திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 24, 2008

சின்னத் திரை பெரிய திரை

சின்னத்திரை-பெரியதிரை

சின்னத்திரை - பெரிய திரை -எதுவானாலும்
எதிலும் ஒரு முத்திரை பதிக்க வேண்டும்,
என்பதே நம் நோக்கமாக இருந்தால்
நல்லது,

இன்று பல பேருடைய முகத்திரையை கிழித்துக்
கொண்டிருக்கிறது , சின்னத் திரையும் பெரிய
திரையும்.
சின்னத் திரை ,பெரிய திரை ,காரணமாக உருவான
பல பத்திரிகைகள், ஏற்கெனவே இருக்கும் பல
பத்திரிகைகள், உள் பட எல்லாருமே.,
மனிதர்களின் வாழ்க்கைக்கு இந்த இரண்டும்
உதவுகிறதா?
அல்லது இவை இரண்டும் மனிதர்களின் வ.¡ழ்க்கையை
சீரழிக்கிறதா? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்,

ஆனால் இந்த இரண்டும் எந்த அளவுக்கு
முன்னேற்றம் அளிக்கிறதோ,
அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்க்கையை
சீரழிக்கவும் செய்கிறது .,
என்பதை மனம் திறந்து சொல்கிறார்களோ,....
இல்லையோ மனத்தளவு உணர்ந்திருக்கிறார்கள்
என்பது நிச்சயம்,

என் நண்பர் ஒருவர், அவர் போகாத அயல்நாடுகளே
இல்லை, பல பெரிய பதவிகள் வகித்திருக்கிரார்
அவர் இன்று சின்னத் திரை ,பெரிய திரை
இரண்டிலும் நடித்துக் கொண்டு இருக்கிரார்
அவரை நான் கேட்டேன் , நண்பரே
உங்க தகுதிக்கும் வயசுக்கும் இதெல்லாம்
தேவையா என்று,
அதற்கு அவர் சொன்ன பதில் என்னை
யோசிக்க வைத்தது,

மிஸ்டர் கிருஷ்ணமாச்சாரி நான் கடந்த
காலத்தில் என்னன்னவோ செய்தேன்
ஆனால் யாருமே எங்கிட்ட வந்து
ஐயா நீங்கதானா அதுன்னு கேட்டதே
இல்லை,
ஆனா ஒரு சினிமாவுல ,ஒரு தொலைக்காட்சி
தொடர்ல நான் நடிச்ச உடனே
ஐயா நீங்கதானே அது , ஐயா நீங்கதானே அது ,
அப்பிடீன்னு பலபேரு கேக்கராங்க,
இப்போ சொல்லுங்க இது தேவையா
தேவை இல்லையான்னு- அப்பிடீன்னார்,
உண்மைதான் எல்லாருக்குமே ஒரு
(ரெகக்னேஷன்) அதாவது தகுதி உணர்தல்
தேவைப்படுகிறது,
இந்தத் தகுதி உணர்தல் மட்டும் நம் நாட்டில்
சரியான அளவில் இருந்தால் நம்மில் யாராவது
அயல் நாட்டுக்கு வேலைக்கு சென்றிருப்போமா
சொந்த பந்தங்களை விட்டுட்டு சுவையான
வாழ்க்கை முறையை விட்டுட்டு
நம் திறமைகளை அயல் நாட்டுக்கு விற்க
முடிவு செய்திருப்போமா?
இது ஒரு கோடி பதில்களை தேக்கி
வைத்திருக்கும் கேள்வி?

சரி, முதன் முதலில் நடிக்கவேண்டும் என்ற
ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது,
ஏதாவது ஒரு துறையில் ப்ரபலமாக
இருக்க வேண்டும்!!!
பிறந்தோம்! - இறப்பதற்கு முன்
ஏதாவது சாதனை செய்யவேண்டும் என்கிற
தாகத்தை எனக்குள் விதைத்தது,
என் தாயார் கமலம்மாள் அவர்கள்.,

வெறும் மூன்றாவது மட்டுமே படித்துவிட்டு,,
பெண்கள் வெளியே வரமுடியாத ,
அந்தக் காலத்திலேயே, தாய் நாட்டுக்காக
கதைகள் எழுதி , கவிதைகள் எழுதி,
வை. மு. கோதைநாயகிஅம்மாள் போன்ற பல
பெரியவர்களுடன் சேர்ந்து , வாருங்கள் மறியல்
செய்து , மனமகிழ்ந்திட வாருங்கள் ,என்று
விடுதலைப் பாடல்களைபாடி , ஊர்வலமாகப் போய்
தன்னுடைய ஒரே சொத்தான இரு தங்க
வளைல்களை ,மஹாத்மா காந்தியிடம்
கழட்டிக் கொடுத்துவிட்டு ,வீட்டுக்குச்சென்று
வளையல்களை மஹாத்மாவிடம்
நாட்டுக்காக கழட்டிக் கொடுத்துவிட்டேன்,!!
என்று தைரியமாகக் கூறியவர்,
என் தாயார் கமலம்மாள் என்பது
சத்தியமான உண்மை!!!!

மூன்றாவதே படித்த என் அம்மாவின் தமிழ் அறிவு,
என்னைப் பல முறை வியக்க வைத்துள்ளது.
ஒரு முறை வில்லிவாக்கம் என்னும் ஊரிலே
குடியிருந்தோம்
வழக்கமாக புகைவண்டி நிலையத்துக்கு
அருகிலே இருக்கும்
காய்கறிக் கடைக்கு சென்று தேவையான
காய் கறிகள் வாங்கிக் கொண்டு திரும்புவோம்
ஒரு நாள் மாலை வேளை, கதிரவன் தன்
வழக்கமான பணியை முடித்துக்கொண்டு
வேலைக் களைப்பால் முகம் சிவந்து
அதனாலேயே அழகாக, மிக அழகாக,
தோன்றிக் கொண்டு ...இல்லை இல்லை
மறைந்து கொண்டிருக்கும், காட்சியை
கண்டுவிட்டு வீடு திரும்பினோம்!

என் அம்மா டேய் கண்ணா எழுது என்றார்கள்
ஆமாம் என்னை என் அம்மா கண்ணா என்றுதான்
அழைப்பார்கள்,
உடனே காகிதத்தை எடுத்து எழுத ஆரம்பித்தேன்
சரமாரியாக என் அம்மாவின் வாயிலிருந்து
கவிதை மழை!!!

மரகதப் பச்சைக் கரை வரைந்த ,
வைரக் கிரணங்கள் இழை சேர்த்து,
செந்தூரச் செந்தழல் சேலை கட்டி,
மாலை மயங்கும் வேளையிலே,
மலை முகட்டின் சிகரத்திலே,
காதலன், காவலன், காரிருளோன்,
வரக் காத்திருக்கும், வண்ண மாலைப்
பெண்ணே!!!
பத்தினிப் பெண்டிரின் பாத நடை போல,
மெத்து மெத்தன்ன நடை பயின்று,
நித்தம் நித்தம் நீ நின்றும் நில்லாமலும்,
மஞ்சில் ஒளிந்திடப் போகையிலே,
அப்பிடீன்னு அது பாட்டுக்கு
கொட்டிக்கொண்டே இருந்தது.

இன்னும் பல அருமையான வரிகள் ,
இந்தப் பாடலில் இருக்கிறது.
இந்தப் பாடல், இன்னும் பல
தெய்வீகப் பாடல்கள், எல்லாம்
உயர் திரு பாம்பே சகோதரிகள்
அவர்களால் பாடப்பட்டு,
சங்கீதா ஒலிநாடா நிறுவனத்தால்,
ஒலி நாடாவாக தெய்வீகப் பாமாலை
என்னும் பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்
அப்போது என் தாயாருக்கு 78 வயது,
அது மட்டுமல்ல, அப்போது என் தாயார்
ஒரு புற்று நோயாளி, வாரா வாரம் இரத்தம்
ஏற்றிக் கொண்டால்தான், நடமாடவே முடியும்,
அந்த பொல்லாத நாட்களிலும், எதாவது
சாதனை நிகழ்த்தவேண்டும் ,என்கிற ஆர்வம்
அவர்களை , திரு ஜயேந்திரஸ்வாமிகள்
ஏற்படுத்திய ஜன் கல்யாண்- என்ற அமைப்பில்
கலைமகள் பத்திரிகையும் ,ஸ்டேட் பாங்க்கும்
இணைந்து நடத்தியஒரு கதைபோட்டி,
அதில் கலந்து கொண்டு, வெற்றிகரமாக
முதற் பரிசும் பெற்ற என் தாயார்,
உயர் திரு சங்கராச்சாரியார் ஜயேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகளின்- திருக் கரங்களால்
தங்க காசு வாங்கும் அளவுக்கு, திறமையும்,
உறுதியும் ,கொண்ட என் தாயார்
கமலம்மாள் அவர்கள் அளித்த ஊக்கமேஎன்னை
குறைந்த பட்ஷம் இந்த அளவுக்காகவாவது
எழுத வைத்திருக்கிறது என்பதில்
எனக்கு சந்தேகமில்லை.

ஆகவே ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும்
ஊக்கம் கொடுக்க ஒரு கருவி நிச்சயமாய்த்
தேவைப் படுகிறது!

நான் சாதாரணமாக சொல்வேன் ,
என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்தது
இவர்தான் அப்பிடீன்னு யாரையவது கை காட்டுவேன்,
எப்பிடீன்னு என் நண்பர்கள் கேட்டா,
இவர்மட்டும் தலையிடாமே இருந்திருந்தால்
இன்னும் முன்னுக்கு வந்திருப்பேன்,
அப்பிடீன்னு சொல்வேன் விளையாட்டாக,
அப்பிடி யாரும் தேவை இல்லை,
ஆனால் ஆனானப் பட்ட ஆஞ்சனேயருக்கே
அவருடைய பலம் ,ஸக்தி என்னான்னு உணர்த்த
ஒருவர் தேவைப் படும் போது ,
நாமெல்லாம் எம்மாத்திரம்?அதனால் நமக்கும்
ஒரு உந்து ஸக்தி வேண்டும்,
வாழ்க்கையில் முன்னேற,
அது சின்னத்திரையாக, இருந்தால் என்ன
பெரிய திரையாக, இருந்தால் என்ன?
எதையாவது பிடித்துக்கொண்டு
நாமும் உயர்ந்து ,நாட்டையும் உயரவைக்க,
என்ன வழி என்று யோசிப்போம்.


நான் சின்னத்திரையில் , அடியெடுத்து
வைப்பதற்கு முன்பே பெரிய திரையில்,
எனக்கு ஒரு ஸந்தர்ப்பம் கொடுத்தவர்
என் நாடக ஆசான் - எம் ஆர் ராஜாமணி
அவர்கள்,
அப்போது நான் லூகாஸ் டீ வி எஸ் என்னும்
நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டிருந்தேன்,
அங்கு தொழிலாளர் நல சங்கத்தின் ஓராண்டு
நிறைவு விழா 1967 ம் ஆண்டு,
அதற்காக ஒரு நாடகம் போடுவது என்று
முடிவானது,
அதை ஒரு தொழிலாளியே எழுதி இயக்கி
அரங்கேற்றம் செய்தார்,
என் வாழ்க்கையில் முதன் முதலாக அதில்
பங்கேற்க அவர்களை நாடினேன்,
அவர்களும் எனக்குகொரு முதியவர்
பாத்திரம் கொடுத்தனர் ,
அப்போது எங்களுக்கு டி வி சுந்தரமய்யங்காரின்
புதல்வர் திரு டி எஸ் க்ருஷ்ணா அவர்கள்
தலைமை பொறுப்பாளராக இருந்தார்,

அவரை நாங்கள் செல்லமாக சிங்கம், என்றும்
தாத்தா, என்றும் அழைப்போம் ஏனென்றால்
எங்கள் நிறுவனத்தின் அடையாளம்
அடையாளக் கொடி எல்லாம் சிங்கம்தான்,

எங்கள் நிறுவனத்தின் பின்னால் நிறைய காலி
இடம் இருக்கும் ,அதிலேயே பந்தல் போட்டு,
நாங்கள் எல்லாரும் முகப்பூச்சு அணிந்து கொண்டு
வேஷம் போட்டுக் கொண்டு நின்றிருந்தோம்,
அப்போது எங்கள் சிங்கம் டி எஸ் க்ருஷ்ணா
அவர்கள் மேடைக்கு வந்தார்....
அவர் காலிலே விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம்,
அவர் நாங்கள் போட்டுக் கொண்டிருந்த அத்தனை
வேஷத்திலும் , எங்களை அடையாளம் கண்டு கொண்டு
நீ க்ருஷ்ணமாச்சாரி தானே? என்று
கேட்டது இன்றும் நினைவில் உள்ள ஒரு பசுமை!!

அதற்குப் பிறகு எத்தனையோ நாடகங்கள் ,,
எங்கள் நிருவனத்திலே போட்டி நாடகங்களாக
உருவாக்கப்பட்டு, பல பெரிய திரை நட்சத்திரங்களை,
நடுவர்களாகக் ,கொண்டுவந்து பல நாடகங்கள்
என்னாலேயெ உருவாக்கப்பட்டு,
பல பெரியவர்களின் கையால் பரிசுகள் வாங்கி,
அதெல்லாம் ஒரு பொன்னான காலம்!!!!
ஒரு கலைஞன் உருவான காலம்.!!!!

அப்போது ஒரு நாடக விழாவுக்கு என் குரு
எம் ஆர் ராஜாமணி அவர்கள் நடுவராக
வந்தார், என் நாடகத்தைப் பார்த்துவிட்டு
பாராட்டிவிட்டு ,எனக்கு முதற் பரிசும்-
(கதை, வசனம், ஆக்கம், இயக்கம் )
அளித்துவிட்டு , ஏன் உன் திறமையை
எங்கோ ஒரு மூலையில் வீணாக்கறே,
என்னோட வந்து சேர்ந்துக்கோ,
உன்னை உன் திறமையை வெளிக் கொண்டு வரேன்
அப்பிடீன்னு சொன்னது இன்றும் என் காதுகளில்
ஒலிக்கிறது !!!!!
அப்போது அவர் அவருடைய சகோதரர் விசு,
அனைவரும் தொழில் முறையாக நாடகம் போட்டுக்
கொண்டிருந்தனர் ,
நானும் வேலை செய்து கொண்டே, மாலை வேளைகளில்
அவருடைய நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்,
அப்போது சென்னை தூரதர்ஷன் நிலையத்தில்
நடிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது,
அப்படியே அந்த தகுதிச்சான்றும் கிடைக்கப் பெற்று
அதிலும் பல வகையான வேடங்கள் நடித்தேன்,
அப்புறம் நாலு பேருக்கு நன்றி என்கிற திரைப் படத்திலும்
நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது,
ஆனாலும் சித்தீ என்னும் சின்னத்திரை தொடரிலேதான்
என்னைமக்கள் அங்கீகாரம் செய்தனர்,
அந்தத் தொடரிலே நடிக்க
எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தவர்
திரு சி ஜே பாஸ்கர், அவருக்கும் எனக்கு
தொடர்ச்சியாக நடிக்க ஆதரவு கொடுத்த
ரேடன் டீ வீ நிருவனத்திற்கும்
திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுக்கும் என் நன்றி

மானேஜர் சாரங்கனாக,சித்தீ சாரதா என்னும் பாத்திரத்தில்
நடித்த, திருமதி ராதிகா அந்த நிறுவனத்தின் முதலாளியையும்,
அந்த நிருவனத்தையும் ,சலாம் போட்டுக்கொண்டேஅழிக்கும் வில்லனாக
மானேஜர்சாரங்கனாக நடித்தேன்
மானேஜர் சாரங்கனாக மக்களுக்கு என்னைப் பிடித்தது,
மக்களுக்கு எப்போதும் வீரப்பனையும் பூலான் தேவியையும்
தான் பிடிக்கும் போல் இருக்கிறது!!!
எனென்றால் தங்களால் செய்ய முடியாத வீர சாகசங்களை,
செய்பவர்களை புகழ்ந்து, தங்கள் தாகங்களை தீர்த்துக்
கொள்ளூம் அப்பாவி மக்கள்!!!
இவர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன்,
எதையும் தட்டிக்கேட்க தைரியமில்லாத,
அப்படியே தட்டிக் கேட்டாலும் பல அடியாட்களை,
கையில் வைத்துக்கொண்டு, ஞாயத்தைக் கேட்பவர்களை,
பயமுறுத்தியே தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளும்,
நம் நாட்டின் அவலங்களை நினைத்து வருத்தப் படுகிறேன்.

அது கணிணி யாக இருந்தாலும் , தொலைக்காட்சியாக
இருந்தாலும், எதுவாக இருந்தாலும் ,அவைகளை,
நாம் எப்படி உபயோகிக்கிறோம் ,என்பதைப் பொருத்துதான்
அது நமக்கு பலன் கொடுக்கிறது,

கணிணி யில் எத்தனையோ உபயோகமான பகுதிகள்,
உள்ளன, ஆனால் அவை என்னென்ன என்று கூடத்
தெரியாமல், தேவை இல்லாத பக்கங்களைப்
புரட்டி, கெட்டுப் போகும் மாணவர்களை பார்க்கிறோம்,
அதே கணிணியில், நல்ல விஷயங்களை உபயோகித்து,
பல புதிய கண்டுபிடிப்புகளை, நிகழ்த்தும் மாணவர்களையும்
பார்க்கிறோம்,

சின்னத்திரையில் ,எத்தனையோ நல்ல பகுதிகள்,
இருக்கிறது, ஆனால் நமக்கு தொடர்கள்,சினிமா,
ஒலியும் ஒளியும், இவைகள் தான் பிடிக்கின்றன,
நம்மைச் சொல்லியும் குற்றமில்லை, நமக்கு
வாழ்க்கையில் எத்தனையோ கவலைகள்,
அதை மறக்க நாம் பார்க்கிறோம்,

ஆனால் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும்
வரும் எல்லாவற்றயும் உண்மை என்று நம்பி
எத்தனை பேர் ஏமாந்து போகிறார்கள்,
நடிப்புக்கலை, எத்தனையோ பேரை வாழவைக்கிறது,
அதே நடிப்புக்கலை, எத்தனையோ பேரை,
அழித்தும் இருக்கிறது!!
உதாரணமக... 12/4/2004 குமுதம் இதழில்,
தற்போது நடந்துள்ள ' ஒரு உண்மை சம்பவத்தை பற்றி,
திருவேங்கிமலை சரவணன் எழுதியிருக்கும்
"ஒரு ஏழை நடிகனின் உயிர் போனால்"
என்ற கட்டுரையை படித்துப் பாருங்கள்,
அந்தக் கட்டுரையில் சில யதார்த்தமான
வரிகள்...என் மனதைப் பிழிந்தன.!!!

"ஹீரோ நடிகனுக்கு, இன்னும் இரண்டு வருடம்,
கழித்து' அவன் கொடுக்கப் போகும் கால்ஷீட்
தேதிகளுக்காக , இன்றே லட்சத்திலும்,
கோடியிலும் , அட்வான்ஸ் கொடுக்கிற,
சினிமா உலகம், ஏழை நடிகன் மார்ட்டினுக்கு

அவன் உழைப்புக்கு மட்டு மல்ல,
உயிருக்கு கூட விலையாகக் கூட
ஏதும் தராமல், "படம் ஓடினால் "
தருவதாக சொல்லுவது,
இவர்கள் சினிமாவில் வசனங்களில்
முழங்கும், மனிதாபிமானப் ப்ரசங்கமும்,
அறிக்கைகளில், வெளிப்படுத்தும்
சமூக அக்கரையும், எவ்வளவு பொய்யானது,
ஏமாற்றுத்தனமானது, என்பதை எண்ணும் போது,
வருத்தமாக மட்டுமில்லை,அச்சமூட்டும் வகையிலும்
இருக்கிறது"
என்றார் பெயர் சொல்ல விரும்பாத
ஒரு ஸ்டண்ட் மேன்.


அந்த ஸ்டண்ட் மேனும் பெயர் வெளியிட விரும்பவில்லை,
கண்ணுக்கெதிரே நடக்கும் அக்ரமத்தை,
சொன்ன அவரால், தைரியமாக ,அவருடைய
பெயரைச் சொல்ல முடியவில்லை ,என்றால்,
பெரிய திரை எப்படி இருக்கிறது ....
என்று நமக்கே நிதர்சனமாகப் புரிகிறது.!!!!


இப்போது சின்னத்திரையில் பேட்டி கொடுக்கும்
பெரியதிரை , சின்னத்திரை ,
இயக்குனர்கள் , நடிகர்கள், எத்தனை துன்பங்களை
இடர்ப்பாடுகளை , அவமானங்களை ,சந்தித்து
இருக்கிறார்கள்.என்பதை அவர்கள் வாயின் ,
மூலமாகவே கேட்கும் போது -உண்மையிலேய
வருத்தமாக இருக்கிறது!!!,

இப்படி, பலவிதமான சோதனைகளைக் கடந்து ,
எத்தனை பேர் முன்னுக்கு வருகிறார்கள்?
ஆனால் இந்த சின்னத்திரை , பெரிய திரை
இரண்டையும் நம்பி ,தன் தகுதி அறியாமல்,
சென்னைக்கு வந்து, கஷ்டப்படுபவர்கள்
தான் ஏராளம்,
எதோ மன மகிழ்ச்சிக்காக சிறிது நேரம்
மட்டுமே ,ரசிக்கவேண்டிய தொலைக் காட்சித்
தொடர்கள் ,சினிமாக்கள்,

தேவை இல்லாத பழிவாங்கும்
கதைகளைஒளிபரப்பி , இன்று எத்தனை
குடும்பங்களையும், மனதையும்,புனிதமான
தாம்பத்ய உறவுகளையும் ,
சீரழித்துக் கொண்டிருக்கிறது?

நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை
நமக்கு பிடிக்கவில்லை,
நம் குழந்தைகளுக்கு ?!!! நம்மையே பிடிக்கவில்லை,
ஆமாம் ,முக்கியமாக ஒரு தொடரைப்
பார்த்துக் கொண்டிருக்கும்போது ,நந்தி மாதிரி
அதைப் பார்க்க விடாமல் ,பேசுகிறார்களே!!
என்று எரிச்சல் வருகிறது,
ஸ்தானத்துக்கோ, வயசுக்கோ ,மதிப்பு தராமல்
அப்பா தொந்தரவு பண்ணாமல்,
தள்ளிப் போ, கொஞ்ச நேரம்
"போகோ" பார்த்துட்டு வரேன்,
அப்பிடீன்னு குழந்தை சொல்கிறது!!

கொஞ்ச நேரம் நிம்மதியா டீவீ
பார்க்க விடறயா சனியனே,
பெத்தவள் குழந்தையிடம் சொல்கிறாள்
மொத்தத்தில் நம்முடைய உறவுகளை,
மனிதாபிமானங்களை, மரியாதைகளை,
அன்பை, பாசத்தை ,எல்லாவற்றையும்
இந்த சின்னத்திரை,பெரிய திரை
இரண்டும் அழித்துக் கொண்டு இருப்பது
நிதர்சனமான உண்மை!!!!!

இவற்றையெல்லாம் நான் சொல்லுவதால்
அடியோடு இவைகளைப் புறக்கணிக்க வேண்டும்
என்று நான் சொல்லுவதாக எண்ணவேண்டாம்,
இதே சின்னத்திரை, பெரிய திரை
இரண்டிலுமே மக்கள் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டிய
பல நல்ல விஷயங்களும் இருக்கின்றன,

உட்கார்ந்த இடத்திலேயே எங்கும் போகாமல்
மழையில் நனையாமல்,வெய்யிலில் கருகாமல்,
பனியில் உறையாமல், பல நாடுகளையும்,
பல ஊர்களையும், பலவிதமாக நாட்டிலே,
உலகத்திலே ,நடக்கும் அன்றாடச் சம்பவங்களை
உடனுக்குடன் அறிகிறோம் !!
நமக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் பல
விதமான திறமைகளை, வெளிக்கொண்டு வரும்
சாதனமாகவும், இந்த சின்னத்திரை,பெரிய திரை
இரண்டும் பயன்படுகிறது ,என்பதில் எந்த
ஐயப்பாடும் இல்லை.!!

சின்னதிரை ,பெரிய திரை இரண்டின் மூலமாக
பல குடும்பங்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன,
பல இளைஞர்கள், வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்,
பலவிதமான திறமைகள் ஊக்குவிக்கப் படுகின்றன,
கல்வி கற்றுத் தரப்படுகிறது,
என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.!!

எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என்னை
திரு கணேஷ் அறிந்ததும் ,உலகத்தின் பல பாகங்களிலும்
வசிக்கும் பலபேருக்கு என் போன்ற சாதாரணர்களையும்
அறிமுகப் படுத்தி வைத்ததும் இந்தச்
சின்னத்திரை, பெரிய திரைதானே!!!

ஒரு முறை,மாங்காடு கருமாரியம்மன் கோயில்
வாசலில் "சித்தீ" என்னும் தொடரின் ஒரு காட்சியில்
நடிப்பதற்காக ஒரு கடை வாசலில்
நானும் ,என் நண்பரும், உங்களுக்கெல்லாம்
தன்னுடய அருமையான நடிப்பாலும் , சித்திரம்
வரையும் கலையாலும் அறிமுகமாகி உள்ள
திரு சிவகுமார் அவர்களும் உட்கார்ந்து இருந்தோம்
அப்போது பல ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப்
வாங்குவதற்காக வந்தனர்,
அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிவிட்டு பக்கத்தில்
இருந்த என்னிடமும் ஆட்டோ கிராப் போடுமாறு
கேட்டனர்,
நான் அவ்வளவு பெரிய நடிகனில்லை,
சிவகுமாரிடம் வாங்குங்கள் என்றேன்.
அதற்கு திரு சிவகுமார் அவர்கள் ,என்னையும்
ஆட்டோகிராப் போடச்சொல்லி, அவர்களிடம்
வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்கள் போனதும்
இந்தச் சின்னத்திரையின் வீச்சு,எந்த அளவுக்கு
இருக்கிறது என்பதைச் சொல்லி,
அதைக் காலம் வரும்போது நான் அறிவேன் என்றார்கள்.
உண்மை!!!!
ஆமாம்.....அதை நான் பல முறை என்வாழ்விலே உணர்ந்தேன்
பல ஊர்களில், பல அலுவலகங்களில்,ஏன் பல வெளிநாடுகளில்
இருந்து எனக்கு வந்த ஈ - மெயில்களும்
பல தொலைபேசி விமர்சனங்களூம் அதை உறுதிப் படுத்தின,

மனிதன் பிறந்தால் இறப்பது உறுதி
ஆனால் பிற்காலத்தில் என்னுடைய
சந்ததியினர் கூட சீ டி, ப்ளாப்பி,
பல பதிவுகள், சினிமா ,தொலைக் காட்சித்
தொடர்களின் பதிவுகள் இவைகளில்
பிற்காலத்தில்கூட என்னைப் பார்க்க முடியும்
என்பது எப்படிப்பட்ட சந்தோஷம்?
இது போன்ற பலவகையான நல்லவைகளும்
இந்த விஞ்ஞான யுகத்தில்
இந்த சின்னத்திரை, பெரிய திரை
என்னும் சாதனங்களால் ஏற்பட்ட இலாபங்கள்..
அந்தப் புகழ்தான் என்னுடைய " காதலி தினம்"
என்னும் சிறு கதை , தமிழோவியம் என்னும்
இந்தப் பத்திரிகையில் , வெளிவரும் சந்தர்ப்பத்தை,
ஏற்படுத்தி தந்தது ,என்பதும் பல கவிதைகள்
தினம் ஒரு கவிதை- தமிழோவியம் .காம்
என்னும் இணையப் பத்திரிகைகளில் வெளிவருவதற்கு
சின்னத் திரை பெரிய திரைகள் எனக்கு ஏற்படுத்திய
ப்ராபல்யம் தான் காரணம்
என்பதும் மறுக்க முடியாத உண்மை
இன்று தமிழ்த்தேனீ என்னும் பெயரிலே
நான் சுமாராக 15 குழுமங்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
தமிழ்த்தேனீ என்ற என்னுடைய பெயர் பல பேருக்குத்
தெரிந்திருக்கிறது,

அன்புடன்
தமிழ்த்தேனீ






அன்புடன்
தமிழ்த்தேனீ

1 comment:

Anonymous said...

My apologies for being unable to write in Tamil here............Your introductory article has many nuggets of information though I found it a little too lengthy in structure.
Hope to post in Tamil next time.
Thank you for the site.