திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, September 9, 2009

நாணயம்

செய்தி : பழங்கால நாணயங்களின் நிரந்தர கண்காட்சி !
400 அரிய வகை நாணயங்கள் காணவாய்ப்பு !



இந்தச் செய்தியைப் படித்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன
நாணயங்கள் காலத்துக்கு காலம் மாறுபடுகிறது
நாணயங்கள் என்றதும் என்னுடைய சிறு வயது நினைவுக்கு வருகிறது
என்னுடைய சிறு வயதில்
ஒரு ரூபாய்க்கு 16 அணா
ஒரு அணாவுக்கு இரண்டு அரையணா
ஒரு அரையணாவுக்கு இரண்டு காலணா
ஒரு அணாவுக்கு நாலு காலணா
அந்தக் காலணாவில் ஒட்டைக் காலணா உண்டு,
ஓட்டை இல்லாத காலணாவும் உண்டு
ஒரு காலணாவுக்கு மூன்று தம்பிடிகள்

ஆக ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள்

அதே போல ஆயிரம் ரூபாய் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தின் அளவில் பாதி அளவு இருக்கும், அப்போதெல்லாம் உணவு விடுதிகள் சென்னை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் இருக்கும் ,அதற்கு தண்ணீர்ப் பந்தல் என்றும் பெயரிட்டு இருப்பார்கள்,அந்த உணவு விடுதியில் சென்று மணக்க மணக்க இருக்கும் சுவையான உணவு வகைகளை உண்ண ஆரம்பித்தால் ,உண்ண உண்ண கணக்கு தெரியாமல், வயிறு நிறைந்தாலும்,மீண்டும் உண்ணத் தோன்றும், வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு எவ்வளவு ஆயிற்று என்று கணக்கு கேட்டால் நாம் என்னென்ன சாப்பிட்டோம் என்று


மனக்கணக்கு போட்டே சொல்வார்கள், அவ்வளவு சாப்பிட்டும் ஒண்ணரை அணா என்பார்கள் ,அது ஒரு பொற்காலம் ,சுவையிலும் சரி, பணத்தின் மதிப்பிலும் சரி அது உண்மையாகவே ஒரு பொற்காலம்தான்,
உட்காருவதற்கு ஒரு நீளமான மர பென்ச் போட்டிருப்பார்கள்,
வைத்துக்கொண்டு உண்ணவும் ஒரு நீளமான பென்ச் போட்டிருப்பார்கள்
மந்தாரை இலையில் வைத்து உண்ணக் கொடுப்பார்கள்,
எனக்கு வயது 60 க்கு மேல் ஆகிறது, இன்னமும் அந்தச் சுவை நாவை விட்டு அகலவில்லை,
சமீபமாக கேரள மாநிலத்தில் இருக்கும் வர்க்கலா என்னும்
ஷேத்திரத்துக்கு சென்றிருந்தோம், அங்கே வர்க்கலா என்னும்
அந்தக் கடற்கரை மிகவும் அருமையாக இருக்கிறது,
அந்தக் கடற்கரையில் வெளி நாட்டவர் அனேகம் பேர் வருகிறார்கள்,அருமையான சுற்றுலாத்தலம் அது

அங்கே நம்முடைய கிங் ஜார்ஜ் உருவம் பொறித்த பெரிய ஒரு ரூபாய்,

விக்டோரியா மகாராணியின் உருவம் பொறித்த வெள்ளியினாலான ஒரு ரூபாய், காலணா, ஓட்டைக் காலணா, தட்டைக் காலணா, அரையணா,
மஞ்சள் அரையணா , மற்றும் பித்தளையில் செய்த தாமரைப் பூ உருவம் பொறித்த 20 பைசா போன்றவைகளை ஒரு பெரிய தட்டில் பரப்பி வைத்து

விற்றுக்கொண்டிருந்தார் ,
அவைகளை மிகவும் ஆர்வமாக வெளிநாட்டினர் வாங்கிச் செல்கின்றனர்
அந்த வெளி நாட்டவரிடம் நம்முடைய ஆட்கள் தட்டைக் காலணா, தற்போதைய முன்னூறு ரூபாய்,விலைக்கு விற்கிறார்,
ஓட்டைக் காலணா நானூறு ரூபாய், மற்ற நாணயங்கள் அவர்கள் மனதில் எவ்வளவு,தோன்றுகிறதோ அந்த தொகையை சொல்கிறார்கள், வெளிநாட்டவரும் மிக ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள்
ஒரு காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய்
நாணயம், 50 பைசா நாணயம்,25 பைசா நாணயம் 20 பைசா நாணயம், 10 பைசா
நாணயம், 5 பைசா நாணயம் என்று உரு மாறிற்று,
அதில் குறிப்பாக 20 பைசா நாணயங்களின் புழக்கம் திடீரென்று
முடங்கியது,கிடைக்காமல் போயிற்று என்ன காரணம் என்று ஆராய்ந்தால்

அந்த தாமரை உருவம் பொறித்த 20 பைசா நாணயத்தில் தாமரை உருவம்
பதித்திருந்ததால் சேமித்து வைத்து, இறைவனுக்கு சொர்ண புஷ்பம் என்று சொல்லி அந்த 20 பைசா (108)நாணயங்களை, அர்ச்சனை செய்ய உபயோகித்தார்கள், அது மட்டுமல்ல, மற்றும் அந்த 20 பைசா நாணயங்களை மோதிரம் செய்து விரலில் மாட்டிக்கொள்ளுதல் அந்தக் காலத்து நாகரீகமாக இருந்தது, அதையும் தாண்டி பித்தளையில் செய்த அந்த 20 பைசா நாணயங்களை சேர்த்து வைத்து பாத்திரக்கடையில் போட்டு, அண்டான், குண்டான், போன்றவைகளை செய்து வாங்கி வீட்டில்

வைப்பர், இது போன்ற காரணங்களால் அந்த 20 பைசா நாணயங்களுக்கு மதிப்பு அதிகமானது, தட்டுப் பாடு ஏற்பட்டது

கலிகாலம் என்பதற்கு இதை விட சாட்சியங்கள் வேண்டுமா என்றும் தோன்றியது

கேரள மாநிலத்தில் இருக்கும் அந்த வர்க்கலாஎன்னும் ஷேத்திரத்தில்கோயிலில் உள்ள விக்ரகம் பிராமணர்கள் ஆசமனம் செய்வது போல வடிக்கப் பட்டிருக்கும் அந்தப் பெருமானின் கைகள் ஆசமனம் செய்வது போல கையில் தண்ணீரை வைத்து வாயருகே வைத்து ஆசமனம் செய்வது போல இருக்கும் ,அந்த கை காலத்துக்கு காலம், அருகே தானாகவே நெருங்கிக் கொண்டே இருக்கிறது, எப்போது அந்தக் கை வாயின் மிக அருகே சென்று ஆசமனம் செய்ய முடியும் அளவுக்கு நெருங்குகிறதோ அப்போது
இந்த உலகத்தில் ப்ரளயம் வரும் ,ப்ரபஞ்சம் அழியும் என்பது பலருடைய
நம்பிக்கையான ஐதீகம்,
நாணயம் இப்போதெல்லாம் ஏமாற்றப் பயன்படுகிறது
நாணயமான மனிதர்களைப் பார்ப்பதும் அறிதாகி வருகிறது

நாணயம் சிலரின் நா - நயத்தினால் கவரப்பட்டு
அனைவரையும் ஏமாற்றுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ


1 comment:

தேவன் மாயம் said...

நாணயம் இப்போதெல்லாம் ஏமாற்றப் பயன்படுகிறது
நாணயமான மனிதர்களைப் பார்ப்பதும் அறிதாகி வருகிறது///

மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!!