திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, June 13, 2011

“அப்பிடி ஒண்ணும் இல்லே ”  ஒரு சுவையான கற்பனையை படிக்க  சொடுக்குங்கள்
 http://www.vallamai.com/?p=4006

கடவுளை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு

நானும் கடவுளிடம் சில சந்தேகங்கள் கேட்டேன்

அவரும் பதில் சொன்னார் கடைசியில் தெளிந்தேனா? குழம்பினேனா?

நான் : கடவுளே உலகில் எத்துணை இன்பம் வைத்திருக்கிறாய், ஆனால் உனக்கு ஏன் இந்தப் பாரபட்சம்? சிலருக்கு மட்டும் கிடைக்கச் செய்கிறாய், பலருக்கு கிடைப்பதே இல்லை ஏன் இப்படி ?

கடவுள்: உன் கேள்வியே தவறு, எல்லாவித இன்பத்தையும் நான் படைத்து உங்கள் அனைவரையுமேதான் அனுபவிக்கச்சொன்னேன் .ஆனால் நீங்கள் பணம் என்று ஒன்றை உண்டாக்கிவிட்டீர்கள். அந்தப் பணத்திற்கு அளிக்கும் மதிப்பை உங்களையெல்லாம் உண்டாக்கிய எனக்கு கூட அளிப்பதில்லை.

நீங்கள் உருவாக்கிய பணத்தை யார் அதிகமாக சம்பாதிக்கிறீர்களோ அவர்கள் மட்டும் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள், மற்றவர்கள் அனுபவிக்க முடியாதபடி நீங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து விட்டீர்கள்.அந்த விலை கொடுத்தால் யார்வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் அதில் தடையில்லை என்னும் நிலையை உருவாக்கி விட்டீர்கள்,நானென்ன செய்வது

நான் : அது சரி ஏன் இப்படி மூச்சுவிடாமல் பேசுகிறீர்! சற்றே அமைதியாக பேசுங்களேன்

கடவுள்: ஆமாம் எனக்கே மூச்சு முட்டுகிறது இந்தப் பணத்தை நினைத்தால். கோவம் வருகிறது, நீங்கள் கண்டு பிடித்த பனத்தை ஈட்ட என்னையே கேவலப்படுத்திவிட்டீர்கள்.

என் மனைவிக்கு லக்‌ஷ்மி என்று பெயரிட்டீர்கள் சரி , ஆனால் அவள்தான் செல்வத்துக்கு அதிபதி என்றீர்கள் அதுவும் சரி, அதென்னப்பா நீங்கள் வீட்டில் மாட்டும் நாட்காட்டிகளிலும், உங்கள் பூஜை அறையில் இருக்கும் லக்‌ஷ்மியின் திரு உருவப் படத்திலும் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி ஏதோ தங்கக் காசுகளைக் கொட்டுவது போல அச்சடிக்கிறீர்கள்? பணமழை பொழிவது போல அச்சடிக்கிறீர்கள்? நீங்கள் கண்டு பிடித்த பணத்தை எப்படி எங்களிடம் எதிர் பார்க்கிறீர்கள் என்றே புரியவில்லை,

அது மட்டுமா நீங்கள் கண்டு பிடித்த பணத்தை ஈட்ட திருட்டு, கள்ளக்கடத்தல், கொள்ளையடித்தல், விபசாரம், சாராயம், குழந்தைகள் கடத்தல், தாலிக்கொடி பறித்தல், சந்தன மரம் கடத்தல், நாட்டு ரகசியங்களை அன்னிய நாட்டுக்கு விற்றல், கட்சி மாறுதல், எல்லாத் துறைகளிலும் லஞ்சம் வாங்குதல் பங்கு மார்க்கட்டு பேரங்கள் ,மொத்தமாக நாட்டின் செல்வத்தையே சுறண்டி உங்கள் வீட்டுக்குள் கொண்டு போய் வைக்க மெகா ஊழல்கள்

இத்தனையும் செய்கிறீர்கள்.

அதைக் கூட பொறுத்துக்கொள்கிறோம், ஆனால் எங்களுக்கு கோவில் கட்டி திருவுருவ வடிவில் எங்களை நிறுவனம் செய்து, தினமும் எங்கள் தலைமேல் தேன் ,பால், பஞ்சாமிருதம், போன்றவைகளை ஊற்றி ஊற்றி எங்களை திக்குமுக்காடச் செய்து நீங்கள் உங்கள் தலைக்கு மேல் கைகளை உயரத் தூக்கி நாங்கள் படும் கஷ்டங்களை பார்க்கச் சகிக்காமல் கண்களை வேறு மூடிக்கொண்டு ஏதோ எங்களையெல்லாம் உங்கள் மனக்கண்ணால் பார்ப்பது போன்ற ஒரு பாவனையில் பக்திமான் வேடம் போடுகின்றீர்கள்.

இத்தனையும் செய்து விட்டு எங்களைக் காவல் காக்க காவல்காரர்களை நியமிக்கிறீர்கள். அந்தக் காவல்காரர்கள் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு எங்கள் கதவருகே வாயிலெடுத்துக்கொண்டே படுத்துக்கொள்கிறார்கள், நாற்றம் குடலைப் பிடுங்குகிறது, கதவை வேறு பூட்டி விடுகிறீர்கள் ஓடக்கூட முடியவில்லை, இவ்வளவு சிரமங்களையும் பட்டு உங்களைக் காக்கிறோம் நாங்கள், ஆனால் நீங்கள் எங்கள் திருவுருவங்களையே நீங்கள் கண்டு பிடித்த பணத்துக்காக கடத்தி விற்கிறீர்கள்.

எங்கள் உண்டியலில் நீங்களே காசு போட்டுவிட்டு இரவில் அந்த உண்டியலை நீங்களே உடைக்கிறீர்கள், அதற்கு தடையாயிருக்கும் காவல்காரரை கொலை செய்கிறீர்கள்

கள்ளத்தனமாக சேர்த்த பணத்தையெல்லாம் எங்கே வைப்பது என்றே தெரியாமல் ஒவ்வொரு மடாதிபதிகளைத் தேடிச் சென்று அவர்களிடம் கொடுத்து பத்திரப்படுத்துகிறீர்கள், அதன் பிறகு உங்கள் ரகசியங்கள் அவருக்குத் தெரிந்து விட்டதே என்றுணர்ந்து அவர்கள் மேல் ஏதேனும் குற்றம் சுமத்தி அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புகிறீர்கள்.

இவ்வளவும் செய்து விட்டு நாங்கள் உங்களுக்கு அளித்த சுகபோகங்கள் பாரபட்சமானவை என்று என்னிடமே கேட்கிறீர்கள் . கோபம் வராமல் என்ன செய்யும் ?

நான்: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் .மீண்டும் இந்த உலகத்தை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்க முடியுமா?

கடவுள்: முடியும் ஒரு வழி இருக்கிறது நான் சொல்கிறேன்! சரி உலகில் உள்ள இன்பங்களில் இது வரை நீ அனுபவித்த இன்பங்களில் மன நிறைவு கண்டாயா? அப்படியானால் அவைகளை சொல். நான் உனக்கு அந்த இன்பங்களைத் தவிர்த்து வேறு இன்பங்களைத் தருகிறேன், இது வரை யார் அனுபவிக்கவில்லையோ அவர்களுக்கு அந்த இன்பங்களை பகிர்ந்து தருகிறேன்

நான் : நியாயமாகத்தான் தெரிகிறதுநான் யோசிக்க வேண்டும் சற்றே நேரம் கொடுங்கள்

கடவுள்: சரி காத்திருக்கிறேன்

நான் : நான் யோசித்தேன்

கடவுள்: கண்டு பிடித்தாயா ஒரு பட்டியல் கொடு அவற்றை நீக்குகிறேன்.

நான் :அப்படி ஒண்ணும் இல்லே நான் யோசித்ததில் நான் நிறைவாக அனுபவித்த இன்பம் ,அதுவும் இனி நான் அனுபவிக்காமல் விட்டுத்தரும்படியாக

அப்படி ஒண்ணும் இல்லே “!

கடவுள்: அடப்பாவி ! அப்படியானால் நீ மற்றவருக்கு விட்டுத் தர ஒன்றுமே இல்லையா உன்னிடம்?

நான் : ஆமாம்அப்பிடி ஒண்ணும் இல்லே” ! அது சரி என்கிட்ட கேட்கிறீர்களே உங்க்ளுக்கு வேண்டுதல், படையல், குடமுழுக்கு, கும்பாபிசேகம், திருவீதிப் புறப்பாடு, எல்லாம் வெச்சிருக்கோமே அதிலே இனிமே உங்களுக்கு இனி என்னென்ன வேண்டாம்ன்னு நீங்கள் ஒரு பட்டியல் போட்டுத் தருவீர்களா? நாங்களும் ஏற்கெனவே நீங்கள் அனுபவித்து திருப்தி அடைந்ததெல்லாம் நீக்கிவிட்டு நிம்மதியாக இருக்கிறோம்

கடவுள் நானும் யோசிக்கிறேன்…… சற்றே இடைவெளிக்குப் பின்னர்

கடவுள்: இல்லை யோசித்தேன் அப்படி ஒண்ணு இல்லே!

கடவுள் மறைந்து போனார். தேடிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, June 1, 2011



மானச யாத்திரை

http://www.vallamai.com/?p=3742


தமிழ்த்தேனீ

“15 நாளா நினைவில்லை, டாக்டர் வந்து பாத்துட்டு, இந்த அம்மா கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டாங்க, ஜாக்கிரதையா பாத்துக்கோங்க. வேற ஒண்ணும் பண்ண முடியாது,. ஒரு வேளை நினைவு வரலாம். அல்லது வராமலே இருக்கலாம். ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டுப் போனார்.

நினைவில்லாமல் படுத்திருந்த கமலத்துக்கு இதுவும் காதில் விழுந்தது. ஆனால் ஒரு உணர்ச்சியையும் காட்ட முடியலை. உணர்ச்சியை காட்ட முடியலை. ஆனா உள்ளே ஓடற நினைவுகளை நிறுத்த முடியலை. கோமா ஸ்டேஜிலே இருக்கேன்னு டாக்டர் சொன்னது, எனக்குக் காதிலே விழுந்துது. மனசே உனக்கு காதிலே விழல்லையா? என்று மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள் கமலம்.

கமலத்துக்கு அவளோட ஆத்துக்காரர் அடிக்கடி சொல்றது ஞாபகம் வந்துது.

அவ நாம சொல்ற எதையுமே காதிலேயே வாங்கமாட்டா, அப்பிடியே காதிலே வாங்கினாலும் மனசுலே போட்டுக்க மாட்டா!

சிரிப்பாய் வந்தது கமலத்துக்கு! மனசிலே போட்டுண்டு இருந்தா, இத்தனை நாள் வாழ்க்கையை ஓட்டி இருக்க முடியுமா? கோயில் காலம் ஆறது போல இருக்கு, அதான் மேளச் சத்தமும் நாதஸ்வரமும் கேக்கறது. கோயில் காலம் ஆனவுடனே கோஷ்டி ஆகும், கோஷ்டி சாதிச்சவுடனே எல்லாருக்கும் ப்ரசாதம் குடுப்பா. கோஷ்டி சாதிக்கறது காதிலே விழுமோ என்னமோ, பிரசாதத்துக்கு மனசு மட்டும் காத்துண்டு இருக்கும்.

இப்பிடித்தான் ஒருநாள் விடியக் காத்தாலே எழுந்து அடையவளைஞ்சான் பக்கமாப் போயி, வழியிலே கொழுகொழுன்னு நிக்கற பசுவையும் கூடவே ஒட்டி ஒட்டி உறவாடிண்டு துள்ளித் துள்ளிக் குதிக்கற கன்னுக்குட்டியையும் தடவிக் குடுத்துட்டு காவிரிலே குளிச்சிட்டு, துணியெல்லாம் தோச்சு தோளிலே போட்டுண்டு அப்பிடியே பித்தளைக் குடத்தை நன்னா பொன்குடம் மாதிரி தேச்சு அதிலே நல்ல இடமா பாத்து காவேரிலேருந்து தண்ணி மொண்டாள் கமலம்.


ஆத்துக்கு வந்து திண்ணையிலே இருக்கற ஏணி மாதிரி படியிலே ஏறிப் போயி மொட்ட மாடிலே துணியெல்லாம் உலத்திட்டு, கீழே வந்து ஆத்து வாசல்லே கோலம் போட்டுட்டு பரபரன்னு தளிகையெல்லாம் முடிச்சு, பெருமாளுக்கு அமிசைப் பண்ணிட்டு ஆத்திலே மத்தவாள்லாம் சாப்பிடறதுக்கு தயாரா வெச்சுட்டு கோயிலுக்குப் போகலாம்னு வெளியே வந்தாள் கமலம்.

நேரம் ஆயிடுத்து. கோயில் காலமும் முடிஞ்சு கோஷ்டி முடிஞ்சு பிரசாதமும் குடுத்தாச்சுகடைசியா நின்ன அவளுக்கு பிரசாதம் கிடைக்கலே, தீந்து போச்சு, செத்த முன்னே வரதுக்கென்ன? போயிட்டு நாளைக்கு வாங்கோ அப்பிடீன்னார் பட்டாச்சாரியார். மனசே ஒடைஞ்சு போச்சு. அது சரி, எதுக்கு இவ்ளோ கோவம் வரது நமக்கு.

அப்பிடீன்னு ஒரு மனசு நெனைச்சாலும் இன்னொரு மனசு, பட்டாச்சாரியாரைப் பெருமாளுக்கு அடுத்தபடியா நெனைச்சிண்டு இருக்கோம், அதான் அவர் பிரசாதம் குடுக்கலைன்னா ஏதோ நம்மளைப் பெருமாளே ஒதுக்கிட்டா மாதிரி ஒரு அழுகை வரது. சரி நமக்குக் குடுத்து வெச்சது அவ்ளோதான் அப்பிடீன்னு நெனைச்சிண்டு திரை திறந்ததும் பெருமாளைப் போயி சேவிச்சிட்டு அப்பிடியே பிரதக்ஷணமா வந்துண்டே இருக்கச்சே, எல்லார் கையிலேயும் ப்ரசாதம், அவாவா சாப்டுண்டே, பேசிண்டே போயிண்டிருக்கா…..

என்ன இருந்தாலும் பெருமாளுக்கு அமிசைப் பண்ணதுன்னா அதுக்கு ஒரு தனி ருசி வந்துர்றது, பொங்கல் மணக்கறது பாரும்’, என்றார் ஒருவர்.

அது நெய் வாசம் ஓய்என்றார் இன்னொருவர்.

எல்லாரும்தான் நெய் குத்தி, பொங்கல் பண்றா. இந்த வாசமும் ருசியும் வரதா என்ன? இது தனி ருசி. பெருமாள் அமிசைப் பண்ணினாத்தான் வரும்என்றார் இன்னொருவர்.

நாக்கில் ஜலம் ஊறியது. மனசு ஒடிஞ்சு போச்சு, அது எப்பிடி எனக்குப் பிரசாதம் கிடைக்காம போகலாம்? நான் என்ன இன்னிக்கு நேத்தா வரேன். நெனைவு தெரிஞ்ச நாளிலேருந்து உன்னைச் சேவிக்க வந்துண்டேதானே இருக்கேன். இது உனக்கே அடுக்குமா? மனசு பொருமிற்று. திடீர்ன்னு ஒரே சத்தம். யார்கிட்டேயோ இருந்த பிரசாத தொன்னையைக் குரங்கு பிடிங்கிண்டு போயிடுத்தாம்.

ஜாக்கிரதையா வெச்சிக்கப்படாதோ, இங்கதான் குரங்கு வரும்னு தெரியுமோன்னோ?’ என்று ஒரு அங்கலாய்ப்பு.

இல்லே கெட்டியாதான் பிடிச்சிண்டு இருந்தேன். கண்மூடிக் கண் திறக்கறதுக்குள்ளே எங்கேந்து வந்துதுன்னே தெரியாம திடீர்ன்னு வந்து பிடுங்கிண்டு போயிடுத்து. கைக்கெட்டினது வாய்க்கெட்டலையேஎன்றார் அவர்.

நல்ல வேளை நான் வெச்சிருக்கேன். இந்தாங்கோ..என்று இன்னொருவர், அவருக்குக் கொஞ்சம் பிரசாதம் கொடுத்தார்.

ஆஹா, தேவாமிர்தமா இருக்கு. இதைப் போயி அந்தக் குரங்கு பிடுங்கிண்டு போயிடுத்தேஎன்று அங்கலாய்த்தார் அவர்.

குரங்குன்னு சொல்லாதீங்கோ. ஆஞ்சனேயர், அவர் அப்பிடித்தான். நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்என்று சொல்லிவிட்டு கெக்கெக்கேஎன்று சிரித்தார் அவர்.

இவா யாருக்கும் கண்ணிலே படாதோ, எனக்குப் பிரசாதமே கிடைக்கலையே. எனக்குக் கொஞ்சம் குடுக்கணும்னு இவாளுக்குத் தோணாதோ?
நாமளா கேட்டு வாங்கிச் சாப்படலாம்னா அதுக்கும் மனசு கேக்க மாட்டேங்கறது. எனக்கு மனசுக்குள்ளே ஒரு சுய இரக்கம், எனக்கு மட்டும் கிடைக்கலையே, பகவானே நான் என்ன பாவம் பண்ணேன். என்னை மட்டும் சோதிக்கிறயே என்று.

இதென்னது இன்னிக்கு, கொஞ்சூண்டு பொங்கல் அது கிடைக்கலேன்னு இவ்ளோ கஷ்டமாயிருக்கு மனசு? இந்த மனசு கஷ்டப்படறது பொங்கலுக்கு இல்லே, நமக்கு எப்பிடி பிரசாதம் கிடைக்கலேன்னு பொருமல், வேற ஒண்ணும் இல்லே..

பகவானேஅப்பிடீன்னு கை ரெண்டுத்தையும் சேத்து கூப்பிண்டு, ‘நீதான் என்னைக் காப்பாத்தணும். வரவர எனக்கு மனசு திடமே இல்லாமே அலைக்கழிக்கறது. என் மனசுக்குத் திடத்தைக் குடுஅப்பிடீன்னு வேண்டிண்டு திரும்பினாள் கமலம்.

அவள் கையில் ஏதோ விழுந்தது.

அப்பிடியே கெட்டியா பிடிச்சிண்டு, என்னான்னு பார்த்தா, ஒரு தொன்னையிலே பொங்கல்.

மேலே அந்தக் குரங்கு உக்காந்துண்டு இவளையே பாத்துண்டு இருக்கு. அந்தக் குரங்கோட கண்ணிலே ஒரு கருணை, நமக்குத்தான் இப்பிடியெல்லாம் தோண்றதா, இல்லே உண்மையாவே கருணையா? புரியலை. இருந்தாலும் பயம். அது வந்து பிடுங்கிண்டு போயிடுத்துன்னா, என்ன பண்றது? பொங்கலை எடுத்துச் சாப்பிடலாம்னு கையிலே எடுத்தா, மனசு சொல்றது, அந்தக் குரங்கு வாயை வெச்சிருக்குமே. அதைப் போயி நாம் சாப்படலாமான்னு. இப்போ அந்தப் பொங்கலைச் சாப்பிடறதா, வேண்டாமான்னு தெரியலை.

அதெல்லாம் வாயை வெச்சிருக்காது. அது கையிலே கிடைச்சா ஒரு நிமிஷத்திலே சாப்ட்ருமே. ஒரு வேளை நம்ம மனசு புரிஞ்சுதான், நமக்குக் கொண்டுவந்து குடுத்துதோ இந்தக் குரங்கு. ஒரு வேளை ஆஞ்சனேயர்தானோ இந்தக் குரங்கு? சரி பெருமாள் பிரசாதம் சாப்புடுவோம்னு முடிவு பண்ணி ஒரு கவளம் கையில் எடுத்தாள் கமலம். அந்தக் குரங்கு இவளையே பார்த்துக்கொண்டிருந்தது.

கையில் எடுத்த அந்தக் கவளத்தை அப்பிடியே அந்தக் குரங்குக்கு நீட்டினாள்.

குரங்கு இப்போது இறங்கி வந்தது.

இவள் மனக் குரங்கும்தான் இறங்கியது.

இவள் கையிலிருந்து ஸ்வாதீனமாக வாங்கி பொங்கலை வாயில் போட்டுக்கொண்டது குரங்கு. ஒரு சீற்றமில்லை, சாதுவாக இவளுடன் நடந்து வந்துகொண்டிருந்தது. இவள் ஒரு வாய், குரங்கு ஒரு வாய் என்று இருவரும் பிரசாதத்தை முடித்தனர்.

குரங்கு இவள் புடவையைப் பிடித்து, இவள் மேலேறி, தோளில் உட்கார்ந்து முகத்தோடு முகமாக வைத்துக்கொண்டு இவளையே தன் கண்களால் உற்றுப் பார்த்தது. அதன் கண்களில் கருணையா?!

மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளின் உருவம் அந்தக் குரங்கின் கண்ணில் தெரிந்தது. பிரமையா என்று யோசிப்பதற்குள் குரங்கு மதில் சுவருக்குத் தாண்டியது. அங்கே உட்கார்ந்துகொண்டு, தன் தலையில் கை வைத்துக்கொண்டு, தன் பல் தெரிய கிர்ரென்றது. யார் யாருக்கு என்ன பிராப்தமோ அதுதான் கிடைக்கும். கமலத்துக்கு புரிந்தது, ஓ இன்னிக்கு ஹனுமத் பிரசாதம்ன்னு.

அவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் சிரித்தாள், வாய்விட்டுச் சிரித்தாள், ஆனால் உதடு அசையவில்லை. உடலில் ஒரு குலுங்கல் இல்லை. ஆமாம் அவளுக்குக் கோமாவாயிற்றே. அதான் ஒண்ணும் அசையலை.

மானச யாத்திரை தொடரும்.


Sunday, May 1, 2011

" பாலபாடம் சிறுகதை

ஸ்கூட்டரை நடையில் நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் சுரேஷ். வியர்வையில் தொப்பலாய் நனைந்திருந்தது அவன் சொக்காய். இந்த லட்சணத்திலே டை வேற கட்டிண்டு, தினமும் ஆபீசுக்குப் போகணும். கழுத்தை இறுக்கிற்று டை. அதை முதலில் முடிச்சவிழ்த்துத் தளர்த்தினான். வழியெங்கும் மணலும் தூசியும் கண்ணில் விழுந்து கண்களையே சிவப்பாக்கி வைத்திருந்தன. ஸ்கூட்டரின் கண்ணாடியில் அவன் முகமே அவனுக்கு விகாரமாய்த் தெரிந்தது. எப்பிடியாவது ஒரு கார் வாங்கணும். என்று நினைத்துகொண்டு பக்கவாட்டில் இருந்த பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் சுரேஷ்.


"பால பாடம்" சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்

http://www.vallamai.com/?p=3049

அன்புடன்
தமிழ்த்தேனீ

Tuesday, April 26, 2011

"சக்கரம் “சிறு கதை வல்லமை இதழில்


“சக்கரம்” சிறுகதை

தமிழ்த்தேனீ
ராமசீதா இட்டிலிக் கடை, வாசனையாக, அமர்க்களமாக மணந்துகொண்டிருந்தது. இடைவிடாது வந்துகொண்டிருக்கும் வாடிக்கையாளர்களைக் கவனித்து, உணவுப் பொருட்களோடு தங்களின் உபசரிப்பையும் ராமேஷனும் அவர் மனைவி சீதாவும் வழங்கிக்கொண்டிருந்தனர். ஆய்ந்து ஓய்ந்து கடையை மூடியபோது இரவு 10 மணி. ராமேஷத்தின் நெற்றி வியர்வையை தன்னுடைய தலைப்பால் துடைத்துவிட்டு தானும் துடைத்துக்கொண்டு, கல்லாவில் இருந்த பணத்தை ஒரு ரூபாய் மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை எடுத்துக்கொண்டு வந்து மொத்தமாக வைத்தார் ராமசேஷன். கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு எண்ணத் தொடங்கினர் இருவரும். கணிசமாகச் சேர்ந்திருந்தது அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, இதை நாளைக்குக் கிருஷ்ணனின் பள்ளிக் கூடத்தில் கொண்டு போய்க் கட்டிவிட்டு வந்துடு. நீ வர வரைக்கும் கடைய நான் பாத்துக்கறேன் என்று சொல்லியபடியே, தள்ளிப் போனார் ராமேஷம்.
சீதா சரி என்று தலையை ஆட்டிவிட்டு அந்தப் பணத்தைக் கொண்டு போய், சுவாமி படத்தின் பின்னால் வைத்துவிட்டு மறுநாள் சிற்றுண்டி விடுதிக்குத் தேவையான ஏற்பாடுகளைக் கவனித்து விட்டுப் படுத்தாள். ராமேசமும் சீதாவும் வழக்கம் போல் சுவாமிக்கு நன்றி சொல்லிவிட்டு, தூங்க ஆரம்பித்தனர். அவர்கள் மகன் கிருஷ்ணன் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான். எப்பிடி இருந்த குடும்பம், எங்கிருந்தோ ஒரு பொண்ணு இந்தக் குடும்பத்துக்கு வந்து எல்லாரையும் ஆட்டிவெச்சு, குடும்பத்தைப் பிரிச்சு இதுமாதிரி நடுத்தெருவிலே கொண்டு வந்து அனாதையா நிக்க வெச்சிட்டாளே. அவங்க கண்ணு முன்னாடி நாம நல்லா படிச்சு முன்னுக்கு வந்து இவா ரெண்டு பேரையும் நல்லா வெச்சிக்கணும் என்னும் உறுதியோடு மீண்டும் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினான். ஆனாலும் படிக்கவிடாமல் அவனை அந்த நினைவுகள் ஆக்ரமித்துக்கொண்டே இருந்தன.
‘ஒண்ணு நான் இந்த வீட்டிலே இருக்கணும்னா இவாளை இங்கே இனிமே வெச்சிக்க முடியாது. நானா? இல்லே இவங்களா? நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்து சொல்லுங்கோ. நான் அது வரைக்கும் எங்க அப்பா அம்மாவோட இருக்கேன்’ என்ற படி தீர்மானமாய் பெட்டியைத் தூக்கிகொண்டு படி இறங்கிப் போனாள் மூத்த மருமகள்.
திகைத்து நின்ற அண்ணனிடம் ‘உன்னோட வாழ்க்கைதான் எங்களுக்கு முக்கியம், அதுனாலே நாங்க வெளிலே போறோம், இனிமே எங்களோட பாட்டை நாங்க பாத்துக்கறோம். எப்பிடி இருந்தாலும் உறவு விட்டுப் போகாது. அதுனாலே அவளைச் சமாதானப்படுத்தி அழைச்சிண்டு வந்து அவளோட சந்தோஷமா வாழறதுதான் உன்னோட கடமை. நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணைக் கண் கலங்காமெ வெச்சிக்கணும். அதுதான் சரி’ என்று தீர்மானமாகக் கூறிவிட்டு மூவரும் படியிறங்கினர். அண்ணா விதியின் கைப்பாவையாய் வாயடைத்து, கண்களில் கண்ணீருடன் நின்றான். ஆனால் அதன் பிறகு அண்ணா உண்மையிலேயே அண்ணியின் கைப்பாவையாகவே மாறிப் போனான்.
அவனுக்கு நடுத் தெருவில் ஒரு பக்கம் அம்மா, ஒரு பக்கம் அப்பா. மூவருமே அனாதையாக நின்ற கோலம் மனக் கண்ணில் தோன்றியது. அடடா அப்பாதான் எவ்வளவு தீர்க்கதரிசி…? ‘நீ ஒண்ணும் கவலைப்படாதே. உன் படிப்பு எந்தக் காரணம் கொண்டும் நிற்காது. வா போலாம்’ என்றபடி நடுத் தெருவிலிருந்து ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டு யோசிக்கலானார்.
‘நாம நடுத்தெருவிலே இல்லேடா. தைரியம் எப்பவும் நம்மைக் கைவிடாது. தெய்வம் நம்மைப் பாத்துக்கும்’ என்று கூறிவிட்டு யோசித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர் முகத்தில் ஒரு வெளிச்சம்.
‘ஏன் சீதா நீ இட்லியும் மொளகாப் பொடியும் போட்டு அதுக்கு மேலே கொஞ்சம் நல்ல எண்ணையை விட்டு குடுப்பியே அந்த மாதிரி ருசியை நான் எங்கேயுமே சாப்டதில்லே. எவ்வளவு நன்னா இருக்கும் தெரியுமா…?’ என்றார்
சீதா நிமிர்ந்து பார்த்தாள். மறுநாள் அந்தத் தெருவின் கடைசியில் ஒரு குடிசை இரவோடு இரவாக முளைத்தது. வாசலில் ‘ராமசீதா’ என்று வெறும் வெள்ளைக் கட்டியால் எழுதப்பட்ட பலகை இருந்தது. உள்ளிருந்து சுவையான இட்லியின் மணமும் சேர்ந்து போவோர் வருவோரை இழுத்தது…. இழுத்தது…. இழுத்துக்கொண்டே இருந்தது.
(சில வருடங்களுக்குப் பிறகு.)
‘அப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கோ’ என்றபடி காலில் விழுந்தான் கிருஷ்ணன்.
தலைக்கு உசந்த பிள்ளை நமஸ்காரம் பண்ணவுடனே, தூக்கி தன் அருகே நிக்க வெச்சுண்டு, ‘ராமேசம் என்னடா பாஸ் பண்ணிட்டியா? நீதானே முதல் மார்க் வாங்கி இருக்கே!!’ என்றார். உச்சி மோந்து ஆசீவாதம் செய்தார்.
சீதா நிமிர்ந்து பார்த்தாள்.
இரு வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணன், ‘அப்பா அம்மா நீங்க ரெண்டுபேரும் உழைச்சது போதும். கடையை மூடிடுங்கோ. இனிமே உங்களை பாத்துக்கறது என் பொறுப்பு’ என்றான்.
ராமேசம், சீதாவைப் பார்த்தார். சீதா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் அந்தப் பார்வை கொஞ்சம் குழம்பி, பின் தெளிவடைந்தது
‘என்னம்மா, என்ன யோசனை?’ என்றார் ராமேஷம்.
‘ஒண்ணும் கவலைப்படாதே நம்ம புள்ள நல்ல புள்ள’ என்றார்…..
சீதா ‘சரி’ என்று ஒரு ஒற்றைச் சொல் சொல்லிவிட்டு மீண்டும் அவரை நிமிர்ந்து பார்த்தாள். அதில் சீரான, தெளிவான பல செய்திகளின் நீரோட்டம் இருந்தது. இன்னும்
இரண்டு வருடங்கள் கழிந்தது. கிருஷ்ணன் ஒரு நாள், ‘அப்பா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…’ என்று தயங்கினான்.
‘சொல்லுப்பா. என்ன விஷயம்?’ என்றார்.
‘ஒண்ணுமில்லைப்பா, எனக்கு ஒரு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சு தரேளா?’ என்றான்.
உடனே ராமேஷம், ‘ரொம்ப சந்தோஷம். பொண்ணு யாருன்னு சொல்லு. நானே போய்ப் பேசிட்டு வந்துடறேன்’ என்றார்.
பெண்ணின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போதே, ‘இதோ பாருங்கோ. எங்களுக்கு ஒரே பிள்ளை. நாங்க உழைப்பையும் தெய்வத்தையும் நம்பறோம். அதுனாலே வரதட்சிணை அப்பிடி இப்பிடியெல்லாம் பேசாதீங்கோ. எங்காத்திலெ ரொம்ப நாளா ஒரு பொண்ணு குழந்தை இல்லை. உங்க பொண்ணை எங்காத்துக்கு அனுப்புங்கோ. நாங்க எங்க பொண்ணு மாதிரி பாத்துக்கறோம்’ என்றார் ராமேஷம்.
சீதா சிரித்த முகத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு இயல்பானாள்.
ராமேஷம் புரிந்துகொண்டார்.
‘இதோ பாருங்கோ, சீதாக்கு கூட உங்க பொண்ணைப் பிடிச்சுடுத்து’ என்றார் ராமேசம்.
அந்தப் பெண் லக்ஷ்மி வந்து அனைவருக்கும் நமஸ்காரம் செய்தாள். ராமேஷத்திடம் வந்து ‘மாமா…’ என்றாள்.
ராமேஷம், ‘மாமான்னு சொல்லாதேம்மா. அப்பான்னே கூப்புடு……’ என்றார்.
நாதஸ்வர சத்தம் கேட்க ஆரம்பித்தது.
‘எல்லாம் மங்களமா முடிஞ்சுடுத்து. இனிமே இவ உங்காத்துப் பொண்ணு’ என்றார்கள்.
ஒரு மாதம் கழித்து ஏர்போர்ட்டில் மருமகளையும் மகனையும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துவிட்டு அக்கடா என்று உட்கார்ந்தார்கள் ராமேஷமும் சீதாவும்.
ஒரு வருடம் கழிந்தது.
தொலைபேசியில் கிருஷ்ணன், ‘அப்பா எங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குப்பா’ என்றான்.
‘சீதா, நமக்கு பேரன் பிறந்திருக்கானாம். இன்னும் மூணு மாசத்துலெ குழந்தையைக் கூட்டிண்டு இங்கே வராளாம்’ என்றார் ராமேஷம்.
இருவரும் ஆசையோடு காத்திருந்தனர்.
பேரனை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனும் அவன் மனைவி லக்ஷ்மியும் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தனர்.
வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கிருஷ்ணனும் லக்ஷ்மியும் பேரனும் யாருமே சாப்பிடும் நேரம் தவிர வெளியே வரவில்லை. மற்ற நேரங்களில் லக்ஷ்மியின் உறவினர்கள் நேராக வந்து கிருஷ்ணனும் லக்ஷ்மியும் இருக்கும் அறைக்குப் போய் விட்டு வெகு நேரம் கழித்துப் போகும் போது மட்டும் ‘நாங்க வரோம்’ என்று ராமேஷத்திடமும் சீதாவிடமும் சொல்லிக்கொண்டு போனார்கள்.
ஒரு நாள் பேரனைப் பார்க்கும் ஆசையில் அந்த அறைக்குள் நுழைந்தனர் சீதாவும் ராமேசமும். சீதா ஆசையுடன் குழந்தையைத் தூக்கக் கையை உயர்த்தினாள்.
உடனே லக்ஷ்மி, ‘அம்மா, தப்பா நெனைச்சுக்காதேள். நீங்க போய் கையை நன்னா வாஷ் பண்ணிண்டு, அப்புறமா குழந்தையைத் தூக்குங்கோ’ என்றாள்.
கிருஷ்ணன் முகத்தில் எந்த ஒரு பாவனையும் இல்லாமல் இருந்தான்.
சீதா, ‘சரிம்மா’ என்றபடி வெளியே போனாள்.
ரரமேஷம் தூரத்திலிருந்த படியே பேரனைக் கொஞ்சிவிட்டு வெளியே வந்தார்.
அப்பாவிடம் கிருஷ்ணன் கேட்டான். ‘அப்பா, அம்மா பாவம்பா நாமெல்லாரும் இருந்தோமே அந்த தெரு, அந்த வீடு, பக்கத்திலேயே கோயில் அதெல்லாம் அம்மாக்கு ரொம்பப் பிடிக்கும்ப்பா.. நீங்க ரெண்டு பேரும் அங்கேயே போய் இருக்கேளா……….. அம்மாக்கும் சந்தோஷமா இருக்கும்’ என்றான்.
‘ஆமா சீதா. நடுத்தெருவும் தெரு ஓரமும் உலகத்துலெ எல்லா இடத்திலேயும் இருக்கும் இல்லே…? சரி அதை விடு….. ஏன் சீதா நீ இட்லியும் மொளகாப் பொடியும் போட்டு அதுக்கு மேலே கொஞ்சம் நல்ல எண்ணையை விட்டுக் குடுப்பியே எவ்வளவு நன்னா இருக்கும் தெரியுமா…?’ என்றார் ராமேசம்.
‘எட்டு ஊருக்கு வாசனை மணக்கும்’ என்றாள் சீதா…..!!!!!!!!
நிமிர்ந்து பார்த்தார் ராமேஷம்.
மீண்டும் இட்டிலியும் மிளகாய்ப் பொடியும் நல்லெண்ணெயும் மணக்க ஆரம்பித்தது.