திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, February 18, 2009

கணிணியும் தமிழும்

அன்புள்ள மின்தமிழ் நண்பர்களே

இப்போது நான் கூறப் போவது என் சுயப் பரதாபம்
ஆனாலும் இதைப் படிப்பவர்களுக்கு கணிணிப் பயன்பாடு எவ்வளவு உயர்வானது, தேவையானது
என்பது ஓரளவு புரியும் , புரியவேண்டும் என்னும் நோக்கில் எழுதுகிறேன்

ஆர் கிருஷ்ணமாச்சாரி யாகிய என்னை இயந்திரங்களோடு இயந்திரமாய் 34 வருடங்கள் இரவு பகலாய் வெயில் படாமல் லூகாஸ் டீவீஎஸ் என்னும் நிறுவனம் எனைப் பொத்தி வளர்த்தது போற்றி வளர்த்தது, இயந்திரமே எனக்கு போதிமரமாய் உயர்ந்து நின்றது
அந்த போதி மரத்தை விட்டு 2002 ம் ஆண்டு விலகி வீட்டுக்கு வந்தேன்,
என் மகனுக்கு ஒரு கணிணி வாங்கி அளித்துவிட்டு அவன் அதிலே வேலை செய்யும் பொழுது தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னை அருகிலே இழுத்தது காந்தமாய்க் கணிணி,முயன்றுதான் பார்ப்போமே என்று முடிந்த வரை தட்டினேன், தட்டினால் திறக்கும் என்பார்களே,அடேடே எனக்கும் அருள் புரிந்தது கணிணி,   தட்டச்சு கூடத் தெரியாத என்னை கணிணியும் தமிழும் இணைந்து இன்று தமிழ்த்தேனியாய் மாற்றிய விந்தையை நினைத்துப் பார்த்தால் அது இறைவனின் சிந்தை என்று புரிகிறது,

ஏற்கெனெவே நான் கையெழுத்தாய் எழுதி வைத்திருந்த படைப்புகளை முரசு அஞ்சலென்னும் முறையை உபயோகித்து தட்டச்சு செய்தேன் , மீண்டும் அவைகளைப் படிக்க எண்ணி திறந்து பார்த்தால் அவை எழுத்துரு உருமாறி கேள்விக் குறியாய் நான் எழுதியது என்னவென்று எனக்கே புரியாமல் நான் தடுமாறும் நிலையை கேலி செய்தது .அவற்றை சரி செய்ய என் எச் எம் உருமாற்றியை கண்டு பிடித்து எழுதியதெல்லாம் அதிலிட்டு எழுத்துருமாற்றி, மீண்டும் வெட்டி ஒட்டி கோப்பாக்கி அவற்றையெல்லாம் யூனிகோட் முறையில் எழுதி வைத்தேன் . அன்றுதான் வெகு நாட்கள் கழித்து நிம்மதியாய் உறங்கினேன்.

அழகி என்றொரு மென்பொருளை இலவசமாகவே திரு அழகி விஸ்வநாதன் அவர்களும் , மழலைகள்.காம் தளம் நடத்தும் திரு ஏகேஆர் அவர்களும் எனக்களித்து என்னை அழகிக்கு பழக்கிவிட்டனர் அழகி மற்ற மென் பொருட்களைவிட தட்டச்சு செய்ய மிகவும் சுலபமாக இருக்கிறது.
மற்ற மென்பொருட்களில் நா என்றொரு எழுத்தை தட்டச்சு செய்ய w என்னும் எழுத்தை தட்டச்சு செய்து பிறகு a அடிக்க வேண்டும் ,ஆனால் அழகியில் என் எச் ஏ அடித்தாலே போதும். நாம் இயல்பாக எழுத முடிகிறது. ஆகவே இப்போதெல்லாம் நான் அழகி மென் பொருளை உபயோகிக்கிறேன்,நீங்களும் உபயோகித்துப் பாருங்கள் அழகியின் அழகு புரியும்,


மறுநாள் காலையில் முதல் நாள் பதித்த என் படைப்புகளைக் காண ஆவலுடன் கணிணியைத் திறந்தேன், விஞ்ஞான விந்தைகள் அத்தனையையும் அதுகாட்டி சரம் சரமாய் ஒளிகாட்டி இறுதியாய் திறந்தது கணிணி,என் கோப்புகளைத் தேடினேன்,
அது போன்ற கோப்பெதுவுமில்லை என்னிடத்தில் என்றே கையை விரித்து என்னை ஏளனம் செய்தது கணிணி, ஏமாந்தேன், என் படைப்புகள் அத்தனையும் காணவில்லை. மகவை திருவிழாவில் தொலைத்த தாய் போல் பரிதவித்தேன், ஆமாம் சேமிக்க மறந்திருக்கிறேன்.

கோப்புகளை சேமிக்கத் தெரியாத ஒரே காரணத்தால் முன்னூறு கவிதைகள், இருநூறு கட்டுரைகள், பல படைப்புகள் அத்தனையையும் மறைத்தது கணிணி என் கண்ணிலிருந்து, எத்துணை நாள் உழைப்பு,ஒரு நொடியில் காணாமல் போனது, அப்போதுதான் கற்றுகொண்டேன் சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்று ,வாழ்க்கையில் சேமிக்காதவர் எவ்வளவு பாடு படுவாரென்று.

அப்பனுக்கே பாடம் சொன்ன கந்தனாய் என் மகனை
நான் நினைத்து அவனிடம் வெட்கம் விட்டு கேட்டுக் கேட்டுக்
சேமிக்கவும் கற்றுக் கொண்டேன்.  அதன் பிறகு என் விரல்கள்
 தமிழா.காம்  மூலமாக ஈ கலப்பை என்னும் ஒரு மென்பொருளை அறிமுகம் செய்து கொண்டன, மீண்டும் நான் கணிணியில் தங்லீஷில் தட்டச்சு செய்யத் தொடங்கி  தட்டச்சு செய்தேன் அத்தனையயும்.

 சலிக்காமல், சேமித்தேன்!.என்ன ஆச்சரியம் தட்டச்சே தெரியாத எனக்கும்
அதற்கு உதவிய பலர் மூலமாக கணிணியில் தட்டச்சுசெய்ய ,. அதுவும் தமிழிலே சரளமாய் வேகமாய் தட்டச்சு செய்ய பழக்கம் வந்திருந்தது என்விரல்களுக்கு.  கேட்டுக் கேட்டுக் கற்றுக் கொண்ட தமிழ்
தட்டச்சு,  சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம் நடையும் நடைப்பழக்கம், தட்டச்சும்  விரல்பழக்கம்  என்பது புரிந்தது.


கணிணியே மன்னித்துக்கொள் என்னைப் படுத்துகிறாய் என்று உன்னை நான் திட்டியதுண்டு, இப்போதுதான் புரிகிறது நீ என்னைப் பண்படுத்தி இருக்கிறாய், படுத்தவில்லை என்பது,  வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் எப்படிப் பொழுது போகப் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தேன், ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பெரியோர்களே
கணிணி கற்றுக் கொள்ளுங்கள் எவ்வளவோ நற் காரியங்கள் செய்ய வாய்ப்பிருக்கிறது.

ஒரு உண்மையை சொல்லுகிறேன் இப்போதெல்லாம் எனக்கு பொழுது போதவில்லை, நான் மனதால் உலகையே உலா வருகிறேன் என்றால் அதற்கு கணிணியல்லவா காரணம் ! அனைவருமே கணிணி கற்றுக்கொள்ளுங்கள், பறவைப் பார்வையாய் ப்ரபஞ்சத்தை பார்க்கலாம்,உலகை உலா வரலாம், தமிழிலே உலா வரலாம்

“ நான் ஒரு தொழிலாளி”

இரும்போடு உழைத்திட்ட தொழிலாளி நான்
தமிழ்க் கரும்போடு செயலாற்ற எழுத்தாளியாய்
அமிழ்தான தமிழ்தன்னின் பொறுப்பாளியாய்
தரமற்ற செயல் தமக்கே மறுப்பாளியாய்
அமர்கின்ற மலரெல்லாம் தமிழாகவே அமர்ந்திங்கு
மகரந்தம் தனை நாடியே வழிகண்டு வந்திணைந்த
தமிழ்த்தேனி நான் ,ஊன் உயிர் தழுவுதல்போல்
நான் தமிழ் தழுவினேன்,உற்றதொரு தமிழ்நாடி
தேன்தேடி சுந்தரத் தமிழ்சூடி மகிழ்கின்ற தமிழ்த்தேனி நான்
உமிழ்கின்ற உமிழ்நீரும் தேனாகவே தமிழ்த்தேனாகவே
அருஞ்சுவையான தமிழ்தந்து எனை ஏற்றியே
சிறு இறக்கைகள் தந்தருளி பறக்கின்ற அணிலாக
எனை மாற்றியே மகிழ்கின்ற கலைவாணி தமிழ்வாணியே,
அவளுக்கே குருவான ஹயக்ரீவனின் தாள் பணிந்தே
தமிழ்த் தொண்டு நான் செய்ய மனம் கொண்டதால்
அடிபோற்றி நல்அறம் பாடும் தமிழ்த்தேனியாய்
புலம்பெயர்ந்து மின்தமிழின் மரபணிலாகவே
உளம் கனிந்த தமிழ்த்தேனியாய் எனை மாற்றி
வகை செய்த அறிஞர்கள் மகிழ்கின்ற தமிழோடு இனிதாகவே,
இணைகின்ற தமிழ் வாழ்க தமிழ் வாழ்கவே
ஒரு கணநேரமதில் நம்மை உலகெங்குமே உலாவிடவே
வகை செய்யும் எளிதான புதிதான வாகனமாகவே
திகழ்கின்ற கணிணிதனை நாம் வாழ்த்தியே தமிழ் வளர்க்கவே
நாமெல்லோரும் கரம் சேர்த்து உலகாளுவோம்,

அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com
http://thamizthenee.blogspot.com
http://peoplofindia.netNo comments: