திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, March 10, 2011

’ மனம் கவர்ந்த பெண்மணி”


சக்தி புதிய விகடனில் என்னுடைய  மனம் கவர்ந்த பெண்மணிகட்டுரை வெளிவந்துள்ளது
http://new.vikatan.com/others/womens2011/index.php


"என் மனம் கவர்ந்த பெண்மணி"

உலகத்தில் நம் மனம் கவரும் பெண்மணிகள் ஏராளம். மனம் கவரும் பெண்மணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சிலர் அன்பால் கவருவார்கள், சிலர் அழகால் கவருவார்கள், சிலர் ஆளுமையால் கவருவார்கள், சிலர் கவிதையால் கவருவார்கள், சிலர் வீரத்தால் கவருவார்கள், சிலர் விவேகத்தால் கவருவார்கள், சிலர் கருணையால் கவருவார்கள், சிலர் தாய்மையால் கவருவார்கள் . யோசித்துப் பார்த்ததில் மேற்கூறிய அனைத்து தகுதிகளாலும் என்னக் கவர்ந்த பெண்மணி என் தாயார் கமலம்மாள்
ஸ்ரீரங்கத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குழந்தை பருவத்தை அனுபவிக்கும் காலத்திலேயே பூப்படைந்து பால்யவிவாகத்திற்கு தலைவணங்கி திருமாங்கல்யத்தை ஏற்று, குழந்தையாகவே இருந்தாலும் , என் தந்தை சார்ந்த ஒரு பெரிய குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்று மிகத் திறமையாக நிர்வாகத் திறனை தன் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து அந்தக் குடும்பத்தை மிகத் திறமையாக நிர்வகித்து.  
 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
 சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

என்னும் வள்ளுவரின் வாக்குக்கொப்ப வாழ்ந்து எத்துணை கஷ்டம் வரினும் அத்தனை கஷ்டங்களையும் தன் நேர்மை என்னும் மனோ வலிமையால் சமாளித்து தனக்குத்தானே குருவாகி நின்று தன் தகுதியையும் வளர்த்துக்கொண்டு. தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ளவும், தேசபக்தியை வளர்த்துக்கொள்ளவும்,தகைசான்ற அறிவியலாளர்களோடு வரையறையோடு பழகி , என் பாட்டனாரின் தமிழ் அறிவையும் தனக்குள் ஏற்று நம் நாட்டில் பஞ்சம் வந்த காலத்தில் அடுத்தவரைச் சாராமல் தன் குடும்பம் காக்கவும், தன்னை விடத் தளர்ந்த நிலையில் இருக்கும் மற்றவர்களின் மேன்மைக்காகவும் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் எழுதிவந்தவர். ஒரு காலத்தில் அவரது கதைகளோ ,கட்டுரைகளோ,கவிதைகளோ வராத பத்திரிகைகளே இல்லை எனலாம்.
 அதன் மூலமாகவரும் சொற்பத் தொகையிலேயே குடும்பத்தை நிர்வகித்து, அடுத்தவருக்கும் தன்னாலியன்றவரை உதவி தன் கடைசி மூச்சு இருக்கும் வரையில் நம் தேசத்துக்காகவும் நம் மக்களுக்காகவும் வாழ்ந்து திரு மு கோதை நாயகி அம்மாவோடு இணைந்து, “ வாருங்கள் மறியல் செய்து மனமகிழ்ந்திட வாருங்கள்என்று பாடிக்கொண்டே மஹாத்மா காந்தியிடம் தன் கைவளையலைக் கழற்றிக் கொடுத்துவிட்டு கதர்கஞ்ச் என்னும் போராட்டத்தில் கலந்துகொண்டு, ஒரு உதாரணப் பெண்மணியாகத் திகழ்ந்த என் தாயார் ஆர். கமலம்மாள்.
பெற்ற மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்து, அப்படியும் மனம் தளராமல் மீதி இருக்கும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய சூழ்நிலையில் உற்ற கணவனும் இயறகை எய்த ,அப்போதும் நெருப்பில் வீழ்ந்து மாண்டாலும் மீண்டு வரும் பீனிக்ஸ் பறவை போல் படிக்க வைத்து ஆளாக்கி, வாழ்க்கையின் உன்னதமான இடத்துக்கு எங்களையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து. வயதான காலத்தில் புற்று நோய் பாதித்தாலும் அப்போதும் தளராமல் 70 வயதிலும் கிருஷ்ணதீர்த்தம் என்னும் சிறுகதைக்கு முதற்பரிசு வாங்கியதும், அவர்கள் எழுதிய பாடல்களை திருமதி பாம்பே சகோதரிகள் பாடல்களாகப் பாடி தெய்வீகப் பாமாலைஎன்னும் பெயரில் ஒலி இழையாக வெளியிட்டதும் அவர் சாதனைகள்.


 நான் பிறக்கும் போது என் தாயாருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் யார் தெரியுமா? எழுத்தாளர் லக்‌ஷ்மி அவர்கள்,ஆம் டாக்டர் திரிபுரசுந்தரி என்னும் லக்‌ஷ்மி அவர்கள் என் தாயாரின் இனிய ஸ்னேகிதி தாய்மையோடு என்னை அணைத்து தன் கையில் பூத்த மலர் என்று என்னை வர்ணித்து. தன் வாயாலேயே இந்த செய்தியை சென்னை கம்பர் அரங்கத்தில் மேடையிலேயே கூறியவர் எழுத்தாளர் லக்‌ஷ்மி அவர்கள்.
இவற்றையெல்லாம் விட நம் தேசத்தின் விடுதலைக்காக அந்தக் காலத்தின் அடக்கு முறைகளுக்கும் கட்டுபெட்டிதனத்துக்கும் அடிபணிந்து விடாமல் போராடி ,அதே நேரத்தில் குடும்ப கௌரவத்தையும், கடமைகளையும் விடாமல் காத்து எழுத்தாளர் என்று பெயரெடுத்த, வீரப் பெண்மணி ஆர் கமலம்மாள் அவர்களே என் மனதைக் கவர்ந்த பெண்மணி என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
என் மனதை கவர்ந்த, என் ஆத்மாவின் அன்பையும் கவர்ந்த என் தாயார் ஆர் கமலம்மாள். இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் இப்படிப்பட்ட புனிதமான தாயாரின் வயிற்றிலேயே பிறக்கவேண்டும் என்றே வேண்டிக்கொள்கிறேன் . எனக்குள்ளும் தேச பக்தியையும், தமிழையும் நற்பண்புகளையும் ஏற்றி என்னையும் மனிதம் நிறைந்த மனிதனாக, எழுத்தாளனாக வடிவமைத்த என் தாயார் ஆர். கமலம்மாள்தான் என் மனதை மிகவும் கவர்ந்த பெண்மணி என்பதில் பெருமை கொள்கிறேன்.

அன்புடன்
தமிழ்த்தேனீ


2 comments:

ராமலக்ஷ்மி said...

உங்கள் தாயாருக்கு என் வணக்கங்கள்.

// 70 வயதிலும் ”கிருஷ்ணதீர்த்தம் “ என்னும் சிறுகதைக்கு முதற்பரிசு வாங்கியதும்//

அம்மாவும் எழுத்தாளர். முதல் ஆசிர்வாதமும் எழுத்தாளர் லக்ஷ்மியிடமிருந்து. உங்கள் எழுத்துக்கள் மிளிர்வதின் காரணம் புரிகிறது:)!

கட்டுரை நல்ல பகிர்வு.

ராமலக்ஷ்மி said...

Choice குறும்படத்தை ரீடரில் பார்த்து விட்டேன்.

நல்ல கரு. அருமையான நடிப்பு.

சீக்கிரம் பகிர்ந்திடுங்கள் இங்கும்.