திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, December 15, 2010

இனிய குரல்

 ஒரு குறிப்பிட்ட ப்ரபலமான வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது எனக்கு, வங்கியிலிருந்து ஒரு இனிய குரல் அந்த உரையாடலைக் கீழே அளித்திருக்கிறேன்

டிர்ரீங் டிர்ரிங்நான் : ஹலோ

இனிய குரல்: சார் காலை வணக்கம்

நான் : காலை வணக்கம்

இனிய குரல்: சார் எங்க வங்கி சார்பா உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?

நான் : தாராளாமா கேக்கலாம்

இனிய குரல்: எங்க வங்கியின் சார்பாக உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன்

நான் ( மனதுக்குள் ஏமாளி என்றா)   அப்படியா சொல்லுங்க

இனிய குரல்: நீங்க க்ரெடிட் கார்ட் வெச்சிருக்கீங்களா

நான்: வெச்சிருக்கேன்

இனிய குரல்: எங்க வங்கியோட க்ரெடிட் கார்ட் வெச்சிருக்கீங்களா

நான் : இல்லையே

இனிய குரல்: கவலைப்படாதீங்க சார் அதுக்குதான் உங்களைத் தொடர்பு கொண்டேன், உங்களுக்கு எங்க வங்கியின் க்ரெடிட் கார்ட் வழங்கப் போறோம்

நான் : மிகவும் சந்தோஷம்
இனிய குரல்: எங்க அலுவலர் ஒருவர் உங்க வீட்டுக்கு வருவார், அவரிடம் உங்களோட அடையாள அட்டை, அல்லது பான் கார்ட், அல்லது ஓட்டுனர் உரிமம் போன்றவைகளைக் காட்டுங்கள்

நான் : சரி காட்டுகிறேன்

இனிய குரல் : அவர் ஒரு விண்ணப்ப படிவம் அளிப்பார், உங்களிடம் கேட்டு விவரங்கள் அவரே எழுதிக்கொள்வார்,  அதில் உங்கள் கையெழுத்தை இடுங்கள், பிறகு எழே நாட்களில் உங்கள் க்ரெடிட் கார்ட் உங்கள் வீடு தேடி வரும்

நான் : மிகவும் நன்றி , சரி இனிய குரலே இவ்வளவு நேரம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னேன் சில நிமிடங்கள் உங்களால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?

இனிய குரல்: நிச்சயமாக உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைப்பது எங்கள் பொறுப்பு

நான்: அப்படியானால் நன்றி , நீங்களும் என் மகள் போலவே கடமை உணர்வோடு பேசுகிறீர்கள், எனக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது.

இனிய குரல்: நன்றி சார் பலபேரு எங்க கிட்ட எரிஞ்சு விழறாங்க நாங்க எங்க கடமையைத்தானே செய்யிறோம்

நான்: ஆமாம் பலருக்கு பொறுமை இருப்பதில்லை ,ஆமாம் நீங்கள் க்ரெடிட் கார்ட் வைத்திருக்கிறீர்களா?

இனியகுரல்: எங்கள் வங்கி வைத்திருக்கிறது

நான் : உங்களிடம் இல்லையா?

இனிய குரல்: இல்லை ஐய்யா உங்களுக்கு எங்கள் வங்கியிலிருந்து அளிப்பார்கள்

நான்: அப்படியானால் உங்களுக்கு அளிக்கவில்லையா?

இனிய குரல்: எங்களுக்கும் அளிப்பார்கள் , ஆனால் நான் வாங்கவில்லை

நான்: ஏன் அப்படி இனிய குரலே

இனிய குரல்: சார் அது ரொம்பத் தொந்தரவு, க்ரெடிட் கார்ட்தான் இருக்கேன்னு நல்லி, குமரன், ஜீ ஆர் டீ தங்க மாளிகைன்னு அடிக்கடி போயி செலவு பண்ணுவோம், ஆனா பணத்தை திருப்பிக் கட்டும்போது குறிப்பிட்ட நாளுக்குள்ளே கட்டலேன்னா வட்டி போடுவாங்க, அனாவசியமா மாட்டிக்குவோம், எதுக்கு இந்த வம்புன்னுதான் வாங்கலை

நான்: புத்திசாலிப் பொண்ணும்மா நீ, நீ கட்டாட்டி உங்க அப்பா கட்றாரு, ஒரு க்ரெடிட் கார்ட் வாங்கி வெச்சிக்க வேண்டியதுதானே

இனிய குரல்: சார் எங்க அப்பா கட்ட மாட்டாரு, திட்டுவாரு

நான் : அடடா அதெல்லாம் கவலைப்படாதேம்மா திட்டினாலும் அவுரு உங்க அப்பாதானே, தைரியமா வாங்கிக்கோம்மா ஒரு க்ரெடிட் கார்ட், நானே உங்க வங்கிக்கு வந்து விண்ணப்ப படிவமெல்லாம் நிரப்பி உனக்கு உதவி செய்யறேன்

இனிய குரல்: வேண்டாம் சார் எனக்கு க்ரெடிட் கார்டே வேண்டாம், வேற வழியில்லாமே இந்த வங்கி எனக்கு தரசம்பளத்துக்காக மனசாட்சியை அடகு வெச்சிட்டு உங்களைமாதிரி நல்லவங்களுக்கு எங்க வங்கியோட க்ரெடிட் கார்டை எப்பிடியாவது விக்கணும்னு நாங்க ட்ரை பண்றோம், ரொம்ப ஆபத்து சார் சார்,க்ரெடிட் கார்டே வெச்சிக்கக் கூடாது சார்.

நான்: சரிம்மா உனக்கு எப்பவாவது க்ரெடிட் கார்ட் வாங்கணும்னு இருந்தா எனக்கு போன் பண்ணும்மா நானே வந்து வாங்கித் தரேன்

இனிய குரல்: ரொம்ப நன்றி சார் வணக்கம்

நான் : வணக்கம்(தொல்லைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது)

அன்புடன்

தமிழ்த்தேனீ

No comments: