” இந்தியாவின் கடைசீ தேனீர்க்கடை “
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் முதன் முதலாக விண்கலத்தில் ஏறி நிலவினை அடைந்த போது அங்கே எந்தா சாரே சாயா குடிக்குமோ என்று ஒரு மலையாளி கேட்டதாக வேடிக்கையாக குறிப்பிடுவர்.
அது போல ஒந்தியாவின் ஒரு எல்லையாகிய பத்ரிநாத் என்னும் இடத்தில் நம் இந்திய எல்லையை ஒட்டிய மலைப்பகுதியில் ஒருவர் டீக்கடை வைத்திருக்கிறார், அதுதான் இந்தியாவின் கடைசீ டீக்கடை, அதற்குப் பிறகு திபெத் எல்லை வந்துவிடுகிறது அங்கு தேனீர் குடித்தோம்
அந்த தேனீர்க்கடையை அடைவதற்கு நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே
அந்த அனுபவம் நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.
நானும் என் மனைவியும் வருடா வருடம் பத்ரிநாத் ப்ரயாணத்தை வழி நடத்தும் ஒரு குழுவில் சேர்ந்து பத்ரிநாராயணனை தரிசிக்க வேண்டும் என்று பல நாட்களாக முயன்று கொண்டிருந்தோம், அப்போது ”ந்ருஸிம்மப் ப்ரியா' என்னும் பத்திரிகையில் ஒரு விளம்பரம் பல வருடங்களாக வந்து கொண்டிருப்பதை என் மனைவி சுட்டிக் காட்டினாள்,நானும் அந்தப் பத்திரிகையை எடுத்து படித்துப் பார்த்தேன், திரு பீ ஆர் தேவநாதன் என்பவர் அந்த யாத்திரையை நடத்துகிறார் என்று அறிந்து அவரை தொடர்பு கொண்டேன் ,அவரும் ஆஹா தாராளமாக வாருங்கள்,என்றார், அவர் கூறியபடி ஆளுக்கு 4500 ரூபாய் என்று எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து 9000 ரூபாய் காசோலை எடுத்து டெல்லியில் உள்ள தேவநாதனுக்கு அனுப்பினோம்,
நாங்களும் எங்கள் இருவருக்கும் டெல்லிக்கும் சென்னையிலிருந்து 1ம் தேதி தமிழ்நாடு விரைவு வண்டியில் பயணச் சீட்டு பதிவு செய்து, ஒன்றாம் தேதி இரவு கிளம்பி 3ம் தேதி டெல்லியில் திரு தேவநாதன் குறிப்பிட்ட வெங்கடேஸ்வரா ஆலயத்துக்கு சென்றோம், அங்கு யாத்திரை செல்ல பலர் தயாராய் வந்திருந்தனர்,முதலில் அந்த ஆலயத்தின் உள்ளே குடிகொண்டிருக்கும் திரு வெங்கடாசலபதியையும்,திரு மஹாலக்ஷ்மியையும் தரிசித்துப் பயணம் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் சிறக்க யாத்ராதானம் என்னும் வேண்டுதலை செய்து ,அனைவரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்,
பய பக்தி என்றொரு சொற்றொடர் உண்டு அதை பரிபூரணமாக உணர்ந்த
பத்ரிநாத் பயணம் பற்றி சொல்லப் போகிறேன்,
பயம் இல்லாமல் பக்தி வருவதில்லை,அல்லது நாம் எப்போது பயப்படுகிறோமோ அப்போதுதான் நம்மைக் காப்பாற்றும் சக்தியின் நினவு நமக்கு வருகிறது என்றும் கொள்ளலாம்,அப்போதுதான் நாம் அந்த சக்தியை வேண்டிக் கொள்ள ஆரம்பிக்கிறோம் என்று தெளிவாக உணர்த்திய பயணம்,
இந்த பத்ரிநாத் பயணம்,பெரியவர்கள் சொல்லிவிட்டுச் சென்ற அத்துணை வார்த்தை உபயோகமும் மிக யோசித்து சொல்லிவைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்,அவற்றை உணரும் தருணம் வரும்போதுதான் உணரமுடிகிறது நம் சிற்றறிவுக்கு,அது மட்டுமல்ல ஆபத்துக் காலங்களில்தான் ஜாதி மத ,மொழி,இன வித்யாசமில்லாமல் அனைவரும் ஒன்று படுகிறோம்,அல்லது அப்போதும் துவேஷம் பாராட்டிக் கொண்டு அழிந்து போகிறோம் என்பது மிகவும் இயல்பான ஒரு செய்தியாக உணரமுடிகிறது,
அது போன்று நமக்கு பல அறிவார்ந்த செய்திகளை உணர்த்திய பயணமாக இந்த பத்ரிநாத் பயணம் அமைந்தது என்றால் அது மிகையல்ல.
ஆகவே இந்த பத்ரிநாத் பயணத்தை என் அனுபவங்களை என்னுடைய சகோதர சகோதரிகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
இந்த பகிர்தலில் ஏதேனும் தவறு இருப்பின் பிழை பொறுத்துக் கொல்லுங்கள்,அல்லது என்னை திருத்துங்கள், காத்திருக்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------------------------
01/09/2008 திங்கட் கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்தோம், வழக்கத்துக்கு விரோதமாக சுமை தூக்கும் பணியாளர்கள் யாரும் கண்ணில் படவில்லை, ஒரே ஒருவர் மட்டும் இருந்தார், அவரை அழைத்து எங்கள் சுமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் இருக்கும் ரெயில் மேடைக்கு எடுத்துவரப் பணித்தோம், 50 ருபாய் வேண்டுமென்றார் , சரி தருகிறோம் என்று கூறிவிட்டு , நடக்க ஆரம்பித்தோம், எங்கள் விரைவு தொடர் 10 எண் மேடையில் நின்றிருந்தது,அருகிலேயே இருந்தது,
அங்கு சென்று இரு பெட்டிகள்,ஒரு பை ஆகியவற்றை இறக்கி வைத்துவிட்டு அந்த சுமை தூக்குபவர் 75 ரூபாய் கொடுத்தால்தான் போவேன் என்று அடம் பிடித்தார், அப்போதுதான் கவனித்தோம் அவர் போதை பானம் அருந்தி இருக்கிறார் என்று, 50 ரூபாய்க்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று உறுதியுடன் நான் சொல்ல அவர் தூய தமிழில் என்னை திட்டிவிட்டு,தள்ளாட்டத்துடன் நடைகட்டினார், அவரை ஒரு வழியாக சமாளித்துவிட்டு எங்கள் பெட்டி பைகளை அதன் இடத்தில் வைத்துவிட்டு 10.30 மணிக்கு ஏறி உட்கார்ந்தோம், விரைவுவண்டி புறப்பட்டது, சிறிது நேரத்தில் ஒருவர் கையில் பெட்டிகளை இருக்கையில் வைத்து பூட்டும் சங்கிலியுடன், வந்தார் அவரிடம் 100 ரூபாய் கொடுத்து அதை வாங்கி எங்கள் பெட்டிகளை இருக்கையுடன் சேர்த்து பூட்டிவிட்டு, நேரத்தை கழிக்க ஆரம்பித்தோம்,
எதிர் இருக்கையில் இருந்த ஒருவர் சார் நானும் என் நண்பரும் ஒன்றாக வந்தோம், அதனால் நீங்கள் இருவரும் அந்த இருக்கைக்கு சென்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து உட்காருவோம், முடியுமா என்றார்..
நானும் என் மனைவியும் சரி நட்பைப் பிரிப்பானேன் என்று கருதி எங்கள் பெட்டி பைகள் எல்லாவற்ரையும் எடுத்துக் கொண்டு அவர்களுடைய இருக்கைக்கு சென்று அங்கே உட்கார்ந்தோம்,
நான் என்னுடைய மடிக்கணிணியை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன் நல்ல தூக்கம் கண்ணை சுழற்றியது , குளிர்சாதன வசதி இருந்ததால் ,சுகமான தூக்கம் நிம்மதியாக தூங்கலாம் என்று தூங்க...ஆரம்பித்தோம்,ரெயில் விரைந்து கொண்டிருந்தது,
சார் பயணச்சீட்டு என்று ஒரு குரல் கேட்டது,பயணச்சீட்டு இருப்பு ஆய்வாளர் நின்றிருந்தார் ,கண்விழித்து பயணச்சீட்டை எடுத்து அவரிடம் காட்டி விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தோம்,இரவு நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்தவுடன் என் மனைவி இடார்சி என்னும் ரெயில் நிலையத்தில் எப்போதுமே கொள்ளைக்காரர்கள் அதிகம், அதனால் மிக ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் என்று சொன்னாள், வந்த தூக்கமும் ஒரு வித பயத்திலேயே சென்றுவிட்டது, இடார்சி ரெயில் நிலையம் வந்தது, இயல்பாக சிலர் இறங்கினர், மீண்டும் ரெயில் புறப்பட்டது, தூங்க ஆரம்பித்தோம்,
அவ்வப்போது நல்ல தூக்கத்துக்கிடையே கண்விழித்து, கண்விழித்து,பெட்டி பைகள் எல்லாம் இருக்கிறதா என்று பல முறை பார்த்து, ஒருவழியாக இறைவன் காப்பாற்றட்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து தூங்க ஆரம்பித்தோம், பொழுது விடிய ஆரம்பித்தது, 02/09/2008 செவ்வாய் காலை
டீ, காப்பி,தண்ணி னீளு,வாட்டர்,குளிர்பானம் என்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன,எழுந்தோம், சார் காலை சிற்றுண்டி வேண்டுமா என்றார் ஒருவர்,ஆமாம் கொடுங்கள், என்றோம் ,பல்தேய்த்துவிட்டு வந்து அவர் கொடுத்த சிற்றுண்டியை மிகவும் பொறுமையுடன் உண்டுவிட்டு, அந்த சிற்றுண்டியின் வாசனையை பொறுக்க முடியாமல்,வேறு வழியில்லாமல் மீண்டும் பல்தேய்க்க ஆரம்பித்தோம்,
அன்று பகல் பொழுது ரெயில் பணியாளர் ஒருவர் அளித்த மதிய உணவை உண்டோம், மீண்டும் பல் தேய்த்தோம், ஏதோ நம் ரெயில்வே உணவு விடுதி நிறுவனங்களின் உபயத்தால் பற்கள் சுத்தமாகின,
அன்று இரவுப் பொழுதை எப்படியும் கழித்தே ஆகவேண்டுமே, என் மனைவி நான் தூங்குகிறேன் என்றாள், சரி என்று சொல்லி அவளுக்கு வசதிகள் செய்து கொடுத்துவிட்டு,நானும் கண்ணயர்ந்தேன், ஏதேதோ கனவுகள், அவ்வப்போது வண்டியின் குலுக்கல், ஆங்காங்கே வண்டி நிற்கும் சத்தம், இவைகளுக்கு இடையே தூங்கினோம்,
மறுநாள் காலை 7.30 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தோம்,
ரெயில் நிலையத்தின் உள்ளே வந்தவுடன் 15 பேர் எங்களை சூழ்ந்து கொண்டனர்,ஒரு சர்தார்ஜீ வந்து கியா பைய்யா பூராலக்கேஜ் கே லேகர்
காடி பர் டால்கரேகா, ஔர் கஹா ஜானேவாலே ஆப், ஹம் லேகர் ஜாதாஹும் என்றார்,
எங்கே போகவேண்டும் நாங்கள் அழைத்துக் கொண்டு போய்விடுகிறோம்
என்று அதுவும் பற்றாக் குறைக்கு அருகிலேயே இருக்கும் இடமாகிய வெங்கடேச்வரா கோயிலுக்கு ,450 ரூபாய், என்று சொல்லி,
கடைசியில் 350 ரூபாய்க்கு பேரம் பேசி ,சரி என்று ஒரு வண்டியில் ஏறி உட்கார்ந்தோம்,அவர் எங்கெங்கோ சுற்றி எங்களை அழைத்துக் கொண்டு கடைசியாக அந்தக் கோயிலுக்கு அழைத்துப் போனார், அந்தக் கோயிலின் வாசலில் சென்று இறங்கி அவரை அனுப்பிவிட்டு, பெட்டி பைகள் எல்லாவற்றையும் வைத்து பார்த்துக் கொள்ள என் மனைவியிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்று,பத்ரிநாத் பயணம் ஏற்பாடு செய்திருந்த திரு பீ ஆர் தேவநாதனை ஒரு வழியாக கண்டு பிடித்து உள்ளே சென்றோம்,என்ன சார் இது மாதிரி ஏமாறரீங்க இந்த இடத்துக்கு 150 ரூபாய்தானே கொடுக்க வேண்டும் என்றார், சரி எல்லா இடத்திலும் ஜாதி, மொழி, மத பேதமில்லாமல் வாடகை வண்டிக்காரர்கள் சமத்துவமாய் இருப்பதை உணர்ந்தோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
,எனக்கு ஒரு வழக்கமுண்டு எப்போது காரிலோ, பேருந்திலோ
பயணம் சென்றாலும் ஓட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுவேன்
அதே சமையம் நானும் தூங்க மாட்டேன் அவரையும் ஓட்டும் போது
தூங்க விடமாட்டேன், அது மட்டுமல்ல, அந்த ஓட்டுனரிடம் சொல்லிவிடுவேன்.
நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் , ஆதாலால் நாங்கள் ஐந்து நக்ஷத்திர உணவு விடுதியில் உணவு உண்டாலும் தெருவோரக் கடையில் உண்டாலும் எங்களுடனே உணவு உண்ணுங்கள் நான் அதற்கும் சேர்த்து பணம் கொடுத்து விடுகிறேன் என்று, இதில் இரண்டு லாபம் உண்டு, ஒன்று ஓட்டுனர் நம்மையறியாமல் எங்காவது சென்று சோம பானம் , சுறா பானம் போன்றவைகளை அருந்த முடியாது,
இன்னொன்று அவருக்கு இவர்கள் நம்மை மதிக்கிறார்கள் என்கிற எண்ணம் உருவாகும் அதனால் இன்னும் கொஞ்சம் கவனமாக நம்மிடம் பேசிக் கொண்டே ஓட்டுவார், அவர் குடும்பக் கதைகளை சொல்லுவார், நமக்கும் உதவிகள் செய்வார், அவருக்கும் ஒரு குடும்பத்துடன் சுற்றுலா சென்றது போன்ற உணர்வு அவரையும் உற்சாகமாக வைக்கும்
அதே போல் இந்த முறையும் சிறிது நேரம் அவருடன் உட்கார்ந்திருந்து விட்டு அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்ற உணர்வு ஏற்படுத்தி விட்டு என்னுடைய இருக்கையில் வந்து உட்கார்ந்தேன்
நாங்கள் பயணம் செய்த அந்தப் பேருந்தில் 34 பேர் இருந்தனர், அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர், அவர்களுடன் 10 நாட்கள் பொழுதைக் கழிக்க வேண்டும், ஆகவே என் இருக்கையிலிருந்து எழுந்து முதலில் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அவர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.
அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுமாறு ,அறிமுகப் படலம் முடிந்ததும் , அனைவரும் என்னிடம் நாங்கள் உங்களை தொலைக் காட்சிகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம் என்று கூறினர்,அந்த ப்ராபல்யம் எனக்கு இன்னும் வசதியாக இருந்தது நாம் இப்போது பயணம் செல்கிறோம், அனைவரும் ஒன்றாக 10 நாட்கள் இருக்கப் போகிறோம், நம்முடைய பயணம் இனிமையாக இருக்க நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம்,
என்று கூறிவிட்டு, நான் எப்போதுமே அதிகப் ப்ரசங்கிதானே, முதலில் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தேன், எல்லோரையும் பார்த்து பொதுவாக உறவுக்காரர்கள் யார் என்று ஒரு கேள்வி எழுப்பினேன்.
அனைவரும் அமைதியாக என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்
பலவேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அவர்கள் பலர் பல விதமாக பதில் அளித்தனர்
கடைசியாக நான் பதில் சொன்னேன், இந்த வினாடி முதல் நாம்தான்
உறவுக் காரர்கள், ஏனென்றால் , இங்கிருப்பவர்களுக்கு நல்லது நடந்தாலும் ,கெடுதல் நடந்தாலும் நமக்குதான் முதலில் தெரியும், பிறகுதான் உரிமையுள்ள உறவுக்காரர்களுக்கு தெரியும், ஆகவே நாம்தான் உறவினர் ஆகவே அனைவரும் எந்த நிலையிலும் என்னை உதவிக்கு அழைக்கலாம் என்று சொல்லிவிட்டு, நான் அவர்களிடம் இங்கு கூடியிருக்கும் நாம் அனைவரும்தான் முதலில் உறவுக்காரர்கள்,
ஏனென்றால் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் முதலில் நம் கூட இருக்கும் அனைவருக்கும்தான் முதலில் தெரியும் ,பிறகுதான் நம்முடைய
சொந்தக்காரர்களுக்கு தெரியும், ஆகவே இந்த பயணம் முடியும் வரையிலாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து பயணத்தை சிறப்பாக, இனிமையாக நடத்துவோம்
என்று வேண்டிக் கொண்டேன், அனைவருக்கும் என் எண்ணம் புறிந்ததால்
மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டனர்,
.அங்கே ஒரு சுமுகமான,இதமான, சூழ்நிலை உருவானது, மேலும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி நான் அனைவரையும் வேண்டிக் கொண்டேன் ,அனைவரும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டனர்,
அடுத்து ஒரு பெரியவர் எழுந்தார் திரு கிருஷ்ணமாச்சாரி சொல்வதில் எனக்கு முழு சம்மதம் ,ஆகவே அனைவரும் இந்த சுற்றுலாவை மகிழ்ச்சிகரமாக்க கைகோர்த்து முயலுவோம் என்றார்,
அனைவரும் கரவொலி எழுப்பினர், நல்ல வேளை அனைவருமே சந்தோஷமாக , நான் கூறிய உண்மையை உணர்ந்து , செயல்பட ஆரம்பித்தனர்,
முதலில் அவரவர் பைகளில் இருந்த எங்களுடைய பையையும் சேர்த்துதான் சொல்கிறேன், உணவுப் பொருட்கள் அனைவருக்கும் அனைவராலும் வினியோகிக்கப்பட்டது, உணவு மட்டும் வெளி வரவில்லை அனைவரின் உள்ளமும் வெளியே வந்து உறவாடத் துவங்கியது,அந்தப் பேருந்து களைகட்டியது, இனிப்பும் , சுவையான உணவுப் பொருள்களும்
அதற்கும் மேலாக நகைச்சுவையான பேச்சுக்களும் அவரவர் அனுபவங்களும் பறிமாறிக் கொள்ளப்பட்டன, எந்த பொருள் வாங்கினாலும் அனைவரும் அனைவருக்கும் வாங்கினர்,
எங்களின் இனிமையான பயணம் துவங்கியது,
அதன் ஆரம்பமாக அனைவருக்கும் நாங்கள் வாங்கி இருந்த ஆப்பிள் பழங்களை மிக அழகாக துண்டுகளாக்கி அனைவரும் உண்ணுவதற்கு வசதியாக அளித்தேன், அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கி உண்டனர் ,அதன் விளைவாக அவரவர்களும் தங்களிடம் இருந்த உணவுப் பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்து சந்தோஷமாக நிம்மதியாக ஆனந்தமாக பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தோம்,ஒவ்வொருவரும் சுவையான நிகழ்ச்சிகளையும் கூற ஆரம்பித்தனர், மிக சந்தோஷமான பயணமாக அமையும் என்னும் நம்பிக்கை அனைவருக்கும் பிறந்தது, பேருந்தை எங்கு நிறுத்தினாலும் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு உணவுப் பொருக்களும், தண்ணீரும் வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர்
ஓட்டுனர் வெகு சாமர்த்தியமாக பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார்
கலகலப்பாக ப்ரயாணம் சென்று கொண்டிருந்தது.
மிக வயதான இருவர் எங்களில் மூத்த தம்பதியர் அவர்களும் எங்கள் கூடவே குழந்தைப்போல சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
பேருந்து ஓட்டுனர் அந்த மலைப்பாதையில் ஆபத்துக்கள் நிறைந்த ,ஒருபக்கம் மணலும் ,கற்களும் சரியும் பகுதியும், மறு பக்கம் ஆபத்தான அதள பாதாளம் போன்ற பகுதியில் கல்லும் மணலும் நிறைந்த மலைப்பாதையில் வெகு திறமையாக ஓட்டிக் கொண்டு வந்தார், அங்கு கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அதுபோன்ற பாதைகள், ஆனால் அந்த ஓட்டுனரின் திறமையால் மிக லாவகமாக கையாளப்பட்டு பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது, ஒவ்வொரு வளைவிலும் பேருந்து மிகக் குறுகிய பாதையில் செல்லும் போது அனைவரின் முகத்திலும் பயம் தெளிவாகத் தெரிந்தது.
எனக்கும் பயமாகத்தான் இருந்தது ஆனாலும், நான் கொஞ்ஜம் தைரியம் வரவழைத்துக் கொண்டு, அனைவரையும் திசை திருப்பி ,பல கதைகளும் ,நகைச்சுவை நிகழ்ச்சிகளும் சொல்லிக் கொண்டே வந்தேன், அனைவரும் பங்கு கொள்ள ஆரம்பித்தனர், இதற்கு நடுவே ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே காரயத்தில் கண்வைய்யடா தாண்டவக் கோனே என்னும் பாடலுக்கேற்ப புகைப்படங்களும் எடுக்க ஆரம்பித்தேன், திடீரென்று பேருந்து ஒருபக்கமாக ஓட ஆரம்பித்தது, ஏதோ ஒரு உணர்வில் ஜன்னலுக்கு வெளியே கையை விட்டு புகைப்படம் எடுத்திக் கொண்டிருந்த நான் ,கையை திடீரென்று உள்ளுக்கு இழுத்தேன், பேருந்து ஒருபக்கம் சாக்கடை போலிருந்த ஒரு பள்ளத்தில் சக்கரங்கள் இறங்கி மலைமேல் சாய ஆரம்பித்தது பேருந்து,அனைவரும் ஒட்டுமொத்தக் குரலில் அலற ஆரம்பித்தனர்.
என்னுடைய கைக் கடிகாரம் நொறுங்கியது, ஆனால் கை நல்லவேளையாக மலைக்கும் பேருந்துக்கும் இடையே மாட்டிக் கொள்ளாமல், தப்பித்தது,நல்ல வேளை பேருந்து இடது பக்கம் சாய்ந்தது,வலது பக்கம் சாயவில்லை,சாய்ந்திருந்தால் அதளபாதாளம்,அன்று நாங்கள் அனைவரும் தப்பித்தது இறைவன் அருள்தான், ஓட்டுனர் மிகத்திறமையாக சமாளித்து பேருந்தை நிறுத்தினார், ஆனால் சாக்கடையில் சக்கரம் மாட்டிக்கொண்டதால் மேற்கொண்டு இயக்க முடியாமல் ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது பேருந்து,
முதலில் சமாளித்துக்கொண்டு எழுந்த நான் , அனைவருக்கும் தைரியம் சொல்லி ,என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே
ஒரு பெரியவர் உரத்த குரலில் ,அனைவரும் ஓட்டுனரின் இருக்கை வழியாக பேருந்தை விட்டு இறங்கி விடுவது நல்லது என்றார், எனக்கும் அதுதான் சரி எனப்பட்டது , அனைவருக்கும் தைரியம் சொல்லி என் மனைவியையும், அந்தப் பெரியவரின் மனைவியையும் தைரியமாக இறங்கச் சொன்னோம், நாங்கள் இருவரும் கீழே இறங்கி அவர்கள் இருவரையும் கைலாகு கொடுத்து கீழே இறக்கினோம்.
பிறகு தைரியம்பெற்ற அனைவரும் ஒவ்வொருவராக பதறாமல் கீழே இறங்கச் சொன்னோம், அனைவருக்கும் உதவி செய்து, அனைவரையும் கீழே இறக்கி விட்டோம், ஆனால் என்னுடைய தமையன் மனைவி, என்னுடைய மன்னி அவர்களால் அந்த ஓட்டுனரின் இருக்கைக்கும் ஸ்டியரிங் வீல் க்கும் நடுவே இறங்கமுடியவில்லை, அதனால் அவரை மட்டும் பேருந்து சாய்ந்திருக்கும் பகுதிக்கு நேர் எதிர் பக்க உட்காரவைத்துவிட்டு, சாலையில் தற்செயலாக வந்த மிலிடரி பேருந்தை கை காட்டி நிறுத்தி நிலைமையை சொன்னோம்.
அவர்களும் அங்கே சாலை வேலை செய்து கொண்டிருந்த அனைவரையும் உதவிக்கு அழைத்தோம், அனைவரின் உதவியோடு, இரும்புச் சங்கிலியால் கட்டி பேருந்தை மிலிடெரி பேருந்தின் உதவியால் இழுத்தோம், இரும்புச் சங்கிலி அறுந்தது, மீண்டும் அந்த இரும்புச் சங்கிலையைக் கட்டி ஒரு வழியாக பேருந்தை சாலைக்கு கொண்டு வந்தோம், பேருந்தின் உள்ளே இருந்த என் மன்னிக்கும், எங்கள் அனைவருக்கும் போன உயிர் மீண்டும் திரும்பி வந்தது,நல்ல வேளை என்னுடைய கைகடிகாரம் மட்டும்தான், உடைந்தது, மற்றபடி யாருக்கும் எந்த சேதமுமில்லாமல் காப்பாற்றிய பத்ரிநாதனுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, இறைவனை வேண்டிக் கொண்டு பயணத்தை தொடங்கினோம், ஆனால் அந்த சிறிது நேரம், அனைவருமே
இறைவனை துதிக்கத் தொடங்கினோம் என்பதுதான் உண்மை,
ஆக பயம் வந்தால்தான் பக்தி வருகிறது,
என்னுடைய பதட்டத்தை தணித்துக் கொள்ளவும்,அனைவரின் பதட்டத்தை தணிக்கவும், உரத்த குரலில் ஒருபாட்டு பாடச்சொல்லி ஒருவரை வேண்டிக் கொண்டேன், அவரும் பாடத்துவங்கினார்,
அவர் பாடி முடித்தவுடன் போலோ பத்ரிநாத்கீ என்றேன், அனைவரும்
ஜெய் என்றனர் ஒருமித்த குரலில்,அந்தப் பாட்டு பாடிய அவருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு,ஆனால் விபத்து நடந்த போது இருந்த பதட்டத்தைவிட அவர் பாடும்போது எனக்கு பதட்டம் அதிகமாகிவிட்டது என்று நான் சொல்லவும், அங்கே குபீரென்று ஒரு சிரிப்பலை பரவியது, சூழ்நிலை இயல்பானது,அதற்குப் பிறகு பாட்டுப் பாடிய அவரிடம் தனியாக சென்று வேடிக்கையாக சொன்னேன் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று கூறவும் அவரும் அதனாலென்ன பரவாயில்லை, உங்கள் புத்திசாதுர்யம் எனக்கு பிடித்திருக்கிறது என்றார்,
மேலும் அவர் எதையும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றார், அது போதாதா நமக்கு..அப்படியானால் ஒரு சத்தியம் செய்து கொடுக்க அவரை வேண்டினேன்இந்த பயணம் முடியும் வரையில் பாடுவதில்லை என்று, மீண்டும் ஒரு குபீர் சிரிப்பலை, நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம்,
பேருந்து சிறிது தூரம் ஒரே சீராக சென்றுகொண்டிருந்தது, திடீரென்று
ஓரிடத்தில் நிறுத்தினர் பேருந்தை, அனைவருக்கும் அங்கு உணவளிக்கப்பட்டது, அங்கு இயற்கை எழில் தன்னுடைய பரிபூரணமான
படைப்பை அள்ளித் தெளித்திருந்தது, அனைத்தையும் என் கையடக்க புகைப்படக் கருவியில் பதிவு செய்தேன், நேரம் கடந்தது,ஆனால் பேருந்தை அங்கிருந்து நகர்த்தவே இல்லை, ஓட்டுனரிடம் காரணம் கேட்டேன்,அங்கு முன்னால் சாலையில் மலையிலிருந்து கற்களும், மணலும் விழுந்து சாலையே மூட்டிவிட்டது.
சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு, அவைகளை அப்புறப்படுத்த வண்டி வந்து கொண்டிருக்கிறது, அவைகளை அப்புறப்படுத்திய பின் தான் பேருந்து செல்லும் என்றார் மிக இயல்பாக, அவர் பல பயணங்களில் பார்த்திருப்பார், ஆனால் எங்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது,
சுமார் 5 மணி நேரம் அங்கேயே காத்திருந்தோம், மீண்டும் பேருந்து புறப்பட்டது,
அங்கு பத்ரிநாத் உள்ளே செல்ல குறிப்பிட்டஒவ்வொரு மணி நேரங்களில்
அனுமதிக்கிறார்கள்,அங்கு நுழைவாயிலில் சென்று காத்திருந்தோம்,எங்களுக்கு முன்னால் பல பேருந்துகள், நின்றிருந்தன
சரி அனுமதி கிடைக்கும் வரை அங்கே இருக்கும் மிக அழகான சூழ்நிலைகளைப் படம் எடுக்கலாம் என்று பேருந்தைவிட்டு இறங்கி நானும் இன்னும் இருவரும் நடக்க ஆரம்பித்தோம், மிக அருமையான இயற்கைக் காட்சிகள், சுற்றிலும் அழகான மலைகள், பனி படர்ந்த மலைகள், எல்லாவற்றையும் படம் எடுத்துக் கொண்டு மீண்டும் பேருந்தை நெருங்கினோம், பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம், ஓட்டுனர் வண்டியை
முடுக்கினார், பத்ரிநாத்தில் நுழைந்தோம் , ஜை போலோ பத்ரிநாத்கீ
என்றார் ஒருவர் அனைவரும் ஜெய் என்றோம்,
பத்ரிநாத்தை அடைந்தோம்
எங்களுடன் வந்திருந்த பயண நடத்துனர் , அனைவருக்கும் அறை ஒதுக்கி கொடுத்துவிட்டு,சீக்கிறம் குளித்துவிட்டு வாருங்கள்,
பத்ரிநாதனை சேவிப்போம் என்றார்,,,,குளிப்பதா ... 10500 மீட்டர் உயரம் , பனிபரவிய மலைகள்,
வாயைத் திறந்தாலே புகை வருகிறது, உடல் குளிர் தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறது, கை விரல்கள் கற்றுக்கொள்ளாமலே தாளம் போடத்துவங்கி விட்டது, அத்தனையையும் பத்ரி நாதனை தரிசிக்க வேண்டும் என்ற தாகத்தினால் பொறுத்துக் கொண்டு குளித்தோம், குளிர் உடலுக்குதானே ,மனதுக்கு ஏது குளிர் மனதைக் கட்டுப்படுத்தினால் இமையமலையிலும் நம்முடைய உடல் சூட்டை 98.4 என்னும் இயல்பு நிலையிலே வைத்திருக்க முடியுமே. சித்தர்கள் செய்கிறார்களே
, என்றெல்லாம் நினைவுக்கு வந்தாலும் , குளிர் வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது என்பதுதான் உணமை,
அப்போது குழு நடத்துனர் அந்தக் கோயில் உருவான கதை சொன்னார்
ஆதிசங்கரர் நிருமாணித்த கோயில் அதுவென்றார்.
கர்பக்கிருக மூர்த்தி சாளக்ராம வடிவில் இருப்பதாகவும் சொன்னார்
சைவமும் வைணவமும் கலந்தே இந்து மதம் வளர்ந்திருக்கிறது
இவ்வளவு விஞ்ஞான வசதிகள் நிறைந்த இக்காலத்திலேயே
அந்தக் கோயிலுக்கு செல்ல நாங்கள் இவ்வளவு பாடு பட்டோமே
அந்தக் காலத்தில் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில்,
10,500 மீட்டர் உயரத்தில் இருக்கும் அந்த இடத்துக்கு எப்படி ஆதி சங்கரர் சென்றார் ...? எப்படி அந்த சாளக்ராமத்தை அங்கே நிருவினார் .
நினைத்துப்பார்த்தாலே ஆச்சரியமாக இருக்கிறது ,
நம்முடைய பெரியோர்கள் அதிசிய சக்தி வாய்ந்தவர்கள்தான்
அவர்களுக்கு முன்னால் நாமெல்லாம் வெரும் தூசிகள்
என்று தோன்றியது,உண்மைதானே, நம் இந்து மதத்தில் இருந்த பெரியவர்கள் செய்யாத சாதகங்களா,சாதனைகளா, என்ன செய்வது அப்போதெல்லாம் உலக சாதனை புத்தகங்கள் இல்லையே அவைகளைப் பதிவு செய்ய .
நம்முடைய இந்துமத சாதனையாளர்கள் தாங்கள் செய்த அனைத்தையுமே
இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு,எல்லாம் அவன் செயல் என்று வாயாலே சொன்னாலும் , அவர்களது இடைவிடாத முயற்சியும் ,மனோ உறுதியும் தானே அவர்களை இது போன்ற சாதகங்களை செய்ய வைத்திருக்கிறது என்று என்ணுகையில் கண்கள் பனிக்கின்றன,
மனம் விம்முகிறது, ஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் எத்தனை மதங்கள், வந்தாலும் இந்து மதத்தின் ஒரு சிறு துறும்பைக் கூட அசைக்க முடியாது, ஆன்மீகம் வளர்வதை தடுக்க முடியாது, என்பது நிச்சயம்,,
இந்து மதத்தையும் , தமிழையும் அறிந்து கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்யலாமே தவிற ,ஆராயலாமே தவிர, ஓரணுவைக் கூட பூரணமாக உணர நமக்கு சக்தி போதாது என்பதே அடியேனுடைய தாழ்மையான அபிப்ராயம்.
பத்ரிநாதரை சாளக்ராம வடிவில் கண்ட ஆதி சங்கரர்
கோயிலை நிறுவி அங்கே சாளக் க்ராமத்துக்கு நித்திய ஆராதனை செய்ய
தமிழகத்திலும் மற்றும் பல இடங்களிலும் இருக்கும் சைவ வைஷ்ணவ மடங்களில் யாரேனும் ஒருவர் வந்து பொறுப்பேற்கும் படி அழைத்தார்.
ஆனால் யாருமே அந்த மலையில் அந்தக் குளிரில் சென்று ஆராதனை செய்ய மறுக்கவே, கேரள நம்பூதிரி ஒருவர் ஒப்புக் கொண்டாராம், ஆராதனை செய்ய.
அதனால் இன்றும் கேரள நம்பூதிரிதான் அங்கு நித்ய ஆராதனைகள் செய்கின்றார், அந்த உரிமை அந்தக் கேரள நம்பூதிரிகளின் வம்சத்துக்கு
ஆதி சங்கரரால் பட்டயம் எழுதித்தரப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
நாங்கள் இரவு எட்டுமணிக்கு 1000 ரூபாய் அனுமதிச் சீட்டு வாங்கிக்கொண்டு (இருவர் மட்டுமே ஒரு பயணச்சீட்டுக்கு அனுமதிக்கப் படுவர்) பகவான் பத்ரி நாராயணரின் தரிசனத்துக்காக காத்திருந்தோம்.
அனுமதிச் சீட்டு வழங்கியவர் ஹிந்தியில் சொன்னார் உட்காருங்கள் உங்கள் பெயர் படிக்கப்படும் என்று, அனுமதிச் சீட்டில் என்னுடைய, பெயர் கோத்திரம் .
எங்கிருந்து வந்தவர்கள் என்னும் விவரம் எழுதிதான் அனுமதி சீட்டு என்னிடம் அளிக்கப்பட்டது , எங்களைப் போலவே ப்ராகாரத்தில் அனுமதிக்காக உட்கார்ந்திருந்தவர்கள் அனைவருமே பலவிதமான இறைப் ப்ரார்த்தனை பாடல்களைப் பாடிய வண்ணம் இருந்தனர், நாங்களும் எங்களுக்குத் தெரிந்த அத்த்னை ச்லோகங்களையும் பாடிக் கொண்டே உட்கார்ந்திருந்தோம் .
மனம் அமைதியாய் இருந்தது, மகிழ்வாய் இருந்தது, ஒவ்வொருவர் பெயராக அழைக்கப்பட்டது, தமிழ்நாடு கிருஷ்ணமாச்சாரி ,ஆனந்தவல்லி கிருஷ்ணமாச்சாரி என்று ஒலிபெருக்கியில் பெயரை அழைத்தவுடன் நானும் என் துணைவியாரும் வரிசையில் நின்றோம், உள்ளே நுழைந்தோம் .
ஜகத் ஜோதியாக பத்ரிநாராயணரின் தோற்றம், அங்கே நடுவே உட்காரச் சொன்னார்கள் ஸ்வாமிக்கு முன்னால், ,அனைவரும் உட்கார்ந்தோம், அங்கே ஒரு கேரள நம்பூதிரி சாளக்ராமத்தில் அழகு படுத்தியிருந்த அத்துணை ஆடைகளையும் ஒரு கையால் களைந்து கொண்டே, மிக லாவகமாக, வேரு ஆடைகளை உடுத்தி எங்கள் கண் முன்னாலேயே ஒரு மந்திரவாதி போல பத்ரிநாரயணரின் பல அலங்காரத்தை காட்டினார்.
அப்போது அங்கே இறைவனின் நாமஸ்மரணத்தை தவிர வேறு எதுவுமே
காதில் ஒலிக்கவில்லை, கண்கள் அவனைத்தவிர வேறு எதையும் பார்க்கவில்லை, எங்களை நாங்கள் இழந்து அவனுடன் ஒன்றிக் கலந்தோம் . கடைசியில் பகவான் இரவு தூங்குவதற்குண்டான ஆடைகளை அணிவித்துவிட்டு திரையை மூடினர்,நம்பூதிரி.
அப்போதுதான் எங்களை இழந்த நாங்கள் மீண்டும் எங்களுடன் மீண்டு இணைந்தோம் . வரிசையில் நின்று ப்ரசாதம் வாங்கினோம்,
நல்ல தேக காந்தியுடன் விளங்கிய ஒரு பெரியவர் பகவன் நாமாவளியை சொல்லிக் கொண்டே கண்களில் கருணையுடன் என்னையும் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு ப்ரசாதம் அளித்தார், கர்பக் கிருஹத்தின் மேல் வைத்த பார்வையை அகற்றாமல் மூடியிருந்த திரையையும் தரிசனம் செய்து கொண்டே வெளியே வந்தோம் .
ஏதோ பூரணமான ஒரு மன நிறைவுடன் படிக்கட்டில் இறங்கி வந்தோம்.
திடீரென்று எங்களை பத்துபேர் சூழ்ந்து கொண்டனர்,
பத்ரிநாத் கோயிலோடு உங்களையும் சேர்த்து புகைப்படம் எடுத்துத் தருகிறோம் என்று, அவர்களில் ஒருவரை தேர்வு செய்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம், அங்கே ஒரு சாது நின்றிருந்தார் அவரிடனம் நான் சென்று இந்தியிலே கேட்டேன் அய்யா நீங்கள் வெகுநாட்களாக இங்கிருக்கிறீர்களா பத்ரிநாதனைப் பற்றி நல்ல விவரங்கள் சொல்ல முடியுமா என்று
அதற்கு அவர் கவலைப்படாதீர்கள் உங்கள் ஆர்வம் என் சிந்தனையை தூண்டிவிட்டது, நீங்கள் பணிவாக கேட்ட விதம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, பத்ரிநாதன் என்னை பணிக்கிறான், எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லும்படி, சொல்கிறேன் என்று தமிழில் கூறினார்,
ஆஹா இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே.
நாங்கள் அனைவரும் ஆர்வத்துடன் உட்கார்ந்தோம் அவர் சொல்வதைக் கேட்க நான் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தேன் அமைதியாக இருந்து அவர் சொல்வதை கேட்கும் படி உட்கார்ந்து கேட்போமா,,,,?
அவர் சொன்னவை:
இந்தப் புனித பத்ரிநாதரின் கோயில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது என்பதற்கு சான்றுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை
ஆனால் நான் என்னுடைய பெரும்பாலான வாழ்நாட்களை இங்கேதான் கழிக்கிறேன், அடிக்கடி இங்கே வந்து பத்ரிநாதனை சேவிப்பதிலேயே
வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தக் கோயில் அலக்நந்தா நதியின் கரையில் நாராயண பர்வதத்தின் மடியில் அமைந்திருக்கிறது,அதோ அங்கே பாருங்கள் தப்த குண்டம் என்னும் வென்னீர் ஊற்று,அந்த வென்னீர் ஊற்றில் குளித்தால் நாம் செய்த அத்துணை பாவங்களும் கழுவப்படும் என்பது ஐதீகம்,
சரித்திரத்தில் அசோகசக்கரவர்த்தி காலத்தில் பௌத்தர்களால் வழிபடப்பட்ட கோயில் இந்த பத்ரிநாதர் , பத்மாசனத்திலே கருப்பு விக்ரகமாய் சாளக்ராமத்திலே வீற்றிருப்பதுபோல இருக்கிறார்,ஆனால் ஸ்கந்த புராணத்தின் படி ஆதிசங்கரரால் நாரதகுண்டத்திலே கண்டு பிடிக்கப்பட்டு,8ம் நூற்றாண்டிலே மறுபடியும் ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்தார் என்று கூறப்படுகிறது என்றார்.
,இந்த பத்ரீநாதரை பிரும்மா விஷ்ணு, சிவன் ,துர்கை என்று நாம் எந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு சேவிக்கிறோமோ அதே தெய்வம் போல காட்சி அளிப்பார் என்று அவர் சொன்னார்
எனக்கு மனோரஞ்சிதம் என்னும் மலரின் நினைவு வந்தது.
மலர்களிலே மனோரஞ்சிதம் என்னும் ஒரு மலருண்டு
அந்த மலரை நாம் எந்த மணத்தை நினைத்து முகர்கிறோமோ
அந்த மணம் அந்த மலரிலே வரும் என்று கூறுவர்.
அது போல பத்ரீநாதனும் ஒரு மனோரஞ்சிதந்தானோ என்று தோன்றியது
நம் மனதிலே தெய்வத்தை எப்படி வணங்குகிறோமோ அப்படி
அவன் தோன்றுவான் என்று சொல்வார்கள்.
இங்கு என் தாயாரின் வாழ்விலே நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும் என் தயார் ஆர் கமமலம்மாள் அவர்கள் ஸ்ரீரங்கத்திலே ஒரு அரங்க சேவை செய்யும் குடும்பத்திலே பிறந்தவர்.
அரஙனைப் பற்றியவர்கள் ஒருவனைப் பற்றி ஓரகத்தே இரு என்னும் தத்துவத்தை கடைப்பிடிப்பவராகவே இருந்தனர் அந்த நாட்களில்
அந்த வளர்ப்பு முறை காரணமாக என் தாயாரும் அரங்கனுக்குதான் முதலிடம் அளிப்பார்கள்.
ஆனால் அவர் பல கதைகள் கவிதைகள் எழுதி பொது மன்ப்பான்மையை வளர்த்துக் கொண்டதால் மற்ற தெய்வங்களை நிந்தனை செய்ததில்லை
அப்படிப்பட்ட என் தாயார் ஒரு முறை தன்னுடைய சமவயது பெண்மணிகளால் ஒரு ஆன்மீகப் பயணத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்,
அந்தப் பயணத்தில் திருத்தணி முருகன் கோயிலும் ஒன்று.
சில கோயில்களின் தரிசனங்கள் முடிந்த பிறகு,அனைவரும் முருகன் கோயிலுக்கு சென்றிருக்கின்றனர், அங்கே மற்ற அனைவரும்
கமலம் நீங்கள் முருகன் கோயிலுக்கு வருவீர்களா என்று கேட்க
என்தாயார் தன்னுடைய தனிப்பட்ட கொள்கைகளால் மற்றவர்கள் மனம் புண்படக்கூடாது என்னும் கொள்கையால் நிச்சயமாக வருவேன் என்று கூறிவிட்டு அவர்களுடன் முருகன் கோயிலுக்கு சென்றிருக்கிறார்
அங்கே அனைவரும் வேகமாக முன்னால் செல்ல என்னுடைய தாயார் மட்டும் கோயிலை அணுஅணுவாக ரசித்தபடி மெதுவாக செல்லவும்
,முருகன் சன்னதியில் என் தாயாரும் முருகனும் மட்டுமே தனித்து விடப்பட்டனர், கண்ணார முருகனை தரிசித்த என்தாயார் எப்படி தரிசித்தார் தெரியுமா முருகனை அரங்கனாக உருவகம் செய்து கொண்டு சேவித்தார் என்று என் தாயாரே தன் வாயால் சொல்லக் கேட்டேன்.
முருகனை வழிபட்டுவிட்டு அங்கே இருந்த படிக்கட்டில் தன்னை மறந்து உட்கார்ந்து முருகனையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அவர்களை தேடிக் கொண்டு வந்த மற்றவர்கள் வாருங்கள்
போகலாமா என்று அழைத்து வந்திருக்கிறார்கள்.
இதில் சுவையான செய்தி என்னவென்றால்
அன்று வீட்டுக்கு வந்தவுடன் என் தாயார் முருகனைப் பற்றி ஒரு பாடல் இயற்றினார்,அந்தப்பாடலைக் கேட்கவேண்டுமானல் மண்ணின் குரல் பகுதியிலே கேளுங்கள்
பாட்டின் ஆரம்பம் 'தனிமையில் இருந்தேனடி”
அந்தப் பாட்டிலே தன்னுடைய உண்மையான மனதைபற்றி அழகான வரிகளில் சொல்லி இருப்பார் அந்தப் பாடலில் ஓரிடத்தில்
'பொய்யாக அவன் பேரை பூசணையில் சில வேளை
கள்ளமாய் உரைத்தேனடி கந்தன் கவர்ந்து விட்டான் என்னையடி “
வெண்மதிச் சடையுடைய வேந்தன் சிவபாலன்
தண்மதி முகத்தினில் தன்னை மறந்து நின்று
தனிமையில் இருந்தேனடி”
என்று பாடி இருப்பார்கள்
என் மனதிலே நிறைந்தவன் திருவரங்கன், ஆனால் நான் அவன் போல் உன்னை நினைத்துக் கொண்டு சேவித்தேன் ஆனாலும் கந்தா நீயும் எனைக் கவர்ந்து விட்டாய் என்னும் பொருள் வரும்படி எழுதியிருப்பார்கள்
ஆக நம் மனதிலே நாம் செய்யும் உருவகமாக தெய்வம் காட்சி அளிக்கிறது அவ்வளவே.
தெய்வம் மனுஷ்ய ரூபேணா என்று சொல்வார்கள்
ஆமாம் தெய்வம் மனிதர்கள் கற்பனை செய்யும் ரூபத்துக்கு வருவான்
என்பது உண்மைதானே.
இந்த பத்ரிநாதரின் கோயிலை மூன்று பாகமாக பிரிக்கலாம்
முதலாவது உள்ளே நுழைந்தவுடன் காணப்படுவது சபாமண்டபம் என்று சொல்கிறார்கள்,அங்கே காலை 6.30 மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரையிலும், மீண்டும் மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரையிலும் பத்ரிநாதன் தரிசனம் கொடுக்கிறார்.
இந்த பத்ரிநாதனை பஞ்ச பூதங்களும் அனைத்து தேவர்களும் துதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஏனென்றால் அவருடைய தலையில் விஷ்ணு பத்னியாகிய
மஹாலக்ஷ்மி அமர்ந்திருக்கிறாளாம்.
இவ்வளவையும் எங்களுக்கு கூறிய அவர் கடைசியாக
ஒரு வேண்டுகோள் என்றார் .
என்னவென்று கேட்டோம், இங்கே பலர் பகவானின் பெயரைச் சொல்லி
பூஜை செய்கிறேன் , என்றெல்லாம் சொல்லி பணம் கேட்டு ஏமாற்றுகிறார்கள்.
அதனால் வரும் பக்தர்களுக்கு மிகவும் மனம் கஷ்டப்படுகிறது.
பகவான் நாமத்தை கூறுபவர்களுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் மனம் ஒப்புக் கொண்டாலொழிய யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள். தெய்வம் வேறெங்கும் இல்லை நம் மனதில் தான் இருக்கிறது. அதை உணர்ந்தால் போதும் என்றார்.
இவ்வளவு நேரம் நான் சொன்னதையெல்லாம் பொறுமையுடன் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி நான் வருகிறேன் என்று கூறிவிட்டு தளர் நடையுடன் புறப்பட்டார் நாங்கள் அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராய் இருந்தோம், ஆனால் ஏற்றுக் கொள்ள மறுத்து கிளம்பினார்.
அவரிடம் ஐய்யா நான் மனமார தரும் இதையாவது தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டு என்னிடமிருந்த ஒரு ஆப்பிள் கனியை அவருக்கு கொடுத்தேன், அதை வாங்கிக் கொண்டு
நன்றி கூறிச்சென்றார் அவர், அந்த கங்கைக் கரையில் கங்கையின் ஆக்ரோஷமான ஓட்டத்துடன் கூடிய அந்த ஒலிக்கு நடுவே அவர் அமைதியாக இனிமையாக, புன் சிரிப்புடன், பக்திப் பரவசத்துடன், தனக்குள்ளேயே பத்ரிநாதனை தரிசித்துக் கொண்டே கூறிய வார்த்தைகள் எங்களை வேறு உலகத்துக்கே அழைத்துச் சென்றன.
நாங்கள் அனைவருமே மீண்டும் ஒரு முறை பத்ரிநாதனை ”அவர் வடிவில் ” மனமாற சேவித்தோம், தெய்வம் மனுஷ்ய ரூபேண
மனதுக்கு இதமான அந்தப் பொழுதை அனுபவித்துக் கொண்டே
மீண்டும் எங்கள் உணவகத்தை அடைந்தோம்,
சூடாக, சுவையாக உனவுகள் தயாரிக்கப்பட்டு எங்களுக்கு குழு நடத்துனரால் அளிக்கப்பட்டது, வயிறும் நிறைந்தது
மனது ஏற்கெனவே நிறைந்துவிட்டது ஒரு பூரணத்தை அனுபவித்தோம்
என்று சொன்னால் அது மிகையல்ல
ஜெய் போலோ பத்ரிநாத் கீ ........ஜேய்
அன்புடன்
தமிழ்த்தேனீ rkc1947@gmail.com

No comments:
Post a Comment