“ நிழல் துரத்தும் நிஜங்கள் “
பூக்கடையில் கால் வைத்தேன்
சாக்கடை வாசம்
சாக்கடை ஓரம் பூக்கடை உபயத்தால்
சாக்கடை மீறிய பூக்கடை வாசம்
சுயநலம் ஒரு நாறும் மலம்
நாற்றமென்றால் மணம்
மணம் என்றால் நாற்றமா ?
நல் நாற்றமா..? துர் நாற்றமா..?
நாரோடு கூடி பூக்களும் மாலையாகும்,
இறையின் தோளுக்கு சேலையாகும்
பொதுநலத்தோடு கூடினால்
மனிதற்க்கு விடிவுகாலம்
ஒவ்வொரு ஜனனமும் மலம் தானே
தன் மலத்தை தானே அள்ளும்- த்யாகம்
என்றால் அது தாய்மை ஒன்றுதானே
தன்னலமில்லாத தாய்மைக்கு மட்டும்
தானது கிட்டுமென்றால் நாமும்
ஏன் விடக்கூடாது தன்னலத்தை…?
மலம் உண்ணும் பன்றியதை.
குளிர்சாதன அறையில் வைத்து
பக்குவமாய் பரிந்தூட்டி
கொழுக்க வைத்து தாமுண்ணும்
சாகசங்கள் புறிகின்ற மானுடரே
நமக்காய் வேண்டுமென்றால்
வராக அவதாரமென்போம்
தானெடுத்த வாந்தியை தானே உண்ணுகின்ற
நாயினையும் பைரவர் என்போம்
பரிமேலமர்ந்து பயணிக்கும் மனிதர்
பக்தி வந்தால் ஹயக்ரீவரென்பார்
வளைஎலி, கடும் புலி,கொடுஞ் சிங்கம்,
அத்தனையும் கடவுள்களின் வாகனமென்போம்
கடலிலே வாழுகின்ற கொழுத்த
கொழுமீன் கொடு மீனை நாமுண்போம்
வலை போட்டு வளைத்தெடுத்து
வற்றவைத்து பொறிய வைத்து
வகை வகையாய் நாமுண்போம்
மச்சாவதாரமும் அது தானென்போம்,
மனிதரையே குரங்குகளின்
மாறு கால வளர்ச்சியென்போம்
பால் கொடுக்கும் பசுவினையும்
கொடுக்கும் வரை லக்ஷ்மியென்போம்
குலம் காக்க வந்த கோமாதா
குலமாதா வென்போம்
மடி பால் வற்றிப் போனால் அடிமாடென்போம்
நடப்பன ,ஊர்வன ,பறப்பன
அத்தனையும் நாமுண்போம்
நம்பிக்கை எனும் விதையை
நயமாய் நாம் தூவி நாடகமாய்
தெய்வமென்போம், வாகனமென்போம்
இனி இல்லை உபயோகம் என்றுணர்ந்தால்
அன்னையென்ன ,தந்தையென்ன,அண்ணனென்ன
தம்பியென்ன, மனைவியென்ன,கணவனென்ன
மக்களென்ன ,பாசமென்ன ,நேசமென்ன
அன்பு என்ன பண்பு என்ன
அத்தனையும் பட்டுப் போகும்
அடிமாடாய் ஆகிப் போகும்
ஆக மனிதன் தனக்கு உபயோகப் படும் என்று
தெரிந்தால்தான் வைத்துக் கொள்வான்
என்பது எழுதப் படாத விதி
சுயநலம் அது மட்டுமே மேலோங்கிக் கிடக்கும்
மனித அவலம் இச் சிறுகதையில்
மீண்டும் ஒருமுறை உணர்த்தப் பட்டிருக்கிறது
எத்தனை முறை உணர்த்தினாலும்,
உணர்ந்தும் உணராதவர் போல் இருப்பவர் மனிதர்,
உணர்ந்ததை காட்டிக் கொண்டால்
தானும் கஷ்டப் படவேண்டுமே
மனிதன் என்றுமே சுயநலவாதிதான்
மாற்றமுடியாதவன்
மனிதனின் நிழல் கூட சுயநலத்தோடு தான்விழுகிறது
மனிதனின் நிழல்கூட மற்றவரைத் துரத்தும்
பேய்கள்தான்
மனிதம் வீழ்கிறது அதனால் நிழல் துரத்துகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ
1 comment:
உங்கள் எழுத்துக்கள் என்னையும் எழுத தூண்டுகின்றன.
நல்ல நல்ல சிந்தனைகள். நல்ல நல்ல ஆக்கங்கள்.
உங்கள் சினிமா அனுபவங்கள் எல்லாம் அறிந்து கொள்ளக்கூடியாதக
உள்ளது. என் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் கலைத்துறை.
அன்போடு.
ராகினி
ஜோமனி.
Post a Comment