திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, February 3, 2011

”தடுப்பான்’

 நம் வாழ்க்கையில் நமக்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு அனுபவ பாடமாகவே அமைகிறது.


சமீபத்தில் ஒரு நிகழ்வு,
என் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியர் புதிதாக திருமணம் ஆனவர்கள், அவ்வப்போது எங்களுடன் வந்து மிக நல்லவிதமாக பழகுவார்கள் ,

ஏற்கெனவே காதில் ஒரு தோடு அணிந்திருக்கிறாள், ஆனாலும் மிகவும் ஆசைப்பட்டு மீண்டும் ஒரு முறை காதில் தோடணிந்திருக்கும் இடத்துக்கு சற்று மேலாக இன்னொரு முறை துளையிட்டு அதிலொரு திருகாணி போட்டுக்கொள்ளவேண்டும் என்னும் ஆசையால் நவீன முறைப்படி ( கன் ஷாட் ) மூலமாக துளையிட்டுக்கொண்டு அதில் போட்டுக்கொள்ள ஒரு காதணியைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் காதணி அவருடைய அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.

இது இப்படி இருக்க ஒரு மாதம் கழித்து ஒருநாள் அந்தப் பெண் என் வீட்டிற்கு வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. நான் அந்தப் பெண்ணிடம் ஏன் வாட்டமுற்று இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண் என்னவோ தெரியலை ரெண்டு மூணு நாளா கழுத்து வலி, அதுமட்டுமல்ல ஒரு பக்கம் முழுவதுமே வலி இருக்கிறது என்றாள், நான் உடனே மருத்துவரிடம் காண்பித்தீர்களா என்றேன்.
ஆமாம் காண்பித்தேன் அவர் இந்தப் பனி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் கழுத்திலே நெறி கட்டி இருக்கிறது. அதனால் இந்த மாத்திரைகளை உண்டுவாருங்கள் சரியாகி விடும் என்று ஏதோ மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார், இந்தப் பெண்மணியும் அந்த மாத்திரைகளை உண்டும் இன்னமும் சரியாகாத நிலையில் இருக்கிறாள் என்பது புரிந்தது.

இந்த நிலையில் என் மனைவியும் அந்தப் பெண்ணும் பேசிக்கொண்டே சமையலறைக்கு சென்றனர்.நானும் என்னுடைய வழக்கமான வேலையாக கணிணியில் வந்து உட்கார்ந்தேன்.

திடீரென்று என் மனைவி என்னங்க இங்க வாங்க என்றாள் நானும் போனேன். அப்போது அந்தப் பெண்ணை அழைத்து அவளுடைய காதை என்னிடம் காட்டச்சொன்னாள் என் மனைவி.அந்தப் பெண்ணும் அவளுடைய வலது காதை என்னிடம் காண்பித்தாள். நானும் நன்றாக இருக்கிறது திருகாணி புதிதா என்று பாராட்டிவிட்டு நகர்ந்தேன். அது இல்லைங்க காதுக்கு பின்னால் பாருங்கள் என்றாள். பார்த்தேன் நிலைமையின் விபரீதம் புரிந்தது.

ஆமாம் அந்தப் பெண் நாகரீகம் கருதி மிக மெல்லியதான காதுத் திருகாணியை அணிந்திருந்தாள். அந்தத் திருகாணியின் பின் புறம் இருக்கும் மடல் போன்ற பகுதியும் மிகவும் சிறியது, அதனால் அந்த மடல் போன்ற பகுதியும் அவள் காதின் திருகாணி போட துளைத்த ஓட்டை வழியாக காதில் முறம் போன்ற பகுதியின் உள்ளே சென்று விட்டது. அது தெரியாமல் இந்தப் பெண்ணும் காதின் பின்பக்க திருகாணி தொலைந்து விட்டதாகவும் ,முன்பக்க மிளகு வடிவம் கொண்ட கொண்டை கழற்ற வரவில்லையென்றும் உதவி நாடி என் மனைவியிடம் வந்திருக்கிறாள் என்பதும் புரிந்தது.

ஆனால் அந்தப் பெண் நினைத்தாற் போல திருகாணி தொலையவில்லை, அவள் காது மடலின் மறுபக்க தோலுக்கும் முன் பக்கத் தோலுக்கும் இடையில் காதின் உட்புறமாக சென்று மாட்டிக்கொண்டிருக்கிறது  .
அதனால்தான் அவளுக்கு கழுத்தும் காதும் வலியெடுத்து கழுத்தில் நெறி கட்டி எல்லா அவஸ்தையும் பட்டிருக்கிறாள் என்பது புரிந்து போயிற்று.

ஒன்று காதிலே அறுவை சிகிச்சை செய்துதான் அந்த திருகாணியை எடுக்கவேண்டும் இல்லையென்றால் அந்தப் பெண்மணி பொறுத்துக் கொள்ளும் தன்மை உடையவளாக இருந்தால் திருகாணி உள்ளே சென்ற விதமாகவே அந்த ஓட்டையிலேயே பின்பக்கமாக அந்த திருகாணியை வெளியே தள்ளி அதன் பிறகு அந்த முன்பக்க மிளகு வடிவத்தை பிடித்துக்கொண்டு பின்பக்க திருகாணியைக் கழற்றவேண்டும்.

நான் அந்தப் பெண்ணிடம் ஒன்றும் சொல்லாமல் ஒன்றுமில்லையம்மா எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவள் கணவனுக்கு
தொலைபேசி மூலமாக தகவல் சொன்னேன்.அவரும் வந்துவிட்டார்.
அவரிடம் நான் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி விளக்கிவிட்டு
நானே எடுத்துவிடுகிறேன் ஆனால் நீங்கள் உங்கள் மனைவிக்கு விஷயத்தை விளக்கிவிடுங்கள். பிறகு தைரியம் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவரும் ஒப்புக்கொண்டார்.

பிறகு அந்தப் பெண்மணியிடம் நிலமையைக் கூறி என்னை நம்பி அவள் காதை என்னிடம் காட்டுமாறு கூறினான் அவள் கணவன்.
நானும் இறைவனை வேண்டிக்கொண்டு முன் பக்க மிளகு போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பின்பக்க ஓட்டையின் மையப்பகுதிக்கு பின்பக்க திருகாணி வருமாறு செய்து வலித்தாலும் பரவாயில்லை என்று கூடியவரை நாசூக்காக அழுத்தி ஓட்டை வழியே திருகாணியை வெளிவரச்செய்து பின்னர் முன் பக்க மிளகு போன்ற பாகத்தை பிடித்துக்கொண்டு திருகாணியை இடப்புறமாக கழற்றி எடுத்து, முன்பக்க மிளகையும் எடுத்தேன் காதிலிருந்து. அந்தப் பெண்மணி நான் திருகாணியை எடுக்கும் போது கண்ணில் நீர்வரப் பொறுமையுடன் காண்பித்ததால் எடுக்க முடிந்தது, இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான்.

அன்று சில மணித்துளிகளிலேயே அவளுடைய காது வலியும் ,கழுத்து வலியும் மாயமாய் மறைந்தன,அவள் முகத்தில் புன் சிரிப்பையும் ஒரு நாணத்தையும் அவளுடைய கணவன் முகத்தில் ஒரு நிம்மதியையும் கண்டு நானும் என் மனைவியும் மகிழ்ந்தோம்.

காதில் ஓட்டைக்குத் தகுந்தவாறு பின்பக்கம் ஒரு வட்டமான தடுப்பு ஒன்று முன்பெல்லாம் ;போட்டுக்கொள்வார்கள் ,இப்போதெல்லாம் நாகரீகம் கருதி அதையெல்லாம் தவிர்த்துவிட்டார்கள், அது மட்டுமல்ல சிறிய அணிகலன்களை அணிகிறார்கள்,அதனால் இப்படியெல்லாம் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.

நல்ல வேளை என் மனைவி கவனித்தாள், இந்த திருகாணி அவள் காதிலேயே இருந்திருந்தால் காதில் புண் ஏற்பட்டு புறையோடி இருக்கும்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அதன் பின் விளைவாக அவதிகள் பட நேரும், முக அழகு குன்றும். இதெல்லாம் தேவையா?
முன்பெல்லாம் புளியங்கொட்டையை தரையில் தட்டை வடிவில் நன்றாகத் தேய்த்து சமனமாக்கி அதன்நடுவே துளையிட்டு காதணியை அணியும் போது இவ்வாறு ஏற்படாத வண்ணம் தடுப்பாக அதை (Washer) உபயோகிப்பார்கள். நானே பல முறை என் தாயாருக்கு, என் சகோதரிகளுக்கு தேய்த்து தடுப்பான் செய்து கொடுத்திருக்கிறேன்
ஆகவே எப்போதுமே

” இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”

என்னும் வள்ளுவன் வாக்குக்கொப்ப
”தடுப்பான் இல்லாத திருகாணி அவதி
கொடுப்பானாகி மிகுதி கெடும் ”

என்னும்  தமிழ்த்தேனியின் வாக்குக்கொப்ப  நடந்துகொண்டால் நன்மையே விளையும் என்று உணர்க

அன்புடன்

தமிழ்த்தேனீ









Wednesday, February 2, 2011

”கனவு மெய்ப்படவேண்டும் “ சிறு கதை வல்லமை இதழில்

 ”கனவு மெய்ப்பட வேண்டும்” சிறுகதை வல்லமை இதழில் படிக்க  சொடுக்குங்கள்
http://www.vallamai.com/?p=1874

அரங்கமே மின்விளக்குகளாலும் அனைத்து நாடுகளின் விஞ்ஞானிகளாலும் பொதுமக்களாலும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அதி நவீன கணினியின் உதவியால் அரங்கத்தின் திரையில் எல்லா நாடுகளும் கண்டு களிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளித் திரை மின்னிக்கொண்டிருந்தது. ஒரு அதி நவீன நான்கு சக்கர விசை வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோர் முகத்திலும் ஆச்சரியக் குறி நிரந்தரமாக அவதானித்திருந்தது.


ஒரு பக்கம் நவீன விஞ்ஞானத்தில் முன்னேறி இருந்தாலும் அதிகமாக எரிபொருளை இயற்கையாகவே வைத்திருக்கும் நாடுகளிடம் எரிபொருளுக்குக் கையேந்தும் நிலை. மற்றொரு பக்கம் எரிபொருளின் விலையைக் குறைக்க வழி தெரியாமல், மாற்று எரிபொருளை இயற்கையான சூரிய வெளிச்சத்திலே இருந்து கண்டுபிடித்தாலும் நீரிலே உள்ள சக்தியை எரிபொருளாக உபயோகிக்கும் வழிமுறைகள் தெரிந்தும் அந்தத் தொழில்நுட்பங்களை வளர்க்காமல் தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ளும் சுயநல அரசியல்வாதிகள் ஒரு புறம்.

இப்படி இருக்கும் இந்த நிலையில் மக்களுக்கு ஆச்சரியம் கலந்த ஆனந்தம். மாற்று ஏரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதா! அதுவும் குறைவான செலவில் அதிக சக்தி அளிக்கும் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதா! பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற அத்துணை எரிபொருட்களுக்கும் விமானத்துக்கும் அணு ஆயுதத்துக்கும் விண்கலத்துக்கும் அதையும் தாண்டி உலகத்தில் தேவையாய் இருக்கும் அத்துணை சக்திகளுக்கும் மாற்றாகப் பயன்படுத்தும் வகையில், உலகமே மின்சாரத் துணை இல்லாமல் இரவிலும் பகலிலும் ஒளியோடு மின்சாதனப் பொருட்கள் அத்தனையும் இயங்கும் வசதியோடு மொத்தமாக ஒரு மாற்றுக் கண்டுபிடிப்பு நிகழ்த்தியிருக்கும் விஞ்ஞானி ‘ஆதிமூலத்தை’ மேடையிலே காணப் போகும் பரபரப்பு, பிரபஞ்சத்தின் ஆச்சரிய விழிகளை இமை மூடாமல் வைத்துக்கொண்டிருந்தது.

உலகத்தில் இருக்கும் அத்தனை தொலைக்காட்சிகளும், ஒருங்குவிக்கப்பட்டு உலக மக்கள் அத்தனை பேருமே, திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டுச் செய்திகள்… அத்தனையும் மறந்து விட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் ஆச்சரியத்துடன் காத்திருந்தனர்.

திரையிலே விஞ்ஞானி ஆதிமூலம், ஒரு மந்திரவாதி போல் தன்னுடைய தளர்ந்த நடையுடன் நிதானமாக நடந்து வந்து, நடு மேடையில் நின்று, அத்தனை பேரையும் குனிந்து வணங்கினார். அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது…!!!! அடங்கியது!!

விஞ்ஞானி ஆதிமூலம் பேச ஆரம்பித்தார்.

“இன்னும் சில நிமிடங்களில் நம்முடைய கண்டுபிடிப்பான அத்துணை சக்திகளுக்கும் ஒரே தீர்வான மாற்றுப் பொருள், இங்கு அனைவருக்கும் காட்டப்படும். அதற்கு முன்னால் ஒரு சிறு விஷயத்தை எல்லோரும் பகிர்ந்துகொள்ளுவோம். எனக்கும் என் மகனுக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் என் மகன் சொன்னான், ‘மனிதன் நினைத்தால் எல்லாவற்றையும் படைக்க முடியும். ஆகவே கடவுள் என்பது பிரமை. வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் என்பது மாயை’ என்றான். அவன் சொன்ன அந்தச் சொல்தான் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த, என்னைத் தூண்டியது.

நான் சொன்னேன், ‘ஏற்கெனெவே இருக்கும், அல்லது படைக்கப்பட்டிருக்கும் மூலப் பொருள் இல்லாமல் எதையுமே மனிதரால் உருவாக்க முடியாதென்று. மனிதன் கண்டுபிடிக்கிறான். உருவாக்குவதில்லை. எப்போதும் மனிதனால் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாததைப் புதியதாக உருவாக்க முடியாது. இருப்பதைத்தான், கண்டுபிடிக்கத்தான் முடியும். ஆகவே எப்போதும் இறையை, மூலத்தை, இல்லையென்று சொல்ல முடியாது’ என்றேன்.

ஆனால் அவன் வார்த்தைகள் என்னை மனிதனின் உச்சக்கட்ட சக்தியை எட்ட வேண்டும் என்று வெறிகொள்ள வைத்தது. அதன் முடிவுதான் இப்போது நாம் கண்டுபிடித்திருக்கும் மாற்றுப் பொருள்.”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அரங்கமே இருளில் மூழ்கியது ஒரே ஒரு விநாடிதான். மறுபடியும் மீண்டும் ஒளிவெள்ளம் சூழ்ந்தது.

“இப்போது நாம் கண்டு பிடித்திருக்கும் மாற்று மூலப் பொருளால்தான் இந்த அரங்கமும் செயல்படுகிறது” என்றார் ஆதிமூலம். விஞ்ஞானி ஆதிமூலத்தின் கையில் ஒரு சிறு குப்பி இருந்தது. அந்தக் குப்பியிலிருக்கும் சிறு மாத்திரை வடிவில் இருந்த ஒரு மாற்றுப் பொருளைக் கையிலெடுத்து ஒரு முறை காட்டிவிட்டு அந்த மாத்திரையை மேடையில் இருந்த ஒரு நான்கு சக்கர விசை வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் சேமிப்பு அறையின் வாயில் இட்டார் ஆதிமூலம். இப்போது இந்த வாகனத்துக்கு நான் அளித்த, நம்முடைய கண்டு பிடிப்பான மாற்றுப் பொருளின் உதவியால் வாகனம் இயங்கத் தொடங்கும் என்றார். இயங்கத் தொடங்கியது…. புகையோ, நாற்றமோ, வெப்பமோ இல்லாமல்.

அவர் சொன்னார், “இனி இவ்வாகனத்துக்கு பல வருடங்களுக்கு எரிபொருள் தேவை இல்லை” என்று. உலகமே அதிர்ந்தது…. கைகூப்பியது. மகிழ்ந்தது. “இனி எப்போதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்னும் பேச்சுக்கே உலக அளவில் இடமில்லை” என்றார் விஞ்ஞானி ஆதிமூலம்.

ஒரு விமானம் பரிசோதனை முயற்சியில் பறக்க ஆரம்பித்தது….. ஒரு விண் கலம் மாற்றுப் பொருளின் உதவியால் நெருப்போ, வெப்பமோ இல்லாமல் அதி விரைவாக வானில் உயர்ந்தது இலக்கை நோக்கி பறந்தது. உயிரோட்டமான காட்சி அரங்கத்தில் இருந்த திரையில் நேரிடைக் காட்சியாக காட்டப்பட்டது. உலகம் ஆச்சரியத்தினால் மௌனமானது. அந்த மௌனத்தைக் கிழித்துக்கொண்டு மீண்டும் ஆதிமூலம் பேச ஆரம்பித்தார்.

“கண்டு கொண்டேன் மூலப் பொருளை. நாம் கண்டுபிடிக்கும் அனைத்து விஞ்ஞான சாதனங்களுக்கும் சக்திகளுக்கும் தேவையான மாற்று மூலப் பொருளைக் கண்டுகொண்டேன். இப்போதும் சொல்கிறேன் இந்த மாற்று மூலப் பொருளை ஏற்கெனெவே இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மூலப் பொருட்களை வைத்துத்தான் உருவாக்கினேன் ஆகவே மூலப் பொருளில்லாமல் எதையும் உருவாக்க முடியாது என்பது நிரூபணமாகிவிட்டது. ஆகவே அனைத்துக்கும் மூலப் பொருளாகிய ‘ஆதிமூலத்துக்கு’ நன்றி..

நான் ‘ஆதிமூலம்’ என்று சொன்னது என்னையல்ல, இறைவனை….. ஆகவே ‘இறைவனுக்கு’ வணக்கம்” என்றார்…. உலகமே அதிர்ந்தது……… தலை வணங்கியது!

விஞ்ஞானி ஆதிமூலமும் தலைவணங்கினார். எங்கிருந்தோ ஒரு துப்பாக்கியின் தோட்டா, அவருடைய இதயத்தின் மையப் புள்ளியைத் தாக்கியது.



 
அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, January 30, 2011

"இலவச மருத்துவம்”

இலவச மருத்துவம் “சிறுகதை படிக்க



http://www.vallamai.com/?p=1854       சொடுக்குங்கள் .


அன்புடன்

தமிழ்த்தேனீ.

Tuesday, January 11, 2011

“கூடாரை வெல்லும் நாள்”




 ”கூடியிருந்து குளிர்வோம் “




பூமியில் இருந்த எல்லா இடங்களையும் விட்டுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலே அதுவும் பெரியாழ்வாரின் நந்தவனத்திலே வந்து பூவைப் போல் துளசி மாடம் பக்கத்தில் படுத்துக்கொண்டு கையைக் காலை உதைத்துக்கொண்டு என்னை எடுத்துக்கோ என்னை எடுத்துக்கோ அப்பிடீன்னு பெரியாழ்வார் மனசிலே இரக்கம் வரும்படிப் பண்ணி, அவரும் தேஜோ மயமாக இருந்த குழந்தை ஆண்டாளை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்து ஏதோ தான் பெற்ற பெண் குழந்தையைப் போலே அள்ளி அணைத்துக் கொஞ்சி அவளை வளர்த்து ஆளாக்கினார் பெரியாழ்வார். அப்படியெல்லாம் பெரியாழ்வாரை ஆட்டிவைத்து பெற்ற மகளினும் பெரிதாய்ப் பாசம் வைத்து வளர்த்த பெரியாழ்வாரை விட்டு அந்த மாயக் கண்ணனை அடைய பெரியாழ்வாரை ஒரு கருவியாய் உபயோகித்த நேர்த்தி என்ன? அப்படியானால் ஆண்டாளின் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர்தானே ,ஆமாம் ஆண்டாள் பெரியாழ்வாரின் பரம்பரையாக வந்தவள் அல்லவோ! ,அடடா அப்படிப்பட்ட கருவியாய் இருக்க பெரியாழ்வாரைத் தெரிந்தெடுத்த ஆண்டாள் மஹாலக்‌ஷ்மி, ஆமாம் நாராயணன் அரங்கன் எங்கும் நிறை பரப்ரும்மம் என்றால் அவன் மார்பில் சதா வசிக்கும் லக்‌ஷ்மியான ஆண்டாளும் எங்கும் நிறை பரப்ரும்மம்தானே ,அப்படிப்பட்ட ஆண்டாள்.



”என்ன தவம் செய்தனை

எங்கும் நிறை ப்ரப்ரும்மம்

அப்பா என்றே அழைக்க

என்ன தவம் செய்தனை ”



என்று பெரியாழ்வாரைப் பார்த்து நாமெல்லாம் பாடும்படி செய்த ஆண்டாள்





பகவான் நாராயணனை அரங்கனிடம் தன்னையே அவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராய் இருந்த பெரியாழ்வார் , தான் வளர்த்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்வித்து மாமனாராகவும் ஆன பெரியாழ்வார் என்ன தவம் செய்தாரோ! என்று நாமெல்லாம் வியக்கும் வண்ணம் பெரியாழ்வாரின் புகழ் மணக்க தான் மாலை சூடினாளோ ஆண்டாள்?

அரங்கனுக்கு நியமித்த மாலையை அவள் சூடிக்கொண்டு அரங்கனிடம் சேர்ந்து பெரியாழ்வாரின் பாமாலையை நாம் பாட அருள் செய்தாளோ ஆண்டாள்? இன்றளவும் நம் பெண்ணை ஆண்டாளாகவும் வரும் மாப்பிள்ளையை அரங்கனாகவும் வரித்து மனம் உருகி அன்று ஒரு நாளேனும் நாமும் பெரியாழ்வார் பெற்ற இன்பத்தை நாமும் அடைய வழி வகுத்த மஹாலக்‌ஷ்மி ஆண்டாள். முப்பது பாசுரங்கள் பாடினாலும்



27 ஆவது பாசுரமான



கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.



என்னும் இப் பாசுரம் அல்லவோ மிகவும் விசேஷமான பாசுரம்

இந்தப் பாசுரத்தைக் கேட்டாலே இந்தப் பாவிலுள்ள ”



“உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு

யாம்பெறும் சம்மானம் “



என்று ஆண்டாளுடன் நாமும் சேர்ந்து பாடி அனுபவித்து, அந்த ஆனந்த அனுபவத்தில் உள்ளம் மகிழ்ந்து , உணர்வுகள் விகசித்து , நாமும் ஆண்டாளை நம் குழந்தையாய் பாவித்து சூடகமும், தோள் வளையும், தோடும், செவிப்பூவும் என்கின்ற பல்விதமான ஆப்ரணங்களையெல்லாம் அவளுக்கு அணிவித்து பார்த்துப் பார்த்து மகிழ்ந்து , ஆடை உடுத்தி, அழகு பார்த்து நிலவுக்கு பதிலாக அரங்கனைக் காட்டிக் காட்டி, நம் கையால் பால் சோறு ஊட்டி மகிழ்ந்து, நம் சுற்றமும் கூடி இருந்து அரங்கனுக்கு மணமுடித்து கண்குளிரப் பார்த்து மகிழவேண்டாமோ! அப்படிப்பட்ட பாக்கியம் நமக்கும் கிடைக்க வேண்டாமோ? சரி அப்படி மணமுடித்து வைத்தபின் இந்த வைபவத்தைக் கொண்டாடி மகிழ் வேண்டாமோ

மனம் இனிப்பது போல் நாவும் இனிக்க வேண்டாமோ அதற்குத்தான்

“மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர நாமும் அரங்கனுக்கும் ஆண்டாளுக்கும் மனம் இனிக்க அக்கரை வடிசிலும் அக்கறையாய் செய்து அளித்தே நாமும் உண்ண



கீழே அக்காரவடிசில் செய்யும் முறையும் நாமளித்தோம்



அக்காரவடிசில்:





தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 2 ஆழாக்கு

கடலைப் பருப்பு- 1/2 ஆழாக்கு

பயத்தம் பருப்பு- 1/2 ஆழாக்கு

நெய்- 1 கிலோ

கொதிக்கவைத்த பால்- 4 லிட்டர்

வெல்லம்- 1 கிலோ

முந்திரிப்பருப்பு- தேவையான அளவு

கிஸ்மிஸ்- தேவையான அளவு

ஜாதிபத்திரி- 1 1/2 டீஸ்பூன்

தண்ணீர்- அரிசியை வேகவைக்க

செய்முறை:

முதலில் அரிசியை 200 கிராம் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அத்துடம் கொதிக்கும் நீர் மற்றும் பாலை சேர்க்கவும். அதே நேரத்தில் இன்னொரு வாணலியில் 1 ஆழாக்கு நெய்விட்டு இரண்டு பருப்புகளையும் வறுத்து அரிசிக் கலவையுடன் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வேகும்வரை அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும்.வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி வேகவைத்த கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.மிச்சமிருக்கும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொன்னிறமாக வறுக்கவும். ஜாதிபத்திரியையும் சேர்த்து வறுத்து சாதக் கலவையின் மேலே கொட்டிக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும்.அக்கார வடிசிலும் தயார்.



அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, January 10, 2011

”சாமி குத்தம் “ சிறு கதை

 " சாமி குத்தம் " சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்


கீழுள்ள சுட்டியை



http://www.vallamai.com/?p=1633



அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, January 9, 2011

நான் சித்தர் இல்லீங்கோ

 ” நான் சித்தர் இல்லீங்கோ “ பாகம் 1.




1. எங்கள் தெருவில் இருந்த ஒரு வாலிபன் ஓட்டிவந்த ஹீரோ ஹோண்டா திடீரென்று சறுக்கியது கீழே விழுந்து தேய்த்துக்கொண்டே சென்றது, நெற்றியில் காயம் ,ரத்தம் வழிந்தது அந்த வாலிபன் கையால் நெற்றியை அழுத்தியபடி இருந்தார். அதைக் கண்ட நான் எதிரே இருந்த வெற்றிலைபாக்கு கடைக்கு சென்று தீக்ககுச்சியை உரசி கைக்குட்டையின் ஒரு ஓரத்தை பற்றவைத்து கரியாக்கி, அதில் கொஞ்சம் வெல்லம், சுண்ணாம்பு இரண்டையும் கலந்து உள்ளங்கையில் வைத்து நன்றாக சூடு பறக்க தேய்த்துக் குழைத்து நெற்றியிலிட்டேன், ரத்தம் வருவது நின்றது, ரெண்டு நாளைக்கு தண்ணி படாமே பாத்துக்கோங்க என்றேன் , இரண்டே நாளில் அந்தப் பற்று உதிர்ந்தது, காயமும் ஆறியது, அது மட்டுமல்ல காயம் பட்ட வடுவும் குறுகிய நாட்களிலே மறைந்தது.

----------------------------------------------------------------------

2. அந்த குளிர்சாதன பேருந்தில் ஒருவர் இருமிக்கொண்டே வந்தார்,

பேருந்து ஓரிடத்தில் நின்றது, யாரெல்லாம் காப்பி சாப்படறீங்களோ சாப்டுட்டு சீக்கிறம் வாங்க என்றார் ஓட்டுனர்.
ஒரு மளிகைக் கடையில் கொஞ்சம் சீரகம் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறி இருமிக்கொண்டிருந்தாரே அவரிடம் கொடுத்து வாயிலே அடக்கிக்கோங்க, அப்பிடியே கடிச்சி அந்த சாறை மட்டும் முழுங்குங்க என்றேன்,   சென்னை வந்து சேரும் வரையில் இருமல் சத்தம் கேட்கவே இல்லை  .  சென்னைக்கு வந்து இறங்கும்போது அந்த இருமல்காரர் என்னிடம் வந்து சார் நீங்க சொன்ன மருந்து அமிர்தம் சார்,உடனே என் இருமல் நின்னு போச்சு என்றார்

------------------------------------------------------------------------------

3. வில்லிவாக்கத்திலே இருக்கும்போது எங்கள் பக்கத்து குடித்தனக்காரரின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்தவே இல்லை.

அந்தக் குழந்தையை வாங்கி அதன் காதை தொட்டேன், வீறிட்டு அலறியது.

ஒரு தடிமனான படுக்கை விரிப்பை எடுத்து அதில் அந்தக் குழந்தையை நடுவிலே விட்டு விட்டு அந்த படுக்கை விரிப்பின் ஒரு பக்க இரு முனைகளையும் கெட்டியாக ஒருவரைப் பிடிக்கச் சொல்லி மரு பக்கத்தின் இரு முனைகளையும் நான் பிடித்துக்கொண்டு மூன்று முறை குழந்தையை இரு ஓரத்துக்கும் உருளுவது போல படுக்கை விரிப்பை தாழ்த்தியும் ,உயர்த்தியும் செய்தேன், குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு சிரித்தது,

ஆமாம் குழந்தைக்கு உரம் விழுதல் என்று ஒன்று உண்டு, அப்படி உரம் விழுந்தால் அதைக் கண்டு பிடிக்க காதைத் தொட்டால் போதும் ,குழந்தை இன்னமும் அதிகமாக வீறிடும், அப்படிக் கண்டு பிடித்தால் இப்படி படுக்கை விரிப்பை உபயோகித்து செய்தால் குழந்தைக்கு உரம் விழுந்திருப்பது நீங்கும்,

----------------------------------------------------------------------------


4. ஒரு முறை என் நண்பர் உணவு விடுதியில் அவருக்குப் பிடித்தமான பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு செரிமானம் ஆகாமல் அவதிப்பட்டார்.  
அவரிடம் கொஞ்சம் புளி, கொஞ்சம் சீரகம் இரண்டையும் கலந்து வாயில் போட்டு மெல்லும்படி சொன்னேன் சில நிமிடங்களில் அவர் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற்றார்

-------------------------------------------------------------------------------


5. ஒரு முறை ஒரு பெண்மணி திடீரென்று ஏதோ பூச்சி கடித்துவிட்டது அதனால் உடம்பெல்லாம் தடிமனாக ஆங்காங்கே வீங்கிவிட்டது என்றார். அவருக்கு ஒரு மலைவாழைப் பழத்தின் உள்ளே பெருங்காயம் வைத்து உண்ணச் சொன்னேன்

சில மணித்துளிகளில் அவருடைய வீக்கங்கள் வடிந்தன.

------------------------------------------------------------------------------

6. சில நேரங்களில் குழந்தைகள் எதற்காக அழுகிறது என்றே தெரியாமல் அழுது கொண்டே இருக்கும், எதையோ பார்த்து பயந்தது போல் மிரண்டு மிரண்டு அழும்.அப்படிப்பட்ட நேரங்களில்
கொஞ்சம் திரு நீறை எடுத்து மன சுத்தியுடன், “ஓம் ஹரீம் ஸ்ரீம் க்லீம் ஜம் மனசா தேவ்யை நமஹ: ” என்னும் ஸ்லோகத்தை ஜரத்காரு தேவியியை நினைத்து ஜபித்துவிட்டு குழந்தையின் நெற்றியில் பூசினால் உடனே குழந்தை அழுகையை நிறுத்தும்.

அல்லது வயிற்று வலியால் அழுதால் ஒரு வெற்றிலையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி அதை அடுப்பிலே காட்டி இளஞ்சூடாக வயிற்றில் போட்டு போட்டு எடுத்தால் வயிற்று வலி நீங்கி புன்னகை பூக்கும் குழந்தை

-------------------------------------------------------------------------------------------------------------

7. முகத்திலோ மற்ற ஏதேனும் உடல் அவயவங்களில் காயம் ஏற்பட்டு அந்தக் காயத்தின் விளைவாக கரும் வடு ஏற்பட்டால் மஞ்சளையும் தேங்காய் எண்ணையையும் கலந்து பூசி வந்தால் அந்த கரும் வடு மறைந்து மீண்டும் சருமம் பளிச்சிடும்.

-------------------------------------------------------------------------------

8. பொதுவாக மாம்பழக் காலங்களில் மாம்பழம் சாப்பிட்டதன் விளைவாக வரும் வயிற்றுப் போக்கை நிறுத்த அந்த மாம்பழத்தின் கொட்டையில் இருக்கும் மாம்பருப்பை எடுத்து அடுப்பிலே சுட்டு அந்தப் பருப்பை உண்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்

-------------------------------------------------------------------------------

9. நம் உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டு வரும் வயிற்று வலியை நீக்க
ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்துக்கொண்டு அதை அப்பிடியே வாயில் போட்டு கடிக்காமல் முழுங்கி விட்டு அதை முழுங்க உதவியாக ஒரு டம்ளர் மோரை குடித்தால் உஷ்ணம் குறைந்து உடனே வயிற்று வலி நிற்கும்.

------------------------------------------------------------------------------

10.   ப்ரயாண காலங்களில் வெய்யிலில் ப்ரயாணம் செய்யும்போது வெய்யிலின் பாதிப்பு இல்லாமல் இருக்க எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது அதைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரையை,அல்லது சிறிதளவு உப்பை கலந்து நீரும் கலந்து குடித்துக்கொண்டே இருந்தால் ப்ரயாணக் களைப்பும் தீரும், உடல் சூடும் சமனப்படும்

--------------------------------------------------------------------------------

11.குளிர் ப்ரதேசங்களில் பயணப்படும்போது சற்றே இஞ்சி கலந்த சீரகத்தையும் , சில மிளகுகளையும் கலந்து இடித்து வைத்துக்கொண்டால் அதனுடன் வெல்லம் கலந்தோ,அல்லது சர்க்கரை கலந்தோ பானம் தயாரித்து குடித்தால் குளிர் நிற்கும்.

---------------------------------------------------------------------------------

12.ஜலதோஷத்தினாலோ, அல்லது தொண்டைப் புண் ஏற்பட்டு தொண்டைக் கரகரப்பு ஏற்பட்டால் கொஞ்சம் சுண்ணாம்பை தேங்காய் என்ண்ணையுடன் கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் விரைவில் குணமாகும்.


---------------------------------------------------------------------------------

அன்புடன்

தமிழ்த்தேனீ


நான் சித்தர் இல்லீங்கோ  பாகம் 2.


13. ஒரு முறை நாங்கள் குடியிருந்த வீட்டில் இரவில் நல்ல தூக்கத்தில் விரலில் ஏதோ கடித்ததைப் போன்ற உணர்வு, சிறிது நேரத்தில் கடுக்கத் தொடங்கியது, தூக்கம் கலைந்து விளக்கை எரியவிட்டுப் பார்த்தேன், கொசு வலையின் ஓரத்திலே சாதுவாக உட்கார்ந்திருந்தது ஒரு தேள்.



அந்த வலியையும் பொறுத்துக்கொண்டு சமையலறைக்கு சென்று கிடுக்கியை எடுத்து வந்து அந்தத் தேளை கிடுக்கியால் பிடித்து அடித்துப் போட்டுவிட்டு அந்தத் தேள் கொட்டிய விரலைப் பார்த்தேன், அந்தத் தேள் கொட்டிய கொட்டுவாயில் இருந்த தேளின் கொடுக்கு முனையை ஒரு ஊசியால் நீக்கிவிட்டு சமையலறைக்கு சென்று ஒரு வெங்காயம், சிறிது பெருங்காயம், இரண்டையும் அரைத்து அந்தக் கொட்டுவாயில் தடவிக் கொண்டு ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி அந்தக் கொட்டு வாயை சூடு படுவது போல் பலமுறைகள் காட்டி பிறகு கையின் மேற்புறத்தில் ஒரு துணியை இறுக்கிக் கட்டிக்கொண்டு படுத்தேன் . சிறிது நேரத்தில் தேள்கடியின் வீரியம் குறைந்து கடுப்பு நின்றது, தூங்க ஆரம்பித்தேன்

மறுநாள் வலி போயே போச், வலி போயிந்தி .

-------------------------------------------------------------------------------



14. மார்பில் கபம் கட்டிக்கொண்டு மூச்சு விடமுடியாமல் அவதிப்படும்போது நான்கைந்து வெற்றிலைகளை எடுத்து அவற்றை லேசாக சூடு காட்டி எலுமிச்சை பிழியும் கருவியில் போட்டு நசுக்கி சாறு பிழிந்து,அத்துடன் ஓரிரு மிளகையும் பொடி செய்து சிறிது தேனையும் கலந்து குடித்தால் கபம் பறந்துவிடும், மூச்சு சீராக விடமுடியும்.



------------------------------------------------------------------------------


15. தூது வளை இலை கிடைத்தால் அதைப் பொடியாக செய்து வைத்துக்கொள்ளுங்கள்

அந்தப் பொடியுடன் சற்றே பொடி உப்பு ,அல்லது தேன், அல்லது சர்க்கரை கலந்து மூன்று வேளை சாப்பிட்டாலே மார்புச் சளி கரைந்து சுவாசம் சீராகும்

---------------------------------------------------------------------------------


16. மிளகு, சீரகம் சற்றே வறுத்து அதைப் பொடி செய்து

சுடச்சுட சாதம் போட்டுக்கொண்டு அந்தப் பொடியை அந்த சாதத்தின் மேல் அப்படியே போட்டு

நெய் காய்ச்சி சுடச்சுட அதன் மேல் ஊற்றி தேவையான் உப்பு போட்டு கலந்து சாப்பிட்டால் அன்னத்வேஷம் அகலும், உணவு உண்ண ஆர்வம் வரும்.

------------------------------------------------------------------------------

17. ஒரு நல்ல வாழை இலையை நன்றாகக் கழுவி அந்த வாழை இலையில் ஆங்காங்கே ஒரு கரண்டி சூடான சாதத்தைப் போட்டு, சற்று நேரம் வைத்திருங்கள், அந்த சாதத்தை எடுத்துப் பார்த்தால், அந்த சாதம் இருந்த இடங்கள் பசுமை நிறம் மாறி இருக்கும். அந்த சாதங்கள் வாழை இலையிலுள்ள சத்தை உரிஞ்சிக்கொண்டது என்று பொருள்.



அந்த சாதத்தை உங்கள் விருப்பப்படி எதில்வேண்டுமானாலும் கலந்து உண்ணுங்கள்

இது போல் வாரம் ஒரு முறை செய்யுங்கள், உங்கள் ரத்தத்தில் இருக்கும் அத்துணை விஷப்பொருட்களும் நீங்கும்

இதனால்தான் நம் முன்னோர் வாழை இலையில் உணவு உண்ணும் முறையை வைத்திருந்தனர்

-----------------------------------------------------------------------------

18. குழந்தைக்கு அடிக்கடி ஜுரம் வந்தால், வயிறு உப்புசமாக ஆனால், அதை மாந்தம் என்று சொல்வார்கள்

அந்தக் குழந்தையின் வயிற்றில் அடிக்கடி வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி சூடாக்கி போடுங்கள்,மாந்தம் நீங்கும்.

---------------------------------------------------------------------------------


19. சில குழந்தைகள் பிறக்கும் போதே குளிர்ச்சி அதிகம் தாக்கியதாலும் , அல்லது குறைமாதப் ப்ரசவம் என்றாலும் உடலில் நீலம் காணப்படும், மிகவும் இளைத்து பலகீனமாக காணப்படும், அது போன்ற குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறையாவது கழுதைப் பால் அளித்தால் அந்த நீலமும் மறையும், குழந்தையும் வலுப்படும்.

-----------------------------------------------------------------------------


20. மாமரத்தில் இலைகள் துளிர் விட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள், என்றாவது அந்த துளிர் இலைகளை சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது போன்ற துளிர் இலைகளை பறித்து, அத்துடன் சற்றே மிளகாய், புளி, இவற்றை அரைத்து சுவையான துவையல் செய்து உண்ணுங்கள். ரத்தம் சுத்தியாகும், நன்றாகப் பசி எடுக்கும்.

---------------------------------------------------------------------------------

21.வாழைப் பூவில் இருக்கும் சிறு சிறு பூக்களை அரிந்து துவரம் பருப்பை அரைத்து வேகவைத்து கலந்து வாழைப்பூ பருப்பு உசிலி என்று செய்வார்கள், இது உடலுக்கு மிகவும் நல்லது
இதில் இன்னமும் விசேஷமான செய்தி என்னவென்றால்
இந்தப் பூவை கடைசீ வரையில் ஆய்ந்து சிறும் பூக்களை தனிதனியாகப் பிரித்து அந்தப் பூக்களில் இருக்கும் மொட்டு போன்ற பகுதியை கள்ளன் என்று சொல்லி ஆய்ந்து விடுவார்கள்,அதன் பிறகுதான் சமைப்பார்கள்

கடைசீயாக இருக்கும் பகுதியில் உள்ளே அந்த வாழைப்பூவின் சிறு பகுதி வாழைப்பூ போலவே உருவத்தில் சிறுத்து இருக்கும் வெள்ளையாக, அந்த பகுதியை உண்டால் தேங்காய் சாப்பிடுவது போல் ருசி இருக்கும்

முக்கியமாக இந்தப் பகுதி வயிற்றுப் புண், போன்றவைகளை ஆற்றும் தன்மை கொண்டது

-----------------------------------------------------------------------------

22. பலாப்பழம் போன்ற இனிப்பான பழத்தை அதிகம் விரும்புவோர் கவனிக்கவும் :

பலாப்பழத்தை சாப்பிட்டால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வயிறு கெட்டுப்போய் அவதிப்படுபவர்களுக்கு முக்கியமான மருந்து ஒன்று உண்டு, அது என்ன தெரியுமா? அந்தப் பலாப்பழத்தின் உள்ளே இருக்கும் பலாக் கொட்டைதான் மருந்து!

ஆமாம் இது இறைவனின் இயற்கை விந்தை!

அந்தப் பலாப்பழக் கொட்டையை அடுப்பில் வேக வைத்து தேனில் குழைத்து உண்டால் பலாப்பழத்தினால் வந்த ஒவ்வாமை நீங்கிவிடும்.

------------------------------------------------------------------------------

23. வாழைப்பழத்தை உரித்து அதன் சதைப்பகுதியை சற்றே நெய் போட்டு பிசைந்து அந்தக் கலவையை உண்டால் வயிறு உப்புசம், மந்தம் போன்றவை அடியோடு விலகும்.

------------------------------------------------------------------------------

24. வரட்டு இருமல் என்று சொல்வார்களே அதுபோல் மிதமிஞ்சிய குளிராலோ,அல்லது அதிக வெப்பத்தினாலோ ஏற்படும் வரட்டு இருமலைப் போக்க நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ” அதி மதுரம் “ சிறு மரக் பட்டைகள் போல் இருக்கும்

அதை வாயில் அடக்கிக்கொண்டு அதன் சாற்றை விழுங்கிக் கொண்டே இருந்தால் நின்றுவிடும் வரட்டு இருமல்.

----------------------------------------------------------------------------



அன்புடன்

தமிழ்த்தேனீ

நான் சித்தர் இல்லீங்கோ  பாகம் 3.



25. அடாத ஜலதோஷமா?

தேங்காய் எண்ணையில் சிறிது பூங்கற்பூரம் போட்டுக் காய்ச்சி அதை மார்பில் தடவுங்கள்



ஜலதோஷம் குறையும், மூச்சு விட எளிதாக இருக்கும்.

----------------------------------------------------------------------------



26. உடலில் சிறங்கு, சொறி, தேமல் போன்றவை இருந்தால்

சீய்க்காய்ப் பொடி போட்டு நன்றாக தேய்த்துக் குளித்துவிட்டு மஞ்சளையும் தேங்காய் எண்ணையையும் கலந்து பூசுங்கள்

சீக்கிரமே அவை காணாமல் போகும், அப்படியும் போகவில்லையென்றால் உத்தாமணி (ப்ரியாமணி அல்ல)

என்னும் வேலிப் பருத்தி இலையின் பாலை தடவி வந்தால் நிரந்தரமாக நோய் தீரும்

---------------------------------------------------------------------------

27. சாதாரண ஜலதோஷத்துக்கு நல்ல வரளி மஞ்சளை எடுத்து நெருப்பில் தீய்த்து அதன் மணத்தை முகருங்கள்

ஜலதோஷம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்.

------------------------------------------------------------------------------

28. நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தால் படுக்கைப் புண் உண்டாகும் அப்படி படுக்கைப் புண் வராமல் இருக்கவும் ,அப்படி வந்துவிட்டால் விரைவில் குணமாகவும் சுத்தமான துணியினால் துடைத்துவிட்டு கற்பூரத்தையும் ஆலிவ் எண்ணையையும் கலந்து பூசுங்கள்.

---------------------------------------------------------------------------------

29.என்னதான் பல் தேய்த்தாலும் வாய் நாற்றம் வருகிறதா?



ஆலம் விழுதுகளை பொடி செய்து, கடுக்காய் பொடி செய்து,வேப்பம் பட்டையை பொடி செய்து மூன்றையும் கலந்து வைத்துக்கொண்டு ஒரு வாரம் பல் துலக்குங்கள் வாய் துர்நாற்றம் அண்டாது.

----------------------------------------------------------------------

30. ஒரு நற் செய்தி: கற்பூரம் அதிக அளவில் சாராயம் தயாரிக்கப்படும்போது கலக்கப்படுகிறது, நாம் உபயோகிக்கும் பல ரசாயனங்களில் கலக்கப்படுகிறது,அப்படி கற்பூரத்தினால் ஒவ்வாமை வந்தால் பித்தம் அதிகமாகும் , தலை சுற்றல் ஏற்படும்

அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு காப்பி குடித்தால் சரியாகிவிடும் தலை சுற்றல்.

------------------------------------------------------------------------------


31. அன்றாடம் நாம் பல் துலக்கும் வழக்கத்தை ஏற்படுத்தித் தந்த முன்னோர்களுக்கு நன்றி சொல்வோம்

தூங்கி எழுந்தவுடன் பல்லை நன்றாக நம் விரல்களால் உள்ளும் புறமும் பிடித்து அழுத்தி துலக்குங்கள்

நன்றாக உணரலாம் தூக்கக் கலக்கம் தெளிவதை,, ஏனென்றால் நம் பற்களுக்கும் நம் மூளைக்கும் தொடர்பு உண்டு.

நம் பற்கள் அழுத்தப்படுவதால் மூளை சுறுசுறுப்படைகிறது. அதன் பிறகு இருக்கவே இருக்கிறது பல் துலக்கும் ப்ரஷ் .

அதனால்தான் பல் பிடுங்கும் போது அதன் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு பிடுங்குவார்கள், அப்படி வேர்களில் பாதிப்பு ஏற்பட்டால் மூளை பாதிப்படையும் .

----------------------------------------------------------------------------

32. சொத்தைப் பற்கள் இருந்து ஆரம்பத்திலேயே அவை கண்டு பிடிக்கப்பட்டால் மிகவும் நல்ல மருந்து ஒன்று உண்டு

ஆமாம்,

கிராம்பு எனும் லவங்கம்.அல்லது கிராம்புத் தைலம் கலப்படமில்லாதது, அதை அந்த சொத்தைப் பற்களில் வைத்து அழுத்திக் கடித்து சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு

வாய் கொப்பளித்தால் சொத்தை தானாக மறையும் . இல்லையென்றால் பல் வைத்தியர் நம் பல் சொத்தையைப் பிடுங்க

நம் சொத்தையே பிடுங்கிக்கொள்வர்.

---------------------------------------------------------------------------------


33. கண்ணில் வரும் கண் நோய், கண் சிவப்பு, போன்றவைகளுக்கு மிகவும் சிறந்த மருந்து தாய்ப்பால்

ஆனால் இது எல்லோருக்கும் எப்போதும் கிடைக்காது, ஆகையால் அதற்கு ஈடான மருந்தே இல்லையென்றாலும்

சுத்தமான பன்னீரை உபயோகித்தால் ஓரளவு பலன் கிடைக்கும்.

-------------------------------------------------------------------------------



34.அடிக்கடி காய்ச்சல் வரும் குழந்தைகளுக்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு என்னும் வேரை வாங்கி வந்து அதை கொதி நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி அந்தக் கஷாயத்தை தேனில் கலந்து கொடுத்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.

---------------------------------------------------------------------------------

35. வயிற்றுப் புண் பல விதமான காரணங்களால் வரலாம், அதிக காரம் உண்பவர்கள், அதிகாரம் செய்ய தைரியமில்லாததால் சோம பானம் சுறாபானம் போன்றவற்றைக் குடித்துவிட்டு தைரியம் வரவழைத்துக்கொண்டு அதிகாரம் செய்பவர்கள்,

அடுத்தவர் வாழும் வாழ்க்கையைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுபவர்கள் போன்றோருக்கு உண்டாகும் வயிற்றுப் புண்

குணமாக நல்ல பச்சை சுண்டைக் காயை வாங்கி வந்து வதக்கி உண்ணலாம், அல்லது காய்ந்த சுண்டைக்காயை வாங்கி வறுத்து பொடி செய்து சாதத்தில் போட்டுக்கொண்டு சற்றே உப்பும் போட்டுக்கொண்டு நெய்யை ஊற்றி கலந்து உண்ணலாம், வயிற்றுப் புண், வயிற்றெரிச்சல் காணாமல் போகும் .

-------------------------------------------------------------------------------

36. பாம்புக்கடி பட்டவர்க்கு உடனடி விஷ முறிவு வைத்தியம் , வாழைப் பட்டையில் படுக்க வைத்து அவரைத் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்வது, மற்றும் அவருக்கு வாய் மூலமாக வழைப்பட்டைச் சாற்றினை ஊட்டுவது

வாழைப்பட்டைச் சாறுக்கு அவ்வளவு விஷ முறிவு சக்தி உண்டு.

---------------------------------------------------------------------------------

நான் சித்தர் இல்லீங்கோ பாகம்  4.
37. சில குழந்தைகள் உடம்பு எப்போதும் சூடாக இருக்கும், கணச் சூடு என்பர். இப்படிப்பட்ட குழந்தைகள் மெலிந்தே இருப்பர்

இதுவும் ஒரு வகை நோய்தான், இந்த நோயை அகற்றி ஆரோக்கியமான குழந்தையாக மாற்ற, ஓரிரு முறை கழுதைப் பாலை கொடுத்துவிட்டு, அதன் பிறகு ஆட்டுப் பால் வாரம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தை நன்றாக வளரும்,

இதற்குதான் ”அழுத பிள்ளை சிரிச்சுதான் கழுதைப் பாலைக் குடிச்சுதான்” என்பர் பெரியோர்.

-------------------------------------------------------------------------------

38. அகத்திக் கீரை, கீழா நெல்லி, ஆலம் விழுதின் துளிர், முருங்கைக் கீரை, போன்றவை மிகவும் அருமையான ஔடதங்கள். இவைகளை நாள் ஒரு கீரை வீதம் அரைத்து வேகவைத்து பாலுடன் கலந்து பருகிவர , கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் அமிருதமாகிய தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க, ப்ரசவம் ஆன சில நாட்களிலேயே நம் முன்னோர்கள் இவைகளை வேகவைத்து உணவுடன் சேர்த்தும் கொடுப்பார்கள்,



---------------------------------------------------------------------------------

39. முருங்கைக் கீரை போல ஒரு அரு மருந்து கிடையவே கிடையாது! நம்முடைய ரத்தக் கொதிப்புக்கு ,அதாவது அதிக உணர்ச்சி வயப்பட்டு உடலும் மனமும் பரபரக்கும் வேளைகளில் நம்முடைய ரத்த ஓட்டத்தை சீராக வைக்க தினமும் முருங்கைக் கீரைச் சாற்றை ஒரு அவுன்ஸ் வீதம் பருகினால் ரத்தக் கொதிப்பு நோய் முற்றிலும் சீராகும்.

----------------------------------------------------------------------------

40. ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் ,பக்கவாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பச்சை வெங்காயம் போன்ற சஞ்சீவினி உலகத்திலேயே இல்லை எனலாம். அப்படிப்பட்ட வெங்காயத்தை தினமும் பச்சையாக உண்டு வருவதால் பலவிதமான நோய்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம். ஆனால் வெங்காயத்தை நறுக்கி வைத்துவிட்டு வெகு நேரம் கழித்து உண்டால் வியாதிகள் பரவும் அபாயம் உண்டு.ஏனென்றால் வெங்காயத்துக்கு கிருமிகளை வசீகரிக்கும் குணம் உண்டு

ஆகவே வெங்காயத்தை நறுக்கி உடனடியாக உண்ணவேண்டும்.

-------------------------------------------------------------------------------

41. பச்சைப் பட்டாணியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் இதய சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படும், இதயத்திலிருந்து

எல்லாஉறுப்புகளுக்கும் ப்ரயாணம் செய்யும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க எப்போதும் பச்சைப் பட்டாணிகளை உபயோகிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------

43. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை, கருஞ்சீரகம், நிலவேம்பு போன்றவைகளை வாங்கி பொடி செய்து வைத்துக்கொண்டால் அந்தப் பொடியை தேனுடன் கலந்து உண்ண எப்படிப்பட்ட வாதமும் , காய்ச்சலும், கபமும் தீரும்

-----------------------------------------------------------------------------

44.வெற்றிலை போடும் பழக்கம் இல்லாத பெண்மணிகளைக் கூட பெரியவர்கள் ப்ரசவம் ஆன கையோடு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றையும் சரியான விகிதத்தில் உண்ணச் செய்வர், இந்த வெற்றிலை ,பாக்கு சுண்ணாம்பு மூன்றின் கலவையை மென்று சுவைப்பதால் நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரும் சேர்ந்து வயிற்றினுள் செல்லும்போது

ஜீரண சக்தியையும், அளிக்கிறது

----------------------------------------------------------------------------

45. நல்ல சீரகத்தை கொஞ்சம் எடுத்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சுங்கள், அந்த சீரகங்கள் நன்கு பொரிந்து உடையும் பக்குவத்தில் வரும்போது தரமான சாம்பிராணி அதில் சேர்த்து

அந்த எண்ணெய் ஆறியவுடன் அதை வடிகட்டி மாதம் ஒரு முறை தலைக்கு தேய்த்து எண்ணெய்க் குளியல் போட்டால்

பித்தத்தினால் வரும் கண்ணோய்கள், வாந்தி மயக்கம் அனைத்தும் தீரும்

---------------------------------------------------------------------------------

46. ”போன கண்ணைக் கொடுக்கும் பொன்னாங்கண்ணி ” என்று ஒரு சொல்வழக்கு உண்டு



அது பொய்யல்ல! பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து காயவைத்து அதை நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி மாதம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் போடும் வழக்கம் கண்களைக் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் , பார்வை தீட்ஷண்யத்தை அதிகரிக்க வழியும் செய்யும்



-------------------------------------------------------------------------------

47. வல்லாரை என்றொரு கீரை உண்டு கீரை விற்பவர்களிடம் சொன்னால் கொண்டு வந்து தருவார்கள்



அந்த வல்லாரைக் கீரையை அவ்வப்போது வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்



---------------------------------------------------------------------------------

48. துளசியைப் போல் ஒரு தூய மூலிகை உண்டோ

அதனால்தானே ஸ்ரீமன் நாராயணனுக்கு துளசியால் அர்ச்சனையும், ஆஞ்சநேயருக்கு துளசி மாலையும், அணிவிக்கிறோம்

அதனால்தானே ஆண்டாளும் துளசி மாடத்தின் கீழே இருந்தாள்

அப்பேற்பட்ட துளசியை சாதாரணமாக ஓரிரு இலைகள் உண்டு வந்தாலே மார்ச்சளி கரையும், கபம் நீங்கும்,ரத்தம் சுத்தியாகும். துளசியை நன்கு அரைத்து அதை வடிகட்டி அதில் சிறிதளவு தேனைக் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவாருங்கள், வேண்டாத காய்ச்சலும், இருமலும் வராமலே போகும்.

அன்புடன்

தமிழ்த்தேனீ

Tuesday, December 21, 2010

” கர்ப்ப வாசம் சிறுகதை



வல்லமை இதழில் “ கர்ப்பவாசம் “ சிறு கதை படிக்க

http://www.vallamai.com/?p=1489  சொடுக்குங்கள்




அன்புடன்

தமிழ்த்தேனீ

Wednesday, December 15, 2010

இனிய குரல்

 ஒரு குறிப்பிட்ட ப்ரபலமான வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது எனக்கு, வங்கியிலிருந்து ஒரு இனிய குரல் அந்த உரையாடலைக் கீழே அளித்திருக்கிறேன்

டிர்ரீங் டிர்ரிங்



நான் : ஹலோ

இனிய குரல்: சார் காலை வணக்கம்

நான் : காலை வணக்கம்

இனிய குரல்: சார் எங்க வங்கி சார்பா உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?

நான் : தாராளாமா கேக்கலாம்

இனிய குரல்: எங்க வங்கியின் சார்பாக உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன்

நான் ( மனதுக்குள் ஏமாளி என்றா)   அப்படியா சொல்லுங்க

இனிய குரல்: நீங்க க்ரெடிட் கார்ட் வெச்சிருக்கீங்களா

நான்: வெச்சிருக்கேன்

இனிய குரல்: எங்க வங்கியோட க்ரெடிட் கார்ட் வெச்சிருக்கீங்களா

நான் : இல்லையே

இனிய குரல்: கவலைப்படாதீங்க சார் அதுக்குதான் உங்களைத் தொடர்பு கொண்டேன், உங்களுக்கு எங்க வங்கியின் க்ரெடிட் கார்ட் வழங்கப் போறோம்

நான் : மிகவும் சந்தோஷம்
இனிய குரல்: எங்க அலுவலர் ஒருவர் உங்க வீட்டுக்கு வருவார், அவரிடம் உங்களோட அடையாள அட்டை, அல்லது பான் கார்ட், அல்லது ஓட்டுனர் உரிமம் போன்றவைகளைக் காட்டுங்கள்

நான் : சரி காட்டுகிறேன்

இனிய குரல் : அவர் ஒரு விண்ணப்ப படிவம் அளிப்பார், உங்களிடம் கேட்டு விவரங்கள் அவரே எழுதிக்கொள்வார்,  அதில் உங்கள் கையெழுத்தை இடுங்கள், பிறகு எழே நாட்களில் உங்கள் க்ரெடிட் கார்ட் உங்கள் வீடு தேடி வரும்

நான் : மிகவும் நன்றி , சரி இனிய குரலே இவ்வளவு நேரம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னேன் சில நிமிடங்கள் உங்களால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?

இனிய குரல்: நிச்சயமாக உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைப்பது எங்கள் பொறுப்பு

நான்: அப்படியானால் நன்றி , நீங்களும் என் மகள் போலவே கடமை உணர்வோடு பேசுகிறீர்கள், எனக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது.

இனிய குரல்: நன்றி சார் பலபேரு எங்க கிட்ட எரிஞ்சு விழறாங்க நாங்க எங்க கடமையைத்தானே செய்யிறோம்

நான்: ஆமாம் பலருக்கு பொறுமை இருப்பதில்லை ,ஆமாம் நீங்கள் க்ரெடிட் கார்ட் வைத்திருக்கிறீர்களா?

இனியகுரல்: எங்கள் வங்கி வைத்திருக்கிறது

நான் : உங்களிடம் இல்லையா?

இனிய குரல்: இல்லை ஐய்யா உங்களுக்கு எங்கள் வங்கியிலிருந்து அளிப்பார்கள்

நான்: அப்படியானால் உங்களுக்கு அளிக்கவில்லையா?

இனிய குரல்: எங்களுக்கும் அளிப்பார்கள் , ஆனால் நான் வாங்கவில்லை

நான்: ஏன் அப்படி இனிய குரலே

இனிய குரல்: சார் அது ரொம்பத் தொந்தரவு, க்ரெடிட் கார்ட்தான் இருக்கேன்னு நல்லி, குமரன், ஜீ ஆர் டீ தங்க மாளிகைன்னு அடிக்கடி போயி செலவு பண்ணுவோம், ஆனா பணத்தை திருப்பிக் கட்டும்போது குறிப்பிட்ட நாளுக்குள்ளே கட்டலேன்னா வட்டி போடுவாங்க, அனாவசியமா மாட்டிக்குவோம், எதுக்கு இந்த வம்புன்னுதான் வாங்கலை

நான்: புத்திசாலிப் பொண்ணும்மா நீ, நீ கட்டாட்டி உங்க அப்பா கட்றாரு, ஒரு க்ரெடிட் கார்ட் வாங்கி வெச்சிக்க வேண்டியதுதானே

இனிய குரல்: சார் எங்க அப்பா கட்ட மாட்டாரு, திட்டுவாரு

நான் : அடடா அதெல்லாம் கவலைப்படாதேம்மா திட்டினாலும் அவுரு உங்க அப்பாதானே, தைரியமா வாங்கிக்கோம்மா ஒரு க்ரெடிட் கார்ட், நானே உங்க வங்கிக்கு வந்து விண்ணப்ப படிவமெல்லாம் நிரப்பி உனக்கு உதவி செய்யறேன்

இனிய குரல்: வேண்டாம் சார் எனக்கு க்ரெடிட் கார்டே வேண்டாம், வேற வழியில்லாமே இந்த வங்கி எனக்கு தரசம்பளத்துக்காக மனசாட்சியை அடகு வெச்சிட்டு உங்களைமாதிரி நல்லவங்களுக்கு எங்க வங்கியோட க்ரெடிட் கார்டை எப்பிடியாவது விக்கணும்னு நாங்க ட்ரை பண்றோம், ரொம்ப ஆபத்து சார் சார்,க்ரெடிட் கார்டே வெச்சிக்கக் கூடாது சார்.

நான்: சரிம்மா உனக்கு எப்பவாவது க்ரெடிட் கார்ட் வாங்கணும்னு இருந்தா எனக்கு போன் பண்ணும்மா நானே வந்து வாங்கித் தரேன்

இனிய குரல்: ரொம்ப நன்றி சார் வணக்கம்

நான் : வணக்கம்



(தொல்லைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது)

அன்புடன்

தமிழ்த்தேனீ

Friday, November 26, 2010

” அப்பிடி ஒண்ணும் இல்லே”

 ” அப்பிடி ஒண்ணும் இல்லே”




கடவுளை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு



நானும் கடவுளிடம் சில சந்தேகங்கள் கேட்டேன்

அவரும் பதில் சொன்னார் கடைசியில் தெளிந்தேனா? குழம்பினேனா?



நான் : கடவுளே உலகில் எத்துணை இன்பம் வைத்திருக்கிறாய், ஆனால் உனக்கு ஏன் இந்தப் பாரபக்‌ஷம்? சிலருக்கு மட்டும் கிடைக்கச் செய்கிறாய், பலருக்கு கிடைப்பதே இல்லை ஏன் இப்படி



கடவுள்: உன் கேள்வியே தவறு, எல்லாவித இன்பத்தையும் நான் படைத்து உங்கள் அனைவரையுமேதான் அனுபவிக்கச்சொன்னேன் .ஆனால் நீங்கள் பணம் என்று ஒன்றை உண்டாக்கிவிட்டீர்கள். அந்தப் பணத்திற்கு அளிக்கும் மதிப்பை உங்களையெல்லாம் உண்டாக்கிய எனக்கு கூட அளிப்பதில்லை.

நீங்கள் உருவாக்கிய பணத்தை யார் அதிகமாக சம்பாதிக்கிறீர்களோ அவர்கள் மட்டும் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள், மற்றவர்கள் அனுபவிக்க முடியாதபடி நீங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து விட்டீர்கள்.அந்த விலை கொடுத்தால் யார்வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் அதில் தடையில்லை என்னும் நிலையை உருவாக்கி விட்டீர்கள்,நானென்ன செய்வது



நான் : அது சரி ஏன் இப்படி மூச்சுவிடாமல் பேசுகிறீர்! சற்றே அமைதியாக பேசுங்களேன்



கடவுள்: ஆமாம் எனக்கே மூச்சு முட்டுகிறது இந்தப் பணத்தை நினைத்தால். கோவம் வருகிறது, நீங்கள் கண்டு பிடித்த பனத்தை ஈட்ட என்னையே கேவலப்படுத்திவிட்டீர்கள்.

என் மனைவிக்கு லக்‌ஷ்மி என்று பெயரிட்டீர்கள் சரி , ஆனால் அவள்தான் செல்வத்துக்கு அதிபதி என்றீர்கள் அதுவும் சரி, அதென்னப்பா நீங்கள் வீட்டில் மாட்டும் நாட்காட்டிகளிலும், உங்கள் பூஜை அறையில் இருக்கும் லக்‌ஷ்மியின் திரு உருவப் படத்திலும் ஸ்ரீ மஹாலக்‌ஷ்மி ஏதோ தங்கக் காசுகளைக் கொட்டுவது போல அச்சடிக்கிறீர்கள்? பணமழை பொழிவது போல அச்சடிக்கிறீர்கள்? நீங்கள் கண்டு பிடித்த பணத்தை எப்படி எங்களிடம் எதிர் பார்க்கிறீர்கள் என்றே புரியவில்லை,



அது மட்டுமா நீங்கள் கண்டு பிடித்த பணத்தை ஈட்ட திருட்டு, கள்ளக்கடத்தல், கொள்ளையடித்தல், விபசாரம், சாராயம், குழந்தைகள் கடத்தல், தாலிக்கொடி பறித்தல், சந்தன மரம் கடத்தல், நாட்டு ரகசியங்களை அன்னிய நாட்டுக்கு விற்றல், கட்சி மாறுதல், எல்லாத் துறைகளிலும் லஞ்சம் வாங்குதல் பங்கு மார்க்கட்டு பேரங்கள் ,மொத்தமாக நாட்டின் செல்வத்தையே சுறண்டி உங்கள் வீட்டுக்குள் கொண்டு போய் வைக்க மெகா ஊழல்கள்

இத்தனையும் செய்கிறீர்கள்.



அதைக் கூட பொறுத்துக்கொள்கிறோம், ஆனால் எங்களுக்கு கோயில் கட்டி விக்ரக வடிவில் எங்களைப் ப்ரதிஷ்டை செய்து, தினமும் எங்கள் தலைமேல் தேன் ,பால், பஞ்சாமிருதம், போன்றவைகளை ஊற்றி ஊற்றி எங்களை திக்குமுக்காடச் செய்து நீங்கள் உங்கள் தலைக்கு மேல் கைகளை உயரத் தூக்கி நாங்கள் படும் கஷ்டங்களை பார்க்கச் சகிக்காமல் கண்களை வேறு மூடிக்கொண்டு ஏதோ எங்களையெல்லாம் உங்கள் மனக்கண்ணால் பார்ப்பது போன்ற ஒரு பாவனையில் பக்திமான் வேடம் போடுகின்றீர்கள்.



இத்தனையும் செய்து விட்டு எங்களைக் காவல் காக்க காவல்காரர்களை நியமிக்கிறீர்கள். அந்தக் காவல்காரர்கள் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு எங்கள் கதவருகே வாயிலெடுத்துக்கொண்டே படுத்துக்கொள்கிறார்கள், நாற்றம் குடலைப் புடுங்குகிறது, கதவை வேறு பூட்டி விடுகிறீர்கள் ஓடக்கூட முடியவில்லை, இவ்வளவு அவஸ்தையையும் நாங்கள் பட்டு உங்களைக் காக்கிறோம், ஆனால் நீங்கள் எங்கள் விக்ரகங்களையே நீங்கள் கண்டு பிடித்த பணத்துக்காக கடத்தி விற்கிறீர்கள்.

எங்கள் உண்டியலில் நீங்களே காசு போட்டுவிட்டு இரவில் அந்த உண்டியலை நீங்களே உடைக்கிறீர்கள், அதற்கு தடையாயிருக்கும் காவல்காரரை கொலை செய்கிறீர்கள்

கள்ளத்தனமாக சேர்த்த பணத்தையெல்லாம் எங்கே வைப்பது என்றே தெரியாமல் ஒவ்வொரு மடாதிபதிகளைத் தேடிச் சென்று அவர்களிடம் கொடுத்து பத்திரப்படுத்துகிறீர்கள், அதன் பிறகு உங்கள் ரகசியங்கள் அவருக்குத் தெரிந்து விட்டதே என்றுணர்ந்து அவர்கள் மேல் ஏதேனும் குற்றம் சார்த்தி அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புகிறீர்கள்.

இவ்வளவும் செய்து விட்டு நாங்கள் உங்களுக்கு அளித்த சுகபோகங்கள் பாரபக்‌ஷமானவை என்று என்னிடமே கேட்கிறீர்கள் . கோபம் வராமல் என்ன செய்யும் ?





நான்: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் .மீண்டும் இந்த உலகத்தை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்க முடியுமா?



கடவுள்: முடியும் ஒரு வழி இருக்கிறது நான் சொல்கிறேன்! சரி உலகில் உள்ள இன்பங்களில் இது வரை நீ அனுபவித்த இன்பங்களில் த்ருப்தி கண்டாயா? அப்படியானால் அவைகளை சொல். நான் உனக்கு அந்த இன்பங்களை தவிர்த்து வேறு இன்பங்களைத் தருகிறேன், இது வரை யார் அனுபவிக்கவில்லையோ அவர்களுக்கு அந்த இன்பங்களை பகிர்ந்து தருகிறேன்



நான் : “ நியாயமாகத்தான் தெரிகிறது” நான் யோசிக்க வேண்டும் சற்றே நேரம் கொடுங்கள்



கடவுள்: சரி காத்திருக்கிறேன்



நான் : நான் யோசித்தேன்



கடவுள்: கண்டு பிடித்தாயா ஒரு பட்டியல் கொடு அவற்றை நீக்குகிறேன்.



நான் : ” அப்படி ஒண்ணும் இல்லே “ நான் யோசித்ததில் நான் நிறைவாக அனுபவித்த இன்பம் ,அதுவும் இனி நான் அனுபவிக்காமல் விட்டுத்தரும்படியாக

“ அப்படி ஒண்ணும் இல்லே “!



கடவுள்: அடப்பாவி ! அப்படியானால் நீ மற்றவருக்கு விட்டுத் தர ஒன்றுமே இல்லையா உன்னிடம்?



நான் : ஆமாம் ” அப்பிடி ஒண்ணும் இல்லே” ! அது சரி என்கிட்ட கேக்கிறீங்களே உங்க்ளுக்கு வேண்டுதல், படையல், எல்லாம் வெச்சிருக்கோமே அதிலே இனிமே உங்களுக்கு இனி என்னென்ன வேண்டாம்ன்னு நீங்கள் ஒரு பட்டியல் போட்டுத் தருவீர்களா? நாங்களும் ஏற்கெனவே நீங்கள் அனுபவித்ததையெல்லாம் நீக்கிவிட்டு நிம்மதியாக இருக்கிறோம்



கடவுள் நானும் யோசிக்கிறேன்...... இல்லை யோசித்தேன் அப்படி ஒண்ணு இல்லே!



கடவுள் மறைந்து போனார். தேடிக்கொண்டிருக்கிறேன்.



அன்புடன்

தமிழ்த்தேனீ

Sunday, November 21, 2010

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்

இயற்கையாக ஐப்பசி மாதத்தில், கார்த்திகை மாதத்தில் கார்மேகமாய் சூல் கொண்டு மேகங்கள் கருமேகமாய் இருக்குமாம், அடை மழை பெய்யும் என்பார்கள்அப்படிப்பட்ட காலங்களில் விஷப் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் என்னும் வழக்கங்களை விதைத்து விதைத்துப் போயிருக்கின்றனர்

”கார்த்திகைக்குப் பிறகு மழையும் கிடையாது
கர்ணனுக்கு பிறகு கொடையும் கிடையாது”
 என்பார்கள்

அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் தீபங்களை ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமான பலனைக் கொடுக்கும் என்பது ஐதீகம், நம் வாழ்விலும் ஒளி பெருகட்டும்

அன்புடன்

தமிழ்த்தேனீ

" பம்பரம் “ கதை

 “பம்பரம்” சற்றே பெருங் கதை


வல்லமை இதழில் படிக்க



http://www.vallamai.com/?p=1344



அன்புடன்

தமிழ்த்தேனீ

Monday, November 8, 2010

" மயக்கம் “ சிறுகதை



 ” மயக்கம் “ சிறுகதை வல்லமை இதழில் படிக்க சொடுக்குங்கள்

http://www.vallamai.com/?p=1267



அன்புடன்

தமிழ்த்தேனீ