கட்டிடம் கட்டுவோமா
தமிழ்த்தேனீ
பக்கத்து நிலத்தில் வீடு கட்ட ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள், எத்தனை முறைகள் வீட்டைப் பெருக்குவது, எத்தனை முறைகள் வீட்டைச் சுத்தம் செய்வது? என்ன செய்தும் பலனே இல்லை. கால்வைத்து நடக்க முடியவில்லை. காலெல்லாம் மண்ணும் அழுக்கும் சேர்ந்த கலவை ஒட்டிக்கொண்டு நடக்க நடக்க வீடெல்லாம் அழுக்காகிறது. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தூசியினால் ஏற்படும் இருமல் போன்றவற்றால் அடிக்கடி வைத்தியரிடம் போகும் நிலை. அதையும் தவிர்த்து தினமும் அங்கே நிற்க வைத்திருக்கும் வாகனங்களைச் சுத்தம் செய்வது அலுவலுக்குப் போகும் அவசரத்தில் மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.என்னதான் செய்வது என்று புலம்பிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களே! ஆமாம், இந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்னும் அலுவலகம் செயல்படுகிறதா, இல்லையா என்று சந்தேகப்படும் பொது மக்களே!நம் நாட்டில் தான் இப்படியா? அனைத்து நாடுகளிலுமே இப்படித்தான் பல கட்டடங்கள் கட்டும் போது அந்தக் கட்டடத்தினால் ஏற்படும் தூசிகள், சிமென்ட் கலவைகள், எல்லாம் பக்கத்து வீடுகளின் மீதோ, அல்லது பக்கத்தில் இருக்கும் கட்டடங்களின் மீதோ விழுந்து அவர்களைத் துன்பப்படுத்துகிறதா?சில வெளிநாடுகளில் கட்டடங்கள் கட்டும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் முறை மிகவும் நேர்த்தியானதாக, அடுத்தவருக்குத் துன்பம் தராத வகையில் இருக்கிறது. அவற்றை நேரிலே பார்த்தவர்களின் நானும் ஒருவன். ஆகவே அவர்கள் கடைப்பிடிக்கும் முறையைப் பார்ப்போம்ஒரு முறை மலேசியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே பெருநகரச் சாலைகளிலும் பல பெரிய கட்டடங்களைக் கட்டுகிறார்கள். அதே போன்று அடுக்குமாடிக் கட்டடங்களும் கட்டுகிறார்கள். கோலாலம்பூரில் நாங்கள் இருந்த கட்டடத்தில் மொத்தம் 29 மாடிகள். அதில் 26ஆம் மாடியில் இருந்தோம். அங்கிருந்து பார்க்கும் போது நகரமே மிக அழகாகத் தெரியும்.மேலும் அந்தக் கட்டடத்தின் மிக அருகே, நம் நாட்டின் கூவம் நதியைப் போன்று ஒரு ஆறு ஓடுகிறது. அதற்குப் பின்னால் பறக்கும் மின்சார ரயில் ஓடுவது பார்க்க, கண் கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.மழை நன்றாகப் பெய்யும் போது பார்த்தால் அந்த நதியில் வெள்ளமாய்க் கரை புரண்டு தண்ணீர் ஓடும். மழை விட்டுச் சில விநாடிகளில் சாலைகளும் அந்த நதியும் பழைய நிலைமைக்குத் திரும்பி, பளபளவென ஜொலிக்கும். எங்குமே தண்ணீர் தேங்கி நின்று நாங்கள் பார்க்கவில்லை.அந்த நகரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்னர் மாசுக் கட்டுப்பாடு அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டும். அப்போது ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதாவது மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நாங்கள் எங்கள் கட்டடங்களைக் கட்டி முடிப்போம் என்று. அந்த உறுதி மொழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் ஒரு உபாயம் செய்கிறார்கள். அவர்கள் கட்டும் கட்டடத்தின் மேலாக வெளிப்புறமாக இரும்பினாலான ஒரு வலை போடுகிறார்கள். அந்த வலை ஒரு சிறு தூசியையும் கூட வெளியே விடுவதில்லை. அதனால் அவர்கள் நெடுஞ்சாலைகளில் கட்டும் கட்டடங்கள் கூட எந்த ஒரு மாசையும் விளைவிப்பதில்லை. அந்தக் கட்டடங்களிலிருந்து விழும் கற்கள் சாலையில் ஓடும் வாகனங்களின் மீது விழுந்து விபத்துகள் ஏற்படுவதில்லை.அதே போல அமெரிக்காவில் அவர்கள் பெரும் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டுகிறார்கள்; பல அடுக்கு மாடிகள் கட்டுகிறார்கள்; அவர்களும் இதே போன்ற முறைகளைக் கையாளுகிறார்கள். அது மட்டுமல்ல, அங்கே வீடுகள் கட்டிவிட்டு அந்த வீடுகளுக்கு முன்னால் ஒரு சாய்மானமான புல் வெளியை ஏற்படுத்துகிறார்கள். அந்தப் புல் வெளியை அவர்கள் ஏற்படுத்தும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது. வேறு ஏதோ ஒரு இடத்தில் அந்த விலை உயர்ந்த புல்வெளியை அவர்கள் உருவாக்கி, அந்தப் புல் வெளிகளை சதுரம் சதுரமாக இரண்டு அல்லது நான்கு அங்குலம் கனத்துக்கு வெட்டி அவற்றை ஒரு மூடிய வாகனத்தில் வைத்து அங்கே கொண்டு வந்து அவற்றை அந்தச் சாய்வான பகுதியில் அடுக்கி அப்படியே வளர்க்கிறார்கள். அவற்றை அடுத்து ஒரு அகலமான நடைபாதை. அதற்கு அடுத்து மீண்டும் சமதரையில் புல்வெளி. அதற்கு அடுத்து மீண்டும் ஒரு நடைபாதை, அதற்கு அடுத்துதான் சாலைகள். ஆகவே வாகனங்கள் நடைபாதையில் நடப்போரின் மீது எதிர்பாராத பெரிய விபத்துகள் ஏற்பட்டாலொழிய மோத முடியாதுஇவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறார்களே மனித உயிர்களின் மீது, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீது என்பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே நம் நாடும் அப்படியெல்லாம் வளரக் கூடாதா என்கிற ஏக்கம் வரத்தான் செய்கிறது.அது சரி, எப்பொழுது பார்த்தாலும் வெளிநாடுகளைப் புகழ்வதே சிலருக்கு வேலையாய்ப் போய்விட்டது என்று நினைப்பவர்களே நம் நாட்டையும் வீட்டையும் நாமும்தான் முயன்று சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வோமே! சுத்தம் சோறு போடுகிறதோ, இல்லையோ! வியாதிகளை அண்டவிடாமல் தடுக்கும்; அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும். அடடா! இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. நான் வீடு கட்டினேனே. அப்பொழுது இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லையே! அண்டை வீட்டுக்காரர்கள் எவ்வளவு அவதிப்பட்டிருப்பார்கள்! நான் நேரிடையாக பாதிக்கப்படும் போதுதான் இவ்வளவு ஞானமும் எனக்கு வருகிறது... என்ன செய்ய?
தமிழ்த்தேனீ
Jul 02, 2009
1 comment:
sir vayitherisala kilappathinga. . .
nammavurrla namalaa thirunthunaatha vuntu
Post a Comment