திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, July 30, 2007

பாடங்கள்

என்வாழ்வில்
என்னை நெகிழ் வைத்த சம்பவங்கள்

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நடந்த
ஒரு நிகழ்ச்சி
நான் அடிக்கடி புரசைவாக்கத்திலிருந்த உணவு விடுதிக்கு
சென்று சுவையான சிற்றுண்டி சாப்பிடுவது என் வழக்கம்
இப்போது அந்தச் சுவை இல்லை அதனால்
அவர்களுடைய நலன் கருதி அந்த சிற்றுண்டி
விடுதியின் பெயரைத் தெரிவிக்காது
சம்பவத்துக்கு நேரிடையாக வருகிறேன்

அதே போல் ஒருநாள் அச்சிற்றுண்டி விடுதிக்கு
சென்று என்னுடைய ராஜ்தூத் துவிச்சக்கர வண்டியை
நிருத்திவிட்டு உள்ளே செல்ல முயலும் போது
யதேச்சையாக திரும்பிப் பார்த்தேன்
என்னுடைய ராஜ்தூத்தை ஒரு சிறுவன்
சுமார் 12 வயதிருக்கலாம்
ஒரு துணியை வைத்து நன்றாகத் துடைக்க
ஆரம்பித்தான், நான் அவன் என்னைப்
பார்க்கமுடியாத ஓரிடத்திலிருந்து
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்
இருக்கும் ஒரு வண்டியையும் யாராவது
எடுத்துப் போய்விட்டால்...?
மனிதனுக்கு சந்தேக புத்திதானே...?

அந்தச் சிறுவன் மிக நன்றாக என்னுடைய
வண்டியைத் துடைத்துவிட்டு
நான்கூட அவ்வளவு நன்றாகத் துடைத்திருப்பேனா
என்பது சந்தேகமே..
ஒரு ஓரமாகப் போய் நின்று கொண்டான்
அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான்
வேண்டுமென்றே என்னுடைய வண்டியின் பக்கத்தில்
போய் நின்றேன்,உடனே அச்சிறுவன் ஓடிவந்து
அய்யா உங்கள் வண்டியை நன்றாகத் துடைத்திருக்கிறேன்
எனக்கு எதாவது பணம் இருந்தால் கொடுங்கள்
என்றான்
எனக்கு வேலையைச் செய்துவிட்டு கூலி கேட்கும்
அவன் குணம் பிடித்திருந்தது ,
(இப்படிப் பட்டவர்களை ஆராயும்போது சில விஷயங்கள்
கிடைக்கும் என்பது என் அனுபவ பூர்வமான உண்மை )
எந்த மனிதரை ஆராய்ந்தாலும் ஏதாவதொரு
அனுபவம் கிடைக்கும் அது நம் வாழ்க்கைக்கு
உபயோகமாகவும் இருக்கும்

அதனால் அவனை மேலும் ஆராய எண்ணி
முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு
என்னுடைய வண்டியை என் அனுமதி இல்லாமல்
துடைத்துவிட்டு ,பணம் வேறு கேட்கிறாயா?என்றேன் மிறட்டும் தொனியில்,
அதற்கு அவன் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு அய்யா முடிந்தால் பணம் கொடுங்கள் ,
இல்லையானால் பரவாயில்லை ,
என்னை மன்னித்துவிடுங்கள்,உங்கள் அனுமதி
இல்லாமல் உங்கள் வாகனத்தை
நான் தொட்டது தவறுதான் என்றான்,
அவனுடைய அணுகு முறை மிகவும்
ரசிக்கத்தக்கதாகவும்
யோசிக்கத்தக்கதாகவும் இருந்தது
நான் அவனை மேலும் சோதிக்க
நான் உனக்கு பணம் தர முடியாது,
வேண்டுமானால் என்னுடன்வா உனக்கு
உணவு வாங்கித் தருகிறேன்
(இது என்னுடைய நெடுநாளைய பழக்கம்,)
என் தந்தையாரும் தாயாரும் அடிக்கடி
சொல்வார்கள்,
பணம் எவ்வளவு கொடுத்தாலும்,
இன்னும் கொடுக்க மாட்டார்களா
என்றுதான் நினைப்பார்கள்,உணவு கொடுத்தால்
வயிரு நிறைந்தவுடன் போதும் போதும்,
நீங்க நல்லாஇருக்கணும் அப்பிடீன்னு
வாழ்த்துவார்கள் அதனால்
கல்விக்கு உதவி செய் ,பணம் கொடுக்காதே என்பார்கள்

ஆதலினால் அவனை உணவு விடுதிக்கு
உள்ளே அழைத்தேன்
அவன் வர மறுத்தான்,பணம்தான்
வேண்டுமென்று மன்றாடினான்
நான் என்னுடைய கொள்கையைக் கூறியவுடன்
அரை மனதோடு என்னுடன் உணவு விடுதிக்குள்
வந்து நான் சொன்னவுடன் உட்கார்ந்தான்,
அவனுக்கு ஆறு இட்டிலிகளையும்,
எனக்கு தோசையையும்
கொண்டு வரச் சொல்லி அனுப்பினேன்
நான் ருசிக்கு சாப்பிடுபவன்,
அவன் பசிக்கு சாப்பிடுபவன்

எல்லாம் வந்தது,நான் அவனையும் சாப்பிடச்
சொல்லிவிட்டு
நானும் சாப்பிட ஆரம்ப்பித்தேன்
திடீரென்று அவனைப் பார்த்தேன்
அவன் ஒரு வாய் கூட சாப்பிடவில்லை
அவனுடைய அடம் ,அழிச்சாட்டியம்
எனக்குப் பொறுக்கவில்லை
என்னை அறியாது கோபம் வந்தது
டேய் என்ன நினைச்சிட்டிருக்கே மனசிலே
சாப்புடுடா,பணம் நிச்சயமாக தரமாட்டேன்
என்று கத்தினேன்

அனைவரும் என்னை திரும்பிப் பார்த்தனர்
என்னை சுதாரித்துக் கொண்டு
(அந்த உணவகத்தின் பணியாளர் என்னையே
கேலியாகப் பார்ப்பது போல் உணர்ந்தேன்)
என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு
என்னடா சாப்பிடேன் என்றேன்
அதற்கு அச்சிறுவன் அய்யா என்னை மன்னிக்க வேண்டும்
நான் இதை வீட்டுக்கு எடுத்துப் போய் சாப்பிடுகிறேன்
என்றான்,ஓ வெளியே எடுத்துப் போய் விற்றுவிட்டு
பணமாக மாற்றலாம் என்று பார்க்கிறாயா
அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்
என்றேன்

அச்சிறுவன் கூறிய பதில் என்னை
திடுக்கிட வைத்தது

அய்யா வீட்டில் என் தம்பி தங்கைகள்
பட்டினியாக இருக்கிறார்கள்
அவர்களுக்கும் கொடுத்து நானும்சாப்பிடுவேன்
நான் மட்டும் எப்படி அய்யா சாப்பிடுவது ..?
என்றான்.எனக்குப் பொட்டில் அறைந்தது போல்
இருந்தது,, ஆமாம் என் வீட்டில் இருப்பவர்கள்
சாப்பிட்டிருப்பார்களா..? இப்போதுதான்
அந்த நினைவே வருகிறது,உள்ளுக்குள்ளே
அவமான உணர்ச்சி, அத்தனை சிறிய வயதில்
அச்சிறுவனுக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சி
அன்பு பாசம்,நேசம் ,கடமை, அடடா


என்னுடைய கலவையான அதிர்ச்சியான ,சந்தோஷமான
அத்தனை உணர்ச்சிகளையும் மறைத்துக் கொண்டு
நான் அவர்களுக்கும் வாங்கித் தருகிறேன், என்றுசொல்லி
நிறைய உணவுப் பண்டங்கள் கட்டி எடுத்துக் கொண்டு
என்னுடைய மேஜையில் வைத்தபிறகு
அவன் சாப்பிட ஆரம்பித்தான்
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்

என் கண்களில் கண்ணீர் மழை
பொழிந்து கொண்டே இருந்தது
எல்லோரும் என்னை வேடிக்கை பார்த்தனர்
நான் கவலைப்படவே இல்லை

அந்த ,சிறுவன் எனக்கு ஞானோபதேசம் செய்யவந்த
அச்சிறுவனை,கடவுள்,தீர்க்கதரிசி,ஞானி, எப்படி
வேண்டுமானாலும் கொள்ளலாம்
என்னுடைய அத்தனை உணர்ச்சிகளும்
, வெட்கித் தலை குனிந்திருந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ
Post a Comment