" துளசிப் பாவை "
துளசி வனத்தில் உதித்த,
தபசி திருவரங்கன் உபாசி
பெரியாழ்வார் கண்டெடுத்த
இளவரசி
திருவாடிப்பூர திரு நாளில் தேடி
எடுத்த அவதார லக்ஷ்மி இவள்
கோபால விலாசம் தேடிய திருப்பாவை
பகல் பத்து ராப்பத்து ,முப்பத்து நாளும்
முப்போதும் எப்போதும் முழுமையாய்த்
தவமிருந்தாள் விழித்திருந்தாள்
இப்பாவை நோன்பிருந்தாள் பாவை நோன்பிருந்தாள்
திரு பாவை நோன்பிருந்து திருப்பாவை தானெழுதி
முன்னைப் பயன் பெற விரதமிருந்தாள்
திருவரங்கன் அணைப்பாவை ,
என்றென்றும் துணைப்பாவை தானாக
விண்ணவர் போற்றும் திருவரங்கனை
அவ்வரங்கனை தான் மாலை சூட
தான் சூடிய பூமாலையை பாமாலையாய் அவனுக்களித்தாள், அவனும் களித்தான்
கிளி கொஞ்ஜும் தோள்கள் கொண்ட
கோதை திருமாலைத் தானடைந்து
தவழ்ந்த மாலை தவழும் மாலை
அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்ஜும்
கிளியானாள் துளசி மாலை போலானாள்
பெரியாழ்வார் விதிர் விதிர்த்தார் –
அடியாராய் தான் நினைத்த தன் மகள்
கோதை அரங்கனின் திரு அடியாளாய்
ஆனகதை அறியாரோ பெரியாழ்வார்
அபசார மென்ரெண்ணி அவர் துடித்தார்
அலைமேலே பள்ளி கொண்ட
திருமாலின் தாரமிவள் என்றவர் அறியாரோ?
அதனால்தான் தான் சூடிக் கொடுத்தாள்
சுடர்கொடி யாள் ஆண்டாள்
அரங்கனையும் ஆண்டாள்
அறியாரோ பெரியாழ்வார் அறியாரோ
ஆனாலும் அளவில்லா பக்தியது
அரங்கன்மேல்
திருப்பாவை தனை ஆண்ட
திருவரங்கன் தாரமிவள்
தனக்கேயாம் என்றுரைத்தான் திருமாலே
இவள் தொடுத்து தானணிந்த
ஒருமாலை தினமும் தன்
தோளின் திருமாலை என்றுறைத்தான்
தெளிந்தாண்டார் பெரியாழ்வார்
பெற்றெடுத்த பெண்பிள்ளை
இல்லை இவள் கண்டெடுத்த
துளசிக் கிள்ளை
பெரியாழ்வார் கண்டெடுத்த
பெண்ணாழ்வார் சின்னாழ்வார்
அன்புடன்
தமிழ்த்தேனீ
1 comment:
Post a Comment