' ஆரோக்கியக் குளியல் '
தினமும் குளிப்பது எதற்கு என்று ஒரு குழந்தை தன்னுடைய தாயாரைப் பார்த்துக் கேட்டதாகவும், அதற்கு அந்தப் பெண்மணி எப்படிப் பதில் கூறினால் அந்தக் குழந்தைக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது தெரியாமையினால் பதில் கூறத் தயங்கியதாகவும் ஒரு செய்தியை மழலைகள் தளத்தில் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இன்னும் பல பெரியவர்களுக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. அவர்களுக்கும் புரியும் வகையில் குளையலைப் பற்றி யோசிப்போமா?
குறத்தி மகன் என்னும் திரைப்படத்தில் சுருளிராஜன் என்னும் நகைச்சுவை நடிகர் குறவர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, "படிக்கச் சொன்னா பரவா இல்லேப்பா குளிக்கச் சொல்றாங்கோ" என்பார். அதைக் கேட்டவுடன் நமக்குத் தானாக சிரிப்பு வரும்.
எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள், குறவர்கள் குளிப்பதே கிடையாது. அவர்களைக் குளி என்றால் எவ்வளவு கடினமாயிருக்கும் அவர்களுக்கு? சமீபத்தில் அன்பே சிவம் என்னும் ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏதோ சொல்ல முயல இடைமறித்து, "போதும் சார், எனக்கு குளிக்கக் கூடத் தெரியாதா? அதுக்குக் கூட நீங்க சொல்லித் தரணுமா? போய் வேலையைப் பாருங்க" என்பார் மாதவன்.
நம்மில் பலர் இப்போதும் இரவு தாமதமாகப் படுக்கப் போகும் நேரத்தினால் காலையில் சிறிது தாமதமாக எழுகிறோம். அப்படி தாமதமாக எழும்போது நேரமின்மையினால் வேகவேகமாகக் குளித்துவிட்டு, ஏதோ காலையில் கிடைத்த உணவை ருசியும் அறியாமல் அள்ளிப் போட்டுக்கொண்டு அவதி அவதி என்று அலுவலகத்துக்குச் செல்கிறோம். சிலர் அதற்கும் நேரமில்லாமல் குளியலறைக்குச் சென்று சிறிது சிறிது தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு, சிறிது தண்ணீரைத் தலையிலும் தெளித்துக்கொண்டு வருவோம். அப்போது கேட்பார்கள், "என்ன இன்று காக்காய்க் குளியலா?" என்று. ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்று யோசித்தால், காக்காய் திடீரென்று குளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நீர்நிலைகள் அருகிலே வரும். எப்போதுமே காக்காய்க்கு சந்தேகம் அதிகம். அதனால் யாராவது வந்துவிடப் போகிறார்களே, யாராலாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தலையை ஒரு முக்கு தண்ணீரில் முக்கிவிட்டு, பலமுறை தலையை சிலுப்பிக்கொள்ளும். அதுபோல அரைகுறைக் குளியல் போட்டுவிட்டு வரும் நம்மை அப்படித்தான் கேட்பார்கள்.
என்னடா ஒரு சாதாரணக் குளியலுக்கு இவ்வளவு வியாக்யானங்களா என்று யோசிப்போருக்கு இன்னும் ஏன் குளிக்க வேண்டும் என்று நான் சொல்லவே இல்லையே. இப்போது சொல்கிறேன்.
நாம் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகிறோம். நாம் தூங்கும்போது நம் புலன்கள் அனைத்தும் ஓய்வெடுக்கின்றன. சில முக்கியமான உறுப்புகளைத் தவிற, நம் உறுப்புகள் அனைத்தும் பல கழிவுகளை நம் உடலில் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கழிவுகள் நம் உடலில் சேரும்போது நம் உடலில் ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது, அந்தக் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே சேரவிட்டால் அந்தக் கழிவுகள் நம் உடலுக்கு நோயை விளைவிக்கும். ஆகவேதான் குளிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போதும் விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்லுவார்கள் அது ஒரு தற்காலிக மரணம் என்று. ஆகவே நாம் பிறந்த போது நம்மைச் சுற்றி இருந்த வேண்டாத அழுக்குகளை நீக்க நம்மைக் குளிப்பாட்டுகிறார்கள். அது போல நாம் ஒவ்வொரு நாளும் இறந்து பின் மீண்டும் பிறக்கிரோம். அப்படிப் பார்க்கும்போது தினமும் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள குளித்துதானே ஆகவேண்டும், அதனால்தான் குளிக்கிறோம்.
குளிப்பது என்னும் வழக்கம் ஏன் ஏற்பட்டது, சுத்தமும் சுகாதாரமும் புரிய ஆரம்பித்தபோது, நீரினால் நம் உடலைக் கழுவினால் அசுத்தங்கள் நீங்கிவிடும் என்று உணர்ந்த போது, ஏற்பட்ட ஒரு நடைமுறைதான் குளியல் என்பது.
குளிப்பதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.
முதலில் ஏற்பட்டது ஆற்றுக் குளியல். நாம் நதிக்கரையில்தான் நம் நாகரிகத்தை தொடங்கினோம். ஆற்றுக் குளியலில் பலவகையான அபாயங்கள் உண்டு. காவிரியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், பெண்டிரும் ஆடவரும் குளித்துக் கொண்டிருப்பார்கள், திடீரென்று நீர் ஏகத்துக்குப் பெருகி வெள்ளமாய் வந்து பலரை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. அது மட்டுமல்ல ஆற்றில் குளிக்கும் போது எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கு குளித்தால் நீரோட்டம் நம்மை அடித்துகொண்டு போகாமல் இருக்கும் என்பது தெரிந்து குளிக்க வேண்டும். சில இடத்தில் பாறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் குளிக்கும்போது அந்தப் பாறைகள் நம் கையையோ காலையோ கிழித்துவிடக்கூடும். ஆக அந்த ஆற்றில் ஏற்கெனெவே குளித்துப் பழக்கப்பட்டவர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு ஆற்றில் குளித்தால் நல்லது.
அடுத்ததாக கிணற்றுக் குளியல். பல கிராமங்களில் விவசாயத்தை முன்னிட்டுப் பெரிய கிணறுகளை வெட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிணறுகளில் பல சிறுவர்கள் மேலிருந்து சத்தம் வரும்படியாக குதித்து நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் குளிப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் எங்கு பள்ளமாய் இருக்குமென்று. அங்கு போகும் போதுமிகவும் எச்சரிக்கையுடன் போவார்கள். அதுமட்டுமல்ல கிணற்றில் சில சமையம் தவளை, மீன்கள் பாம்பு போன்றவை இருக்கக் கூடும். அவைகள் வந்தால் எப்படி சமாளித்து மேலே வரவேண்டும் என்று அவர்களுக்கு இயல்பாகவே பயிற்சி வந்துவிடும்.
அடுத்ததாக குளங்களில் குளித்தல். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் குளங்களில் பாசி போன்ற தாவரங்கள் நம்மை வழுக்கி விட்டுவிடும். அதுமட்டுமல்ல, தாமரை, அல்லி போன்ற மலர்களின் கொடிகள் குளங்களில் கீழே வேரூன்றி இருக்கும். அந்தத் தாவரத்தின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். நாம் கீழே சென்று நீந்தும் போதோ, அல்லது பாசியின் வழுக்கலாலோ உள்ளே விழுந்து கீழே சென்று மேலே வர முயலும் போது நம் கால்கள், கைகள் அந்தத் தாவரத்தின் பின்னலில் சிக்கிக்கொண்டு நம்மை மேலே வரமுடியாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சுத்திணரி இறக்கும் வாய்ப்பு அதிகம்.
அடுத்ததாக கடல் குளியல். மாசிமகம் அன்று கடலில் குளித்தால் புண்ணியம் என்னும் நம்பிக்கை இருக்கிறது, அப்படிக் கடலில் குளிக்க ஆசை கொண்டோர் கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கடல் அலைகள் கடலின் ஓரத்திலேதான் இருக்கும். அந்த அலைகளில் லாவகமாக இறங்கி நீந்தி நடுக்கடலுக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நம்மால் எவ்வளவு தூரம் நீந்த முடியும் என்று நம்மை, நம்முடைய திறனை எடைபோடாமல் அதிக தூரம் கடலுக்குள் செல்லக் கூடாது. நீந்தத் தெரியாதவர்கள் கடலில் இறங்கவே கூடாது, ஏனென்றால் அலைகள் கரைக்கு வரும்போதே சீற்றத்துடன்தான் வரும். வந்துவிட்டுப் பின்னுக்குத் திரும்பும்போது மிகவேகமாகத் திரும்பும். அப்படித் திரும்பும் கடலலை என்னதான் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் காலை வாரி இழுத்துக்கொண்டு போய்விடும்.
நீந்தத் தெரிந்தவர்களா யிருந்தாலும் கடலுக்குள் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீந்தத் தெரிந்தால் மட்டும் போதாது. கடல் நீருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் உண்டு. அந்த அழுத்தத்தை சமாளிக்கப் பழக வேண்டும். அதுவுமன்றி சுறா, திமிங்கிலங்கள் போன்ற பெரிய வகை மீன்கள் கடலில் உண்டு, அவைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது கடினம்.
சரி ஆறு, குளம், கிணறு இவைகளில் குளிப்பதற்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டுமா நமக்கெதற்கு வம்பு என்று வீட்டிலேயே குளியலறையில் குளிக்கலாம் தவறில்லை, ஆனால் குளிக்க வேண்டும்.
ஆமாம் ஏன் குளிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எப்படிக் குளிக்க வேண்டும் என்று பார்க்கலாமா? என் தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.
எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் நீர்நிலைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலை குளிப்பதற்கு ஏற்றதுதானா என்று தெரிந்து கொண்டு குளிக்க வேண்டும். அப்படிக் குளிப்பதற்கு முன்னால் அந்த நீர் நிலையிலிருந்து சிறிதளவு தண்ணீரை வலது கைகளின் உள்ளங்கை அளவு எடுத்து மூன்று முறை குடித்துவிட்டு, பிறகு குளித்தால் அந்த நீர் நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பார்கள், ஏனென்றால் உள்ளே இருப்பதும் அந்த நீர்நிலையின் தண்ணீர், வெளியே நம் உடலில் படுவதும் அந்த நீர்நிலையின் தண்ணீர் எனும்போது இரண்டும், அதாவது உள்ளும் புறமும் சமனப்பட்டு எவ்வித எதிர் விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும் என்பார்கள் என் தாயார். இன்று வரை நான் அதைக் கடைபிடித்து இருக்கிறேன். நாடகம், திரைத்தொடர்கள், திரைப்படம் போன்றவைகளில் நடிக்க நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பல நீர் நிலைகளில் குளித்திருக்கிறேன், ஆனால் எந்த நீர்நிலைகளும் என்னை பாதித்தது இல்லை.
வீட்டில் நாம் குளிக்கும்போது நீரை அதிகம் செலவழிக்காமல், ஆனால் சுத்தமாகக் குளிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. நீரால் முதலில் உடலை நனைத்துக்கொண்டு நாம் உபயோகிக்கும் சோப்பை எடுத்து முதலில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு, நீரால் கழுவிவிட்டு பிறகு உடலை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் கண்களில் சோப்பு உள்ளே சென்று கண்கள் எரிவதை தடுக்கலாம். மற்றும் நாம் கண்களால் நன்றாகப் பார்த்து மற்ற பாகங்களை சுத்தம் செய்ய வசதியாய் இருக்கும். சோப்பைக் கைகளில் தடவிக்கொண்டு கைகளால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்து குளிக்க ஆரம்பித்தால் குறைவான அளவு தண்னீரிலேயே சுத்தமாகக் குளித்து விடலாம். பிறகு தலையில் தண்ணீரை ஊற்றி ஷாம்பூவோ, அல்லது சிகைக்காயோ தேய்த்துக்கொண்டு உடனே தண்ணீரால் தலையைக் கழுவிவிட்டு உடனடியாக முதலில் தலையைத் துடைத்துக் கொண்டால் சளிபிடிப்பது, தலை வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து தப்பித்துவிடலாம். பிறகு உடலை சுத்தமாகத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து கன்னடியில் முகம் பார்த்துத் தலை சீவும் நேரத்துக்குள் தலை முடி காய்ந்து பதமாகவும் இருக்கும்.
முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. தூங்கும் போது நம் உறுப்புகள் இளைப்பாறுகின்றன. அப்படி இளைப்பாறும் போது அந்த தசைகள், இறுகிவிடுகின்றன. அப்படி இறுகிவிட்ட தசைகளைத் தளர்த்தி எளிதாக செயல்படுத்த நம் உள்ளங்கைகளினால் நன்றாகத் தேய்த்து விடுவதால் அத்துணை தசைகளும் மீண்டும் புத்துணர்வு பெற்று இயல்பாக இயங்கத் தொடங்கும்.
இதைத்தான் அழகு நிலையங்களில் மசாஜ் என்று சொல்லுகிறார்கள். மருத்துவமனைகளில் ஹீட் தெரப்பி என்றும் சொல்கிறார்கள். நம் பணத்தையும் வீணடித்து இவ்வாறெல்லாம் செய்வதை விட தினமும் குளிக்கும்போது நம் உள்ளங்கைகளால் நாமே நம் உடலை நன்கு தேய்த்துப் புத்துணர்வு பெறச் செய்யலாமே. என்ன தினமும் குளிப்பது எவ்வளவு நல்லது என்று புரிகிறதா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமன்றோ?
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
No comments:
Post a Comment