" வெந்து தணியும் காடுகள்” சிறு கதை வல்லமை இதழில் வெளியாகி உள்ளது-- http://www.vallamai.com/?p=2418
அப்பாவின் நண்பர் விஸ்வநாதனின் வீட்டுக்குப் போய் அவர் மனைவி காமாட்சியிடம் பேசிக்கொண்டிருந்தாள் ரம்யா. “இங்கே கற்பகாம்பாளைத் தரிசனம் செய்யணும்னு வந்தேன். அப்பிடியே உங்களையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன். சரி நான் கிளம்பறேன்” என்றாள் ரம்யா. “இதோ வரேன், இரு. குங்குமம் தரேன். இட்டுண்டு போயிட்டு வா” என்றபடி குங்குமச் சிமிழை நீட்டினாள், காமாட்சி மாமி. குங்குமத்தை இட்டுக்கொண்டு கிளம்பினாள் ரம்யா.
“உங்க அப்பாவைப் போன வாரம் ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்லே பாத்தேம்மா. மனையைப் பதிவு செய்ய வந்திருந்தார். எங்க வீட்டு முகவரிதான் குடுத்திருக்கார். அதற்கான பத்திரம், இங்கேதான் வரும். வந்தவுடனே நான் கொண்டு வந்து தரேன். அப்பாகிட்ட சொல்லும்மா” என்றார் விஸ்வநாதன்.
‘சுருக்’ என்றது ரம்யாவுக்கு. நம்மகிட்ட சொல்லாம எதையுமே செய்யமாட்டாரே அப்பா. ஒரு நிமிஷம் தலை சுற்றிற்று. சமாளித்துக்கொண்டு “தெரியும் சொன்னார்” என்று சமாளித்துவிட்டு கிளம்பினாள்.
“யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. எதுக்கு எங்ககிட்ட மறைக்கணும். நீங்க மனை வாங்கினா நாங்க சந்தோஷப்படுவோம், பொறாமைப்படமாட்டோம். ஏம்பா இப்பிடி செஞ்சீங்க? அவமானமா இருக்கு. அந்த விஸ்வநாதன் சார் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா? நான் உங்க மூத்த பொண்ணுப்பா. ஏன் என்கிட்ட சொல்லலை?”
ரம்யா ஆவேசத்துடன் கேட்ட கேள்வியில் அதிர்ந்தார் ராமாமிர்தம். முதல் முதலா அவர் வாழ்க்கையில் அவருக்கென்று பிறந்த முதல் குழந்தை, அப்பா என்கிற ஸ்தானத்தை அளித்த பெண். தோளிலும் மார்பிலும் வைத்துக் கொஞ்சி, பாசத்தையும் முதற்குழந்தை என்கிற ஆசையையும் கொட்டி வளர்த்த அவருடைய மூத்த குழந்தை. அந்தப் பெண்குழந்தை இப்போது வளர்ந்து ஒரு ஆணுக்கும் வாழ்க்கைப்பட்டு, இரு குழந்தைகளையும் பெற்று முதிர்ந்து நிற்கிறாள்.
‘குழந்தைகளுக்குத் தெரியாமல் நிலம் வாங்கி இருக்கேன்’ என்று விஸ்வநாதனிடம் சொன்னது தவறு என்று உறைத்தது அவருக்கு. அந்தப் பத்திரம் வந்துவிட்டதா என்று பார்த்து, அதை அவர் வீட்டுக்கே சென்று வாங்கி வந்திருக்க வேண்டும். ‘சரி என்னதான் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் இப்படித்தான் முட்டாள்தனம் செய்வோம்’ என்று யோசித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தார்.
“அப்பா உங்களைக் கேள்வி கேட்க, எனக்குத் தகுதியில்லாம இருக்கலாம். ஆனா, மனசு பொறுக்கலைப்பா. எனக்கு உள்ள ஒண்ணு வெச்சிண்டு, வெளிலே வேற பேசத் தெரியாது. அதுனாலே கேக்கறேன். இது மாதிரி நிலம் வாங்கி இருக்கேன்னு சொல்லியிருந்தா, நானும் சந்தோஷப்பட்டிருப்பேனே, எதுக்குப்பா என்கிட்டே மறைக்கணும்?”
“நாங்க இப்போ சொந்தமா வீடுகூட இல்லாம இருக்கலாம். நாங்களும் நிமிர்வோம். வீடு வாங்குவோம். ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க. எந்தக் காலத்திலேயும் நான் என் சொந்தக் கால்லே நிப்பேனே தவிர, உன்கிட்ட கையேந்த மாட்டேன். எனக்கு இதைக் குடு அதைக் குடுன்னு கேக்கமாட்டேன்” என்றாள் ரம்யா.
‘இன்னும் இவள் குழந்தையாகவே இருக்கிறாளே! இவ்வளவு வளர்ந்து கூட இன்னும் புரிந்துகொள்ளாத குழந்தையாகவே இருக்கிறாளே!’ என்கிற அதிர்ச்சியும், நம்மைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு, தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாளே என்னும் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை நிலைகுலைய வைத்தது. அவர் வாழ்க்கை அவருக்குப் பல அனுபவங்களைக் கொடுத்திருந்தது. ஆனாலும் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவர் சிக்கியதில்லை. ஆடிப் போனார் ராமாமிர்தம்.
இன்று வரை எது செய்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து விவாதித்து, கூடியவரை ரகசியம் ஏதும் இல்லாமல் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு செயல்பட்டிருக்கிறார் ராமாமிர்தம்.
ஏதோ ஆண்டவன் புண்ணியத்திலே அவர் உழைப்பிலே அவருக்கு வந்த பணமே அவரையும் அவர் மனைவி லலிதாவையும் கடைசீ வரை யாரிடமும் கையேந்தி நிற்காத ஒரு நிலையைத் தந்திருக்கிறது. பேராசை இல்லாத ராமாமிர்தத்துக்கும் அவர் மனவிக்கும் இருப்பதற்கு ஒரு வீடு, கையில் ஏதோ கொஞ்சம் பணம் என்று இருந்தாலும் தினமும் இந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கு நன்றி சொல்லிக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த மேடு பள்ளம், சரிவு, உயர்வு, அவமானங்கள், சுனாமிகள், இடி மின்னல் மழை, பூகம்பம்…. அத்தனையையும் கூடவே நின்று தோள் கொடுத்துத் தாங்கி அவரையும் கீழே விழாமல் தாங்கி, தானும் நிமிர்ந்த அவர் மனைவி லலிதா அவளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.
இரவு வீட்டுக்கு வருவதற்கு எத்தனை நேரமானாலும் தூங்கிப் போனாலும் அவர் வந்தவுடன் எப்படியோ அறிந்துகொண்டு அத்தனை தூக்கத்திலும் இருட்டில் அவரைத் தேடிக்கொண்டு வந்து, அவர் மார்பில் தூங்கிய குழந்தை. யாராவது அவரைப் பற்றி ஏதேனும் சொன்னால் ஒற்றை விரலை நீட்டி, ‘எங்க அப்பாவை இப்பிடிச் சொன்னீங்க, அடிச்சிருவேன்’ என்பாள். அந்தக் குழந்தை அவரை இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.
அவளுக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத நிலையில், வாடகை வீட்டிலே இவள் இருப்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, ரகசியமாக அவர் செய்த காரியம், இன்று அவரைக் குற்றவாளியாக்கி இருக்கிறது. யாருக்காக அதைச் செய்தாரோ அந்த மூத்த பெண்ணே அவரைக் குற்றவாளியாக்கி, ஏதோ நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து, தகாத குற்றம் செய்தவரை விசாரிப்பது போல் கேட்கிறாள்.
மனம் ஒடிந்து போனது அவருக்கு. பெற்ற குழந்தைகளில் அனைவரையும் சமமாகப் பாவித்தாலும் யார் சற்றே பலவீனமாக இருக்கிறார்களோ அந்தக் குழந்தையின் மேல் ஒரு தனிக் கவனமும் ஆதரவும் காட்டுவது இயல்பு. இதைப் புரிந்துகொள்ளாமல், யாருக்கும் எந்த துரோகமும் செய்யாத அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள், குழந்தைகள் என்னும் அவரது அசாத்திய நம்பிக்கை தகர்ந்து போனதில் ஏற்பட்ட அதிர்ச்சி.
மற்ற இரு குழந்தைகள் ஏதோ ஓரளவுக்கு அவர்கள் சுய தேவையை ஈடு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். சமாளித்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை. ஆனால் பெரிய பெண் வாழ்க்கைச் சூழலைச் சமாளித்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாளே, சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல். இன்னும் குழந்தைகளை வேறு படிக்க வைக்கணும் என்று யோசித்து, யாருக்கும் இப்போ சொல்லவேண்டாம் என்று நினைத்தது தப்பா?
வங்கியில் தங்களின் பாதுகாப்பு கருதி வைத்திருந்த பணத்தை எடுத்து, யாருக்கும் தெரியாமல் ஒரு நிலம் வாங்கினார். அதுவும் ஒரு வேளை பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் நன்றாக உழைத்து அவர்களாகவே வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால், மகிழ்ச்சியோடு இப்போது வாங்கிய நிலத்தை மூன்று பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம்.
அப்படி ஒரு வேளை பெரிய பெண் இதே நிலையில் இருந்தால் மற்ற இரு பிள்ளைகளின் சம்மதத்தோடு பெரிய பெண்ணின் முன்னேற்றத்துக்காக கொடுக்கலாம் என்று எண்ணித்தானே வாங்கினார்?
சரி, இவளுக்கு எப்படிப் புரியவைப்பது? எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பாள். அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார். “சரி விடுங்கப்பா, உங்க இஷ்டம். நான் யாரு உங்களைக் கேள்வி கேட்க? நீங்க செய்யிற எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும்னு நான் எப்படி எதிர்பாக்கலாம்?” என்று சுய இரக்கம் ஆட்டிவைக்க, அவள் அலுத்துக்கொண்டிருந்தாள்.
அவருக்குத் தோன்றியது இவள் வளரவே இல்லை. அப்படியே இன்னமும் குழந்தையாய்த்தான் இருக்கிறாள். அவருக்கு ஒன்று புரிந்தது. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிவு உறைத்தது. அனுபவம் தரும் பாடம் அதற்கு ஈடே இல்லை. இவளுக்கும் அனுபவம் பாடம் சொல்லித் தரும் என்னும் நம்பிக்கை பிறந்தது.
அவளுக்குப் பதில் சொல்லவில்லை! வெந்து தணிந்த காடு புகைந்துகொண்டிருந்தது. அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது!
ஆனால் அனுபவமில்லாத இன்னொரு காடு, சுடும் என்று தெரியாமலே தனக்குள் அக்கினிக் குஞ்சை வைத்துக்கொண்டு வெந்துகொண்டிருக்கிறது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
திரு ஆதனூர் படியளந்த பெருமான்
Sunday, March 27, 2011
Wednesday, March 23, 2011
Thursday, March 10, 2011
’ மனம் கவர்ந்த பெண்மணி”
சக்தி புதிய விகடனில் என்னுடைய “ மனம் கவர்ந்த பெண்மணி” கட்டுரை வெளிவந்துள்ளது
http://new.vikatan.com/others/womens2011/index.php
"என் மனம் கவர்ந்த பெண்மணி"
உலகத்தில் நம் மனம் கவரும் பெண்மணிகள் ஏராளம். மனம் கவரும் பெண்மணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். சிலர் அன்பால் கவருவார்கள், சிலர் அழகால் கவருவார்கள், சிலர் ஆளுமையால் கவருவார்கள், சிலர் கவிதையால் கவருவார்கள், சிலர் வீரத்தால் கவருவார்கள், சிலர் விவேகத்தால் கவருவார்கள், சிலர் கருணையால் கவருவார்கள், சிலர் தாய்மையால் கவருவார்கள் . யோசித்துப் பார்த்ததில் மேற்கூறிய அனைத்து தகுதிகளாலும் என்னக் கவர்ந்த பெண்மணி என் தாயார் கமலம்மாள்
ஸ்ரீரங்கத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குழந்தை பருவத்தை அனுபவிக்கும் காலத்திலேயே பூப்படைந்து பால்யவிவாகத்திற்கு தலைவணங்கி திருமாங்கல்யத்தை ஏற்று, குழந்தையாகவே இருந்தாலும் , என் தந்தை சார்ந்த ஒரு பெரிய குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்று மிகத் திறமையாக நிர்வாகத் திறனை தன் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து அந்தக் குடும்பத்தை மிகத் திறமையாக நிர்வகித்து.
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
என்னும் வள்ளுவரின் வாக்குக்கொப்ப வாழ்ந்து எத்துணை கஷ்டம் வரினும் அத்தனை கஷ்டங்களையும் தன் நேர்மை என்னும் மனோ வலிமையால் சமாளித்து தனக்குத்தானே குருவாகி நின்று தன் தகுதியையும் வளர்த்துக்கொண்டு. தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ளவும், தேசபக்தியை வளர்த்துக்கொள்ளவும்,தகைசான்ற அறிவியலாளர்களோடு வரையறையோடு பழகி , என் பாட்டனாரின் தமிழ் அறிவையும் தனக்குள் ஏற்று நம் நாட்டில் பஞ்சம் வந்த காலத்தில் அடுத்தவரைச் சாராமல் தன் குடும்பம் காக்கவும், தன்னை விடத் தளர்ந்த நிலையில் இருக்கும் மற்றவர்களின் மேன்மைக்காகவும் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் எழுதிவந்தவர். ஒரு காலத்தில் அவரது கதைகளோ ,கட்டுரைகளோ,கவிதைகளோ வராத பத்திரிகைகளே இல்லை எனலாம்.
அதன் மூலமாகவரும் சொற்பத் தொகையிலேயே குடும்பத்தை நிர்வகித்து, அடுத்தவருக்கும் தன்னாலியன்றவரை உதவி தன் கடைசி மூச்சு இருக்கும் வரையில் நம் தேசத்துக்காகவும் நம் மக்களுக்காகவும் வாழ்ந்து திரு மு கோதை நாயகி அம்மாவோடு இணைந்து, “ வாருங்கள் மறியல் செய்து மனமகிழ்ந்திட வாருங்கள்” என்று பாடிக்கொண்டே மஹாத்மா காந்தியிடம் தன் கைவளையலைக் கழற்றிக் கொடுத்துவிட்டு கதர்கஞ்ச் என்னும் போராட்டத்தில் கலந்துகொண்டு, ஒரு உதாரணப் பெண்மணியாகத் திகழ்ந்த என் தாயார் ஆர். கமலம்மாள்.
பெற்ற மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்து, அப்படியும் மனம் தளராமல் மீதி இருக்கும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய சூழ்நிலையில் உற்ற கணவனும் இயறகை எய்த ,அப்போதும் நெருப்பில் வீழ்ந்து மாண்டாலும் மீண்டு வரும் பீனிக்ஸ் பறவை போல் படிக்க வைத்து ஆளாக்கி, வாழ்க்கையின் உன்னதமான இடத்துக்கு எங்களையெல்லாம் கொண்டு வந்து சேர்த்து. வயதான காலத்தில் புற்று நோய் பாதித்தாலும் அப்போதும் தளராமல் 70 வயதிலும் ”கிருஷ்ணதீர்த்தம் “ என்னும் சிறுகதைக்கு முதற்பரிசு வாங்கியதும், அவர்கள் எழுதிய பாடல்களை திருமதி பாம்பே சகோதரிகள் பாடல்களாகப் பாடி “ தெய்வீகப் பாமாலை” என்னும் பெயரில் ஒலி இழையாக வெளியிட்டதும் அவர் சாதனைகள்.
நான் பிறக்கும் போது என் தாயாருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் யார் தெரியுமா? எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள்,ஆம் டாக்டர் திரிபுரசுந்தரி என்னும் லக்ஷ்மி அவர்கள் என் தாயாரின் இனிய ஸ்னேகிதி தாய்மையோடு என்னை அணைத்து ”தன் கையில் பூத்த மலர் ” என்று என்னை வர்ணித்து. தன் வாயாலேயே இந்த செய்தியை சென்னை கம்பர் அரங்கத்தில் மேடையிலேயே கூறியவர் எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள்.
இவற்றையெல்லாம் விட நம் தேசத்தின் விடுதலைக்காக அந்தக் காலத்தின் அடக்கு முறைகளுக்கும் கட்டுபெட்டிதனத்துக்கும் அடிபணிந்து விடாமல் போராடி ,அதே நேரத்தில் குடும்ப கௌரவத்தையும், கடமைகளையும் விடாமல் காத்து எழுத்தாளர் என்று பெயரெடுத்த, வீரப் பெண்மணி ஆர் கமலம்மாள் அவர்களே என் மனதைக் கவர்ந்த பெண்மணி என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
என் மனதை கவர்ந்த, என் ஆத்மாவின் அன்பையும் கவர்ந்த என் தாயார் ஆர் கமலம்மாள். இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் இப்படிப்பட்ட புனிதமான தாயாரின் வயிற்றிலேயே பிறக்கவேண்டும் என்றே வேண்டிக்கொள்கிறேன் . எனக்குள்ளும் தேச பக்தியையும், தமிழையும் நற்பண்புகளையும் ஏற்றி என்னையும் மனிதம் நிறைந்த மனிதனாக, எழுத்தாளனாக வடிவமைத்த என் தாயார் ஆர். கமலம்மாள்தான் என் மனதை மிகவும் கவர்ந்த பெண்மணி என்பதில் பெருமை கொள்கிறேன்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
”வேருக்கு நீர்”
சிறுகதைகள் | 0 Comment
vallamai.com » வேருக்கு நீர்தமிழ்த்தேனீ “சரஸ்வதி, டெல்லிலெல்லாம் ரொம்பக் குளிராம். அதுவுமில்லாமே நாம் போயிட்டு வரப் போற பத்ரிநாத் இமய மலைக்குப் பக்கத்திலே இருக்கு. தாங்க முடியாத அளவுக்குக் குளிர் இருக்குமாம். எதுக்கும் ரெண்டு கம்பளி எடுத்துக்கோ” என்றேன் சரஸ்வதியிடம். பல காலமாக கோடித்து இப்போதுதான் வேளை வந்திருக்கிறது. கடமைகளையெல்லாம் ஓரளவு முடித்தாயிற்று. பத்ரிநாத் சென்று தரிசித்து வரவேண்டும் என்னும் ஆசை நிறைவேறும் தருணம். மிக உற்சாகமாக, “சரி, நீங்களும் உங்களுக்கு வேண்டியதெல்லாம் எடுத்து வெச்சிக்கோங்க. அங்கே போனா எது கிடைக்கும், எது கிடைக்காதுன்னு தெரியாது” என்றாள். எனக்கு புரிந்தது, அவள் பூடகமாக எதைச் சொல்கிறாள் என்று. எனக்கு, அவ்வப்போது சிகரெட் பிடிக்கும் வழக்கம் உண்டு. அதை அவ்வப்போது கண்டிக்கும் வழக்கம் அவளுக்கு. ‘ஜாக்கிரதை, இதையெல்லாம் நிறையப் பிடிக்காதீங்கோ. உடம்பு கெட்டுப் போயிடும்’ என்பாள். ஆனாலும் வாட்ச்மேனிடம் காசு கொடுத்து, வாங்கி வரச் சொல்லும் போது கண்டுகொள்ள மாட்டாள். “சரி, டிக்கெட்டெல்லாம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோங்க. அப்புறம் டெல்லிலே போயி இறங்கி, ஒரு டாக்சி வெச்சிண்டு வெங்கடேஸ்வரா மந்திருக்கு போயிடலாம். அப்புறம் அவர் பொறுப்பு, அங்கேருந்து தேவநாதன், பத்ரிநாத்துக்குக் கூட்டிண்டு போயிடுவார்” என்றாள். “சரி சரி, இது வரைக்கும் பத்து வாட்டி சொல்லிட்டே. நானும் பத்திரமா டிக்கட்டெல்லாம் எடுத்து வெச்சிண்டுட்டேன்னு சொல்லியாச்சு” என்றேன் ஆரம்பத்திலேருந்து இவளுக்கு இவளோட பயத்தையெல்லாம் என்மேலே ஏத்தி வெக்கெறதே வழக்கம். வாசலில் ஏதோ சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தேன்! லக்ஷ்மி மன்னி காரிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள். என்னடா இது உலக அதிசயம்! என்று மனம் ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்துக்கொண்டு வாசலுக்கு ஒடினேன். ஆச்சு மன்னி கதவின் அருகே வந்து நிற்கிறாள். வாங்க என்று கூப்பிடவா? நீங்க எதுக்கு என் வீட்டுக்கு வந்தீங்க என்று கேட்பதா? என்று குழம்பி ஏதோ ஒன்று உள்ளுக்குள்ளே உணர்த்த, “வாங்கோ மன்னி” என்று கதவைத் திறந்து விட்டேன் அண்ணாவின் மூத்த மகனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.. “சித்தப்பா, பத்ரிக்கு போயிட்டு வரப் போறீங்களாமே. அம்மாவும் உங்களோட வராளாம், கூட்டிண்டு போயிட்டு வரமுடியுமான்னு கேக்கச் சொன்னா” என்றான் அவன். சரஸ்வதியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். ‘என்ன சொல்வாள் இவள்?’ அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். திருமணமாகி வந்ததிலிருந்து, மன்னி படுத்திய பாடெல்லாம் தெரிந்தும், அடுத்தும் அவள் படுத்திய பாட்டுக்கெல்லாம் ஈடுகொடுத்து அமைதி காத்த சரஸ்வதியின் வாயிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்று அவள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். “வரச்சொல்லுங்கோ, கூட்டிண்டு போயிட்டு வரலாம், மன்னிக்கு மட்டும் வேற யாரு இருக்கா? நாமதானே செய்யணும்” என்றாள் சரஸ்வதி.
“பழசையெல்லாம் மறக்கறதுதான் நல்லது. நாம என்ன தலையிலேயா தூக்கிண்டு போய்ட்டு வரப் போறோம். கொஞ்சம் பத்திரமா பாத்துக் கூட்டிண்டு போயிட்டு திரும்பக் கொண்டுவந்து விடணும், பாத்துபோம்… பகவான் இருக்கார்” என்றாள். இவ பாவம் இதுவரைக்கும் எனக்கு வாழ்க்கைப்பட்டு எங்கும் போனதில்லை. போகச் சந்தர்ப்பமே அமையவில்லை. திருமணம், அதன் பின்னர் வரும் வருமானத்தில் நடுத்தர வாழ்க்கை. அதிகப்படி ஏதும் செய்ய முடியாதபடி, அரைகுறை வருமானம். பிள்ளைகள் படிப்பு. பற்றாக்குறைக்கு நிமிர முடியாத அளவுக்குக் குருவியின் தலையில் பனங்காய் போல, அம்மாவின் புற்று நோய்க்கே மாதா மாதம் சக்திக்கு மீறிச் செலவு. மன்னியிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டு, வேலை வேலை என்று எப்போதும் வேலை செய்து வரக்கூடாத நோய், கொடிய நோய் வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள் அம்மா. கணவனின் அம்மா என்றாலே அவளைக் கொடுமைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அவள் உன்னைக் கொடுமைப்படுத்துவாள் என்று மன்னிக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ. அம்மாவை எவ்வளவு துளைக்க வேண்டுமோ அவ்வளவு துளைத்துவிட்டாள். வார்த்தைச் சவுக்கடிகளாலும் குடும்பத்தை இரண்டாக்குவதிலும். மனத்தில் ஏற்பட்ட காயம், அம்மாவுக்குப் புற்று நோயாக உருவெடுத்து, செய்யாத வைத்தியமில்லை, வேண்டாத தெய்வமில்லை. டாக்டர் ராஜலட்சுமி புற்று நோய் மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். ‘இனி வைத்தியம் செய்து உபயோகமில்லை. இவ்வளவு நாட்கள் உங்கள் சம்பளத்தை வைத்துக்கொண்டு எப்படி செய்தீர்களோ? உங்கள் பாசத்தை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இனி அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது’ என்றார். ஆனால் இறைவன் எங்களுக்குப் பூலோக நரகத்தை என் அம்மாவின் வியாதி மூலமாகப் புரியவைத்தான். ஆமாம் அவதிப்பட்டுக்கொண்டே அம்மா எட்டு வருடம் உயிரோடிருந்தாள். என்னதான் முடிந்த வரை வைத்தியம் பார்த்தாலும் அம்மாவின் வலியை வாங்கிக்கொள்ள முடியவில்லையே. அம்மாவின் மேல் உயிரையே வைத்திருந்த எங்களையே ‘இறைவா, அம்மாவை எடுத்துக்கொண்டு விடு, அவள் படும் பாட்டை சகிக்க எங்களால் முடியவில்லை’ என்று வேண்ட வைத்தான் இறைவன். அது, கொடுமையின் உச்சகட்டம். இந்த நிலை யாருக்குமே வரக் கூடாது என்று இருவருமே இறைவனை மனமார வேண்டினோம். பூலோக நரகத்தின் வலையில் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் விதியின் கரங்களுக்கு மறுப்புச் சொல்ல எண்ணி, கையைக் காலை ஆட்டி, இன்னும் வகையாக வலையில் சிக்கிக்கொண்டு, எப்படி மீள்வது என்றே தெரியாமல், விதி என்னும் சிலந்தி எப்போது வந்துவிடுமோ என்னும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை முப்பது வருடமாக. *************************************************** முதல் நாள் இரவு நினைவே இல்லாமல் படுத்திருந்த அம்மாவிடம் உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ தோன்றியது என்னைப் பெற்றெடுத்த தெய்வத்திடம் அமுதம் குடித்து வளர்ந்த நான், அந்தக் கனக முலையையும், நான் குடியிருந்த கோயிலான அவள் வயிற்றையும் ஒரு முறை இதமாக தடவி விட்டு, இரு கையையும் கூப்பிக்கொண்டு, ‘என்னை பெற்ற தாயே, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். என்னைப் பெற்று இந்த பூமிக்குக் கொண்டு வந்த உனக்கு எப்படி என் நன்றிக் கடனைத் தீர்ப்பேன்’ என்று எண்ணி, கண்ணில் நீர் வழிய, மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டே சற்று நேரம் இருந்தேன். பல நாள்களாக நினைவில்லாமல் இருந்த அந்த உடலில் கூட உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு சலனம் ஓடுவதை உடல் அசையாவிட்டாலும் உணர்வுகள் அசைவதை என் மனத்தால் உணர முடிந்தது. ‘அம்மா இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு மகனாகவே பிறக்கவேண்டும். அதற்கு அருள் செய்வாய் தாயே’ என்று வேண்டிக்கொண்டேன். ஆமாம் அப்பா இறந்து போகும்போது எனக்கு பதினோரு வயது. அன்றிலிருந்து இன்று வரை என்னை ஆளாக்க, இவள் பட்ட கஷ்டம், கண்முன்னால் நான் கண்ட இவள் உழைப்பு, நேர்மை, மனோதிடம், அப்பப்பா. இவள் இறந்து, தந்தை உயிரோடிருந்தால் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே! தூக்கம் கண்களைச் சுழற்றியது. அப்படியே கட்டிலின் கீழே படுத்துக் கண்ணயர்ந்தேன். நல்ல தூக்கத்தில் என் மனைவி என்னை எழுப்பினாள். என்ன என்றேன். கண்களைக் கசக்கியபடி, வாயில் முந்தானையைப் பொத்தியபடி “அம்மா..” என்றாள். திடுக்கிட்டு எழுந்து அம்மாவைப் பார்த்தேன். அவள் நிச்சலனமாக இறந்து போயிருந்தாள். இத்துணை நாட்களாக, வலியினால் ஏற்படும் முகச் சுழிப்பைக் கண்டிருக்கிறேனே, தவிர புன்னகையைக் கண்டதில்லை. அவள் இதழ்க் கடையோரம் இப்போது நிம்மதியான புன்னகை. நான் மானசீகமாகச் சொன்னது, உனக்குப் புரிந்ததா அம்மா. அதுதான் புன்னகைக்கிறாயா? உண்மையாகவே என்னை விட்டுப் போய்விட்டாயா? “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்கிற வரிகள், தானாய் என் மனத்துக்குள் ஓடின. அடக்க மாட்டாதவனாய், தாயின் மேல் விழுந்து குமுறிக் குமுறி அழுதேன். ‘இனி நான்தான் ஆதாரம் உனக்கு கவலைப்படாதே’ என்பது போல், என்னை ஆதரவுடன் எழுப்பி, தன் தலைப்பினால் என் கண்ணையும் முகத்தையும் துடைத்துவிட்டு, தன் மேலே ஆதரவுடன் தாங்கிக்கொண்டாள் என் மனைவி. ஆயிற்று, அக்னி தேவனின் அசுரப் பசிக்கு அன்னையை கொடுத்துவிட்டு, அடுத்தடுத்து செய்யவேண்டிய காரியங்களைச் செய்து, அன்னையைக் கரையேற்றியாயிற்று. சாதாரண மனிதன் தானே நான். நமக்கெல்லாம் மறதி ஒரு வரப்ப்ரசாதம். வழக்கம் போல் இயந்திர கதியாய் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியாயிற்று. அடுத்தடுத்து அம்மாவின் ஆசியுடன் முதல் பெண் கல்யாணம். அடுத்த மகன் கல்யாணம், அடுத்து கடைக்குட்டியின் கல்யாணம் எல்லாம் முடிந்து, ஓரளவு கடமைகளை முடித்தாயிற்று என்று இருக்கும் நிலையில் ஒரு தைரியம். வெகுநாட்களாக ஆசைப்பட்டுக்கொண்டிருந்த பத்ரிநாத் பயணம். அதற்கு வேண்டிய பணமும் கட்டியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பவேண்டும். ******************************************************************* அப்பா இறந்து, குடும்பப் பொறுப்பு, அண்ணாவின் தலையில் வந்து, சில காலத்துக்குள் அண்ணாவின் திருமணம் முடிந்து, வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து, ஆறே மாதத்துக்குள் அம்மாவைப் பாடாய்ப் படுத்தி அழவிட்டு, வேலைக்காரியைப் போல நடத்தி, மனிதர்களிடம் சொன்னால் வம்பு வரும் என்று கோயிலில் போய் உட்கார்ந்து, அழுது குமுறி, தன் சோகங்களை அவனிடம் கொட்டித் தீர்த்துவிட்டு நிராதரவான நிலையை மனத்தில் கொண்டு, என்னையும் என் தம்பியையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய கடுமையான சூழ்நிலையில் எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு வேலைக்காரியாய் வலம் வந்துகொண்டிருந்த அம்மா, நினைவுக்கு வந்தாள். ஒரு பெண்ணால் இப்படிக்கூட ராட்சசி போலச் செயல்பட முடியுமா என்று அனைவருமே வியக்கும் வண்ணம் அம்மாவையும் என்னையும் என் தம்பியையும் வேலை வாங்கி, பட்டினி போட்டு, அப்படியும் தன் கொடுமையின் உச்ச கட்டமாக, அண்ணாவை விட்டே எங்களை வீட்டைவிட்டுத் துரத்திய மன்னி. அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. மாலையில் வீட்டுக்கு வந்த அண்ணாவிடம், ‘நாளையிலிருந்து இந்த வீட்டில் நான் இருக்க வேண்டுமென்றால் உங்கள் அம்மாவும் தம்பிகளும் இங்கே இருக்கக் கூடாது. அப்பிடி அவங்கதான் வேணும்னா நான் எங்கேயாவது ஓடிப் போயிடுவேன். உங்களுக்குதான் மானம் போகும். என்னை நீங்க வீட்டை விட்டுத் துரத்திட்டீங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்வேன்’ என்று ப்ரகடனம் செய்தாள் மன்னி. ஒரு பரிதாபமான சூழ்நிலைக் கைதியான ஆண்மகனை அன்றுதான் வாழ்வில் கண்டேன், ‘வேணாம் லக்ஷ்மி. என் அம்மாவையும் என் தம்பிகளையும் என்னை விட்டுப் பிரிச்சிடாதே’ என்று குடும்ப மானம் போகக் கூடாதே என்று அஞ்சி, ரகசியமாகக் கதறிய அண்ணனிடம். ‘நான் சொன்னதைச் செஞ்சிட்டு, என் வீட்டுக்கு வந்து விவரம் சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் இங்கே திரும்பி வரேன்’ என்றபடி, துணிமணிகளை எடுத்துகொண்டு, ஒரு வயதுக் குழந்தையையும் எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே போனாள் லட்சுமி மன்னி. அம்மா, அண்ணாவைப் பார்த்து, ‘டேய் எனக்கு உன்னோட வாழ்க்கைதான் முக்கியம். நாங்க வெளியிலே போறாம்’ என்று வேறு வழியில்லாமல், வீட்டை விட்டு வெளியே வந்து, நடுத்தெருவில் நின்று, எங்கே போவது என்றே தெரியாமல் விழித்துக்கொண்டு நின்ற அம்மாவை, யதேச்சையாக விஷயம் கேள்விப்பட்டு, ஆதரவுக் கரம் நீட்டி, அரவணைத்து, எனக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்து, பத்து ரூபாய்க்கு ஒரு வீட்டையும் வாடகைக்கு ஏற்பாடு செய்த உறவுக்காரப் பெண்மணி. அதன் பிறகு சுய உழைப்பால் அணு அணுவாய் வளர்ந்து அந்த ஆலையில் வேலைக்கு சேர்ந்து இரண்டு நாட்கள் வேலை செய்த பின் கைகளைப் பார்த்தேன். ஆங்காங்கே கிழிந்து, உள்ளங்கை ரணகளமாக இருந்தது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம், ‘என்னால் முடியாதும்மா. நாளையிலேருந்து வேலைக்குப் போகமாட்டேன்’ என்றேன். அம்மா என்னைத் தீர்க்கமாகப் பார்த்தபடி, ‘இல்லே நீ வேலைக்கு போற’ என்றாள். உள்ளங்கையும் மனதும் பழகிவிட்டது இந்த வாழ்க்கைக்கு. ‘நம்ம உடம்பும் மனசும் நாய் மாதிரி எப்பிடிப் பழக்கறோமோ அப்பிடி இருக்கும்’ என்று அம்மா சொன்னது நியாபகத்துக்கு வந்தது. இந்த நாய்க்கும் உடம்பும் மனசும் பழகியது. ஒரு தைரியம் வந்தது. இன்று நிமிர்ந்து நிற்பதற்கு அன்னிக்கு அம்மா சொன்ன வார்த்தைதான் வேதமாக, அடி நாதமாகச் செயல்பட்டிருக்கிறது. ஆயிற்று, அண்ணாவும் லட்சுமி மன்னியிடம் தாக்குப் பிடிக்காமல் சீக்கிரமே போய்ச் சேர்ந்தார். மனிதர்களுக்குக் கைவிட்டுப் போன பின்னால்தானே அருமை புரிகிறது. மன்னியும் உணர்ந்தாள். ஒரு நாள் மன்னியிடமிருந்து போன். ‘என்ன கண்ணா, ரொம்ப நாளாச்சு. சரஸ்வதியையும் கூட்டிண்டு வந்துட்டு போயேன்’ என்றாள். ஆச்சரியம்! வீட்டுக்குப் போனாலே, ‘உன்னை யாரு வரச்சொன்னா?’ என்பாள் மன்னி. அந்த மன்னி இப்போது எப்படி மாறிவிட்டாள். தனிமை மனிதரைத் திருத்திவிடுமோ! ‘ஏன் நீங்க ரெண்டு பேரும் வரவே மாட்டேங்கறீங்க? ஒரு நாள் வந்துட்டுப் போங்களேன்’ என்கிறாள். அந்த மன்னி எங்களோடு பத்ரிநாத் வருகிறாளாம். மன்னியிடமிருந்து போன். “என்ன கண்ணா, நானும் உங்களோடு வரட்டுமா? கூட்டிண்டு போக முடியுமா?” என்றாள். மன்னியும் அம்மாவுக்குச் சமம்தான் அப்பிடீன்னு அம்மாவோட குரல் காதுலே கேட்டது. “வாங்கோ மன்னி, நாங்க கூட்டிண்டு போயிட்டு வரோம், ஒண்ணும் கஷ்டமில்லே” என்றேன் நான். ஆயிற்று, பத்ரிநாத் போகும் வழியிலெல்லாம், சரஸ்வதியின் கையைப் பிடித்தபடி வந்துகொண்டிருக்கிறாள் மன்னி. வயசாச்சு நடக்க முடியலை, மூச்சு வாங்கறது மன்னிக்கு. நான் சொன்னேன் “நிதானமா வாங்கோ. அவசரமில்லே” என்று ஒரு பக்கம் நானும் இன்னொரு பக்கம் சரஸ்வதியும் கையைப் பிடிச்சு அழைச்சிண்டு போனோம். கங்கைக் கரை ஓரம். கங்கை பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள். “கண்ணா, நானும் கங்கையில் குளிக்கணும்” என்றாள் மன்னி. “நீங்க இங்கே கரையோரமா உக்காருங்கோ. நானும் உங்க பிள்ளை மாதிரிதானே. நான் சொம்பாலே மொண்டு கொட்றேன், குளிங்கோ” என்று சொல்லிவிட்டு, சொம்பால் ககையின் புனித நீரால் மன்னியைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன்.
மனதுக்குள் எங்க அம்மாவைக் கங்கைக்குக் கூட்டிண்டு வர முடியலை. அதுக்காகத்தான் பகவான் எனக்கு இப்பிடி ஒரு கொடுப்பினையைக் கொடுத்தானோ என்னும் எண்ணம். அம்மாவைக் குளிப்பாட்டுவது போலவே இதமாகக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலே ஆணென்ன, பெண்ணென்ன. எல்லோருமே அர்த்தநாரிகள்தான் அப்பிடீன்னு மனசிலே தோன்றிக்கொண்டிருந்தது. ஆயிற்று, கங்கையில் குளித்துவிட்டு, மன்னிக்கு சரஸ்வதி உடம்பு துடைத்துக்கொள்ளவும் புடவை உடுத்திக்கொள்ளவும் உதவிக்கொண்டிருந்தாள். மூவரும் கங்கைக் கரையில் சற்றே உட்கார்ந்தோம். மன்னி கங்கையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. “ஏன் மன்னி, என்ன ஆச்சு? ஏன் அழறீங்க?” என்றேன். “அழலை. அண்ணாவை நினைச்சிண்டேன்” என்றாள்.
என்னவோ தெரியலை திடீர்ன்னு என் கையைப் பிடிச்சிண்டு, “டேய் நீயும் சரஸ்வதியும் நன்னா இருப்பேள். உங்களுக்கு ஒரு குறையும் வராது” என்றாள் மன்னி. “நாம உடுத்திண்டு இருக்கற வஸ்திரத்தை கங்கையிலே விட்டுட்டா நாம பண்ண பாவமெல்லாம் அந்த வஸ்திரத்தோட போயிடும்னு சொல்லுவா” அப்பிடீன்னு சொல்லிண்டே ஒரு புடவையைக் கங்கையில் விட்டாள் மன்னி. கங்கையின் பிரவாகத்தில் புடவையும் சுழித்துக்கொண்டு காணாமல் போனது. அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் மன்னி லக்ஷ்மி. “சரி மன்னி, நாம இங்கே பத்ரிநாத் கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே மானான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே சரஸ்வதி நதியோட உற்பத்தி ஸ்தானம் இருக்கு. அங்கேயும் போயி பாக்கலாம். ஆனா ஒண்ணு, அங்கே கொஞ்சம் உயரமா மலை ஏறணும். சரஸ்வதி நதியை வேறெங்குமே பாக்க முடியாது. அவ பூமிக்கு அடியிலேயே ரொம்ப ஆழமா பிரயாணம் பண்ணிண்டு இருக்கா” என்றேன். “வேண்டாம். என்னாலே இந்த உயரத்துக்கு மேலே வரமுடியும்னு தோணலே. அதுவும் நீங்க ரெண்டுபேரும் கையைப் பிடிச்சுக் கூட்டிண்டு வந்ததாலே முடிஞ்சிது. நான் சரஸ்வதியை இதோ இங்கேயே பாத்துக்கறேன். புரியலையா? இவளைத்தான் சொன்னேன். உன் பொண்டாட்டி சரஸ்வதியைத்தான் சொன்னேன்” என்றாள், சரஸ்வதியின் கையையும் என் கையையும் பிடித்தபடி. மன்னியின் கண்களில் இருந்து வழிந்து பெருகி, கங்கையும் யமுனையும் ஸரஸ்வதியும் சங்கமித்து, மூலஸ்தானத்திலிருந்து பொங்கி வழிவது போல் கடைக்கண்ணால் என்னையே பார்த்துக்கொண்டு, பிரவாகமா பரவசமாய் ஓடிக்கொண்டிருந்தாள், ஆகாயத்திலிருந்து புறப்பட்டு பூமியின் பாவங்களையெல்லாம் நீக்கும் கங்கை.
vallamai.com » வேருக்கு நீர்தமிழ்த்தேனீ
“பழசையெல்லாம் மறக்கறதுதான் நல்லது. நாம என்ன தலையிலேயா தூக்கிண்டு போய்ட்டு வரப் போறோம். கொஞ்சம் பத்திரமா பாத்துக் கூட்டிண்டு போயிட்டு திரும்பக் கொண்டுவந்து விடணும், பாத்துபோம்… பகவான் இருக்கார்” என்றாள்.
மனதுக்குள் எங்க அம்மாவைக் கங்கைக்குக் கூட்டிண்டு வர முடியலை. அதுக்காகத்தான் பகவான் எனக்கு இப்பிடி ஒரு கொடுப்பினையைக் கொடுத்தானோ என்னும் எண்ணம். அம்மாவைக் குளிப்பாட்டுவது போலவே இதமாகக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலே ஆணென்ன, பெண்ணென்ன. எல்லோருமே அர்த்தநாரிகள்தான் அப்பிடீன்னு மனசிலே தோன்றிக்கொண்டிருந்தது.
என்னவோ தெரியலை திடீர்ன்னு என் கையைப் பிடிச்சிண்டு, “டேய் நீயும் சரஸ்வதியும் நன்னா இருப்பேள். உங்களுக்கு ஒரு குறையும் வராது” என்றாள் மன்னி.
Sunday, March 6, 2011
இயற்கையின் ரகசியம்
துபாயிலிருந்து அலைன் சென்றோம் ,அங்கே மலைமேல் பாதைகள் சீராகப் போடப்பட்டு உள்ளன, அங்கே மாலை சூரிய அஸ்தமனம் கண்டோம்.குளிர் நம்மை நடுக்கிவிட்டது. அப்போதும் அந்தக் குளிரைப் பொறுத்துக்கொண்டு இயற்கையின் ரகசியத்தை படம் பிடித்தேன். கண் கொள்ளாக் காட்சி. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பார்கள்.
நம் இந்தியாவில் ஆந்திரப் ப்ரதேசத்தில் உள்ள திருப்பதி நினைவுக்கு வந்தது. மலை இருக்குமிடமெல்லாம் வேங்கடவன் இருக்கிறான் போலும், மனதை மயக்கும் இயற்கை காட்சிகளும் சூரியனின் முழு தரிசனமும் மனதை மயக்கிய மாலைப் பொழுது
அந்தக் காட்சியை நீங்களும் கண்டு மகிழ
http://www.youtube.com/watch?v=uklsz690MVY&feature=mfu_in_order&list=UL
அன்புடன்
தமிழ்த்தேனீ
Wednesday, March 2, 2011
" யாருக்கும் தெரியாது”
”யாருக்கும் தெரியாது” சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்
http://www.vallamai.com/?p=2124
அன்புடன்
தமிழ்த்தேனீ
Tuesday, February 22, 2011
"சாக்கடை” சிறுகதை
"சாக்கடை" சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்
http://www.vallamai.com/?p=2030
அன்புடன்
தமிழ்த்தேனீ
Wednesday, February 9, 2011
Thursday, February 3, 2011
”தடுப்பான்’
சமீபத்தில் ஒரு நிகழ்வு,
என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியர் புதிதாக திருமணம் ஆனவர்கள், அவ்வப்போது எங்களுடன் வந்து மிக நல்லவிதமாக பழகுவார்கள் ,
ஏற்கெனவே காதில் ஒரு தோடு அணிந்திருக்கிறாள், ஆனாலும் மிகவும் ஆசைப்பட்டு மீண்டும் ஒரு முறை காதில் தோடணிந்திருக்கும் இடத்துக்கு சற்று மேலாக இன்னொரு முறை துளையிட்டு அதிலொரு திருகாணி போட்டுக்கொள்ளவேண்டும் என்னும் ஆசையால் நவீன முறைப்படி ( கன் ஷாட் ) மூலமாக துளையிட்டுக்கொண்டு அதில் போட்டுக்கொள்ள ஒரு காதணியைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் காதணி அவருடைய அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.
இது இப்படி இருக்க ஒரு மாதம் கழித்து ஒருநாள் அந்தப் பெண் என் வீட்டிற்கு வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம் ஏன் வாட்டமுற்று இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண் என்னவோ தெரியலை ரெண்டு மூணு நாளா கழுத்து வலி, அதுமட்டுமல்ல ஒரு பக்கம் முழுவதுமே வலி இருக்கிறது என்றாள், நான் உடனே மருத்துவரிடம் காண்பித்தீர்களா என்றேன்.
ஆமாம் காண்பித்தேன் அவர் இந்தப் பனி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் கழுத்திலே நெறி கட்டி இருக்கிறது. அதனால் இந்த மாத்திரைகளை உண்டுவாருங்கள் சரியாகி விடும் என்று ஏதோ மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார், இந்தப் பெண்மணியும் அந்த மாத்திரைகளை உண்டும் இன்னமும் சரியாகாத நிலையில் இருக்கிறாள் என்பது புரிந்தது.
இந்த நிலையில் என் மனைவியும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டே சமையலறைக்கு சென்றனர்.நானும் என்னுடைய வழக்கமான வேலையாக கணிணியில் வந்து உட்கார்ந்தேன்.
திடீரென்று என் மனைவி என்னங்க இங்க வாங்க என்றாள் நானும் போனேன். அப்போது அந்தப் பெண்ணை அழைத்து அவளுடைய காதை என்னிடம் காட்டச்சொன்னாள் என் மனைவி.அந்தப் பெண்ணும் அவளுடைய வலது காதை என்னிடம் காண்பித்தாள். நானும் நன்றாக இருக்கிறது திருகாணி புதிதா என்று பாராட்டிவிட்டு நகர்ந்தேன். அது இல்லைங்க காதுக்கு பின்னால் பாருங்கள் என்றாள். பார்த்தேன் நிலைமையின் விபரீதம் புரிந்தது.
ஆமாம் அந்தப் பெண் நாகரீகம் கருதி மிக மெல்லியதான காதுத் திருகாணியை அணிந்திருந்தாள். அந்தத் திருகாணியின் பின் புறம் இருக்கும் மடல் போன்ற பகுதியும் மிகவும் சிறியது, அதனால் அந்த மடல் போன்ற பகுதியும் அவள் காதின் திருகாணி போட துளைத்த ஓட்டை வழியாக காதில் முறம் போன்ற பகுதியின் உள்ளே சென்று விட்டது. அது தெரியாமல் இந்தப் பெண்ணும் காதின் பின்பக்க திருகாணி தொலைந்து விட்டதாகவும் ,முன்பக்க மிளகு வடிவம் கொண்ட கொண்டை கழற்ற வரவில்லையென்றும் உதவி நாடி என் மனைவியிடம் வந்திருக்கிறாள் என்பதும் புரிந்தது.
ஆனால் அந்தப் பெண் நினைத்தாற் போல திருகாணி தொலையவில்லை, அவள் காது மடலின் மறுபக்க தோலுக்கும் முன் பக்கத் தோலுக்கும் இடையில் காதின் உட்புறமாக சென்று மாட்டிக்கொண்டிருக்கிறது .
அதனால்தான் அவளுக்கு கழுத்தும் காதும் வலியெடுத்து கழுத்தில் நெறி கட்டி எல்லா அவஸ்தையும் பட்டிருக்கிறாள் என்பது புரிந்து போயிற்று.
ஒன்று காதிலே அறுவை சிகிச்சை செய்துதான் அந்த திருகாணியை எடுக்கவேண்டும் இல்லையென்றால் அந்தப் பெண்மணி பொறுத்துக் கொள்ளும் தன்மை உடையவளாக இருந்தால் திருகாணி உள்ளே சென்ற விதமாகவே அந்த ஓட்டையிலேயே பின்பக்கமாக அந்த திருகாணியை வெளியே தள்ளி அதன் பிறகு அந்த முன்பக்க மிளகு வடிவத்தை பிடித்துக்கொண்டு பின்பக்க திருகாணியைக் கழற்றவேண்டும்.
நான் அந்தப் பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் ஒன்றுமில்லையம்மா எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவள் கணவனுக்கு
தொலைபேசி மூலமாக தகவல் சொன்னேன்.அவரும் வந்துவிட்டார்.
அவரிடம் நான் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி விளக்கிவிட்டு
நானே எடுத்துவிடுகிறேன் ஆனால் நீங்கள் உங்கள் மனைவிக்கு விஷயத்தை விளக்கிவிடுங்கள். பிறகு தைரியம் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவரும் ஒப்புக்கொண்டார்.
பிறகு அந்தப் பெண்மணியிடம் நிலமையைக் கூறி என்னை நம்பி அவள் காதை என்னிடம் காட்டுமாறு கூறினான் அவள் கணவன்.
நானும் இறைவனை வேண்டிக்கொண்டு முன் பக்க மிளகு போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பின்பக்க ஓட்டையின் மையப்பகுதிக்கு பின்பக்க திருகாணி வருமாறு செய்து வலித்தாலும் பரவாயில்லை என்று கூடியவரை நாசூக்காக அழுத்தி ஓட்டை வழியே திருகாணியை வெளிவரச்செய்து பின்னர் முன் பக்க மிளகு போன்ற பாகத்தை பிடித்துக்கொண்டு திருகாணியை இடப்புறமாக கழற்றி எடுத்து, முன்பக்க மிளகையும் எடுத்தேன் காதிலிருந்து. அந்தப் பெண்மணி நான் திருகாணியை எடுக்கும் போது கண்ணில் நீர்வரப் பொறுமையுடன் காண்பித்ததால் எடுக்க முடிந்தது, இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான்.
அன்று சில மணித்துளிகளிலேயே அவளுடைய காது வலியும் ,கழுத்து வலியும் மாயமாய் மறைந்தன,அவள் முகத்தில் புன் சிரிப்பையும் ஒரு நாணத்தையும் அவளுடைய கணவன் முகத்தில் ஒரு நிம்மதியையும் கண்டு நானும் என் மனைவியும் மகிழ்ந்தோம்.
காதில் ஓட்டைக்குத் தகுந்தவாறு பின்பக்கம் ஒரு வட்டமான தடுப்பு ஒன்று முன்பெல்லாம் ;போட்டுக்கொள்வார்கள் ,இப்போதெல்லாம் நாகரீகம் கருதி அதையெல்லாம் தவிர்த்துவிட்டார்கள், அது மட்டுமல்ல சிறிய அணிகலன்களை அணிகிறார்கள்,அதனால் இப்படியெல்லாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.
நல்ல வேளை என் மனைவி கவனித்தாள், இந்த திருகாணி அவள் காதிலேயே இருந்திருந்தால் காதில் புண் ஏற்பட்டு புறையோடி இருக்கும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அதன் பின் விளைவாக அவதிகள் பட நேரும், முக அழகு குன்றும். இதெல்லாம் தேவையா?
முன்பெல்லாம் புளியங்கொட்டையை தரையில் தட்டை வடிவில் நன்றாகத் தேய்த்து சமனமாக்கி அதன்நடுவே துளையிட்டு காதணியை அணியும் போது இவ்வாறு ஏற்படாத வண்ணம் தடுப்பாக அதை (Washer) உபயோகிப்பார்கள். நானே பல முறை என் தாயாருக்கு, என் சகோதரிகளுக்கு தேய்த்து தடுப்பான் செய்து கொடுத்திருக்கிறேன்
ஆகவே எப்போதுமே
” இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”
என்னும் வள்ளுவன் வாக்குக்கொப்ப
”தடுப்பான் இல்லாத திருகாணி அவதி
கொடுப்பானாகி மிகுதி கெடும் ”
என்னும் தமிழ்த்தேனியின் வாக்குக்கொப்ப நடந்துகொண்டால் நன்மையே விளையும் என்று உணர்க
அன்புடன்
தமிழ்த்தேனீ
Wednesday, February 2, 2011
”கனவு மெய்ப்படவேண்டும் “ சிறு கதை வல்லமை இதழில்
http://www.vallamai.com/?p=1874
அரங்கமே மின்விளக்குகளாலும் அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளாலும் பொதுமக்களாலும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அதி நவீன கணினியின் உதவியால் அரங்கத்தின் திரையில் எல்லா நாடுகளும் கண்டு களிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளித் திரை மின்னிக்கொண்டிருந்தது. ஒரு அதி நவீன நான்கு சக்கர விசை வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோர் முகத்திலும் ஆச்சரியக் குறி நிரந்தரமாக அவதானித்திருந்தது.
ஒரு பக்கம் நவீன விஞ்ஞானத்தில் முன்னேறி இருந்தாலும் அதிகமாக எரிபொருளை இயற்கையாகவே வைத்திருக்கும் நாடுகளிடம் எரிபொருளுக்குக் கையேந்தும் நிலை. மற்றொரு பக்கம் எரிபொருளின் விலையைக் குறைக்க வழி தெரியாமல், மாற்று எரிபொருளை இயற்கையான சூரிய வெளிச்சத்திலே இருந்து கண்டுபிடித்தாலும் நீரிலே உள்ள சக்தியை எரிபொருளாக உபயோகிக்கும் வழிமுறைகள் தெரிந்தும் அந்தத் தொழில்நுட்பங்களை வளர்க்காமல் தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ளும் சுயநல அரசியல்வாதிகள் ஒரு புறம்.
இப்படி இருக்கும் இந்த நிலையில் மக்களுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம். மாற்று ஏரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதா! அதுவும் குறைவான செலவில் அதிக சக்தி அளிக்கும் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதா! பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற அத்துணை எரிபொருட்களுக்கும் விமானத்துக்கும் அணு ஆயுதத்துக்கும் விண்கலத்துக்கும் அதையும் தாண்டி உலகத்தில் தேவையாய் இருக்கும் அத்துணை சக்திகளுக்கும் மாற்றாகப் பயன்படுத்தும் வகையில், உலகமே மின்சாரத் துணை இல்லாமல் இரவிலும் பகலிலும் ஒளியோடு மின்சாதனப் பொருட்கள் அத்தனையும் இயங்கும் வசதியோடு மொத்தமாக ஒரு மாற்றுக் கண்டுபிடிப்பு நிகழ்த்தியிருக்கும் விஞ்ஞானி ‘ஆதிமூலத்தை’ மேடையிலே காணப் போகும் பரபரப்பு, பிரபஞ்சத்தின் ஆச்சரிய விழிகளை இமை மூடாமல் வைத்துக்கொண்டிருந்தது.
உலகத்தில் இருக்கும் அத்தனை தொலைக்காட்சிகளும், ஒருங்குவிக்கப்பட்டு உலக மக்கள் அத்தனை பேருமே, திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டுச் செய்திகள்… அத்தனையும் மறந்து விட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் ஆச்சரியத்துடன் காத்திருந்தனர்.
திரையிலே விஞ்ஞானி ஆதிமூலம், ஒரு மந்திரவாதி போல் தன்னுடைய தளர்ந்த நடையுடன் நிதானமாக நடந்து வந்து, நடு மேடையில் நின்று, அத்தனை பேரையும் குனிந்து வணங்கினார். அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது…!!!! அடங்கியது!!
விஞ்ஞானி ஆதிமூலம் பேச ஆரம்பித்தார்.
“இன்னும் சில நிமிடங்களில் நம்முடைய கண்டுபிடிப்பான அத்துணை சக்திகளுக்கும் ஒரே தீர்வான மாற்றுப் பொருள், இங்கு அனைவருக்கும் காட்டப்படும். அதற்கு முன்னால் ஒரு சிறு விஷயத்தை எல்லோரும் பகிர்ந்துகொள்ளுவோம். எனக்கும் என் மகனுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் என் மகன் சொன்னான், ‘மனிதன் நினைத்தால் எல்லாவற்றையும் படைக்க முடியும். ஆகவே கடவுள் என்பது பிரமை. வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் என்பது மாயை’ என்றான். அவன் சொன்ன அந்தச் சொல்தான் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த, என்னைத் தூண்டியது.
நான் சொன்னேன், ‘ஏற்கெனெவே இருக்கும், அல்லது படைக்கப்பட்டிருக்கும் மூலப் பொருள் இல்லாமல் எதையுமே மனிதரால் உருவாக்க முடியாதென்று. மனிதன் கண்டுபிடிக்கிறான். உருவாக்குவதில்லை. எப்போதும் மனிதனால் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாததைப் புதியதாக உருவாக்க முடியாது. இருப்பதைத்தான், கண்டுபிடிக்கத்தான் முடியும். ஆகவே எப்போதும் இறையை, மூலத்தை, இல்லையென்று சொல்ல முடியாது’ என்றேன்.
ஆனால் அவன் வார்த்தைகள் என்னை மனிதனின் உச்சக்கட்ட சக்தியை எட்ட வேண்டும் என்று வெறிகொள்ள வைத்தது. அதன் முடிவுதான் இப்போது நாம் கண்டுபிடித்திருக்கும் மாற்றுப் பொருள்.”
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அரங்கமே இருளில் மூழ்கியது ஒரே ஒரு விநாடிதான். மறுபடியும் மீண்டும் ஒளிவெள்ளம் சூழ்ந்தது.
“இப்போது நாம் கண்டு பிடித்திருக்கும் மாற்று மூலப் பொருளால்தான் இந்த அரங்கமும் செயல்படுகிறது” என்றார் ஆதிமூலம். விஞ்ஞானி ஆதிமூலத்தின் கையில் ஒரு சிறு குப்பி இருந்தது. அந்தக் குப்பியிலிருக்கும் சிறு மாத்திரை வடிவில் இருந்த ஒரு மாற்றுப் பொருளைக் கையிலெடுத்து ஒரு முறை காட்டிவிட்டு அந்த மாத்திரையை மேடையில் இருந்த ஒரு நான்கு சக்கர விசை வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் சேமிப்பு அறையின் வாயில் இட்டார் ஆதிமூலம். இப்போது இந்த வாகனத்துக்கு நான் அளித்த, நம்முடைய கண்டு பிடிப்பான மாற்றுப் பொருளின் உதவியால் வாகனம் இயங்கத் தொடங்கும் என்றார். இயங்கத் தொடங்கியது…. புகையோ, நாற்றமோ, வெப்பமோ இல்லாமல்.
அவர் சொன்னார், “இனி இவ்வாகனத்துக்கு பல வருடங்களுக்கு எரிபொருள் தேவை இல்லை” என்று. உலகமே அதிர்ந்தது…. கைகூப்பியது. மகிழ்ந்தது. “இனி எப்போதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்னும் பேச்சுக்கே உலக அளவில் இடமில்லை” என்றார் விஞ்ஞானி ஆதிமூலம்.
ஒரு விமானம் பரிசோதனை முயற்சியில் பறக்க ஆரம்பித்தது….. ஒரு விண் கலம் மாற்றுப் பொருளின் உதவியால் நெருப்போ, வெப்பமோ இல்லாமல் அதி விரைவாக வானில் உயர்ந்தது இலக்கை நோக்கி பறந்தது. உயிரோட்டமான காட்சி அரங்கத்தில் இருந்த திரையில் நேரிடைக் காட்சியாக காட்டப்பட்டது. உலகம் ஆச்சரியத்தினால் மௌனமானது. அந்த மௌனத்தைக் கிழித்துக்கொண்டு மீண்டும் ஆதிமூலம் பேச ஆரம்பித்தார்.
“கண்டு கொண்டேன் மூலப் பொருளை. நாம் கண்டுபிடிக்கும் அனைத்து விஞ்ஞான சாதனங்களுக்கும் சக்திகளுக்கும் தேவையான மாற்று மூலப் பொருளைக் கண்டுகொண்டேன். இப்போதும் சொல்கிறேன் இந்த மாற்று மூலப் பொருளை ஏற்கெனெவே இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மூலப் பொருட்களை வைத்துத்தான் உருவாக்கினேன் ஆகவே மூலப் பொருளில்லாமல் எதையும் உருவாக்க முடியாது என்பது நிரூபணமாகிவிட்டது. ஆகவே அனைத்துக்கும் மூலப் பொருளாகிய ‘ஆதிமூலத்துக்கு’ நன்றி..
நான் ‘ஆதிமூலம்’ என்று சொன்னது என்னையல்ல, இறைவனை….. ஆகவே ‘இறைவனுக்கு’ வணக்கம்” என்றார்…. உலகமே அதிர்ந்தது……… தலை வணங்கியது!
விஞ்ஞானி ஆதிமூலமும் தலைவணங்கினார். எங்கிருந்தோ ஒரு துப்பாக்கியின் தோட்டா, அவருடைய இதயத்தின் மையப் புள்ளியைத் தாக்கியது.
அன்புடன்
தமிழ்த்தேனீ
Sunday, January 30, 2011
"இலவச மருத்துவம்”
இலவச மருத்துவம் “சிறுகதை படிக்க
http://www.vallamai.com/?p=1854 சொடுக்குங்கள் .
அன்புடன்
தமிழ்த்தேனீ.
http://www.vallamai.com/?p=1854 சொடுக்குங்கள் .
அன்புடன்
தமிழ்த்தேனீ.
Tuesday, January 11, 2011
“கூடாரை வெல்லும் நாள்”
பூமியில் இருந்த எல்லா இடங்களையும் விட்டுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலே அதுவும் பெரியாழ்வாரின் நந்தவனத்திலே வந்து பூவைப் போல் துளசி மாடம் பக்கத்தில் படுத்துக்கொண்டு கையைக் காலை உதைத்துக்கொண்டு என்னை எடுத்துக்கோ என்னை எடுத்துக்கோ அப்பிடீன்னு பெரியாழ்வார் மனசிலே இரக்கம் வரும்படிப் பண்ணி, அவரும் தேஜோ மயமாக இருந்த குழந்தை ஆண்டாளை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்து ஏதோ தான் பெற்ற பெண் குழந்தையைப் போலே அள்ளி அணைத்துக் கொஞ்சி அவளை வளர்த்து ஆளாக்கினார் பெரியாழ்வார். அப்படியெல்லாம் பெரியாழ்வாரை ஆட்டிவைத்து பெற்ற மகளினும் பெரிதாய்ப் பாசம் வைத்து வளர்த்த பெரியாழ்வாரை விட்டு அந்த மாயக் கண்ணனை அடைய பெரியாழ்வாரை ஒரு கருவியாய் உபயோகித்த நேர்த்தி என்ன? அப்படியானால் ஆண்டாளின் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்தானே ,ஆமாம் ஆண்டாள் பெரியாழ்வாரின் பரம்பரையாக வந்தவள் அல்லவோ! ,அடடா அப்படிப்பட்ட கருவியாய் இருக்க பெரியாழ்வாரைத் தெரிந்தெடுத்த ஆண்டாள் மஹாலக்ஷ்மி, ஆமாம் நாராயணன் அரங்கன் எங்கும் நிறை பரப்ரும்மம் என்றால் அவன் மார்பில் சதா வசிக்கும் லக்ஷ்மியான ஆண்டாளும் எங்கும் நிறை பரப்ரும்மம்தானே ,அப்படிப்பட்ட ஆண்டாள்.
”என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை ப்ரப்ரும்மம்
அப்பா என்றே அழைக்க
என்ன தவம் செய்தனை ”
என்று பெரியாழ்வாரைப் பார்த்து நாமெல்லாம் பாடும்படி செய்த ஆண்டாள்
பகவான் நாராயணனை அரங்கனிடம் தன்னையே அவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராய் இருந்த பெரியாழ்வார் , தான் வளர்த்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்வித்து மாமனாராகவும் ஆன பெரியாழ்வார் என்ன தவம் செய்தாரோ! என்று நாமெல்லாம் வியக்கும் வண்ணம் பெரியாழ்வாரின் புகழ் மணக்க தான் மாலை சூடினாளோ ஆண்டாள்?
அரங்கனுக்கு நியமித்த மாலையை அவள் சூடிக்கொண்டு அரங்கனிடம் சேர்ந்து பெரியாழ்வாரின் பாமாலையை நாம் பாட அருள் செய்தாளோ ஆண்டாள்? இன்றளவும் நம் பெண்ணை ஆண்டாளாகவும் வரும் மாப்பிள்ளையை அரங்கனாகவும் வரித்து மனம் உருகி அன்று ஒரு நாளேனும் நாமும் பெரியாழ்வார் பெற்ற இன்பத்தை நாமும் அடைய வழி வகுத்த மஹாலக்ஷ்மி ஆண்டாள். முப்பது பாசுரங்கள் பாடினாலும்
27 ஆவது பாசுரமான
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
என்னும் இப் பாசுரம் அல்லவோ மிகவும் விசேஷமான பாசுரம்
இந்தப் பாசுரத்தைக் கேட்டாலே இந்தப் பாவிலுள்ள ”
“உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு
யாம்பெறும் சம்மானம் “
என்று ஆண்டாளுடன் நாமும் சேர்ந்து பாடி அனுபவித்து, அந்த ஆனந்த அனுபவத்தில் உள்ளம் மகிழ்ந்து , உணர்வுகள் விகசித்து , நாமும் ஆண்டாளை நம் குழந்தையாய் பாவித்து சூடகமும், தோள் வளையும், தோடும், செவிப்பூவும் என்கின்ற பல்விதமான ஆப்ரணங்களையெல்லாம் அவளுக்கு அணிவித்து பார்த்துப் பார்த்து மகிழ்ந்து , ஆடை உடுத்தி, அழகு பார்த்து நிலவுக்கு பதிலாக அரங்கனைக் காட்டிக் காட்டி, நம் கையால் பால் சோறு ஊட்டி மகிழ்ந்து, நம் சுற்றமும் கூடி இருந்து அரங்கனுக்கு மணமுடித்து கண்குளிரப் பார்த்து மகிழவேண்டாமோ! அப்படிப்பட்ட பாக்கியம் நமக்கும் கிடைக்க வேண்டாமோ? சரி அப்படி மணமுடித்து வைத்தபின் இந்த வைபவத்தைக் கொண்டாடி மகிழ் வேண்டாமோ
மனம் இனிப்பது போல் நாவும் இனிக்க வேண்டாமோ அதற்குத்தான்
“மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர நாமும் அரங்கனுக்கும் ஆண்டாளுக்கும் மனம் இனிக்க அக்கரை வடிசிலும் அக்கறையாய் செய்து அளித்தே நாமும் உண்ண
கீழே அக்காரவடிசில் செய்யும் முறையும் நாமளித்தோம்
அக்காரவடிசில்:
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 ஆழாக்கு
கடலைப் பருப்பு- 1/2 ஆழாக்கு
பயத்தம் பருப்பு- 1/2 ஆழாக்கு
நெய்- 1 கிலோ
கொதிக்கவைத்த பால்- 4 லிட்டர்
வெல்லம்- 1 கிலோ
முந்திரிப்பருப்பு- தேவையான அளவு
கிஸ்மிஸ்- தேவையான அளவு
ஜாதிபத்திரி- 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர்- அரிசியை வேகவைக்க
செய்முறை:
முதலில் அரிசியை 200 கிராம் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அத்துடம் கொதிக்கும் நீர் மற்றும் பாலை சேர்க்கவும். அதே நேரத்தில் இன்னொரு வாணலியில் 1 ஆழாக்கு நெய்விட்டு இரண்டு பருப்புகளையும் வறுத்து அரிசிக் கலவையுடன் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வேகும்வரை அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி வேகவைத்த கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.மிச்சமிருக்கும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாக வறுக்கவும். ஜாதிபத்திரியையும் சேர்த்து வறுத்து சாதக் கலவையின் மேலே கொட்டிக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும்.அக்கார வடிசிலும் தயார்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
Monday, January 10, 2011
”சாமி குத்தம் “ சிறு கதை
Subscribe to:
Posts (Atom)