திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, October 19, 2011

தீபாவளி  http://www.vallamai.com/special/deepavali/199
Published October 18, 2011 |
தமிழ்த்தேனீ
தீபம்என்றால்ஒளி,விளக்கு.ஆவளிஎன்றால்வரிசை.வரிசையாய்விளக்கேற்றி,இருள் நீக்கி, ஒளிதரும்பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும்,நெருப்பில்ஜீவாத்மாவும் வாசம்செய்துஅருள்தருவதாகஐதீகம்
. ..தீபாவளித்திருநாளில் விளக்குகளை ஏற்றிஓளியை வழிபட்டுபட்டாசுகளைக் கொளுத்தி அவ்வப்போது உடலிலுள்ள வியாதிகளை நீக்குதல் போல் மனதிலுள்ள தீக்குணங்களாகிய,இருட்டுப்   பகுதிகளாகியஅகங்காரம், பொறாமை, தலைக்கனம், போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். தீய குணங்களை எரித்துவிட வேண்டும்.இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
1. இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
2. பகவான் நாராயணனின், ஸ்ரீ தேவி, பூதேவி என்னும் இரு மனைவியருள் பூமாதேவிக்குப் பிறந்த நரகாசுரன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவன் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ கிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்தபோது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க நாம் தீபாவளி என்னும் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறோம்.
3. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக கருதப்படுகிறது.
4. கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்ற இத்தினத்தில் தான் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுத்தார். ஆகவே இத்தினத்தை தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்.
நரகாசுரன் என்பவன் யார் தெரியுமா? பூமித்தாயின் புதல்வன். லோக மாதா கூட அருள் செய்யாத அளவுக்குப் பாவங்களைப் புரிந்த நரகாசுரனை அழிக்க எண்ணம் கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கருடன் மேல் சத்யபாமா சகிதமாக வந்து நரகாசுரன் ஆண்டுவந்த பிராக்ஜோதிச நகரத்தை அடைந்தார். ஆமாம் கூடவே தாயாரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு சம்ஹாரம் செய்தது நரகாசுரனைத்தான்.
ஸ்ரீகிருஷ்ணன் போருக்கு ஆயத்தமாக சங்கநாதம் முழங்கினார். ப்ராக்ஜோதிச நகரத்தின் கோட்டையின் சுவர்களைத் தன் கதாயுதத்தால் தகர்த்து எறிந்தார். முரன் என்னும் அசுரன் சூலமேந்திக் கிருஷ்ணன் மேல் பாய்ந்தான். அவன் சூலத்தையும் முறித்து அவன் தலையையும் அறுத்தார் கிருஷ்ணன். பல ஆயுதங்களை கிருஷ்ணன் மேல் பிரயோகித்த நரகாசுரனை அத்துணை ஆயுதங்களையும் தகர்த்து எறிந்து தன்னுடைய சக்ராயுதத்தால் நரகாசுரனை இரண்டாகப் பிளந்து வீழ்த்தினார் கிருஷ்ணபகவான்.
நல்லவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் பல புரிந்து அவர்களைத் துன்புறுத்திய நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த இந்த நாளைத் தான் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.
ஆமாம்! அரக்க குணத்தோரை அழித்து நல்ல குணமுள்ளவர்களைக் கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி. இந்த நன்நாளில் விடியற்காலையில் எழுந்து கங்காஸ்நானம் செய்து, புத்தாடைகள் அணிந்து, மனதில் மகிழ்ச்சியுடன் இனி வரும் நாளெல்லாம் நமக்கு வாழ்வில் ஓளியேற்றப்போகும் நாட்களே என்னும் நல்ல எண்ணத்துடன் இறைவனை நமஸ்காரம் செய்து, பெரியவர்களின் ஆசியோடு நாம் இருளை அகற்றும் ஒளியை நம் இல்லங்களில் விளக்காய் ஏற்றி, ஒளியை அளிக்கக் கூடிய மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், தரைசக்கரம், போன்ற ஓளிகூட்டும் பட்டாசுகளை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.
தீபாவளி அன்று அனைவரும் பிரும்ம முகூர்த்தமாகிய அதிகாலையில் எழுந்து மணைகள் போட்டு அதில் அனைவரையும் அமரச் செய்து மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவையை நலங்காக இட்டு மகிழ்வர். இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஒவ்வொரு தம்பதியரும் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நலங்கு இட்டு வெற்றிலையில் சற்றே சுண்ணாம்பும், பாக்கும் வைத்து மெல்லக் கொடுப்பர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சி தலையில் தடவி விடுவர், அனைவரும் அதன் பிறகு எண்ணெய்க் குளியல் (கங்கா ஸ்நானம் என்னும் குளியல்) செய்வர். அன்றைய தினத்தில் கங்கையில் ஸ்நானம் செய்தால் புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம். குளித்து முடித்து அனைவரும் புத்தாடைகள் அணிந்துகொண்டு விளக்கேற்றி தெய்வங்களை நமஸ்கரித்துவிட்டு, வீட்டிலிருக்கும் பெரியோர்களையும் வணங்கி ஆசி பெறுதல் வழக்கம். அதன் பிறகு பட்டாசுகள் வெடித்துவிட்டு இனிப்பு பலகாரங்களை உண்டு மகிழ்வதும், நல்ல அறு சுவை உணவு வகைகளை உண்டு மகிழ்வதும், உறவுக்காரர்களின் வீடுகளுக்கு சென்று உறவுகளை பலப்படுத்தி மகிழ்வதும் வழக்கம். ஒருவருக்கொருவர் பரிசுகள் தந்து மகிழ்வர்.
உணவுகளை செறிமானம் செய்ய, நம் வயிற்றை சுத்தம் செய்யத் தேவையான அத்துணை மூலிகைகளும் கலந்து தீபாவளி லேகியம்என்று ஒரு லேகியம் செய்வர்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.
அந்த நீராடலைத்தான் கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் கங்கா தேவிவியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
தீபாவளி என்றவுடன் எனக்கு என் காலச் சக்கரம் பின்னோக்கி சுழல ஆரம்பித்துவிட்டது! வருடம் 1958. என் வயது 11. தீபாவளி நன்நாள் மிகவும் சுபிக்க்ஷ்மான காலம், பொற்காலம், காலணாவுக்கு இட்லி, அரை அணாவுக்கு தோசை, 16 அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய், நாலு காலணாக்கள் கொண்டது ஒரு அணா. மூன்று தம்பிடிகள் கொண்டது காலணா. அந்தக் காலணாவில் முழு நாணயமும் இருக்கும் ஓட்டைக் காலணாவும் இருக்கும்!
ஒரு படி நெல்லூர் பச்சரிசி அதாவது(8 ஆழாக்கு = ஒரு படி) (இப்போது 5 ஆழாக்கு ஒரு கிலோ). 100 ரூபாய் சம்பாதிப்பவன் நடுத்தரக் குடும்பஸ்தன். ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் பெரும் பணக்காரன்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் பக்கவாட்டில் இருக்கும் வால்டாக்ஸ் தெருவிலே செக்கிலே எண்ணை ஆட்டுவார்கள். அங்கு போய், அப்போது நானும் என் பெரிய சகோதரியும் வாங்கி வருவோம் சுத்தமான நல்லெண்ணை. அதன் பிறகு மளிகைக் கடையிலே அனைத்து மாதாந்திர மளிகை சாமான்களும் வாங்கி மொத்தமாக அனைத்துக்கும் சேர்த்து பதினெட்டு ரூபாய் கொடுப்போம், அவர் எங்களுக்கு இனாமாக (அதைக் கொசுறு என்று சொல்வார்கள்). எங்களுக்கு கையிலே அள்ளிக் கொடுப்பார் மிகப் பெரிய வேர்க்கடலைகளை! அதை சாப்பிடவே ஒரு நாள் ஆகும்.
ஒரு பெரிய காகிதத்திலே முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு, கல்கண்டு என்று ஒரு கதம்பம் கொடுப்பார். இப்போது அதன் விலை குறைந்தது 1000 ரூபாய் இருக்கும்! சினிமாவுக்குப் போனால் கட்டணம் ஒரு அணா. அந்தக் காலத்தில் நான் கொண்டாடிய தீபாவளிக்கு என் காலச்சக்கரம் என்னை கொண்டு போய் என் பழைய பசுமையான நினைவுகளைக் கிளறி விட்டது.
என் தந்தையார் திரு ஆர். ரங்கஸ்வாமி அவர்கள். வணிகம் செய்து கொண்டிருந்தார். நாங்கள் சென்னை மத்திய புகைவண்டி நிலையம் அருகில் பீ.ஆர். சதுக்கம் என்னும் இடத்தில் குடியிருந்தோம். அந்த வீட்டுச் சொந்தக்காரர் காஞ்சீபுரத்தில் இருந்தார். அந்த வீட்டில் மொத்தம் 18 குடித்தனங்கள்.
மொத்தமாக சிறுவர்களும் சிறுமிகளும் சுமாராக 50 குழந்தைகள். பெண்களுக்குத் தனி மாடி, ஆண்களுக்கு தனி மாடி. மொத்தமாக அனைத்து குழந்தைகளும் ஒன்றாக அவரவர் பெற்றோருடன், மாடிக்கு சென்று மொத்த வெடிகளையும் வெடிப்பார்கள். ஆனால் எனக்கு என்றுமே இந்த வெடிகள் மீது ஆசையே கிடையாது. அது வெடிகள் போடும் சப்தத்தினாலா, அல்லது என்னுடைய பயத்தினாலா என்று எனக்குத் தெரியாது. என் பங்கு வெடிகளையும் என் அண்ணா வெடிப்பார். நான் தூரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பது மட்டுமே! ஆனால் அத்தனை குழந்தைகளின் ஆரவாரமும், குதூகலமும், புதுத் துணிகள் சரசரக்க நாங்கள் அடித்த கொட்டமும், இன்னும் பசுமையாய் மனதிலிருக்கிறது!
என் அப்பா தானாகவே ஒரு மத்தாப்பு செய்வார். அதைக் காண மொத்தக் கூட்டமும் அங்கு கூடிவிடும். ஒரு பெரிய துணியில், உப்பு, கொஞ்சம் மிளகு, இன்னுமென்னன்னவோ சேர்த்து அதைப் பொடி செய்து அந்தத் துணியில் அதை சுற்றி நீளமாக ஒரு கனத்த வால் போல் செய்வார்.
அதன் ஒரு முனையிலே ஒருகயிறு கட்டிவிட்டு மறு முனையிலே நெருப்பை ஏற்றுவார். பிறகு அந்தக் கயிற்றின் முனையைப் பிடித்துக் கொண்டு விதம் விதமாக சுழற்றுவார். அதிலிருந்து வரும் மத்தாப்பூ துளிகள் வண்ண வண்ணமாய் மின்னும், பலவித உருவங்களை தோன்றும்!
சமீபத்தில் டிஸ்னீ லேண்ட் அமெரிக்காவில் பார்த்தேன். லேசர் காட்சி என்றார்கள். மிக நன்றாக இருந்தது! அதை 55 வருடங்களுக்கு முன்னரே நடத்திக் காட்டியவர் என் தந்தை. மிக ஆச்சரியமாக இருக்கிறது இப்போது அதை நினைத்தால்!
விடியற்காலையில் எழுப்பி என் அண்ணன், மூத்த சகோதரிகள் இருவர், என் தம்பி கடைக்குட்டி, அனைவரையும் வரிசையாக உட்காரவைத்து (தூக்கம் கலையாமல் இருந்தாலும்) எங்கள் கால்களை நீட்டச் சொல்லி இரு கால்களிலும் சுண்ணாம்பு, மஞ்சள் கலந்த ஒரு கலவையைப் பூசி, பொட்டு இட்டு, தலையில் நல்ல எண்ணையை ஒரு கை வைத்து வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுத்து (சிறுவர்கள் வெற்றிலை பாக்கு போடக்கூடாது, அன்றுமட்டும் அனுமதி!) அதைச் சாப்பிடச் செய்து நல்ல சுடு தண்ணீரில் எங்களைக் குளிக்க வைத்து பரிவோடு தலையை துணியினால் துடைத்துவிட்டு (இல்லையென்றால் ஜலதோஷம் பிடிக்குமாம்!). புது துணிமணிகள், பழம், வெற்றிலைபாக்கு, பலகாரங்கள், சாமி படத்தின் முன்னால் ஒரு பெரிய தாம்பாளத்தில் வைக்கப் பட்டிருக்கும். அங்கே அழைத்து சாமியை கும்ப்பிட வைத்து, புதுத் துணிகள் எங்களுக்கு அணிவித்து, நாங்கள் அனைவரும் எங்களுடைய பெற்றோரை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவோம்.
எங்கள் அனைவரின் நலத்துக்காக அவர்களும் இறைவனை வணங்கிவிட்டு இனிப்பு கொடுப்பார்கள். அவர்கள் கையாலேயே ஊட்டிவிடுவார்கள்! அந்த அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இனி எங்கே போவேன், அவர்கள் அன்பு தன்னலமில்லாதது. அந்தப் பாசம் உண்மையானது! அதை நினைத்துக் கொண்டே இப்போதும் எங்கள் குழந்தைகளுக்கு செய்து கொண்டிருக்கிறோம் நானும் என் தர்ம பத்தினியும். என்னதான் சொல்லுங்கள் அந்தக்கால பாசமும், நேசமும், பரிவும் இப்போது ஒரு மாற்று குறைந்துதான் போய்விட்டது. ஹூம் பசுமையான நினைவுகள்!
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பறந்து செல்கின்றோம்
நாம் பறந்து செல்கின்றோம்
என்னும் பாடல்வரிகள் நினைவிற்கு வருகிறது.
காலச் சக்கரம் வெகு வேகமாக சுழல்கிறது. நரகாசுரன் வதமும் அதன் காரணமாக தீபாவளிப் பண்டிகையை இன்று வரை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
அன்புடன்
தமிழ்த்தேனீ

Post a Comment