திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, February 2, 2009

தலைக்கனம் யாருக்கு வந்தாலும் அது நிச்சயமாய் அழிவைத் தேடித்தரும் என்பதில் சந்தேகமே இல்லை
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்னும் முதிர் சொல் எவ்வளவு உண்மையான அறிவுபூர்வமான, சொல்வழக்கு என்று யோசிக்கத் தோன்றுகிறது
என்ன ஆயிற்று திடீரென்று தத்துவமாய் உதிர்க்கிறானே இவன் என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது,என்ன செய்ய( பழைய ) திருவிளையாடல் என்னும் திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் தருமி என்னும் கதாபாத்திரத்தில் தோன்றி தனியாகப் புலம்பும் காட்சி ஒன்று வரும், அதுபோல தனியாக யோசித்துக்கொண்டே இருந்ததன் விளைவுதான் இது
நான் கூறப் போகும் விஷயத்துக்கு இவ்வளவு பீடிகை போடவேண்டியிருக்கிறது ,ஏனென்றால் பாதிக்கப் பட்ட பல நடுத்தரக் குடும்பங்களின் இன்றைய நிலையை எண்ணிப்பார்த்து வருத்தப்பட்டுதான் எழுதுகிறேன் , யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கோடுதான் இப்படி தனியாக சிந்தித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்

ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து தமிழ் எழுத வரும் என்னும் தகுதியினால் மட்டும் எழுதவில்லை, இதைப் படிப்பவர்கள் இந்தக் கட்டுரையின் நோக்கத்தை சரியாகப் புறிந்து கொள்ளவேண்டுமே,புறிந்து கொண்டு இனி வருங்காலத்திலாவது தங்களின் தவறான அணுகு முறையை மாற்றிக் கொள்ளவேண்டுமே ,அப்படி மாற்றிக் கொள்ளாவிட்டால் இன்னும் பாதிக்கப் படுவார்களே என்னும் உயரிய நோக்கத்தோடுதான் இக்கட்டுரையை எழுதுகிறேன்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என் நோக்கமல்ல,மீண்டும் இது போன்ற இழி நிலைக்கு நாம் தள்ளப்படாமல் இருக்க வேண்டுமே என்னும் நியாயமான கவலையால்தான் எழுதுகிறேன்
சரி சரி பீடிகை போதும் விஷயத்துக்கு வாய்யா என்று நீங்கள் முணுமுணுப்பதும் காதில் விழுவதால் இதோ இப்போதே விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்,

முன்பெல்லாம் பீ ஏ படித்து விட்டால் உடனே வீட்டு வாசலில், பெயரைப் போட்டு பக்கத்திலேயே பீ ஏ என்று போட்டுக் கொள்ளுவது வழக்கத்தில் இருந்தது, ஆனால் அப்போது பட்டப் படிப்பு படித்து தேறுவது என்பது மிகவும் கடினமான செயலாக கருதப்பட்டது, இன்றைய நிலை அப்படி இல்லை, அதிகம் பேர் படித்தவர்களாகவும் அதுவும் இரண்டு அல்லது மூன்று அதற்கும் மேலே பல பட்டப் படிப்புகளைப் படித்துவிட்டு வேலக்காக பல பட்டதாரிகள் அலைந்து கொண்டிருக்கும் நிலை,

ஒரு நிலையில் பார்த்தால் படித்தவர்கள் அதிகம் பேர் என்று நினைக்கையில் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், படித்துவிட்டு வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்களையும்,யுவதிகளையும் பார்க்கும் போது மனதுக்கு வருத்தமாயிருக்கிறது,சரியான வேலை வாய்ப்புகள் உருவாக்காமல் நம் யுவதிகளையும், இளைஞர்களையும் தவிக்க விட்டோம் நாம் என்று எண்ணும்போது யாரை நோவது என்றே புரியவில்லை, ஆனாலும் காலப்போக்கில் இந்த நிலையும் மாறி ஓரளவு வேலைக் கிடைக்க ஆரம்பித்தது,ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்னும் நிலை ,

நம் நாட்டில் படித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலையோ அல்லது வருமானமோ கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தனர்,குறிப்பாக நடுத்தர வர்கத்து யுவதிகளும், இளைஞர்களும்,
கணிணிப் பயன்பாடு பெருத்து ,கணிணி சார்ந்த தொழிலகங்கள் பெருகியவுடன், அந்த நிறுவனங்கள் நன்றாகப் படிக்கும் இளைஞர்களையும், யுவதிகளையும் அவர்கள் கல்லூரிக்கே வந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளித்து படித்து முடித்தவுடன் அவர்களை நல்ல வருமானமும் அளித்து வேலையும் கொடுப்பதாக வாக்களித்து தங்கள் நிறுவனத்தை போட்டியில் ஈடுபட்டு வெற்றி கொள்ள தயாராயின, அந்த நேரத்தில் என் ஐ ஐ டீ,சீஎஸ் ஐ, போன்ற கணினி நுட்பங்கள்கற்றுக்கொடுக்கும் கல்வியகங்களை ஆரம்பித்து அவர்களும் நன்றாகத்தேர்ந்து நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு,மாணவிகளுக்கு ஏற்ற நல்ல வேலையையும் , வருமானத்தையும் அளிக்கக் கூடிய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நல்ல பணியினைப் பெற்றுத் தந்தார்கள்,
இவை போன்ற நடவடிக்கைகள் நடுத்தர வர்கத்து படித்த இளைஞர்களுக்கும்,யுவதிகளுக்கும் ஒரு,வெளிச்சப் புள்ளியாக வானில் தோன்றிய அதிர்ஷ்ட நக்ஷத்திரமாக உருவாகி கணிணி நுணுக்கங்கள் கற்றவர்களுக்கு வாழ்க்கை நடைமுறையிலேயே ஒரு பெரிய மாறுதலை தந்தது,வசந்தம் வீச்த் தொடங்கியது ,நடுத்தர வர்கத்து மக்களும்,பல பெற்றோரும் சற்றே மூச்சுவிட்டு நிமிர்ந்தனர் என்றால் அது மிகையாகாது,

ஏதோ ஒரு வெளிச்சப் புள்ளி அவர்களுக்கு கிடைத்தது,அதைப் பற்றிக் கொண்டு வாழ்வின் உயர்ந்த நிலைக்கு,அதாவது மற்ற தொழில் வல்லுனர்களுக்கெல்லாம் கிடைப்பதைவிட வசதியான வாழ்க்கையும் பொருளாதாரமும், சமூக மரியாதையும் கிடைக்க ஆரம்பித்தது கணிணி நுணுக்கம் தெரிந்த யுவதிகளுக்கும், இளைஞர்களுக்கும்,
சரி ஏதோ வாழ்வில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு உதவிக் கரம், கை நீட்டி வா என்றழைத்து கைப் பிடித்து தூக்கிவிட்டு உயிரைக் காப்பாற்றியதும் அல்லாமல்அழைத்துச் சென்று ஒரு தங்கப் புதையலையே கண்பித்து ராஜ மரியாதைக்கு உரியவராக ஆக்கி விட்டது பேரதிசியம் அல்லவா, அப்படிப்பட்ட பேரதிசியம் நடக்கும் போது அந்த அதிசியத்துக்கு ஆட்பட்டவர்கள் தங்களுடைய பழைய நிலையை மனதில் கொண்டு அவர்களைவிட நலிந்தவருக்கு உதவிகள் செய்து அவர்களையும் கை தூக்கி விட்டிருந்தால் நாடே மகிழ்ச்சியாய் இருந்திருக்குமே,

மற்ற துறைகளில் பணிபுரிந்து வாழ்க்கையின் எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல், வருமானம் பற்றாமல் களைத்துப் போன மனங்களுக்கு சொந்தக்காரர்கள் கணிணித் துறைகளில் பணிபுரியும் இந்த யோகக்கார யுவதிகளையும், இளைஞர்களையும் பார்த்துப் பெருமூச்சு விட்டு,

இந்தக் கணிணித் துறை வல்லுனர்கள் தாங்கள் பொருள் அதிகமாக ஈட்டும் காரணத்தால் அநியாய விலை சொன்னாலும் தங்களுக்கு அதைப்பற்றிய கவலையில்லை ,தங்கள் வசதியே முக்கியம் என்னும் மனோபாவத்தில் அதிகமாய் விலை கொடுத்து வாங்கிக் குவித்த சொத்துக்கள் ஏராளம், இந்த நிலையை கவனித்துக்கொண்டே இருந்த பொருளீட்டும் வல்லுனர்களான இடைத்தரகர்கள் பல விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு மொத்த பணத்தைக் கொடுத்து பல ஆயிரம் ஏக்கராக்களை வளைத்துப்போட்டு அவைகளை வீடுகட்டும் நிலமாக,பிரித்து அநியாய விலைக்கு இந்தக் கணிணித்துறை வல்லுனர்களின் பலமாத வருமானத்தை மிக எளிதாக அவர்கள் கையகப்படுத்திக்கொண்டனர் என்பது உண்மை, இந்த நிலையால் ஒரு பக்கம் உண்மையான சொந்தக் காரர்களாகிய விவசாயிகள், நில,வீட்டு உரிமையாளர்கள் மறு பக்கம் கணிணித் துறை வல்லுனர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி கொள்ளையடித்தது இடைத்தரகர்களே என்றாலும் பழி என்னவோ கணிணித்துறை வல்லுனர்கள் மீதுதான் விழுந்தது,

பல வீட்டு உரிமையாளர்களிடமிருந்துவருங்காலத்தில் பொருளாதார நிலைமைகள் எப்படி மாறுமோ என்கிற முன் யோசனையின்றி இவர்கள் செய்த இச்செயலால், கட்டிடத் துறையிலிருந்து அனைத்து துறைகளிலும் இவர்களால்தான் நிலத்தின் விலை, வீட்டு வாடகை , அடுக்குமாடிக் கட்டிடங்களின் விலை, மற்ற அத்யாவசியப் பொருட்களின் விலை அனைத்து விலையேறிவிட்டது, இந்த கணினித் துறையில் வேலை செய்வோர்தான் மொத்த விலையேற்றத்துக்கும் காரணம் என்னும் மனோபாவத்தை அனைவருக்கும் ஏற்படுத்தும் அளவுக்கு இவர்களது நடவடிக்கைகள் ப்ரபலப்படுத்தப் பட்டது,
இவற்றையெல்லாம் விட கணிணியைக் கற்றுக்கொண்டு கணிணித் துறையில் வேலை கிடைத்தவர்களில் பெரும்பாலோர் தங்களை அந்தத் துறையில் படிக்க வைத்த, தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயரவேண்டும் என்பதற்காக பலவிதமான சோதனைகளை எதிர்கொண்டு படிக்க வைத்த பெற்றோர்களை அவர்கள் ஏதோ படிக்காத பாமரர்களைப் போல, கணிணியைக் கற்றுக்கொண்ட ஒரே காரணத்தால் தாங்கள் பெரிய அறிவு ஜீவிகளாகி விட்டதைப் போன்ற ஒரு மனோ பாவத்தில் மிகவும் சுயநலமாக சிந்திக்கத் தொடங்கினர் என்றால் அது மிகையல்ல

அதே காரணத்தால் பெற்றோரையே மதிக்காத இவர்கள் எல்லாமே தங்களுக்குத் தெரியும், தங்களுக்கு தெரியாதது உலகில் ஒன்றுமே இல்லை,அப்படியே ஏதாவது தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டால் இருக்கவே இருக்கிறது இணையம், இணையத்தில் சென்று பார்த்தால் எல்லா விஷயங்களுக்கும் தீர்வு கிடைக்கும், ஆதலால் இனி பெரியவர்கள், பெற்றவர்கள் யாருடைய தயவும் இன்றி வாழ்ந்து விட முடியும் என்று நினைத்துக்கொண்டு யாரையுமே மதிக்காத தங்கள் நலமே பெரியதென்று எண்ணும் சுயநலத்துக்கு அடிமையாகிப் போயினர், கணிணித் துறையில் வேலை செய்து அதிகப் பணம் ஈட்டி ஆடம்பர வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த இவர்களுக்கு அங்குதான் ஆரம்பித்தது இறங்குமுகம்,

அந்த இறங்குமுகம் இவர்களை பல விதங்களில் பாதித்தது

1.இவர்கள் முதலீடு செய்து வைத்திருந்த பல கணிணி சம்பந்தமான தொழிலகங்களின் பங்குகள் சந்தையில் விலை குறைய ஆரம்பித்தன
2.அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் தங்கள் சக்தியை உணராது இவர்கள் பல கோடி ரூபாய்களை கடனாக வாங்கி மாளிகைகள் வாங்கினர் , லெமன் போன்ற பல பெரிய முதலீட்டாளர்களின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை முடங்கியது, அதனால் அமெரிக்கா போன்ற பெரிய நகரங்களில் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் இவர்கள் வாங்கியிருந்த மாளிகைகளின் விலை வெகுவாகக் குறைந்து இவர்கள் வாங்கிய விலையை விட பன்மடங்கு சரிந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது, வங்கியில் கடன்பட்டு 20 கோடிகளுக்கு வாங்கிய வீடு இரண்டு கோடி அளவுக்குக் கூட மதிப்பில்லாமல் போனது,ஆனால் இவர்கள் வாங்கிய 20 கோடிக்கு பதிலாக 40 கோடிகள் வங்கிக்கு செலுத்த வேண்டி வந்தது, குதிரை கீழேயும் தள்ளி மேலே மண்ணையும் அள்ளிப் போட்டாற்போல இவர்கள் மூச்சுத் திணரினர்,பலர் கடன் சுமை தாங்காமல் அடிமாட்டு விலைக்கு வீட்டை விற்றும், தங்களின் கையிருப்பையும் போட்டு வங்கிக்கு கட்டவேண்டிய பணத்தில் கால் பங்கைக் கட்டிவிட்டு கையிலோர் காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை நாலணா கேட்டால் நானென்ன செய்வேன் என்று நாணித் தலைகுனிந்து உட்கார்ந்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது,

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார் பெரியோர் அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க உத்யோகம் என்று முன்பெல்லாம் பெரியவர்கள் அரசாங்க வேலையைக் குறித்து பெருமையாகப் பேசுவர் ,அது உண்மைதானோ என்று தோன்றுகிறது

பெரியோர் சொல் வேதம் என்று வாழவேண்டும், அவர்கள் சொல்லுவதில் அனுபவமும் அறிவுரைகளும் இருக்கும் என்பதை உணராமல் போனதனால் வந்த விளைவிது, பெரியோர்களை மதிக்கவேண்டாம் ,ஆனால் அவர்கள் சொல்லும் நன்மையான கருத்துக்களை மட்டுமாவது எடுத்துக் கொள்ளலாமே, காலங்கள் எவ்வளவு நவீன யுகமாக மாறினாலும் நம்முடைய அடிப்படைநாகரீகத்தின் மேல்தான், நற்குணங்களின் மேல்தான் நம்முடைய வாழ்க்கை நெறிமுறைகளைளை அமைத்துக்கொள்ளவேண்டும் ,அப்போதுதான் நம் வாழ்க்கை தடம் புரளாமல் இருக்கும் ,

சமீபத்தில் பெங்களூரில் நடந்த சம்பவம் மனதை மிகவும் பாதித்தது,ஏற்கெனெவே அவர்களின் கலாச்சார சீரழிவை நானே நேரிடையாக பார்த்தவன் என்றாலும், அதிர்ந்து போனேன்
பெண்கள் ஆண்களுக்கு சமமாக என்னும் சொற்றொடரை உபயோகிக்கும் போதே நான் ஏதோ ஆணாதிக்கம் கொண்டவன் என்று தோன்றினாலும், ஆண்களும் பெண்களும் கலாச்சார,நாகரீக கோட்பாடுகளின் அளவை மீறி செயல்படும் போதுதான் இத்தகைய விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன,ஆண்களும் நாணயமாக நேர்மையாக நடக்கவேண்டும், பெண்களும் அதேபோன்று நட்க்க வேண்டும், நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் என்று யுக்க்கவிஞன் பாரதி கூறிய கூற்றை தவறாகப் புறிந்து கொண்டு, பெண்களும் தங்களை ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக காட்டிக்கொள்ளவேண்டும் என்னும் மிகைப்படுத்தப்பட்ட உணர்வினாலேயேஇப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களோ என்னும் சந்தேகம் வருகிறது....

எங்கே ஒருவன் அதிகமாக அர்ப்பாட்டம் செய்கிறானோ,அதிகமாக அலட்டிக்கொள்கிறானோ அங்கே அவன் பயந்து போயிருக்கிறான், அவனுடைய பயத்தை போக்கிக் கொள்ளவே அப்படி நடந்து கொள்கிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்,அது போல பெண்கள் இயல்பாக அவர்களுக்குரிய தர்மத்தை கடைப்பிடித்தாலே போதுமானது, நாம் மதிக்கப்படுவதில்லை நாமும் சம உரிமை வேண்டும் ,,என்று எண்ணி, பெண் சுதந்திரம் என்னும் பேரில் அதிகப்படியான வேண்டாத நடத்தைகளைக் கைக்கொள்ளும்போது இயல்பாகவே மக்கள் மனதில்வெறுப்பை ஏற்படுத்தி அவமானத்தை சந்திக்கிறார்கள்,

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன், அவர் அமெரிக்காவில் இருக்கும் மகனுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைஅதாவது அவருடைய அமெரிக்க பேரனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார்,நான் சென்றவுடன் என்னை வரவேற்று உட்காரவைத்துவிட்டு அவர் மகனிடமும்,மருமகளிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்,
என் நண்பர் மிகப் பெருமையாக என் மகன் அமெரிக்கா சென்று கணிணித் துறையில் வேலை செய்தாலும் நம்முடைய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதாகவும்,மருமகள் தன்னை பெற்ற தந்தைபோல் நடத்துவதாகவும் சொன்னார் ,மகிழ்ச்சியாக இருந்தது,
நான் அந்த அமெரிக்க கணிணித் துறை பொறியாளரிடம் பேசினேன்,நான் கேட்ட கேள்விகளுக்கு மரியாதையாக விளக்கங்கள் கூறினார்,அதற்கு இடையே அவர் ஐய்யா நான் என் தந்தை சொல்லை தட்டியதே இல்லை, இன்றும் நான் அமெரிக்காவில் இருந்தாலும் எல்லா திட்டங்களையும் தந்தையிடம் ஆலோசனை செய்தே செயலாற்றுகிறேன், இவருடைய அனுபவம் எங்களை வழிப்படுத்துகிறது,இவரும் நான் அனுப்பும் பணத்தில் நிறைய சேமித்து வைத்திருக்கிறார்,நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிரோம்,
இப்படி பெரியவர்களின் அறிவுறுத்தலை மதிக்காமல் அகலக்கால் வைத்தவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் ,அதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம் என்றார்,
எனக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னுடைய இன்னொரு நண்பர் இதே போல் அமெரிக்காவில் வேலை செய்யும் மகனும்,அவனுடைய மனைவியாகிய என் நண்பரின் மருமகளும் அப்பா உங்களுக்கு எதுவும் தெரியாது, நிறையப் படிங்கப்பா, எந்த சந்தேகம் இருந்தாலும் பல வலைத்தளங்கள் இருக்கின்றன அவைகளில் சென்று இன்று பொருளாதாரம் எப்படி இருக்கிறது, குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும், எல்லாம் இருக்கிறது,அவற்றையெல்லாம் படிக்காமல் எல்லாம் தெரிந்த மாதிரி பழைய செய்திகளையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் என்று அவமானப் படுத்துவது போல் பேசியதை சொல்லி வருத்தப்பட்ட நண்பர் நினைவுக்கு வந்தார்,

குழந்தை வளர்ப்பிலிருந்து குடித்தனம் எப்படி செய்யவேண்டும் என்பது வரையில் இணையத்தில் வலைத்தளங்களில் இருந்தாலும், அவைகளெல்லாம் உபயோகமாக இருக்கிறதா வாழ்க்கைக்கு, நடைமுறைக்கு..என்கிற கேள்வி மனதில் எழுந்தது.இல்லை நடைமுறையில் அவைகளில் நூற்றுக்கு தொண்ணூரு சதவிகிதம் உபயோகப் படுவதில்லை என்பதே உண்மை
குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு உணவு ஊட்டக் கூடாது, குழந்தைக்கு இயற்கை வைத்தியம் செய்யக் கூடாது,என்றெல்லாம் இணையதளங்களில் குழந்தை வளர்ப்பைப் பற்றி அளித்திருக்கும் செய்திகளை அப்படியே நம்பி குழந்தையை வளர்த்த ,
தாத்தா பாட்டிகள் கூட தங்கள் குழந்தைகளை தொட அருகதை இல்லாதவர்கள்,அவர்களுக்கு ஒன்றும் தெரியாது ,பழைய பஞ்சாங்கங்கள் என்று நினைத்துக்கொண்டு பெற்றவர்களின் பாசத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் அவர்களால் வளர்க்கப்பட்டு ஆளானவர்கள்தாம் அவர்கள் என்பதை மறந்து அவர்களை வார்த்தைகளால் புண்படுத்தி தங்கள் குழந்தையை இணைய தளங்களின் வளர்ப்பு முறையில் வளர்த்த தம்பதிகள் அக்குழந்தைக்கு ஒரு சாதாரண காய்ச்சல் வந்தாலும் கூட பதறிப்போய் அமெரிக்க மருத்துவர்களின் பார்வை நேரத்துக்காக இரு மாதங்கள்ஆனாலும் காத்திருந்து, காத்திருக்கும் நேரத்தில் இன்னும் நோயை அதிகப்படுத்தி பிறகு அவர்களிடம் வைத்தியம் செய்தும் சரியாகாமல் அவதிப்படும் தம்பதிகள்,

இவைகளை உற்று நோக்கும் போது மற்ற துறைகளில் வேலை செய்வோர் அயல்நாடுகளுக்கு சென்று பொருளீட்டினாலும் அவர்களிலும் பெற்றவர்களை, பெரியோர்களை மதிக்காமல் இருப்பவர்களுண்டு என்றாலும் இந்தக் கணினித் துறையில் இருப்பவர்களைப் போல் அதிக அளவு இல்லையென்றே தோன்றுகிறது, ஆக மொத்தம் நல்லவைகளை மகன் சொன்னலும், பெற்றவர்கள் சொன்னாலும் மதிக்க வேண்டும்,கட்டுப் படவேண்டும் என்னும் நல்லுணர்வு மறைந்து போய்விட்டது அதுதான் இப்போது மொத்த சீரழிவுக்கும் காரணம் என்று தோன்றுகிறது

தற்காலத்தில் அதிகப் பணம் ஈட்டும் தொழிலில் உள்ள ஆணோ,பெண்ணோ அனைவருக்குமே சுயநலம் அதிகமாகி விட்டது என்பதுதான் உண்மை, இந்த சுயநலம் எல்லோரையுமே அதல பாதாளத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது,எப்படியென்றால் தீவிரவாதம் எப்படி இருமுனைகளும் கொண்ட கூர்மையான கத்தியோ அதே போல் சுயநலமும் பலமுனைக்கூர் கொண்ட ஆயுதம்தான்,இந்த ஆயுதம் யாரிடம் இருக்கிறதோ அது, தான் இருப்பவர்களையும் , மற்றவர்களையும் அழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
இவையெல்லாவற்றையும் தாண்டி இந்த சுயநலம் என்னும் வியாதி எப்படி இளைஞர்களையும் யுவதிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது எப்படி என்று பார்க்கலாமா..?

பெற்றவர்களை, மற்றவர்களை மதிக்காத சுயநலத்தை ஆயுதமாக ஏந்திக்கொண்ட தற்கால அதிகப் பணம் ஈட்டும் இளைஞர்களும்,யுவதிகளும் இன்னும் சற்று முன்னேற்றம் கண்டு
அந்த சுயநலமென்னும் ஆயுதத்தை கணவன் மனைவிகளுக்குள்ளேயே உபயோகப் படுத்த ஆரம்பித்து விட்டனர் அதன் விளைவே இன்றைய விவாகரத்துக்கள்,பிரிந்து வாழ்தல், சேர்ந்து வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக,நிம்மதியாக இராமல் தவிக்கும் அவல வாழ்க்கை
அதிகம் பொருளீட்டும் தம்பதிகள்தான் விவாகரத்துக்கள் அதிகமாக செய்கின்றனர் என்று இன்றைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன காரணம் தான் அதிகமாக சம்பாதிக்கிறோம் என்னும் மமதையும்,எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் தான்தோன்றித்தனமாக அலையும் மனப்பான்மையுமே காரணங்கள் என்றால் அது மிகையாகாது

ஆகவே நம் வாழ்வின் நடைமுறையிலேயே அதிக பாதிப்பை உள்ளாக்குவது இந்த மமதையே என்றால் அதில் என்ன தவறு
ஆணோ பெண்ணோ அனைவரும் சமமே, வாழ்க்கை வாழ்வதற்கே,
நாம் உழைப்பது, பொருளீட்டுவது, அனைத்துமே நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கே, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து,அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்,
என்பதைப் புரிந்து கொண்டால் ,சற்றே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இதே வாழ்க்கை சொர்கமாகும்

அன்புடன்
தமிழ்த்தேனீ



” மனிதம் “
பல பழுத்த ஆத்திகர்களின் வாரிசுகள் நாத்திகர்களாகவும் பகுத்தறிவு பேசும் பல காய்த்த நாத்திகர்களின் வாரிசுகள் ஆத்திகர்களாகவும் இருக்கின்றனரே, கண்கூடாக பல இடங்களில் பார்த்திருக்கிறேன், இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் வளர்க்கும் முறை சரியில்லையா,அல்லது எப்படி வளர்த்தாலும் அவர்கள் போக்கிலே செல்லுகின்ற இந்தக் காலத்து இளைஞர்களின் நடைமுறையே அப்படித்தான் இருக்கிறதா ,அப்படியானால் இந்தச் செய்தி இறைவன் இருக்கிறான் என்று விளக்குகிறதா, அல்லது இறைவன் இல்லை என்று விளக்குகிறதா?
இறைவனை உண்டு என ஒப்புக்கொள்ளும் ஆத்திக வாதியை விட இறைவனை இல்லை என்று சொல்லும் நாத்தீகவாதியை சிறந்த ஆத்திகர் என்று நான் சொல்லுவேன்,
எதையும் குறிப்பிடாமல் இல்லை என்று சொன்னால் யாருக்கும் அவர் எதை இல்லையென்று சொல்லுகிறார் என்றே புரியாது அதனால் இறைவன், இறைவன், என்று சொல்லிவிட்டுத் தானே இல்லை என்று சொல்ல முடியும், தினம் தினம் இறைவனை நினைத்து,நினைத்து பின்தானே மறுக்கிறார்கள், ஆகவே நாத்திகர்கள் என் கண்ணுக்கு ஆத்திகர்களாக தெரிகின்றனர்,
ஆனால் ஆத்திகர்கள் வாதிடும்போது இறைவனை நினைக்கிறார்களே தவிர மற்ற நேரங்களில் நினைப்பது மிகவும் குறைவு, ஆனால் நாத்திகருக்கு சதா சர்வ காலமும் இறைவனை இல்லையென்று சொல்லுவதே வேலையல்லவா அதனால் இறைவன் இல்லையென்று சொல்வதற்காகவேனும், இறைவனை அதிகம் நினைக்கிறார் நாத்திகவாதி,

ஆத்திகவாதிகள் நம்புவது போல, இறைவன் இருக்கிறான் என்று நம்புபவர்களால் மனிதத்தை மதிக்காமல் இருக்க முடியுமா? அப்படி மனிதத்தை மறக்காமல் மனிதர்கள் இருந்திருந்தால் இன்று தீவிரவாதம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்குமா
சாம, தான, பேத, தண்டம், என்று ஒரு வரைமுறையில் வாழ்ந்திருந்த நம் மக்கள், மனிதர்கள், உயிராயுதம் ஏந்தும் அளவுக்கு ஒரு மோசமான நிலமைக்கு தள்ளப் பட்டிருப்பார்களா,மக்களை மீண்டும் மாக்களாக ஆக்கியது யார், மனிதாபிமானத்தை மறந்த பலரின் சுயநலத்தால் அல்லவோ இன்று இப்படிப்பட்ட நிலையை சந்தித்திருக்கிறோம்
மக்களை மாக்களாக மாற்றும் சுயநலத்தை அழித்து, உலகம் முழுவதும் நம் மக்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்திருந்தால் இப்படிப்பட்ட நிலைமை வந்திருக்குமா,
பல நேரங்களில் துயரம் நம்மை செயலிழக்க வைக்கும், சில நேரங்களில் சிந்திக்க வைக்கும்,அப்படி எழுந்த சிந்தனையில் விளைந்த ஒரு சுவையான கற்பனைக் காட்சி, நாடகம்,கதைகள் எழுதுபவன் அல்லவா நான்,அந்த அனுபவம் கைகொடுத்தது
சொர்கத்தில் ஒரு காட்சி:-
ஒரு பெரியவர் பழுத்த ஆன்மீகவாதி தன் வாழ்நாளில் அவர் இறைவனை மறந்ததே இல்லை, அது மட்டுமல்ல தினமும் பக்தியுடன் இறைவன் நாமங்களைச் சொல்லி பூஜைகள் பல செய்தவர்,மனித நேயத்துடன் நடந்து கொண்டவர்,மனிதம் உணர்ந்தவர், பதவிக்கோ, செல்வத்துக்கோ அளித்த மரியாதையை விட மனிதருக்கு அதிகமாக மதிப்பளித்தவர்,தன்னுள் உறைகின்ற இறைவன் அனைத்து உயிர்களிலும் உறைகிறான் என்று உணர்ந்தவர்,அதனால் மனித நேயத்தை மதித்தவர், மனிதருள் உதித்தவர், பக்தி,அன்பு நேர்மைபோன்ற நற்குணங்களை கடைப்பிடித்தவர்,மனித நேயத்தை விதைத்தவர்

மற்றொரு பெரியவர் பழுத்த நாத்திக வாதி, பகுத்தறிவு வளர்க்க நாத்திக வாதம் செய்தவர், ஒரு நாளும் இறைவனை மறந்தும் தொழாதவர்,இறைவன் இல்லை என்றே போதனைகள் செய்தவர், ஆனால் மனிதநேயம் மிக்கவர், செல்வமும் செல்வாக்கும் இருந்தால்தான் யாவரும் மதிப்பர் என்னும் உண்மையை அறிந்தவர்,ஆனாலும் அனைத்துக்கும் மேலாக மனிதர்களை நேசித்தவர், மனித நேயத்தை யோசித்தவர்,மக்களிடம் பகுத்தறிவையும் மனித நேயத்தையும் விதைத்தவர்
இரு பெரியவர்களும் சொர்கத்தில் சந்தித்தனர்,இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நலமா என்று தமிழிலே விசாரித்துக் கொள்கின்றனர்,சொர்கத்திலும் தமிழ், தமிழே சொர்கமல்லவா சொர்கத்துக்கே சென்றாலும் மனிதர் மனிதர்தாமே! சந்தித்த மறு கணமே பொதுவாக இருவருக்குமே ஒரு சந்தேகம்,
அந்த ஆத்திக வாதியின் மனதிலே ஒரு எண்ணம் என்ன இது நாம் இறைவனை தொழுது பக்தி செய்து சொர்கத்துக்கு வந்தோம், பகுத்தறிவு பேசி, இறைவனே இல்லையென்று வாதிட்டு, சொர்கம் நரகம் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று நாத்திகவாதம் பரப்பிய இவரும் சொர்கத்துக்கு வந்திருக்கிறாரே என்று,
அதே சந்தேகம் அந்த நாத்திக வாதிக்கும் வந்தது, இறைவனே இல்லை,சொர்கம் நரகம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை ,மனிதம் தான் முக்கியம் என்று பரப்பிய தான் எப்படி சொர்கத்துக்கு வந்தோம் என்று, தானும் சொர்கத்துக்குதான் வந்திருப்பது உண்மைதானா என்று
அப்போது அந்த வழியாக சென்ற நாரதர், இவர்கள் மனதில் இருந்த சந்தேகத்தை உணர்ந்து சந்தேகத்தை தீர்த்து வைத்தார்,
எப்படி என்று பார்ப்போமா?

அந்த நாத்திகவாதி சிறு வயது முதற்கொண்டே , நாட்டைப்பற்றியும் நாட்டில் வாழும் மக்களைப்பற்றியும் முறையாக சிந்திக்கத் துவங்கினார்,மனிதர்களிடையே வேற்றுமைகளைக் களைய வேண்டுமென்றால் பகுத்தறிவை விதைக்க வேண்டும், மனிதத்தை படிக்க வேண்டும், என்னும் எண்ணம் கொண்டதனால் சரித்திரங்கள் படிக்க ஆரம்பித்தார், அதனால் இறைவனை இல்லையென்றார் மனிதமே பெரிதென்று பேசினார்,
சிறு வயதில் அவரைக் கவர்ந்த சரித்திர நாயகன் யார் தெரியுமா சாம்ராட் அசோகன், அதனால் எப்போதும் அசோகரைப்பற்றி படித்துக்கொண்டே இருந்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்,
“ நாட்டு மக்களின்மேல் பாசம் வைத்து நாட்டை நல்ல வளமாக்க ஆறுகள் குளங்கள் ஏற்படுத்தி, நல்ல சாலைகள் ஏற்படுத்தி சாலையின் இரு மருங்கிலும் மரங்கள் நட்டு, மக்களை எவ்வித துயரமும் இல்லாது வைத்திருந்தார் அசோகர், அப்போது அவருக்கு அனைத்து நாட்டு மக்களையும் தன் நாட்டு மக்கள்போல் சுகமாக வைக்கும் ஆசை வந்தது ,ஆசை யாரை விட்டது, அனைத்து நாடுகளின்மேலும் படையெடுத்து வெற்றி கண்டு, அசோக சகரவர்த்தி என்று பெயர் எடுத்தார் ,ஆனால் ஒரு போரின் முடிவில் யுத்த பூமியிலேயே ஒரு புத்தர் அஹிம்சையைப் பற்றியும் உயிர்கொல்லாமை பற்றியும், பற்றில்லாத வாழ்க்கையே நன்மை பயக்கும் என்பது பற்றியும் உபதேசம் செய்து அசோகனின் மனதைப் பற்றினார்,அதனால் அசோகர் பௌத்தம் பற்றினார், என்று அசோகரைப் பற்றியே நிறைய படித்தார் பேசினார், சிந்தனை செய்தார், அந்த பகுத்தறிவு வாதியான நாத்திகர்
அதனால்தான் சொர்கம் வந்தார் என்று கூறினார் நாரதர்
என்னடா இது அசோகரைப்பற்றி படித்தனால் சொர்கம் வந்தாரா நாத்திகர், அது எவ்வாறு என்று அந்த இரு மானிடர்களும் வினவ அதற்கு நாரதர்
அசோகர் மனிதம் போற்றினார்,
தெய்வம் மனுஷ்ய ரூபேணா என்று உங்களுக்குத் தெரியாதா ,மனிதனை மதித்தாலே தெய்வத்தை மதிப்பது போலதானே, அதனால்தானே இறைவனும் தன்னை விட தன் அடியவர்களை மதிப்பவர்களை மதிக்கிறான், சொர்கம் அளிக்கிறான், என்றார்
அது மட்டுமல்ல அசோக என்றாலே சோகமில்லாத என்று பொருள், அதனால்தான் இறைவனின் தர்ம பத்னியாகிய மஹாலக்‌ஷ்மிக்கு அசோக என்று பெயர் , தினமும் இந்த நாத்திகவாதி அசோக அசோக என்று அடிக்கடி சொல்லி தன்னையறியாமலே மஹாலக்‌ஷ்மியின் அன்புக்கும் கருணைக்கும் பாத்திரனாகிவிட்டார், பிறகென்ன அன்னை மஹாலக்‌ஷ்மி இறைவனிடம் இந்த நாத்திகனுக்காக சொர்கத்தை யாசித்தாள் ஏனென்றால் இந்த நாத்திகன், மனிதம் போற்றியதாலே மஹா லக்‌ஷ்மியை யோசித்தான், நேசித்தான், பூசித்தான் அசோகா என்கிற பெயரிலே, அதனால்தான் அந்த நாத்திகனுக்கும் சொர்கம் கிடைத்தது என்றார்

ஆகவே மானுடர்களே மனிதம் காப்போம்,அதுதான் சொர்கம் இறைவனை மகிழ்ச்சிப்படுத்த அதை விட சிறந்த வழி, சொர்கத்தை அடைய அதை விட சிறந்த வழி வேறொன்றுமில்லை
நாமும் அசோகர் போலவே சாலைகள் போடுவோம்,மரங்கள் நடுவோம், நீர் நிலைகள் வளப்படுத்துவோம்,உலகம் காப்போம், மனிதம் வளர்ப்போம் அசோகா, அசோகா, என்று அடிக்கடி கூறி அவரைப் பின்பற்றுவோம் சொர்கம் நிச்சயம்
அன்புடன்
தமிழ்த்தேனீ




http://thamizthenee.blogspot.com, http;//peopleofindia.net, rkc1947@gmail.com





Tuesday, January 13, 2009

பரிதி இளம் உழுதி


” சூரிய உழவன் அல்லது பரிதி இளம் உழுதி ”


திரு வள்ளுவன் மனதுழுதான்,
மறுவள்ளுவன் வயலுழுகிறான்
உழுகின்ற நாளெல்லாம் திருநாளே
பரிதியாய் பரிவாய் அவனெழுகின்ற திருநாளே
அவன் வாராத நாளென்றும் வெறு நாளே

கதிரவன் தானே எழுகிறான் கதிர்களால் உழுகிறான் ,
ஏழு வண்ணக் குதிரைகள் தன் தேரில் பூட்டியே
திண்ணமாக வருகிறான் வாழ்வின் இயலுழுகிறான்
தரணியிலே தர்மத்தை பகிர்ந்தளிக்க வருகிறான்
சுற்றுப்பாதை தன்னிலே கட்டுப்பட்டு வருகிறான்
தர்மமென்னும் விதியையே நமக்களிக்க வருகிறான்

பட்டுக் கதிர் சுட்டியே தொட்டு நம்மை அணைக்கவே
தொடர்ந்து மிளிர வைக்கவே,கெட்டவைகள் விலக்கியே
வாழ்வை ஒளிர வைக்கிறான், பட்டு தூய்மையாக்கியே
மனதைக் குளிர வைக்கிறான்,கொட்டும் ஒளி அருளியே
சுழன்று கொண்டே வருகிறான்

தொழுதாலும் தவிர்த்தாலும் பொதுவான அருள்கிறான்
மனிதத்தின் வேருக்கு வலுவாக மிளிர்கிறான்
மண்ணை வளம் செய்ய தரமான வருகிறான்
முப்போக விளைச்சலுக்கு உரக் கதிராக வருகிறான்
தீமை கண்டு பொங்கியே தீமைகளை அழிக்கவே
போகி போகி போகி என்று தீயிட்டுக் கொளுத்துவோம்
உலகுக்கே பொதுவான தர்மத்தின் சக்கரம்
தாயாக நம்மையே தாங்கின்ற நற்கரம் நீட்டுகின்ற
நற்கரம் அருளுகின்ற பொற்கரத்தான் தாளை வணங்குவோம்

அவனளித்த அரிசியும், அருமையான வெல்லமும்,
விளைந்து வந்த கரும்பையும்,வாழவைத்த வாழையும்
அவனளித்த நெருப்பையே அடுப்பில் அங்கு மூட்டியே
அதன் மீது இருத்தியே ஆக்கும் பொங்கல் பொங்கவே
பாலும் ஊற்றி காய்ந்ததும் பொங்கிவரும் வண்ணமாய்
பொங்குகின்ற போதிலே பொங்கலோ பொங்கலென்று
ஓங்கும் குரல் எழுப்பியே ஒளியவனை வணங்குவோம்
பொங்குகின்ற நம் மனதை பொங்கலிட்டு பதப்படுத்தி
தங்குகின்ற மனிதம் தனை தாங்குகின்ற சக்கரம்

நன்மை கொண்டு களிக்கவே, தீமை கண்டு பொங்குவோம்
தீமைகளை கழித்துவிட்டு நன்மைதனை வளர்க்கவே
வாழையடி வாழையாய் வந்ததொரு நன்னாளில்
ஆகாத சோர்வகற்றி ஆன்மாவை வளமாக்கி
புத்தம் புதுமலராய் நித்தம் நித்தம் நம் மனமும்,
மலரும் வண்ணம் ஆரியமோ திராவிடமோ
சாதி மத பேதமின்றி வைய்யமெல்லாம் ஒளிகூட்ட
தவறாமல் மலர்ந்து வரும் தர்மசக்கரம்,

தைமாதத் திருநாளில் விடியும் வேளை
நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே,
நல் வேளயது தனிலே முத்தான அரிசியுடன்
இனிப்பான வெல்லமதை,அளவோடு நாம் சேர்த்து,
காமதேனு மடிகறந்த அமுதமென்னும் பால் சேர்த்து,
பொங்கி வரும் வேளையிலே,பொங்கலோ பொங்கல்
என்றே நம் வாழ்வும் இன்பமுற இயற்கையின்
தாள் பணிந்தே இறைவன் நாமமது நாம் சொல்லி


நல்லறமும் தருமங்களும்,பொங்கலோ பொங்கலென்று
மனமொத்து உரத்துச் சொல்லி,வையகத்து மாந்தரெல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே,பொய்யகற்றி மெய்யுணர்ந்து
பொங்கல் திருநாளில் மங்கலமாய் நாம் களிப்போம்
நல்லேர் உழவர்களும், சொல்லேர் உழவர்களும்
மனமென்னும் பூமிதனை உழுது விளைத்தல் போல்
ப்ரபஞ்ஜத்தை தினம் உழுது,ஞான ஒளி பரப்பும்
இளம்பரிதி இறைவனுக்கே கதிரவனின் காலடியில்
நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு நாளாய் எண்ணி
நல்வாழ்வு தனை நாடி நன்மைகளை பொங்கிடுவோம்

ஆர்.கிருஷ்ணமாச்சாரி என்கிற
கவிஞர் தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com , http://thamizthenee.blogspot.com , http://peopleofindia.net

முப்பது மாலை

ஆண்டாள் ஆழ்வார் இயற்றிய முப்பது பாசுரங்களையும் நாம் எல்லோருமே நம்சிற்றறிவுக்கு எட்டின வரையில் அனுபவித்து வருகிறோம்,

திருப்பாவையின் அதே முப்பது பாசுரங்களை ஸம்ஸ்க்ருதம்,ஹிந்தி,ஆங்கிலம்,இன்னும் பல மொழிகளைக் கற்றவரும், டாக்டர் பட்டம் பெற்றவரும்,ஜனாதிபதி பரிசும் பெற்றவரும் ,ஸ்ரீஸந்நிதி ஸிஷ்யர் திருகோஷ்டியூர் ஸ்வாமி
திருவடியில் காலஷேபங்கள் செய்தவரும்,விஷ்ணுசஹஸ்ரநாம பாஷ்யம் எழுதியவரும்,ஸம்ஸ்க்ருதத்திலும்,ஹிந்தியிலும்,
ஆங்கிலத்திலும்,பல புத்தகங்கள் எழுதியவரும், திருப்பாவை மாலை என்னும்நூலையும் எழுதியவருமான புதுக்கோட்டை ஸ்ரீ உ.வே ஏ ஸ்ரீனிவாசராகவாச்சாரியார் ஸ்வாமி(வைகுண்டவாசி)
என்னும் பெருந்தைகையார்,ஸ்ரீ ந்ரும்மப்ரியா என்னும் புத்தகத்தில் அவருக்கே உண்டான வித்வத் பாணியில் அனுபவித்திருக்கிறார் அதை படித்தவுடன் அனைவருக்கும் தெரியப்படுத்தலாமே என்னும் நோக்கில் அவைகளின் சிறு தொகுப்பை இங்கு இடுகிறேன்
“சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே என்று ஆண்டாள் அருளியதற்கு காரணமே”
ஆண்டாள் திருப்பாவை முப்பதையும் சொன்னது மாத்திரமே தான் என்றாளாம்,அதாவது கவிமார்க்க ரீதியில் கவிகள் தாம் செய்யும் கவனங்கள் தங்களுக்கும் தெரியாமலே உள்ளிருந்து பரவசமாய் வெளிவருவது என்பது கவிகளின் அனுபவ விசேஷம்,
அதுவுமன்றி பதங்களை அடுக்கி அடுக்கி தன்னைப் பெற்ற
பெரியாழ்வாரின் மகிமையை அணிபுதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் என்று கொண்டாடி அப்பேற்பட்டவரின் கோதை என்ற பதத்துக்கும், உண்டாகியிருக்கிற வாக்விபவத்தையும் குறிப்பிட்டவளாய், தான் சொன்ன
என்றதால் அத்தைகைய பெரியாழ்வாரின் புத்ரி ஆனதினாலேயே தனக்கு அப்படிச் சொல்லும் சக்தி வாய்த்தது என்பதையும் நிர்த்தேசிக்கிறாள் என்று அருளும் இவர்


பாசுரம் ------------------- மாலையின் பெயர்


1.நாராயணனே நமக்கே– பாரோர் புகழ்மாலை
2.வையத்து வாழ்வீர்காள்- உஜ்ஜீவன மாலை
3.ஓங்கி உலகளந்த- நீங்காத நிறைந்த செல்வ மாலை
4.ஆழிமழைக்கண்ணா- மார்கழி நீராட்ட மாலை
5.மாயனை மன்னு வட- பாபநாச மாலை
6.புள்ளும் சிலம்பின காண்- உள்ளங்குளிர் மாலை
7.கீசுகீ சென்றெங்கும்- தேஜோ மாலை
8.கீழ்வானம் வெள்ளென்- ஆராய்ச்சியருள் மாலை
9.தூமணி மாடத்து- ஸஹஸ்ர நாம மாலை
10.நோற்றுச் சுவர்கம்- தேற்ற மாலை
11.கற்றுக் கறவை- பொருள் மாலை
12.கனைத்திளங் கற்றெருமை- மான மாலை
13.புள்ளின் வாய் கீண்டானை- கள்ளம் தவிர் மாலை
14.உங்கள் புழக்கடை- பங்கயக் கண்ணான் மாலை
15.எல்லே இளங்கிளியே- மாயன் மாலை
16.நாயகனாய் நின்ற- நேய மாலை
17.அம்பரமே தண்ணீரே- உறங்கா மாலை
18.உந்து மதகளிற்றன்- திறப்பு மாலை
19.குத்து விளக்கெரிய- தகவு மாலை
20.முப்பத்து மூவர்- விளம்பாஸஹத்வ மாலை
21.ஏற்ற கலங்கள்- போற்றும் மாலை
22.அங்கன் மா ஞாலத்து- கடாக்ஷ மாலை
23.மாரி மலைமுழஞ்சில்- பகவந் நியமன மாலை
24.அன்றிவ்வுலகம்- பகவத் க்ருபா மாலை
25.ஒருத்தி மகனாய்ப் பிறந்து- துக்க நிவாரண மாலை
26.மாலே மணிவண்ணா- பகவதநுக்ரஹ மாலை
27.கூடாரை வெல்லும்- பகவத்ஸம்ச்லேஷ மாலை
28.கறவைகள்- புருஷார்த்த மாலை
29.சிற்றம் சிறுகாலே- பாரமைகாந்த்ய மாலை
30.வங்கக் கடல் கடைந்த- ப்ரம்மானந்த மாலை


என்று முப்பது மாலையாக்கி அனுபவித்திருக்கிறார்
இவைகளைப் பற்றிய விளக்கங்கள் படிக்க வேண்டுமென்றால்
டிசம்பர், 2008, ஜனவரி 2009 ந்ரும்ஹப்ரியா ப்ரதிகளைப் படிக்கலாம்


அன்புடன்
தமிழ்த்தேனீ


Monday, December 8, 2008



தேனீமாமாவை தெரிந்து கொள்ளுங்கள்
http://www.mazhalaigal.com/management/team/team-001/mglt010rkc_honeybee.php

Sunday, December 7, 2008

இரும்போடு விளையாடும்

இரும்போடு உழைத்திட்ட தொழிலாளி நான்
தமிழ்க் கரும்போடு செயலாற்ற எழுத்தாளியாய்
அமிழ்தான தமிழ்தன்னின் பொறுப்பாளியாய்
தரமற்ற செயல் தமக்கே மறுப்பாளியாய்
அமர்கின்ற மலரெல்லாம் தமிழாகவே அமர்ந்திங்கு
மகரந்தம் தனை நாடியே வழிகண்டு வந்திணைந்த
தமிழ்த்தேனி நான் ,ஊன் உயிர் தழுவுதல்போல்
நான் தமிழ் தழுவினேன்,உற்றதொரு தமிழ்நாடி
தேன்தேடி சுந்தரத் தமிழ்சூடி மகிழ்கின்ற தமிழ்த்தேனி நான்
உமிழ்கின்ற உமிழ்நீரும் தேனாகவே தமிழ்த்தேனாகவே
அருஞ்சுவையான தமிழ்தந்து எனை ஏற்றியே
சிறு இறக்கைகள் தந்தருளி பறக்கின்ற அணிலாக
எனை மாற்றியே மகிழ்கின்ற கலைவாணி தமிழ்வாணி,
அவர்தமக்கே குருவான ஹயக்ரீவன் தாள் பணிந்தே
தமிழ்த் தொண்டு நான் செய்ய மனம் கொண்டதால்
அடிபோற்றி நல்அறம் பாடும் தமிழ்த்தேனியாய்
புலம்பெயர்ந்து மரபணிலாய் உளம் கனிந்த
தமிழ்த்தேனியாய் எனை மாற்றி வகை செய்த
அறிஞ்ஞர்கள் மகிழ்கின்ற தமிழோடு இனிதாகவே
இணைகின்ற தமிழ் வாழ்க தமிழ் வாழ்கவே

அன்புடன்
தமிழ்த்தேனீ

Saturday, December 6, 2008

சுந்தரத்தமிழ்

சிறு வயதில் என்னுடைய பாட்டியும் ,தாயாரும்,
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக் கிளியே சாய்ந்தாடு, என்று பாடியும் ,
ஆனை ஆனை அழகர் ஆனை, அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
குட்டியானைக்கு கொம்பு முளைச்சுதாம் ,பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம், என்று சொல்லும் கொஞ்சுதமிழ் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம்,
மார்பிலே அம்பைத் தாங்கிய தன் பிள்ளையின் வீரம் கண்டு நெக்குருகி மார்பிலே பால் பீரிட்டெழ பிள்ளை இறந்த துக்கத்தையும் மறந்து,புறமுதுகு காட்டாத பிள்ளையைப் பெற்றெடுத்ததற்காக பெருமை கொண்ட வீரத்தமிழ்த் தாயின் கதைகள் கேட்டு வீரம் கொண்டோம்,
ஒரு பசுவின் குமுறலை அறிந்து, நீதி காக்க தன் மகனையே தேர்க்காலில்
இடரச் செய்த மனுநீதி சோழனின் கதை கேட்டு நீதி கற்றோம்
நாடு காக்கதன்னுயிரையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்ற பலருடைய வீரத்தை ,அஹிம்சை வழிகளை, உண்ணாநோன்பின் மகிமைகளை
கதர் ஆடையின் சக்தியை, தியாகத்தின் பெருமையை நம் பெரியவர்கள் சொல்லக் கேட்டு நற்பண்புகளை வளர்த்துக்கொண்டோம்
மஹாத்மா காந்தியிடம் எளிமையையும், நேர்மையையும் மனோ உறுதியையும் வாய்மையையும் கற்றோம்
பண்டித ஜவஹர்லால் நேருவிடம் தெளிந்த திடமான தீர்க்கமான
அரசியல் பாடம் கற்றோம்
சுபாஷ் சந்திர போஸ் என்னும் விடுதலை இயக்க வீரரிடம் நேர்மையான வீரம் கற்றோம்
கப்பலோட்டிய தமிழன், சுப்ரமணிய சிவா, போன்றோரிடம்
திட சிந்தனையையும் தீர்க்க தரிச்னத்தையும் கற்றுக் கொண்டோம்
ஆஷ் துரையை சுட்டுக் கொன்று அன்னியரிடம் அடிமைப்படக்கூடாதென்ற காரணத்தால் தன்னையும் சுட்டுக்கொண்ட வாஞ்சிநாதனின் தீரம் கற்றோம்,
உயிர் போனாலும் தேசக் கொடியை காப்பேன் என்னும் உறுதி பூண்டு
கொடிகாத்த குமரனின் வழியாக தேசபக்தியையும் நம் தேசக்கொடியின் பெருமையையும் கற்றோம்
இப்படிப்பட்ட பலருடைய தியாகத்தினால் விளைந்த இனிய சுதந்திரத்தை
அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்
தமிழ் காக்கவும் ,வளர்க்கவும் பாடுபட்ட உ வே சுவாமிநாதய்யர் போன்ற பலரது இடைவிடாத மனோ உறுதியையும் ஆற்றலையும் கண்டு வியந்து
தமிழ்ன் பெருமையை உணர்ந்தோம்
நம்முடைய பாரதியாரின் கனல் தெறிக்கும் பாடல்களை நம்மைப் பெற்றவர்கள் வாயாலேயே பாட அதைக்கேட்டு தேசப்பற்றும், ஞானமும் அடைந்தோம், தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் கண்ணனின் திருவிளையாடல் கேட்டு இளமை இனிமையென கண்டோம்,
கொட்டடடா ஜெய பேரிகை கொட்டடா என்னும்பாடலைக் கேட்டு வீர முழக்கமிட்டோம்,ஓடி விளையாடு பாப்பா என்கிற பாட்டைக் கேட்டு வாழ்க்கையில் எந்தஎந்த பருவத்தில் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டோம், ”சகலகலாவாணியே சரணம் தாயே சங்கீத வீணா பாணியே”
என்னும் பாடலைக் கேட்டு தமிழில் துதி செய்யக் கற்றுக் கொண்டோம்
வாருங்கள் மறியல் செய்து மனம் மகிழ்ந்திட வாருங்கள்
என்னும் இனிய தமிழ் அழைப்பை ஏற்று மனதிலே வீரக்கனலும்
சுதந்திர வேள்விக் கனலும் விதிக்கப் பெற்று சுதந்திரம் கண்டோம்
அந்த சுந்தரத்தமிழ் இருக்க ,

லிட்டில் லிட்டில் ஸ்டார் பாட்டு எதற்கு ? ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை கற்றுக்கொள்வோம் அனைத்து மொழியினையும்
பாரதி சொன்னார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று ,பல மொழிகளக்ம் கற்ற பாரதியார்
அவைகளை ஆராய்ந்து தமிழைப் போற்றினார்

நம் தாயை அம்மாவென அழைக்காமல் மற்றவர்களையெல்லாம் அம்மாவென்று அழைத்தாலும் பலன் வருமோ
முதலில் தாயை நன்கு அறிவோம், பிறகு அனைவரையும் தாயாக மதிக்க்கப் பழகுவோம்.

இதை நம் மக்கள் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு நல்ல செய்திகளை தமிழிலே ,சுந்தரத் தமிழிலே அளிக்கவேண்டும்,முதலில் பெரியவர்களுக்கு ஆங்கில மோகம் தீரவேணும்,எல்லா மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் தாய் மொழியை முதலில் அறிதல் அவசியமன்றோ

எனக்கு ஒரு ஆச்சரியம், ஆங்கிலம் தெரியாமலே இத்துணை நாட்கள் நமக்கு தமிழிலேயே எல்லாவித வாழ்க்கை முறைகளையும் பெற்றோர்கள் முறையாக கற்றுக் கொடுத்தனரே, இப்போது அந்த ஞானம் எங்கு போயிற்று

விலங்குகள், பறவைகள், கூட எந்த தேசத்திலிருந்தாலும் அதன் தாய் மொழியிலேயே தன் குட்டிகளுக்கு கற்பிக்கிறது,

அன்னிய நாட்டில் இருக்கும் பசுக்கள் கூட அம்மா என்றே தமிழை உச்சரிக்கின்றன,நாம் விலங்குகளை, பறவைகளை விட கீழானவராய் ஆகிவிட்டோமா?

சிரிப்புத்தான் வருகுதையெ-உலகைக்கண்டால்

சிரிப்புத்தான் வருகுதையே என்னும்பாடல் ஷண்முகப்ரியா ராகத்திலும்,

அகத்தியர் தருந் தமிழை அன்னைபோல் வளர்த்தனை

சகத்திலே உனைப்போலுண்டோ தாய்மொழிக்குழைத்தவர்

இகத்திலே தமிழ்த்தவம் இயற்றிச் சங்க நூல்களின்

சுகத்திலே குளித்தனை சுவாமிநாத வள்ளலே என்னும் பாடல் காமாஸ் ராகத்திலும்

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்,

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

என்னும் மஹாகவி பாரதியாரின் பாட்டுகள் ஒலித்த நாட்கள்,

பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்- மிடிப்
பயம் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார் என்னும் பாடல் புன்னாக வராளி ராகத்திலே ஒலித்த அந்த நாட்கள்

வந்தே மாதரம் என்போம்- எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்என்னும் ஆனந்தக் களிப்பு ராகத்திலே பாடல் கேட்ட அந்த நாட்கள்

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
என்னும் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டில் கேட்ட அந்த நாட்கள்
சுத்தானந்தபாரதியாரின்
ஔவை ஔவை என்றதும் அமுதம் ஊறும் வாயிலே
செவ்வையான நல்லறச் செயல்களோங்கும் வாழ்விலே
பாலுந் தேனும் பாகும் போலப் பைந்தமிழ் செழித்திடும்
நாலும் நாலுங்கூடி இந்த ஞாலமொன்றி இன்புறும்
என்னும் (ஜம்பைகுந்தலவராளி) ராகப் பாடலும்

இவையெல்லாம் மீண்டும் வாராதோ என்று ஏக்கமாய் இருக்கிறது

அந்தநாள் இனி வருமோ-சொல்லடீ அம்பலப் பசுங்கிளியே
என்னும் சுத்தானந்த பாரதி அவர்களின் பாடல் ஆரபி ராகத்திலே காதில் ஒலிக்கிறது, என்ன செய்ய...?

அன்புடன்
தமிழ்த்தேனீ

Thursday, November 6, 2008

Tuesday, October 7, 2008

இந்தியாவின் கடைசீ தேனீர்க்கடை

இந்தியாவின் கடைசீ தேனீர்க்கடை


நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் முதன் முதலாக விண்கலத்தில் ஏறி நிலவினை அடைந்த போது அங்கே எந்தா சாரே சாயா குடிக்குமோ என்று ஒரு மலையாளி கேட்டதாக வேடிக்கையாக குறிப்பிடுவர்.

அது போல ஒந்தியாவின் ஒரு எல்லையாகிய பத்ரிநாத் என்னும் இடத்தில் நம் இந்திய எல்லையை ஒட்டிய மலைப்பகுதியில் ஒருவர் டீக்கடை வைத்திருக்கிறார், அதுதான் இந்தியாவின் கடைசீ டீக்கடை, அதற்குப் பிறகு திபெத் எல்லை வந்துவிடுகிறது அங்கு தேனீர் குடித்தோம்

அந்த தேனீர்க்கடையை அடைவதற்கு நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே
அந்த அனுபவம் நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.

நானும் என் மனைவியும் வருடா வருடம் பத்ரிநாத் ப்ரயாணத்தை வழி நடத்தும் ஒரு குழுவில் சேர்ந்து பத்ரிநாராயணனை தரிசிக்க வேண்டும் என்று பல நாட்களாக முயன்று கொண்டிருந்தோம், அப்போதுந்ருஸிம்மப் ப்ரியா' என்னும் பத்திரிகையில் ஒரு விளம்பரம் பல வருடங்களாக வந்து கொண்டிருப்பதை என் மனைவி சுட்டிக் காட்டினாள்,நானும் அந்தப் பத்திரிகையை எடுத்து படித்துப் பார்த்தேன், திரு பீ ஆர் தேவநாதன் என்பவர் அந்த யாத்திரையை நடத்துகிறார் என்று அறிந்து அவரை தொடர்பு கொண்டேன் ,அவரும் ஆஹா தாராளமாக வாருங்கள்,என்றார், அவர் கூறியபடி ஆளுக்கு 4500 ரூபாய் என்று எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து 9000 ரூபாய் காசோலை எடுத்து டெல்லியில் உள்ள தேவநாதனுக்கு அனுப்பினோம்,

நாங்களும் எங்கள் இருவருக்கும் டெல்லிக்கும் சென்னையிலிருந்து 1ம் தேதி தமிழ்நாடு விரைவு வண்டியில் பயணச் சீட்டு பதிவு செய்து, ஒன்றாம் தேதி இரவு கிளம்பி 3ம் தேதி டெல்லியில் திரு தேவநாதன் குறிப்பிட்ட வெங்கடேஸ்வரா ஆலயத்துக்கு சென்றோம், அங்கு யாத்திரை செல்ல பலர் தயாராய் வந்திருந்தனர்,முதலில் அந்த ஆலயத்தின் உள்ளே குடிகொண்டிருக்கும் திரு வெங்கடாசலபதியையும்,திரு மஹாலக்ஷ்மியையும் தரிசித்துப் பயணம் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் சிறக்க யாத்ராதானம் என்னும் வேண்டுதலை செய்து ,அனைவரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்,

பய பக்தி என்றொரு சொற்றொடர் உண்டு அதை பரிபூரணமாக உணர்ந்த
பத்ரிநாத் பயணம் பற்றி சொல்லப் போகிறேன்,
பயம் இல்லாமல் பக்தி வருவதில்லை,அல்லது நாம் எப்போது பயப்படுகிறோமோ அப்போதுதான் நம்மைக் காப்பாற்றும் சக்தியின் நினவு நமக்கு வருகிறது என்றும் கொள்ளலாம்,அப்போதுதான் நாம் அந்த சக்தியை வேண்டிக் கொள்ள ஆரம்பிக்கிறோம் என்று தெளிவாக உணர்த்திய பயணம்,

இந்த பத்ரிநாத் பயணம்,பெரியவர்கள் சொல்லிவிட்டுச் சென்ற அத்துணை வார்த்தை உபயோகமும் மிக யோசித்து சொல்லிவைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்,அவற்றை உணரும் தருணம் வரும்போதுதான் உணரமுடிகிறது நம் சிற்றறிவுக்கு,அது மட்டுமல்ல ஆபத்துக் காலங்களில்தான் ஜாதி மத ,மொழி,இன வித்யாசமில்லாமல் அனைவரும் ஒன்று படுகிறோம்,அல்லது அப்போதும் துவேஷம் பாராட்டிக் கொண்டு அழிந்து போகிறோம் என்பது மிகவும் இயல்பான ஒரு செய்தியாக உணரமுடிகிறது,
அது போன்று நமக்கு பல அறிவார்ந்த செய்திகளை உணர்த்திய பயணமாக இந்த பத்ரிநாத் பயணம் அமைந்தது என்றால் அது மிகையல்ல.
ஆகவே இந்த பத்ரிநாத் பயணத்தை என் அனுபவங்களை என்னுடைய சகோதர சகோதரிகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
இந்த பகிர்தலில் ஏதேனும் தவறு இருப்பின் பிழை பொறுத்துக் கொல்லுங்கள்,அல்லது என்னை திருத்துங்கள், காத்திருக்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------------------------


01/09/2008 திங்கட் கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்தோம், வழக்கத்துக்கு விரோதமாக சுமை தூக்கும் பணியாளர்கள் யாரும் கண்ணில் படவில்லை, ஒரே ஒருவர் மட்டும் இருந்தார், அவரை அழைத்து எங்கள் சுமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் இருக்கும் ரெயில் மேடைக்கு எடுத்துவரப் பணித்தோம், 50 ருபாய் வேண்டுமென்றார் , சரி தருகிறோம் என்று கூறிவிட்டு , நடக்க ஆரம்பித்தோம், எங்கள் விரைவு தொடர் 10 எண் மேடையில் நின்றிருந்தது,அருகிலேயே இருந்தது,
அங்கு சென்று இரு பெட்டிகள்,ஒரு பை ஆகியவற்றை இறக்கி வைத்துவிட்டு அந்த சுமை தூக்குபவர் 75 ரூபாய் கொடுத்தால்தான் போவேன் என்று அடம் பிடித்தார், அப்போதுதான் கவனித்தோம் அவர் போதை பானம் அருந்தி இருக்கிறார் என்று, 50 ரூபாய்க்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று உறுதியுடன் நான் சொல்ல அவர் தூய தமிழில் என்னை திட்டிவிட்டு,தள்ளாட்டத்துடன் நடைகட்டினார், அவரை ஒரு வழியாக சமாளித்துவிட்டு எங்கள் பெட்டி பைகளை அதன் இடத்தில் வைத்துவிட்டு 10.30 மணிக்கு ஏறி உட்கார்ந்தோம், விரைவுவண்டி புறப்பட்டது, சிறிது நேரத்தில் ஒருவர் கையில் பெட்டிகளை இருக்கையில் வைத்து பூட்டும் சங்கிலியுடன், வந்தார் அவரிடம் 100 ரூபாய் கொடுத்து அதை வாங்கி எங்கள் பெட்டிகளை இருக்கையுடன் சேர்த்து பூட்டிவிட்டு, நேரத்தை கழிக்க ஆரம்பித்தோம்,

எதிர் இருக்கையில் இருந்த ஒருவர் சார் நானும் என் நண்பரும் ஒன்றாக வந்தோம், அதனால் நீங்கள் இருவரும் அந்த இருக்கைக்கு சென்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து உட்காருவோம், முடியுமா என்றார்..
நானும் என் மனைவியும் சரி நட்பைப் பிரிப்பானேன் என்று கருதி எங்கள் பெட்டி பைகள் எல்லாவற்ரையும் எடுத்துக் கொண்டு அவர்களுடைய இருக்கைக்கு சென்று அங்கே உட்கார்ந்தோம்,

நான் என்னுடைய மடிக்கணிணியை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன் நல்ல தூக்கம் கண்ணை சுழற்றியது , குளிர்சாதன வசதி இருந்ததால் ,சுகமான தூக்கம் நிம்மதியாக தூங்கலாம் என்று தூங்க...ஆரம்பித்தோம்,ரெயில் விரைந்து கொண்டிருந்தது,


சார் பயணச்சீட்டு என்று ஒரு குரல் கேட்டது,பயணச்சீட்டு இருப்பு ஆய்வாளர் நின்றிருந்தார் ,கண்விழித்து பயணச்சீட்டை எடுத்து அவரிடம் காட்டி விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தோம்,இரவு நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்தவுடன் என் மனைவி இடார்சி என்னும் ரெயில் நிலையத்தில் எப்போதுமே கொள்ளைக்காரர்கள் அதிகம், அதனால் மிக ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் என்று சொன்னாள், வந்த தூக்கமும் ஒரு வித பயத்திலேயே சென்றுவிட்டது, இடார்சி ரெயில் நிலையம் வந்தது, இயல்பாக சிலர் இறங்கினர், மீண்டும் ரெயில் புறப்பட்டது, தூங்க ஆரம்பித்தோம்,

அவ்வப்போது நல்ல தூக்கத்துக்கிடையே கண்விழித்து, கண்விழித்து,பெட்டி பைகள் எல்லாம் இருக்கிறதா என்று பல முறை பார்த்து, ஒருவழியாக இறைவன் காப்பாற்றட்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து தூங்க ஆரம்பித்தோம்பொழுது விடிய ஆரம்பித்தது, 02/09/2008 செவ்வாய் காலை

டீ, காப்பி,தண்ணி னீளு,வாட்டர்,குளிர்பானம் என்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன,எழுந்தோம், சார் காலை சிற்றுண்டி வேண்டுமா என்றார் ஒருவர்,ஆமாம் கொடுங்கள், என்றோம் ,பல்தேய்த்துவிட்டு வந்து அவர் கொடுத்த சிற்றுண்டியை மிகவும் பொறுமையுடன் உண்டுவிட்டுஅந்த சிற்றுண்டியின் வாசனையை பொறுக்க முடியாமல்,வேறு வழியில்லாமல் மீண்டும் பல்தேய்க்க ஆரம்பித்தோம்,


அன்று பகல் பொழுது ரெயில் பணியாளர் ஒருவர் அளித்த மதிய உணவை உண்டோம், மீண்டும் பல் தேய்த்தோம், ஏதோ நம் ரெயில்வே உணவு விடுதி நிறுவனங்களின் உபயத்தால் பற்கள் சுத்தமாகின,
அன்று இரவுப் பொழுதை எப்படியும் கழித்தே ஆகவேண்டுமே, என் மனைவி நான் தூங்குகிறேன் என்றாள், சரி என்று சொல்லி அவளுக்கு வசதிகள் செய்து கொடுத்துவிட்டு,நானும் கண்ணயர்ந்தேன், ஏதேதோ கனவுகள், அவ்வப்போது வண்டியின்  குலுக்கல், ஆங்காங்கே வண்டி நிற்கும் சத்தம், இவைகளுக்கு இடையே தூங்கினோம்,

மறுநாள் காலை 7.30 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தோம்,
ரெயில் நிலையத்தின் உள்ளே வந்தவுடன் 15 பேர் எங்களை சூழ்ந்து கொண்டனர்,ஒரு சர்தார்ஜீ வந்து கியா பைய்யா பூராலக்கேஜ் கே லேகர்
காடி பர் டால்கரேகா, ஔர் கஹா ஜானேவாலே ஆப், ஹம் லேகர் ஜாதாஹும் என்றார்,

எங்கே போகவேண்டும் நாங்கள் அழைத்துக் கொண்டு போய்விடுகிறோம்
என்று அதுவும் பற்றாக் குறைக்கு அருகிலேயே இருக்கும் இடமாகிய வெங்கடேச்வரா கோயிலுக்கு ,450 ரூபாய், என்று சொல்லி,
கடைசியில் 350 ரூபாய்க்கு பேரம் பேசி ,சரி என்று ஒரு வண்டியில் ஏறி உட்கார்ந்தோம்,அவர் எங்கெங்கோ சுற்றி எங்களை அழைத்துக் கொண்டு கடைசியாக அந்தக் கோயிலுக்கு அழைத்துப் போனார், அந்தக் கோயிலின் வாசலில் சென்று இறங்கி அவரை அனுப்பிவிட்டு, பெட்டி பைகள் எல்லாவற்றையும் வைத்து பார்த்துக் கொள்ள என் மனைவியிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று,பத்ரிநாத் பயணம் ஏற்பாடு செய்திருந்த திரு பீ ஆர் தேவநாதனை ஒரு வழியாக கண்டு பிடித்து உள்ளே சென்றோம்,என்ன சார் இது மாதிரி ஏமாறரீங்க இந்த இடத்துக்கு 150 ரூபாய்தானே கொடுக்க வேண்டும் என்றார், சரி எல்லா இடத்திலும் ஜாதி, மொழி, மத பேதமில்லாமல் வாடகை வண்டிக்காரர்கள் சமத்துவமாய் இருப்பதை உணர்ந்தோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
,எனக்கு ஒரு வழக்கமுண்டு எப்போது காரிலோ, பேருந்திலோ
பயணம் சென்றாலும் ஓட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுவேன்
அதே சமையம் நானும் தூங்க மாட்டேன் அவரையும் ஓட்டும் போது
தூங்க விடமாட்டேன், அது மட்டுமல்ல, அந்த ஓட்டுனரிடம் சொல்லிவிடுவேன்.


நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் , ஆதாலால் நாங்கள் ஐந்து நக்ஷத்திர உணவு விடுதியில் உணவு உண்டாலும் தெருவோரக் கடையில் உண்டாலும் எங்களுடனே உணவு உண்ணுங்கள் நான் அதற்கும் சேர்த்து பணம் கொடுத்து விடுகிறேன் என்று, இதில் இரண்டு லாபம் உண்டு, ஒன்று ஓட்டுனர் நம்மையறியாமல் எங்காவது சென்று சோம பானம் , சுறா பானம் போன்றவைகளை அருந்த முடியாது,


இன்னொன்று அவருக்கு இவர்கள் நம்மை மதிக்கிறார்கள் என்கிற எண்ணம் உருவாகும் அதனால் இன்னும் கொஞ்சம் கவனமாக நம்மிடம் பேசிக் கொண்டே ஓட்டுவார், அவர் குடும்பக் கதைகளை சொல்லுவார், நமக்கும் உதவிகள் செய்வார், அவருக்கும் ஒரு குடும்பத்துடன் சுற்றுலா சென்றது போன்ற உணர்வு அவரையும் உற்சாகமாக வைக்கும்


அதே போல் இந்த முறையும் சிறிது நேரம் அவருடன் உட்கார்ந்திருந்து விட்டு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்ற உணர்வு ஏற்படுத்தி விட்டு என்னுடைய இருக்கையில் வந்து உட்கார்ந்தேன்
நாங்கள் பயணம் செய்த அந்தப் பேருந்தில் 34 பேர் இருந்தனர், அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர், அவர்களுடன் 10 நாட்கள் பொழுதைக் கழிக்க வேண்டும், ஆகவே என் இருக்கையிலிருந்து எழுந்து முதலில் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அவர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

 அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுமாறு ,அறிமுகப் படலம் முடிந்ததும் , அனைவரும் என்னிடம் நாங்கள் உங்களை தொலைக் காட்சிகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம் என்று கூறினர்,அந்த ப்ராபல்யம் எனக்கு இன்னும் வசதியாக இருந்தது நாம் இப்போது பயணம் செல்கிறோம், அனைவரும் ஒன்றாக 10 நாட்கள் இருக்கப் போகிறோம், நம்முடைய பயணம் இனிமையாக இருக்க நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம்,


என்று கூறிவிட்டு, நான் எப்போதுமே அதிகப் ப்ரசங்கிதானே, முதலில் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன், எல்லோரையும் பார்த்து பொதுவாக உறவுக்காரர்கள் யார் என்று ஒரு கேள்வி எழுப்பினேன்.
அனைவரும் அமைதியாக என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்
பலவேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அவர்கள் பலர் பல விதமாக பதில் அளித்தனர்


கடைசியாக நான் பதில் சொன்னேன், இந்த வினாடி முதல் நாம்தான்
உறவுக் காரர்கள், ஏனென்றால் , இங்கிருப்பவர்களுக்கு நல்லது நடந்தாலும் ,கெடுதல் நடந்தாலும் நமக்குதான் முதலில் தெரியும், பிறகுதான் உரிமையுள்ள உறவுக்காரர்களுக்கு தெரியும், ஆகவே நாம்தான் உறவினர் ஆகவே அனைவரும் எந்த நிலையிலும் என்னை உதவிக்கு அழைக்கலாம் என்று சொல்லிவிட்டு, நான் அவர்களிடம் இங்கு கூடியிருக்கும் நாம் அனைவரும்தான் முதலில் உறவுக்காரர்கள்,
ஏனென்றால் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் முதலில் நம் கூட இருக்கும் அனைவருக்கும்தான் முதலில் தெரியும் ,பிறகுதான் நம்முடைய
சொந்தக்காரர்களுக்கு தெரியும், ஆகவே இந்த பயணம் முடியும் வரையிலாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து பயணத்தை சிறப்பாக, இனிமையாக நடத்துவோம்
என்று வேண்டிக் கொண்டேன், அனைவருக்கும் என் எண்ணம் புறிந்ததால்
மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டனர்,

.அங்கே ஒரு சுமுகமான,இதமான, சூழ்நிலை உருவானது, மேலும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி நான் அனைவரையும் வேண்டிக் கொண்டேன் ,அனைவரும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டனர்,


அடுத்து ஒரு பெரியவர் எழுந்தார் திரு கிருஷ்ணமாச்சாரி சொல்வதில் எனக்கு முழு சம்மதம் ,ஆகவே அனைவரும் இந்த சுற்றுலாவை மகிழ்ச்சிகரமாக்க கைகோர்த்து முயலுவோம் என்றார்,

அனைவரும் கரவொலி எழுப்பினர், நல்ல வேளை அனைவருமே சந்தோஷமாக , நான் கூறிய உண்மையை உணர்ந்து , செயல்பட ஆரம்பித்தனர்,

முதலில் அவரவர் பைகளில் இருந்த எங்களுடைய பையையும் சேர்த்துதான் சொல்கிறேன், உணவுப் பொருட்கள் அனைவருக்கும் அனைவராலும் வினியோகிக்கப்பட்டது, உணவு மட்டும் வெளி வரவில்லை அனைவரின் உள்ளமும் வெளியே வந்து உறவாடத் துவங்கியது,அந்தப் பேருந்து களைகட்டியது, இனிப்பும் , சுவையான உணவுப் பொருள்களும்

அதற்கும் மேலாக நகைச்சுவையான பேச்சுக்களும் அவரவர் அனுபவங்களும் பறிமாறிக் கொள்ளப்பட்டன, எந்த பொருள் வாங்கினாலும் அனைவரும் அனைவருக்கும் வாங்கினர்,

எங்களின் இனிமையான பயணம் துவங்கியது,
அதன் ஆரம்பமாக அனைவருக்கும் நாங்கள் வாங்கி இருந்த ஆப்பிள் பழங்களை மிக அழகாக துண்டுகளாக்கி அனைவரும் உண்ணுவதற்கு வசதியாக அளித்தேன், அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கி உண்டனர் ,அதன் விளைவாக அவரவர்களும் தங்களிடம் இருந்த உணவுப் பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்து சந்தோஷமாக நிம்மதியாக ஆனந்தமாக பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தோம்,ஒவ்வொருவரும் சுவையான நிகழ்ச்சிகளையும் கூற ஆரம்பித்தனர், மிக சந்தோஷமான பயணமாக அமையும் என்னும் நம்பிக்கை அனைவருக்கும் பிறந்தது, பேருந்தை எங்கு நிறுத்தினாலும் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு உணவுப் பொருக்களும், தண்ணீரும் வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர்


ஓட்டுனர் வெகு சாமர்த்தியமாக பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார்
கலகலப்பாக ப்ரயாணம் சென்று கொண்டிருந்தது.
மிக வயதான இருவர் எங்களில் மூத்த தம்பதியர் அவர்களும் எங்கள் கூடவே குழந்தைப்போல சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

 பேருந்து ஓட்டுனர் அந்த மலைப்பாதையில் ஆபத்துக்கள் நிறைந்த ,ஒருபக்கம் மணலும் ,கற்களும் சரியும் பகுதியும், மறு பக்கம் ஆபத்தான அதள பாதாளம் போன்ற பகுதியில் கல்லும் மணலும் நிறைந்த மலைப்பாதையில் வெகு திறமையாக ஓட்டிக் கொண்டு வந்தார், அங்கு கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அதுபோன்ற பாதைகள், ஆனால் அந்த ஓட்டுனரின் திறமையால் மிக லாவகமாக கையாளப்பட்டு பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது, ஒவ்வொரு வளைவிலும் பேருந்து மிகக் குறுகிய பாதையில் செல்லும் போது அனைவரின் முகத்திலும் பயம் தெளிவாகத் தெரிந்தது.

 எனக்கும் பயமாகத்தான் இருந்தது ஆனாலும், நான் கொஞ்ஜம் தைரியம் வரவழைத்துக் கொண்டு, அனைவரையும் திசை திருப்பி ,பல கதைகளும் ,நகைச்சுவை நிகழ்ச்சிகளும் சொல்லிக் கொண்டே வந்தேன், அனைவரும் பங்கு கொள்ள ஆரம்பித்தனர், இதற்கு நடுவே ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே காரயத்தில் கண்வைய்யடா தாண்டவக் கோனே என்னும் பாடலுக்கேற்ப புகைப்படங்களும் எடுக்க ஆரம்பித்தேன், திடீரென்று பேருந்து ஒருபக்கமாக ஓட ஆரம்பித்தது, ஏதோ ஒரு உணர்வில் ஜன்னலுக்கு வெளியே கையை விட்டு புகைப்படம் எடுத்திக் கொண்டிருந்த நான் ,கையை திடீரென்று உள்ளுக்கு இழுத்தேன், பேருந்து ஒருபக்கம் சாக்கடை போலிருந்த ஒரு பள்ளத்தில் சக்கரங்கள் இறங்கி மலைமேல் சாய ஆரம்பித்தது பேருந்து,அனைவரும் ஒட்டுமொத்தக் குரலில் அலற ஆரம்பித்தனர்.

 என்னுடைய கைக் கடிகாரம் நொறுங்கியது, ஆனால் கை நல்லவேளையாக மலைக்கும் பேருந்துக்கும் இடையே மாட்டிக் கொள்ளாமல், தப்பித்தது,நல்ல வேளை பேருந்து இடது பக்கம் சாய்ந்தது,வலது பக்கம் சாயவில்லை,சாய்ந்திருந்தால் அதளபாதாளம்,அன்று நாங்கள் அனைவரும் தப்பித்தது இறைவன் அருள்தான், ஓட்டுனர் மிகத்திறமையாக சமாளித்து பேருந்தை நிறுத்தினார், ஆனால் சாக்கடையில் சக்கரம் மாட்டிக்கொண்டதால் மேற்கொண்டு இயக்க முடியாமல் ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது பேருந்து,

முதலில் சமாளித்துக்கொண்டு எழுந்த நான் , அனைவருக்கும் தைரியம் சொல்லி ,என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே
ஒரு பெரியவர் உரத்த குரலில் ,அனைவரும் ஓட்டுனரின் இருக்கை வழியாக பேருந்தை விட்டு இறங்கி விடுவது நல்லது என்றார், எனக்கும் அதுதான் சரி எனப்பட்டது , அனைவருக்கும் தைரியம் சொல்லி என் மனைவியையும், அந்தப் பெரியவரின் மனைவியையும் தைரியமாக இறங்கச் சொன்னோம், நாங்கள் இருவரும் கீழே இறங்கி அவர்கள் இருவரையும் கைலாகு கொடுத்து கீழே இறக்கினோம்.

 பிறகு தைரியம்பெற்ற அனைவரும் ஒவ்வொருவராக பதறாமல் கீழே இறங்கச் சொன்னோம், அனைவருக்கும் உதவி செய்து, அனைவரையும் கீழே இறக்கி விட்டோம், ஆனால் என்னுடைய தமையன் மனைவி, என்னுடைய மன்னி அவர்களால் அந்த ஓட்டுனரின் இருக்கைக்கும் ஸ்டியரிங் வீல் க்கும் நடுவே இறங்கமுடியவில்லை, அதனால் அவரை மட்டும் பேருந்து சாய்ந்திருக்கும் பகுதிக்கு நேர் எதிர் பக்க உட்காரவைத்துவிட்டு, சாலையில் தற்செயலாக வந்த மிலிடரி பேருந்தை கை காட்டி நிறுத்தி நிலைமையை சொன்னோம்.

 அவர்களும் அங்கே சாலை வேலை செய்து கொண்டிருந்த அனைவரையும் உதவிக்கு அழைத்தோம், அனைவரின் உதவியோடு, இரும்புச் சங்கிலியால் கட்டி பேருந்தை மிலிடெரி பேருந்தின் உதவியால் இழுத்தோம், இரும்புச் சங்கிலி அறுந்தது, மீண்டும் அந்த இரும்புச் சங்கிலையைக் கட்டி ஒரு வழியாக பேருந்தை சாலைக்கு கொண்டு வந்தோம், பேருந்தின் உள்ளே இருந்த என் மன்னிக்கும், எங்கள் அனைவருக்கும் போன உயிர் மீண்டும் திரும்பி வந்தது,நல்ல வேளை என்னுடைய கைகடிகாரம் மட்டும்தான், உடைந்தது, மற்றபடி யாருக்கும் எந்த சேதமுமில்லாமல் காப்பாற்றிய பத்ரிநாதனுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, இறைவனை வேண்டிக் கொண்டு பயணத்தை தொடங்கினோம், ஆனால் அந்த சிறிது நேரம், அனைவருமே
இறைவனை துதிக்கத் தொடங்கினோம் என்பதுதான் உண்மை,


ஆக பயம் வந்தால்தான் பக்தி வருகிறது,
என்னுடைய பதட்டத்தை தணித்துக் கொள்ளவும்,அனைவரின் பதட்டத்தை தணிக்கவும், உரத்த குரலில் ஒருபாட்டு பாடச்சொல்லி ஒருவரை வேண்டிக் கொண்டேன், அவரும் பாடத்துவங்கினார்,
அவர் பாடி முடித்தவுடன் போலோ பத்ரிநாத்கீ என்றேன், அனைவரும்


ஜெய் என்றனர் ஒருமித்த குரலில்,அந்தப் பாட்டு பாடிய அவருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு,ஆனால் விபத்து நடந்த போது இருந்த பதட்டத்தைவிட அவர் பாடும்போது எனக்கு பதட்டம் அதிகமாகிவிட்டது என்று நான் சொல்லவும், அங்கே குபீரென்று ஒரு சிரிப்பலை பரவியது, சூழ்நிலை இயல்பானது,அதற்குப் பிறகு பாட்டுப் பாடிய அவரிடம் தனியாக சென்று வேடிக்கையாக சொன்னேன் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று கூறவும் அவரும் அதனாலென்ன பரவாயில்லை, உங்கள் புத்திசாதுர்யம் எனக்கு பிடித்திருக்கிறது என்றார்,


மேலும் அவர் எதையும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றார், அது போதாதா நமக்கு..அப்படியானால் ஒரு சத்தியம் செய்து கொடுக்க அவரை வேண்டினேன்இந்த பயணம் முடியும் வரையில் பாடுவதில்லை என்று, மீண்டும் ஒரு குபீர் சிரிப்பலை, நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம்,


பேருந்து சிறிது தூரம் ஒரே சீராக சென்றுகொண்டிருந்தது, திடீரென்று
ஓரிடத்தில் நிறுத்தினர் பேருந்தை, அனைவருக்கும் அங்கு உணவளிக்கப்பட்டது, அங்கு இயற்கை எழில் தன்னுடைய பரிபூரணமான
படைப்பை அள்ளித் தெளித்திருந்தது, அனைத்தையும் என் கையடக்க புகைப்படக் கருவியில் பதிவு செய்தேன், நேரம் கடந்தது,ஆனால் பேருந்தை அங்கிருந்து நகர்த்தவே இல்லை, ஓட்டுனரிடம் காரணம் கேட்டேன்,அங்கு முன்னால் சாலையில் மலையிலிருந்து கற்களும், மணலும் விழுந்து சாலையே மூட்டிவிட்டது.

 சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு, அவைகளை அப்புறப்படுத்த வண்டி வந்து கொண்டிருக்கிறது, அவைகளை அப்புறப்படுத்திய பின் தான் பேருந்து செல்லும் என்றார் மிக இயல்பாக, அவர் பல பயணங்களில் பார்த்திருப்பார், ஆனால் எங்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது,
சுமார் 5 மணி நேரம் அங்கேயே காத்திருந்தோம், மீண்டும் பேருந்து புறப்பட்டது,


அங்கு பத்ரிநாத் உள்ளே செல்ல குறிப்பிட்டஒவ்வொரு மணி நேரங்களில்
அனுமதிக்கிறார்கள்,அங்கு நுழைவாயிலில் சென்று காத்திருந்தோம்,எங்களுக்கு முன்னால் பல பேருந்துகள், நின்றிருந்தன
சரி அனுமதி கிடைக்கும் வரை அங்கே இருக்கும் மிக அழகான சூழ்நிலைகளைப் படம் எடுக்கலாம் என்று பேருந்தைவிட்டு இறங்கி நானும் இன்னும் இருவரும் நடக்க ஆரம்பித்தோம், மிக அருமையான இயற்கைக் காட்சிகள், சுற்றிலும் அழகான மலைகள், பனி படர்ந்த மலைகள், எல்லாவற்றையும் படம் எடுத்துக் கொண்டு மீண்டும் பேருந்தை நெருங்கினோம், பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம், ஓட்டுனர் வண்டியை
முடுக்கினார், பத்ரிநாத்தில் நுழைந்தோம் , ஜை போலோ பத்ரிநாத்கீ
என்றார் ஒருவர் அனைவரும் ஜெய் என்றோம்,


பத்ரிநாத்தை அடைந்தோம்
எங்களுடன் வந்திருந்த பயண நடத்துனர் , அனைவருக்கும் அறை ஒதுக்கி கொடுத்துவிட்டு,சீக்கிறம் குளித்துவிட்டு வாருங்கள்,
பத்ரிநாதனை சேவிப்போம் என்றார்,,,,குளிப்பதா ... 10500 மீட்டர் உயரம் , பனிபரவிய மலைகள்,
வாயைத் திறந்தாலே புகை வருகிறது, உடல் குளிர் தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறது, கை விரல்கள் கற்றுக்கொள்ளாமலே தாளம் போடத்துவங்கி விட்டது, அத்தனையையும் பத்ரி நாதனை தரிசிக்க வேண்டும் என்ற தாகத்தினால் பொறுத்துக் கொண்டு குளித்தோம், குளிர் உடலுக்குதானே ,மனதுக்கு ஏது குளிர் மனதைக் கட்டுப்படுத்தினால் இமையமலையிலும் நம்முடைய உடல் சூட்டை  98.4 என்னும் இயல்பு நிலையிலே வைத்திருக்க முடியுமே.  சித்தர்கள் செய்கிறார்களே
, என்றெல்லாம் நினைவுக்கு வந்தாலும் , குளிர் வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது என்பதுதான் உணமை,
அப்போது குழு நடத்துனர் அந்தக் கோயில் உருவான கதை சொன்னார்
ஆதிசங்கரர் நிருமாணித்த கோயில் அதுவென்றார்.
கர்பக்கிருக மூர்த்தி சாளக்ராம வடிவில் இருப்பதாகவும் சொன்னார்
சைவமும் வைணவமும் கலந்தே இந்து மதம் வளர்ந்திருக்கிறது
இவ்வளவு விஞ்ஞான வசதிகள் நிறைந்த இக்காலத்திலேயே
அந்தக் கோயிலுக்கு செல்ல நாங்கள் இவ்வளவு பாடு பட்டோமே
அந்தக் காலத்தில் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில்,
10,500 மீட்டர் உயரத்தில் இருக்கும் அந்த இடத்துக்கு எப்படி ஆதி சங்கரர் சென்றார் ...? எப்படி அந்த சாளக்ராமத்தை அங்கே நிருவினார் .

நினைத்துப்பார்த்தாலே ஆச்சரியமாக இருக்கிறது ,
நம்முடைய பெரியோர்கள் அதிசிய சக்தி வாய்ந்தவர்கள்தான்
அவர்களுக்கு முன்னால் நாமெல்லாம் வெரும் தூசிகள்
என்று தோன்றியது,உண்மைதானே, நம் இந்து மதத்தில் இருந்த பெரியவர்கள்  செய்யாத சாதகங்களா,சாதனைகளா, என்ன செய்வது அப்போதெல்லாம்  உலக சாதனை புத்தகங்கள் இல்லையே அவைகளைப் பதிவு செய்ய .


நம்முடைய இந்துமத சாதனையாளர்கள் தாங்கள் செய்த அனைத்தையுமே
இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு,எல்லாம் அவன் செயல் என்று வாயாலே சொன்னாலும் , அவர்களது இடைவிடாத முயற்சியும் ,மனோ உறுதியும் தானே அவர்களை இது போன்ற சாதகங்களை செய்ய வைத்திருக்கிறது என்று என்ணுகையில் கண்கள் பனிக்கின்றன,
மனம் விம்முகிறதுஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் எத்தனை மதங்கள், வந்தாலும்  இந்து மதத்தின் ஒரு சிறு துறும்பைக் கூட அசைக்க முடியாது, ஆன்மீகம் வளர்வதை தடுக்க முடியாது, என்பது நிச்சயம்,,


இந்து மதத்தையும் , தமிழையும் அறிந்து கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்யலாமே தவிற ,ஆராயலாமே தவிர, ஓரணுவைக் கூட பூரணமாக உணர நமக்கு சக்தி போதாது என்பதே அடியேனுடைய தாழ்மையான அபிப்ராயம்.



பத்ரிநாதரை சாளக்ராம வடிவில் கண்ட ஆதி சங்கரர்
கோயிலை நிறுவி அங்கே சாளக் க்ராமத்துக்கு நித்திய ஆராதனை செய்ய
தமிழகத்திலும் மற்றும் பல இடங்களிலும் இருக்கும் சைவ வைஷ்ணவ மடங்களில் யாரேனும் ஒருவர் வந்து பொறுப்பேற்கும் படி அழைத்தார்.
ஆனால் யாருமே அந்த மலையில் அந்தக் குளிரில் சென்று ஆராதனை செய்ய மறுக்கவே, கேரள நம்பூதிரி ஒருவர் ஒப்புக் கொண்டாராம், ஆராதனை செய்ய.

அதனால் இன்றும் கேரள நம்பூதிரிதான் அங்கு நித்ய ஆராதனைகள் செய்கின்றார், அந்த உரிமை அந்தக் கேரள நம்பூதிரிகளின் வம்சத்துக்கு
ஆதி சங்கரரால் பட்டயம் எழுதித்தரப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.


நாங்கள் இரவு எட்டுமணிக்கு 1000 ரூபாய் அனுமதிச் சீட்டு வாங்கிக்கொண்டு (இருவர் மட்டுமே ஒரு பயணச்சீட்டுக்கு அனுமதிக்கப் படுவர்) பகவான் பத்ரி நாராயணரின் தரிசனத்துக்காக காத்திருந்தோம்.
அனுமதிச் சீட்டு வழங்கியவர் ஹிந்தியில் சொன்னார் உட்காருங்கள் உங்கள் பெயர் படிக்கப்படும் என்று, அனுமதிச் சீட்டில் என்னுடைய, பெயர் கோத்திரம் .

எங்கிருந்து வந்தவர்கள் என்னும் விவரம் எழுதிதான் அனுமதி சீட்டு என்னிடம் அளிக்கப்பட்டது , எங்களைப் போலவே ப்ராகாரத்தில் அனுமதிக்காக உட்கார்ந்திருந்தவர்கள் அனைவருமே பலவிதமான இறைப் ப்ரார்த்தனை பாடல்களைப் பாடிய வண்ணம் இருந்தனர், நாங்களும் எங்களுக்குத் தெரிந்த அத்த்னை ச்லோகங்களையும் பாடிக் கொண்டே உட்கார்ந்திருந்தோம் .
மனம் அமைதியாய் இருந்தது, மகிழ்வாய் இருந்தது, ஒவ்வொருவர் பெயராக அழைக்கப்பட்டது, தமிழ்நாடு கிருஷ்ணமாச்சாரி ,ஆனந்தவல்லி கிருஷ்ணமாச்சாரி என்று ஒலிபெருக்கியில் பெயரை அழைத்தவுடன் நானும் என் துணைவியாரும் வரிசையில் நின்றோம், உள்ளே நுழைந்தோம் .

ஜகத் ஜோதியாக பத்ரிநாராயணரின் தோற்றம், அங்கே நடுவே உட்காரச் சொன்னார்கள் ஸ்வாமிக்கு முன்னால், ,அனைவரும் உட்கார்ந்தோம், அங்கே  ஒரு கேரள நம்பூதிரி சாளக்ராமத்தில் அழகு படுத்தியிருந்த அத்துணை ஆடைகளையும் ஒரு கையால் களைந்து கொண்டே, மிக லாவகமாக, வேரு ஆடைகளை உடுத்தி எங்கள் கண் முன்னாலேயே ஒரு மந்திரவாதி போல  பத்ரிநாரயணரின் பல அலங்காரத்தை காட்டினார்.

அப்போது அங்கே இறைவனின் நாமஸ்மரணத்தை தவிர வேறு எதுவுமே
காதில் ஒலிக்கவில்லை, கண்கள் அவனைத்தவிர வேறு எதையும் பார்க்கவில்லை, எங்களை நாங்கள் இழந்து அவனுடன் ஒன்றிக் கலந்தோம் . கடைசியில் பகவான் இரவு தூங்குவதற்குண்டான ஆடைகளை அணிவித்துவிட்டு திரையை மூடினர்,நம்பூதிரி.


அப்போதுதான் எங்களை இழந்த நாங்கள் மீண்டும் எங்களுடன் மீண்டு இணைந்தோம் . வரிசையில் நின்று ப்ரசாதம் வாங்கினோம்,
நல்ல தேக காந்தியுடன் விளங்கிய ஒரு பெரியவர் பகவன் நாமாவளியை சொல்லிக் கொண்டே கண்களில் கருணையுடன் என்னையும் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு ப்ரசாதம் அளித்தார், கர்பக் கிருஹத்தின் மேல் வைத்த பார்வையை அகற்றாமல் மூடியிருந்த திரையையும் தரிசனம் செய்து கொண்டே வெளியே வந்தோம் .

ஏதோ பூரணமான ஒரு மன நிறைவுடன் படிக்கட்டில் இறங்கி வந்தோம்.
திடீரென்று எங்களை பத்துபேர் சூழ்ந்து கொண்டனர்,
பத்ரிநாத் கோயிலோடு உங்களையும் சேர்த்து புகைப்படம் எடுத்துத் தருகிறோம் என்று, அவர்களில் ஒருவரை தேர்வு செய்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம், அங்கே ஒரு சாது நின்றிருந்தார் அவரிடனம் நான் சென்று இந்தியிலே கேட்டேன் அய்யா நீங்கள் வெகுநாட்களாக இங்கிருக்கிறீர்களா  பத்ரிநாதனைப் பற்றி நல்ல விவரங்கள் சொல்ல முடியுமா என்று


அதற்கு அவர் கவலைப்படாதீர்கள் உங்கள் ஆர்வம் என் சிந்தனையை தூண்டிவிட்டது, நீங்கள் பணிவாக கேட்ட விதம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, பத்ரிநாதன் என்னை பணிக்கிறான், எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லும்படி, சொல்கிறேன் என்று தமிழில் கூறினார்,
ஆஹா  இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே.

நாங்கள் அனைவரும் ஆர்வத்துடன் உட்கார்ந்தோம் அவர் சொல்வதைக் கேட்க  நான் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தேன் அமைதியாக இருந்து அவர் சொல்வதை கேட்கும் படி  உட்கார்ந்து கேட்போமா,,,,?

அவர் சொன்னவை:

இந்தப் புனித பத்ரிநாதரின் கோயில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது என்பதற்கு சான்றுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை


ஆனால் நான் என்னுடைய பெரும்பாலான வாழ்நாட்களை இங்கேதான் கழிக்கிறேன், அடிக்கடி இங்கே வந்து பத்ரிநாதனை சேவிப்பதிலேயே
வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தக் கோயில் அலக்நந்தா நதியின் கரையில் நாராயண பர்வதத்தின் மடியில் அமைந்திருக்கிறது,அதோ அங்கே பாருங்கள் தப்த குண்டம் என்னும் வென்னீர் ஊற்று,அந்த வென்னீர் ஊற்றில் குளித்தால் நாம் செய்த அத்துணை பாவங்களும் கழுவப்படும் என்பது ஐதீகம்,

சரித்திரத்தில் அசோகசக்கரவர்த்தி காலத்தில் பௌத்தர்களால் வழிபடப்பட்ட கோயில் இந்த பத்ரிநாதர் , பத்மாசனத்திலே கருப்பு விக்ரகமாய் சாளக்ராமத்திலே வீற்றிருப்பதுபோல இருக்கிறார்,ஆனால் ஸ்கந்த புராணத்தின் படி ஆதிசங்கரரால் நாரதகுண்டத்திலே கண்டு பிடிக்கப்பட்டு,8ம் நூற்றாண்டிலே மறுபடியும் ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்தார் என்று கூறப்படுகிறது என்றார்.



,இந்த பத்ரீநாதரை பிரும்மா விஷ்ணு, சிவன் ,துர்கை என்று நாம் எந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு சேவிக்கிறோமோ அதே தெய்வம் போல காட்சி அளிப்பார் என்று அவர் சொன்னார்
எனக்கு மனோரஞ்சிதம் என்னும் மலரின் நினைவு வந்தது.
மலர்களிலே மனோரஞ்சிதம் என்னும் ஒரு மலருண்டு
அந்த மலரை நாம் எந்த மணத்தை நினைத்து முகர்கிறோமோ
அந்த மணம் அந்த மலரிலே வரும் என்று கூறுவர்.
அது போல பத்ரீநாதனும் ஒரு மனோரஞ்சிதந்தானோ என்று தோன்றியது
நம் மனதிலே தெய்வத்தை எப்படி வணங்குகிறோமோ அப்படி
அவன் தோன்றுவான் என்று சொல்வார்கள்.


இங்கு என் தாயாரின் வாழ்விலே நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும் என் தயார் ஆர் கமமலம்மாள் அவர்கள் ஸ்ரீரங்கத்திலே ஒரு அரங்க சேவை செய்யும் குடும்பத்திலே பிறந்தவர்.
அரஙனைப் பற்றியவர்கள் ஒருவனைப் பற்றி ஓரகத்தே இரு என்னும் தத்துவத்தை கடைப்பிடிப்பவராகவே இருந்தனர் அந்த நாட்களில்
அந்த வளர்ப்பு முறை காரணமாக என் தாயாரும் அரங்கனுக்குதான் முதலிடம் அளிப்பார்கள்.

ஆனால் அவர் பல கதைகள் கவிதைகள் எழுதி பொது மன்ப்பான்மையை வளர்த்துக் கொண்டதால் மற்ற தெய்வங்களை நிந்தனை செய்ததில்லை
அப்படிப்பட்ட என் தாயார் ஒரு முறை தன்னுடைய சமவயது பெண்மணிகளால் ஒரு ஆன்மீகப் பயணத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்,
அந்தப் பயணத்தில் திருத்தணி முருகன் கோயிலும் ஒன்று.

சில கோயில்களின் தரிசனங்கள் முடிந்த பிறகு,அனைவரும் முருகன் கோயிலுக்கு சென்றிருக்கின்றனர், அங்கே மற்ற அனைவரும்
கமலம் நீங்கள் முருகன் கோயிலுக்கு வருவீர்களா என்று கேட்க
என்தாயார் தன்னுடைய தனிப்பட்ட கொள்கைகளால் மற்றவர்கள் மனம் புண்படக்கூடாது என்னும் கொள்கையால் நிச்சயமாக வருவேன் என்று கூறிவிட்டு  அவர்களுடன் முருகன் கோயிலுக்கு சென்றிருக்கிறார்


அங்கே அனைவரும் வேகமாக முன்னால் செல்ல என்னுடைய தாயார் மட்டும் கோயிலை அணுஅணுவாக ரசித்தபடி மெதுவாக செல்லவும்
,முருகன் சன்னதியில் என் தாயாரும் முருகனும் மட்டுமே தனித்து விடப்பட்டனர், கண்ணார முருகனை தரிசித்த என்தாயார் எப்படி தரிசித்தார் தெரியுமா முருகனை அரங்கனாக உருவகம் செய்து கொண்டு சேவித்தார் என்று என் தாயாரே தன் வாயால் சொல்லக் கேட்டேன்.


முருகனை வழிபட்டுவிட்டு அங்கே இருந்த படிக்கட்டில் தன்னை மறந்து உட்கார்ந்து முருகனையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அவர்களை தேடிக் கொண்டு வந்த மற்றவர்கள் வாருங்கள்
போகலாமா என்று அழைத்து வந்திருக்கிறார்கள்.
இதில் சுவையான செய்தி என்னவென்றால்



அன்று வீட்டுக்கு வந்தவுடன் என் தாயார் முருகனைப் பற்றி ஒரு பாடல் இயற்றினார்,அந்தப்பாடலைக் கேட்கவேண்டுமானல் மண்ணின் குரல் பகுதியிலே கேளுங்கள்



பாட்டின் ஆரம்பம் 'தனிமையில் இருந்தேனடி

அந்தப் பாட்டிலே தன்னுடைய உண்மையான மனதைபற்றி அழகான வரிகளில் சொல்லி இருப்பார் அந்தப் பாடலில் ஓரிடத்தில்
'பொய்யாக அவன் பேரை பூசணையில் சில வேளை
கள்ளமாய் உரைத்தேனடி  கந்தன் கவர்ந்து விட்டான் என்னையடி


வெண்மதிச் சடையுடைய வேந்தன் சிவபாலன்
தண்மதி முகத்தினில் தன்னை மறந்து நின்று
தனிமையில் இருந்தேனடி
என்று பாடி இருப்பார்கள்

என் மனதிலே நிறைந்தவன் திருவரங்கன், ஆனால் நான் அவன் போல் உன்னை நினைத்துக் கொண்டு சேவித்தேன்  ஆனாலும் கந்தா நீயும் எனைக் கவர்ந்து விட்டாய் என்னும் பொருள் வரும்படி எழுதியிருப்பார்கள்


ஆக நம் மனதிலே நாம் செய்யும் உருவகமாக தெய்வம் காட்சி அளிக்கிறது  அவ்வளவே.

தெய்வம் மனுஷ்ய ரூபேணா என்று சொல்வார்கள்
ஆமாம் தெய்வம் மனிதர்கள் கற்பனை செய்யும் ரூபத்துக்கு வருவான்
என்பது உண்மைதானே.

இந்த பத்ரிநாதரின் கோயிலை மூன்று பாகமாக பிரிக்கலாம்


முதலாவது உள்ளே நுழைந்தவுடன் காணப்படுவது சபாமண்டபம் என்று சொல்கிறார்கள்,அங்கே காலை 6.30 மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரையிலும், மீண்டும் மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரையிலும் பத்ரிநாதன் தரிசனம் கொடுக்கிறார்.

இந்த பத்ரிநாதனை பஞ்ச பூதங்களும் அனைத்து தேவர்களும் துதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏனென்றால் அவருடைய தலையில் விஷ்ணு பத்னியாகிய
மஹாலக்ஷ்மி அமர்ந்திருக்கிறாளாம்.
இவ்வளவையும் எங்களுக்கு கூறிய அவர் கடைசியாக
ஒரு வேண்டுகோள் என்றார் .

என்னவென்று கேட்டோம், இங்கே பலர் பகவானின் பெயரைச் சொல்லி
பூஜை செய்கிறேன் , என்றெல்லாம் சொல்லி பணம் கேட்டு ஏமாற்றுகிறார்கள்.
அதனால் வரும் பக்தர்களுக்கு மிகவும் மனம் கஷ்டப்படுகிறது.
பகவான் நாமத்தை கூறுபவர்களுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் மனம் ஒப்புக் கொண்டாலொழிய யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள்.   தெய்வம் வேறெங்கும் இல்லை நம் மனதில் தான் இருக்கிறது. அதை உணர்ந்தால் போதும் என்றார்.


இவ்வளவு நேரம் நான் சொன்னதையெல்லாம் பொறுமையுடன் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி நான் வருகிறேன் என்று கூறிவிட்டு தளர் நடையுடன்  புறப்பட்டார் நாங்கள் அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராய் இருந்தோம், ஆனால் ஏற்றுக் கொள்ள மறுத்து கிளம்பினார்.

அவரிடம் ஐய்யா நான் மனமார தரும் இதையாவது தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டு என்னிடமிருந்த ஒரு ஆப்பிள் கனியை அவருக்கு கொடுத்தேன், அதை வாங்கிக் கொண்டு
நன்றி கூறிச்சென்றார் அவர், அந்த கங்கைக் கரையில் கங்கையின் ஆக்ரோஷமான ஓட்டத்துடன் கூடிய அந்த ஒலிக்கு நடுவே அவர் அமைதியாக இனிமையாக, புன் சிரிப்புடன், பக்திப் பரவசத்துடன், தனக்குள்ளேயே பத்ரிநாதனை தரிசித்துக் கொண்டே கூறிய வார்த்தைகள் எங்களை வேறு உலகத்துக்கே அழைத்துச் சென்றன.


நாங்கள் அனைவருமே மீண்டும் ஒரு முறை பத்ரிநாதனைஅவர் வடிவில்மனமாற சேவித்தோம், தெய்வம் மனுஷ்ய ரூபேண
மனதுக்கு இதமான அந்தப் பொழுதை அனுபவித்துக் கொண்டே
மீண்டும் எங்கள் உணவகத்தை அடைந்தோம்,

சூடாக, சுவையாக உனவுகள் தயாரிக்கப்பட்டு எங்களுக்கு குழு நடத்துனரால் அளிக்கப்பட்டது, வயிறும் நிறைந்தது
மனது ஏற்கெனவே நிறைந்துவிட்டது ஒரு பூரணத்தை அனுபவித்தோம்
என்று சொன்னால் அது மிகையல்ல

ஜெய் போலோ பத்ரிநாத் கீ ........ஜேய்

அன்புடன்
தமிழ்த்தேனீ            rkc1947@gmail.com