திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, April 4, 2013

" நவீன ரோபோக்கள் “



http://www.vallamai.com/?p=33658

  • Wednesday, March 20, 2013, 5:06
பூம் பூம் பூம் பூம் ஐயாவுக்கு நல்ல காலம் பொறக்குது,நல்ல காலம் பொறக்குது  ,  ஐயா வீட்டுலே சுப காரியம் நடக்கப் போகுது, வூட்லே இருக்கறவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கப் போறாங்க. என்று வாயிலில்  பூம்பூம் மாட்டுக்காரனின் குரல் கேட்டது.
கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார்  சபேசன், இவரின் தலையைக் கண்டவுடன்  பூம்பூம் மாட்டுக்காரன் நம்பிக்கையுடன் , குரலில் இன்னும் உத்வேகத்துடன்  ராகத்தோடு முழங்கத் தொடங்கினான் ,ஐயா எட்டிப் பாக்கறாரு தலையை ஆட்டுடா ராசா , ஐயா பழைய துணி ,  காசு எல்லாம் குடுப்பாரு  என்று கூறிவிட்டு அவன் கையிலிருந்த  குட்டையான நாதஸ்வரத்தை  ஒலிக்கத் தொடங்கினான்.
மாட்டுக்கு என்ன புரிந்ததோ  அந்த  நாதஸ்வரத்தின் ஓசைக்கு ஏற்ப தலையை அப்பிடியும் இப்படியுமாக ஆட்டிற்று.  எப்போதுமே   மனிதருக்கு   யானை, குரங்கு , புலி சிங்கம் போன்றவைகளை மீண்டும் மீண்டும் பார்க்க ஆர்வம் வரும், அதே போல் சபேசனும் அந்த மாட்டையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.    ஐயா பாக்கறாரு தலையை வேகமா ஆட்டுரா ராசா என்றான் பூம் பூம் மாட்டுக்காரன், மாடும் வேகமாய்த் தலையை ஆட்டத் தொடங்கியது.
.ஏதோ ஒரு இரக்கம் தோன்றவே அவருடைய  பழைய வேட்டியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்,  . பூம்பூம் மாட்டுக்காரன் ஐயாவுக்கு  நன்றி சொல்லுடா ராசா வேட்டி குடுத்தாரு மகராசன்  என்று கூறிக் கொண்டே அந்த வேட்டியை நிரந்தரமாக மாட்டுக்கே கொடுப்பது போன்ற பாவனையில் அந்த வேட்டியை மாட்டின் மேலேயே போட்டான்.
அந்த மாட்டின் மேல் பலவிதமான  வண்ண ஆடைகள் போர்த்தப்பட்டு இருந்தன.  அனேகமாய் அந்த  வண்ணத் துணிகளை எடுத்துவிட்டால் அதன் எலும்புகள் தெரியும் என்று தோன்றியது சபேசனுக்கு,  கையோடு கொண்டு வந்த இரண்டு வாழைப்பழங்களை மாட்டுக்கு கொடுத்தார் சபேசன் , வாங்கிக்கோ ராசா ஐயா அன்போட குடுக்கறாரு என்றான் பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் குரலுக்கு கட்டுப்பட்டு வாயைத் திறந்து தன்னுடைய  நாக்கை நீட்டி வாழைப்பழத்தை  கவ்விக்கொண்டு பூம்பூம்மாட்டுக்காரனிடமே  நீட்டியது பூம்பூம் மாடு.    ஆச்சரியமாய் இருந்தது சபேசனுக்கு , எப்படிக் கட்டுப் பாட்டோடு பழக்கி இருக்கிறான் இந்த மாட்டை என்று அதிசயித்துப் போனார் சபேசன்.
அதன் வாயில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப் பழங்களிலிருந்து  ஒரு வாழைப் பழத்தை எடுத்து உரித்து அவன் உண்டு விட்டு இன்னொன்றை மாட்டுக்கு கொடுத்தான் . மாடும் அதை தோலோடு உண்ணத் தொடங்கிற்று
அது சரி இயல்பாய் ஏதேனும் உண்ணக் கொடுத்தால் வாங்கி உண்ணுமே மாடுகள், இந்த மாடு  அவர் கொடுத்த வாழைப்பழத்தைக் கூட பூம்பூம் மாட்டுக்காரன் அனுமதித்த பிறகே  வாங்கி உண்கிறது, அப்படிப் பழக்கி இருக்கிறான் இந்த மாட்டுக்காரன்  என்று தோன்றியது.
ஒரு நவீனவகை ரோபோ போல் பூம்பூம் மாட்டுக்காரன் இடும் கட்டளையை எல்லாம் நிறைவேற்றியது  மாடு.  இவன் தன் வயிறு நிரம்ப இந்த  வேலையைச் செய்கிறான், இவனுக்கு  மனோவசியம் தெரிந்திருக்கிறது, நல்ல சொற்களைக் கூறினால்  மனதில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும், அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டவரையும்   ஏதேனும் கொடுக்கச் செய்துவிடும் என்று நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறான்.
நம்மில் பலர்  நல்ல சொற்களை கூறக் கூட தயங்கிக் கொண்டேதானே இருக்கிறோம். அப்படிப்பட்டவர்களைக் காட்டிலும் ,ஏதோ ஒரு வகையில் இந்த பூம்பூம் மாட்டுக்காரன் சாதாரண மனிதர்களை விட  உயர்ந்தவன் என்று தோன்றியது சபேசனுக்கு.
சபேசனுக்கு நன்றி கூறிவிட்டு  மேலும் மற்ற வீடுகளுக்கு சென்று தன்னுடைய தொழிலைத் தொடர, நாதஸ்வரத்தை வாசித்தபடியே நகரத் தொடங்கினான் பூம்பூம் மாட்டுக்காரன், தலையை ஆட்டியபடியே பின் தொடர்ந்தது பூம்பூம் மாடு. உள்ளிருந்து கனகா,  யாரு வாசல்லே  என்றாள், யாரும் இல்லே பூம்பூம் மாட்டுக் காரன் வந்தான், அவனுக்கு ஒரு பழைய வேட்டியைக் குடுத்து அனுப்பினேன்  என்றார் சபேசன்.
அதெல்லாம் சரி காலம் கெட்டுக் கெடக்கு , வயசானவா நாம ரெண்டு பேரும் தனியா இருக்கோம், நீங்க பாட்டு தானம் தர்மம்னு கதவைத் திறந்து அவனுக்கு தானம் செய்யப் போறீங்க,   அவன் கையிலே வெச்சிருக்கற கொம்பாலே உங்களை அடிச்சுப் போட்டுட்டு  வீட்டிலே இருக்கறதை எல்லாம் எடுத்துண்டு போய்ட்டான்னா என்ன செய்யறது.
என்னைக் கேக்காம கதவைத் திறக்காதீங்கன்னு எவ்ளோ தடவை உங்களுக்கு சொல்றது, இனிமே இப்பிடி கதவைத் திறக்காதீங்க என்றாள்.  சரி சரி என்று வேகமாய்த் தலையை ஆட்டினார் சபேசன்,
பூம்பூம் மாட்டுக்காரன் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான், இவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் போது  ஏனோ அந்த பூம் பூம் மாடு ஒரு முறை இவரை திரும்பிப் பார்த்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கியது.  ,
அன்று மாலை ,கனகா கதவைத்  தாப்பாள் போட்டுக்கோ  ,காலார ஒரு நடை நடந்துட்டு , அப்பிடியே காய்கறி வாங்கிட்டு வரேன்  என்றபடி  வெளியே வந்தார்  சபேசன்,   சற்று தூரத்தில் அந்த மாடு படுத்துக் கொண்டிருந்தது, பூம்பூம் மாட்டுக்காரன்  அரசாங்க மதுக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் கண் விழித்து தனக்கு ஏதேனும் உண்ணக் கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன்  பூம்பூம் மாடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.  அந்த மாட்டைக் கடந்து போகும்போது ஏனோ ஒரு முறை சபேசன் அந்த மாட்டைத் திரும்பிப் பார்த்தார். அதன் கண்களில் ஒரு இரக்கமும் , நன்றியும்  தெரிந்தது.
அன்புடன்
தமிழ்த்தேனீ

" ஆட்ரா ராசா "

                           "  ஆட்ரா  ராசா  "

“இது அரசியல் தொடர்பான கதை அல்ல, இந்தக் கதையில் வரும்கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல”“

கீழே இருக்கும் சாதாரண மக்களைப் பற்றிக்கவலையே இல்லாமல் பூமியைவிட்டுசற்று உயரத்தில் இருக்கும் மரங்கள், மலைகள்போன்றவற்றிலேயே  உலாவிவாழ்க்கையின் சுகங்களை அனுபவித்துதனக்கு வேண்டிய போது மட்டும் கீழே இறங்கிவந்து மக்களிடம்   இருக்கும்கனியை தட்டிப் பறித்து  மேலே சென்றுவிடும்குரங்குகள்.” ---தமிழ்த்தேனீ


                   "  ஆட்ரா  ராசா  "

ஏங்க தோட்டத்துப் பக்கம் போயி பாருங்க, காக்காய் கூட்டம்  கும்பலாபறக்குது, கா கா ன்னு ஒரே கத்தல் வேற என்றாள் அலமேலு,இதோ பாக்கறேன் என்றபடி எழுந்து சென்ற அவரை  ஒருசொக்காய் போட்டுண்டு போங்க, வெறும் உடம்போட போகாதீங்க ,பூச்சி பொட்டு இருக்கப் போறது என்றாள்அலமேலு.

சரி என்று ஒரு சொக்காயை எடுத்துமாட்டிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் கதவைத் திறந்தார் வெங்கடேசன், ஒரு பெரிய  குச்சியை கையில் கொடுத்து இதை எடுத்துண்டு போங்க,  போனவாரம் ஒரு பாம்புவந்துதே அதிலேருந்து எனக்குபயமா இருக்கு என்றாள்.
ஒண்ணும் பயப்படாதே அலமேலு இந்த மாதிரிபாம்பு , பல்லி, எறும்பு,  கொசு குரங்கு இதெல்லாத்தோடயும் வாழக் கத்துக்கணும், இல்லேன்னா இந்தக்காலத்திலே வாழ முடியாது. நான் பாத்துக்கறேன் நீ இங்கேயே இரு என்றுகூறிவிட்டு தோட்டத்துக்கு போனார் வெங்கடேசன்.

ஜன்னல் வழியா அவரையேபயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அலமேலு.காக்காய்கள் ஒரு இடத்தைக் குறிவைத்துபறந்து பறந்து கத்திக் கொண்டிருந்தன.அங்கே உற்றுப் பார்த்தார் வெங்கடேசன், அந்த மரக் கிளையில்  ஒருகுரங்கு  இந்தக் காக்காய்களின் கூக்குரல்களினால் சற்றும்பாதிக்கப்படாமல் அலக்‌ஷியமாக உட்கார்ந்து ஒரு பப்பாளிப் பழத்தை தின்பதிலேகவனமாக இருந்தது.காக்காய்களுக்கு அந்தக் குரங்கு  மரத்திலேஇருக்கும்  தங்களின் கூட்டைக்கலைத்துவிடுமோ என்று பயம்.

 ஆனால் அவைகளின்பயமும் பல நேரங்களில் உண்மையாகிஇருக்கின்றதே,குரங்குகள் தங்களுக்குள்ளே ஏற்படும்விரோதங்களினால்   பல பிரிவாகப்பிரிந்து சுய லாபத்துக்காக அடித்துக்கொள்ளும்போதுஎதிர்ப்படும் எதைப் பற்றியும்  கவலைப்படாமல் சுயலாபத்தை மட்டுமே  கணக்கில்வைத்துக்கொண்டு  பல குருவிக் கூடுகளையும்,பல பறவைகளின் கூடுகளையும் பிய்த்துப்போட்டுவிட்டு சென்று விடுவது பலகாலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. 

அதனால் ஏற்பட்ட உயிர்ப் பயத்தாலும் ,தங்கள் குழந்தைகளைப்பற்றிய பயத்தாலும் காக்காய்கள் கும்பலாக ஒன்று கூடி குரங்கைத் துரத்துவதிலேகவனமாய் இருந்தன  ஐந்தறிவு மட்டுமே இருக்கும் இந்த பறவைகளின் உணர்வுகள் ஆறரிவுகொண்ட மனிதருக்கு  ஏன் வரவில்லை, மிருகங்கள்  பறவைகள்  இவைகளைப் பார்த்தாவதுமனிதர்கள் திருந்த வேண்டும்.

மனிதருக்கு இந்த ஒற்றுமை எப்போது வருமோஎன்று தோன்றியது அவருக்கு,  காக்காய்கள் உணவுண்ணும் போதும் உறவினர்களை அழைத்து பங்கிட்டுஉண்கின்றன, துன்பம் வரும் வேளையிலும் ஒன்றாகக் கூடி  எதிர்கொள்கின்றன.பாராட்ட வேண்டியதுதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்வெங்கடேசன்,பப்பாளிப் பழத்தை ரசித்து உண்டுவிட்டுஅதன் தோலை விசிறி எறிந்து விட்டு மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்ததுகுரங்கு.ஏங்க அந்தக் குரங்கு எறங்கி வருது உள்ளேவந்துடுங்க என்று கூவினாள்அலமேலு,

   மதில் சுவற்றின் மேல் வந்து உட்கார்ந்துஇவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு இவரைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல்நடந்து சென்று பக்கத்திலே இருந்த பீ எஸ் என் எல் கோபுரத்துக்கு தாவிஅதன் மேல் அனாயாசமாக கிடு கிடுவென்று ஏறி மேலே சென்று உட்கார்ந்துகொண்டது.

அப்போதுதான் கவனித்தார் வெங்கடேசன்அங்கே ஏற்கெனவே இந்தக் குரங்கின்  துணைவி உட்கார்ந்து கொண்டிருப்பதை. மேலே சென்ற குரங்கு கையில்வைத்திருந்த இன்னொரு பப்பாளிப் பழத்தை அன்போடு துணைவிக்கு கொடுத்துவிட்டு  தன்துணைவி  அந்தப் பப்பாளிப் பழத்தை உண்ணும் அழகை ரசித்த படியே  சாவகாசமாக உட்கார்ந்து  துணைவியாரின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கியது.மீண்டும் வாசலில் காக்காய்களின்கூக்குரல் கேட்டது ,

அட என்னடா இதுதொந்தரவு என்று யோசித்துக் கொண்டேவெங்கடேசன் வாசலுக்கு வந்து பார்த்தார்,யாரோ ஒரு வடநாட்டு மனிதன் ஒரு குரங்கின்கழுத்தில்  கயிற்றில் கட்டி தன் தோளிலேஉட்காரவைத்துக்கொண்டு வந்து  ஒரு மேளத்தை அடிக்கத் தொடங்கினான்,குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும்கூட்டமாய்க் கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.அந்தக் குரங்கு அந்த வடநாட்டான் கொடுத்த  ஒருவேர்க்கடலையை தின்றுவிட்டு அவன் சொல்வதையெல்லாம் செய்யத் தொடங்கிற்று.

அவன் வைத்திருந்த கொம்பில் தலை கீழாகதொங்கியும், அந்தக் கொம்பை தன் தோளிலே வைத்துக்கொண்டுகுட்டிக் கரணமடித்தும் வேடிக்கை காட்டியது. எப்படியும் இந்த மனிதன் தன்பசிக்கு வேண்டியதை கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன் ஆடுடா  ராசாஆடுடா ராசா என்று அவன் கொடுக்கும் குரலுக்குத் தகுந்தவாறு அவன் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தது.வேடிக்கை பார்க்கும்  மக்களையும், ஆடும் அந்தக்குரங்கையும் ,  பீ எஸ் என்எல் கோபுரத்தின்  உச்சியிலிருந்துஅந்த இரு குரங்குகளும் வேடிக்கைபார்க்கத் தொடங்கின.

ஒரு வேர்க்கடலைக்காக வேடிக்கை செய்துஉயிர் வளர்க்கும் இந்தக் குரங்குஎப்போது கோபுரத்தை நிமிர்ந்துபார்க்கும்? எப்போது தான் அடிமைப்பட்டிருப்பதை உணரும் என்றுஎண்ணமிட்டபடியே உள்ளே வந்தார் வெங்கடேசன்.தொலைக் காட்சியில் ஒருவர் பாம்பு போல்  வேடமிட்டுஆடிக்கொண்டிருந்தார், மற்றொருவர் சிங்கம்போலவும்,புலி போன்றும் உடலில் வண்ணங்களைப்பூசிக்கொண்டு புலிஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.

மீண்டும் வாசலில் ஒரு குரல் ஒரு மனிதன்முட்ட முட்ட சாராயத்தைக் குடித்துவிட்டு டேய் யாரும் நம்மளை ஒண்ணும் செய்யமுடியாது ,எவனாவது கிட்டே வந்தீங்க குடலைஉருவிடுவேன், நான் குடிச்சிருக்கேனுபாக்கிறியா? எவ்ளோ குடிச்சாலும்நான் ஸ்டடியா இருப்பேன், பாரு  எப்பிடிநேரா நடக்கறேன் பாரு , கொஞ்சம் கூடத் தள்ளாடமாட்டேன் என்றாவாறு தள்ளாடித்தள்ளாடி நடந்து கொண்டிருந்தான்.

எல்லா மிருகங்களின் வேடமும் , பாம்பு போன்றவைகளின்வேடமும் மனிதருக்கு பொருந்துகிறதே. எந்த ஒரு மிருகமோ மற்ற எந்த ஜீவராசிகளுமோ ஏன்மனித வேடம் போடுவதில்லை என்று யோசித்தார் வெங்கடேசன்.

அன்புடன்
தமிழ்த்தேனீ எழுத்தாளர், நடிகர் 

Monday, January 7, 2013

2013 புத்தகக் கண்காட்சியில் என் நூல் "வெற்றிச் சக்கரம்"

புத்தகக் கண்காட்சியில் 2013 என் நூல் " வெற்றிச் சக்கரம்"                                                       " முதற் ப்ரசவம் "
நான் அனேக நாடகங்களை எழுதி இயக்கி உள்ளேன். ஒரு முறை உடலும் உள்ளமும் சிலிர்க்கும்படியாக கௌரவிக்கப்பட்டேன். 
என் நாடகத்துக்கு  தலைமை தாங்கி நடத்தவந்த எழுத்தாளர் டாக்டர் திரிபுர சுந்தரி  எழுத்தாளர்  லக்ஷ்மி அவர்கள்  மேடையிலே
என்னை அழைத்து மிக  வாஞ்சையாக என் தோளிலே கைபோட்டுக்கொண்டு ஒரு தாய் போல் என் நாடகத்தைப் பாராட்டிவிட்டு 
முதற் பரிசும்  வழங்கி கௌரவித்து   ஒலிபெருக்கியிலே அறிவித்தார்கள்  இப்போதும் அந்தக் குரல் காதிலே ஒலிக்கிறது
 
"இதோ இந்தக் கிருஷ்ணமாச்சாரி,  எழுத்தாளரும் , என்னுடைய பால்ய ஸ்னேகிதியுமான திருமதி கமலம்மாள் ரங்கசாமி
 அவர்களின் புதல்வர்,   திருமதி கமலம்மாள் ரங்கசாமிஅவர்களுக்கு இந்தக் குழந்தை கிருஷ்ணமாச்சாரி அவர்கள் பிறக்கும்
போது ப்ரசவ வைத்தியம் பார்த்த  மருத்துவச்சி நான் ஆகவே இந்தக்  கிருஷ்ணமாச்சாரி  " என் கையில் பூத்த மலர் "
என்று கவித்துவமாக அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது.

நான் பிறந்த போது ப்ரசவம் பார்த்தவர்  எழுத்தாளர் லக்க்ஷ்மி அவர்கள். இப்போது நான் ப்ரசவித்த குழந்தை  " வெற்றிச் சக்கரம்  " 
நூல்  மணிவாசகம் பதிப்பகத்தாரால் ப்ரசவம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே மணிவாசகம் பதிப்பகத்தாருக்கு
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்த மணிவாசகம் பதிப்பகத்தார்  ப்ரசவ வைத்தியம்  பார்க்க உதவியாக இருந்த
திரு தீபம் திருமலை அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இந்த நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்திய  அம்பத்தூர் சிரிப்பரங்க நிர்வாகிகள், திரு சிரிப்பானந்தா என்கிற 
திரு சம்பத் அவர்களுக்கும், பெரும் உதவியாக இருந்த  திரு சித்திரைச் சிங்கர் அவர்களுக்கும் நூலை  வெளியிட்டு சிறப்புரை
ஆற்றிய  எக்ஸ்னோரா நிறுவனர் உயர்திரு திரு எம் பி நிர்மல் அவர்களுக்கும், வல்லமை மின் இதழில்
என்கதைகளை வெளியிட்டு ஒரு நூலாக வெளிவர உதவி நூலைப் பெற்றுக் கொண்டு நூல் அறிமுகம்
செய்த வல்லமை  திரு அண்ணா கண்ணன்  அவர்களுக்கும், ஒய்எம்சீஏ திரு பக்தவச்சலம் அவர்களுக்கும்
விழாவைச் சிறப்பித்த சிரிப்பரங்க அங்கத்தினர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் எழுத்துத் திறமையை ஊக்குவித்த  தினம் ஒரு கவிதை, மின்தமிழ்,  மழலைகள், இல்லம், அன்புடன். பண்புடன் ,
 தமிழ் நண்பர்கள்,முத்தமிழ், வல்லமை, தமிழ்வாசல்,தமிழ்ப்ரவாகம், குழும நண்பர்கள் அனைவருக்கும்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே நான் பெற்ற இந்தக் குழந்தை " வெற்றிச்சக்கரம் " எனும் நூல் மணிவாசகம் பதிப்பகத்தார் கையில் பூத்த  மலர்.
இந்த நூல் "  வெற்றிச் சக்கரம் " என் முதற்ப்ரசவம் . முதற் ப்ரசவத்தில் பிறந்த  இந்தக் குழந்தையை
என்னுடைய "வெற்றிச் சக்கரம் " நூலை  வருகின்ற புத்தகக் கண்காட்சியில்(2013)
 ஸ்டால் எண் 139, ஸ்டால் எண் 140 ஆகிய இரு இடத்திலும் காணலாம்.

வாசகப் பெருமக்களும் நண்பர்களும் இந்த  வெற்றிச் சக்கரம் நூலுக்கு பெரும் ஆதரவு தந்து
என்னையும்  என் படைப்பையும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Monday, November 19, 2012

தங்க விமானங்கள்

                                               “ தங்க விமானங்கள்  “ 
நாராயணா  உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சாயங்காலம் வீட்டுக்கு வரேன் என்றான் கிருஷ்ணன். ஏண்டா இப்பவே போன்லே சொல்லேன் என்றான் நாராயணன். இல்லடா கொஞ்சம் விஸ்தாரமா பேசணும்  வீட்டுக்கு வந்து சொல்றேன், நீதான் எதுவானாலும் சரியா ப்ரடிக்ட் செஞ்சிருவியே அப்பிடீ மண்டையைப் போட்டு உருட்டிண்டே இரு  வந்து சொல்றேன் என்று போனை வைத்தான் கிருஷ்ணன்.
மூளையின்  அத்தனை செல்களும் யோசிக்கத் தொடங்கின.  .நாராயணனுக்கு   நாற்பது வருஷ நட்பு, அந்தரங்கமான நட்பு   , யார்கிட்டயும் சொல்லாத  விஷயமா இருந்தாலும் கிருஷ்ணன்  நாராயணன் கிட்ட கிட்ட மட்டும் பகிர்ந்துப்பான். ஒரு நம்பிக்கை ஒருவழிப் பாதை மாதிரி  நாராயணன் கிட்ட  சொன்னா விஷயம் வேற எங்கேயும்  போகாதுங்கற நம்பிக்கை.
ஏண்டா உனக்கே தெரியும் எங்கிட்ட சொன்னா  விஷயம்  யார்கிடேயும்  போகாதுன்னு , அப்புறம் என்ன  மர்மம் . சொல்லுடா என்றான் நாராயணன். 
அப்பிடி இல்லேடா இந்த விஷயம் உங்கிட்ட சொன்னதுக்கப்புறம்  எல்லாருக்கும் சொல்லப் போறேன். எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும். நானே இந்த விஷயத்தைப் பரப்பப் போறேன் என்றான் கிருஷ்ணன்.  அவன் செய்யற வேலை எதுவாயிருந்தாலும் அதிலே ஒரு நியாயம் இருக்கும், அதிலும் குறிப்பா நாராயணன் கிட்ட  விவாதிக்கற விஷயம் எல்லாம் ரொம்ப முக்கியமானதா இருக்கும்.
என்னவா இருக்கும் ! கிருஷ்ணனுக்கு ஒரு பொண்ணு ஒருபையன். ஒரு வேளை அவன் பொண்ணு யாரையாவது  காதலிச்சு வெச்சிட்டாளா , இருக்காதே  நல்ல கட்டுப்பாடா வளப்பான், அந்தப் பொண்ணும் , பையனும் ஒழுக்கமான பசங்க . நல்ல படிப்பாளிகள் .   அப்பிடியே இருந்தாலும் இந்தக் காலத்திலே  இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லே. அது சரி  காதல் விஷயமா இருந்தா  அவனே எல்லாருக்கும் சொல்வானா. எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்னு வேற சொல்றான் மண்டை குழம்பியது.
ஆர்வக் கோளாறுலே அவதிப்பட்டாலும் ஒரு வழியா நேரம் ஓடிப் போச்சு. இதோ அஞ்சு மணி ,இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவான். என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே வந்தான் கிருஷ்ணன்.  வா கிருஷ்ணா உள்ளே வா என்றபடி கிருஷ்ணன் முகத்தையே ஆராயும் பார்வையில் பார்த்தான் நாராயணன். ஒண்ணும் தெரியலை.
முகத்தை  ரொம்ப இயல்பா வெச்சிண்டு இருக்கான். அப்பிடீன்னா விஷயம் தீவிரமானதுன்னு அர்த்தம். சரி ரொம்ப ஆர்வமா காட்டிக்க வேண்டாம். என்று மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தான் நாராயணன்.  உள்ளே இருந்து நாராயணனின் மனைவி கௌசல்யா வந்து வாங்க அண்ணா இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு நாராயணனையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.
நாராயணா நேத்திக்கு நம்ம கோயில்லே  நடந்த நிர்வாகிகள் கூட்டத்திலே நம்ம கோயில் விமானத்துக்கு தங்கக் கூறை  வேயணும்னு ஒரு தீர்மானம் போட்டிருக்காங்க . அதுக்கு கிட்டத்தட்ட 100 கிலோ தங்கம் வேணுமாம். நானும் நீயும் சேர்ந்து ஒரு கிலோ தங்கமாவது சேத்துக் குடுக்கணும்னு எனக்கு ஆசை அதான் உங்கிட்ட கலந்து பேசலாம்னு வந்தேன் என்றான் கிருஷ்ணன்.
ஏண்டா நீ தெரிஞ்சுதான்  பேசறையா, இல்லே தெரியாம பேசறையா நம்மாலே எப்பிடி முடியும்  . நமக்கு யாரைத் தெரியும் நாம் கேட்டா யாரு குடுப்பாங்க? அதுவும் இப்போ தங்க விக்கிற விலையிலே நெனைச்சு கூடப் பாக்க முடியாது என்றான் நாராயணன்.
நாராயணா  நம்ம காதுக்கு இந்த விஷயம் வந்திருக்கே அப்பவே புரியலையா நமக்கு எல்லாம் தெரிஞ்சாலும்  நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குடா. அந்த சக்தி இது மாதிரி விஷயங்கள் யாராலே நடக்கணும்னு  முன்னாடியே தீர்மானிச்சு வெச்சிருக்கும். அதுனாலே  நாமெல்லாம்  கருவிகள்தான். முயற்சி செய்வோம் என்றான் கிருஷ்ணன். ஒரு கோயில் கட்ட ஒரு செங்கல் கொடுத்தாலே அவங்க வம்சமே நல்லா இருக்கும்னு பெரியவங்க சொல்வாங்க என்றான் கிருஷ்ணன்.
அன்றிலிருந்து யாரைப் பாத்தாலும் இந்த விஷயத்தைப் பற்றியே ப்ரஸ்தாபித்து ஒவ்வொருத்தர் மூலமா இன்னொருத்தரைப் பிடிச்சு கிட்டத் தட்ட குருவி சேக்கறா மாதிரி 100 கிராம்  தங்கம் சேத்தாச்சு. இன்னும்  900 கிராம் தங்கம் சேக்கணும்.
நாராயணனுக்கு  நம்பிக்கை தளர்ந்து கொண்டே வந்தது. நடிக நடிகைகளுக்கு   கோடி கோடியா கொட்டிக் குடுக்கற பெரிய பண முதலைகள் கூட இவர்கள் போகும்போது   இல்லேங்க இப்போதான் 600 கோடியை  படம் எடுக்க வியாபாரத்திலே போட்டுட்டு  படம் ஓடுமா ,  பணம் வருமா வராதான்னு தவிச்சிகிட்டு இருக்கோம்  எங்களாலே  இப்போ முடியாது என்றார்கள்.
சரி கிருஷ்ணா ஏதோ நம்மாலானது 100 கிராம் தங்கம் சேத்துட்டோம் , இனிமே நமக்கு சக்தி இல்லே . இந்த நூறு கிராமை கொண்டு போயி நிர்வாகத்திலே குடுத்துட்டு வந்துடுவோம் என்றான் நாராயணன்.
நாராயணனின் மனைவி கௌசல்யா  உள்ளே இருந்து வந்து  அண்ணா தப்பா நெனைக்காதீங்க நீங்களும் இவரும் மூணு மாசமா அலைஞ்சு 100 கிராம் தங்கம்  சேத்தீங்க. 
நாட்டுலே  நடக்க சரியான  ரோடு இல்லே, மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணி கிடைக்கலே. எங்க பாத்தாலும் சாக்கடை , டெங்கு கொசு உற்பத்தியாகி குழந்தைங்க எல்லாம் நிறைய பேரு உயிரை விட்டுட்டாங்க , நிறைய பசங்க  படிக்க வசதியில்லாம கஷ்டப்படறாங்க. அரசாங்கமும் முறையா இதெல்லாம் செஞ்சு தரமாட்டேங்கறாங்க . பொதுமக்களுக்காக இது மாதிரி ஏதாவது திட்டம் போட்டு  அதுக்கு நீங்க ரெண்டு பேரும் உழைச்சா  நல்லா இருக்கும்.
அதைவிட்டுட்டு  ஏற்கெனவே இருக்கற கோயிலுக்கு தங்க விமானம் செய்யறதுக்கு தங்கம் சேக்க அலையறீங்களே  அந்த சாமி உங்க கிட்ட  தங்க விமானம் கட்டினாத்தான் நான் இங்க இருப்பேன்னு ஏதாவது சொன்னாரா?  என்றாள்.
என்ன  கௌசல்யா   நீயா இப்பிடிப் பேசறே என்னை விட பக்தி உனக்குதான் அதிகம் , நான் அடிக்கடி கோயிலுக்கெல்லாம் போகமாட்டேன் , நீ பட்டினியா இருந்து தினமும் கோயிலுக்கு போயி தரிசனம் செய்யாம சாப்பிடக்கூட மாட்டியே நீ இப்பிடிக் கேள்வி கேக்கறே  ஆச்சரியமா இருக்கு என்றான் நாராயணன்.
இதோ பாருங்க அந்தக் காலத்திலேருந்து இந்தக் காலம் வரைக்கும்  நமக்கு இந்த இயற்கையைப் படைச்சு அது மூலமா நம்மையெல்லாம் வாழ வைக்கிறவர்  கடவுள்னு  மனசுலே படிஞ்சு போயிருக்கு , பக்தியோட வளந்தவதான் நான்.
ஆனா யதார்த்தமா யோசிச்சு பாத்தா  நமக்கு குடுத்த இறைவனுக்கு  நாம செய்யணும் உண்மைதான்  ஆனா இறைவன் கொடுத்த இந்த இயற்கையை காப்பாத்தறதும் நம்ம கடமைதானே .நம்மோட வாழற மக்களுக்கு முதல்லே நல்லது செய்யணும். அதுக்குதான் எல்லா ஆழ்வார்களும்  நாயன்மார்களும்  கடவுள் நமக்குள்ளே இருக்கான்னு சொல்றாங்க. மனுஷனை மதிச்சா கடவுளை மதிச்ச மாதிரிதான். 
மனுஷனுக்கு தீங்கு நெனைக்காம  எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கத்தான் நான் கோயிலுக்கு போறேன்.  எப்பவுமே கடவுள் எனக்கு இதைச் செய்யி அதைச் செய்யின்னு கேக்கறதில்லே. நாமே ஏதாவது செய்யறோம். நம்ம மனசு திருப்திக்கு எல்லாரும்  திருமங்கை ஆழ்வாரா ஆயிடமுடியுமா? என்றாள் .
அப்போது அங்கே வந்த  வேலைக்காரி முனியம்மா  அம்மன் கோயிலுக்கு போயிருந்தேம்மா , அங்கே தீபாவளிக்கு அம்மனுக்கு  நீங்க வாங்கிக் குடுத்த  புடவையை சாத்தினாங்களாம் , நல்லா இருந்துச்சு ன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு  பூசாரி என்றாள் கௌசல்யாவிடம்.
இவ்ளோ நியாயமா சிந்திக்கறாளே இவ என்ன செஞ்சிருக்கா பாரு என்றான் நாராயணன் ,   அந்தப் புடவை 900 ரூபா , அந்த 900 ரூபாயை ஏதாவது ஏழைக் குழந்தைகளுக்கோ அல்லது ஏதாவது மக்களுக்கு பயன்படறா மாதிரி திட்டத்துக்கோ குடுத்திருக்கலாமே  ஏன் செய்யலே  என்றான் நாராயணன் .
ஏங்க அது என்னோட வேண்டுதல் என் மனசு திருப்திக்கு செஞ்சேன், அதை நீங்க குறை சொல்லக் கூடாது என்றாள் கௌசல்யா.  நான் குறை சொல்லலே கௌசல்யா , இப்பிடித்தான்  எல்லாரும் நெனைக்கிறாங்க ,அடுத்தவங்களுக்கு சொல்ற யோசனையை அவங்க கடைப்பிடிக்கணும்னு வரும்போது பின்வாங்கறாங்க. 
உலக நாடுகள் ஒரு நாட்டோட மரியாதையை, தரத்தை அந்த நாட்டிலே எவ்ளோ தங்கம்  இருக்குங்கறதை வெச்சிதான் எடை போடறாங்க. அதுனாலேதான்  நம்ம நாட்டோட   தரத்தை உயர்த்த இதெல்லாம் செய்யறோம். நாட்டிலே யாருக்கும் தனிப்பட்ட மனுஷனுக்கு செல்வம் சேக்கக் கூடாது நாட்டுக்குதான்  சேக்கணும்னு  புத்தியில்லே.
கிருஷ்ணா இது வரைக்கும்  சேத்து வெச்சிருக்கற 100 கிராம் தங்கத்தை ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிதர ஏதாவது  அமைப்புக்கு குடுத்துடலாம்னு பாத்தா  நாம குடுக்கறதை வாங்கிகிட்டு  குழந்தைகளுக்கு செலவழிக்காம  சில நிர்வாகிங்க அவங்க வீட்டுலே இருக்கற கஜானாவிலே கொண்டு போயி வெச்சிகிட்டு அவங்க குடும்பத்துக்கு சொத்து சேக்கறாங்க. யாரை நம்புறதுன்னே தெரியலையே. எவ்ளோ செய்தி தினசரிலே படிக்கிறோம் என்றான்.
ஒரு குழப்பமான மன நிலையுடன் கிருஷ்ணன் சரி நான் வீட்டுக்கு போறேன். இதைப் பத்தி யோசிக்கலாம் என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
அன்று மாலை கிருஷ்ணன் வீட்டின் வாயிலில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அழைப்பு மணியை அழுத்தினாள். கிருஷ்ணன் எட்டிப் பார்த்து வாங்க உள்ளே வாங்க என்றார்.
இல்லேங்க நீங்க வெளியே வாங்க என்றாள். வாசலுக்கு வந்தான் கிருஷ்ணன், கூடவே அவன் மனைவி ருக்மணியும் வந்தாள்.
தப்பா நெனைக்காதீங்க  என் பேரு கிருஷ்ண பிங்கலா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். நான் யார் வீட்டுக்குள்ளேயும் போறதில்லே , எல்லாரும் என் வீட்டுக்குள்ளேதான் வருவாங்க என்றாள்.
ஆமாங்க  நாங்க பரம்பரையா கோயிலுக்கு பொட்டுக் கட்றவங்க . வம்ச வம்சமா  எங்க குடும்பம் கோயில்லேருந்து வர வருமானத்திலேதான் பொழைச்சிகிட்டு இருந்தோம்.அதெல்லாம் ஒரு காலம் . இப்பல்லாம் கோயில்லேருந்து எங்களை யாரும் கவனிக்கறதே இல்லே. 
நாங்களும்  கோயிலைச் சார்ந்து இல்லே. எங்க பொழைப்பு திசை மாறிப் போச்சு. ஆனா அந்தக் காலத்து ஜமீன்தாருங்க, பணம் படைச்சவங்க எல்லாம் காலம் காலமா  எங்க குடும்பத்துக்கு நகையாவும் , பொருளாவும் குடுத்ததெல்லாம் பரம்பரை சொத்தா எனக்கு வந்திருக்கு.
எங்க பரம்பரையிலே நான்தான் கடைசீ வாரிசு. நான் குழந்தையே பெத்துக்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன் . எங்க வம்சமே என்னோட முடிஞ்சு போகணும். இனிமே இந்த சொத்தையெல்லாம் வெச்சு பாதுகாக்கணும்கிற  அவசியமும் இல்லே.
அதுனாலே  மொத்தத்தையும்  நான் உங்க கிட்ட குடுக்கறேன். கோயில் சொத்தையும் பொது சொத்தா நெனைச்சு பாதுகாக்கணும்.   கோயில் சொத்தையும் பொது சொத்தையும் கொள்ளையடிச்சு அவங்க வீட்டுக்கு கொண்டு போனவங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லேங்க. மனுஷனை ஏமாத்தலாம், ஆனா தெய்வத்தை ஏமாத்தக் கூடாது. நான் என்னைப் பத்தின உண்மையைச் சொல்லித்  மனப்பூர்வமா குடுத்து எனக்கும் எங்க வம்சத்துக்கும்  பரிகாரம் செய்யணும்னு ஆசைப்படறேன்.
எங்க வம்சத்தோட  பாவத்தை அந்தக் கிருஷ்ணனே ஏத்துக்கணும்னு வேண்டிகிட்டு குடுக்கப் போறேன். கோயிலுக்கே போயி அவங்க கிட்ட பேசலாம், ஆனா அவங்க என்னை மதிப்பாங்களான்னு தெரியலை .அதான் பயந்துகிட்டு உங்க கிட்ட வந்தேன் என்றாள்.
இப்போது கிருஷ்ணனுக்கே  கொஞ்சம் குழப்பமா இருந்துது.. சரி நீங்க குடுங்க நான் கோயில்லே சேத்துடறேன் என்ன சொல்றே நாராயணா என்றான்  என்றான் கிருஷ்ணன் .நாராயணன் சற்றே குழப்பமாக மௌனமாக இருந்தான்.
படியிறங்கி  தெருவுக்கே போன அந்தப் பெண் மீரா திரும்பி வந்து  உங்க சந்தேகம் புரியுதுங்க .  இந்த மாதிரிக் காசையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டா என்ன செய்யறது அப்பிடீன்னு தானே யோசிக்கிறீங்க .
நான் குலத்திலே தாசியா இருந்தாலும் பகவத் கீதையைப் படிச்சிருக்கேன், கிருஷ்ணன் தன்னோட ஆப்த நண்பன் உத்தவனுக்கு சொன்ன   உத்தவ கீதையையும் படிச்சேன் .அதிலே கிருஷ்ணன்,
“ஆன்மீக உள்ளங்களே!  நான் கைவிட்டாலும், என்னைக் கைவிடாதவர்கள் யாரோ அவர்களே ஆத்திகர்கள் எனவே, உங்களில் ஆத்திகர்கள் யாரோ அவர்கள்  இந்தக் கிருஷ்ண பிங்கலாவின் மேல் கல் எறியத் கடவீராக ! அப்படி அல்லாதவர்கள்  இவள் மீது பூ எறியக் கடவீராக! “
அப்பிடீன்னு சொல்லி கிருஷ்ண பிங்கலான்னு ஒரு தாசியை பக்தையாக ஏத்துண்டார்.. அதுனாலேதான் நான் என் பேரை கிருஷ்ண பிங்கலான்னு வெச்சிண்டேன்.     இவ்ளோ சொல்லியும் அவங்க ஏத்துக்கலைன்னா அவங்க கிட்ட சொல்லுங்க  
“நாய் வித்த காசு குறைக்காதுன்னு”    ஏத்துக்குவாங்க.
என்னோட கிருஷ்ணன்  ஏத்துக்குவான், அவங்களையும்  ஏத்துக்க வைப்பான் என்றாள் தீர்மானமாக.  சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து! 
                                                                                சுபம்
அன்புடன்
தமிழ்த்தேனீ                                                             

Thursday, October 11, 2012

நூல் வெளியீட்டு விழா

அழைப்பிதழ் : 

அன்பு நண்பர்களே   வருகின்ற 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு
சென்னை அம்பத்தூர்  சிரிப்பரங்கம்   "நகைச்சுவைமன்றம்" நடத்தும்
" வெற்றிச் சக்கரம் " புத்தக வெளியீட்டு விழா.

 (அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்) 
சத்சங்கம் தெருவில் உள்ள சத்சங்கத்தில்  நடைபெற இருக்கிறது.
விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்
.
நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துபவர்  :
எக்ஸ்னோரா இன்டர்னேஷனல் நிறுவனர் உயர் திரு எம் பீ நிர்மல் அவர்கள்.

முதல் நூல் பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர் : எழுத்தாளர்,
முனைவர் திரு அண்ணா கண்ணன் அவர்கள்.

முன்னிலை வகிப்பவர்: திரு தீபம்   எஸ் திருமலை அவர்கள்.

ஏற்புரை :      திரு தமிழ்த்தேனீ அவர்கள்.

அனைவரையும் வரவேற்று   "தென்றல் வருடிய சிரிப்பு!   வழங்குபவர்
பத்திரிகையாளர், எழுத்தாளர், உயர் திரு அரவிந்த் சாமிநாதன் அவர்கள்.

நடத்துபவர்  திரு சிரிப்பானந்தா ,  சித்திரைச் சிங்கர் ,மற்றும் (Laughtoriuam) ,
சிரிப்பரங்கம்  நண்பர்கள்.

அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்-அனைவரும் வருக

அன்புடன்
தமிழ்த்தேனீ

Wednesday, October 3, 2012

" மாற்றான் தோட்டம் சிறுகதை

வல்லமை இதழில் " மாற்றான் தோட்டம்" சிறு கதை படிக்க சொடுக்குங்கள்
 http://www.vallamai.com/literature/short-stories/26922/

அன்புடன்
 தமிழ்த்தேனீ


" மாற்றான் தோட்டம்"



யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள்.
அப்பப்பா என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய் சோகை படிந்த தேவதையின் ஓவியம் கருமேகத்தின் இடைவெளியில் மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது தோன்றி மறைவது போல் அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில் ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின் சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
 
அரசல் புரசலாக அவள் வாழ்க்கை அம்பலத்துக்கு வந்தது. பார்யா ரூபவதி சத்ரு என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பழமொழி உண்மையானால் அவள் கணவன் கண்களில் அல்லவோ சோகம் தெரியவேண்டும், இங்கே மாறாக இருக்கிறதே?
 
மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் ரமேஷ்.
அவள் குழந்தையிலேயே அழகாக இருந்ததால் அவளுக்கு ரூபா என்றே பெயரிட்டிருந்தனர் அவளுடைய பெற்றோர்.
 
காலைத் தொடும் நீண்ட கருகருவென்ற கேசம், தாமரைத் தடாகத்திலே நீந்தும் மீனைப் போன்ற அகலமான கரிய விழிகள், தீர்மையான நாசி, சற்றே இதழ் விரிந்திருக்கும் ரோஜா மொட்டுப் போன்ற உதடுகள், அசாத்தியமான, அலங்காரமான வளைவுகளுடன் மோவாய், அதற்கும் கீழே சங்குக் கழுத்து, இதற்கு மேலும் வர்ணிப்பது பாவம் என்று தோன்றியது ரமேஷுக்கு. என்ன இருந்தாலும் அவள் மாற்றான் தோட்டத்து மலர்.
 
அந்த மலரை வாடாமல் மெல்லிய கைகளின் அழுத்தமும் இல்லாமல் இடைவெளிவிட்டு பொத்தி வைத்துக்கொண்டு, காலம் முழுவதும் வைத்துக்கொண்டு காப்பாற்றி, அவள் முகத்தில் ஆனந்த மயமான புன்னகையை வரவழைத்து, அவள் முகத்தில் சிரிப்பைத் தவிர சோகத்தின் நிழலே விழாதவாறு, ஒரு தேவதையை உபாசனை செய்வது போல், அவளை உபாசித்தால்தான் தன் ஜென்மம் கடைத்தேறும் என்று உணர்ந்தான் ரமேஷ்.
 
எப்படி இது சாத்தியமாகும்? எப்படி அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிப்பது என்பதே சிந்தனையாய் மூளைக்குள் சுழன்று சுழன்று அவனை அசத்திக்கொண்டிருந்தது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்னும் யோசனையில் இருந்த அவனுக்கு பலவிதமான சந்தேகங்கள். அவள் இவனை நம்புவாளா? ஏற்கெனவே ஒரு ஆண்மகனால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்னின் மனநிலையில் இன்னொரு ஆண்மகனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பாளா? அவள் நம்பிக்கையை எப்படிப் பெறுவது என்றெல்லாம் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக மூளைக்குள் வலம் வரத் தொடங்கின.
 
ஒரு மனிதனுக்கு அழகான மனைவி அமைவது வரம். அப்படி வரம்போல் அமைந்த அழகான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு வாழாமல், எப்படி ப்ரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு தானும் நிம்மதியில்லாமல் அந்த தேவதையையும் நிம்மதியாக இருக்க விடாமல் இப்படி இருக்கிறார்கள் மனிதர்கள் என்று நினைத்தால் ஆத்திரம் வந்தது ரமேஷுக்கு.
 
எப்போதுமே மனிதன் கிடைக்காதவரையில் அது கிடைக்க ஏங்குகிறான், ஆனால் அது கிடைத்ததும் அதன் மதிப்பு தெரியாமலே வாழ்கிறான். எப்போதுதான் இவர்கள் திருந்துவார்களோ.
 
சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும். இவன் திருந்தினால் என்ன, திருந்தாவிட்டால் நமக்கென்ன, கண்ணுக்கெதிரே துன்பப்படும் இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது.
 
அவன் எதிர் பார்த்த வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக அவனைத் தேடி வந்தது. ஆமாம் வாசலில் யாரோ அழைப்பு மணியை அடிப்பது கேட்கவே, ஜன்னல் வழியே பார்த்தவன் அதிர்ந்தான். அந்த அழகுத் தேவதை அவன் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். ஓடிப்போய்க் கதவைத் திறந்து, “என்ன வேண்டும் வாருங்கள் உள்ளே” என்றான்.
 
“அதற்கெல்லாம் நேரமில்லை என் புருஷனுக்கு திடீரென்று நெஞ்சு வலி எனக்கு பதட்டமாக இருக்கிறது” என்று பதறினாள் அவள். இதோ ஒரு நொடியில் வருகிறேன் என்று கூறிவிட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு, அவனுடைய காரை எடுத்து ஓட்டிக்கொண்டு வந்து அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, கைத்தாங்கலாய் அவள் புருஷனைக் கூட்டிவந்து காரில் உட்காரவைத்துவிட்டு, அவளையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு….“நீங்கள் கவலைப்படாதீர்கள், ஒன்றும் ஆகாது” என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.
 
அவள் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தாள்.  “நீங்கள் அவர்மேல் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறீர்களே அவர் ஏன் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்” என்றான்.
“என்னை நீங்கள் நீ என்றே அழையுங்கள்”, என்றாள் அவள்.
 
“என் தலைவிதி அப்படி இருக்கிறது, நான் அழகாகப் பிறந்ததுலே என்னோட தப்பு என்ன இருக்குன்னே புரியலை. எப்போ பாத்தாலும் என்னை சந்தேகப் பட்டுக்கொண்டே இருக்காரு. நான் எப்பிடி நிரூபிக்கிறதுன்னே புரியலை” என்று கேவினாள் அவள்.
 
“நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே, உங்களோட அருமை அவருக்கு புரியலை. எனக்கு மட்டும் உங்களை மாதிடி ஒரு பொண்ணு கிடைச்சிருந்தா அப்பிடியே தங்கத் தாம்பாளத்திலே வெச்சுத் தாங்குவேன்” என்று கூறிவிட்டு அவளையே பார்த்தான் ரமேஷ்.
 
அவள் அவனை நோக்கி ஒரு விரக்திப் புன்னகையை வீசிவிட்டு “எப்படி உங்களால் இவரிடமிருந்து என்னைப் பிரித்து அழைத்துப் போகமுடியும், இதெல்லாம் நடக்கிற காரியமா” என்றாள்.
 
“நீ மட்டும் சரின்னு சொல்லு ரூபா, நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல். இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணிர்தான் வரணும், அதுக்கு நான் பொறுப்பு” என்றான் தீர்மானமாக.
 
“இவரைப் பத்திக் கவலைப்படாம, இவர் கண்ணிலேயே அகப்படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இது சத்தியம்” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.
 
அவள் இவன் மேல் சாய்ந்து அழத்தொடங்கினாள், அவளை தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்து, “இனிமேல் உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீரமட்டும்தான் வரணும். நான் பாத்துக்கறேன்” என்றான் ரமேஷ்.
 
சொன்ன வாக்கைக் காப்பாற்ற, தகுந்த இடமாகப் பார்த்து அவளை பெங்களூருக்கு அழைத்துப் போய் ஒரு பெரிய வீட்டில் வாழத் தொடங்கினர் இருவரும். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.
 
இவர்கள் இருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தான் கமலேஷ், யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள், அப்பப்பா என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய் சோகை படிந்த தேவதையின் ஓவியம் கருமேகத்தின் இடைவெளியில் மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது தோன்றி மறைவது போல் அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில் ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின் சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
 
அவன் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றியது. சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும், கண்ணுக்கெதிரே துன்பப் படும் இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது. மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் கமலேஷ்.
 
ஒரு நாள் அவள் மட்டும் தனியாக இருக்கும்போது “உன் புருஷன் ரமேஷைப் பத்திக் கவலைப்படாம நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல் ரூபா, இந்த ஆளு கண்ணிலேயே படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீர்தான் வரணும் அதுக்கு நான் பொறுப்பு. இது சத்தியம்” என்றான் தீர்மானமாக உணர்ச்சி வசப்பட்டு கமலேஷ் .
அன்புடன்
தமிழ்த்தேனீ