” கைச்சூடு “ சிறு கதை வல்லமை இதழில் படிக்க
http://www.vallamai.com/?p=1929
” கைச்சூடு “
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://www.vallamai.com/?p=1929
” கைச்சூடு “
தொலைபேசி அழைப்பு ‘கிர்ரிங்’ என்றது. எடுத்துப் பேசினேன். மறு முனையில் 14 வயது நிரம்பிய சுரேஷ், என் அக்கா மகன்.
“என்னப்பா சுரேஷ், என்ன விஷயம்?” என்றேன்.
“மாமா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லை…
டாக்டர்
வந்து பாத்துட்டுப் போனார்” என்றான்.
“என்ன ஆச்சு?” என்று பதறினேன்.
“தலை வலிக்கிறது என்று
மாலையில் வந்து படுத்தார். தலைவலி தாங்காமே சுவத்திலே முட்டிக்கறார். அதுனாலே டாக்டரை வரவழைச்சு காமிச்சோம். டாக்டர்
வந்து பாத்துட்டு, சலைன் வாட்டர் ஏத்தணும்னு வீட்டிலேயே ஏத்தினார்” என்றான்.
“இப்போ எப்பிடி இருக்கு?” என்றேன். ஆனால் மனத்துக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத கிலி.
“மாமா, எப்பிடி மாமா சொல்றது? டாக்டர் வரும்போதே
அப்பாவுக்கு உயிர் போயிடுத்து. அம்மாவைச் சமாளிக்கத்தான் சலைன் வாட்டர் ஏத்தறா மாதிரி டாக்டர்
செட்டப் செஞ்சி வெச்சிட்டுப் போனார்.
டாக்டர் எங்க பக்கத்து வீட்டு அம்மாகிட்டே சொல்லிட்டுப் போய்ட்டாரு. அந்த அம்மா என்கிட்ட மட்டும்
சொன்னாங்க. ஆனா அம்மாவைப் பக்கத்திலே உக்கார வெச்சிட்டு, உங்களுக்கு போன் செஞ்சேன்” என்றான்.
நான் உடனே சமாளித்துக்கொண்டு, “அம்மாகிட்ட சொல்லிடாதே. நாங்கள்ளாம் வர வரைக்கும் சலைன் வாட்டர் ஏறுதுன்னு சொல்லு. சீக்கிரம் நாங்க வந்துடறோம்” என்று சொல்லிவிட்டு, முடிந்த வரை உறவினர்களுக்குச் செய்தியைச் சொல்லிவிட்டு, கிடைத்த பேருந்தில் ஏறி, பெங்களூருக்குக் கிளம்பினேன்.
நான் உடனே சமாளித்துக்கொண்டு, “அம்மாகிட்ட சொல்லிடாதே. நாங்கள்ளாம் வர வரைக்கும் சலைன் வாட்டர் ஏறுதுன்னு சொல்லு. சீக்கிரம் நாங்க வந்துடறோம்” என்று சொல்லிவிட்டு, முடிந்த வரை உறவினர்களுக்குச் செய்தியைச் சொல்லிவிட்டு, கிடைத்த பேருந்தில் ஏறி, பெங்களூருக்குக் கிளம்பினேன்.
இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் நினைவு வந்தது, எதுவும் சாப்பிடவில்லை என்று.
ஆனால் சாப்பிடப் பிடிக்கவில்லை. தொண்டை வறண்டு போனது. சரியென்று எதிர்க் கடையில் ஒரு விக்ஸ் மாத்திரை வாங்கி வாயில்
போட்டுக்கொண்டேன். விக்ஸ் மாத்திரையின்
இனிப்பு, தொண்டையில் இறங்கியதும்
நினைப்பு வந்தது. என்ன இது? துயரத்தில் இருக்கும்
போது கூட மனிதனுக்குப் பசியும் தாகமும் துன்பப்படுத்துவது நிற்பதில்லை என்றும், அதுவும் போதாக் குறைக்கு
விக்ஸ் மாத்திரையின் இனிப்பு தொண்டையில் இறங்கியது.
அப்போதுதான் நினைவுக்கு வந்தது இது போன்ற நேரத்தில்
யாராவது இனிப்பு உண்பார்களோ? ஏன் இப்படி ஏடாகூடமாக ஏதோ
செய்துகொண்டிருக்கிறேன் என்னும் நினைவு வந்தது.
என்னதான் மனத்தை அமைதிப்படுத்திக்கொண்டு தைரியமாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், எல்லா நடிப்புகளுமே
மற்றவரை ஏமாற்றப் பயன்படுகிறதே தவிர, நம் மனத்தை ஏமாற்றவே முடிவதில்லை என்னும் உண்மை புரிந்தது. விக்ஸ்
மாத்திரையின் இனிப்பே கசந்தது. கீழே இறங்கிப்
போய்க் குப்பைத் தொட்டியில் அதைத் துப்பினேன். விக்ஸ் மாத்திரையைத் துப்ப முடிந்தது. ஆனால் நினைவுகள்?
ஆமாம், என் மனத்துக்கு இனிய
சகோதரி. அவள் துன்பத்தில் இருக்கிறாள். அவளின் வாழ்க்கைத் துணை, அவளை விட்டுப் பிரிந்தது
கூடத் தெரியாமல், பரப்ரும்மமாய்ப் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறாள்.
தன் கணவனுக்கு ஏதும் ஆகக் கூடாது என்று. இனி ஆவதற்கு என்ன இருக்கிறது? கொடுமை அல்லவா இது? மனிதர்களுக்கு ஏன் இது
போன்ற நிலைகளை இறைவன் ஏற்படுத்துகிறான் இறைவன்?
நாத்திகர்கள் சொல்வது போல் இறைவன் என்பவன் ஒருவன்
இல்லையோ! அல்லது இருந்தும் இரக்கம் இல்லாதவனாகத்தான் இருக்கிறானா இறைவன்? மனம் கசந்து போனது, விக்ஸ் மாத்திரை போல்.
இறைவனும்
விக்ஸ் மாத்திரை போலத்தான்.
வேண்டும்போது போட்டுக்கொண்டாலும் முதலில் இனித்தாலும் அதன் பிறகு துயரங்கள் நம்மை மூழ்கடிக்கும் போது கசந்து
போகிறான். எப்போது கசக்கிறான்? எப்போது இனிக்கிறான் என்பதும். எந்தச் சூழ்நிலையிலும் நம் இருமலைப் போக்காமல் வெறும் ஏமாற்று வேலையைத்தான்
செய்துகொண்டிருக்கிறான் நம் துன்பங்களைப் போக்காமல்.
அதிகம் கேட்டால் விதி என்று சமாளிக்கப் பல பேர் இருக்கையில் தனக்கு ஒன்றும் கவலையில்லை என்பது போல கல்லுளி மங்கனாக
இருக்கிறான் இறைவன். கல்லுளி மங்கன்.
ஆமாம் கல்லுளி மங்கன்தான்.
மனத்தில் ஏதோ சிந்தனைகள். “சார் டிக்கட்
வாங்கறீங்களா?” என்று நடத்துநரின் குரல் கேட்டதும் மீண்டேன். டிக்கட் வாங்கி பையில் வைத்ததும் மீண்டும் கை
மனத்தில் பட்டுவிட்டது போலும்.
ஸ்விட்ச் போட்ட ரேடியோ போல பாடத் தொடங்கியது மனக் குரல்.
எனக்குப் பத்து வயதிருக்கும். என் அக்காவுக்குப் பதினாலு வயது, ஆனால் என் கையைப் பிடித்துக்கொண்டு உலகையே
வலம் வருவாள் தைரியத்துடன். ஆம் அப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை என் மேல். எப்போதும் என் உள்ளங்கை, அவள் கைகளுடன் இணைந்தே இருக்கும். அந்தப் பாசமான அக்காவின் கைச்சூடு,
இப்போதும்
என்னால் உணர முடிகிறது.
யாரேனும் தவறான பார்வையை என்
அக்காவின் மேல் வீசினால் ஒரு முறை முறைப்பேன்,
அந்த
வயதிலேயே. அது எப்படியோ, அது தவறான பார்வை என்று எனக்குப் புரியும். என் அக்கா சிரிப்பாள். வீட்டுக்கு வந்தவுடன் கேட்பாள்.
‘ஏன்டா தைரியமா
முறைக்கிறியே, அவன் அடிச்சா என்ன பண்ணுவே?’
‘ஓங்கி ஒரு உதை விடுவேன்.
அவன் கீழே போயி விழுந்துடுவான், ஆமா’ என்பேன் ஆக்ரோஷத்துடன்.
விழுந்து விழுந்து சிரிப்பாள் அக்கா.
வளையல் கடையா, காய்கறிக் கடையா..
எல்லாக் கடைகளுக்கும் கோயிலுக்கும் என்
கைப்பிடித்தே
கூடவே அழைத்துச் சென்ற அக்கா. எப்படி பேரம் பேசுவது, எப்படி சாமி கும்பிடுவது என்றெல்லாம்
எனக்கு நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் இருந்த
அக்கா.
இதமாகவும் பதமாகவும் எனக்கு வாழ்க்கையின் நடைமுறையை உணர்த்திய அக்கா.
நன்றாக நினைவிருக்கிறது. முதன் முதலில் அவள் படிக்கும் பள்ளியில்
என்னை முதல் வகுப்பில் சேர்த்துவிட்டு, அவள் அவளுடைய வகுப்புக்குச்
சென்றாள்.
‘பத்திரமா இருக்கணும், நான் மாடிலே வேற கிளாஸ்லே
இருக்கேன், பயப்படாதே’ என்றெல்லாம் சொல்லிவிட்டு அவள்
அகன்றதும் வீரிட்டு அழ ஆரம்பித்தேன்.
பிடிவாதம் பிடித்தேன். ஆக, முதல் நாள் அவள் வகுப்பிலே அவள்கூடத்தான் உட்கார்ந்தேன். ஆமாம், முதன் முதலாக ஒண்ணாம் வகுப்புக்குப்
பதிலாக, ஆறாம் வகுப்பில்
உட்கார்ந்த ஒரே மாணவன் என்னும் பெருமையை எனக்களித்த
அக்கா.
அவளுக்கு இப்படி ஒரு சோதனையா? அதுவும் வாழ்க்கைத்
துணையை இந்த வயதிலேயே இழந்து அல்லல் படும் துயரம்
அவளுக்கு வாய்த்ததா? தெய்வமே இது நியாயமா? என்றெல்லாம் மனத்துக்குள்
அரற்றிக்கொண்டிருந்தாலும் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்க முடிந்தது எனக்கு. அக்கா சொல்லிக் கொடுத்த பல பாடங்களில் இதுவும்
ஒன்று.
ஆயிற்று. பேருந்து, பெங்களூரை அடைந்தது.
அனைவரும் வீட்டுக்குள் நுழைந்தோம்.
அக்கா சலனமே இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்க்கப்
பார்க்க, எனக்கு அடி வயிற்றிலிருந்து பீரிட்டு வந்த துக்கத்தை, எப்படி அடக்கினேனோ தெரியவில்லை. அக்காவுக்கு விவரம் சொன்னோம். தலையைக் கோதி முடித்துக்கொண்டு
எழுந்தாள். அடுத்து, அவள் போட்ட கட்டளைகளால்
அத்தனை காரியங்களும் நடந்தன. பதினாறு நாட்கள் காரியங்கள் எல்லாம் முடிந்தது. எல்லாம் முடிந்து ஓய்வாக உட்கார்ந்தோம்.
என் அக்கா அத்தனை பெரியவர்கள் இருந்தும் என் அருகில் வந்து உட்கார்ந்து, என் கையைப் பிடித்துக்கொண்டாள். அவள் மனத்தின் முழுச் சூடும் அவள்
கைவழியே நான் உணர்ந்தேன்.
“அக்கா எப்பிடிக்கா?” என்று ஆரம்பித்தேன்.
என் கையை இறுகப் பிடித்து அழுத்தியபடி, என் அக்கா சொன்னாள்.
“எனக்கு அவர் போன வினாடியே
தெரிஞ்சி போச்சுடா! சுண்டு வெரல்லே அடிபட்டாலே
துடிச்சுப் போறமே என் உயிரே போறதுன்னா எனக்குத் தெரியாம இருக்குமா எனக்கு
தெரியும்டா ஆனா இந்தப் பசங்க, சிறுசுங்க பயந்துடப்
போறதேன்னுதான் நீங்கள்ளாம் வர வரைக்கும் எதுவும் தெரியாத மாதிரி உட்காந்திருந்தேன். இனிமே நான் என்னடா
செய்வேன்” என்று சொல்லிக்கொண்டே ஆக்ரோஷமாய் அழ ஆரம்பித்தாள்.
நாங்கள் உறைந்தோம்!
3 comments:
story very impressive. Amutha Balakrishnan
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_14.html) சென்று பார்க்கவும். நன்றி...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி
சுதந்திர தின வாழ்த்துக்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ
Post a Comment