" அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்"
அருமையான முது மொழி
பசியெடுத்தாலும் அழாமல் ,
அதாவது எந்த
ஒரு முயற்சியும் எடுக்காமல்
நான் இன்னும் முன்னுக்கு வரவில்லையே
என்று கவலைப் படும் பலர்,
அதாவது பரவாயில்லை,
அடுத்தவர்கள் முன்னுக்கு வந்து விட்டார்களே
என்று கவலைப்படும் பலர்,
இப்படி பலவகை மனிதர்கள் இருக்கிறார்கள்
அவர்களுக்கெல்லாம் உணர்த்துவது போல்
இந்த முதுமொழி அமைந்திருக்கிறது
நான் ஒரு முழு நீள நாடகத்தை
மூன்று நாளில் எழுதி முடிக்கும்
வழக்கமுடையவன்.......
என்னை பார்த்து சக நாடக எழுத்தாளர்கள்
கேட்பார்கள் மூன்று நாளில் எப்படி எழுதி
முடிக்கிறாய் என்று
அவர்களுக்கு நான் பதில் சொல்லுவேன்
மூன்று நாளில் முடிக்க முன்னூறு நாள்
யோசித்திருக்கிறேன்,உழைத்திருக்கிறேன்
என்று.....
இதுதான் வெற்றியாளர் பலரின் ரகசியம்
பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்
நேத்து கூட நான் அவரைப் பார்த்தேன்
ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராக
ஆகிவிட்டார் என்று,
ஒரே நாளில் கோடீஸ்வரராக ஆவதற்கு அவர்
எத்துணை முயற்சிகள் செய்திருப்பார் பலகாலமாக
அது வெளியே தெரிவதில்லை, எப்போதும் வேர்கள்
வெளியே தெரியாது விருட்ஷம் மட்டும் தான் தெரியும்
குள்ளமாக வாமனாவதாரம் எடுத்த நாராயணனின்
விஸ்வரூபம் வெகு சிலரே பார்த்திருக்கக் கூடும்
ஆனால் அந்த விஸ்வரூபத்தைக் கண்டவர்கள்கூட
அந்த விஸ்வரூபத்தின் பின்னால் இருக்கும்
"அணுவை சத கூறிட்ட அணுவிலும் உளன் "
என்று ஆன்மீகப் பெரியார்கள் சொன்னாற் போலே
அந்த அணுவிலிருக்கும் இறைவனைக் கண்டிருப்பார்களா
என்பது சந்தேகமே ....
அது போலத்தான் முயற்சிகளை காணாதோர் முடிவை
மட்டும் கண்டு ஆச்சரியப் படுகின்றனர்
முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும்
பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை
என்பது புறியவில்லை,
கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலை
அல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே...
அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலே
பலனை நீ எதிர் பார்க்க வேண்டாம்,
தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல
கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை
செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது
ஒரு உணவகத்தில் நான் ஒரு குழாயில் கையை
சுத்தம் செய்து கொண்டிருந்தேன்
இன்னொரு கோடியில் கடைசீக் குழாயில் இன்னொருவர்
கையை சுத்தம் செய்துகொண்டிருந்தார்
அவரைப் பார்த்து நான் சொன்னேன் வேடிக்கையாக
நீங்களும் நானும் கோடியில் ஒருவர் என்று
ஆமாம் அந்தக் கோடியில் அவர் இந்தக் கோடியில் நான்
அது போல வெகு சிலரே கோடியில் ஒருவராக
முயற்சி செய்கிறார்கள்
அல்லது கோடிகளுக்காக முயற்சி செய்கிறார்கள்
ஆகவே முயற்சி திருவினையாக்கும் என்பதைத்தான்
அழுத பிள்ளை பால் குடிக்கும் என்று சொல்லி
இருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது
இன்னொரு முக்கியமான விஷயமும் நினைவுக்கு வருகிறது
ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போது
அத்துணை நாட்கள் ஒரு தண்ணீர் நிரம்பிய
பையில் நீந்திக் கொண்டிருந்தாலும் ,
அந்த தண்ணீரிலும் அந்தக் குழந்தை ஸ்வாசிக்க
காற்றையும், தொப்புள் கொடி வழியே தாய்மையின்
உணர்வுபூர்வமான சக்தி , தாய் உண்ணும்
உணவிலிருந்தே எடுக்கப்பட்டு அக்குழந்தைக்கு ஏற்ப
அவ்வுணவை மாற்றி அனுப்பிய அபூர்வ சக்தியினால்,
உணவாக அனுப்பப்பட்டும் ,
அக்குழந்தை பாதுகாக்கப்படுகிறது....
அது மட்டுமல்ல தாயின் தொப்புள் கொடியிலிருந்து
தயாரிக்கப்படும் மருந்து அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல
அனைத்து குழந்தைகளுக்கும் உயிர் காக்கும் ஜீவரசமாக
இருக்கிறது என்பதை விஞ்ஜானத்தில் கண்டு பிடித்து
அவைகளைப் பாதுகாக்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்
மேலும் தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நம்
முன்னோர்கள் கூறியதையே இப்போதைய
விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்து
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
இப்படி இன்று நாம் கண்டு பிடிக்கும் அனைத்துமே
ஏற்கெனவே ஒருவன் கண்டு பிடித்து
செயலாற்றி இருக்கிறான் என்றால்..அவன்தான்
இறைவன் என்று ஒப்புக் கொள்வதில் தவறென்ன...?
ஏற்கெனவே அவன் உருவாவாக்கியதை கண்டு பிடித்த
நமக்கே விஞ்ஜானி என்று பெயரென்றால்
உருவாக்கிய அவனை இறைவன் என்று சொல்வதில்
தவறென்ன ....?
என்னே இறையின் சக்தி ,..!!!
என்னே இறையின் படைப்பு ரகசியம்
யார் சொன்னது இறை இல்லையென்று...?
தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்
அவனன்றி ஒரு அணுவும் அசையாது
அப்படி பாதுகாப்பாய் இருந்த குழந்தை
இயற்கையின் வழியே இந்த பூவுலகுக்கு
வருவதற்காக இடையே நசுக்கப் படுகிறது
நசுக்கப் பட்டு நழுவி முதலில் தலையைக் காட்டி
பின் மொத்தமாக இந்தப் ப்ரபஞ்ஜப் ப்ரவேசம்
அடைகிறது, அப்படி நசுக்கப் படும்போது
அது வரை அந்தக் குழந்தை ஸ்வாசித்த
காற்றும் தடைப்படுகிறது
அந்தக் குழந்தை வெளியே வந்து பூமியில்
விழுந்து அதன் உடல் இயக்கம்
ஆரம்பிக்க இருக்கும் அந்த இடைவெளியில்
அதற்கு மூச்சுவிட காற்று தேவை
அந்தக் காற்று உள்ளே போகும் வழியை
இது வரை இருந்த குடியிருந்த கோயிலின்
கருப்பக் க்ரகத்தில் இருந்த கருணையே
வடிவான தண்ணீரில் இருந்து விட்டு
திடீரென்று வெளியே வரும் போது
புறத்தில் இருக்கும் தண்ணீர் போய்விடும் ஆனால்
உள் உறுப்புகளில் முக்கியமாக ஸ்வாசக் குழாயில்
இப்போது அடைத்துக் கொண்டிருக்கும்,
அந்த தண்ணீர் வெளியேறினால்தான் காற்று
உள்ளே புக முடியும்
அதற்குதான் குழந்தை முயற்சி செய்து
அழ ஆரம்பிக்கிறது உரக்கக் குரலெடுத்து
அழ ஆரம்பிக்கிறது, அப்படி அந்தக் குழந்தை
அழும்போது அந்த தண்ணீர் ஸ்வாசக் குழாயிலிருந்து
வெளியேறுகிறது ,அப்படி தண்ணீர் வெளியேறியவுடன்
குழந்தை முதல் மூச்சு விடுகிறது
அப்படி அழவில்லையென்றால் மருத்துவர்கள்
அடித்தாகிலும் அக் குழந்தையை அழ விடுவர்
ஏனென்றால் அழுதால்தான் மூச்சே....
முதல் மூச்சே விடமுடியும்
முதல் மூச்சு விட்டால்தானே பிழைக்கும்
பிழைத்தால்தானே பால் குடிக்கும்
அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும்
என்று ஆன்றோர்கள்
சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்
புரட்சி எங்கு உருவாகிறது என்று நானே
எனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டு
பல நாள் ஆராய்ந்து அதன் மூலத்தை
என்னுடைய பாணியிலே
ஒருகவிதையாக வடித்தேன்
" புரட்சி "
"அசை, புரளு, கவிழாதே நிமிரு
இயக்கம் கொள் பேரியக்கம் கொள்
அப்போதுதான் கருவரையிலிருந்தே
நீ வெளி வரமுடியும்
இல்லையென்றால் இறந்த குழந்தை "
என்று
ஆமாம் கருவரையிலேயே புரட்சி ஆரம்பித்து
விடுகிறது என்பதே உண்மை
இப்போது சொல்லுங்கள்
அழுத பிள்ளை பால் குடிக்குமா..........?
அழாத பிள்ளை பால் குடிக்குமா...?
அன்புடன்
தமிழ்த்தேனீ
No comments:
Post a Comment