சிறு வயதில் என்னுடைய பாட்டியும் ,தாயாரும்,
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக் கிளியே சாய்ந்தாடு, என்று பாடியும் ,
ஆனை ஆனை அழகர் ஆனை, அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
குட்டியானைக்கு கொம்பு முளைச்சுதாம் ,பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம், என்று சொல்லும் கொஞ்சுதமிழ் கேட்டுக் கேட்டு வளர்ந்தோம்,
மார்பிலே அம்பைத் தாங்கிய தன் பிள்ளையின் வீரம் கண்டு நெக்குருகி மார்பிலே பால் பீரிட்டெழ பிள்ளை இறந்த துக்கத்தையும் மறந்து,புறமுதுகு காட்டாத பிள்ளையைப் பெற்றெடுத்ததற்காக பெருமை கொண்ட வீரத்தமிழ்த் தாயின் கதைகள் கேட்டு வீரம் கொண்டோம்,
ஒரு பசுவின் குமுறலை அறிந்து, நீதி காக்க தன் மகனையே தேர்க்காலில்
இடரச் செய்த மனுநீதி சோழனின் கதை கேட்டு நீதி கற்றோம்
நாடு காக்கதன்னுயிரையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்ற பலருடைய வீரத்தை ,அஹிம்சை வழிகளை, உண்ணாநோன்பின் மகிமைகளை
கதர் ஆடையின் சக்தியை, தியாகத்தின் பெருமையை நம் பெரியவர்கள் சொல்லக் கேட்டு நற்பண்புகளை வளர்த்துக்கொண்டோம்
மஹாத்மா காந்தியிடம் எளிமையையும், நேர்மையையும் மனோ உறுதியையும் வாய்மையையும் கற்றோம்
பண்டித ஜவஹர்லால் நேருவிடம் தெளிந்த திடமான தீர்க்கமான
அரசியல் பாடம் கற்றோம்
சுபாஷ் சந்திர போஸ் என்னும் விடுதலை இயக்க வீரரிடம் நேர்மையான வீரம் கற்றோம்
கப்பலோட்டிய தமிழன், சுப்ரமணிய சிவா, போன்றோரிடம்
திட சிந்தனையையும் தீர்க்க தரிச்னத்தையும் கற்றுக் கொண்டோம்
ஆஷ் துரையை சுட்டுக் கொன்று அன்னியரிடம் அடிமைப்படக்கூடாதென்ற காரணத்தால் தன்னையும் சுட்டுக்கொண்ட வாஞ்சிநாதனின் தீரம் கற்றோம்,
உயிர் போனாலும் தேசக் கொடியை காப்பேன் என்னும் உறுதி பூண்டு
கொடிகாத்த குமரனின் வழியாக தேசபக்தியையும் நம் தேசக்கொடியின் பெருமையையும் கற்றோம்
இப்படிப்பட்ட பலருடைய தியாகத்தினால் விளைந்த இனிய சுதந்திரத்தை
அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்
தமிழ் காக்கவும் ,வளர்க்கவும் பாடுபட்ட உ வே சுவாமிநாதய்யர் போன்ற பலரது இடைவிடாத மனோ உறுதியையும் ஆற்றலையும் கண்டு வியந்து
தமிழ்ன் பெருமையை உணர்ந்தோம்
நம்முடைய பாரதியாரின் கனல் தெறிக்கும் பாடல்களை நம்மைப் பெற்றவர்கள் வாயாலேயே பாட அதைக்கேட்டு தேசப்பற்றும், ஞானமும் அடைந்தோம், தீராத விளையாட்டுப் பிள்ளை என்னும் கண்ணனின் திருவிளையாடல் கேட்டு இளமை இனிமையென கண்டோம்,
கொட்டடடா ஜெய பேரிகை கொட்டடா என்னும்பாடலைக் கேட்டு வீர முழக்கமிட்டோம்,ஓடி விளையாடு பாப்பா என்கிற பாட்டைக் கேட்டு வாழ்க்கையில் எந்தஎந்த பருவத்தில் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டோம், ”சகலகலாவாணியே சரணம் தாயே சங்கீத வீணா பாணியே”
என்னும் பாடலைக் கேட்டு தமிழில் துதி செய்யக் கற்றுக் கொண்டோம்
வாருங்கள் மறியல் செய்து மனம் மகிழ்ந்திட வாருங்கள்
என்னும் இனிய தமிழ் அழைப்பை ஏற்று மனதிலே வீரக்கனலும்
சுதந்திர வேள்விக் கனலும் விதிக்கப் பெற்று சுதந்திரம் கண்டோம்
அந்த சுந்தரத்தமிழ் இருக்க ,
லிட்டில் லிட்டில் ஸ்டார் பாட்டு எதற்கு ? ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை கற்றுக்கொள்வோம் அனைத்து மொழியினையும்
பாரதி சொன்னார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று ,பல மொழிகளக்ம் கற்ற பாரதியார்
அவைகளை ஆராய்ந்து தமிழைப் போற்றினார்
நம் தாயை அம்மாவென அழைக்காமல் மற்றவர்களையெல்லாம் அம்மாவென்று அழைத்தாலும் பலன் வருமோ
முதலில் தாயை நன்கு அறிவோம், பிறகு அனைவரையும் தாயாக மதிக்க்கப் பழகுவோம்.
இதை நம் மக்கள் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு நல்ல செய்திகளை தமிழிலே ,சுந்தரத் தமிழிலே அளிக்கவேண்டும்,முதலில் பெரியவர்களுக்கு ஆங்கில மோகம் தீரவேணும்,எல்லா மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் தாய் மொழியை முதலில் அறிதல் அவசியமன்றோ
எனக்கு ஒரு ஆச்சரியம், ஆங்கிலம் தெரியாமலே இத்துணை நாட்கள் நமக்கு தமிழிலேயே எல்லாவித வாழ்க்கை முறைகளையும் பெற்றோர்கள் முறையாக கற்றுக் கொடுத்தனரே, இப்போது அந்த ஞானம் எங்கு போயிற்று
விலங்குகள், பறவைகள், கூட எந்த தேசத்திலிருந்தாலும் அதன் தாய் மொழியிலேயே தன் குட்டிகளுக்கு கற்பிக்கிறது,
அன்னிய நாட்டில் இருக்கும் பசுக்கள் கூட அம்மா என்றே தமிழை உச்சரிக்கின்றன,நாம் விலங்குகளை, பறவைகளை விட கீழானவராய் ஆகிவிட்டோமா?
சிரிப்புத்தான் வருகுதையெ-உலகைக்கண்டால்
சிரிப்புத்தான் வருகுதையே என்னும்பாடல் ஷண்முகப்ரியா ராகத்திலும்,
அகத்தியர் தருந் தமிழை அன்னைபோல் வளர்த்தனை
சகத்திலே உனைப்போலுண்டோ தாய்மொழிக்குழைத்தவர்
இகத்திலே தமிழ்த்தவம் இயற்றிச் சங்க நூல்களின்
சுகத்திலே குளித்தனை சுவாமிநாத வள்ளலே என்னும் பாடல் காமாஸ் ராகத்திலும்
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்-இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்,
முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்
என்னும் மஹாகவி பாரதியாரின் பாட்டுகள் ஒலித்த நாட்கள்,
பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்- மிடிப்
பயம் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார் என்னும் பாடல் புன்னாக வராளி ராகத்திலே ஒலித்த அந்த நாட்கள்
வந்தே மாதரம் என்போம்- எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்என்னும் ஆனந்தக் களிப்பு ராகத்திலே பாடல் கேட்ட அந்த நாட்கள்
தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
என்னும் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ணமெட்டில் கேட்ட அந்த நாட்கள்
சுத்தானந்தபாரதியாரின்
ஔவை ஔவை என்றதும் அமுதம் ஊறும் வாயிலே
செவ்வையான நல்லறச் செயல்களோங்கும் வாழ்விலே
பாலுந் தேனும் பாகும் போலப் பைந்தமிழ் செழித்திடும்
நாலும் நாலுங்கூடி இந்த ஞாலமொன்றி இன்புறும்
என்னும் (ஜம்பைகுந்தலவராளி) ராகப் பாடலும்
இவையெல்லாம் மீண்டும் வாராதோ என்று ஏக்கமாய் இருக்கிறது
அந்தநாள் இனி வருமோ-சொல்லடீ அம்பலப் பசுங்கிளியே
என்னும் சுத்தானந்த பாரதி அவர்களின் பாடல் ஆரபி ராகத்திலே காதில் ஒலிக்கிறது, என்ன செய்ய...?
அன்புடன்
தமிழ்த்தேனீ
No comments:
Post a Comment