திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Monday, June 13, 2011

“அப்பிடி ஒண்ணும் இல்லே ”  ஒரு சுவையான கற்பனையை படிக்க  சொடுக்குங்கள்
 http://www.vallamai.com/?p=4006

கடவுளை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு

நானும் கடவுளிடம் சில சந்தேகங்கள் கேட்டேன்

அவரும் பதில் சொன்னார் கடைசியில் தெளிந்தேனா? குழம்பினேனா?

நான் : கடவுளே உலகில் எத்துணை இன்பம் வைத்திருக்கிறாய், ஆனால் உனக்கு ஏன் இந்தப் பாரபட்சம்? சிலருக்கு மட்டும் கிடைக்கச் செய்கிறாய், பலருக்கு கிடைப்பதே இல்லை ஏன் இப்படி ?

கடவுள்: உன் கேள்வியே தவறு, எல்லாவித இன்பத்தையும் நான் படைத்து உங்கள் அனைவரையுமேதான் அனுபவிக்கச்சொன்னேன் .ஆனால் நீங்கள் பணம் என்று ஒன்றை உண்டாக்கிவிட்டீர்கள். அந்தப் பணத்திற்கு அளிக்கும் மதிப்பை உங்களையெல்லாம் உண்டாக்கிய எனக்கு கூட அளிப்பதில்லை.

நீங்கள் உருவாக்கிய பணத்தை யார் அதிகமாக சம்பாதிக்கிறீர்களோ அவர்கள் மட்டும் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள், மற்றவர்கள் அனுபவிக்க முடியாதபடி நீங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து விட்டீர்கள்.அந்த விலை கொடுத்தால் யார்வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் அதில் தடையில்லை என்னும் நிலையை உருவாக்கி விட்டீர்கள்,நானென்ன செய்வது

நான் : அது சரி ஏன் இப்படி மூச்சுவிடாமல் பேசுகிறீர்! சற்றே அமைதியாக பேசுங்களேன்

கடவுள்: ஆமாம் எனக்கே மூச்சு முட்டுகிறது இந்தப் பணத்தை நினைத்தால். கோவம் வருகிறது, நீங்கள் கண்டு பிடித்த பனத்தை ஈட்ட என்னையே கேவலப்படுத்திவிட்டீர்கள்.

என் மனைவிக்கு லக்‌ஷ்மி என்று பெயரிட்டீர்கள் சரி , ஆனால் அவள்தான் செல்வத்துக்கு அதிபதி என்றீர்கள் அதுவும் சரி, அதென்னப்பா நீங்கள் வீட்டில் மாட்டும் நாட்காட்டிகளிலும், உங்கள் பூஜை அறையில் இருக்கும் லக்‌ஷ்மியின் திரு உருவப் படத்திலும் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி ஏதோ தங்கக் காசுகளைக் கொட்டுவது போல அச்சடிக்கிறீர்கள்? பணமழை பொழிவது போல அச்சடிக்கிறீர்கள்? நீங்கள் கண்டு பிடித்த பணத்தை எப்படி எங்களிடம் எதிர் பார்க்கிறீர்கள் என்றே புரியவில்லை,

அது மட்டுமா நீங்கள் கண்டு பிடித்த பணத்தை ஈட்ட திருட்டு, கள்ளக்கடத்தல், கொள்ளையடித்தல், விபசாரம், சாராயம், குழந்தைகள் கடத்தல், தாலிக்கொடி பறித்தல், சந்தன மரம் கடத்தல், நாட்டு ரகசியங்களை அன்னிய நாட்டுக்கு விற்றல், கட்சி மாறுதல், எல்லாத் துறைகளிலும் லஞ்சம் வாங்குதல் பங்கு மார்க்கட்டு பேரங்கள் ,மொத்தமாக நாட்டின் செல்வத்தையே சுறண்டி உங்கள் வீட்டுக்குள் கொண்டு போய் வைக்க மெகா ஊழல்கள்

இத்தனையும் செய்கிறீர்கள்.

அதைக் கூட பொறுத்துக்கொள்கிறோம், ஆனால் எங்களுக்கு கோவில் கட்டி திருவுருவ வடிவில் எங்களை நிறுவனம் செய்து, தினமும் எங்கள் தலைமேல் தேன் ,பால், பஞ்சாமிருதம், போன்றவைகளை ஊற்றி ஊற்றி எங்களை திக்குமுக்காடச் செய்து நீங்கள் உங்கள் தலைக்கு மேல் கைகளை உயரத் தூக்கி நாங்கள் படும் கஷ்டங்களை பார்க்கச் சகிக்காமல் கண்களை வேறு மூடிக்கொண்டு ஏதோ எங்களையெல்லாம் உங்கள் மனக்கண்ணால் பார்ப்பது போன்ற ஒரு பாவனையில் பக்திமான் வேடம் போடுகின்றீர்கள்.

இத்தனையும் செய்து விட்டு எங்களைக் காவல் காக்க காவல்காரர்களை நியமிக்கிறீர்கள். அந்தக் காவல்காரர்கள் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு எங்கள் கதவருகே வாயிலெடுத்துக்கொண்டே படுத்துக்கொள்கிறார்கள், நாற்றம் குடலைப் பிடுங்குகிறது, கதவை வேறு பூட்டி விடுகிறீர்கள் ஓடக்கூட முடியவில்லை, இவ்வளவு சிரமங்களையும் பட்டு உங்களைக் காக்கிறோம் நாங்கள், ஆனால் நீங்கள் எங்கள் திருவுருவங்களையே நீங்கள் கண்டு பிடித்த பணத்துக்காக கடத்தி விற்கிறீர்கள்.

எங்கள் உண்டியலில் நீங்களே காசு போட்டுவிட்டு இரவில் அந்த உண்டியலை நீங்களே உடைக்கிறீர்கள், அதற்கு தடையாயிருக்கும் காவல்காரரை கொலை செய்கிறீர்கள்

கள்ளத்தனமாக சேர்த்த பணத்தையெல்லாம் எங்கே வைப்பது என்றே தெரியாமல் ஒவ்வொரு மடாதிபதிகளைத் தேடிச் சென்று அவர்களிடம் கொடுத்து பத்திரப்படுத்துகிறீர்கள், அதன் பிறகு உங்கள் ரகசியங்கள் அவருக்குத் தெரிந்து விட்டதே என்றுணர்ந்து அவர்கள் மேல் ஏதேனும் குற்றம் சுமத்தி அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புகிறீர்கள்.

இவ்வளவும் செய்து விட்டு நாங்கள் உங்களுக்கு அளித்த சுகபோகங்கள் பாரபட்சமானவை என்று என்னிடமே கேட்கிறீர்கள் . கோபம் வராமல் என்ன செய்யும் ?

நான்: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் .மீண்டும் இந்த உலகத்தை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்க முடியுமா?

கடவுள்: முடியும் ஒரு வழி இருக்கிறது நான் சொல்கிறேன்! சரி உலகில் உள்ள இன்பங்களில் இது வரை நீ அனுபவித்த இன்பங்களில் மன நிறைவு கண்டாயா? அப்படியானால் அவைகளை சொல். நான் உனக்கு அந்த இன்பங்களைத் தவிர்த்து வேறு இன்பங்களைத் தருகிறேன், இது வரை யார் அனுபவிக்கவில்லையோ அவர்களுக்கு அந்த இன்பங்களை பகிர்ந்து தருகிறேன்

நான் : நியாயமாகத்தான் தெரிகிறதுநான் யோசிக்க வேண்டும் சற்றே நேரம் கொடுங்கள்

கடவுள்: சரி காத்திருக்கிறேன்

நான் : நான் யோசித்தேன்

கடவுள்: கண்டு பிடித்தாயா ஒரு பட்டியல் கொடு அவற்றை நீக்குகிறேன்.

நான் :அப்படி ஒண்ணும் இல்லே நான் யோசித்ததில் நான் நிறைவாக அனுபவித்த இன்பம் ,அதுவும் இனி நான் அனுபவிக்காமல் விட்டுத்தரும்படியாக

அப்படி ஒண்ணும் இல்லே “!

கடவுள்: அடப்பாவி ! அப்படியானால் நீ மற்றவருக்கு விட்டுத் தர ஒன்றுமே இல்லையா உன்னிடம்?

நான் : ஆமாம்அப்பிடி ஒண்ணும் இல்லே” ! அது சரி என்கிட்ட கேட்கிறீர்களே உங்க்ளுக்கு வேண்டுதல், படையல், குடமுழுக்கு, கும்பாபிசேகம், திருவீதிப் புறப்பாடு, எல்லாம் வெச்சிருக்கோமே அதிலே இனிமே உங்களுக்கு இனி என்னென்ன வேண்டாம்ன்னு நீங்கள் ஒரு பட்டியல் போட்டுத் தருவீர்களா? நாங்களும் ஏற்கெனவே நீங்கள் அனுபவித்து திருப்தி அடைந்ததெல்லாம் நீக்கிவிட்டு நிம்மதியாக இருக்கிறோம்

கடவுள் நானும் யோசிக்கிறேன்…… சற்றே இடைவெளிக்குப் பின்னர்

கடவுள்: இல்லை யோசித்தேன் அப்படி ஒண்ணு இல்லே!

கடவுள் மறைந்து போனார். தேடிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்

தமிழ்த்தேனீ

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல உரையாடல்...

இப்படி விரட்டி விட்டீர்களே... எப்படி வருவார்...? ஹா... ஹா...

நன்றி...

BoobalaArun said...

Great Conversation...