திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, December 15, 2010

இனிய குரல்

 ஒரு குறிப்பிட்ட ப்ரபலமான வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது எனக்கு, வங்கியிலிருந்து ஒரு இனிய குரல் அந்த உரையாடலைக் கீழே அளித்திருக்கிறேன்

டிர்ரீங் டிர்ரிங்



நான் : ஹலோ

இனிய குரல்: சார் காலை வணக்கம்

நான் : காலை வணக்கம்

இனிய குரல்: சார் எங்க வங்கி சார்பா உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?

நான் : தாராளாமா கேக்கலாம்

இனிய குரல்: எங்க வங்கியின் சார்பாக உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன்

நான் ( மனதுக்குள் ஏமாளி என்றா)   அப்படியா சொல்லுங்க

இனிய குரல்: நீங்க க்ரெடிட் கார்ட் வெச்சிருக்கீங்களா

நான்: வெச்சிருக்கேன்

இனிய குரல்: எங்க வங்கியோட க்ரெடிட் கார்ட் வெச்சிருக்கீங்களா

நான் : இல்லையே

இனிய குரல்: கவலைப்படாதீங்க சார் அதுக்குதான் உங்களைத் தொடர்பு கொண்டேன், உங்களுக்கு எங்க வங்கியின் க்ரெடிட் கார்ட் வழங்கப் போறோம்

நான் : மிகவும் சந்தோஷம்
இனிய குரல்: எங்க அலுவலர் ஒருவர் உங்க வீட்டுக்கு வருவார், அவரிடம் உங்களோட அடையாள அட்டை, அல்லது பான் கார்ட், அல்லது ஓட்டுனர் உரிமம் போன்றவைகளைக் காட்டுங்கள்

நான் : சரி காட்டுகிறேன்

இனிய குரல் : அவர் ஒரு விண்ணப்ப படிவம் அளிப்பார், உங்களிடம் கேட்டு விவரங்கள் அவரே எழுதிக்கொள்வார்,  அதில் உங்கள் கையெழுத்தை இடுங்கள், பிறகு எழே நாட்களில் உங்கள் க்ரெடிட் கார்ட் உங்கள் வீடு தேடி வரும்

நான் : மிகவும் நன்றி , சரி இனிய குரலே இவ்வளவு நேரம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னேன் சில நிமிடங்கள் உங்களால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?

இனிய குரல்: நிச்சயமாக உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைப்பது எங்கள் பொறுப்பு

நான்: அப்படியானால் நன்றி , நீங்களும் என் மகள் போலவே கடமை உணர்வோடு பேசுகிறீர்கள், எனக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது.

இனிய குரல்: நன்றி சார் பலபேரு எங்க கிட்ட எரிஞ்சு விழறாங்க நாங்க எங்க கடமையைத்தானே செய்யிறோம்

நான்: ஆமாம் பலருக்கு பொறுமை இருப்பதில்லை ,ஆமாம் நீங்கள் க்ரெடிட் கார்ட் வைத்திருக்கிறீர்களா?

இனியகுரல்: எங்கள் வங்கி வைத்திருக்கிறது

நான் : உங்களிடம் இல்லையா?

இனிய குரல்: இல்லை ஐய்யா உங்களுக்கு எங்கள் வங்கியிலிருந்து அளிப்பார்கள்

நான்: அப்படியானால் உங்களுக்கு அளிக்கவில்லையா?

இனிய குரல்: எங்களுக்கும் அளிப்பார்கள் , ஆனால் நான் வாங்கவில்லை

நான்: ஏன் அப்படி இனிய குரலே

இனிய குரல்: சார் அது ரொம்பத் தொந்தரவு, க்ரெடிட் கார்ட்தான் இருக்கேன்னு நல்லி, குமரன், ஜீ ஆர் டீ தங்க மாளிகைன்னு அடிக்கடி போயி செலவு பண்ணுவோம், ஆனா பணத்தை திருப்பிக் கட்டும்போது குறிப்பிட்ட நாளுக்குள்ளே கட்டலேன்னா வட்டி போடுவாங்க, அனாவசியமா மாட்டிக்குவோம், எதுக்கு இந்த வம்புன்னுதான் வாங்கலை

நான்: புத்திசாலிப் பொண்ணும்மா நீ, நீ கட்டாட்டி உங்க அப்பா கட்றாரு, ஒரு க்ரெடிட் கார்ட் வாங்கி வெச்சிக்க வேண்டியதுதானே

இனிய குரல்: சார் எங்க அப்பா கட்ட மாட்டாரு, திட்டுவாரு

நான் : அடடா அதெல்லாம் கவலைப்படாதேம்மா திட்டினாலும் அவுரு உங்க அப்பாதானே, தைரியமா வாங்கிக்கோம்மா ஒரு க்ரெடிட் கார்ட், நானே உங்க வங்கிக்கு வந்து விண்ணப்ப படிவமெல்லாம் நிரப்பி உனக்கு உதவி செய்யறேன்

இனிய குரல்: வேண்டாம் சார் எனக்கு க்ரெடிட் கார்டே வேண்டாம், வேற வழியில்லாமே இந்த வங்கி எனக்கு தரசம்பளத்துக்காக மனசாட்சியை அடகு வெச்சிட்டு உங்களைமாதிரி நல்லவங்களுக்கு எங்க வங்கியோட க்ரெடிட் கார்டை எப்பிடியாவது விக்கணும்னு நாங்க ட்ரை பண்றோம், ரொம்ப ஆபத்து சார் சார்,க்ரெடிட் கார்டே வெச்சிக்கக் கூடாது சார்.

நான்: சரிம்மா உனக்கு எப்பவாவது க்ரெடிட் கார்ட் வாங்கணும்னு இருந்தா எனக்கு போன் பண்ணும்மா நானே வந்து வாங்கித் தரேன்

இனிய குரல்: ரொம்ப நன்றி சார் வணக்கம்

நான் : வணக்கம்



(தொல்லைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது)

அன்புடன்

தமிழ்த்தேனீ

Friday, November 26, 2010

” அப்பிடி ஒண்ணும் இல்லே”

 ” அப்பிடி ஒண்ணும் இல்லே”




கடவுளை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு



நானும் கடவுளிடம் சில சந்தேகங்கள் கேட்டேன்

அவரும் பதில் சொன்னார் கடைசியில் தெளிந்தேனா? குழம்பினேனா?



நான் : கடவுளே உலகில் எத்துணை இன்பம் வைத்திருக்கிறாய், ஆனால் உனக்கு ஏன் இந்தப் பாரபக்‌ஷம்? சிலருக்கு மட்டும் கிடைக்கச் செய்கிறாய், பலருக்கு கிடைப்பதே இல்லை ஏன் இப்படி



கடவுள்: உன் கேள்வியே தவறு, எல்லாவித இன்பத்தையும் நான் படைத்து உங்கள் அனைவரையுமேதான் அனுபவிக்கச்சொன்னேன் .ஆனால் நீங்கள் பணம் என்று ஒன்றை உண்டாக்கிவிட்டீர்கள். அந்தப் பணத்திற்கு அளிக்கும் மதிப்பை உங்களையெல்லாம் உண்டாக்கிய எனக்கு கூட அளிப்பதில்லை.

நீங்கள் உருவாக்கிய பணத்தை யார் அதிகமாக சம்பாதிக்கிறீர்களோ அவர்கள் மட்டும் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள், மற்றவர்கள் அனுபவிக்க முடியாதபடி நீங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து விட்டீர்கள்.அந்த விலை கொடுத்தால் யார்வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் அதில் தடையில்லை என்னும் நிலையை உருவாக்கி விட்டீர்கள்,நானென்ன செய்வது



நான் : அது சரி ஏன் இப்படி மூச்சுவிடாமல் பேசுகிறீர்! சற்றே அமைதியாக பேசுங்களேன்



கடவுள்: ஆமாம் எனக்கே மூச்சு முட்டுகிறது இந்தப் பணத்தை நினைத்தால். கோவம் வருகிறது, நீங்கள் கண்டு பிடித்த பனத்தை ஈட்ட என்னையே கேவலப்படுத்திவிட்டீர்கள்.

என் மனைவிக்கு லக்‌ஷ்மி என்று பெயரிட்டீர்கள் சரி , ஆனால் அவள்தான் செல்வத்துக்கு அதிபதி என்றீர்கள் அதுவும் சரி, அதென்னப்பா நீங்கள் வீட்டில் மாட்டும் நாட்காட்டிகளிலும், உங்கள் பூஜை அறையில் இருக்கும் லக்‌ஷ்மியின் திரு உருவப் படத்திலும் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி ஏதோ தங்கக் காசுகளைக் கொட்டுவது போல அச்சடிக்கிறீர்கள்? பணமழை பொழிவது போல அச்சடிக்கிறீர்கள்? நீங்கள் கண்டு பிடித்த பணத்தை எப்படி எங்களிடம் எதிர் பார்க்கிறீர்கள் என்றே புரியவில்லை,



அது மட்டுமா நீங்கள் கண்டு பிடித்த பணத்தை ஈட்ட திருட்டு, கள்ளக்கடத்தல், கொள்ளையடித்தல், விபசாரம், சாராயம், குழந்தைகள் கடத்தல், தாலிக்கொடி பறித்தல், சந்தன மரம் கடத்தல், நாட்டு ரகசியங்களை அன்னிய நாட்டுக்கு விற்றல், கட்சி மாறுதல், எல்லாத் துறைகளிலும் லஞ்சம் வாங்குதல் பங்கு மார்க்கட்டு பேரங்கள் ,மொத்தமாக நாட்டின் செல்வத்தையே சுறண்டி உங்கள் வீட்டுக்குள் கொண்டு போய் வைக்க மெகா ஊழல்கள்

இத்தனையும் செய்கிறீர்கள்.



அதைக் கூட பொறுத்துக்கொள்கிறோம், ஆனால் எங்களுக்கு கோயில் கட்டி விக்ரக வடிவில் எங்களைப் ப்ரதிஷ்டை செய்து, தினமும் எங்கள் தலைமேல் தேன் ,பால், பஞ்சாமிருதம், போன்றவைகளை ஊற்றி ஊற்றி எங்களை திக்குமுக்காடச் செய்து நீங்கள் உங்கள் தலைக்கு மேல் கைகளை உயரத் தூக்கி நாங்கள் படும் கஷ்டங்களை பார்க்கச் சகிக்காமல் கண்களை வேறு மூடிக்கொண்டு ஏதோ எங்களையெல்லாம் உங்கள் மனக்கண்ணால் பார்ப்பது போன்ற ஒரு பாவனையில் பக்திமான் வேடம் போடுகின்றீர்கள்.



இத்தனையும் செய்து விட்டு எங்களைக் காவல் காக்க காவல்காரர்களை நியமிக்கிறீர்கள். அந்தக் காவல்காரர்கள் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு எங்கள் கதவருகே வாயிலெடுத்துக்கொண்டே படுத்துக்கொள்கிறார்கள், நாற்றம் குடலைப் புடுங்குகிறது, கதவை வேறு பூட்டி விடுகிறீர்கள் ஓடக்கூட முடியவில்லை, இவ்வளவு அவஸ்தையையும் நாங்கள் பட்டு உங்களைக் காக்கிறோம், ஆனால் நீங்கள் எங்கள் விக்ரகங்களையே நீங்கள் கண்டு பிடித்த பணத்துக்காக கடத்தி விற்கிறீர்கள்.

எங்கள் உண்டியலில் நீங்களே காசு போட்டுவிட்டு இரவில் அந்த உண்டியலை நீங்களே உடைக்கிறீர்கள், அதற்கு தடையாயிருக்கும் காவல்காரரை கொலை செய்கிறீர்கள்

கள்ளத்தனமாக சேர்த்த பணத்தையெல்லாம் எங்கே வைப்பது என்றே தெரியாமல் ஒவ்வொரு மடாதிபதிகளைத் தேடிச் சென்று அவர்களிடம் கொடுத்து பத்திரப்படுத்துகிறீர்கள், அதன் பிறகு உங்கள் ரகசியங்கள் அவருக்குத் தெரிந்து விட்டதே என்றுணர்ந்து அவர்கள் மேல் ஏதேனும் குற்றம் சார்த்தி அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புகிறீர்கள்.

இவ்வளவும் செய்து விட்டு நாங்கள் உங்களுக்கு அளித்த சுகபோகங்கள் பாரபக்‌ஷமானவை என்று என்னிடமே கேட்கிறீர்கள் . கோபம் வராமல் என்ன செய்யும் ?





நான்: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் .மீண்டும் இந்த உலகத்தை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்க முடியுமா?



கடவுள்: முடியும் ஒரு வழி இருக்கிறது நான் சொல்கிறேன்! சரி உலகில் உள்ள இன்பங்களில் இது வரை நீ அனுபவித்த இன்பங்களில் த்ருப்தி கண்டாயா? அப்படியானால் அவைகளை சொல். நான் உனக்கு அந்த இன்பங்களை தவிர்த்து வேறு இன்பங்களைத் தருகிறேன், இது வரை யார் அனுபவிக்கவில்லையோ அவர்களுக்கு அந்த இன்பங்களை பகிர்ந்து தருகிறேன்



நான் : “ நியாயமாகத்தான் தெரிகிறது” நான் யோசிக்க வேண்டும் சற்றே நேரம் கொடுங்கள்



கடவுள்: சரி காத்திருக்கிறேன்



நான் : நான் யோசித்தேன்



கடவுள்: கண்டு பிடித்தாயா ஒரு பட்டியல் கொடு அவற்றை நீக்குகிறேன்.



நான் : ” அப்படி ஒண்ணும் இல்லே “ நான் யோசித்ததில் நான் நிறைவாக அனுபவித்த இன்பம் ,அதுவும் இனி நான் அனுபவிக்காமல் விட்டுத்தரும்படியாக

“ அப்படி ஒண்ணும் இல்லே “!



கடவுள்: அடப்பாவி ! அப்படியானால் நீ மற்றவருக்கு விட்டுத் தர ஒன்றுமே இல்லையா உன்னிடம்?



நான் : ஆமாம் ” அப்பிடி ஒண்ணும் இல்லே” ! அது சரி என்கிட்ட கேக்கிறீங்களே உங்க்ளுக்கு வேண்டுதல், படையல், எல்லாம் வெச்சிருக்கோமே அதிலே இனிமே உங்களுக்கு இனி என்னென்ன வேண்டாம்ன்னு நீங்கள் ஒரு பட்டியல் போட்டுத் தருவீர்களா? நாங்களும் ஏற்கெனவே நீங்கள் அனுபவித்ததையெல்லாம் நீக்கிவிட்டு நிம்மதியாக இருக்கிறோம்



கடவுள் நானும் யோசிக்கிறேன்...... இல்லை யோசித்தேன் அப்படி ஒண்ணு இல்லே!



கடவுள் மறைந்து போனார். தேடிக்கொண்டிருக்கிறேன்.



அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, November 21, 2010

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

இயற்கையாக ஐப்பசி மாதத்தில், கார்த்திகை மாதத்தில் கார்மேகமாய் சூல் கொண்டு மேகங்கள் கருமேகமாய் இருக்குமாம், அடை மழை பெய்யும் என்பார்கள்அப்படிப்பட்ட காலங்களில் விஷப் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் என்னும் வழக்கங்களை விதைத்து விதைத்துப் போயிருக்கின்றனர்

”கார்த்திகைக்குப் பிறகு மழையும் கிடையாது
கர்ணனுக்கு பிறகு கொடையும் கிடையாது”
 என்பார்கள்

அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் தீபங்களை ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமான பலனைக் கொடுக்கும் என்பது ஐதீகம், நம் வாழ்விலும் ஒளி பெருகட்டும்

அன்புடன்

தமிழ்த்தேனீ

" பம்பரம் “ கதை

 “பம்பரம்” சற்றே பெருங் கதை


வல்லமை இதழில் படிக்க



http://www.vallamai.com/?p=1344



அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, November 8, 2010

" மயக்கம் “ சிறுகதை



 ” மயக்கம் “ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்

http://www.vallamai.com/?p=1267



அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, November 3, 2010

வினாயகர் அகவல்

 தீபாவளி நன்நாளில் ஆனைமுகன் வினாயகனை நினைந்து வேண்டிக்கொண்டால் சர்வ மங்களமும் உண்டாகும்

ஔவையார்  இயற்றிய ”வினாயகர் அகவல் http://www.radiuswebhost.com/play/podsating/29973007298530062991296529923021%2029492965299729943021“      

என் குரலில் கேட்டு மகிழ  சொடுக்குங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Saturday, October 30, 2010

” பேரின்பம் “ சிறுகதை

“பேரின்பம் “சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்




http://www.vallamai.com/?p=1208



அன்புடன்

தமிழ்த்தேனீ

” தவம் “

”குழந்தை வேண்டித் தவம்  செய்தல் தவம்
குழந்தையே  செய்யும் தவம்  எதை வேண்டி”

அன்புடன்
தமிழ்த்தேனீ