்பரே நண்பரே நண்பரே இந்த நாள் அப்பளம் அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் நண்பரே

பழங்ககாலம்  போல் முறுக்கு, அதிரசம், தேன்குழல், ஓமப்பொடி, முச்சரிகை (முள் முறுக்கு) சீடை, வடாம், வற்றல் , அப்பளம் போன்றவைகளை செய்ய வீட்டில் இருக்கும் பெண்டிருக்கு மறந்து போனதோ? அல்லது அவர்களின் சுறு சுறுப்போ ஏதோ ஒன்று காரணமாகி  இப்போதைய நாட்களில் சுவையான வீட்டுப் பலகாரங்கள் , பக்ஷணங்கள் சாப்பிடாமல் நாக்கு  இயற்கையான ருசிக்காகவும் மணத்துக்காகவும் ஏங்கிகொண்டிருக்கிறது.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன், சரவணபவன் போன்றோர் அவர்கள் வியாபாரம் செய்து கொழிக்க  நம் இல்லத்தரசிகளை சுகவாசியாக மாற்றிவிட்டனர். இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க என் இல்லத்தரசியை ஏதாவது பலகாரம் செய்யேன் என்று வேண்டினேன்.

எனக்கும் வெகு நாட்களாக அப்பளம் இடவேண்டும் என்று ஆசை ,ஆனால் எனக்கு அப்பளம் செய்யும் முறை தெரியும் ,ஆனால் ஒழுங்காக இடவராது அதனால் நீங்கள் இட்டுக்கொடுப்பேன் என்று உறுதி அளித்தால் அப்பளம் செய்கிறேன் என்றாள். ஆர்வ மிகுதியின் காரணத்தால் முன் யோசனையின்றி ஒப்புக்கொண்டு விட்டேன்.

சுறு சுறுப்பாக என் இல்லத்தரசியும் அப்பளத்துக்கு அரை படி அல்லது மூன்று ஆழாக்கு உளுத்தம் பருப்பை நன்றாக மாவாக அரைத்துக்கொண்டு அந்த மாவில், ஒரு பிடித்த பிடி பிரண்டையை எடுத்து  அரைக் கைப்பிடி உப்பு சேர்த்து நீர் விட்டு அரைத்து அதை வடிகட்டி , அந்த நீரை உளுத்தம்பருப்பு மாவில் சேர்த்து , ஒரு டீஸ்பூன் சோடா உப்பைப் போட்டு , ரெண்டு அல்லது மூன்று டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து ,  அம்மிக்கல்லில் சிறிது தேங்காயெண்ணையை தடவி அந்த மாவை வைத்து இரும்பு உலக்கையிலும் தேங்காய் எண்ணையைத் தடவி மாவை நன்றாக இடி இடியென்று இடித்து கெட்டியாக சப்பாத்திமாவு செய்வது போல் கலந்து வைத்துக்கொண்டு,  ஒரு பெரிய அப்பளமாவு உருண்டையாக ஆக்கி  அதை சிறு சிறு ஊருண்டைகளாக உருட்டி வைத்துக்கொண்டு இப்போது அப்பளம் இட்டுத் தாருங்கள் என்று  அப்பளம் இடும் குழவியையும் கொண்டு வந்து என்னிடம் வைத்தாள்.

சற்று நேரம் கீழே தரையில் உட்கார்ந்து அப்பளம் இடும் மணையில் முயற்சி செய்தேன், முதுகு வலி வந்தது. சரி நின்று கொண்டு செய்வோம் என்று எண்ணி அடுக்களையில் இருந்த கிரானைட் மேடையில் கொண்டுபோய் வைத்துக்கொண்டு இடத் தொடங்கினேன்.  தொடங்கிய பின்தான் தெரிந்தது அதில் எவ்வளவு நுணுக்கம் இருக்கிறதென்று

நுணுக்கம் 1. : உருண்டையை குழவியால் அழுத்தி இடும்போது அந்த உருண்டை தரையிலோ குழவியிலோ ஒட்டிக்கொண்டால் இடவராது. நுணுக்கம் 2. : அப்பளத்தின் கனம் எல்லா இடங்களிலும் சீரான அளவைக் கொண்டிருக்குமாறு குழவியை உருட்டவேண்டும். நுணுக்கம் 3. : அப்பளம் என்றாலே பூரண சந்திரன் போல் வட்ட வடிவமாக இருக்க வேண்டும்.   நுணுக்கம் 4. : பூரண சந்திரனில் எங்கும் ஒரு துவாரம் கூட இல்லாமல் கிழியாமல்  இடவேண்டும்.

முயற்சியைத் தொடங்கினேன் , நின்று கொண்டே அப்பளம் இட்டதால் முதுகுவலி  இல்லாமல் எளிதாக இருந்தது. ஆனால் முறையாக வட்டமாக, மெலிதாக ஒரே சீரான கன அளவுடன் கிழியாமல் இடுவது ப்ரும்மப் ப்ரயத்தனமாக இருந்தது. சற்றே தூரத்தில் என் இல்லத்தரசி ஒரு மர்மமான ஏளனப் புன்னகையுடன் நின்றிருக்கிறாள். அதுவேறு  முதுகில் உறுத்திக்கொண்டே  இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விகரமாத்தன் போல் முயன்று கொண்டே இருந்தேன் .

அதிலேயே ஒன்றிப் போன நிலையில் ஒரு அதிசியம் நிகழ்ந்தது.  ஆங்கிலத் திரைப்படங்களில் அதுவும் குறிப்பாக சண்டைப்படங்களில் கடைசீக் காட்சியில் வில்லனால் அடிபட்டு இறக்கும் தருவாயில் கதாநாயகனுக்கு அவனுடைய குரு கற்றுக் கொடுத்த நுணுக்கமான  ஜூடோ, கராத்தே, குங்க்பூ, போன்ற கலைகளின் நுணுக்கம் நினைவுக்கு வந்து குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தக் கதாநாயகன் ஆவேசம் கொண்டு எழுந்து வில்லனை புரட்டிப் புரட்டி அடித்து தூக்கி வீசிப் பந்தாடி, அந்தரத்திலே பறந்து தாக்கி வில்லனை செயலிழக்கவைப்பது போல் எனக்குள்ளும் ஒரு வீரமும் நுணுக்கமும் பொங்கி வந்துகொண்டிருந்தது.

ஆமாம் முப்பது வருடங்களுக்கு முன்  என் தாயார்  அப்பளம் இடும்போது எனக்கும் சொல்லிக் கொடுத்த நினைவுகள் மனக்கண்ணில் அப்படியே கருப்பு வெளுப்பு நிறத்தில் ஒலியும் ஒளியுமாக படமாகத் தெரிந்தன. 

வீறுகொண்டு எழுந்து அப்பளம் இடத் தொடங்கினேன்,  கிழியாமல் இருக்க அரிசி மாவிலே தோய்த்து இட்டேன். மாவை ரொம்ப ஊட்டாதே. அப்படி மாவை ஊட்டினால் அப்பளம் பொறிக்கும்போது சிவந்து போய்விடும் என்று என் தாயாரின் குரல் காதிலே அசரீரியாக விழுந்தது .

மாவிலும் சற்றே தோய்த்துக்கொண்டு அந்த மாவு அப்பளத்திலே ஒட்டாதவாறு உதறி இடத் தொடங்கினேன்.  ஒரே சீராக வரவேண்டுமென்றால் மாவின் மேல் குழவியை சமமாக வைத்து உருட்டினால் கீழே இருக்கும் அப்பளம் தானாகவே சுழன்று நகர்ந்து எளிதாக சீரான முறையில் வரும். என்றாள் அம்மா அசரீரியாக.

அப்படியே ஏதேனும் ஒரு இடத்தில் கிழிந்துவிட்டால் சற்றே அப்பளமாவை எடுத்து அந்த இடத்தில் வைத்து அதையும் சேர்த்து இட்டால் ஓட்டை அடைந்து விடும் என்றும் அம்மாவின் குரல் கேட்டது. அப்படியே அப்பளத்தை இட ஆரம்பித்தேன் ஒரு மணிநேரத்தில் வெற்றிகரமாக சுமார் 50 அப்பளங்கள் இட்டு முடித்து இல்லத்தரசியை திரும்பிப் பார்த்தேன்.

இப்போது அவள் கண்களில் ஏளனப் புன்னகை மறைந்து ஆச்சரியப் புன்னகை மிளிர்ந்தது. கணவன்  ஆக்கபூர்வமாக எதையும் செய்யத் தயாரானவன், தன்னம்பிக்கை கொண்டவன் , தெளிவான ஞானமுடையவன், தைரியசாலி, நுணுக்கங்கள் தெரிந்தவன்  என்று தெரிந்தால் இல்லத்தரசிகளுக்கு  தானாகவே காதலும் கனிவும்  , அன்பும் பாசமும்  ஊற்றெடுக்காதோ? ஆகவே இது இல்லறம் சிறக்கவும் அருமையான வழியாகத் தோன்றியது.

அந்த ஐம்பது அப்பளங்களையும் செய்தித் தாளை விரித்து  அதில் பரப்பி வெய்யிலில் சற்று நேரம் உலர்த்திவிட்டு அப்படியே எடுத்து ஒரு தாம்பாளத்தில் போட்டு காற்றாட வைத்திருக்கிறேன். சற்றே காற்ராடியது எடுத்து ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்தால் தேவையான போது எடுத்து நெருப்பிலே வாட்டிக் காய்ச்சியும் உண்ணலாம்.

அல்லது எரியும் அடுப்பிலே வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் காய்ந்ததும்  பொறித்தும்  உண்ணலாம். வற்றல் குழம்பு கலந்த சாதத்துக்கும். ரசம் சாதத்துக்கும், புளியோதரை போன்ற கலந்த அன்னங்களுக்கும் தொட்டுக்கொண்டு உண்ணலாம்.

இப்படி பெரியவர்கள் செய்யும் போது பார்த்ததனாலேயோ , அல்லது அவர்கள் பல வருடங்களுக்கு முன் சொல்லிக்  கொடுத்ததனாலேயோ பற்பல நுணுக்கங்கள் நம் மூளையில் நம்மை அறியாமலே புதைந்திருக்கிருக்கிறது.

நம்முடைய மூளை என்னும் உறுப்பு ஒரு முறை கற்றுக்கொண்ட  கலையை  அப்படியே அழியாமல் தேக்கி வைத்துக் கொள்கிறது  . ஆகவே நம்மை அறியாமல் நம்முள் இருக்கும் கலைகளை ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்து மீண்டும் பழங்கலைத் திறமைகளை உயிர்ப்பிப்போம் .

இப்படியாக  நாம் சுவைத்த தின்பண்டங்களை நாமே மீண்டும் ஒரு முறை செய்து பார்த்து அனுப்பவப்பட்டுக் கற்றுக்கொண்டு வீட்டிலேயே செய்ய ஆரம்பித்தால். தேவையில்லாத நோய்களைத் தடுக்கலாம்.உடற்பயிற்சிக் கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லாமல்  இயற்கையாக ஆரோக்கியமாக வாழ வகை செய்துகொள்ளலாம் 

நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், இவை போன்று ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்வதால் மனமும் அதிலேயே ஒன்றி ,தியானம், யோகா போன்றவைகளைச் செய்வதால் உண்டாகும் பலனை நம் வேலைகளை நாமே செய்து கொள்வதால் அடையலாம் என்று தோன்றியது. அது மட்டுமல்ல உரலில் மாவு ஆட்டுதல், நம் துணிகளை நாமே துவைத்தல், அம்மிக்கல்லில் அரைத்தல், கீழே உட்கார்ந்து  உணவு உண்ணுதல் போன்ற இயற்கையான வழி முறைகளால் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம்.

நாமே பொருட்களை வாங்கி வீட்டிலேயே செய்வதால் சுத்தமாகவும், சிக்கனமாகவும்  இருக்கும். வெளியில் வாங்கினால் ஒரு அப்பளம் ஐந்து ரூபாய்கள் என்றால் நாமே செய்தால் ஐந்து அப்பளங்கள் ஒரு ரூபாய்க்குள் அடங்கும். பணத்தையும் சேமிக்கலாம் .ஆரோக்கியத்தையும் உடல் வளத்தையும் மீட்டலாம்.  இப்படி நான் அப்பளம் இட்ட செயல் முறையை ஒளிப்படமாகப் பார்க்கவேண்டுமென்றால்  ஆர்வத்துடன் கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்குங்கள்

http://www.youtube.com/watch?v=l-KMgutDJEg&feature=plcp

அன்புடன்

தமிழ்த்தேனீ