திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, August 17, 2009

உட்ப்ரயாணத்தின் மகிமை

ஒவ்வொரு உயிரிலும் சக்கராயுதமும்
சங்கும், வில்லும் வேலும்,கதையும், போன்ற பதினாறு ஆயுதங்களும்,ஆழிப்படைகளும், உள்ளடங்கி ஒரு சைதன்யம் இருப்பதை உலகிற்கு கண்ணன் உணர்த்திய நிகழ்வே மஹாபாரதம்

ஒவ்வொரு உயிரும் இந்த சக்தி இருப்பை தாமாக தம்மை உணர்ந்து அறிந்துகொண்டு தம் சக்தியை வெளிப்படுத்தவேண்டும் என்பதே இறைவன் கண்ணனின் கீதோபதேசம்

நம்முள்ளே ஒளிந்திருக்கும் அத்துணை சைதன்யத்தின்,ஆயுதங்களின் மஹா சக்தியின் முழுப்பரிமாணத்தையும் உணரும் நிகழ்வே ஆழ்வார்கள் ,நாயன்மார்கள் நமக்களித்த போதனைகள்

நம் சக்தியை முழுதாக உணர்ந்து தகுதியான இடத்தில் தகுதியான நேரத்தில் வெளிப்படுத்தி நம் ஆக்க சக்தியை நமக்கும் புரிகின்ற வகையிலே ஏற்படுத்தப்பட்ட கதா பாத்திரங்கள்தான்
இதிகாச புராணங்களின் உள் நோக்கம்,

நம்மிலிருந்து நாமே பிரிந்து கருடப் பார்வையாக நம்மையே உற்று நோக்கினால் நம் உள்ளே தினம் நடக்கும் குருக்ஷேத்திரப் போரை நாமே காணலாம், நம்மை உணர இதைவிடச் சாலச்சிறந்த வழி வேறேதும் இல்லை

அதனால் உட்ப்ரயாணம் மேற்கொள்ளுதலே உயரப்பறத்தலுக்கும், உள்ளுணர்வுகளுக்கும் வழி வகுக்கும்


கருடப் பார்வையில் ககனம் முழுவதும் நம் கண்ணுக்கும் எட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ


Friday, July 3, 2009

கட்டிடம் கட்டுவோமா

கட்டிடம் கட்டுவோமா
தமிழ்த்தேனீ
பக்கத்து நிலத்தில் வீடு கட்ட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள், எத்தனை முறைகள் வீட்டைப் பெருக்குவது, எத்தனை முறைகள் வீட்டைச் சுத்தம் செய்வது? என்ன செய்தும் பலனே இல்லை. கால்வைத்து நடக்க முடியவில்லை. காலெல்லாம் மண்ணும் அழுக்கும் சேர்ந்த கலவை ஒட்டிக்கொண்டு நடக்க நடக்க வீடெல்லாம் அழுக்காகிறது. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தூசியினால் ஏற்படும் இருமல் போன்றவற்றால் அடிக்கடி வைத்தியரிடம் போகும் நிலை. அதையும் தவிர்த்து தினமும் அங்கே நிற்க வைத்திருக்கும் வாகனங்களைச் சுத்தம் செய்வது அலுவலுக்குப் போகும் அவசரத்தில் மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.என்னதான் செய்வது என்று புலம்பிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களே! ஆமாம், இந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்னும் அலுவலகம் செயல்படுகிறதா, இல்லையா என்று சந்தேகப்படும் பொது மக்களே!நம் நாட்டில் தான் இப்படியா? அனைத்து நாடுகளிலுமே இப்படித்தான் பல கட்டடங்கள் கட்டும் போது அந்தக் கட்டடத்தினால் ஏற்படும் தூசிகள், சிமென்ட் கலவைகள், எல்லாம் பக்கத்து வீடுகளின் மீதோ, அல்லது பக்கத்தில் இருக்கும் கட்டடங்களின் மீதோ விழுந்து அவர்களைத் துன்பப்படுத்துகிறதா?சில வெளிநாடுகளில் கட்டடங்கள் கட்டும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் முறை மிகவும் நேர்த்தியானதாக, அடுத்தவருக்குத் துன்பம் தராத வகையில் இருக்கிறது. அவற்றை நேரிலே பார்த்தவர்களின் நானும் ஒருவன். ஆகவே அவர்கள் கடைப்பிடிக்கும் முறையைப் பார்ப்போம்ஒரு முறை மலேசியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே பெருநகரச் சாலைகளிலும் பல பெரிய கட்டடங்களைக் கட்டுகிறார்கள். அதே போன்று அடுக்குமாடிக் கட்டடங்களும் கட்டுகிறார்கள். கோலாலம்பூரில் நாங்கள் இருந்த கட்டடத்தில் மொத்தம் 29 மாடிகள். அதில் 26ஆம் மாடியில் இருந்தோம். அங்கிருந்து பார்க்கும் போது நகரமே மிக அழகாகத் தெரியும்.மேலும் அந்தக் கட்டடத்தின் மிக அருகே, நம் நாட்டின் கூவம் நதியைப் போன்று ஒரு ஆறு ஓடுகிறது. அதற்குப் பின்னால் பறக்கும் மின்சார ரயில் ஓடுவது பார்க்க, கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.மழை நன்றாகப் பெய்யும் போது பார்த்தால் அந்த நதியில் வெள்ளமாய்க் கரை புரண்டு தண்ணீர் ஓடும். மழை விட்டுச் சில விநாடிகளில் சாலைகளும் அந்த நதியும் பழைய நிலைமைக்குத் திரும்பி, பளபளவென ஜொலிக்கும். எங்குமே தண்ணீர் தேங்கி நின்று நாங்கள் பார்க்கவில்லை.அந்த நகரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்னர் மாசுக் கட்டுப்பாடு அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும். அப்போது ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதாவது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நாங்கள் எங்கள் கட்டடங்களைக் கட்டி முடிப்போம் என்று. அந்த உறுதி மொழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் ஒரு உபாயம் செய்கிறார்கள். அவர்கள் கட்டும் கட்டடத்தின் மேலாக வெளிப்புறமாக இரும்பினாலான ஒரு வலை போடுகிறார்கள். அந்த வலை ஒரு சிறு தூசியையும் கூட வெளியே விடுவதில்லை. அதனால் அவர்கள் நெடுஞ்சாலைகளில் கட்டும் கட்டடங்கள் கூட எந்த ஒரு மாசையும் விளைவிப்பதில்லை. அந்தக் கட்டடங்களிலிருந்து விழும் கற்கள் சாலையில் ஓடும் வாகனங்களின் மீது விழுந்து விபத்துகள் ஏற்படுவதில்லை.அதே போல அமெரிக்காவில் அவர்கள் பெரும் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டுகிறார்கள்; பல அடுக்கு மாடிகள் கட்டுகிறார்கள்; அவர்களும் இதே போன்ற முறைகளைக் கையாளுகிறார்கள். அது மட்டுமல்ல, அங்கே வீடுகள் கட்டிவிட்டு அந்த வீடுகளுக்கு முன்னால் ஒரு சாய்மானமான புல் வெளியை ஏற்படுத்துகிறார்கள். அந்தப் புல் வெளியை அவர்கள் ஏற்படுத்தும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது. வேறு ஏதோ ஒரு இடத்தில் அந்த விலை உயர்ந்த புல்வெளியை அவர்கள் உருவாக்கி, அந்தப் புல் வெளிகளை சதுரம் சதுரமாக இரண்டு அல்லது நான்கு அங்குலம் கனத்துக்கு வெட்டி அவற்றை ஒரு மூடிய வாகனத்தில் வைத்து அங்கே கொண்டு வந்து அவற்றை அந்தச் சாய்வான பகுதியில் அடுக்கி அப்படியே வளர்க்கிறார்கள். அவற்றை அடுத்து ஒரு அகலமான நடைபாதை. அதற்கு அடுத்து மீண்டும் சமதரையில் புல்வெளி. அதற்கு அடுத்து மீண்டும் ஒரு நடைபாதை, அதற்கு அடுத்துதான் சாலைகள். ஆகவே வாகனங்கள் நடைபாதையில் நடப்போரின் மீது எதிர்பாராத பெரிய விபத்துகள் ஏற்பட்டாலொழிய மோத முடியாதுஇவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார்களே மனித உயிர்களின் மீது, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீது என்பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே நம் நாடும் அப்படியெல்லாம் வளரக் கூடாதா என்கிற ஏக்கம் வரத்தான் செய்கிறது.அது சரி, எப்பொழுது பார்த்தாலும் வெளிநாடுகளைப் புகழ்வதே சிலருக்கு வேலையாய்ப் போய்விட்டது என்று நினைப்பவர்களே நம் நாட்டையும் வீட்டையும் நாமும்தான் முயன்று சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வோமே! சுத்தம் சோறு போடுகிறதோ, இல்லையோ! வியாதிகளை அண்டவிடாமல் தடுக்கும்; அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும். அடடா! இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. நான் வீடு கட்டினேனே. அப்பொழுது இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லையே! அண்டை வீட்டுக்காரர்கள் எவ்வளவு அவதிப்பட்டிருப்பார்கள்! நான் நேரிடையாக பாதிக்கப்படும் போதுதான் இவ்வளவு ஞானமும் எனக்கு வருகிறது... என்ன செய்ய?
தமிழ்த்தேனீ

Jul 02, 2009



Thursday, July 2, 2009

இலக்கிய நந்தவனம் முதற் பரிசு

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும்  "இலக்கிய நந்தவனம்" பத்திரிகையில் வெளிவந்து முதற்பரிசு பெற்ற " முகவரி வேண்டும் " என்னும்  அறிமுகக் கவிதை


Saturday, April 25, 2009

எனக்கென்ன ?


பொது இடத்தில் உங்கள் கண் முன்னே ஒரு தகாத செயல்
நடக்கிறதா..? பாதிக்கப்பட்டவர் கத்திக்கொண்டிருக்கிறாரா
அவரை பல விஷமிகள் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனரா,
அதைப் பார்த்தும் நமக்கென்ன நாம் பாதிக்கப்படாமல்
இருந்தால் போதும் என்று ஒதுங்கிச் செல்பவரா நீங்கள்//
அங்கு பாதிக்கப்பட்டவர் தெரிந்தவராயினும் தெரியாதவராயினும்
நீங்களும்தான் ஓங்கிக் குரல் கொடுத்துப் பாருங்களேன்
நாளையே உங்களுக்கு இதே நிலை ஏற்படும்போது உதவ
மற்றவரையும் தயார் செய்யுங்களேன்

ஒரு முறை நானும் என் மனைவியும்  சென்னையில் அண்ணா நகரில் உள்ள
புகழ்வாய்ந்த புடவைக் கடைக்கு சென்று அங்கே காரை நிறுத்திவிட்டு
கடைக்குள் போக யத்தனித்தோம், ஆனால் கடைக்குள் நுழையும் வழியில்
செல்ல முடியாமல் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி
வைத்திருந்தனர் அதனால் அவைகளுக்கு நடுவே புகுந்து செல்லவேண்டிய
கட்டாயத்தால் முதலில் நான் அடுத்து யாரோ ஒரு பெண்,அடுத்து என் மனைவி என்னும் முறையில் செல்ல ஆரம்பித்தோம்
அங்கிருந்த சிறிய இடைவெளியில் வழியை மறைத்துக்கொண்டு
அந்தப் பெண்ணையே முறைத்துப்- பார்த்துக்கொண்டு ஒருவர் நின்றிருந்தார்,முதலில் நான் அவரைக் கவனிக்கவில்லை, கவனித்தவுடன் அவரை நோக்கி முன்னேறிச்சென்றேன்,அப்போதும் என்னை கொஞ்சமும் சட்டை செய்யாமலும் வழியை விடாமலும் என்னடா ஒரு ஒரு தம்பதிகள் நடுவே அந்தப் பெண் வருகிறாளே,கூட வருபவர்கள் பெற்றோராக இருக்கக் கூடுமே என்னும் உணர்வு கூட இல்லாமல் முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர்,அவரை நெருங்கி நான் பாத்தது போதும் வழியை விடுங்க என்றேன்
உடனடியாக அவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா

என்னா உன் பொண்ணைக் கடத்திக்கிட்டா போயிட்டேன்..?

அவர் அந்தப் பெண்ணை என்னுடைய பெண் என்று  நினைத்து இந்தக் கேள்வியைக் கேட்டார்.  யாருடைய பெண்ணாயிருந்தால் என்ன..?அவர் செய்தது சாதாரணமாக  வாலிப வயதில் செய்யும் செயல்தான் என்றாலும்
அவருடைய கேள்வியிலே இருந்த வன்முறை என்னைக் கோபம் கொள்ள வைத்தது,   இதைக் கேட்டவுடன் வந்தது கோபம்

ஓங்கி  ஒரு அறைவிட்டேன்  அவனை  , கீழே விழுந்தான் அவன்
உரத்த குரலில்   யாருய்யா கடையிலே வழியிலே இது மாதிரி காலிப்பசங்களை  நிக்க வெச்சா யாரு உங்க கடைக்கு வருவாங்க என்று கத்தினேன்.  உடனே கடையிலிருந்து சிலர் ஓடி வந்தனர், பொது மக்களும் வழக்கம்போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்,

அதற்குள் கடையிலிருந்து வந்தவர்கள்  அவரை விலக்கி உடனே அங்கிருந்து போகும் படி அறிவுறுத்தினர்.  அவ்வளவு வீரமாகப் பேசிய அந்த நபர் தனக்கு எதிராக ஒரு கூட்டமே திரண்டதைப் பார்த்து மிரண்டு எதிர் பாராத தாக்குதலால் நிலை குலைந்து  பயந்து நடுங்கி திரும்பிப் பார்க்காமல் எடுத்தார்
ஓட்டம்.. அப்போது புரிந்தது சிலருடைய வீரம் ,

ஆனால் இப்போது நினைத்தால் அந்த நபர் ,வாலிபர்.
நான் வயதானவன் , என்னை அவர் ஒரு அறை விட்டிருந்தால் தாங்கி இருப்பேனா என்பது சந்தேகமே, ஆனாலும் அசுர பலம் வந்தது எனக்கு அப்போது ,  அது நியாயத்தின் பலம், நியாயம் செய்யும் போது நம்மை அறியாமலே ஒரு சக்தி வருகிறது, அநியாயம் செய்யும் போது நம்மை அறியாமலே ஒரு பலகீனம் வருகிறது

நான் செய்தது சரியென்று நினைத்தால் இனி தவறாமல்   தவறு நடக்கும் இடங்களில் தட்டிக் கேளுங்கள்  அதட்டிக் கேளுங்கள். ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.   ஓடுகிற நாயைத்தான் துரத்துவார்கள்
நின்று எதிர் கொள்ளும் நாய்க்கு பயப்படுவார்கள்.  நாயிற்கே இந்த நிலைமை என்றால் மனிதருக்கு ?

சிந்திப்போம் நியாயத்தைக் கேட்க பயப்படவேண்டாம், அநியாயத்தை தட்டிக் கேட்க தயங்க வேண்டாம். தைரியம் கொள்ளுங்கள்
தறுதலைகள் சிதறி ஓடிப் போய்விடுவர்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Saturday, March 14, 2009

தமிழும் தரமும்

வள்ளுவனை எடைபோட்டோம், கம்பருக்கு சடைபோட்டோம்
தெள்ளிய தொல்காப்பியத்தையும்,கிள்ளிப் பார்த்தோம்
அகநானூறும் புறநானூறும் அவிழ்த்து முடிந்து ஆராய்ந்தோம்
ஔ  வ்வை அலசினோம் அவையில்  விவாதித்தோம்
இலக்கணமும் இலக்கியமும் வழக்கினிலே வரும்போது
கணிணியும் நாமும் செய்யும் தற்செயல் தவறுகளை
பதிப்பித்தே வாக்குவாதம் வளர்க்கிரதே
யாருக்கும் எண்ணமில்லை தமிழின் தரம் குறைக்க
தமிழ்வளர்க்க ஆர்வம் கொண்டே,அதன் தரம் ஆராய்ந்தோம்
கொட்டை வடி நீர் கேட்டால் கேட்டால் துவண்டு போய் விழிக்கின்றோம்
காப்பி வேண்டுமெறே உரைத்தால் என்றுரைத்தால் அளித்தே மகிழுகின்றோம்
தமிழென்ன கலப்பினமா, தனித்திருக்கும் தவமணியா
இனித் திருத்த அதிலென்ன ஏற்கெனவே குறைபாடா
இருக்கும் தமிழ் நற்தமிழே சந்தேகம் நமக்கு வேண்டாம்
திருத்துகிறோம் என்று சொல்லி அதன் தரம் குறைக்கவேண்டாம்
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும் போதும்
ஆரியமோ திராவிடமோ ஆதி தமிழுக்கு பேதமில்லை
நமக்குள்ளும் பேதமில்லை ,சொல்வழக்கில் பழகு தமிழ்
வளருமிங்கே புரிந்தோமில்லை
புரிந்து கொண்ட அழகுத்தாய் தமிழ்தானே ஏது எல்லை
அழைக்கின்ற கிள்ளை மொழி அவளுக்கோ மழலைதானே
அன்போடு ஓடிவந்து,தன் மடியில் தானிட்டு
நம் மேலே தலைப்பிட்டு அமுதம் தந்திடுவாள்
அன்னையவள் கருணை கொண்டு
பிறகென்ன பெருங்கவலை ,தமிழ் வளர்க்க இன்னொருவர் வரவேயில்லை,தமிழழிக்க இங்கொருவர் பிறக்கவில்லை
இத்தனை கோடி மாந்தர்களைப் பெற்றெடுத்து பேணிக்காத்து
அன்போடு அரவணைத்து அற்புதமாய் தன்னையும் தானே காத்து வளர்க்கும் தாந்தோன்றித் தமிழன்றோ தலைசிறந்த மொழியன்றோ ஆகையினால் தாயாய் நின்று நமை வளர்க்கும் தமிழ் தானே
ஆதவனின் பாதை தன்னை அறுதியிட ஆருண்டு
யாதுமாகி நின்ற தமிழ் எங்கும் நிறைந்த தமிழ்
தானாய் வழி நடக்கும் தரணியே தலை நிமிரும்
தமிழை வழிநடத்த நமக்கிங்கே தகுதியில்லை
மொழியொன்று எப்போதும் புறிந்து கொள்ள
அடுத்தவரின் மனதிருப்பை அறிந்து கொள்ள
பக்குவமாய் இதை உணர்ந்து மனிதம் காப்போம்

நம்மில் ஒரு பகுதி தமிழில்லை...
தமிழின் சிறு துகள்தான் நாமன்றோ
தமிழ்வளர்க்க நாமொன்றும் செய்யவேண்டாம்
நமைவளர்க்க தமிழொன்று போதும் போதும்
இருக்கும் தமிழ் கற்றிடவே நமக்கிங்கே போதாது இருக்கும் ஆயுள்
பாமரர்க்கும் புரிவதற்கு செய்வோம் செய்யுள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

\

Sunday, March 8, 2009

மகளிர் தினம்

இதிகாச புராணங்களிலும், சரித்திரங்களிலும் படித்துப் பார்த்தால் வஞ்சிக்கப்பட்ட பெண்மணிகள் பொங்கி எழுந்து,


தவக் கோலமோ, ஊர்த்துவக் கோலமோ கொண்டனர்

என்று செய்திகள் கூறுகின்றன



அப்படி வெகுண்டெழுந்த பெண்மணிகளை சாந்தப்படுத்தும் விதமாகவே ஆதி சங்கரர் பதித்த ஸ்ரீசக்கரம் போன்றவைகளை பதித்தோ, அல்லது அவர்களுக்கு விக்ரகங்கள் வடித்து, பலி கொடுத்தோ அவர்களின் உக்கிரத்தை தணித்திருக்கின்றனர்,



தாய்மை உணர்வுள்ள பெண்ணை சினமூட்டுவானேன்

பிறகு அந்த மஹா சக்தியின் உக்கிரம் தாங்காமல் அவளிடம் வழிபாடு நடத்துவானேன், இதே செய்கையைத்தான் ஆதி காலம் தொட்டு செய்து வருகிறோம்



ஆனால் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்



மகளிர்க்கென்று தனியாக ஒரு தினம் வேண்டாம்,

மகளிர் இல்லையென்றால் ஜனனமே கிடையாது

ப்ரபஞ்ச வளர்ச்சியே கிடையாது,

அப்படிப்பட்ட மகளிரை தினமும் அளிக்க வேண்டிய மரியாதையை அளித்துப் போற்றுவோம்



அன்புடன்

தமிழ்த்தேனீ

Saturday, February 28, 2009

” மனிதமே உன்னைத்தேடி”

உன்னைத் தேடி உன்னைத் தேடிக் களைத்து விட்ட மனிதன் நான் பூவுலகில் எங்கும் உன்னைக் காணவில்லை, எங்கு சென்று மறைந்திட்டாய் ,கண்ணில் படும் உயிர்க்கெல்லாம் கருணையோடு கை கொடுத்து, அன்பு பாசம் நேசம் காட்டி அணைத்திட்ட கருணை நிறை தெய்வங்களே எங்கு போனீர் எங்கு போனீர்,காணவில்லை உம்மையும் உம்மைத் தேடி உம்மைத் தேடி நானும் இங்கே களைத்துவிட்டேன்

கண்ணைக் கட்டிக் காட்டில் இட்டார், கண்ணிருந்தும் குருடனாய் உண்மை தேடி அலைகின்றோம், சித்தம் தடுமாறியே சித்தரென்று பெயரெடுத்து, தெளிந்த பின்னும் தேடித்தேடி பித்தராய் உருவெடுத்து தேடுகின்றோம் மனிதமே

பாதி மனிதர் தம் மனதின் மீதி மனிதம் மறந்து போய் பீதியினால் தமை மறைத்து நடைப்பிணமாய் வாழுகின்றார், சேதி சொல்லும் தினசரியும், தேடித்தேடி பரபரப்பாய் தீச் செய்தி தமை மட்டும் வழங்குகின்ற காணொளியும் ,அவலமான செய்திகளை அளித்திங்கே வாழுதே, நல்ல சேதிகளே இல்லையென்று எண்ணித் தரம் தாழுதே,மனிதம் இங்கே வீழுதே

குணத்தையெல்லாம் விட்டுவிட்டு பணத்தின் பின்னால் ஓடுதே, பிணத்தின் நெற்றிக் காசைக்கூட எடுக்கத் தானே ஆடுதே, மனித உயிர் மதிப்பின்றி தீக்கிரையாய் ஆகுதே, சட்டம் கூட திட்டம் தீட்டி தீவினையை ஏற்றுதே, நீதி இங்கே தீயுதே ,தீவிரமாய் பல வாதம் பதுங்கி பதுங்கிப் பாயுதே மனித நேயம் தேயுதே

காவல் செய்யும் காவலும், ஏவல் செய்யும் கனவானின் கைத்தடியாய் வாழுதே, நீதி செய்யும் நேர்மையும் தலை குனிந்தே நோகுதே, அழிவுப் பாதை நோக்கியே நாடும் இன்று போகுதே, இளம் வயதுக் குழந்தைகளை இரக்கமின்றி கற்பழித்து, இணைந்து வாழும் துணையினையும் அரக்கர் போலக் கொல்லுதே, அன்னை தந்தை இருவரையும் அடித்து ஓட்டி மகிழ்ந்து விட்டு, தம் மக்கள் மட்டும் தம்மை தாங்கவேண்டுமென்னுதே,

மனிதம் எங்கே மனிதம் எங்கே நானும் தேடித் தேடியே

இளைத்து விட்டேன் களைத்துவிட்டேன் காணவில்லை மனிதமே,,முன்பிருந்த மனிதம் இன்று எங்கே போய் ஒளிந்தது? இருட்டில் வாழ்ந்த நாளிலும், மனிதம் ஒளிர்ந்த நாடிது, ஒளி பாய்ச்சி இரவையும் பகலாக்கி தேடித் தேடிப் பார்த்துவிட்டேன், காணவில்லை மனிதமே , புனிதர் எல்லாம் எங்கோ சென்று பதுங்கிவிட்டார் பயத்திலே ,இனி இங்கே வேலையில்லை என்று தாமும் நினைத்திட்டே மாயமாய் மறைந்திட்டார் காணவில்லை ஜகத்திலே

இனி பொறுக்க வழியிலை என்று பொங்கி நானும் எழுந்திட்டேன், தேடித் தேடி அலைந்திட்டேன், தேக்கி வைத்த மனிதமது எங்கேனும் கண்ணில் பட்டால் மனிதர்களே, மனிதர்களே சேதி ஒன்று கூறுங்கள் நானும் அங்கு வருகிறேன் மீண்டுமதை பெற்றெடுத்து சேர்த்தளிப்போம் உலகுக்கே



அன்புடன்

தமிழ்த்தேனீ

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 10

உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ,எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், எல்லா நாட்டினர்க்கும், பொதுவாக மானிடராய்ப் பிறந்த அத்தனை பேருக்கும் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட ஆன்மீகம் சிலபேருக்கு மட்டுமே சொந்தமான சொத்துபோல் ஆகும் போதுதான்அங்கு ப்ரச்சனை முளைக்கிறது
தெய்வம் ,இறைவன், ஸ்வாமி,அல்லா,யேசு கிருஷ்ணன்,ராமன் ,வினாயகன்,சிவன், சக்தி,என்று எப்படி அழைத்தாலும் எல்லாம் ஒருவனே ஒன்றே குலம் அது மனித குலம்,ஒருவனே தேவன் அவன் பொதுவானவன், எப்பெயர் சொல்லி அழைத்தாலென்ன
என் தாயை நான் அம்மா என அழைப்பேன், என் குழந்தைகள் பாட்டி என்று அழைக்கிறார்கள்என் குழந்தைகளின் குழந்தைகள் கொள்ளுப் பாட்டி என்று அழைக்கிறார்கள்சில குழந்தைகள் பெரியம்மா என்று அழைக்கிறார்கள்,சில குழந்தைகள் குழந்தைகள் அத்தை என்று அழைக்கிறார்கள், யார் எப்படி அழைத்தாலென்ன,என் அம்மா தானேஅதுபோலத்தான் யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டம் போல் அழையுங்கள்ஆனால் இருப்பது ஒரே தெய்வம்,அது இறைவன் நமக்கும் மேல் பெரியவன்,நம்மைக் காப்பவன்அவ்வளவுதான் ,இந்த உண்மை புரியத்தான்,ஆன்மீகம் என்று ஒன்றை பெரியவ்ர்கள் ஏற்படுத்தினார்கள்
அந்த ஆன்மீகத்தின் நோக்கமே,பிரிவினை இல்லாது மனிதன் மனிதத் தன்மையோடு வாழவேண்டும் என்பதே,நாம் அடிப்படையான இந்த நோக்கத்தையே மறந்து,நமக்குள் பல பிரிவுகளை நாமே ஏற்படுத்திக் கொண்டு,பிரிந்து,பிரிந்து நம்முடைய இளைய தலைமுறைகளுக்கும் அந்தப் பிரிவை சொத்தாக எழுதிவைத்து வருங்கால மக்களை,மக்கள் என்னும் நிலையிலிருந்து மாக்கள்என்னும் நிலைமைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறோம்,(மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள் )
மக்களை மாக்கள் நிலைக்கு தள்ளும்,பிரிவினையை அரசியல் வாதிகள் வேண்டுமானால்அவர்களின் சுய லாபத்துக்கு உபயோகப் படுத்திகொள்ளட்டும்,ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்என்று ஒரு பழ மொழி இருக்கிறது,ஆதலால் நாம் அனைவரும் பிரிந்திருந்தால்தான்அவர்களுக்கு வசதி,ஆனால் நாம் இதை உணர்ந்து ,ஜாதி,மதம் ,இனம் ,மொழி ,கலாச்சாரம் கொள்கைகள், வழிபாடுகள், அத்தனையும் மாறுபட்டு இருந்தாலும் அவரவர் வழியை அவரவர் பின்பற்றிக் கொண்டு முடிந்தால் எல்லா மனிதருக்கும் உதவிக் கொண்டு,மேற்கூறிய அத்தனை பேதங்களையும் மறந்து,மனதால் ஒன்றுபட்டால்மனிதம் பிழைக்கும், எங்கு மனிதருக்கு அநீதி இழைக்கப் படுகிறதோ,அங்கு எந்த வித பேதமும் இல்லாமல் அத்தனை மதத்தவரும் ஒன்று கூடி அநீதியை அழிக்க இணைந்தால்,அங்கே மனிதம் மலரும் , விளங்க முடியாக் கடவுளைக் கூட விளங்கிக் கொள்ளமுடியும்,கடவுள் மதத்திலில்லை,ஜாதியிலில்லை,இனத்திலில்லை,மொழியிலில்லை நிறத்திலில்லை,மணத்திலில்லை, குணத்தில் இருக்கிறான் ஆமாம்,மனிதம் தான் கடவுள்கடவுள் என்றாலே எல்லாவிதமான வேறுபாடுகளையும்,கடந்தவன் என்று பொருள்கட+உள் உன்னிலிருக்கும் கடவுளை உள்ளே சென்று,பார்க்க ,உன் ஆன்மாவைப் பார்க்க எல்லா மனிதருக்கும் உட்ப்ரயாணம் தேவை, உட்ப்ரயாணம் என்றால் ஆத்ம ஞானம்,ஆத்மயோகம்அன்பு ,கருணை ,இரக்கம் சக உயிர்களை மதித்தல் மனிதனை மனிதனாக மதித்தல்மனிதனை மனிதனாகவே நேசித்தல்,மக்களை மாக்களாக்காமல் மக்களாகவே இயல்பாக மனிதனாகவே நடத்துதல் மொத்தத்தில் மனிதம் என்பதுதான் கடவுள்,இறைவன்அதுதான் ஆன்மீகம்!

ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 9

ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது
அதைத் தனியே விட்டுவிட்டு வேடிக்கை பாருங்கள்
சிறிது நேரம் விளையாடும், தன்னைச் சுற்றி யாருமே
இல்லை என்று உணரும் வினாடியில் அழத் துவங்கும்
அந்த நிலையிலே தான் எல்லா வளர்ந்த மனிதர்களும்
வளர்ந்தாலும் குழந்தைதான்,
அணைக்கும் கை இருக்கிறது ,நம்க்கு ஆபத்து வரும்போது ஆதரவாக நம்மைக் கையிலெடுத்து
ஆதரவு தர ஒரு கை எப்போதும் நம் அருகில் இருக்கிறது என்கிற நம்பிக்கை இருக்கும் வரைதான்
நாம் மனிதராக இருப்போம்,எப்போது அந்த நம்பிக்கை
நம்மை விட்டுப் போகிறதோ அப்போதே நாம் சக்தி இல்லாதவர்களாக உணர்வோம்
அதனால்தான் ஆன்மீகம் என்று ஒன்றை ஏற்படுத்தி
நம்மை காக்க எப்போதும் ஒருவர் இருக்கிறார்
என்று நமக்கு ஒரு உணர்வை பெரியவர்கள் ஏற்படுத்தினர்,

இறைவன் இருக்கிறானா ,இல்லையா என்பது
நமக்கு தேவையில்லாத சிந்தனை
இருக்கிறான் என்று எண்ணும்போது நமக்குக் கிடைக்கும் நிம்மதி அதுதான் என்றும் தேவையான ஒன்று
அந்த நிம்மதி நமக்குக் கிடைக்கவேண்டுமானால்
இறைவன் என்று ஒருவன் உண்டு என்று நாம் நம்பித்தானாகவேண்டும்
எல்லாமே மனிதனின் சுயநலத்துக்காகத்தான்
மனிதனின் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு,
கசப்பு ,அழுக்கு, தண்ணீ ர், காற்று , மண்,
எல்லாம் இருக்கிறது ஆனால் எந்த அளவு
இருக்கவேண்டுமோ அந்த அளவு இருக்கிறது
அந்த அளவு கூடினாலும், குறைந்தாலும்
உடனே வைத்தியர் அதை சமனப் படுத்த
மருந்து தருகிறார்
அது போல நம்முடைய சுயநலத்துக்காக
நாம் ஏற்படுத்திய ஆன்மீகம்
ஒரு பற்றுக் கோல் போல நமக்குப் பயன் படுகிறது
ஆனால் அங்கு சுயநலம் என்னும் பற்றுக் கோல்
சற்றே பருத்து ,சுயநலம் அதிகமாகும் போது
பொதுநலம் மறந்து போகிறது


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 8

ஆன்மீகம் என்பது என்ன….?
மனிதன் எப்போது தன்னை மீறிய சக்தி
ஒன்று இருக்கிறது,அது நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் என்று
நம்பத் தொடங்கின வினாடியிலிருந்து
ஆன்மீகம் தோன்றி வளர ஆரம்பித்தது
என்றும் சொல்லலாம்
அல்லது மனிதன் ஏற்கெனெவே இருக்கும்
ஆன்மீகத்தை உணரத் தலைப்பட்டான்
என்றும் கொள்ளலாம்


இந்தப் ப்ரபஞ்சத்தில் பிறந்த அத்தனை உயிர்களும் தங்களைக் காப்பாற்ற தங்களை மீறிய சக்தி ஒன்ரு இருக்கிறதாக நம்பத் தொடங்கின
அதனால்தான் எல்லா உயிர்களும் ஓரளவு
தன்னம்பிக்கையோடு வாழத் தலைப்பட்டன
இந்த இறை நம்பிக்கைதான் இன்று வரை நம் எல்லோறையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது
ஆன்மீகம் என்று ஒரு வழியினால்தான்
மனிதன் ஓரளவு தன்னம்பிக்கையோடு வாழ்கிறான்

நமக்கு மேல் நம்மைக் காப்பாற்ற ஒருவருமே இல்லை
நம்மை நாமேதான் காப்பாறிக் கொள்ளவேண்டும்
என்று நாத்தீக வாதிகள் சொல்கிறார்கள்
அப்படிப்பட்ட நாதீக வாதிகளுக்கு
“ உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு “
என்னும் வள்ளுவன் வாக்கிற்கேற்றார்போல்
இடுக்கண் வரும்போது அதைக் களைய
ஒரு நண்பனாவது வேண்டும் ,அப்போதுதான்
ஏதோ ஒரு நண்பனாவது இருக்கிறான் நம்மைக் காப்பாற்ற என்ரு வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படும் ,இல்லையென்றால் நாம் வாழ்வது வீண் என்று விரக்தி ஏற்பட்டுவிடும்
கடலில் தத்தளிக்கும்போது பிடித்துக் கொள்ள ஒரு
சிறு கட்டையாவது கிடைக்காவிடில் மூழ்குவது நிச்சயம்
அது போன்று நமக்கு துன்பம் வரும்போது நம்மைக் காக்க நம்மினும் மேலான சக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கைதான் அந்தக் கட்டை போன்றது
தற்கொலை செய்து கொள்பவர்கள் பலர் தம்மைக் காக்க
,அல்லது தங்கள் துன்பத்தைப் போக்க யாருமில்லை
என்று தீர்மானமாக எண்னுவதால்தான் உயிரை
விடத் தீர்மானிக்கிறார்கள்

அப்படி தங்களையே அனாதைகளாய் நினைத்துக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம்
அதற்காகத்தான் பெரியவர்கள் இறைவன் இருக்கிறான்
அவன் நம்மை துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான்
என்கிற நம்பிக்கையை வளர்த்தார்கள்


ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 7

கணிணியைப் பற்றி அறிந்து கொண்டு கணிணியில் எப்படி செயல்பாடுகளை புகுத்த முடியும் என்று
உணர்ந்தவர்கள் தான் இவைகளை அறிய முடியும்
கணிணியைப் பற்றி ,மனிதனால் உருவாக்கப்பட்ட
கணிணியைப் பற்றி அறியவே இவ்வளவு தகுதி தேவைப் படுகிறதென்றால்
இந்தப் ப்ரபஞ்ஜத்தை படைத்த இறையைப் பற்றி அறிய
எவ்வளவு சக்தி , தகுதி ,தேவை
அத்தனையும் நாம் அடைந்து அதற்குப் பிறகு
விளங்கமுடியாக் கடவுள் ,விளக்கமுடியாக் கடவுள்
என்றெல்லாம் சொல்வோமானால் அது சரியான முறை
எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு செல்லும் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் பயணம் செய்து, அப்போதும் அந்த இடத்தை அடைய முடியாவிட்டால் அப்போது சொல்லலாம்
விளங்க முடியாத ,அல்லது விளக்க முடியாத
என்றெல்லாம்
இன்னும் நாம் போகவேண்டிய இடத்தையும்
புறிந்துகொள்ளவில்லை ,அதற்குண்டான பாதையையும்
நிர்ணயிக்கவில்லை
ஆகவே முதலில் போகவேண்டிய இடத்தை நிர்ணயித்துக் கொண்டு அதற்குண்டான பாதையை
கண்டுபிடித்து அந்த வழியில் நம் ப்ரயாணத்தை
மேற்கொண்டால் எதையும் காணலாம்
கடவுளையும் காணலாம்
பாகம் 8
திரு விவேகானந்தர்(நரேந்திரன்) முதலில் திரு ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்
சொல்லுவதைக் கவனிக்காமல்
அவ்ர் ஏதோ செய்து கொண்டிருப்பாராம்
ஒரு நாள் ராம க்ருஷ்ணபரமஹம்சர்
நரேந்திரனை அழைத்து நான் சொல்லுவதைக்
கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்
என்று வினவ அதற்கு நரேந்திரன் தாங்கள்
இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
ஆனால் கண்ணால் காணமுடியாத ஒன்றை எப்படி நம்புவது என்ர்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
என்றாராம் ,அதற்கு ராமக்ருஷ்ணபரமஹம்சர்
நான் உனக்கு இறைவனைக் காட்டுகிறேன்
என்று கூறி தன்னுடைய தயான சக்தியால்
நரேந்திரனை தன்கையால் தொட்டு அவருக்கு
இறைவனைக் காட்டும் முயற்ச்சியில் இறங்கினார்
அப்போது தேஜோமயமாக தாங்கவொண்ணா ஒளியாக
இறைவன் நரேந்திரனுக்கு காட்சி அளித்தாராம்
அந்த அற்புத ஜோதிச்வரூபனை ,அந்த ஒளியின்
விஸ்வரூபத்தை தாங்க முடியாமல் நரேந்திரன் திகைத்துப் போனாராம்

அதற்குப் பிறகு திரு ராமக்ருஷ்ணபரமஹம்ஸர்
இறைவனைப் பார்க்க உனக்குள் சக்தியை ஏற்படுத்திக் கொள் அப்போதுதான் இறைவனைப் பார்க்கமுடியும் என்னும் தத்துவத்தை போதித்தாராம்
அப்போதுதான் நரேந்திரன் விவேகானந்தராக மாறினார் என்பர்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 6

ஒரு மஹா சக்தியை அல்லது ஒளியை ,
உதாரணமாக சூரியனை வெறும் கண் கொண்டு பார்க்க
முடியாது ,பார்த்தால் அதன் உருவம் நம் கண்ணின் சக்திக்கு சரியாக விளங்காது, அதனால் ஒரு கருப்புக் கண்ணாடியை ஒரு சாதனமாகக் கொண்டு பார்க்கும் போது அந்தச் சூரியனின் ஒளி நம் கண்ணைக் கூசாமல் ,இதமாக இருக்கிறதல்லவா,அது போல
ஒரு மஹா சக்தியை நாம் உணரவேண்டுமென்றால்
அதன் சக்தியை நாம் தாங்கிக் கொண்டு இதமாக
இறைவனை தரிசிக்க வேண்டுமென்றால்
அதற்க்கு ஏற்ப பக்தி, த்யானம் ,போன்ற பல சாதனங்களை உபயோகித்து இறைவனை விளங்கிக் கொள்ள நாம் வகை செய்து கொள்ளவேண்டும்


வானிலே செவ்வாய்க் க்ரகம் தோன்றப் போகிறது அதைக் காண விரும்புவோர் தொலை நோக்கி கொண்டு பாருங்கள் ,
சூரியக் க்ரகணம் இன்று வானிலே தெரியும் அதை வெறும் கண் கொண்டு பார்க்காதீர்கள்,கண்ணுக்கு
பாதகம் விளையும் என்றெல்லாம்
விக்ஞானிகள் சொல்கிறார்கள்
ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா
அது போல வெறும் கண் கொண்டு இறைவனைப்
பார்க்க முயலாதீர்கள்,
தியானம் , யோகம் போன்ற சாதனங்களைக் கொண்டு
இறைவனைப் பாருங்கள் அப்போதுதான் இறைவனை
விளங்கிக் கொள்ள முடியும் என்று சொல்லும்போது
ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது நாமும் அவர்கள் கூறும் சாதனங்களை உபயோகித்து முயன்றுதான் பார்ப்போமே

பாகம் 6.
2. விளங்க முடியாக் கடவுளா ..?அல்லது சக மனிதனா
இந்தக் கேள்விக்கு
ஒரு பதில் உண்டு
கடவுள் விளங்க முடியாதவனல்ல
விளக்க முடியாதவனும் அல்ல
விளக்கவும் முடியும் ,விளங்கவும் முடியும்
ஆனால் நமக்கு அதற்குண்டான பொறுமையும்
ஞானமும் வேண்டும்

தமிழ் மறை நூல்களில்
“ கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் “
என்று ஒரு கூற்று உண்டு
அதற்குப் பொருள்
மெய்ஞ்ஞானம் என்னும் வழியில் சென்ற பலர்
கடவுளக் கண்டிருக்கின்றனர்,
அதாவது அவர்கள் கடவுளை கானும் அளவுக்கு
தங்களுடைய ஆன்ம பலத்தைப் பெருக்கி
அதன் மூலமாகக் கடவுளைக் கண்டிருக்கின்றனர்
சாதாரணமாக நாம் உலகில் எப் பொருளைப்
பார்க்கவேண்டும் என்றாலும் கண் இமைகளைத்
திறக்க வேண்டும் ,அப்போதுதான் பார்க்க முடியும்
கண்களை மூடிக் கொண்டே அங்கு எதையும் என்னால்
பார்க்க முடியவில்லை என்று சொல்வது எப்படியோ
அது போலத்தான் கடவுளும்
அந்த மஹா சக்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால்
அதைப் பார்க்குமளவுக்கு நம் உடலை,மனதை ,நம் சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்

கணிணியில் மென்பொருளைத்தாக்கும் கிருமிகள்
இருக்கிறது என்பதை நம்முடைய கணினியின்
செயல்பாட்டை வைத்து அறிய முடியும்
ஆனால் அந்த கிருமியைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்றால் இது குதர்க்க வாதம்
அதுபோல நம் கணிணியை கிருமிகளிடமிருந்து
காப்பாற்ற எதிர்ப்பு சக்தியை நாம் இந்தக் கணிணிக்குள்
செலுத்தி அதைப் போக்க முடியும்
ஆனால் கணிணிக் கிருமிகளை எதிர்க்கும்
சக்தியை நான் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் என்பதும் குதர்க்கவாதம்



ஆன்மீகம் --கடவுளும் மனிதனும் பாகம் 5

சற்றே நினைத்துப் பாருங்கள் உண்மையான,மனப்பூர்வமான வேண்டுதலுக்கு வழிபாட்டுக்கு இப்படிப்பட்ட அரிய சக்தி இருப்பதை என் வாழ்விலேகண்கூடாகக் கண்டவன் நான்
ஆகவே ஆத்ம சுத்தியான பக்திக்கும் ,ப்ரார்த்தனைக்கும் இறைவன் மனமிறங்குகிறான்,அருள் புறிகிறான் என்பது சத்தியமான உண்மை
ஆகவே நம்முடைய உண்மையான ஆத்மசுத்தியான பக்தி ,ப்ரார்த்தனை, வேண்டுதல்கள்,வழிபாடுகள் நாம் கல்லில் வடிக்கும் இறைவனுக்கும் நம்முடைய சக்தியாக உள்ளே சென்றடையும் ,மீண்டும் அதே சக்தி நமக்கு ஏற்படும் இன்னல்களை களையும் சக்தியாக உருவெடுக்கும் என்பது பரிபூரணமான உண்மை
இறைவனை நாம் நம்முடைய சாதாரண சக்தியை உபயோகப் படுத்தி பார்க்க முடியாது என்பதனால்தான் ஒரு விக்ரகமாக அவரை வடித்து அந்த வடிவத்தை இறைவனாக ஏற்று ,வழிபட ஆரம்பித்தோம் உருவ வழிபாடுகள் இப்படித்தான் தோன்றின


இதுதான் ஒரு ஆலயத்தில் ஒரு கடவுளை
ப்ரதிஷ்ட்டை செய்யும்போதும்
இதே தத்துவத்தில்தான் ஆலய நிர்மாணமும்
விக்ரகப் ப்ரதிஷ்ட்டையும் நடக்கிறது
அங்கு ஒரு இறைவனை கல்லில் வடித்து
அந்தக் கல்விக்ரகத்துக்கு சக்தி கொடுக்கும் விதமாக
பலபேர் சேர்ந்து அங்கு வந்து மந்திர உச்சாடனங்கள்
செய்து அத்தனைபேரின் சக்தியையும் ஒன்றாகத் திரட்டி
ஒரு குடத்திலே மந்திர உச்சாடனத்தின் சக்தியை
அந்தக் குடத்து நீரில் இறக்கி அந்தக் குடத்து நீரை
அந்தக் கல் விக்ரகதின் மேல் பொழிந்து அந்தக் கல் விக்ரகத்துக்கு அத்தனை பேரின் திரண்ட சக்தியை அளித்து அந்தக் கல் விக்ரகத்தை இறைவனாக
சக்தி உள்ளவனாக மாற்றி,பிறகு தினமும் அந்தக் கல் விக்ரகத்துக்கு ,மந்திர உருவேற்றி
அத்தனை பேரின் திரண்ட சக்தியாகிய அந்தக் கடவுளை
எல்லோரும் வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை அந்த தெய்வத்திடம் வேண்டி பெறுதல் வழக்கமாக இருக்கிறது

இதே தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் மனிதன் தன்னைவிட சக்தி வாய்ந்த ஒரு சக்தியை
நம்பி தனக்கென்று ஒரு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஆலயங்கள் உருவாகின
இறைவனை விளங்கிக் கொள்ள நாம் நம்மை
தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும்
அப்போதுதான் இறைவனை விளங்கிக் கொள்ளமுடியும்