“ ஐ லவ்
யூ “
மேசைமேல்
இருக்கும் கோப்புகள் முக்கியமானவை, அவருடைய கோடிக்கணக்கான சொத்துக்கள், அவர் தொடங்கிய
பல தொழில்களின் வெற்றியின் அறிகுறியாக அவரிடம்
சேர்ந்த அதிர்ஷ்ட தேவதையின் கணக்குகள்
.அவரைத் தவிர யாருக்குமே தெரியக் கூடாத ரகசியங்கள் அடங்கிய கோப்புகள்.
ஆனால் நாணயமாக சேர்த்த சொத்துக்கள், முறையாக வருமான
வரி செலுத்திய ரசீதுகள் அடங்கிய கோப்புகள்,
அவற்றை
மிகப் பத்திரமாக ஒரு ப்ரீப்சேசில் அடுக்கி
மறைவான பெட்டகத்தில் வைத்து மூடி அதன் மேல் இருக்கும் நகரும் சுவர் போன்ற அமைப்பை நகர்த்தி அந்த சுவற்றின்
மேல் ஒரு முருகன் படத்தை மாட்டிவிட்டு அந்த
முருகன் படத்துக்கு மாலை போட்டு வணங்கிவிட்டு தன்னுடைய சுழல் நாற்காலியில் வந்து உட்கார்ந்து அன்று அவர் பார்க்க வேண்டிய கோப்புகளைப் பார்வையிட்டார் கதிரேசன்.
சார்
நான் உள்ளே வரலாமா என்று குரல் கேட்டது. அதுவரை அவர் அனுமதி இல்லாமல் யாரும் திறக்க
முடியாதபடி பூட்டியிருந்த அறைக் கதவை மேசையின்
அடியே இருக்கும் ஒரு குமிழை அழுத்தி திறக்கச் செய்து , யெஸ் உள்ளே வாங்க என்றார் கதிரேசன்.
அவருடைய
பெர்சனல் செகரட்ரி முருகன் குட் மார்னிங் சார் . என்றார் பவ்வியமாக, எஸ் குட்
மார்னிங் முருகன் என்ன இன்னிக்கு நான் ஏதாவது
முக்கியமா செய்ய வேண்டிய வேலை இருக்கா என்றார்
இல்ல
சார், இன்னிக்கு வெள்ளிக் கிழமை ,நாளைக்குதான் பாரின்லேருந்து டெலிகேட்ஸ் வராங்க அவங்களை
நான் வரவேற்று ஸ்கைலேண்ட் ஹோட்டல்லே தங்க வெச்சிருவேன் ,அவங்களை நீங்க நாளைக்கு மூணு
மணிக்கு சந்திக்கணும்.
இன்னிக்கு நீங்க ப்ரீ
என்றார் முருகன்.சிரித்துக் கொண்டே
நீங்க
எல்லாத்தையும் கவனமா கச்சிதமா செய்யறதினாலே
நான் நிம்மதியா இருக்கேன். எனக்கு ஐம்பத்து ஐஞ்சு வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கறாங்க எல்லாம் உங்க உபயம் , அந்த அளவுக்கு எனக்கு எந்த டென்ஷனும் இல்லாம நீங்க நடத்திகிட்டு
வரீங்க, தேங்க்ஸ் முருகன் என்றார் கதிரேசன்.
சார்
என்னோட ட்யூட்டியைத்தான் செய்யறேன் அதுக்கு எதுக்கு சார் தேங்ஸ் எல்லாம், இன்னிக்கு
சமூகத்திலே நானும் ஒரு பெரிய மனுஷனா வளைய வரேன்.
என் குடும்பம் நல்லா இருக்குன்னா நீங்கதானே காரணம் ,நான்தான் உங்களுக்கு தேங்ஸ் சொல்லணும்.
நீங்க
அடிக்கடி சொல்வீங்களே நாம என்னதான் பிளான்
செஞ்சாலும் சில நாட்கள் அது இஷ்டத்துக்கு நடக்கும் , நம்மகிட்ட ஒண்ணும் இல்லே. அந்த நேரத்திலே நாமதான் கொஞ்சம் வளைஞ்சு குடுத்து போகணும்னு , எனக்கென்னவோ
இன்னிக்கு அது மாதிரி ஒரு நாள்னு மனசிலே ஒரு பக்ஷி சொல்லுது என்றார் முருகன்
.
ஓ
அப்பிடியா என்ன விஷயம் சொல்லுங்க என்றார் கதிரேசன்.
ஆமா
இன்னிக்கு உங்களை சந்திக்கணும்னு பிடிவாதமா ஒருத்தர் உட்கார்ந்திருக்காங்க வெளியிலே, என்றார் முருகன்.
ஏற்கெனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்காங்களா என்றார் கதிரேசன், இல்லை
சார் புதுசா இருக்காங்க. ஆனா பாத்துட்டுத்தான் போவேன்னு பிடிவாதமா உக்காந்திருக்காங்க
என்றார்
ஓ
இன்ட்ரெஸ்டிங் சரி அனுப்புங்க யாருன்னு பாப்போம் என்றார் கதிரேசன். முருகன்
வெளியே சென்றார். மே ஐ கம் இன் என்று ஒரு குரல் கேட்டது, எஸ்
ப்ளீஸ் கம் இன் என்றார் கதிரேசன், ஒரு தென்றல்
உள்ளே நுழைந்தது. கதவைத் திறந்தால் காற்று
வரும் என்பது உண்மைதானோ என்று தோன்றியது கதிரேசனுக்கு , இங்கே தென்றலே வருகிறதே .
முருகனோட
இன்டியூஷன் சரியாத்தான் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டே எதிரில் இருக்கும் நாற்காலியைக் காட்டினார் கதிரேசன். நன்றி
கூறிவிட்டு அமைதியாக உட்கார்ந்தது தென்றல்.
என்ன யாரு நீங்க என்பது போல் பார்த்தார் கதிரேசன்.
என்
பேரு தென்றல் என்றாள், என்னது
தென்றல்னு கூடப் பேரு வைப்பாங்களா நான் கேள்விப்பட்டதே
இல்லே, என்றார் கதிரேசன்.
வெச்சிருக்காங்களே எங்க வீட்டிலே , நான் இன்னிக்கு உங்களை எப்பிடியும்
சந்திக்கணும்னு வந்தேன் . அதுவும் ரொம்பக் கிட்டத்திலே பாக்கணும்னு வந்தேன் ,பாத்துட்டேன் மகிழ்ச்சி என்றாள் அவள்.
மிஸ்
தென்றல் நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலே என்றார் கதிரேசன்,
ஒரு
விஷயம் உங்க கிட்டே சொல்லணும்னு தோணிச்சு அதை சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன் என்றவள்
அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டே இருந்தாள். சில நேரங்களில் மௌனம் புயலைப் போன்ற ஒரு
இரைச்சலை ஏற்படுத்திவிடும் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தார் கதிரேசன். சற்று நேர மௌனத்தையே தாங்க முடியாமல் சொல்லுங்க என்றார்.
“ ஐ லவ்
யூ “ என்றாள் அவள்
கேட்ட வினாடியிலேயே வியர்த்துப் போனது அவருக்கு
. என்னது ..என்னது நீங்க என்ன சொல்றீங்க என்று தடுமாறினார் கதிரேசன்.
ஏன்
இவ்ளோ டென்ஷனாறீங்க அமைதி அமைதி என்றாள் தென்றல்.
ஆனால் அவரால் அமைதியாக உட்கார முடியவில்லை.
எழுந்துபோய் ஜன்னல் அருகே நின்றுகொண்டு நான் ஒரு சிகரெட் பிடிக்கவா என்றார்.
ஓ
எஸ் தாராளமா பிடிங்க , எங்க அப்பாகூட பைப் பிடிப்பாரு என்றாள் அவள். சிகரெட்டைப்
பற்ற வைத்து நுரையீரல் முழுவதும் அந்த நிகோடின்
காற்றை உள் வாங்கி மெதுவே வெளியே அனுப்பி சற்றே
தெளிந்து அதை ஆஷ் ட்ரேயில் போட்டு நசுக்கி அணைத்துவிட்டு மறுபடியும் வந்து உட்கார்ந்து
அவளையே பார்த்தார் .
என்னது
இது நீங்க பாட்டுக்கு வந்தீங்க இப்போ ஐ லவ் யூ ங்கறீங்க எனக்கு ஒண்ணும் புரியலே என்றார் .
சரி நீங்க யோசிங்க நான் ஒரு வாரம் கழிச்சு வரேன், என்றபடி எழுந்தாள்
தென்றல்.
உங்க
காண்டாக்ட் எண் என்ன என்றார், முகவரி என்ன
என்றார், ஒரு வாரம் கழிச்சு நானே வந்து தரேன் அது வரைக்கும் யோசியுங்க பை பை நன்றி வருகிறேன் என்று கூறிவிட்டு போனாள்…போயேவிட்டாள்.
என்ன செய்வதென்றே புரியாமல் அப்படியே சிலைபோல உட்கார்ந்திருந்தார் கதிரேசன், முருகன் உள்ளே வந்து சார் காஃபி குடிங்க
என்று ஒரு கோப்பையை வைத்தார். காஃபியை எடுத்து குடித்துக் கொண்டே ஆழ்ந்த யோசனையுடன் முருகன் உக்காருங்க
என்றார். சார் என்றார் முருகன் ..உக்காருங்கன்னு சொன்னேன் என்றார் கதிரேசன்.
முருகனுக்கு புரிந்தது ஏதோ
முக்கியமான விஷயம் இல்லையென்றால் அலுவலக நேரத்தில் உட்காரச் சொல்லமாட்டார் அவர் என்று,அமைதியாக உட்கார்ந்தார் முருகன். முருகன்
இப்போ வந்துட்டுப் போனாங்களே தென்றல் அவங்களை உங்களுக்குத் தெரியுமா? இதுக்கு முன்னே
எங்கேயாவது பாத்திருக்கீங்களா? நாம பாத்திருக்கோமா என்றார்.
இல்லே சார் இவங்களை இப்போதான் நான் பாக்கறேன், நீங்க பாத்திருக்கீங்களா என்றார்
முருகன். இல்லே முருகன் நானும் பார்த்ததில்லே. இப்போ அந்தப் பொண்ணு
என்கிட்ட ஒரு விஷயம் சொன்னா அதை எப்பிடி எடுத்துக்கறதுன்னே
புரியலே. எனக்கு பேச சந்தர்ப்பமே குடுக்காம அவங்க பேசினாங்க போயிட்டாங்க என்றார்.
இந்த அளவுக்கு நீங்க அதிர்ந்து போற அளவுக்கு என்ன சார் சொன்னாங்க என்றார்
முருகன்.
கதிரேசன் சொன்னார்..
சார் என்னா சொல்றீங்க என்று அதிர்ந்தார் முருகன். பின் சுதாரித்துக் கொண்டு சார் நீங்க எவ்ளோ பெரிய அந்தஸ்திலே இருக்கீங்க
, உங்களுக்கு லக்ஷ்மிகரமா மனைவி , தோளுக்கு
மேலே வளர்ந்த பிள்ளை, இதெல்லாம் தென்றலுக்குத் தெரியுமா? , எப்பிடி இப்பிடி நேருக்கு நேரா வந்து ஒரு வயசுப் பொண்ணாலே இப்பிடிப் பேச முடியுது? இது
அசட்டுத் தைரியமா, இல்லே விவேகமான அணுகுமுறையா
ஒண்ணும் புரியலே சார் என்றார் முருகன்.
சரி எனக்கும் புரியலே ,. காலையிலே
நீங்க சொன்னீங்களே இன்னிக்கு அது மாதிரி ஒரு நாள்னு மனசிலே ஒரு பக்ஷி
சொல்லுது அப்பிடீன்னு அது சரியாப் போச்சு
அது மாதிரி ஒரு நாளேதான் இது , வளைஞ்சு குடுத்துதான்
போகணும் . ,ஆனா இவ்ளோ அதிர்ச்சியா இருக்கும்னு
நெனைக்கலே .
சரி அந்தப் பொண்ணு அடுத்த வாரம் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா ,அவ
வந்தா நேரா என் ரூமுக்கு அனுப்பிடுங்க, இப்போ
நான் வெளியிலே போய்ட்டு மாலை நாலு மணிக்கு
வரேன். என்றபடி கிளம்பினார் கதிரேசன். ஒரு வாரம் மிக இயல்பாக வேலைகள் தொடர்ந்தன. மறு வாரம் வெள்ளிக் கிழமை சொல்லி வைத்தாற் போல் மே ஐ கம் இன் சார் என்று கேட்டபடி
கதிரேசனுடைய அறைக்குள் நுழைந்தாள் தென்றல்,
ஒருகணம் உள்ளுக்குள்ளே காலிலிருந்து தலை வரை ஒரு மின்னல் ஓடியது கதிரேசனுக்கு,
சமாளித்தபடி புன்னகைத்து வாங்க தென்றல் உக்காருங்க என்றார். வந்து இயல்பாக நாற்காலியில்
உட்கார்ந்தாள்.
சில நொடிகள் மௌனத்துக்குப்
பிறகு தென்றல் பேசத் தொடங்கினாள், நீங்க எல்லாம் வேண்டாம் , என்னை நீ அப்பிடீன்னே சொல்லலாம், தென்றல்ன்னு அன்பாக்
கூப்பிடலாம் ,அவள் பேசிக்கொண்டே இருந்தாள் கதிரேசன் கேட்டுக்கொண்டிருந்தார்.
சுமார்
ஒரு மணி நேரம் தென்றலின் பேச்சை கதிரேசன் கேட்டுக் கொண்டே இருந்தார் எந்தவித இடையூறும்
இல்லாமல் .
அவள் பேசி முடித்தாள், இதோ என்னுடைய தொலைபேசி எண் , என்னுடைய விலாசம்
என்று ஒரு ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு
சரி மீண்டும் சந்திப்போம் , ஆனால் இந்த முறை நீங்களாக அழைத்தால்தான் வருவேன் என்று கூறிவிட்டு கிளம்பினாள் தென்றல்.
வியர்த்துப் போயிருந்த நெற்றியை கர்சீப்பினால் துடைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தார் கதிரேசன். சார் நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு கதிரேசன் அனுமதித்தவுடன் உள்ளே நுழைந்தார் முருகன். முருகன்
இன்னிக்கு தென்றல் ஒரு மணிநேரம் பேசினாங்க, எனக்கென்னவோ அவங்க சொல்றதெல்லாம் சரின்னு படுது, அதுனாலே நான் சில முடிவுகள் எடுக்க
வேண்டியிருக்கு. முருகன் உங்களுக்குத் தெரியும்
நான் எந்த முடிவையும் உணர்ச்சி பூர்வமா எடுக்க மாட்டேன்னு, அதுனாலே நீங்க எனக்கு ஒரு
உதவி செய்யணும். என்றார்.
சார் என்ன சார் இது நீங்க ஆர்டர் போட்டா செய்யப் போறேன் என்றார் முருகன். முருகன் ஆர்டர் போட்டா சொன்னதைச் செய்வீங்க எனக்குத் தெரியும் ஆனா அதையே உதவியா செஞ்சா எனக்கு எது நல்லதுன்னு புரிஞ்சுகிட்டு செய்வீங்க
, அதுனாலேதான் உதவின்னு சொன்னேன் முருகன் என்றார் கதிரேசன்.
அதை
சொல்றதுக்கு முன்னாலே தென்றல் என்ன பேசினாங்கன்னு உங்களுக்கும் சொல்லணும் , ஆனா அதுக்கு சரியான நேரம் இன்னும் வரலேன்னு நெனைக்கிறேன்.
அதுனாலே இப்போ நான் சொல்றதை மட்டும் செய்யுங்க
என்றார் கதிரேசன்.
இங்கே
கிட்ட வாங்க முருகன் என்று அழைத்து என்ன செய்யவேண்டும்
என்பதை மெல்லிய குரலில் கூறினார் கதிரேசன்
, முருகன் ஒருகணம் அதிர்ந்தாலும் சமாளித்து
சரி சார் அப்பிடியே செய்யறேன் என்றார் .
அலுவலகத்தில்
கிளம்பியது கிசுகிசுக்கள், நம்ம முதலாளி எப்பவுமே
சரியான முறையிலே நடப்பவராயிற்றே ,அவரா இப்படி, ,
என்ன இருந்தாலும் அழகா ஒரு பொண்ணு நெனைச்சா எப்படிப்பட்ட ஆட்களையும் கவுத்துருவாங்கங்கறது
உண்மைதான், சரித்திரத்திலேயே படிச்சிருக்கோமே, இவரு மட்டும் என்ன விதிவிலக்கா? , அடப்
போடா ஆனானப்பட்ட விஸ்வாமித்ரரே கவுந்துட்டாரு
இவரு என்னா செய்வாரு பாவம், ஆனா ஒண்ணு அந்தப் பொண்ணு கெட்டிக்காரி. நல்ல புளியங் கொம்பாத்தான்
பிடிச்சிருக்கா .
இப்படி
யார் எங்கே பேசினாலும் அவர் கேட்கும் படி
அமைக்கப்பட்டிருந்த மறைவான ஒலிபெருக்கிகள் கதிரேசனுடைய அறையிலே வைக்கப் பட்டிருப்பதை
அறியாமலே கிசுகிசுக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு
மாதம் விளையாட்டாக ஓடிவிட்டது, அந்த நிர்வாகத்தில் அவள் முக்கியமானவளாக கருதப்பட்டாள்.
அவளைக் கேட்காமல் உதவியாளர் முருகன் கூட செயல்பட
முடியவில்லை. முருகன்
முகம் சுளிக்காமல் அவர் கடன் பணி செய்து கிடப்பதே என்று இயங்கிக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் இந்தச் செய்தியைப் பற்றி அலுவலகத்தில் பேசக் கூட
பயப்பட்டனர்.
ஆனால் வெளியிலே ஆசைதீர பேசிக் கொண்டனர், செய்தீ காட்டுத் தீயாய் பரவியது. ஆனால்
மிக இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டார்
கதிரேசன், அவர் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியாமல் தவித்தனர் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், யாரைப் பற்றியும் கவலைப்படமால் மிக இயல்பாக வந்து
போய்க்கொண்டிருந்தாள் தென்றல்.
அடிக்கடி
தென்றலும் அவரும் சேர்ந்தே பல விழாக்களுக்கு செல்வதை தொழிலதிபர்கள் முதற்கொண்டு, அனைவரும்
வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். மக்களுக்கு ரசமாய் இருக்க சில பத்திரிகைகள் கூட கிசுகிசுக்களை
அள்ளி வழங்கி சர்குலேஷனை அதிகப்படுத்திக் கொண்டது, திடீரென்று
ஒரு வாரமாக தென்றலைக் காணவில்லை,
புயல் வந்தால் தென்றல் காணாமல் போகும்போல் இருக்கிறது,
ஏதோ ஒரு புயல் வரப் போகிறது என்று எதிர் பார்த்தனர் எல்லோருமே
இப்படி
இருக்க ஒரு நாள் முருகன் அலுவலகத்தில் இருப்போருக்கும் , பல தொழில் அதிபர்களுக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும் பொதுவாக ஒரு அழைப்பிதழை
அளித்துக் கொண்டிருந்தார்.
அலுவலக காவல்காரர் முதல், உயர்தர அதிகாரிகள் வரை எல்லோருக்கும் ஒரு அழைப்பு ,ஆம் கதிரேசன் அவர்கள் கட்டிய புது
பங்களாவில் வருகிற ஞாயிற்றுக் கிழமை அனைவரும்
வந்து கலந்து கொள்ளும்படி அன்பாக வேண்டுகோள்
விடுத்திருந்தார் . அவரே அவர் கைப்படவே எல்லோருக்கும் பத்திரிகை அளித்து அவசியம் வரும்படி
வேண்டிக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அனைவருக்கும்.
அந்தப்
பத்திரிகையின் சாராம்சம் இதுதான். தொழிலதிபர் கதிரேசன் அவர்களின் 30 ஆவது
திருமண நாள் விழா. குடும்பத்துடன் அனைவரும்
வருக . அனைவரும் வந்து விருந்தில் கலந்து கொண்டு வாழ்த்த வேண்டியிருந்தார் கதிரேசன் அவர்கள்.
கதிரேசன்
அவர்களின் பிரும்மாண்ட பங்களாவில் .அனைவரும். விருந்தின் ருசி ,அதையும் தாண்டி செவிக்குணவு இல்லாதபோது சற்றே காதுக்கும்
ஈயப்படும் என்னும் கோட்பாட்டுக்குட்பட்டு காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தனர்.
நாதஸ்வரம்
முழங்கிக் கொண்டிருந்தது கதிரேசனுடைய மனைவி காத்யாயினி சிரித்த முகத்துடன் லக்ஷ்மிகரமாய்
அனைவரையும் வரவேற்று உணவு உண்ண அழைத்துப் போய்
உட்காரவைத்து உபசரித்துக் கொண்டிருந்தார் .
மனதுக்குள்
இந்த அம்மாவுக்கு த்ரோகம் செய்ய கதிரேசனுக்கு
எப்பிடி மனசு வருதோ என்று எண்ணமிட்டபடி வெளியிலே புன்சிரிப்புடன் அனைவரும் உணவு அருந்திவிட்டு கூடத்தில் குழுமினர்.
கதிரேசன்
சூட் கோட்டுடன் வந்து நின்றார், அவருக்கு ஒரு
பக்கத்தில் அவர் மனைவி காத்யாயினி , மறு பக்கத்தில்
அவர் மகன் சந்தோஷ் கையில் ஆளுயர மாலையை எடுத்துவந்து ஒன்றை கதிரேசனிடமும் மற்றொன்றை காத்யாயினியிடமும்
கொடுத்துவிட்டு மாலை மாற்றிக் கொள்ள வேண்டினான்.
கதிரேசனும் காத்யாயினியும் மாலை மாற்றிக் கொண்டனர். கிசுகிசுவை மறந்து அனைவரும்
கைதட்டி ஆரவாரமாய் வாழ்த்தினர்.
ஒரு பெரிய ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் அனைவரும் கூடியிருந்தனர். வருக
நண்பர்களே இந்த மகிழ்ச்சியான நன்நாளில் என் அழைப்பை ஏற்று விழாவுக்கு வந்திருந்து என்னை கௌரவப்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி .இன்று
நான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போகிறேன்.,
ஆமாம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நீங்கள்
நன்கு அறிவீர்கள். எங்கள் குடும்ப உறுப்பினர்களில் புதியதாக ஒரு நபர் இன்று முதல் இணையப்
போகிறார். என்று கூறிவிட்டு கண்ணைச் சிமிட்டினார் கதிரேசன். அழையா விருந்தாளியாக அமைதி அங்கே தானாக வந்து
ஆனால் ஆர்வத்துடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தது.
அதற்கு
முன்பாக இங்கே ஒரு படத்தை திரையிட்டு மூடியிருக்கிறேன் . அந்த திரையை தென்றல் அவர்கள் திறந்து வைத்து விழாவின்
முக்கிய நாயகியாக உங்களை வரவேற்பார் என்றார்.
தென்றல்
மிக நளினமாக நடந்து வந்து அந்த திரையை விலக்கினாள், அங்கே கதிரேசன் அவர்களின் உருவப்
படம் மாட்டி அதற்கு மாலையும் போடப்பட்டு இருந்தது .
ஹா ! என்று ஒருமித்த அதிர்ச்சிக்
குரல் வெளிப்பட்டது அனைவரின் வாயிலிருந்தும்
, அமைதி சற்றே சலனப்பட்டது.
ரகசியக்
குரல்கள் ஆச்சரியக் குரல்கள், கூடமெங்கும் உலா வந்தது. அந்த அமைதியைக் கிழித்தார் கதிரேசன் .
உங்களுக்கெல்லாம் தெரியாத ஒரு ரகசியத்தை
இப்போது நான் கூறப் போகிறேன்.
நண்பர்களே
இதோ இந்தப் படத்தில் இருப்பது நானல்ல .
உலகில் ஒருவரைப் போலவே ஏழு பேர் இருப்பார்கள்
என்று படித்திருக்கிறோம் , ஆனால் பார்த்ததில்லை. நமக்கெல்லாம் ஒரு அரிய வாய்ப்பு இதோ என்னைப் போலவே இருக்கும் இவரைப் பாருங்கள்,
இவர் பெயர் சிதம்பரம், இவர் தென்றல் அவர்களின் தகப்பனார்.
தென்றலின்
தந்தை திரு சிதம்பரம் உருவத்தில் என்னைப் போலவே
இருந்ததும் , ஏறக்குறைய என்னைப் போலவே நேர்மையான
முறையில் தொழில்கள் செய்து இலங்கையிலே ஒரு பெரிய தொழிலதிபராக மாறி பெரும் பணக்காரராக இருந்தார். தென்றல் அவருடைய
தகப்பனார் மீது அளவுகடந்த அன்பும் ,பாசமும் வைத்திருந்தார். ஆனால் காலம் சில நேரங்களில்
பல கொடுமைகளைச் செய்துவிட்டு தடையங்களே இல்லாதபடி
அழித்து விடுகிறது என்பதற்கு திரு சிதம்பரம் அவர்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.
ஆமாம்
ஒரே நாளில் பங்கு வர்த்தகம் சரிந்து , அவருடைய சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டு களவாடப்பட்டு சில மிருகங்களாலே கொலையும் செய்யப்பட்டார் திரு சிதம்பரம் . தென்றல் ஆதரவு தேடி நம்ம நாட்டுக்கு
வந்திருக்காங்க. அப்போ யதேச்சையா என்னைப் பாத்திருக்காங்க
.
கூட்டத்தில் ஒருவர்,
தணிந்த குரலில் சரிய்யா முடிவு என்னான்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு அதுக்கு
ஏன் இவ்ளோ பீடிகை போடறீங்க விஷயத்துக்கு வாங்க
என்று மெதுவே முணுமுணுத்தார்.
உங்களுக்கெல்லாம்
தெரியும் தென்றல் என்னிடம் வந்து ஐ லவ் யூ
சொன்னதும் ,அதன் பின்னர் நேற்று வரை நடந்ததும்.அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் உங்கள் ஊகத்துக்கு
விதையாக மலர்ந்ததும் எனக்கும் தெரியும்
ஆனால்
நாம் எல்லோருமே எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எனக்கே என்னை உணர்த்தினா
இந்தப் பொண்ணு தென்றல் அவளுக்கு நான் நன்றி
சொல்லியே ஆகவேண்டும்.
ஐ
லவ் யூ இந்த மூன்றெழுத்து மந்திரம் பலரை ஆட்டி வைக்கிறது, ஆனால் அதன் அர்த்தமே தெரியாமல்,
அந்த மந்திர சொற்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் ,ஆனால் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எனக்கும் புரிய வைத்தாள் இந்தப் பெண் தென்றல் .
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
என்று திடீரென்று சீர்காழி கோவிந்தராஜன் மனம் உருகிப் பாடினர் .
யாருப்பா அங்கே முக்கியமா பேசிகிட்டு இருக்கோமில்லே, பாட்டை நிறுத்துங்க என்றார் கதிரேசன் ,பாட்டு நின்றது.
அகராதியிலே பாத்தேன் ஐ லவ்
யூ அப்பிடீங்கற சொல்லுக்கு எத்தனை பொருள் இருக்கு அப்பிடீன்னு. நான் உன்னைக் காதலிக்கிறேன், நான் உன்மேல் அன்பு செலுத்துகிறேன்,
நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை விரும்புறேன் ,இப்பிடியெல்லாம் பொருள் இருக்கு .
ஆனா ஒரு இடத்திலே கூட உன்னைத் திருமணம் செய்து கொள்ள
நினைக்கிறேன்னு பொருளே போடலே . கண்ணன் என் காதலன் அப்பிடீனு சொன்ன பாரதியார் கண்ணனை நண்பனாய் மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பார்த்தாரே தவிர
தப்பா பேசலை. ஆழ்வார்கள் நாயன்மார்கள்
எல்லாருமே இறைவனைக் காதலிச்சிருக்காங்க. தப்பான பொருள் யாருமே சொல்லலே.
இந்தக் காதல்ங்கற சொல்லுக்கு யாரு காமம்னு பொருள் சொன்னாங்கன்னே
புரியலே,
ஜீவாத்மா பரமாத்மா
இரண்டறக் கலந்து த்வைதம் அத்வைதமா மாறுவதைத்தான் காதல்ன்னு ஆண்டாள் கூட
உருகி இருக்காங்க
காதல்ன்னா காதல்தான் ,அன்புதான் பாசம்தான் ,நேசம்தான் நிச்சயமாக் காமம் இல்லே.இதை நாமெல்லாரும் மனசார ஏத்துக்கணும்.
தென்றலோட அப்பா இறந்து போன துக்கத்தை தாங்க முடியாம இலங்கையிலேருந்து
இந்தியாவுக்கு வந்து என்னை யதேச்சையா
பாத்திருக்காங்க, அப்பிடியே அவங்க அப்பா மாதிரியே நான் இருக்கறதைப் பார்த்து
ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்து போயி அவங்க மனசுக்குள்ளே அவங்க அப்பாவைப் பாக்கறா
மாதிரியே ஒரு உணர்வை அனுபவிச்சு, என்னை
அவளோட அப்பாவா நெனைச்சு என் கிட்ட வந்து ,
மனசு பூரா பாசத்தை வெச்சுகிட்டு ஐ லவ் யூ அப்பிடீன்னு சொன்னா, அவங்க
அப்பாகிட்டே அப்பிடித்தான் சொல்லுவாளாம்.
நான் கூட முதலே தப்பா நெனைச்சேன் , நாம வாழற சமூகம் நமக்கு அப்பிடி ஒரு
தப்பான பொருளைச் சொல்லிக் குடுத்திருக்கு.
லவ் ன்னாலே அன்பு ,பாசம் , நேசம் அப்பிடிஎல்லாம் நமக்கு தோணறதே
கிடையாது, நம்ம மனசைக் குப்பையா ஆக்கி வெச்சிட்டாங்க . லவ்வுன்னு சொன்ன உடனே நம்ம
மனசு குப்பையை நோக்கிப் போக ஆரம்பிச்சுடுது. இந்த மனோ நிலைக்கு நம்மைத் தள்ளிய
எல்லாரும் வெக்கப்படணும். நாமெல்லாருமே
வெக்கப் படணும் .
இந்தப் பொண்ணு என்னைப்
பொறுத்த வரை அப்பனுக்கு பாடம் சொன்ன அந்த
முருகக் கடவுள் மாதிரிதான் தெரியறா. அதுனாலே
இந்த பொண்ணு ஐ லவ் யூ அப்பிடீங்கற
சொல்லுக்கு சரியான பொருளை என்னிக்கு
எனக்கு சொல்லிக் கொடுத்தாளோ அந்த வினாடியிலேருந்து
இவ என் பொண்ணுதான் ,
நம்ம பொண்ணுன்னு
சொல்லுங்க , நம்ம பையன் சந்தோஷுக்கு தங்கைன்னு சொல்லுங்க என்றார். காத்யாயினி .
எஸ் நம்ம பொண்ணு இவ . ஐ லவ் யூ மை டியர் டாட்டர் என்று நெற்றியிலே முத்தமிட்டு தென்றலை
அணைத்துக் கொண்டார் கதிரேசன். ஒட்டுமொத்த
மனிதர்களும் கதிரேசனைப் பார்த்து
அர்த்தம் புரிந்துகொண்டு
ஐ லவ் யூ சார்
என்று ஏகோபித்த குரலில் புரிந்து வாழ்த்தினார்கள்
சுபம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
No comments:
Post a Comment