திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Tuesday, February 24, 2009

தாழம்பூவே தங்க நிலாவே

” தாழம்பூவே தங்க நிலாவே ‘




மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து, அருகிலிருக்கும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கி மூலமாக ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பக்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே விடியற்காலையில் என் பெண் எங்கள் வீட்டு வாசலில் போடும் கோலங்களையும் ரசித்துக் கொண்டும், உபன்யாசங்கள், முடிந்த போது இசைவிழாக் கச்சேரிகள் கேட்டுக்கொண்டும்,நம் அறிஞர்கள் எழுதிய இசைமறுவறல்கள் படித்தும், இத்தனை நாட்கள் எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி அனைத்து அறிஞர்களும் எழுதிய அமிர்தம் போன்ற விளக்கங்களப் படித்தும், முழுவதும் அனுபவித்து ஆனந்தமடைந்தேன்.

நாளை வைகுண்ட ஏகாதசி, எல்லா வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட வாசல் திறக்கும்,வைகுண்ட வாசல்திறக்கும் அந்த சுபமுகுர்த்த வேளையில் மானுடர்களாகிய நாம் மனதும் உடலும் சுத்தமாக, அந்த வாயிலின் வழியே நுழைந்து அங்கு இறைவனை தரிசனம் செய்தால் வைகுண்டம் செல்லலாம் என்னும் ஆத்திக அன்பர்களின் நம்பிக்கையின் படி அனைத்து மக்களும் ஆலயங்களுக்கு சென்று வழிபடும் நாள்,

உத்திரமேரூரிலிருந்து ஒரு உறவுக்காரப் பெண் என் மனைவிக்கு தாழம்பூவை அனுப்பி இருந்தாள் தாழம்பூ வாசனைக்கு பாம்பு வரும் என்று சொல்லுவார்கள்,மின்னல் தெறிக்கும் வேளையிலே தாழை மடல் விரியும் என்றும் தாழம்பூ பூக்கும் என்றும் சொல்லுவார்கள், அது மட்டுமல்ல தாழம்பூவில் சிறு நாகம் என்று சொல்லக்கூடிய சிறு பாம்பு இருக்கும்,அந்தப் பூநாகம் கடித்தால் பிழைப்பது கடினம் என்றும் சொல்லுவார்கள் ஆகவே தாழம்பூவை நன்கு சோதித்துப் பிறகே கூந்தலில் சூடவேண்டும் என்று என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பொதுவாக என் வீட்டில் இறைபக்தி உண்டு என்னும் காரணத்தால் புதிய துணிமணிகள், நகைகள், வீட்டிலே சமைக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து விட்டு அதன் பின்னர் உபயோகிப்பது வழக்கம். அதேபோல் தாழம்பூவையும் ஸ்வாமிக்கு அணிவித்து பிறகு வீட்டில் உள்ள பெண்மணிகள் சூடிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆகவே என்னுடைய இயல்பான எச்சரிக்கையான குணத்தினால் அந்த தாழம்பூவை பிரித்து அதில் நன்கு சோதனையிட்டு பிறகு என் மனைவியிடம் கொடுத்தேன்.

பாசத்தோடு தாழம்பூவை அனுப்பி இருக்கும் அந்தப் பெண்ணின் அன்பில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அந்தப் பெண்ணிற்கு தாழம்பூவின் இயல்புகள் தெரியுமோ தெரியாதோ என்னும் எண்ணத்தில்தான் சோதனை செய்தேன். ஒரு எச்சரிக்கைதான் இதற்கும் காரணம், ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பின்னால் இருக்கும் என் சுயநலத்தை எண்ணிப் பார்த்தேன் வெட்கமாக இருந்தது.

நான் என் மனைவியிடம் சொன்னேன் எதற்கும் தாழம்பூவை ஸ்வாமிக்கு சார்த்தி அணிவித்த பிறகு நீ சூடிக்கொள் என்று.

எப்பொருளையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகு நாம் உபயோகிப்பது என்ன காரணத்தால் என்று எண்ணிப் பார்க்கையிலே அனேக காரணங்கள் தோன்றினாலும் நமக்கு ஒரு பிறப்பையும் தந்து நமக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அளித்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு நிவேதனம் செய்து விட்டு உபயோகிக்கிறோம் என்பது ஒரு காரணம்.

பொதுவான நம்பிக்கை என்னெவென்றால் நாம் உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவைகளை ஸ்வாமி நீக்கிவிட்டு நமக்கு நன்மை அளிக்கக் கூடிய ப்ரசாதமாக மாற்றித் தருவார் என்னும் ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் எல்லாவற்றையும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்கிறோம் என்பது பொதுக் கருத்து.

இப்படிப் பார்க்கும் போது இறைவனை தோஷங்கள் எதுவும் தாக்காது, அவன் சர்வ வல்லமை படைத்தவன் என்று நாம் மதிக்கிறோம் என்று தோன்றினாலும், நாம் செய்வது சரியா என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது, ஏனென்றால் என் தாயார் குளித்து சுத்தமாக தன் கையாலே சமைத்த உணவுப் பொருட்களை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு பிறகே எங்களுக்கு அளிப்பார்கள். அது வரை என்னதான் பசித்தாலும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்னும் வழக்கத்தை எங்களிடையே விதைத்தார்கள்.

அந்த வழக்கத்தினால், பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்னும் மூன்று சொற்களின் பயன் என்னவென்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, நல்ல வேளை என் மனைவியும் அதே வழக்கத்தை கடைபிடிக்கிறாள்.

ஆனால் புதியதாக திருமணம் ஆன என் மகள் சமைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சமைக்கும் ஒவ்வொரு உணவுப் பண்டத்தையும் முதலில் கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு வைப்பதைப் பார்த்து அவளிடம் கேட்டேன், முதலில் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யாமல் இதுபோல நீ ருசித்துப் பார்க்கிறாயே இது நியாயமா என்று.

அதற்கு அவள் சாமர்த்தியமாக என்னிடம் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது, அப்பா நானே சமையல் கலைக்கு புதியவள் ஏதோ ஒரு தைரியத்தில் சமைக்கிறேன், அதன் ருசி சரியில்லாமல், என் கணவருக்கு அளிப்பதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. நாம் மரியாதை அளிக்க நினைப்பவருக்கு பதமான சுவையோடு கூடிய குற்றமில்லாத உணவை அளிப்பதுதானே நியாயம். அதனால்தான் நான் ருசித்து விட்டு அந்த உணவுப் பொருட்களில் இருக்கும் குறைகளைக் களைந்து சுவையாக மாற்றி பிறகு அவருக்கு அளிக்கிறேன் என்றாள்.

சாதாரண மானுடப் பெண்ணிற்கே தான் காதலிக்கும் தன் கணவன் மேல் உள்ள மரியாதையாலும் தன்னுடைய அக்கரையினாலும் கணவனுக்கு எந்த விதத்திலும் ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என்று, தான் ருசி பார்த்துவிட்டு குற்றம் களைந்து பிறகு கணவனுக்கு அளிக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் இருக்கிறதே!!

அப்படியானால் ஆண்டாள் எப்படியெல்லாம் அரங்கனை போற்றி இருப்பாள் என்று நினைக்கையிலே மனம் தழுதழுக்கிறது.

ஆத்மார்த்தமாக காதலித்து, பக்தி செய்த அடியவர்களான ஆழ்வார்கள் இறைவனை, மூலப்பொருளை எவ்வளவு உயர்வாக வைத்திருந்தார்கள், என்பதைக் காட்டும் இலக்கியங்கள் நமக்கு பக்தியை உணர்த்துகின்றன.

தான் கடித்துப் பார்த்துவிட்டு குற்றம் நீக்கி ஸ்ரீராமனுக்கு வண்ணமாகவே, சபரி அவைகளை அளித்தாள் என்பதில் வியப்பேதுமில்லை, குற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது. இச்செய்கை சபரியின் அளவிடமுடியாத பக்தியைக் காட்டுகிறது.

அனைவரும் என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தும், நம் வீட்டுக்கு வா கண்ணா, என்று பக்தியுடன் அழைத்த விதுரரின் அழைப்பை ஏற்று, அவர்தம் குடிலுக்கு சென்ற பகவான் கிருஷ்ணனைக் கண்ட விதுரர் தன்னை மறந்த நிலையில் வாழைப்பழத் தோல்களை கிருஷ்ணனுக்கு அளித்து பழத்தை கீழே போட்டுவிட்டு நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் வழிய பரவச நிலையிலிருந்த விதுரரின் நிலையை எண்ணிப்பார்த்து பரவசமடைந்தேன், அப்படி பக்தியோடு அடியவன் அளித்த பழத்தோல்களை சற்றும் முகம் சுளிக்காமல், திருப்தியோடு உண்ட வெண்ணையுண்ட வாயன் கிருஷ்ணனின் லீலை நம்மை வியக்க வைக்கிறது.

சுய நிலை அடைந்து பதறிப்போய் தான் செய்த தவறுக்கு வருந்தி விதுரர் பூரண உணர்வோடு பழத்தை அளித்த போது அதை மறுத்து, தன்னை மறந்த நிலையில் விதுரர் அளித்த வாழைப்பழத்தோலே தனக்கு உவப்பானது என்று அருளி, அடியவர்களின் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குணர்த்திய பரமன் கிருஷ்ணனின் லீலையை அனுபவிக்கிறேன்.

அப்படி இருக்க ஸ்ரீரங்கன் மேல்பக்தியும், அளவிடமுடியாத காதலும் கொண்ட ஆழ்வார் ஆண்டாள் திருவரங்கனுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடக் கூடாது என்று எண்ணம் கொண்டதால்தானோ தான் சூடி மாலை அவனுக்களித்தாளோ என்று தோன்றுகிறது.

என்னதான் பெரியாழ்வார் பக்தியோடு சுத்தம் செய்த மலர்களைக் கொண்டு மாலை கட்டி இருந்தாலும் அம்மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சற்றும் உறுத்தல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து பிறகு ஸ்ரீரங்கனுக்கு அளிக்கலாமே என்னும் எண்ணத்தால் தான் சூடி மாலை தந்தாளோ கோதை என்று தோன்றுகிறது.

இன்னமும் அந்த மாலைகளில் ஏதேனும் குற்றம் இருந்து விடப் போகிறதே, அந்தக் குற்றங்கள் தன்னை பாதித்தாலும் பரவாயில்லை, அரங்கனைப் பாதித்து விடக்கூடாது, அதனால் குறைகளைக் கண்டுணர்ந்து களைய வேண்டுமே என்று நினைத்து குறை ஒன்றுமில்லாத கோவிந்தனுக்கு குறை களைந்து தான் சூடி மாலைதனை அளித்தாளோ ஆண்டாள் என்று தோன்றுகிறது.

ஸ்ரீரங்கனுக்கு ஆண்டாள் ஆழ்வாரா,இரண்டறக் கலந்த பாகம் பிரியாளா, அல்லது தாய்மையோடு கூடிய பாசத்தோடு கூடிய தாயாகவும் ஆனாளா?

அவன் மடியில் தழும் சேயாகவும் ஆனாளா?

அடடா என்னே பெரியாழ்வார் கண்டெடுத்த சின்னாழ்வார் ஆண்டாளின் பெருமை?

அதனால்தான் தாய்க்குப் பின் தாரம் என்னும் சொல்வழக்கு ஏற்பட்டதோ என்று தோன்றுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ





No comments: