திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, October 26, 2007

பக்தி கவிதைகள்

பக்தி கவிதைகள்


1. விநாயகர் துதி -

ஓம் கார ரூபனே
முந்தி விநாயகனே மூல முதல்வனே
மங்கள நாயகனே மலைக்கோட்டை
மாமணியே மாசக்தி மைந்தனே
சங்கரன் புதல்வனே கந்தன் தமயனே
தந்த முடைத்து பா ரதம் ஆக்கி
பாரதம் படைத்தவனே
மாறுதலைக் கொண்ட மாசற்ற
மாணிக்க விநாயகனே
ஆறுதல் வேண்டி மனதால் நெக்குறுகும்
அடியார்க்கு தேருதல் அளிக்கும்
துங்கக் கரி முகத்துத் தூமணியே
அங்கம் புழுதி பட அடியவர் தூளி பட
அங்கப் ப்ரதட்ஷணம் செய்கின்றேன்
பங்கம் ஏதுமில்லா வாழ்வு தர
வேண்டுகின்றேன்
எல்லாப் புகழும் குறைவில்லாச்
செல்வமும் நிறைந்த ஆயுளும்
தேர்ந்த பக்தியும் ஞானமும்
ஊட்டி எமக்கு அருள்வாய்
2. முருகன் துணை

கார்த்திகேயா கடம்பா கந்தா
கதிர்வேலா பால முருகா
பார்த்தன் மருகா-கூத்தன் சிவனின்
குழந்தையே மால்மருகா
பார்வதி தேவியின் பால குமாரா
அவ்வையின் மனதுக்கு இனியானே
சூரன் கதை முடித்த வேலாயுதா
திருப்பரங்குன்றத்து கல்யாண முருகா
அழகா தமிழ்க் குமரா
அம்மை வள்ளியின் ஆசை நாயகா
அன்னை தேவானையின் ஆசை நாயகா
கந்தவேளே எமைக் காக்கும் வேலே
கந்தஷஷ்டி சொன்னால் காக்கும் கந்தக்
கடவுளே -அப்பனுக்கே பாடம் சொன்ன
ஸ்வாமிமலை சுப்பையா
திருத்தணிகைக் திருக் குமரா
கந்த கோட்டத்துள் வளர்
ஸந்தத் தமிழோனே ஸுந்தரத்
தமிழா எந்த நாளும் எமைக் காப்பாய்3. அங்கப் ப்ரதஷணம்

தீராத வியாதியா? தேறாத தலைவிதியா?
சங்கடமான ஊழ்விதியா?
அங்கப் ப்ரதஷணம் செய்து பாருங்கள்
- அங்கப் ப்ரதஷணம்
மங்கள வினாயகனை மனதில் இருத்தி
அங்கப்ப்ரதஷணம் அங்கே செய்துபாரும்
கந்த கோட்டத்துள் வளர் கந்தப் பெருமானை
அந்தரங்கத்தில் நினைத்து - அங்கப் ப்ரதஷணம்

வங்கக் கடல் கடைந்த மாதவனை மனதிலே
நினைத்து- ஐயப்பனை நினைத்து
செய்த வினை தீர சரண கோஷமிட்டு பதினெட்டுப்
படிகளை பவித்திரமாய் நினைத்து- அங்கப் ப்ரதஷணம்

குருவாயூர்க் கண்ணனை குளிரக் குளிர நினைத்து
தருவான் நல் வாழ்வு என்ரெண்ணி
இமயம் வரை செய்த பாவம் இன்றுவரை இருந்தாலும்
சமயவரம் தரும் சமயவரத்தாளை எண்ணி- அங்கப் ப்ரதஷணம்
மருத்துவ மாம இவ்வுள் கிடந்தானை
தருக்கில்லா மனதோடு தலை வணங்கி
உப்பிலிஅப்பனை உளமோடு தான் நினைத்து
எப்பிணியும் தீர வேண்டி- அங்கப் ப்ரதஷணம்
அஞ்ஜனை மைந்தனை அனுமனை மாருதிஐ
வஞ்சமில்லா மனதோடு மனதிருத்தி
பங்கம் இல்லா வழ்வு பெற சோளிங்கமலை
சிங்க முகத்தான்கோயிலிலே- அங்கப் ப்ரதஷணம்
அத்தனையும் செய்துவிட்டு அப்படியும் பாவம்
அகலவில்லையென்றால்
அங்கம் உனக்களித்து ஆன்மாவும் அளித்த
அம்மாவையும் அப்பனையும் அருகருகே
நிற்க வைத்து -உன் அங்கம் பூமிபட
அவர்தம் பாதம் பட அங்கப் ப்ரதஷணம்
அங்கே செய்து பாரும்-அது போதும்
அத்தனை பாவங்களும் அற்றுப் போகும்
மொத்தமும் ஜெயமாகும்

4. அம்மன்

உன்னை வணங்க மனம் எனக்கருள்வாய்
புன்னை வன நாயகியே
முன்னை வினைப் பயன் என்னை வருத்தாமல்
உன்தன் அருள் எனக்கருள்வாய் -உன்னை

கண்ணன் சகோதரியே கந்தனுக்கும்,
அண்ணன் கணபதிக்கும் அன்பான தாயே
எங்களுக்கருள்வாய் தேனுபுரீச்வரர் நாயகியே
தேனுகாம்பாள் தாயே -உன்னை

என்றும் என் துணை நீயே
கற்பகவல்லி தாயே
கபாலீச்வரர் நாயகியே
உன்னை வணங்க நீ அருள்வாயே -உன்னை
5. கருமாரி

எல்லைகளைக் கடந்தவளே கருமாரி
எல்லை இல்லா கருணைமனம் கொண்டவளே
தொல்லையெல்லாம் தொலைப்பவளே கருமாரி
இல்லை எனாது அருள்அளிப்பவளே
வெள்ளை மனம்கொண்டவளே மாரியம்மா
வேற்காட்டில் இருப்பவளே மாரியம்மா

6. கர்வம்

பாமவுக்கும் ருக்மணிக்கும் போட்டியொன்று
முளைத்தது -பக்தியில் சிறந்தவள் யாரென்று
தலைகேறிய கர்வம் தடுமாறும் மனது
கண்ணன் முன் நின்றார் இருவருமே-யார் என்று

நமுட்டுச் சிரிப்புடனே மாயக் கண்ணனவன்
கனமான கர்வத்தை எளிதாக்க எண்ணம் கொண்டு
கற்பனைத் தலைவலியால் துடி துடித்தான்
தாளமுடியதது போல் நடித்தான்

மறையோதும் முனிவரவர் கண்டுகொண்டார்
மறை பொருளின் மனப் பொருளை
தானும் கண்ணனுக்குத் துணையாக
நடிக்கத்தான் திட்டமிட்டார்

தலைவன் கண்ணனவன் தலவலி தீரவேண்டி
தாரம் இருவருமே கலங்கி நின்றார்
கண்ணனுக்காய் -வலி தீர வழி கேட்டு
மயங்கி நின்றார் மன்னனுக்காய்

தீராத் தலைவலி தீரவேண்டி தரமான
மருந்தொன்று சொல்லிவைத்தார்-முனிவருமே
தருக்கில்லா மாந்தரவர் தன் தாள் கொண்ட
பாத தூளி கண்னன் தலை மேலே

பற்றாய்ப் போட்டால் தாங்கவொண்ணாத்
தலைவலி தானே மறையும் என்றார்
தாரமவர் மனவலியும் தானே குறையும்
என்றார்- யார் தயார் ?

பதறிப் போனார் அனைவருமே அபசாரம்
அபசாரம் க்ருஷ்னனவன் தலைமேலே
பாத தூளி அபசாரமென்ரெண்ணி
தர மறுத்தார் தாரமவர்

அபசாரம் செய்வதனால் அன்பனவன்
தலைவலி தீருமென்றால் -உபசாரம்
தேவை இல்லை -தான் தருவேன்
தன் பாத தூளி என்று சொல்லி

தன் பாவம் சேர்ந்தாலும் பரவாயில்லை
கண்ணனின் தலைவலி இனி இல்லை
அது போதும் என்று சொல்லி
அன்பாய்த் தடவி விட்டாள் தன் பாத தூளி
அன்போடு பரவி விட்டாள் கண்ணனின்
தலை மேலே ருக்குமணி

கண்ணன் திரும்பிப் பார்த்தான்
தலை குனிந்தார் தேவியர் இருவருமே


7. ஐய்யப்பன்

சிவ நாடி விஷ்ணு நாடி இரு நாடி
சேர்ந்து இமைப் பொழுதில் உருவான
மைந்தனவன் ஐய்யன் அவன் ஐய்யப்பனே
வெம்புலி வாகனனை ஐயமெல்லாம் போக்கும்
நெய்யாபிஷேகனை பந்தள ராஜனின்
இகலோக மைந்தனை தங்கமலை
வாசனை - துளசி மணி மாலை அணிந்து
மஞ்ச மாதா பாதம் தொட்டுவணங்கி
பையப் பைய மலையேறி பதினெட்டுப்
படியேறி சரண கோஷமிட்டு
சரணடைந்து வணங்குகின்றேன்


துன்பம் யாவுமே தீர வேணுமே
ஐயப்பன் அருளாலே
இன்பம் யாவுமே சேர வேணுமே
மெய்யப்பன் அருளாலே - துன்பம் யாவுமே

பதினெட்டு படிகளில் ஏறி ஏறியே
பதப் படும் அவன் மனமே
சரண கோஷமே பாடிப் பாடியே
வசப்படும் அவன் குணமே - துன்பம் யாவுமே

நெய்யாபிஷேகம் பார்ப்பதனாலே
நிறைந்திடும் அவன் மனமே
இருமுடி தாங்கி பெருவழி நடந்து
தரிசனம் பெற்று வளர்ந்திடுமவன் வாழ்வே - துன்பம் யாவுமே

துன்பம் யாவுமே தீர்ந்து போகுமே
ஐயப்பன் அருளாலே
இன்பம் யாவுமே சேர்ந்து நிறைந்திடும்
மெய்யப்பன் அருளாலே துன்பம் யாவுமே

8. திருவடிகளே சரணம்-

எல்லா உயர்வும் எனக்களிப்பான் ஸ்ரீவாசன்
ஏகாந்தமாய் உறையும் திருப்பதி மலைவாசன்
பொல்லார் கண்பட்டு விளையும் த்ருஷ்டி யெல்லாம்
இல்லாமலே களைந்து எனைக் காக்கும்
மல்லாண்ட திண் தோள் மவண்ணனை
பல்லாண்டு பாடிப் பாசமாய் அழைத்திட்டால்
(எல்லா)

சொல்லாமலே வரும் ஊழ்வினைப் பயனெல்லாம்
இல்லாமலே அருளி இன்பம் நமக்களிக்க
வல்லான் வாசுதேவனை வாயாரப் பாடி
மனதினால் துதித்தால் (எல்லா)

கல்லாரும் கற்றவரும் இல்லாரும் உள்ளாரும்
எல்லாரும் போற்றிவரும் தெள்ளத் தெவிட்டாத
கள்ளக் கண்ணனை மணி வண்ணனை
சொல்லாண்ட தேசிகரும் பல்லாண்டு பாடி
வைத்த சுடர்க்கொடி ஆண்டாளும்
வாமனனைப் போற்றுகின்ற
ராமனுஜ ஜீயெரும்-எல்லாம் தானாகி
நின்ற வல்லான் கோவிந்தன் லக்ஷ்மீ
மணாளன் ஸ்ரீனிவாசன் (எல்லா)

No comments: