திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, August 28, 2011


                      “அனுபவமும் தீர்வுகளும் ஆரோக்கியமும்”
”அனுபவம் என்பது ஒவ்வொருவரும்  அனுபவித்து தெரிந்து கொள்ளுதலே
அல்லது அடுத்தவர் அனுபவங்களிலிருந்து  பாடம் கற்றலே”
என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன்:- ஒருமுறை என் தாயாருக்கு தென்னைமரத்து தேள் கொட்டிவிட்டது. நட்டுவாக்களி என்று சொல்வார்கள், அது கொட்டினால் பிழைப்பதரிது. வயது அவருக்கு 60க்குமேல், மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு சென்று ,ஆங்கில முறைப்படி வைத்தியம் செய்தும் கடைசியில் மருத்துவர் சொன்னார் .உறுதியாக எதுவும் சொல்ல முடியாது, உடல் முழுவதும் விஷம் பரவி இருக்கிறது , பிழைத்தால் அதிசயமென்று .கவலையோடு உட்கார்ந்திருந்தோம் .
வாயிலில் ஒருவர் வந்து பசிக்கிறது ஏதாவது இருந்தால் உண்ணக் கொடுங்கள் என்றார். நானோ கவலையில் இருந்ததால் போய் பிறகு வாருங்கள் என்றேன் உடனே என் தாயார் அப்போதிருந்த நிலையிலும் அப்படிச் சொல்லாதே உள்ளே சென்று அவருக்கு ஏதேனும் உண்ணக் கொடு என்றார்கள்.
நான் வேண்டா வெறுப்பாக ஒரு இலையில் அவருக்கு என் வீட்டில் இருந்ததை அளித்தேன்    அவரும் உண்டார், கை கழிவி விட்டு என்னிடம் இந்த அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார். நடந்ததை சொன்னேன், அவர் தம்பீ ஏழை சொல் அம்பலம் ஏறாதுநான் சொல்வதைக் கேட்கிறாயா என்றார். நானும் சரி என்றேன். அவர் உடனே ஓடிப்போய் படிகாரம் பெரிய கட்டியாய் வாங்கி வா என்றார் .
வாங்கி வந்தேன். பத்து பெரிய பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்,அதையும் கொண்டு வந்தேன் என் தாயாரின் கையில் தேள் கொட்டிய இடத்தில் படிகாரத்தை வைத்து தண்ணீர் ஊற்றிக்கொண்டே கொண்டே இருக்கச் சொன்னார்    அரைமணி நேரத்தில் என் தாயாரின் உடலில் நீலம் குறையத் துடங்கியது, என் தாயார் பிழைத்தார்-
மருத்துவரால் கைவிடப்பட்ட என் தாயார் பிழைத்தார்.. அந்த நொடியிலிருந்து  என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் அனுபவங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன்.
நம் முன்னோர்கள் நிறைய நுணுக்கங்கள் தெரிந்தவராக இருந்தனர் அவர்கள் செய்த ஒரே தவறு நுணுக்கங்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லாமல் சென்றதுதான்.  நாமும் நம் பெரியோர்கள் சொன்ன எளிய வைத்திய முறைகளை ஆராய்ந்து பரிசோதனைக்குட்படுத்தி பிறகு நிறைய மருந்துகள் இயற்கையாகவே பக்க விளைவில்லாத மருந்துகள் செய்யலாம் என்பதே என் கருத்து. .

இப்போது என் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அனுபவத் தொகுப்பை இங்கே அளிக்கிறேன். ஆனால் நான் சித்தர் அல்ல!
1.       எங்கள் தெருவில் இருந்த ஒரு வாலிபன் ஓட்டிவந்த ஹீரோ ஹோண்டா திடீரென்று சறுக்கியது கீழே விழுந்து தேய்த்துக்கொண்டே சென்றது, நெற்றியில் காயம் ,ரத்தம் வழிந்தது அந்த வாலிபன் கையால் நெற்றியை அழுத்தியபடி இருந்தார்.
அதைக் கண்ட நான் எதிரே இருந்த வெற்றிலைபாக்கு கடைக்கு சென்று தீக்ககுச்சியை உரசி கைக்குட்டையின் ஒரு ஓரத்தை பற்றவைத்து கரியாக்கி, அதில் கொஞ்சம் வெல்லம், சுண்ணாம்பு இரண்டையும் கலந்து உள்ளங்கையில் வைத்து நன்றாக சூடு பறக்க தேய்த்துக் குழைத்து நெற்றியிலிட்டேன், ரத்தம் வருவது நின்றது, ரெண்டு நாளைக்கு தண்ணி படாமே பாத்துக்கோங்க என்றேன் , இரண்டே நாளில் அந்தப் பற்று உதிர்ந்தது, காயமும் ஆறியது, அது மட்டுமல்ல காயம் பட்ட வடுவும் குறுகிய நாட்களிலே மறைந்தது.
2.   நாங்கள் ப்ரயாணம் செய்த அந்த குளிர்சாதன பேருந்தில் ஒருவர் இருமிக்கொண்டே வந்தார்.   பேருந்து ஓரிடத்தில் நின்றது, யாரெல்லாம் காப்பி சாப்படறீங்களோ சாப்டுட்டு சீக்கிறம் வாங்க என்றார் ஓட்டுனர்.   ஒரு மளிகைக் கடையில் கொஞ்சம் சீரகம் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறி இருமிக்கொண்டிருந்தாரே அவரிடம் கொடுத்து வாயிலே அடக்கிக்கோங்க, அப்பிடியே கடிச்சி அந்த சாற்றை மட்டும் முழுங்குங்க என்றேன்.  சென்னை வந்து சேரும் வரையில் இருமல் சத்தம் கேட்கவே இல்லை.   சென்னைக்கு வந்து இறங்கும்போது அந்த இருமல்காரர் என்னிடம் வந்து சார் நீங்க சொன்ன மருந்து அமிர்தம் சார்,உடனே என் இருமல் நின்னு போச்சு என்றார் .
3.   வில்லிவாக்கத்திலே இருக்கும்போது எங்கள் பக்கத்து குடித்தனக்காரரின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்தவே இல்லை. அந்தக் குழந்தையை வாங்கி அதன் காதை தொட்டேன், வீறிட்டு அலறியது. ஒரு தடிமனான படுக்கை விரிப்பை எடுத்து அதில் அந்தக் குழந்தையை நடுவிலே விட்டு விட்டு அந்த படுக்கை விரிப்பின் ஒரு பக்க இரு முனைகளையும் கெட்டியாக ஒருவரைப் பிடிக்கச் சொல்லி மரு பக்கத்தின் இரு முனைகளையும் நான் பிடித்துக்கொண்டு மூன்று முறை குழந்தையை இரு ஓரத்துக்கும் உருளுவது போல படுக்கை விரிப்பை தாழ்த்தியும் ,உயர்த்தியும் செய்தேன்.
 குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு சிரித்தது,  ஆமாம் குழந்தைக்கு உரம் விழுதல் என்று ஒன்று உண்டு, அப்படி உரம் விழுந்தால் அதைக் கண்டு பிடிக்க காதைத் தொட்டால் போதும் ,குழந்தை இன்னமும் அதிகமாக வீறிடும்,அப்படிக் கண்டு பிடித்தால் இப்படி படுக்கை விரிப்பை உபயோகித்து செய்தால் குழந்தைக்கு உரம் விழுந்திருப்பது நீங்கும்.
4.   ஒரு முறை என் நண்பர் உணவு விடுதியில் அவருக்குப் பிடித்தமான பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு செரிமானம் ஆகாமல் அவதிப்பட்டார்.  அவரிடம் கொஞ்சம் புளி, கொஞ்சம் சீரகம் இரண்டையும் கலந்து வாயில் போட்டு மெல்லும்படி சொன்னேன் சில நிமிடங்களில் அவர் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற்றார்  
5.   ஒரு பெண்மணி திடீரென்று ஏதோ பூச்சி கடித்துவிட்டது அதனால் உடம்பெல்லாம் தடிமனாக ஆங்காங்கே வீங்கிவிட்டது என்றார். அவருக்கு ஒரு மலைவாழைப் பழத்தின் உள்ளே பெருங்காயம் வைத்து உண்ணச் சொன்னேன். சில மணித்துளிகளில் அவருடைய வீக்கங்கள் வடிந்தன.
 6.    சில நேரங்களில் குழந்தைகள் எதற்காக அழுகிறது என்றே தெரியாமல் அழுது கொண்டே இருக்கும், எதையோ பார்த்து பயந்தது போல் மிரண்டு மிரண்டு அழும்.அப்படிப்பட்ட நேரங்களில் கொஞ்சம் திரு நீற்றை எடுத்து மன சுத்தியுடன், “ஓம் ஹரீம் ஸ்ரீம் க்லீம் ஜம் மனசா தேவ்யை நமஹ: என்னும் ஸ்லோகத்தை ஜரத்காரு தேவியியை நினைத்து ஜபித்துவிட்டு குழந்தையின் நெற்றியில் பூசினால் உடனே குழந்தை அழுகையை நிறுத்தும்.  அல்லது வயிற்று வலியால் அழுதால் ஒரு வெற்றிலையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி அதை அடுப்பிலே காட்டி இளஞ்சூடாக வயிற்றில் போட்டு போட்டு எடுத்தால் வயிற்று வலி நீங்கி புன்னகை பூக்கும் குழந்தை.  
7.   முகத்திலோ மற்ற ஏதேனும் உடல் அவயவங்களில் காயம் ஏற்பட்டு அந்தக் காயத்தின் விளைவாக கரும் வடு ஏற்பட்டால் மஞ்சளையும் தேங்காய் எண்ணையையும் கலந்து பூசி வந்தால் அந்த கரும் வடு மறைந்து மீண்டும் சருமம் பளிச்சிடும்.
8.  பொதுவாக மாம்பழக் காலங்களில் மாம்பழம் சாப்பிட்டதன் விளைவாக வரும் வயிற்றுப் போக்கை நிறுத்த அந்த மாம்பழத்தின் கொட்டையில் இருக்கும் மாம்பருப்பை எடுத்து அடுப்பிலே சுட்டு அந்தப் பருப்பை உண்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
9.  நம் உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டு வரும் வயிற்று வலியை நீக்க ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்துக்கொண்டு அதை அப்பிடியே வாயில் போட்டு கடிக்காமல் முழுங்கி விட்டு அதை முழுங்க உதவியாக ஒரு டம்ளர் மோரை குடித்தால் உஷ்ணம் குறைந்து உடனே வயிற்று வலி நிற்கும்.
10.  ப்ரயாண காலங்களில் வெய்யிலில் ப்ரயாணம் செய்யும்போது வெய்யிலின் பாதிப்பு இல்லாமல் இருக்க எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அதைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரையை,அல்லது சிறிதளவு உப்பை கலந்து நீரும் கலந்து குடித்துக்கொண்டே இருந்தால் ப்ரயாணக் களைப்பும் தீரும், உடல் சூடும் சமனப்படும்  
11. குளிர் ப்ரதேசங்களில் பயணப்படும்போது சற்றே இஞ்சி கலந்த சீரகத்தையும் , சில மிளகுகளையும் கலந்து இடித்து வைத்துக்கொண்டால் அதனுடன் வெல்லம் கலந்தோ,அல்லது சர்க்கரை கலந்தோ பானம் தயாரித்து குடித்தால் குளிர் நிற்கும்.
12.ஜலதோஷத்தினாலோ,அல்லது தொண்டைப் புண் ஏற்பட்டு தொண்டைக் கரகரப்பு ஏற்பட்டால் கொஞ்சம் சுண்ணாம்பை தேங்காய் என்ணையுடன் கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் விரைவில் குணமாகும்.
13.   ஒரு முறை நாங்கள் குடியிருந்த வீட்டில் இரவில் நல்ல தூக்கத்தில் விரலில் ஏதோ கடித்ததைப் போன்ற உணர்வு, சிறிது நேரத்தில் கடுக்கத் தொடங்கியது, தூக்கம் கலைந்து விளக்கை எரியவிட்டுப் பார்த்தேன், கொசு வலையின் ஓரத்திலே சாதுவாக உட்கார்ந்திருந்தது ஒரு தேள்.
அந்த வலியையும் பொறுத்துக்கொண்டு சமையலறைக்கு சென்று கிடுக்கியை எடுத்து வந்து அந்தத் தேளை கிடுக்கியால் பிடித்து அடித்துப் போட்டுவிட்டு அந்தத் தேள் கொட்டிய விரலைப் பார்த்தேன்,அந்தத் தேள் கொட்டிய கொட்டுவாயில் இருந்த தேளின் கொடுக்கு முனையை ஒரு ஊசியால் நீக்கிவிட்டு சமையலறைக்கு சென்று ஒரு வெங்காயம், சிறிது பெருங்காயம், இரண்டையும் அரைத்து அந்தக் கொட்டுவாயில் தடவிக் கொண்டு ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி அந்தக் கொட்டு வாயை சூடு படுவது போல் பலமுறைகள் காட்டி பிறகு கையின் மேற்புறத்தில் ஒரு துணியை இறுக்கிக் கட்டிக்கொண்டு படுத்தேன் . சிறிது நேரத்தில் தேள்கடியின் வீரியம் குறைந்து கடுப்பு நின்றது,தூங்க ஆரம்பித்தேன்   மறுநாள் வலி போயே போச், வலி போயிந்தி
14. மார்பில் கபம் கட்டிக்கொண்டு மூச்சு விடமுடியாமல் அவதிப்படும்போது நான்கைந்து வெற்றிலைகளை எடுத்து அவற்றை லேசாக சூடு காட்டி எலுமிச்சை பிழியும் கருவியில் போட்டு நசுக்கி சாறு பிழிந்து,அத்துடன் ஓரிரு மிளகையும் பொடி செய்து சிறிது தேனையும் கலந்து குடித்தால் கபம் பறந்துவிடும், மூச்சு சீராக விடமுடியும்.
 15.   தூது வளை இலை கிடைத்தால் அதைப் பொடியாக செய்து வைத்துக்கொள்ளுங்கள் . அந்தப் பொடியுடன் சற்றே பொடி உப்பு ,அல்லது தேன், அல்லது சர்க்கரை கலந்து மூன்று வேளை சாப்பிட்டாலே மார்புச் சளி கரைந்து சுவாசம் சீராகும்.
16.             மிளகு, சீரகம் சற்றே வறுத்து அதைப் பொடி செய்து சுடச்சுட சாதம் போட்டுக்கொண்டு அந்தப் பொடியை அந்த சாதத்தின் மேல் அப்படியே போட்டு, நெய் காய்ச்சி சுடச்சுட அதன் மேல் ஊற்றி தேவையான் உப்பு போட்டு கலந்து சாப்பிட்டால் அன்னத்வேஷம் அகலும், உணவு உண்ண ஆர்வம் வரும்.
17.       ஒரு நல்ல வாழை இலையை நன்றாகக் கழுவி அந்த வாழை இலையில் ஆங்காங்கே ஒரு கரண்டி சூடான சாதத்தைப் போட்டு,சற்று நேரம் வைத்திருங்கள், அந்த சாதத்தை எடுத்துப் பார்த்தால், அந்த சாதம் இருந்த இடங்கள் பசுமை நிறம் மாறி இருக்கும். அந்த சாதங்கள் வாழை இலையிலுள்ள சத்தை உரிஞ்சிக்கொண்டது என்று பொருள். அந்த சாதத்தை உங்கள் விருப்பப்படி எதில்வேண்டுமானாலும் கலந்து உண்ணுங்கள்   இது போல் வாரம் ஒரு முறை செய்யுங்கள், உங்கள் ரத்தத்தில் இருக்கும் அத்துணை விஷப்பொருட்களும் நீங்கும் இதனால்தான் நம் முன்னோர் வாழை இலையில் உணவு உண்ணும் முறையை வைத்திருந்தனர்  
 18. குழந்தைக்கு அடிக்கடி ஜுரம் வந்தால், வயிறு உப்புசமாக ஆனால், அதை மாந்தம் என்று சொல்வார்கள் அந்தக் குழந்தையின் வயிற்றில் அடிக்கடி வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி சூடாக்கி போடுங்கள்,மாந்தம் நீங்கும்.
19. சில குழந்தைகள் பிறக்கும் போதே குளிர்ச்சி அதிகம் தாக்கியதாலும் , அல்லது குறைமாதப் ப்ரசவம் என்றாலும் உடலில் நீலம் காணப்படும், மிகவும் இளைத்து பலகீனமாக காணப்படும், அது போன்ற குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறையாவது கழுதைப் பால் அளித்தால் அந்த நீலமும் மறையும், குழந்தையும் வலுப்படும்.
20.  மாமரத்தில் இலைகள் துளிர் விட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள், என்றாவது அந்த துளிர் இலைகளை சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது போன்ற துளிர் இலைகளை பறித்து, அத்துடன் சற்றே மிளகாய், புளி, இவற்றை அரைத்து சுவையான துவையல் செய்து உண்ணுங்கள். ரத்தம் சுத்தியாகும், நன்றாகப் பசி எடுக்கும். 
21.   வாழைப் பூவில் இருக்கும் சிறு சிறு பூக்களை அரிந்து துவரம் பருப்பை அரைத்து வேகவைத்து கலந்து வாழைப்பூ பருப்பு உசிலி என்று செய்வார்கள்,இது உடலுக்கு மிகவும் நல்லது இதில் இன்னமும் விசேஷமான செய்தி என்னவென்றால்   இந்தப் பூவை கடைசீ வரையில் ஆய்ந்து சிறும் பூக்களை தனிதனியாகப் பிரித்து அந்தப் பூக்களில் இருக்கும் மொட்டு போன்ற பகுதியை கள்ளன் என்று சொல்லி ஆய்ந்து விடுவார்கள்,அதன் பிறகுதான் சமைப்பார்கள்.கடைசீயாக இருக்கும் பகுதியில் உள்ளே அந்த வாழைப்பூவின் சிறு பகுதி வாழைப்பூ போலவே உருவத்தில் சிறுத்து இருக்கும் வெள்ளையாக, அந்த பகுதியை உண்டால் தேங்காய் சாப்பிடுவது போல் ருசி இருக்கும். முக்கியமாக இந்தப் பகுதி வயிற்றுப் புண், போன்றவைகளை ஆற்றும் தன்மை கொண்டது  -
22.           பலாப்பழம் போன்ற இனிப்பான பழத்தை அதிகம் விரும்புவோர் கவனிக்கவும் : பலாப்பழத்தை சாப்பிட்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வயிறு கெட்டுப்போய் அவதிப்படுபவர்களுக்கு முக்கியமான மருந்து ஒன்று உண்டு, அது என்ன தெரியுமா? அந்தப் பலாப்பழத்தின் உள்ளே இருக்கும் பலாக் கொட்டைதான் மருந்து! ஆமாம் இது இறைவனின் இயற்கை விந்தை! அந்தப் பலாப்பழக் கொட்டையை அடுப்பில் வேக வைத்து தேனில் குழைத்து உண்டால் பலாப்பழத்தினால் வந்த ஒவ்வாமை நீங்கிவிடும்.
23.       வாழைப்பழத்தை உரித்து அதன் சதைப்பகுதியை சற்றே நெய் போட்டு பிசைந்து அந்தக் கலவையை உண்டால் வயிறு உப்புசம், மந்தம் போன்றவை அடியோடு விலகும்.
24.    வரட்டு இருமல் என்று சொல்வார்களே அதுபோல் மிதமிஞ்சிய குளிராலோ,அல்லது அதிக வெப்பத்தினாலோ ஏற்படும் வரட்டு இருமலைப் போக்க நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதி மதுரம் சிறு மரக் பட்டைகள் போல் இருக்கும். அதை வாயில் அடக்கிக்கொண்டு அதன் சாற்றை விழுங்கிக் கொண்டே இருந்தால் நின்றுவிடும் வரட்டு இருமல்.
25.       அடாத ஜலதோஷமா? தேங்காய் எண்ணையில் சிறிது பூங்கற்பூரம் போட்டுக் காய்ச்சி அதை மார்பில் தடவுங்கள். ஜலதோஷம் குறையும், மூச்சு விட எளிதாக இருக்கும்
26. உடலில் சிறங்கு, சொறி,தேமல் போன்றவை இருந்தால் சீய்க்காய்ப் பொடி போட்டு நன்றாக தேய்த்துக் குளித்துவிட்டு மஞ்சளையும் தேங்காய் எண்ணையையும் கலந்து பூசுங்கள். சீக்கிரமே அவை காணாமல் போகும், அப்படியும் போகவில்லையென்றால் உத்தாமணி (ப்ரியாமணி அல்ல)  என்னும் வேலிப் பருத்தி இலையின் பாலை தடவி வந்தால் நிரந்தரமாக நோய் தீரும்.
27.          சாதாரண ஜலதோஷத்துக்கு நல்ல வரளி மஞ்சளை எடுத்து நெருப்பில் தீய்த்து அதன் மணத்தை முகருங்கள். ஜலதோஷம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்
28.       நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தால் படுக்கைப் புண் உண்டாகும் அப்படி படுக்கைப் புண் வராமல் இருக்கவும் ,அப்படி வந்துவிட்டால் விரைவில் குணமாகவும் சுத்தமான துணியினால் துடைத்துவிட்டு கற்பூரத்தையும் ஆலிவ் எண்ணையையும் கலந்து பூசுங்கள். 
29.    என்னதான் பல் தேய்த்தாலும் வாய் நாற்றம் வருகிறதா? ஆலம் விழுதுகளை பொடி செய்து, கடுக்காய் பொடி செய்து,வேப்பம் பட்டையை பொடி செய்து மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு ஒரு வாரம் பல் துலக்குங்கள் வாய் துர்நாற்றம் அண்டாது.
30.  ஒரு நற் செய்தி: கற்பூரம் அதிக அளவில் சாராயம் தயாரிக்கப்படும்போது கலக்கப்படுகிறது, நாம் உபயோகிக்கும் பல ரசாயனங்களில் கலக்கப்படுகிறது,அப்படி கற்பூரத்தினால் ஒவ்வாமை வந்தால் பித்தம் அதிகமாகும் , தலை சுற்றல் ஏற்படும். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு காப்பி குடித்தால் சரியாகிவிடும் தலை சுற்றல்.
31.          அன்றாடம் நாம் பல் துலக்கும் வழக்கத்தை ஏற்படுத்தித் தந்த முன்னோர்களுக்கு நன்றி சொல்வோம். தூங்கி எழுந்தவுடன் பல்லை நன்றாக நம் விரல்களால் உள்ளும் புறமும் பிடித்து அழுத்தி துலக்குங்கள். நன்றாக உணரலாம் தூக்கக் கலக்கம் தெளிவதை,, ஏனென்றால் நம் பற்களுக்கும் நம் மூளைக்கும் தொடர்பு உண்டு. நம் பற்கள் அழுத்தப்படுவதால் மூளை சுறுசுறுப்படைகிறது. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது பல் துலக்கும் ப்ரஷ் . அதனால்தான் பல் பிடுங்கும் போது அதன் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு பிடுங்குவார்கள், அப்படி வேர்களில் பாதிப்பு ஏற்பட்டால் மூளை பாதிப்படையும் .
32. சொத்தைப் பற்கள் இருந்து ஆரம்பத்திலேயே அவை கண்டு பிடிக்கப்பட்டால் மிகவும் நல்ல மருந்து ஒன்று உண்டு ஆமாம், கிராம்பு எனும் லவங்கம்.அல்லது கிராம்புத் தைலம் கலப்படமில்லாதது, அதை அந்த சொத்தைப் பற்களில் வைத்து அழுத்திக் கடித்து சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு வாய் கொப்பளித்தால் சொத்தை தானாக மறையும் .இல்லையென்றால் பல் வைத்தியர் நம் பல் சொத்தையைப் பிடுங்க ,நம் சொத்தையே பிடுங்கிக்கொள்வர்.
33. கண்ணில் வரும் கண் நோய், கண் சிவப்பு, போன்றவைகளுக்கு மிகவும் சிறந்த மருந்து தாய்ப்பால். ஆனால் இது எல்லோருக்கும் எப்போதும் கிடைக்காது, ஆகையால் அதற்கு ஈடான மருந்தே இல்லையென்றாலும் சுத்தமான பன்னீரை உபயோகித்தால் ஓரளவு பலன் கிடைக்கும்.
34.      அடிக்கடி காய்ச்சல் வரும் குழந்தைகளுக்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு என்னும் வேரை வாங்கி வந்து அதை கொதி நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி அந்தக் கஷாயத்தை தேனில் கலந்து கொடுத்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும். 
35.          வயிற்றுப் புண் பல விதமான காரணங்களால் வரலாம், அதிக காரம் உண்பவர்கள், அதிகாரம் செய்ய தைரியமில்லாததால் சோம பானம் சுறாபானம் போன்றவற்றைக் குடித்துவிட்டு தைரியம் வரவழைத்துக்கொண்டு அதிகாரம் செய்பவர்கள், அடுத்தவர் வாழும் வாழ்க்கையைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுபவர்கள் போன்றோருக்கு உண்டாகும் வயிற்றுப் புண், குணமாக நல்ல பச்சை சுண்டைக் காயை வாங்கி வந்து வதக்கி உண்ணலாம், அல்லது காய்ந்த சுண்டைக்காயை வாங்கி வறுத்து பொடி செய்து சாதத்தில் போட்டுக்கொண்டு சற்றே உப்பும் போட்டுக்கொண்டு நெய்யை ஊற்றி கலந்து உண்ணலாம், வயிற்றுப் புண், வயிற்றெரிச்சல் காணாமல் போகும் .
36.         பாம்புக்கடி பட்டவர்க்கு உடனடி விஷ முறிவு வைத்தியம் , வாழைப் பட்டையில் படுக்க வைத்து அவரைத் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்வது, மற்றும் அவருக்கு வாய் மூலமாக வழைப்பட்டைச் சாற்றினை ஊட்டுவது. வாழைப்பட்டைச் சாறுக்கு அவ்வளவு விஷ முறிவு சக்தி உண்டு. 
37.     சில குழந்தைகள் உடம்பு எப்போதும் சூடாக இருக்கும், கணச் சூடு என்பர். இப்படிப்பட்ட குழந்தைகள் மெலிந்தே இருப்பர். இதுவும் ஒரு வகை நோய்தான், இந்த நோயை அகற்றி ஆரோக்கியமான குழந்தையாக மாற்ற, ஓரிரு முறை கழுதைப் பாலை கொடுத்துவிட்டு, அதன் பிறகு ஆட்டுப் பால் வாரம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தை நன்றாக வளரும், இதற்குதான் அழுத பிள்ளை சிரிச்சுதான் கழுதைப் பாலைக் குடிச்சுதான்என்பர் பெரியோர். –
38.  அகத்திக் கீரை, கீழா நெல்லி, ஆலம் விழுதின் துளிர், முருங்கைக் கீரை, போன்றவை மிகவும் அருமையான ஔடதங்கள். இவைகளை நாள் ஒரு கீரை வீதம் அரைத்து வேகவைத்து பாலுடன் கலந்து பருகிவர , கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் அமிருதமாகிய தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க, ப்ரசவம் ஆன சில நாட்களிலேயே நம் முன்னோர்கள் இவைகளை வேகவைத்து உணவுடன் சேர்த்தும் கொடுப்பார்கள், 
39.        முருங்கைக் கீரை போல ஒரு அரு மருந்து கிடையவே கிடையாது! நம்முடைய ரத்தக் கொதிப்புக்கு ,அதாவது அதிக உணர்ச்சி வயப்பட்டு உடலும் மனமும் பரபரக்கும் வேளைகளில் நம்முடைய ரத்த ஓட்டத்தை சீராக வைக்க தினமும் முருங்கைக் கீரைச் சாற்றை ஒரு அவுன்ஸ் வீதம் பருகினால் ரத்தக் கொதிப்பு நோய் முற்றிலும் சீராகும்.
40.   ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் ,பக்கவாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பச்சை வெங்காயம் போன்ற சஞ்சீவினி உலகத்திலேயே இல்லை எனலாம். அப்படிப்பட்ட வெங்காயத்தை தினமும் பச்சையாக உண்டு வருவதால் பலவிதமான நோய்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம். ஆனால் வெங்காயத்தை நறுக்கி வைத்துவிட்டு வெகு நேரம் கழித்து உண்டால் வியாதிகள் பரவும் அபாயம் உண்டு.ஏனென்றால் வெங்காயத்துக்கு கிருமிகளை வசீகரிக்கும் குணம் உண்டு. ஆகவே வெங்காயத்தை நறுக்கி உடனடியாக உண்ணவேண்டும்.
41.          பச்சைப் பட்டாணியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் இதய சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படும்,  இதயத்திலிருந்துஎல்லாஉறுப்புகளுக்கும் ப்ரயாணம் செய்யும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க எப்போதும் பச்சைப் பட்டாணிகளை உபயோகிக்க வேண்டும். 
43.  நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை, கருஞ்சீரகம்,நிலவேம்பு போன்றவைகளை வாங்கி பொடி செய்து வைத்துக்கொண்டால் அந்தப் பொடியை தேனுடன் கலந்து உண்ண எப்படிப்பட்ட வாதமும் , காய்ச்சலும்,கபமும் தீரும்.
44.  வெற்றிலை போடும் பழக்கம் இல்லாத பெண்மணிகளைக் கூட பெரியவர்கள் ப்ரசவம் ஆன கையோடு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றையும் சரியான விகிதத்தில் உண்ணச் செய்வர்,இந்த வெற்றிலை ,பாக்கு சுண்ணாம்பு மூன்றின் கலவையை மென்று சுவைப்பதால் நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரும் சேர்ந்து வயிற்றினுள் செல்லும்போது ஜீரண சக்தியையும், அளிக்கிறது 
 45.  நல்ல சீரகத்தை கொஞ்சம் எடுத்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சுங்கள், அந்த சீரகங்கள் நன்கு பொரிந்து உடையும் பக்குவத்தில் வரும்போது தரமான சாம்பிராணி அதில் சேர்த்து அந்த எண்ணெய் ஆறியவுடன் அதை வடிகட்டி மாதம் ஒரு முறை தலைக்கு தேய்த்து எண்ணெய்க் குளியல் போட்டால் பித்தத்தினால் வரும் கண்ணோய்கள், வாந்தி மயக்கம் அனைத்தும் தீரும்
 46.   போன கண்ணைக் கொடுக்கும் பொன்னாங்கண்ணி என்று ஒரு சொல்வழக்கு உண்டு. அது பொய்யல்ல! பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து காயவைத்து அதை நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி மாதம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் போடும் வழக்கம் கண்களைக் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் , பார்வை தீட்ஷண்யத்தை அதிகரிக்க வழியும் செய்யும்.
47. வல்லாரை என்றொரு கீரை உண்டு கீரை விற்பவர்களிடம் சொன்னால் கொண்டு வந்து தருவார்கள். அந்த வல்லாரைக் கீரையை அவ்வப்போது வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
48.    துளசியைப் போல் ஒரு தூய மூலிகை உண்டோ? அதனால்தானே ஸ்ரீமன் நாராயணனுக்கு துளசியால் அர்ச்சனையும், ஆஞ்சநேயருக்கு துளசி மாலையும், அணிவிக்கிறோம். அதனால்தானே ஆண்டாளும் துளசி மாடத்தின் கீழே இருந்தாள். அப்பேற்பட்ட துளசியை சாதாரணமாக ஓரிரு இலைகள் உண்டு வந்தாலே மார்ச்சளி கரையும், கபம் நீங்கும்,ரத்தம் சுத்தியாகும். துளசியை நன்கு அரைத்து அதை வடிகட்டி அதில் சிறிதளவு தேனைக் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவாருங்கள், வேண்டாத காய்ச்சலும், இருமலும் வராமலே போகும்
 49. அமுக்கனாங்கிழங்கு என்றொரு வகை உண்டு, அந்தக் கிழங்கை வேகவைத்து உண்டு வர ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைவு போன்றவை நீங்கும், இளம் தம்பதியருக்கு இந்த அமுக்கனாங்கிழங்கு சூரணம் மிகவும் பயன் அளிக்க வல்லது, 
50. காய்ச்சல் காரணமாகவோ , அஜீரணம் காரணமாகவோ உணவு பிடிக்காமல் போகும் போது அந்த உணவு பிடிக்காமை தீர்ந்து உணவு உண்ண ஆர்வம் அதிகரிக்க உடனடியான மருத்துவம் ஒன்று உண்டு கருவேப்பிலை, கொத்துமல்லி, சற்றே மிளகு, புளி, தேவையான உப்பு சேர்த்து அரைத்து சுடும் சாதத்தில் அதைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து ஒரு வாய் உண்ணுங்கள். அதன் பிறகு விருந்தே உண்ணலாம் போல் ஆர்வம் வரும்.
51. நாட்டு மருந்துக் கடையில் சென்று விஷ்ணுக் கரந்தை என்று கேட்டு வாங்கி அதைப் பொடி செய்து மூன்று சிட்டிகை ஒரு அவுன்ஸ் மாதுளம்பழச் சாறுடன் கலந்து பருகி வர கருப்பைக் கோளாறுகள் நீங்கி கருத்தரித்து மழலைச் செல்வத்தைக் கொஞ்சி மகிழும் பாக்கியம் கிடைக்கும் 
  உணவு மட்டும் மருந்தல்ல நம் அனுபவமும் நல்ல மருந்துதான்  
அன்புடன்
தமிழ்த்தேனீ                 

Post a Comment