http://www.vallamai.com/?p=33658
- Wednesday, March 20, 2013, 5:06
பூம் பூம் பூம் பூம் ஐயாவுக்கு நல்ல
காலம் பொறக்குது,நல்ல காலம்
பொறக்குது , ஐயா
வீட்டுலே சுப காரியம் நடக்கப் போகுது,
வூட்லே இருக்கறவங்க
எல்லாரும் சந்தோஷமா இருக்கப் போறாங்க. என்று வாயிலில் பூம்பூம்
மாட்டுக்காரனின் குரல் கேட்டது.
கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார் சபேசன், இவரின் தலையைக்
கண்டவுடன் பூம்பூம் மாட்டுக்காரன் நம்பிக்கையுடன் , குரலில் இன்னும்
உத்வேகத்துடன் ராகத்தோடு முழங்கத் தொடங்கினான் ,ஐயா எட்டிப்
பாக்கறாரு தலையை ஆட்டுடா ராசா , ஐயா பழைய துணி ,
காசு எல்லாம் குடுப்பாரு என்று
கூறிவிட்டு அவன் கையிலிருந்த குட்டையான நாதஸ்வரத்தை
ஒலிக்கத் தொடங்கினான்.
மாட்டுக்கு என்ன புரிந்ததோ அந்த நாதஸ்வரத்தின்
ஓசைக்கு ஏற்ப தலையை அப்பிடியும் இப்படியுமாக ஆட்டிற்று. எப்போதுமே மனிதருக்கு யானை, குரங்கு , புலி சிங்கம்
போன்றவைகளை மீண்டும் மீண்டும் பார்க்க ஆர்வம் வரும், அதே போல் சபேசனும்
அந்த மாட்டையே ஆர்வத்துடன் பார்த்துக்
கொண்டிருந்தார். ஐயா
பாக்கறாரு தலையை வேகமா ஆட்டுரா ராசா என்றான் பூம் பூம் மாட்டுக்காரன், மாடும் வேகமாய்த்
தலையை ஆட்டத் தொடங்கியது.
.ஏதோ ஒரு இரக்கம் தோன்றவே அவருடைய பழைய
வேட்டியை எடுத்து வந்து அவனிடம்
கொடுத்தார், . பூம்பூம்
மாட்டுக்காரன் ஐயாவுக்கு நன்றி சொல்லுடா ராசா
வேட்டி குடுத்தாரு மகராசன் என்று
கூறிக் கொண்டே அந்த வேட்டியை நிரந்தரமாக
மாட்டுக்கே கொடுப்பது போன்ற பாவனையில்
அந்த வேட்டியை மாட்டின் மேலேயே
போட்டான்.
அந்த மாட்டின் மேல் பலவிதமான வண்ண
ஆடைகள் போர்த்தப்பட்டு இருந்தன. அனேகமாய் அந்த
வண்ணத் துணிகளை எடுத்துவிட்டால் அதன்
எலும்புகள் தெரியும் என்று தோன்றியது சபேசனுக்கு,
கையோடு கொண்டு வந்த இரண்டு வாழைப்பழங்களை மாட்டுக்கு கொடுத்தார் சபேசன் ,
வாங்கிக்கோ ராசா ஐயா அன்போட குடுக்கறாரு என்றான் பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் குரலுக்கு கட்டுப்பட்டு வாயைத்
திறந்து தன்னுடைய நாக்கை நீட்டி
வாழைப்பழத்தை கவ்விக்கொண்டு
பூம்பூம்மாட்டுக்காரனிடமே நீட்டியது பூம்பூம்
மாடு.
ஆச்சரியமாய் இருந்தது சபேசனுக்கு , எப்படிக் கட்டுப்
பாட்டோடு பழக்கி இருக்கிறான் இந்த மாட்டை என்று அதிசயித்துப் போனார்
சபேசன்.
அதன் வாயில் தொங்கிக் கொண்டிருந்த
வாழைப் பழங்களிலிருந்து ஒரு வாழைப்
பழத்தை எடுத்து உரித்து அவன் உண்டு
விட்டு இன்னொன்றை மாட்டுக்கு கொடுத்தான்
. மாடும் அதை தோலோடு உண்ணத் தொடங்கிற்று
அது சரி இயல்பாய் ஏதேனும் உண்ணக்
கொடுத்தால் வாங்கி உண்ணுமே மாடுகள்,
இந்த மாடு அவர்
கொடுத்த வாழைப்பழத்தைக் கூட பூம்பூம் மாட்டுக்காரன் அனுமதித்த பிறகே வாங்கி
உண்கிறது, அப்படிப் பழக்கி இருக்கிறான் இந்த மாட்டுக்காரன் என்று
தோன்றியது.
ஒரு நவீனவகை ரோபோ போல் பூம்பூம்
மாட்டுக்காரன் இடும் கட்டளையை எல்லாம்
நிறைவேற்றியது மாடு. இவன்
தன் வயிறு நிரம்ப இந்த வேலையைச் செய்கிறான்,
இவனுக்கு
மனோவசியம் தெரிந்திருக்கிறது, நல்ல சொற்களைக்
கூறினால் மனதில்
நல்ல மகிழ்ச்சி உண்டாகும், அந்த மகிழ்ச்சி
எப்படிப்பட்டவரையும் ஏதேனும்
கொடுக்கச் செய்துவிடும் என்று நன்றாகவே
தெரிந்து கொண்டிருக்கிறான்.
நம்மில் பலர் நல்ல
சொற்களை கூறக் கூட தயங்கிக் கொண்டேதானே இருக்கிறோம். அப்படிப்பட்டவர்களைக்
காட்டிலும் ,ஏதோ ஒரு வகையில் இந்த பூம்பூம் மாட்டுக்காரன் சாதாரண
மனிதர்களை விட உயர்ந்தவன் என்று தோன்றியது சபேசனுக்கு.
சபேசனுக்கு நன்றி கூறிவிட்டு மேலும்
மற்ற வீடுகளுக்கு சென்று தன்னுடைய
தொழிலைத் தொடர, நாதஸ்வரத்தை
வாசித்தபடியே நகரத் தொடங்கினான் பூம்பூம்
மாட்டுக்காரன், தலையை ஆட்டியபடியே
பின் தொடர்ந்தது பூம்பூம் மாடு.
உள்ளிருந்து கனகா, யாரு
வாசல்லே என்றாள், யாரும் இல்லே பூம்பூம் மாட்டுக் காரன் வந்தான், அவனுக்கு ஒரு பழைய
வேட்டியைக் குடுத்து அனுப்பினேன் என்றார் சபேசன்.
அதெல்லாம் சரி காலம் கெட்டுக் கெடக்கு , வயசானவா நாம ரெண்டு
பேரும் தனியா இருக்கோம்,
நீங்க பாட்டு தானம் தர்மம்னு கதவைத்
திறந்து அவனுக்கு தானம் செய்யப் போறீங்க,
அவன் கையிலே வெச்சிருக்கற கொம்பாலே
உங்களை அடிச்சுப் போட்டுட்டு
வீட்டிலே இருக்கறதை எல்லாம் எடுத்துண்டு போய்ட்டான்னா என்ன செய்யறது.
என்னைக் கேக்காம கதவைத்
திறக்காதீங்கன்னு எவ்ளோ தடவை உங்களுக்கு
சொல்றது,
இனிமே இப்பிடி கதவைத் திறக்காதீங்க
என்றாள். சரி சரி என்று
வேகமாய்த் தலையை ஆட்டினார் சபேசன்,
பூம்பூம் மாட்டுக்காரன் வந்த வேலையை
முடித்துக் கொண்டு திரும்பிக்
கொண்டிருந்தான், இவர்கள் வீட்டைத்
தாண்டி செல்லும் போது ஏனோ அந்த பூம்
பூம் மாடு ஒரு முறை இவரை திரும்பிப்
பார்த்துவிட்டு மேலே நடக்கத்
தொடங்கியது. ,
அன்று மாலை ,கனகா கதவைத் தாப்பாள்
போட்டுக்கோ ,காலார ஒரு நடை
நடந்துட்டு , அப்பிடியே காய்கறி
வாங்கிட்டு வரேன் என்றபடி வெளியே
வந்தார்
சபேசன்,
சற்று தூரத்தில் அந்த மாடு படுத்துக்
கொண்டிருந்தது, பூம்பூம் மாட்டுக்காரன்
அரசாங்க மதுக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் கண் விழித்து தனக்கு ஏதேனும்
உண்ணக் கொடுப்பான் என்னும்
நம்பிக்கையுடன் பூம்பூம்
மாடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த மாட்டைக் கடந்து
போகும்போது ஏனோ ஒரு முறை சபேசன் அந்த மாட்டைத் திரும்பிப் பார்த்தார். அதன்
கண்களில் ஒரு இரக்கமும் , நன்றியும் தெரிந்தது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
No comments:
Post a Comment