திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, September 1, 2013

"நடுத்தெரு நாராயணன் " சிறுகதை

"நடுத்தெரு நாராயணன்" சிறுகதை வல்லமையில் வெளியாகி உள்ளது

படிக்க 


 http://www.vallamai.com/?p=37991

கனகா மிக ஆர்வமாக தன் கணவன் நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், என்னங்க நாளைக்கு காலையிலே 8 மணிக்கு நாம ரெண்டுபேரும் மந்தைவெளிக்கு போய்ட்டு வரணும்,

என்னோட பெரியம்மா போன் பண்ணாங்க உங்களுக்கு கூட தெரியுமே என்னோட பெரியம்மா பொண்ணு அதாங்க அவங்க வீட்டுக்காரர் கூட பெரிய டாக்டர்  அமெரிக்காவுல இருக்காங்க,

அவங்க இப்போ இந்தியாவுக்கு வந்திருக்காங்களாம், அவங்களுக்கு ரெண்டு பசங்க, நாளைக்கு அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் அதுனாலே நாம ரெண்டுபேரும் போய் வாழ்த்திட்டு வரலாம் என்றாள்,

நாராயணன் கனகாவிடம் ஆமாம் நமக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துதே அப்போ அவங்க வந்தாங்களா, என்றார்,   ஏங்க அவங்க ரெண்டு பேரும் அப்போ அமெரிக்காவுல இருந்தாங்க, எப்பிடி வர முடியும் என்றாள் கனகா,

சரி உங்க பெரியம்மாவாவது வந்தாங்களா என்றார் நாராயணன்,

அவங்களும் வரலை, ஆனா நாம் போயிட்டுதான் வரணும், அவங்க எப்பிடி நடந்துகிட்டாலும் நாம விட்டுக்கொடுக்காம நடந்துக்குவோமே என்றாள் கனகா,

சரி போய்ட்டு வரலாம், உனக்கும் உங்க உறவுக்காரங்களை எல்லாம் பாத்தா மாதிரி இருக்கும்னு ஒப்புக் கொண்டார் நாராயணன்,

மறுநாள் காலை நாராயணனும் கனகாவும் கிளம்பினர், காரை ஓட்டிக்கொண்டே நாராயணன் ஆமாம் மந்தை வெளியிலே, எங்க நடக்குது அறுபதாம் கல்யாணம் என்றார்,

இதோ பாருங்க எனக்கு அவங்க வீடு தெரியும் விலாசம் தெரியாது, ஆனா மந்தைவெளி பஸ் நிலையத்துக்கு போனா அங்கேருந்து அவங்க வீட்டுக்கு வழி தெரியும், நீங்க மந்தை வெளி பஸ்நிலையத்துக்கு காரை ஓட்டுங்க என்றாள் கனகா,

சென்னை போக்குவரத்தில் நீந்தி மந்தைவெளி பஸ் நிலையத்தை அடைந்தவுடன், அங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க என்றாள், ஒரு ஓட்டுனரின் கவனத்தோடு அவள் சொல்லும் இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தார் நாராயணன்,
அந்தசாலை ஒரு முட்டு சந்தில் சென்று முடிந்தது, மேலே போக வழியில்லாமல் காரை நிறுத்திவிட்டு கனகாவை ஏறிட்டார் நாராயணன்,

கனகா கொஞ்சம் குழம்பியவளாய்  இங்கேதாங்க அவங்க வீடு,நான் அவங்க வீட்டுக்கு  10 வருஷத்துக்கு முன்னாடி வந்துருக்கேன்,ஆனா ஒரு அடையாளம் இருக்கு அவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு குப்பை மேடு பெரியமலை மாதிரி இருக்கும் அப்பிடீன்னா, கோவம் கோவமாக வந்தது நாராயணனுக்கு,
இது ஒரு அடையாளமா? எப்பவோ அந்தக் குப்பையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிருப்பாங்க,அவங்க வீட்டுக்கு ஏதாச்சும் பேரு இருக்குமே அதுவாவது நினைவுக்கு வருதா பாரு என்றார் நாராயணன்,

 இல்லைங்க அந்த வீட்டைப் பார்த்தா உடனே கண்டு பிடிச்சுடுவேன் என்றாள் கனகா,பொறுமை இழந்தவராய் காரை விட்டு இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று,ஏங்க இங்கே ஒரு குப்பைமேடு மலைமாதிரி இருந்துதாமே, அந்த இடம் எங்க இருக்கு என்று பலகீனமான குரலில் கேட்ட நாராயணனை,

அந்த ஆட்டோஓட்டுனர் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, ஏன் சார் பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, விலாசம் இல்லாம இது மாதிரி ஒரு அடையாளம்சொன்னா எங்கே போயி தேடறது, ஆனா நீங்க அதிர்ஷ்டக்காரங்க அப்பிடியே பின்னாலே போயி மூணாவது லெப்டுலெ திரும்புங்க அங்கே வரும் அந்தக் குப்பை மலை என்றார்,

அதே போல அவர் சொன்னது போலவே பின்னால் சென்று மூணாவது லெப்டுலெ திரும்பியவுடன் வந்தது குப்பை மலை, 10 வருஷத்துக்கு முன் கனகா பார்த்த அதே குப்பை மலை, திடீர்னு மகிழ்ச்சியோடு கனகா அதோ பாருங்க அந்த வீடுதான் என்றாள்,

அவளின் அறியாமையை கண்டு சிரிப்பதா, ஆட்டோக்காரர் சொன்னது போல தாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா, அல்லது 10 வருடமாக ஒரேஇடத்தில் குப்பை மலையை வைத்திருக்கும் அரசாங்கத்தை கண்டிக்காத மக்களின் அறியாமையை எண்ணி கோவப்படுவதா, என்று புரியாமல் திகைத்து நின்றார் நாராயணன்,

நாதஸ்வரம் ஒலிக்க அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது, வந்திருந்த உறவினர்கள் அனைவருமே சென்னை வாசிகள், எல்லோருமே அந்தக் குப்பை மலையை அடையாளம் வைத்துதான் வந்திருக்கின்றனரோ என்று யோசித்தார் நாராயணன், நாமெல்லாருமே எத்தனை வருடங்கள் ஆனாலும் நடுத்தெரு நாராயணர்கள் தானா?

எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம், என்று எண்ணியபடியே, மணமக்களை வாழ்த்திவிட்டு உணவின் சுவையையும், குப்பை மலையின் நாற்றத்தையும் ஒருசேர அனுபவித்துவிட்டு ஒரு பீடாவையும் வாயில் போட்டுக்கொண்டு அவர்கள் அளித்த தேங்காய்ப் பையையும் வாங்கிக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்து மறுபடியும் காரில் ஏறி உட்கார்ந்து நாட்டைக் கொஞ்சமும் கவனிக்காத அரசாங்கத்தை ஒரு முறை எண்ணி வருந்தி விட்டு,

அந்தக் குப்பை மலையை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு, நாற்றம் தாங்காமல் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நாராயணன்.

தமிழ்த்தேனீ

எழுத்தாளர், நடிகர்


அன்புடன்
தமிழ்த்தேனீ

Wednesday, May 1, 2013

" ஒரு யோசனை "

              "   ஒரு யோசனை "

வல்லமை இதழில் வெளியானது
 http://www.vallamai.com/?p=34831

யோசிக்காம எடுக்கற எந்த முடிவும் சரிப்பட்டு வராது. யோசித்துக்கொண்டே இருந்தால் நேரம் போய்விடும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள்.  இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு பயனுள்ளதாக யோசனை செய்து  ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன். யோசித்தால்தான் எந்த ஒரு செயலையும்  சரியான முறையில் செய்யமுடியும் . வருமுன் காப்பது நல்லது வந்தபின் வருத்தப்படுவது என்பது  அறிவு பூர்வமான செயல் அல்ல . என்று பல சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அப்படி இருக்க  யோசிக்காமல் பேசவும் கூடாது எழுதவும் கூடாது என்பது அறிவு பூர்வமாக மனதில் உறைத்ததால் யோசிக்கத் தொடங்கினேன்.   யோசித்தல் என்றால் என்ன என்று மனதில் ஒரு யோசனை உதித்தது? ஆமாம் யோசித்தல் என்றால் என்ன?

எவ்வளவு வேலைகள் , இடையூறுகள் இருப்பினும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மனதில் அடி நாதமாக வைத்துக் கொண்டு  தியானம் போல் இடைவிடாது ஒரு அதைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருப்பது யோசனை என்னும் முடிவுக்கு வந்தேன்.
ஆகவே யோசிக்கத் தொடங்கினேன்!  முதலில் நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைச் செயலாக்க யோசிக்க வேண்டும் .  எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது .

 நாம் எதைப் பற்றி எழுதலாம்?   எதைப் பற்றி எழுத வேண்டுமென்றாலும் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பிறகுதானே எழுத வேண்டும் .   ஆம் முதலில் அதைப் பற்ற வேண்டும், அப்படி  முழுமையாக அதைப் பற்றினால்தான், அதைப் பற்றி யோசிக்கவே முடியும். இப்படி இருக்க பற்றுவது என்பதைப் பற்றி  முழுமையாக அறிந்து கொண்டால்தான் பற்றவே முடியும்.

ஆகவே பற்றுவது பற்றி யோசித்தேன். பற்று என்னும் சொல்லுக்குள் இருக்கும் பற்றைப் பற்றி யோசித்தேன்.  யோசிக்க யோசிக்க பற்று வந்தது , இன்னும் ஆழ்ந்து யோசித்தேன் இன்னும் அதிகமாக ஆழமான பற்று வந்தது.  பற்றுவது என்பது நம்மை மறந்து நம் சுயத்தை முழுவதுமாக இழந்து நாம் எதைப் பற்றி யோசிக்கிறோமோ   அதை முழுமையாகப் பற்றி  அதன் பிறகு அதைப் பற்றி யோசிப்பது  என்னும் தெளிவு வந்தது.

இப்போது தெளிவாக யோசித்தேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன் திடமாக, தீர்மானமாக எதைப் பற்றி யோசிப்போம் என்று அதைப் பற்றினேன் . அதைப் பற்றியே யோசித்தேன் .  அதனால் வந்த  எழுத்து இது.    மீண்டும் ஒரு முறை எழுதியதைப் படித்துப் பார்த்தேன். நான் எதைப் பற்றி இது வரை ஆழ்ந்து யோசித்திருக்கிறேன் என்று புரிந்து கொள்ள மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படித்தேன்.

இபோதுதான் புரிந்தது நான் இவ்வளவு நேரமாக இதைப் பற்றித்தான் யோசித்திருக்கிறேன் என்று.   ஆக இன்னும் நான் எதை எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதைப் பற்றி இன்னும்  யோசிக்கவே இல்லை  என்று புரிந்தது. இப்போது நான் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன் எதைப் பற்றி நான் யோசிக்க வேண்டுமென்று. கடைசியில் ஒன்று புரிந்தது,   நாம் எவ்வளவுதான் யோசித்தாலும்  அவற்றையெல்லாம் எழுத முடிவதில்லை.

 நாம்  எழுதத் தொடங்கியவுடன் நம்மை அறியாமல் நம் மனம் எதை பற்றுகிறதோ  அதிலேயே ஆழ்ந்து அதைப் பற்றியே யோசித்து ப்ரபஞ்ச  வெளியில் இணைந்து , ப்ரபஞ்ச வெளியில் அலைந்து  பல செய்திகளைச் சேகரித்து அதன் சேகரங்களின் விளைவாகிய  முழுக் கருவை உள்வாங்கி அதைப் பற்றி எண்ணங்களையே நம் மனதில் விதைத்து  நம்மை எழுதத் தூண்டுகிறது.

ஆகவே நம் மனம் எதை விதைக்கிறதோ  அதற்கு நாம் கட்டுப் பட்டு,  நம் உணர்வுகள் கட்டுப்பட்டு அதன் விளைவாக மனதிலிருந்து  நேராக நம் கைகளுக்கு அந்த  எண்ணங்கள் அனுப்பப்பட்டு,  தாமாகவே  மனம் சொல்வதை விரல்கள் எழுதுகின்றன.   ஆக நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைப் பற்றி  எழுத முடிவதே இல்லை  அதைத் தவிர  மற்ற எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறோம் என்பதே உண்மை என்று உணர்ந்தேன்.

இப்போது  நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்  .யோசனை செய்யலாமா வேண்டாமா?   மனம் யோசிப்பதை  எழுதிவிட்டுப் போகலாமா, அல்லது நாமே  இன்னும்  ஆழ்ந்து யோசிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Wednesday, April 17, 2013

" நாகரீக பெப்பே "

http://s7.addthis.com/button1-bm.gif
http://s7.addthis.com/button1-bm.gifஉனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே  என்று முன் காலத்தில் ஏமாற்றுபவர்கள் கொக்கரிப்பது வழக்கம் .ஆனால் அந்தக் காலத்தில் வெறும் கோமணம் அல்லது,லங்கோட்டா என்று சொல்லுவார்கள் அதை உடுத்துக் கொண்டு, பாதுகாப்பாக வாழ்ந்தவர்கள்தான் அதிகம் பேர், அதற்குப் பிறகு அரை நிஜார், அரை நிக்கர் என்று சொல்லக் கூடிய பாதி கால்சட்டை வழக்கத்துக்கு வந்தது .   பிறகு அயல் நாட்டாரைப் பார்த்து நாமும் முழுக் கால் சட்டையை அணிய ஆரம்பித்தோம் .ஆனால் நம்முடைய அரைக்கால் சட்டையிலிருந்து தோன்றியதுதான் அயல்நாட்டவரின் முழுக்கால் சட்டை.
தினமலரில் மேற் கண்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்இந்த பெப்பே என்கிற நிறுவனம் அரைக்கால் சட்டையைத் தயாரிக்க  இந்தியாவில் 150 கோடி ரூபாய்களை முதலீடு செய்யப் போகிறதாம்....ஜாக்கிரதை  .நம்முடைய வருமானத்தில் இன்னும் அதிகமாக  நம்மிடமிருந்து அரைக்கால் சட்டைக்காக அளிக்கப் போகிறோம்நம்முடைய பழைய கலாச்சாரங்கள் எப்படி உருமாறி நம்மிடமே  திரும்பி வந்து நமக்கே செலவு வைக்கிறது .
சமீப காலங்களில்  கணிணித் துறையின் அமோக வளர்ச்சியால் பல இந்திய நடுத்தரக் குடும்பங்களில் இருந்து பல இளைஞர்கள்  அமெரிக்கா போன்ற அயல் நாடுகளுக்கு  கணிணித் துறை வல்லுனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங்கே சென்று  வாழ்க்கையைத் தொடங்கி  நம் நாட்டுக் கலாச்சரத்திலும்  அன்னிய நாட்டுக் கலாசாரத்திலும் இங்கொரு கால்  அங்கொரு கால் என்று  வைத்துக் கொண்டு நிலைதடுமாறி விட்டு கடைசியில்  இயலாமையினால்  அன்னிய நாட்டுக் கலாசாரத்தையே  முழுமையாக கடைப்பிடிப்பது  என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள்,
அப்படி அவர்கள் கலாச்சார மாறுதல்களுக்கு உட்பட்டு , ஜீன்ஸ், ஷார்ட்ஸ் என்று ஏகத்துக்கும் மாறிவிட்டதால்  பெற்றோரை அங்கே அழைத்துச் சென்று அவர்களுக்கும் அன்னிய நாட்டுக் கலாசாரத்தை கற்றுக் கொடுத்து  வாழப் பழக்கி விடுகிறார்கள்.  அப்படிப் பட்ட பெற்றோர் மறுபடியும்  இந்தியாவுக்கு திரும்பும்போது ஜீன்ஸ் , ஷார்ட்ஸ் என்று  அணிந்து கொண்டு  உலா வருகிறார்கள்.
 அனேக வயதானவர்களும்  ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு    கையில் உயர்தர செல்போனையும் (பிள்ளைகள் வாங்கிக் கொடுத்தது)  பிடித்துக் கொண்டு  உலா வருகிறார்கள்.    இங்கே  அயல் நாடுகளுக்கு செல்ல இயலாமல்  இருக்கும் இளசுகள்,   அடேயப்பா  இந்தப் பெரிசுகள்  அலட்டும் அலட்டல் இருக்கிறதே   தாங்க முடியலைப்பா   என்று முணுமுணுப்பது  காதில் விழுகிறதா. அடிப்படைக் கலாச்சாரம்  மாறாமல்  பெரியவர்களும்  நடந்துகொண்டு பிள்ளைகளுக்கும் நம் கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்த வேண்டிய தருணம் இது   நாம் ஷார்ட்ஸில் மட்டும் மாறவில்லைமொத்த நாகரீகத்தின் ஆணி வேரையே   மாற்றிவிட்டோமோ  என்று தோன்றுகிறது
http://s7.addthis.com/button1-bm.gif
http://s7.addthis.com/button1-bm.gif
http://s7.addthis.com/button1-bm.gifhttp://s7.addthis.com/button1-bm.gif திசை தெரியாமல் குழம்பி  திரு திருவென்று விழித்துக் கொண்டிருப்போரை  ஏன் இப்படி   பேபே   என்று விழிக்கிறாய் என்பார்கள் .இப்படித்தான் நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம்  ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாய். இப்படியே நாம் விழித்துக் கொண்டிருந்தால் மொத்தக்  கலாச்சாரமும்  அழிந்து போகும் என்பதில் சந்தேகமில்லை.      ஆமாம்  நாம்   என்னதான் செய்து கொண்டிருக்கிறோம்.
http://s7.addthis.com/button1-bm.gif
http://s7.addthis.com/button1-bm.gif

Contact No : 9840884088    Email : rkc1947@gmail.com  ,  http://thamizththenee.blogspot.com